பேச மறந்த சூரியன்

06 05 2017

பேச மறந்த சூரியன்

“என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால், நான் விறகாக மாறி அடுப்பெரிக்கப் பயன்படுவேன்; நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால், வெறும் கல்லைப்போல் பொடியாகிவிடமாட்டேன்; தேங்காய்போலச் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; உங்களுக்காகவே பயன்படுவேன்” - இது மு.கருணாநிதியின் பொன்மொழியாகப் போற்றப்படும் வசனம்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள், காங்கிரசல்லாத பிற கட்சிகளின் எழுச்சி போன்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் குறிப்பிடத்தகுந்தவை. அக்காலகட்டத்தின் வரலாறு இங்கு இன்னமும் விரிவாகப் பதிவு செய்யப்படாமலும் பொருட்படுத்தப்படாமலும் இருக்கிறது. தமிழகம் உருவான வரலாறு தெரியாமலே இரண்டு தலைமுறைத் தமிழர்கள் வாழ்ந்தும் மறைந்தும் போயினர். இன்றும்கூட அந்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்போதிருந்த பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம், தமிழ்த்தேசியக் கட்சி, நாம் தமிழர் இயக்கம்(ஆதித்தனார்) உள்ளிட்ட கட்சிகள் வீழ்ந்த நிலையில் தி.க, தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களை மட்டும் முன்னிறுத்திக் கட்டமைத்த வரலாற்றை உருவாக்கியுள்ளன.

1949 ஜூலை 9 அன்று திராவிடர் கழகத் தலைவர் பெரியார் செய்துகொண்ட பொருந்தாத் திருமணத்தைக் காரணமாகக் கொண்டு திராவிட இயக்கத்திலிருந்து வெளியேறிய அண்ணாதுரை, திராவிட நாடு இதழில் ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை, விரட்டப் படுகிறோம்!’ என்றொரு அறிக்கையை வெளியிட்டார். அண்ணாவின் அழைப்பை ஏற்று, 17.09.1949 அன்று சென்னை, பவழக்காரத்தெரு, 7 ஆம் எண் இல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டியின் மூன்றில் இருபங்கிற்கும் மேலான கமிட்டி உறுப்பினர்கள் கூடிய கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் அப்போதைய துணைத் தலைவர் குடந்தை கே.கே. நீலமேகம் தலைமைவகித்தார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுஅமைப்பைத் தொடங்குவதென்று முடிவெடுத்தனர். அந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை.

திராவிட நாடு 03.07.1949 இதழில் அண்ணா வெளியிட்ட அறிக்கையில் ஈ.வெ.கி. சம்பத், என்.வி. நடராசன், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், சத்தியவாணி முத்து உள்ளிட்ட 29 பேர் கையெழுத்திட்டிருந்தனர். அந்தப் பட்டியலில் கருணாநிதியின் பெயர் இல்லை. 18.09.1949 அன்று ராயபுரம் ராபின்ஸன் பூங்காவில் தி.மு.க வின் துவக்க விழா பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்ட அழைப்பிதழில் கடைசிப் பெயராக எம். கருணாநிதி எனும் பெயர் இருந்தது. மூன்றாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்தான் 1957 தேர்தலில் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் நின்று ஜெயித்தார். இந்தத் தேர்தலில் தி.மு.க மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படவோ தேர்தல் சின்னம் ஒதுக்கப்படவோ இல்லை. எனவே உதயசூரியன், யானை, சேவல், நட்சத்திரம் ஆகிய சின்னங்களில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, 15 இடங்களில் வெற்றி பெற்றது.

தொடக்க நிலையில் மூன்றாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரின் பின்னாளைய வளர்ச்சி மிக வேகமானது. தாம் கவனம் செலுத்தும் விஷயங்களில் ஆழ்ந்து போகும் குணத்தை அத்தனைப் பெருந்தலைவர்களிடத்திலும் காணக்கூடிய பொதுப்பண்பாகச் சுட்டலாம். ஆனால், ஒரே நேரத்தில் பல நிகழ்வுகளுள் ஆழ்ந்த கவனம் செலுத்தும் அரிய பண்பு கருணாநிதியுடையது. எத்தனை செயல்பாடுகளுக்குள் ஈடுபட்டிருந்தாலும் அங்கே தான் எப்படிக் கவனிக்கப்படுகிறோம், தான் முன்னிலைப்படுவது எப்படி என்பதையும் சேர்த்தே கவனித்து இயங்கும் மனம் அவருடையது. அவரின் அபாரமான வளர்ச்சிக்கு இந்தப் பண்பே அடிகோலியது. எப்போதும் தன்னைச் சுற்றியே அரசியல் இயங்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக தானே இருக்க வேண்டுமென்றும் கருதுபவர். இடைப்பட்ட எவரையும் பொருட்படுத்தாது முன்னேறும் அவ்வாற்றலே இன்றைக்கும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக அவரை உருவாக்கியது. அந்தப் போர்க்களத்தில் சொந்த மகனாக இருந்தாலும் அவரால் விட்டுக்கொடுக்க இயலாது.

எந்தப் பிரச்சனையென்றாலும் அந்த இடத்தில் தான் இருக்க வேண்டுமென்றும் தானே முதலில் எதிர்வினை செய்ய வேண்டுமென்றும் நினைப்பார். அவசரநிலைப் பிரகடனத்தின்போது அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்டது, ஈழத்தமிழர் பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது, இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலைக் கொளுத்தியது எனப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். அவருடைய உடல் ஒத்துழைத்தவரையிலும் மனம் உறுதியாக இருந்த வரையிலும் இதில் மாற்றமில்லை. பெரும்வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது, தமிழக அரசு மந்தமாகவே செயல்பட்டிருந்த நேரம். ஆனால் கருணாநிதி, மாவட்டச் செயலாளரை அழைத்து, ‘கோட்டூர்புரம் பாலத்தைப் பார்க்க வேண்டும், சைதாப்பேட்டைக்குப் போக வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதாகச் செய்தியுண்டு. முதல்வராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், பரபரப்பானதொரு நிகழ்வின்போது வீட்டுக்குள் முடங்க முடியாது என்பதே அவரின் முதன்மைப் பண்பு.

கருணாநிதி முன்னின்று நடத்திய முக்கியமான போராட்டங்களில் கல்லக்குடிப் போராட்டத்தைக் குறிப்பிடுவர். திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லக்குடி எனும் ஊர் வடநாட்டுத் தொழிலதிபரான டால்மியாவின் பெயரால் டால்மியாபுரம் என்று மாற்றப்பட்டது. மெல்ல மெல்ல கல்லக்குடி என்ற பெயரே இருட்டடிப்பு செய்யப்பட்டது. மீண்டும் கல்லக்குடி என்ற பெயரையே சூட்ட வேண்டுமென்றும் தென்னாட்டின் மீது வட இந்தியா செலுத்தும் ஆதிக்கத்தை நினைவூட்டுவதாக டால்மியாபுரம் எனும் பெயர் இருப்பதாகவும் கருதிய தி.மு.கவினர் 15 ஜூலை 1953 அன்று பெயர் மாற்றப் போராட்டத்தை நடத்தினர். “தோழர் கருணாநிதி கலைஞர். கதைகளிலேதான் கைவரிசை காட்டமுடியும்; கற்பனைச் சித்திரத்திலேதான் அட்டைக் கத்தியினைத் தீட்டிக்காட்ட முடியும்’ என்று பலர் கேலி பேசுவதாகக் கேள்விப்பட்டேன். தோழர் கருணாநிதி கலைஞராகுமுன் ஒரு நடிகர்; நடிகராவதற்கு முன் ஒரு லட்சிய மாணவர். மூன்று துறையிலே பணிபுரிந்தார் என்பது மட்டுமல்ல - தொல்லையும் பட்டிருக்கிறார். கதையிலே மட்டுமல்ல; கற்பனையோடு என்ற அளவிலே அல்ல; கடமையிலே எடுத்ததை - முன்வைத்த காலைத் தவறவிடமாட்டார் என்ற நம்பிக்கையை நாடு அறியத்தான், நான் அவரை டால்மியாபுரம் போராட்டத் தலைவனாக நியமித்தேன்” என்று பாராட்டினார் அண்ணா.

களத்தில் முன்னேறிய தி.மு.க வினர், டால்மியாபுரம் தொடர்நிலையப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்ததுடன் தொடர் இருப்புப் பாதையில் படுத்து ரயில் போக்குவரத்தைத் தடுத்தனர். அப்போது காவலர்களுடன் நடந்த கைகலப்பில் இருவர் மரணமடைந்தனர். கருணாநிதி உட்படப் பிற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

உண்மையில் அந்தப் பகுதியில் ஒரே ஒரு ரயில் மட்டுமே அப்போது இயங்கிக்கொண்டிருந்ததாகவும் அந்த வழியாகச் செல்லும் ரயில் கிளம்பிப்போனதை உறுதிசெய்த பிறகே தண்டவாளத்தில் தலையை வைத்தார் கருணாநிதி என்றும் இன்றுவரையில் அந்த நிகழ்வைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் இத்தகைய விமர்சனங்களையும் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டு முன்னேறுபவர் அவரென்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன்மூலமாக, ‘கல்லக்குடி கொண்டான்’ என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

திராவிட இயக்கமே ஒரு பரப்புரை இயக்கமென்பதால், மக்களின் பேராதரவினைப் பெறுவதற்கான அத்தனை ஆர்ப்பாட்டமான செயல்பாடுகளிலும் அக்காலத் திராவிட இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, மொழியுணர்வினைத் தூண்டுதல், அப்போதைய சிறந்த பேச்சாளர்களிடமிருந்து பேச்சுமொழியைக் கைப்பற்றுதல். மக்களை ஈர்த்த அந்த மேடைமொழியே தி.மு.க பிற்காலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கருவிகளில் முதன்மையாக இருந்தது எனலாம். காங்கிரசு அரசின் தவறுகள், அதன்மீது மக்களுக்கு இருந்த கோபம் ஆகியவற்றைத் தங்களின் அடுக்குமொழியால் மக்களிடம் மிகைப்படுத்தி அவர்களின் வெறுப்பைத் தூண்டினர். இந்தி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மாநில சுயாட்சி, மொழியரசியல் என இன்றைக்கு எவையெல்லாம் தி.மு.கவின் அடையாளங்களென்று பேசப்படுகிறதோ அவையெவற்றையுமே அது உருவாக்கவில்லை. அவற்றையெல்லாம் தீவிரமாகப் பேசுவதான பாவனையுடன் வெகுமக்கள் முழக்கமாக மாற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றது. அன்றைய முதன்மை ஊடகங்களான திரைப்படம், இதழ்கள், மேடை ஆகிய அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மேடைப் பேச்சுகள் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இன்றைக்கு அதைப் படிக்குமொருவர் வெகு எளிதாகவே அந்த அடுக்கு மொழியில் படிந்திருக்கும் வெற்றுப்பூச்சை அடையாளங் காண முடியும். அந்த அலங்கார மொழி பற்றிப் பேசும் கண்ணதாசன், அவர்களின் தட்டையான மொழி தன்னையும் பிடித்துக்கொள்ளுமோ எனும் அச்சத்தால் ஒரு கட்டத்துக்குப் பின் கழகத்தவரின் எழுத்துகளைப் படிக்கவில்லை என்று வனவாசத்தில் குறிப்பிடுகின்றார்.

பேசுவதும் எழுதுவதும் மட்டு மன்றி, மற்றவர்களின் எழுத்துகளைச் சற்றே மாற்றித் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றலுள்ளவர் கருணாநிதி. ‘வீரன் ஒரு முறைதான் சாவான்.கோழை பல முறை சாவான்’ என்ற புகழ்பெற்ற பொன் மொழியை, “வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை” என்று மாற்றிப் பயன்படுத்தினார். பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவதும் ஒருவகை மொழி விளையாட்டு. `ஆண்டவனை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘அது பிரச்சனை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று பதிலிறுத்தார்.

1930களிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. முதலில் சைவ அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டு, பின் திராவிட இயக்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. 1957 இல் நடைபெற்ற தி.மு.க இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் நடக்கும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 13, 1957 அன்று, அந்நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிப்பதென்று முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி, நடுவணரசின் இந்தித்திணிப்பை எதிர்த்து முழக்கமிட்டார். “இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு. ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கும் உணவு. தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்புப் போராட்டம், குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாடும் போராட்டம் ஆகியவற்றில் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைதாகிப் பின் விடுதலையாகினர். மாணவர்களிடையே பெரும் கலவரம் வெடித்து, இரண்டு வார காலம் தொடர்ந்தது. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்; நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். அந்தப் போராட்டத்தின் தாக்கத்தால் 1967 தேர்தலில் காங்கிரஸ் வீழ்ந்து, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. மாணவர் தலைவரான பெ. சீனிவாசன், காமராஜரைத் தோற்கடித்தார். அன்று ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்றளவும் தனித்து நிற்க இயலாமல் திராவிடக் கட்சிகளுடன் கூடியே தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.

தமிழக அரசியலில் ஆட்சியைப் பிடிக்க, மொழியரசியல் கை கொடுத்தது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் ஒன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரையிலும் படித்துவிட முடியும் என்ற நிலை உள்ளது. ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, நிர்வாக மொழியாக, வழக்காடு மொழியாகத் தமிழுக்கு அளிக்க வேண்டிய இடத்தை அளியாது செம்மொழி அங்கீகரிப்பை மட்டும் வழங்கி என்ன பயன்? அரசியல்ரீதியாகவும் கல்விப் பின்புலத்திலும் அவற்றை விரித்தோமானால் தனிக்கட்டுரை அளவுக்கு விரியும். 2006 இல் ஆட்சியைப் பிடித்த பிறகு, நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய முதல்வரான கருணாநிதி, தமிழகத்தில் உருதுவையும் பாடமொழியாகக் கொண்டு வருவதாக அறிவித்தார். தமிழகத்தின் எல்லையோரங்களில் வாழும் பிற மொழியினருக்காக, தெலுங்கு, கன்னடம், மலையாளமும் மற்றும் மதரசாக்களில் அரபியும் உருதுவும் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில் அவ்வறிவிப்பு பெரும்குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்குத் தமிழறிஞர்கள் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதன்பின் அது அறிவிப்பின் அளவிலேயே நின்று போனது. இப்படி, தான் செல்லுமிடங்களிலெல்லாம் அவர்களின் அபிமானத்தைப் பெற, உடனடி அறிவிப்புகளை மட்டும் செய்துவிட்டு, செயல்படுத்தாமலே கடந்து போவதும் அவருடைய அரசியல் தந்திரங்களிலொன்று.

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பிற்காலத்தில் தன் பேரன் தயாநிதி மாறனுக்கு நடுவணரசில் அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தபோது அவருக்கு இந்தி தெரியுமென்பதால் பதவி கொடுத்தேன் என்றார். கேள்விகளுக்கு அஞ்சாது, எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இப்படியொரு பதிலைத் தந்தவர் பின்னர், இந்தியோ ஆங்கிலமோ அறியாத அழகிரிக்கும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தார்.

தமிழ்மொழியின்மீது மிகுந்த பற்றுக் கொண்ட இயக்கமாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.கவின் நீண்ட ஆட்சியில் தமிழுக்கான வளர்ச்சித் திட்டமென்று நூலகத் திட்டம் தவிர்த்து காத்திரமான திட்டங்களாக எவற்றையும் சொல்ல முடியவில்லை. தமிழகத்தின் கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதப்படும் ஆங்கில நூல்களைத் தமிழுக்குப் பெயர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சையிலும் அடைபட்டிருக்கும் ஆவணங்களை, ஓலைச்சுவடிகளை நூலாக்கும் முயற்சிகளுமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட கலைக்களஞ்சியம், பேரகராதி போன்ற சீரிய செயல்திட்டங்கள் மறுபதிப்பு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள் போன்ற வரலாற்று ஆய்வுகளுக்கும் அதே நிலை தான். எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ தங்களைத் தமிழுணர்வாளர்களென்ற பிம்பத்துக்குள் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால், கருணாநிதியின் அத்தகைய பிம்பமும் செயல்பாடுகளமற்ற தன்மையுமே அவர்மீதான தமிழறிஞர்களின் கோபத்துக்குக் காரணம்.

ஈழத்தில் நடைபெற்ற தமிழர்க்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி களும் போராடின. தமிழினத் தலைவரென்று தன்னைப் பெருமையாகச் சுட்டிக்கொள்பவர், 1956 தொடங்கி
எப்போதுமே ஈழத்துக்கு ஆதரவு தருவதாகச் சொன்னவர்,

2008 - 09 இனப்படுகொலையின்போது நடுவணரசு அவருடைய ஆதரவிலேயே இருந்தும்கூட எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார். அக்டோபர், 6, 2008 இல் நடந்த மயிலை மாங்கொல்லை மாநாட்டில், “ஈழப் போரைத் தடுக்க முடியவில்லையென்றால் எனக்கு எதற்கு இந்தப் பதவி?” என்றும் முழங்கினார்.ஈழத்தமிழர் நாடற்று அகதிகளானபோதும் தமிழக மீனவர்உரிமை பறிக்கப்பட்டபோதும் 1974 இல் ஓர் உடன்பாட்டின் படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோதும் அவர் பேசினார்; முழங்கினார்; செயல்படவில்லை.இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்று திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார். நிதியமைச்சர் ப. சிதம்பரம் அனுப்பிய செய்தியின் பேரில்

போர்நிறுத்தம் வந்துவிட்டதாகச் சொல்லி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார். மனித உரிமை மீறல், இனப்படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா சபையின் ஆய்வறிக்கை கூறியபோதும் தனது அணியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி மகிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கச் செய்தார். பார்வதி அம்மாளின் சிகிச்சைக்குத் தன் செல்வாக்கைப் பயன்படுத்தாதவர், தன் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி
பெற நடக்கமுடியாத நிலையிலும் தில்லிக்குப் பறந்தார்.

அவருடைய ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களைப் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அன்றைய ஆட்சியில் கருணாநிதி எவ்வாறு புதியபுதிய உத்திகளின் மூலமாக ஊழலில் ஈடுபட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியது. இந்திராகாந்தி, “விஞ்ஞானரீதியாக ஊழல் செய்தவர்” என்று இவரைச் சிறப்பித்துப் பேசியதும் பின்னர் அவருடனே கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தபிறகு நடவடிக்கை எடுக்காமல் விடுவித்ததும் வரலாறு. அது, இன்றைக்குக் கோடிகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், பி.எஸ்.என்.எல் ஊழல் என்று தனி நூலளவுக்கு விரியும். அவர் மட்டுமல்லாது அவரைச் சுற்றியிருந்த பிற அமைச்சர்களுமே தத்தம் மாவட்டத்தின் செல்வாக்கைக் கொண்டு குறுநில மன்னர்களைப்போல் கோலோச்சி ஊழல் செய்தனர்.

இந்தியாவிலேயே முதல்முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தியதும் தமிழ்நாடு ஏழை எளிய மக்களுக்கு இலவசக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை. டைடல் மென்பொருள் பூங்கா, உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைத்தது ஆகியவை தமிழகத்தில் ஐ.டி. துறை வளர்ச்சி அடைய உதவியது. ஆண்களுக்குச் சமமாக சொத்துரிமை, வேலைவாய்ப்பில் 30 % இட ஒதுக்கீடு என்று பெண்களுக்கான முன் னேற்றத் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டன. விவசாயிகள், நுகர்வோர் நேரடியான கொள்முதலுக்காக, இடைத்தரகர் நீக்கப்பட்ட உழவர் சந்தைத் திட்டம் 1999 இல் தொடங்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் கட்டுவது, குமரி முனையில் வள்ளுவர் சிலை வைப்பது போன்ற கலைச்செயல்களில் ஈடுபாடு கொண்டவர். ஆனால், தம் நீண்டகால ஆட்சியில் மக்களுக்கான தொழில், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் கோட்டை விட்டார். மக்களை இலவசங்களுக்கு அடிமைப்படுத்துவதன் தொடக்கம் திராவிட ஆட்சியில் நிகழ்ந்தது. கருணாநிதிக்குப் பின்னால் வந்தவர்களும் கருவூலத்தைப் பற்றிய கவலையின்றி அதனை விஸ்தரித்தபடியே சென்றதுடன் உழைப்பை மறந்த தலைமுறையொன்றை உருவாக்கியுள்ளனர். திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்று தேசிய அளவில் அறிமுகப்படுத்தித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தனர்.அனைவரும் அர்ச்சகராகும் திட்டமென்று ஒன்றைக் கொண்டுவந்து சத்தமில்லாமல் ஓரமாய் வைத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். சாதிக்கு எதிரானவரென்று தன் குடும்பத்தை உதாரணமாகச் சொல்லிக்கொண்டு சாதி அரசியலை உரமிட்டு வளர்த்தார். எல்லாவற்றுக்கும் உடனுக்குடனே எதிர்வினை செய்பவர், உடுமலைப் பேட்டை சங்கர் கொலையான பின்னர், இரண்டு நாட்கள் கழித்து அதைக் கண்டித்ததை மறந்துவிட முடியாது. சாதி சமயப் பூசல்களை ஒழிக்க நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்தார். ஆனால் அதையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கட்டவே முடிந்தது.

நீண்ட நெடுங்காலமாக அரசியல் செய்துவரும் தேர்ந்த அரசியல்வாதி என்றும் ராஜதந்திரி என்றும் அரசியலாளர்களால் பாராட்டப்படுபவர் கருணாநிதி. பிற்காலத்தில் அது அவருடைய குடும்ப ஆதிக்க அரசியலுக்கு உதவியது. ஒரு கட்டத்தில் அவரையும் மீறி, அவருடைய கவனத்துக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

எம்.ஜி.ஆர் தொடங்கிவைத்த பகை அரசியலைப் பின்னாளில் பேரளவில் ஜெயலலிதா வளர்த்தெடுத்தார். திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்த தி.மு.கவும் அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.கவும் மக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் வெறுப்பரசியலை ஊதிப் பெருக்கின. அரசியலுக்கு வெளியே சந்திக்கும்போது மாற்றுக்கட்சிகளிடமும் நட்புப் பாராட்டும் நல்மரபு இன்றைக்குத் தமிழகத்தில் இல்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் விட அரசியல் நாகரிகம் அறிந்தவர், மாற்றுக்கட்சிகளை மதிப்பவர் என்று கருணாநிதியைக் கூறுவர். அதில் உண்மையில்லாமல் இல்லை. தன்னுடைய தனிமனித விருப்பு வெறுப்புகளை நகர்த்திவிட்டு ஆட்சி நடத்துவதும் அரசியல் செய்வதும் கருணாநிதியின் பண்பு. அவரே, பிற்காலத்தில் ஜெயலலிதாவிடமிருந்து அவருடைய ஆடம்பரப் பண்புகளை எடுத்துக்கொண்டார்.வேண்டியபோது அரவணைத்துக் கொள்வதும் வேண்டாதபோது மிகக் கடுமையாக விமர்சிப்பதும் கருணாநிதியின் மற்றொரு முகம். 1957இல் சட்டப் பேரவையில் நுழைந்தவுடன் தி.மு.க. வைத்த முதல் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ‘பத்து லட்சம் பக்தவத்சலம்’ என்பது. நிரூபிக்காமலே மேடையில் குற்றம் சாட்டி அவரை இகழ்ந்தனர். கம்யூனிஸ்ட்தோழர்களுடன் உறவு வைக்கும்போது தோழர் பி. இராமமூர்த்தியைப் புகழும் கருணாநிதி, உறவு முறிந்த மறுகணம் நொண்டிப் பார்ப்பான் என்று சொல்லவும் தயங்க மாட்டார். இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா போன்ற பெண் அரசியல்வாதிகளைப் பற்றிய அவருடைய சொற்கள் சொல்லுந்தரமன்று.

1957 தொடங்கி 2016 வரையிலும் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியே இல்லாது வெற்றி பெற்ற ஒரே தலைவர் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு மக்கள் அபிமானத்தைப் பெற்றவர் அவர். தி.மு.கவின் பிற தலைவர்கள் அறிவுஜீவிப் பிம்பத்திற்கு ஆசைப்பட்டபோது மக்களுடன் நெருங்கித் தம்மை மக்கள் தலைவராகத் தகவமைத்துக்கொண்டார். உடல்நலமில்லாது இத்தனை மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் முன்னைப்போல் எழுந்து வந்து முரசொலியில் உடன்பிறப்புக்குக் கடிதம் எழுத மாட்டாரா என்று ஏங்கும் தொண்டர்கள் ஏராளம். எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ மக்களின் அன்பைப் பெற்ற இத்தலைவர்களின் மனம் முழுக்க முழுக்க அரசியல்மயப்பட்டது என்று கூற இயலாது. ஆனால், கருணாநிதி 24 X 7 நேர அரசியல்வாதி. அவரும் திரைத்துறையில் இருந்தவர்; ஆயினும் அவருடைய மனம் எப்போதும் அரசியலில் தோய்ந்திருந்தது. அவருடைய எழுத்துகளிலும் அதுவே வெளிப்பட்டது. சட்டசபைக்குப் போகாமல் இருந்தாலும் எத்தனைவிதமான அலைகள் அடித்தாலும் வெற்றியின் பக்கத்திலேயே அவர் இருந்தார். காரணம், மக்கள் அவர்பக்கம் நின்றனர். முதல்வராக முடியாமல் அவரை வீழ்த்தியது அவருடைய குடும்ப அரசியலே அன்றி மக்களல்லர்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள், மக்கள்நலனை முதன்மைப்படுத்திய செயல்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தனரேயன்றி அவர்கள் தங்களை எங்குமே முன்னிறுத்திக் கொள்ளவில்லை. அதுவொரு அரசியல் காலம். ஆனால் காங்கிரசிலேயே தன்னையொரு பிம்பமாக வடிவமைத்துக் கொண்டவர் காமராசர். அதனாலேயே ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சத்தியமூர்த்தி, ராஜாஜி, சி. சுப்பிரமணியம் போன்றோர் மறக்கப்பட்டபோதும் காமராசர் மக்கள் மனத்தில் இன்றும் வாழ்கிறார். பிம்ப அரசியலை முதன்மையாக வைத்து முன்னகர்ந்தவர்களில் முதன்மையானவர் கருணாநிதி. திரைத்துறைப் பிம்பத்தின் துணையுடன் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதன் பின்னரே தங்கள் அரசியல் பிம்பத்தை வளர்த்தெடுத்தனர்.

தான் செய்ததை எங்காவது சொல்லிக்காட்டி விடும் குண விசேஷம் இவருடைய தனிச்சிறப்பு. இவரளவுக்கு மற்ற தலைவர்கள் கவனத்தில் வைத்திருப்பார்களா என்பது ஐயமே! அதில் என்னுடைய தனிப்பட்ட அனுபவமொன்று, ம.பொ.சியின் நூற்றாண்டு விழாவில் அவருக்குச் சிலை வைப்பதாக அறிவித்ததை ஐந்து வருடங்கள் கழித்து நிறைவேற்றினார் கருணாநிதி. தியாகராய நகர் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிலையைத் திறந்துவைத்துப் பேசுகையில், அவர் யார் யாருக்கெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பட்டியலிட்டதுடன் பரலி சு. நெல்லையப்பர், 1960களில் உதவி கேட்டு அவருக்கு எழுதிய கடிதமொன்றைத் தேடியெடுத்துப் படித்துக் காண்பித்தார். மிகுந்த சுறுசுறுப்பும் உழைக்கும் ஆர்வமும் கொண்டவர். அதற்காக வாழ்வின் பிற்பகுதியில் தன் வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றிக் கொண்டவர். “அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும். யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாயிருந்தால், அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள். கல்லிலும் முள்ளிலும் கட்டாந்தரையிலும் அடித்து அவுட் ஆகாமல் பந்து கோலுக்குள் நுழைந்திட வேண்டும். கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான். எனினும் விடா முயற்சியும் கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை” என்று ‘நெஞ்சுக்கு நீதி’யின் ‘என்னுரை’யில் குறிப்பிடுகின்றார். விடாமுயற்சியுடனும் ஓயா உழைப்புடனும் தோல்விகளால் துவளாமலும் துவண்டாலும் மீண்டும் எழுவதையுமே தன் வாழ்முறையாக்கிக் கொண்டவர். ஒருமுறை, புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அதைச் சரிசெய்வதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, தகவல் வருவதற்காக இரவு 2.30 மணி வரையிலும் தலைமைச் செயலகத்தில் காத்திருந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கல்லறையிலும்கூட, ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று எழுதிவைக்கும் விருப்பத்தையும் ‘நெஞ்சுக்கு நீதி’யின் என்னுரையிலே வெளிப்படுத்தியிருப்பார்.

பிப்ரவரி 14 அன்று முகநூலில் காதல் வாழ்த்துகளுக்கு இணையாக கருணாநிதி பற்றிய நினைவுகள் பகிரப்பட்டிருந்தன. காதலர் தினத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் ஒரே தலைவர் கலைஞர்தான் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தபிறகே காரணம் விளங்கியது. இந்த ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வாழ்த்தவில்லையென்பதும் கருணாநிதி விரும்பியபடியே ஒரு செய்தியாகிவிட்டது.உடல்நலம் குன்றியிருக்கும் 92 வயது கருணாநிதிக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏதும் இல்லை. மூப்பின் காரணமாக ஏற்படும் மறதி, உணர்வுக்குறைவு, பேச இயலாமை, கால் மூட்டு வலி ஆகியவற்றால் அவதிப்படுகிறார். தான் வளர்த்த கட்சியில் தன் குடும்பத்தினரால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களே அவருடைய நோய்மையின் பெருந்துயரம். ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து, தமிழ்நாட்டில் பெரும் சிக்கல்கள் தொடர்ந்திருக்கையில், எதையும் அறியாதவராய் கோபாலபுரம் இல்லத்து மாடியறையில் முடக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர், நினைவுகள் குறைந்து அசைவுகள் மறந்தவராய் இருக்கிறார். எழுதியெழுதிக் களைத்த அந்தக் கைகள் இன்று எழுத மறந்திருக்கின்றன. ஆனாலும் மாடியின் ஒரு முனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவர் உதய சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

kalachuvadu.com april 2017