மறுபக்கம் 16 03 14

thinakural.lk 2014-03-16 

மறுபக்கம் 16 03 14 

சுமந்திரன் தன்னை ஜெனீவாவில் பேச அனுமதிக்கவில்லை என்றும் அவரும் போர்க்குற்றங்கள் பற்றியோ இனப்படுகொலை பற்றியோ எதையும் பேசவில்லை என்றும் அனந்தி சசிதரன் ஒரு அறிக்கை விடுத்திருந்தார். அவரை அங்கு போய்ப் பேசுமாறு வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியதாகவும் அதில் அவர் சொல்லியிருந்தார். இங்கே நம் முன்னுள்ள பிரச்சினை அனந்தி சசிதரனுக்கும் சுமந்திரனுக்குமிடையிலான முரண்பாடல்ல. தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பங்குபற்றுவதைப் பற்றி முடிவெடுக்கவே நீண்டகாலம் எடுத்தது. பலவாறான உள்ளூர்,வெளியூர் நெருக்குவாரங்களைக் கருதியே த.தே.கூ. ஜெனீவாவுக்குப் போக முடிவானது. போவது ஒரு விடயம். அங்கே போய் எதை எவர் எப்படிப் பேசுவது என்பது அதிலும் முக்கியமான விடயம். இவ்விடத்துத்தான் த.தே.கூட்டமைப்புத் தவறுகிறது.

என் அபிப்பிராயத்தில் ஜெனீவாவில் த.தே.கூ.போய் எதைச் சொல்லுவதாலும் புலம்பெயர் தமிழ்ப் பெருங்குடி மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படுகிற தம்முள் அடிபடும் அமைப்புக்கள் எதைச் சொல்லுவதாலும் அங்கே நடக்கிற எதையும் மாற்ற இயலாது. இலங்கை நிகழ்வுகள் பற்றிச் “சர்வதேச சமூகம்’ எனப்படுகிற மேற்குலக நாடுகளுக்கு அறிவுறுத்துவதற்கான களம் அதுவல்ல. ஏனெனில், அவை பயன்படுத்தப் போகிற தகவல்கள் ஏலவே டாருஸ்மன் அறிக்கை முதல் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வரையிலும் உள்ளன. குறிப்பான நிகழ்வுகள் பற்றிய சனல்4 காணொளிகள் இலங்கை அரசின் மீது அழுத்தங்களை வலுப்படுத்துமாறு திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமக்கு இதுவரை கிட்டியுள்ள தகவல்களிற் தனக்கு வசதியானவற்றை மட்டுமே தெரிந்து அமெரிக்கா தனது பிரேரணையை வரைந்துள்ளது. கசிய விடப்பட்ட அறிக்கை திட்டமிட்ட ஒரு விஷமம் என்று நம்பவும் நியாயமுண்டு. எவ்வாறான சமரசங்களும் மாற்றங்களும் அந்த அறிக்கையில் ஏற்படுமாயின், அவை அமெரிக்கா தனது பிரேரணைக்கு அதிகபட்ச ஆதரவை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளுகிற சில சமரசங்களின் விளைவாக ஏற்படுவனவாயிருக்குமே ஒழிய வேறெதுவுமாக இராது.

எனவே, தமிழ்த் தேசியவாதத் தரப்புகளிடையே உள்ள விவாதம் தங்களுள் யார் கெட்டிக்காரர் என்று தமிழ் மக்களுக்குக் காட்டுகிற ஒரு போட்டியேயொழிய வேறெதுவும் அல்ல. எந்தவொரு முக்கிய நிகழ்வுக்கும் ஒரு நிறுவனம் தனது பிரதிநிதியையோ பிரதிநிதிகளையோ அனுப்புவதற்கு முன்னர், அது தனது நிலைப்பாட்டையோ தான் முன்வைக்கவுள்ள பிரேரணைகளையோ தான் வழங்கவுள்ள சான்றாதாரங்களையோ பற்றி தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும். இவ்வகையில் இலங்கை அரசாங்கம் மிகவும் கோமாளித்தனமாகவே நடந்து வந்துள்ளதென்பேன். ஒப்பிடுகையில் மிகத் தவறான நிலைப்பாடுகளை விடுதலைப்புலிகள் எடுத்த போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் திட்டமிட்ட முறையில் பொறுப்புடன் நடந்து கொண்டனர் எனலாம். அவர்களில் ஒவ்வொருவரும் தாம் நினைத்தபடி கருத்துக்களை வெளிப்படுத்த முற்பட்டிருந்தால் அவர்களுடைய வாதங்கள் மிகவும் பலவீனப்பட்டிருக்கும்.

த.தே.கூட்டமைப்புதான், எந்தவிதமான வாதங்களை (ஏலவே பல நாடுகளும் அறிந்து ஏற்றுக்கொண்டுள்ள விடயங்கட்கும் அப்பால்) பயனுற முன்வைக்கவேண்டும் என்பதை முற்கூட்டியே முடிவு செய்திருக்கும் என்று சொல்ல இயலுமா? அவ்வாறு செய்திருந்தாலும் யார் எதை எவ்வாறு சொல்லுவது என்று தீர்மானித்திருக்கும் என்று சொல்ல இயலுமா? எனவே, கோளாறு எங்கேயிருக்கிறது என்று நமக்கு விளங்கவேண்டும். சில வாரங்கள் முன்பு வடபுல மீனவர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்தது. ஆனால், அதைத் தனது அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்த விரும்பிய ஒரு தமிழ்த் தேசியவாத அமைப்பு, இறுதி நேரத்தில் மீனவர் பிரச்சினைகளை ஒதுக்கித் தனது குறிய தமிழ்த் தேசிய நோக்கிலான கோஷங்களை முன்வைக்க முயன்றதால், அப்போராட்டத்திலிருந்து ஏகம் பெரும்பாலான மீனவர் சங்கங்கள் ஒதுங்கின. அதன் விளைவாக மீனவர் நலனை முன்னிறுத்துவதற்கான ஒரு பயனுள்ள போராட்டம் முடங்கியதுடன் குறுகிய தமிழ்த் தேசியவாதிகளும் மீனவரிடையே தமது நம்பகத்தை இழந்தனர். பாடம்! பொது நோக்கத்துடன் குறுகிய அரசியல் இலாபம் இணைவது கேடு.

வரன்முறையான அரங்குகளிற் பேசுவது என்பது பொறுப்புள்ள ஒரு செயல். ஒரு சாதாரணமான கருத்தரங்கிற்குக் கூட உரைகளின் பொழிப்புக்களையோ சில சமயம் விரிவுச் சுருக்கங்களையோ கோருவது வழமை. தமிழ்ச் சூழலில் அது அவ்வளவு தூரம் கவனமாக முன்னெடுக்கப்படுவதில்லை. ஒருவர் என்ன பேசவிருக்கிறார் என்பது முதலில் அவருக்குத் தெரியவேண்டும். பேசவுள்ளதிலிருந்து கவனம் பிசகாமல், பிறராற் திசை திருப்பப்படாது பேசுவது முக்கியமானது. ஆனால் நமது சூழலில் நடப்பதென்ன? விலக்கான சில கருத்தரங்குகளை விட்டாற், பொதுவாகவே உரையாற்ற வருவோர் உரையின் பிரதியோ, சுருக்கமோ, குறிப்புக்களோ கூட இல்லாமல் வந்து அவையில் உள்ளவர்களின் தொகையையும் மனநிலை பற்றிய தங்களது உடைமை மதிப்பீட்டின் அடிப்படையின் வாயில் வந்ததைப் பேசுவதைக் காணலாம். எழுதிக்கொண்டுவந்த குறிப்புக்களுக்கு வெளியே எதையாவது பேசுவதும் சிலரது வழமை. இதற்கெல்லாம் காரணம் ஒலி வாங்கி என்கிற ஒரு சிறிய உபகரணமே. தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான அழகிரிசாமி சொன்னதுபோல, “தமிழனிடம் ஒரு சாம்ராச்சியத்தையே ஒப்படைத்து விட்டுத் திரும்பவும் பெறலாம். ஒரு ஒலிவாங்கியை ஒப்படைத்தால் திரும்பப் பெற இயலாது’.

உரைகள் கைதட்டல்களை எதிர்பார்த்தும் அறிக்கைகள் கொட்டை எழுத்துத் தலையங்கங்களை எதிர்பார்த்தும் அமைவது தமிழ் அரசியல் மரபு. நாங்கள் மரபு பேணும் ஒரு சமூகம் என்பதாலோ என்னவோ நமது அரசியல் தலைமைகள் இந்த பரப்பினின்று வழுவுவதில்லை. பாடம்: பழக்கங்களை மாற்றுவது கடினம். இன்னொரு பிரச்சினை ஏதென்றால் கட்டுப்பாட்டின்மை வடமாகாண சபைத் தேர்தல் முடித்த காலந் தொட்டு மாகாண சபைக்குள்ளும் குறிப்பிட்ட கட்சிகளுக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் நடக்க வேண்டிய விவாதங்கள் நாளேடுகளில் நடக்கின்றன. எந்தக் கேள்விக்கும் உடனடிப் பதில் வழங்கும் கட்டாயம் எந்தக் கட்சியினதோ நிறுவனத்தினதோ பிரதிநிதி எவருக்கும் இல்லை. பொதுவாக ஏற்கப்பட்ட கொள்கைகளோ முடிவுகளையோ சரிவர விளங்கிக் கருத்துத் தெரிவிக்க இயலாவிடின் அமைப்பின் பிற உறுப்பினர்களுடன் கலந்து பேசிப் பதிலளிப்பது மதியூகம். பத்திரிகைகளுக்குத் தேவையான பரபரப்புக்குத் தீனி போடுவது எளிது. பின்விளைவுகளை யோசித்து நிதானமாகப் பேசுவது கடினம். நல்லவை பலவும் எளிதிற் கைகூடுவதில்லை.

சமூகப்பொறுப்புள்ள அரசியற் கட்சிகளுள்ளும் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. எந்த முரண்பாட்டை எங்கே எவ்வாறு தெரிவிப்பது என்பது கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எந்த முரண்பாட்டையும் உரிய இடத்திற் பேசித் தீர்க்கத் தெரியாதவர்கள் கட்டுப்பாட்டுடன் ஒரு கட்சியை நடத்தவோ அரசியல் இயக்கங்களை முன்னெடுக்கவோ இயலாதவர்கள் என்பது என் மதிப்பீடு. யாழ்ப்பாணத்துக்கு இரணைமடு நீரைக் கொண்டுபோவது பற்றிய விடயத்தில் பொது மக்களும் மக்களின் நிறுவனங்களும் கருத்துத் தெரிவிப்பது ஒரு விடயம். ஒரே அமைப்பைச் சேர்ந்த.............. பிரமுகர்கள் பகிரங்கமாக மோதுவது வேறொரு விடயம். மலிவாக மக்கள் செல்வாக்கைப் பெறுகிற காரியங்கள், மக்களையும் பிளவுபடுத்திப் பிரச்சினைகளையும் தீர்வின்றி இழுத்தடிக்கவே உதவுவன. இப்போது யாரோ தங்களுடைய தேவை கருதிக் கொண்டுவரப் போகிற ஏலவே முடிவான ஒரு தீர்மானத்தைப் பற்றி நம்மிற் பலரும் ஒவ்வொரு அந்தத்தில் நின்று கொண்டு வெளியிடும் அறிக்கைகளும் செய்கிற பரிந்துரைகளும் என்ன பயனுந்தரா என்று ஒவ்வொருவரும் அறிந்துகொண்டே, மற்றோரை உசுப்பேற்றுகின்றனர். அவர்களால் தமிழ் மக்களுக்கு என்னவொரு நன்மையுமில்லை என்பதே எனது கருத்து.