ஏன் இந்த சோதனை?

thinakural'lk editorial 23 03 2014

ஏன் இந்த சோதனை?

வடக்கில் மீண்டும் ஒரு போர்க்கால நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. காணாமல் போன தனது மகனைத் தேடியலைந்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டமை, மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கைது செய்யப்பட்டமை என்பன வன்னியின் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது என்பதைக் காட்டியது. அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் படையினர் கிராமங்களைச் சுற்றிவளைத்து முன்னெடுத்த சோதனைகளும், தேடுதல் களும் போர்க்கால நிலைமைகளை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் எனக் காரணம் சொல்லப்பட்டு இராணுவக் கெடுபிடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை மட்டுமன்றி சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

காணாமல்போன தமது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த ஜெயக்குமாரியும் அவரது மகளும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. இது ஒரு பழிவாங்கலா என்ற சந்தேகம் உருவாக பாதுகாப்புத் தரப்பினர் அந்த விவகாரத்தைக் கையாண்ட முறையும் ஒரு காரணம். இச்சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இருவர் கிளிநொச்சியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினார்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இந்தக் கைதுகள் சர்வதேச ரீதியாக எதிர்ப்பலையை உருவாக்கியிருந்த நிலையில் எந்தக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் இரவோடிரவாக இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆக, இந்தக் கைதுகள் ஒரு அச்சுறுத்தலா என்ற கேள்வி எழுகின்றது!

இந்த இரு சம்பவங்களின் தொடர்ச்சியாக வன்னியின் பல்வேறு பகுதிகளில் இராணுவ சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள், வீடுகள் என்பன சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னர் இது போன்ற சுற்றிவளைப்பு, சோதனைகள் இடம்பெற்றிருப்பது இதுதான் முதன்முறையாகும். இந்தச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மை. இயல்பு நிலையும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. தேடப்படுகின்றார்கள் என்ற தலைப்பில் இருவரின் புகைப்படங்களுட னான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையிலேயே இந்தச் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே வன்னியின் நிலை இறுக்கமாகியிருக்கின்றது. வன்னியில் இராணுவக் குறைப்பு, மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்தல் போன்ற விடயங்கள் ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் வன்னியில் மீண்டும் பதற்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் மீள இணையும் முயற்சியை மேற்கொள்வதால் அதனைத் தடுப்பதற்காகவே இந்த இராணுவ நகர்வுகள் என்பது அரச தரப்புத் தகவலாக உள்ளது. அரசின் இந்தக் நியாயப்படுத்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது. இராணுவக் குறைப்பு, மக்கள் மீள்குடியேற்றம் என்பன இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் விடயங்களாகியிருப்பதை சுட்டிக்காட்டும் தமிழர் தரப்பு, வன்னியில் தொடர்ந்தும் இராணுவ இருப்பைப் பேணுவதை நியாயப்படுத்தவே விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சி என்று அரசாங்கம் சொல்லிக்கொள்வதாகவும் குற்றஞ் சாட்டுகின்றது. ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூட்டைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இராணுவ இருப்பைப் பேணுவதற்கான ஒரு உபாயமாகவே இதனைச் செய்வதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச்சாட்டை இலகுவில் புறக்கணித்துவிட முடியாது. இதற்காகத்தான் அரசாங்கத்துக்கு இன்று விடுதலைப்புலிகள் தேவைப்படுகின்றார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக சில செயற்பாடுகளை முன்னெடுப்பது நியாயப்படுத்தக் கூடியதுதான். ஆனால், இருவருடைய புகைப்படங்களை ஒட்டிவிட்டு அதனையே காரணமாகக் கொண்டு மீண்டும் இராணுவக் கெடுபிடிகளைத் தீவிரப்படுத்துவது தற்போது காணப்படும் அமைதியைச் சீர்குலைப்பதற்கு மட்டுமே உதவும். தென்பகுதியில் பாதாள உலகக் குழுவினரை துரத்தித் துரத்தி வேட்டையாடும் அரச தரப்பினரால், வடக்கில் இருவரை வளைத்துப்போட முடியாதிருக்கின்றதா என்ற கேள்வி பலமாக எழுப்பப் படுகின்றது. பல சோதனைச் சாவடிகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் இருவரைக் கைது செய்ய முடியாத நிலை ஒன்று வன்னியில் உண்மையில் காணப்படுகின்றதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடிச் செல்லும் போது சந்தேகங்கள் உருவாகுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

இருவரை தேடுகிறோம் எனவும், மீள்எழுச்சி பெற விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றார்கள் எனவும் கூறிக்கொண்டு இராணுவக் கெடுபிடிகளை அதிகரிப்பது ஜெனீவாவில் தம்மை நியாயப்படுத்த அரசுக்கு உதவலாம். தென்பகுதியில் தேர்தல் அரசியலை நடத்தவும் அது துணைபுரியலாம். ஆனால், வடக்கில் உருவாகியிருக்கும் அமைதியை அது பாதிப்பதாகவே அமையும். அரசு சொல்லிக்கொள்ளும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அணுகுமுறை உதவப்போவதில்லை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்குவதுடன், கெடுபிடிகளைத் தளர்த்துவதன் மூலமாகவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம். அதற்கான முயற்சிகளைத்தான் அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதும் அதனைத்தான்!