மறுபக்கம் 06 04 2014

tninakural.lk 08 04 2014

மறுபக்கம் 06 04 2014

சர்வதேச விசாரணை மூலம் தமிழருக்காக எதைச் சாதிக்கலாம் என்று எவரும் இதுவரை தெளிவாக விளக்கவில்லை எனினும், ஒரு சர்வதேச விசாரணை மூலம் போர்க்குற்றவாளிகளை அல்லது இனப்படுகொலையாளர்களை அறிந்து இயலுமானால் தண்டிக்கலாம். ஒருவேளை வெகுகாலங் கடந்து இழப்பீடுகளைக் கோரலாம். வேறு எதைச் செய்தாலும் நிச்சயமாக இயலாதது ஒன்றுண்டு. தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க இயலாது. மாறாக அதை மேலும் மோசமாக்க இயலும். இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இயலாது என்றவாறான மொட்டைப் பிரகடனங்களும் காதிற்படுகின்றன. அவ்வாறு சொல்லுகிறவர்கள் தேசிய இனங்களிடையே நல்லிணக்கம் இயலாது என்று நினைப்பவர்கள் மட்டுமல்ல, ஏற்படக்கூடாது என்று விரும்புகிறவர்களுமாவர். தேசிய இனங்கள் எப்போதும் பகைமையுடன் இருப்பதை விரும்புவதில் ஜாதிகஹெல உறுமய போன்ற நிறுவனங்கட்கும் வெறித்தனமான தமிழீழப் பிரசாரகர்கட்குமிடையே அடிப்படையான ஒற்றுமைகள் மிகவுண்டு. அவர்களுடைய அரசியல் இருப்புக்கு ஆகாரம் இனவெறுப்பு அவர்களுடைய குறுகிய தேசியவாதம், தேசப்பற்று, மதப்பற்று, பழமைவாதம் போன்ற யாவும் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்வதற்குத் தடையாக இரா.

இத்தகைய தீவிர நிலைப்பாடுகளுக்குக் குறுகிய அரசியல் நோக்கங்களும் உடனடி அரசியல் லாபமும் காரணங்களாக உள்ளளவுக்கு எந்த ஆழ்ந்தறிந்த சிந்தனையோ அடிப்படை நேர்மையோ ஆதாரமாக இல்லை. மூன்று தசாப்த ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களை ஒரு முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டுள்ள காரணத்தை நேர்மையாக விசாரிக்க எந்தத் தமிழ்த்தேசியத் தலைமையும் ஆயத்தமாக இல்லை. இளைஞர்களை ஆயுதப்பாதையில் தூண்டியவர்கள் இருக்கிறார்கள். சுயலாபத்திற்காக ஆயுதப் போராட்டத்தை விமர்சனமின்றி ஆதரித்தவர்கள் இருக்கிறார்கள். தமது பிள்ளைகளைப் பாதுகாப்பாக எட்ட இருத்திக் கொண்டு ஏழைச் சிறார்களைப் போருக்குப் போகத் தூண்டியவர்கள் இருக்கிறார்கள். இன்றும் தமிழீழக் கனவுக்கு உயிர்கொடுக்கிறவர்களில் ஏகப்பெரும்பாலானோர் வெளியிலிருந்து அதற்காகச் சிறிது பணத்தை உண்டியலில் இட்டுவிட்டு அதற்கு மேல் எந்தத் தியாகத்தையும் செய்யும் நோக்கமற்றவர்களாகவே இருக்கிறார்கள். உண்மை நிலைமைகளை விளங்கிக் கொள்ளும் அக்கறையோ தேவையோ வரட்டுத்தனமான தீவிரவாதிகட்கு இல்லை. அவ்வாறே அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கும் உண்மை நிலைமைகளை விளக்கி எவரும் பேசுவது விருப்பமற்றது. எனவே, தான் ஒரே வகையான பொய்களை நாம் ஒழுங்காக ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறோம்.

ஜெனீவா கூட்டத் தொடருக்குப் பின்பாவது, சில விடயங்களை நிதானமாக மீளாயும் தேவை நமக்கு இருக்கிறது. பிற நாடுகளின் அனுபவங்களில் நமக்கு வசதியாக ஓரிரு விடயங்களைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு அவற்றின் பின்புலங்களை முற்றாகவே புறக்கணித்து மற்றைய அனுபவங்களையும் புறமொதுக்குவதன் விளைவுகளை நாம் நினைவு கூருவோமானால், ஏன் ஒரு வல்லரசு ஒரு சூழலில் ஒரு நாட்டைத் துண்டாடுவதற்கு முன்னிற்கிறது என்று விளங்கும். அவ்வாறே, அது ஏன் இன்னொரு சூழலில் பிரிவினையைத் தடுக்கத் தன்னாலானதைச் செய்யும் என்றும் விளங்கும். அந்நிய ஆதரவை நம்பி முன்னெடுத்த எந்தவொரு போராட்டமும் ஆக மிஞ்சித் தோற்றப்பாடான வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதுடன் அந்த வெற்றியும் மேலும் அடிமைத்தனத்திற்கே இட்டுச் சென்றுள்ளது என்று விளங்கும். கொசோவோவும் பொஸ்னியாவும் தென் சூடானும் கற்பிக்கும் பாடங்களைப் பற்றி அவற்றை முன்னுதாரணமாக்குவோர் பேசமாட்டார்கள். அவற்றை நாமாக விசாரித்து விவாதித்து உண்மைகளை அறிவது தகும்.

தன்னைப் பிற சமூகப்பிரிவுகளின் தேவைகளினின்று தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு சமூகம், தன்னைப் பலவீனப்படுத்துகிறது என்பதை நாம் விளங்கத் தவறினாலும், நம்மை ஒடுக்குகிறவர்களுக்கு அது நன்றாக விளங்குகிறது. இந்தப் பாடங்களையெல்லாம் கற்கத் தவறியதன் பயனாகவே நம்மைத் திரும்பத் திரும்ப ஏய்க்கிறவர்களின் பின்னால் விடாது அலைகிறோம். நமது விளக்கக் குறைபாட்டின் விலை பெரிது. எந்தவொரு பெரு வல்லரசும் பெரு வல்லரசுகளின் கூட்டணியும் ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தினதோ தேசிய இனத்தினதோ தேசிய சிறுபான்மையினதோ பலன் கருதி அதை ஒடுக்கும் தேசத்திற்கெதிராக எதையும் செய்வதில்லை. ஒரு பெரு வல்லரசு தனது நலன் கருதியே உள்நாட்டு அலுவல்களிற் குறுக்கிடுகிறது. அக்குறுக்கீடு தனது நீண்ட காலத்திட்டங்கட்குக் கேடாக அமையாமலும் அது கவனித்துக் கொள்ளுகிறது.

இந்தியா நம்மை ஏய்த்துவிட்டதாகக் தமிழ்த்தரப்பில் பலர் இப்போது அரற்றுகிறார்கள். இலங்கை அரசைப் பகைத்துத் தமிழருக்காக எதையும் செய்யும் தேவை இந்திய அரசுக்கு என்றுமே இருக்கவில்லை. ஜயவர்தன ஆட்சி இந்திய அரசுடன் வலிந்து பகை தேடியிராவிடின், இந்தியா இங்கு குறுக்கிட்டிராது. 1987இற்குப் பிறகு இந்தியாவின் இலங்கைக்கான திட்டம் மாறிவிட்டது. இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் அங்கு யார் வென்றாலும் இந்திய அரசின் இலங்கைக் கொள்கை தமிழருக்குச் சாதகமாகத் திரும்பும் வாய்ப்பு இல்லை. செச்னியாவில் அந்நியக் குறுக்கீட்டை ஊக்குவித்த அமெரிக்கா க்றிமியாவில் 97சதவீத மக்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பந் தெரிவித்ததை ஏற்க இயலாது தவிக்கிறது. போதாமல், ரஷ்யாவைத் தண்டிக்க முற்படுகிறது. மக்களின் ஏகோபித்த விருப்பம் எது என்பது அமெரிக்காவின் அக்கறை அல்ல. தனக்கு முரணான எந்தச் சனநாயக ஆட்சியையும் கவிழ்க்க அது கூசாது. இலங்கையில் அமெரிக்காவின் பிரச்சினை சிங்களப் பேரினவாதமல்ல. தன் சொற்படி ஆட மறுக்கும் ஒரு சிங்களப் பேரினவாதத்தைப் பணியவைப்பது அல்லது தன் சொற்படி நடக்கும் ஒரு ஆட்சியைக் கொண்டு வருவதே அதன் நோக்கம். இலங்கையில் நடப்பது அமெரிக்கசீனச் செல்வாக்குப் போட்டியும் அமெரிக்கஇந்திய செல்வாக்குப் போட்டியுமே. இந்தியசீனப் போட்டிக்குத் தமிழ்த்தேசியவாதிகள் மிகையான முக்கியம் வழங்குகின்றனர்.

இந்தியாவுக்கு அதன் பிராந்திய மேலாதிக்கத் தேவைகட்கு அமெரிக்கத் துணை தேவை. ஆனால், அமெரிக்கக் குறுக்கீடு இந்திய மேலாதிக்க நோக்கங்கட்குக் குழிபறிக்கும் அபாயத்தை இந்தியா அறியும். எனவே, தென்னாசியாவில் நடக்கும் போட்டி கொஞ்சம் சிக்கலானது. பாகிஸ்தான் இலங்கை அரசை வலுவாக ஆதரிப்பதன் காரணம் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி மீதான பற்றாக இருக்க இயலாது. இங்கு முஸ்லிம்களின் இக்கட்டான நிலையைப் பாகிஸ்தான் அரசாங்கம் நன்கறியும். எனவே, நாங்கள் இந்தப் பகடையாட்டத்தில் நம்மை யாரிடமும் ஒப்படைப்பதன் மூலம் நம்மைக் கெடுத்துக் கொள்வோமே ஒழிய எதையும் வெல்லமாட்டோம். தமது ஜெனீவாக் கணக்கு ஏன் பிழைத்தது என்பதற்குத் தமிழ்த்தேசியவாதிகளிடம் விளக்கம் இல்லை. அதன் மூலம் ஏதாவது கிடைக்கும் என்று போதித்தவர்களிடமும் இல்லை.

உலகத்தின் மையம் இலங்கைத் தமிழரின் பாரம்பரிய மண்ணல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்வது நல்லது. தமிழருக்கு உள்ள பிரச்சினைகள் போல முஸ்லிம்கட்கும் மலையகத் தமிழருக்கும் உண்டு. தமிழ்த்தேசம் சிங்களத் தேசம் என்ற பழைய வாய்ப்பாட்டின் மூலம் இந்த மூன்று தேசிய இனங்களையும் இணைக்க முடியாது. சிங்கள மக்களை ஒடுக்குகிற ஆட்சிதான் தமிழரையும் ஒடுக்குகிறது. சிங்கள மக்களைப் பகைக்கும் விதமான அணுகுமுறைகள் அந்த ஆட்சியின் கைகளையே வலுப்படுத்தும். அதன் மூலம் குறுகிய தமிழ்த்தேசியவாதிகட்கும் நன்மையுண்டு. நாம் சிந்திக்க வேண்டியது தமிழ்ப்பேசும் தேசிய இனங்களின் நலனுக்கேற்றதையல்லவா! -