நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை

thinakkurallk 29 04 2014 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை

இலங்கையின் நிறைவேற்று அதிகார முறைமைக்கு எதிராக தொடர்ந்தும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அந்த முறைமையை மாற்றியமைப்பதற்கு எவரும் துணிச்சலுடன் முன்வராத நிலைமையே காணப்படுகிறது. இந்த முறைமையில் ஜனநாயகத்துக்கான இடம் குறுகிவிட்டதாகவும் உலகத்திலேயே மிகவும் கடுமையானதாகவும் பயனற்றதாகவும் இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியமைப்பு நிபுணருமான ஜயம் பதி விக்கிரமரட்ண கடந்த சனிக்கிழமை தலைநகரில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் உரையாற்றும் போது விமர்சித்திருக்கிறார்.

அதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் அமைச்சராக விருக்கும் ஜனநாயக இடது முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். பாராளுமன்றத்திலுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள், எம்.பி. க்களில் 70% த்திற்கும் அதிகமானோர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டிருப்பதுடன் இந்த முறைமையை ஜனாதிபதி இல்லாதொழித்தால் ஐ.ம.சு.மு. தொடர்பாக மக்கள் மத்தியிலான அபிப்பிராயம் மீள் எழுச்சி பெறும் என்று கூறியுள்ளார்.

1978 இல் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை உள்வாங்கிய புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியபோது, கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரித் தலைவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் எதேச்சாதிகாரத்தன்மை குறித்து கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் நாட்டின் ஜனநாயகத் தன்மைக்கு ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்று எச்சரித்திருந்தனர். ஆனால் தீர்க்கதரிசனமான வார்த்தைகளை அரசியல்வாதிகள் வழமையாகவே செவிமடுப்பதில்லை. இதனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருந்து வருகிறது. ஐ.தே.க. வின் 17 ஆண்டு கால ஆட்சியின் பின்னர் 1994 இல் பிரதமராகவும் பின்னர் அதே ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியாகவும் பதவியேற்ற சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தப் போவதாகத் தேர்தலின் போது உறுதிமொழி அளித்திருந்தபோதும் இரு தடவைகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தாரே தவிர அதனை இல்லாதொழிக்கவில்லை.

பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரான வரலாற்றில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுலாக்கப்பட்ட பின்னரான காலமே மோசமான காலம் என்று விமர்சிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சட்டவாக்க கொள்கையை உருவாக்குவதற்கு எந்தவொரு அர்த்தபுஷ்டியான பங்களிப்பையும் வழங்க முடியாத சந்தர்ப்பவாதத் தன்மை மிகுந்த அரசியல் வாதிகளைத் தோற்றுவிக்கும் விதத்திலான வலுவற்ற பாராளுமன்றத்தையே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கியிருப்பதாக அரசியலமைப்பு நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்விமான்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை உதவியாக அமையுமென ஒரு சாரார் வாதிடுகின்றனர். நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு இடம்பெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதால் ஜனாதிபதியை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான உரிமை சிறுபான்மை சமூகங்களுக்கும் கிடைக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த கால அனுபவங்கள் இந்த அபிப்பிராயம் ஒரு மாயை என்பதை உணர்த்தியிருப்பதாகத் தென்படுகிறது.

இப்போது எதிரணி கோரினால் ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பாராளுமன்றத் தேர்தலையோ நடத்தத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் அரசாங்கத்துக்குள் இருந்தே மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்பதே நாடளாவிய ரீதியில் பெரும்பான்மையான மக்களின் அபிப்பிராயமாகத் தோன்றுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பாகக் கலந்துரையாடி கருத்தொருமைப்பாட்டுக்கு வரமுடியும். இந்த முறைமை இல்லாதொழிக்கப்பட்டால் நாடு அதிகளவில் ஜனநாயகமயமாகும் என்றும் தீர்மானம் எடுக்கும் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளும் ஜனநாயகப் படுத்தப்படும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து தெரிவித்திருக்கிறார்.

இனங்கள் மத்தியில் சமாதானத்தை வென்றெடுப்பதற்கு மட்டுமன்றி அரசியலமைப்பின் மேலாண்மை, உரிமைகள் தொடர்பான நவீன சட்டமூலங்கள், தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறை சுதந்திரம், சட்ட ஆட்சியை மீள ஸ்திரப்படுத்துதல், சுயாதீன நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுவதாக அரசியலமைப்பு நிபுணர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கூறுகின்றனர். அரசியல் எப்போதுமே "ந்தர்ப்பங்களின்' விளையாட்டாக இருந்து வரும் நிலையில் "ஆச்சரியங்கள்' ஏற்படுத்துவதை நிராகரித்து விடமுடியாது. இந்நிலையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பில் "அதிசயங்கள்' நிகழ்வதற்கான சாத்தியப்பாட்டை மறுப்பதற்கில்லை. ஆனால் தற்போதைய முறைமையில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட ஆட்சி முறைமையில் சடுதியான மாற்றம் ஏற்படுமெனக் கூறிவிட முடியாது. ஆயினும் நல்லாட்சிக்கு இந்த உத்தேச மாற்றம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். ஆயினும் இதற்கான முன்முயற்சிக்கு தலைமைதாங்கி வழி நடத்துபவர்கள் தொடர்பாகவே பாரிய சிக்கல் காணப்படுகிறது.