முதலாளித்துவ உலகில் வல்லரசு யார்?

thinakkural.lk 16 05 2014

முதலாளித்துவ உலகில் வல்லரசு யார்?

ஒரு சமூகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அதன் வெளிப்படையான விதிகளை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. அவற்றை எப்படிப் பிரயோகிப்பது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எப்போது பயன்படுத்துவது, எப்போது மீறுவது, வழங்கப்படும் வாய்ப்பை எப்போது நிராகரிப்பது, ஒன்றைச் செய்யப் பணிக்கப்படும்போது அதை நமது சொந்த விருப்பத்தின்பேரில் செய்வதாகக் காட்டிக்கொள்வது எப்போது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். "மறுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வழங்கப்படும் வாய்ப்புகள்' என்ற முரண்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

என்னுடைய பணக்கார மாமா ஒருத்தர், ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடுவதற்காக என்னை அழைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்தான் செலவைப் பார்த்துக் கொள்வார் என்பது எங்கள் இருவருக்குமே தெரியும். இருந்தாலும், நாங்கள் இருவரும் அந்தச் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு பேச்சுக்காக நான் சற்றே வலியுறுத்தும்போது, என்னை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் சரி, அப்படியென்றால் நீயே கொடுத்துவிடு என்று என் மாமா சொன்னால் எப்படியிருக்கும்!

பூடகமான விதிமுறைகள்

சோவியத் யுகத்துக்குப் பிறகு, யெல்ட்ஸினின் ஆட்சிக் காலம் என்பது ஒரு குழப்பமான காலகட்டம். சட்ட விதிமுறைகளெல்லாம் அப்போது வெளிப்படையாக அறியப்பட்டாலும், பெரும்பாலானவை சோவியத் ஒன்றியத்தின்போது இருந்த விதிமுறைகள்தான்; எழுதப்படாத, பூடகமான அந்த விதிமுறைகள். அதாவது, ஒட்டுமொத்தச் சமூகக் கட்டுமானத்தையும் அதற்கு முன்பு தாங்கிப்பிடித்திருந்த அந்த விதிமுறைகள் சிதைந்து போயின. சோவியத் காலகட்டத்தில் உங்களுக்கு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை, புது வீடு வாங்குதல் போன்று ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால், அதற்கான பூடகமான விதிமுறைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

யாரைப் போய்ப் பார்ப்பது அல்லது யாருக்கு லஞ்சம் கொடுப்பது, உங்களால் செய்ய முடிவது, முடியாதது எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சோவியத் ரஷ்யா சிதைவுற்ற பிறகு, சாதாரண மக்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அவஸ்தைகளில் ஒன்று எதுவென்றால், எழுதப்படாத அந்த விதிமுறைகள் மேலும் தெளிவற்றுப் போனதுதான். மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெளிப்படையான சட்டதிட்டங்களை எப்படி விளங்கிக் கொள்வதென்றும், எதை விடுப்பதென்றும், லஞ்சம் எங்கே செல்லுபடியாகும் என்றும் மக்களுக்குத் தெரியவில்லை. விளாடிமிர் புட்டின் அரசின் கீழ் சமூகம் ஸ்திரமாகியிருப்பதன் காரணம், எழுதப்படாத இந்தச் சட்டதிட்டங்களுக்கு அவரது நிர்வாகம் வெளிப்படைத் தன்மையை நிறுவியிருப்பதே.

கருத்தளவில் வல்லரசு

சர்வதேச அரசியலில் நாம் இன்னும் அந்த நிலையை எட்டிவிடவில்லை. 1990களில் மேற்குலகின் வல்லரசுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவை ஒரு கமுக்கமான ஒப்பந்தம் கட்டுப்படுத்திவந்தது. மேற்கு நாடுகள் ரஷ்யாவை அது வல்லரசாக நடந்துகொள்ளாத பட்சத்தில் அதை வல்லரசாகக் கருதின. மறுக்கப்பட வேண்டுமென்றே வழங்கப்பட்ட வாய்ப்பை ஒருவர் ஏற்றுக்கொண்டால் எப்படியிருக்கும்? ரஷ்யா வல்லரசாக நடந்துகொள்ள ஆரம்பித்தால்? இதுபோன்ற நிலை உண்மையில் ஒரு பேரழிவே; சமூகங்களுக்கு இடையிலான ஒட்டுமொத்த உறவுகளுக்கும் அச்சுறுத்தல் என்றே கருத வேண்டும். அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியாவில் நடந்ததுபோல். கருத்தளவில் மட்டுமே வல்லரசாகத் தான் இருப்பது குறித்து அயர்ச்சியுற்று, ரஷ்யா வல்லரசாக உண்மையில் நடந்துகொள்ளவே ஆரம்பித்தது அப்போது.

முதலாளித்துவத்தின் வடிவங்கள்

இந்த நிலைக்குக் காரணம் என்ன? "அமெரிக்க நூற்றாண்டு' முடிவுக்கு வந்துவிட்டது. உலகளாவிய முதலாளித்துவத்தின் பல்வேறு மையங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் யுகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஒருவேளை லத்தீன் அமெரிக்காவிலும் கூட, முதலாளித்துவ முறைகள் தங்களுக்கே உரித்தான வடிவங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா என்றால், நவதாராளமய முதலாளித்துவம், ஐரோப்பா என்றால் மக்கள் நல அரசின் எச்சம், சீனா என்றால் சர்வாதிகார முதலாளித்துவம், லத்தீன் அமெரிக்காவில் வெகுஜன முதலாளித்துவம். தன்னை உலகின் தனிக்காட்டு அதிகார ராஜாவாக அதாவது, சர்வதேச பொலிஸ்காரர் போல நிறுவிக் கொள்வதற்கு அமெரிக்கா செய்த முயற்சிகள் தோல்வியுற்றன. எனவே, இப்போது பிராந்திய அளவிலான இந்த அதிகார மையங்கள், அவற்றின் முரண்படும் நலன்கள் சார்ந்து, தங்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய, சட்டதிட்டங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவை இருக்கின்றன.

சிறு நாடுகள், பலிகடாக்கள்

நமது காலம் தான் மிகமிக ஆபத்தானதாக இருக்கக் கூடிய காலகட்டம் என்பதற்குக் காரணம் இதுதான். பார்ப்பதற்கு அப்படித் தெரியவில்லை என்றாலும், அதுதான் உண்மை. பனிப் போரின்போது சர்வதேசப் போக்கின் விதிமுறைகள் தெளிவாக இருந்தன: பரஸ்பரம் உறுதியாக ஏற்படக்கூடிய அழிவுகள். இந்த அழிவுகள் ஏற்படுவதற்கு வல்லரசுகளின் பைத்தியக்காரத்தனம் தான் உத்தரவாதம். ஆப்கானிஸ்தானை ஊடுருவியதன் மூலம், எழுதப்படாத இந்தச் சட்டதிட்டங்களை சோவியத் ஒன்றியம் மீறியதற்கு அது கொடுத்த விலை அதிகம். ஆப்கானிஸ்தான் போர்தான் ரஷ்ய அழிவின் ஆரம்பம்.

இப்போது பழைய மற்றும் புதிய வல்லரசுகள் பரஸ்பரம் பரீட்சித்துக் கொண்டிருக்கின்றன; அவரவர் உருவாக்கிக் கொண்ட சர்வதேச விதிமுறைகளைப் பிறர்மீது திணிக்கப் பார்க்கின்றன; தங்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அந்த விதிமுறைகளைப் பரிசோதித்துப் பார்க் கின்றன. அந்தப் பிரதிநிதிகள் வேறு யாருமல்ல, சிறு நாடுகள்தான். கருதுகோள்களை அறிவியல் ரீதியில் பரிசோதனை செய்யும் முறையை கார்ல் பாப்பர் என்ற அறிவியல் தத்துவவாதி ஒரு தடவை இப்படிப் புகழ்ந்தார்: இந்த வழிமுறையின் மூலம் நமக்குப் பதிலாக நமது கருது கோள்களை நாம் சாக விடுகிறோம். இன்றைய பரிசோதனை முறையில், பெரிய நாடுகளுக்குப் பதிலாகச் சிறிய நாடுகள் அடிபடுகின்றன,

சேதத்துக்குள்ளாகின்றன முதலில் ஜார்ஜியா, தற்போது உக்ரைன். அதிகாரபூர்வ வாதவிவாதங்களெல்லாம் மனித உரிமைகள், விடுதலைகள் என்ற வகையில் மிகவும் தார்மீக தொனியில் இருந்தாலும், ஆட்டத்தின் தன்மை மிகவும் தெளிவு. உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் ஜார்ஜியாவில் நடந்த பிரச்சினை போலவே தோன்றுகின்றன. அதன் இரண்டாம் பாகம்தான் இது அதாவது, கட்டுத்திட்டங்களுக்கு அடங்காததும் பல்வேறு மையங்களைக் கொண்டதுமான உலகின் அதிகாரத்துக்கான புவியரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டம் இது.

உலகக் குடிமைத்துவம்

பழைய மற்றும் புதிய வல்லரசுகளுக்குப் பாடம் கற்பிக்கச் சரியான தருணம் இது. ஆனால், இதை யார் செய்வார்கள்? உலகளாவிய ஓர் அமைப்புதான் இதைச் செய்ய முடியும். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பே, சர்வதேசச் சமூகத்தின் எழுச்சியில் வேர்கொண்ட ஒரு சர்வதேசச் சட்ட அமைப்பின் அவசியத்தைத் தத்துவ வாதி இம்மானுவேல் கான்ட் கனவுகண்டார். நீடித்த சமாதானத்துக்கான தனது செயல்திட்டத்தைப் பற்றி அவர் எழுதுகிறார், உலகின் ஒரு மூலையில் உரிமைகள் மீறப்பட்டால், அது உலகெங்கும் உணரப்படும் நிலைக்கு மக்கள் சமூகம் முன்னேறியிருக்கிறது. அதனால், உலகக் குடிமைத்துவத்துக்கான பொதுச்சட்டம் என்னும் சிந்தனை ஒன்றும் ஆடம்பரமானதோ மிகைப்படுத்தப்பட்டதோ அல்ல.

சர்வதேச முதலாளித்துவப் பொருளாதாரத்தோடு இயைந்து செல்லும் சர்வதேச அரசியல் அமைப்பை உருவாக்குவது என்னும் சாத்தியமின்மையை நோக்கி இது நம்மை இட்டுச்செல்கிறது. நடைமுறைச் சிக்கல்களுக்காக மட்டுமல்லாமல், அமைப்புரீதியிலான காரணங்களுக்காக இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்: உலகளாவிய ஜனநாயகத்துக்கோ பிரதிநிதித்துவ உலக அரசாங்கத்துக்கோ சாத்தியம் இல்லாமல் போனால் என்னவாகும்? உலக அளவில் தேர்தல்கள் நடத்தி, அதன்மூலம் ஏற்படுத்தப்படும் சர்வதேசச் சுதந்திர ஜனநாயக அமைப்பாக உலகச் சந்தைப் பொருளாதாரத்தை நேரடியாக ஏற்படுத்தும் சாத்தியம் இல்லாமல் போனால் என்னவாகும்?

தற்காலத்தில், நமது உலகமயமாதல் யுகத்தில், நாம் இந்தப் பிரச்சினைக்கு விலைகொடுத்துக் கொண்டிருக்கிறோம். அரசியலில், தொன்மையான பற்றுக்களெல்லாம், குறிப்பாக, வலுவான இன, மத, கலாசார அடையாளங்களெல்லாம் வஞ்சத்தோடு திரும்பி வந்திருக்கின்றன. திறந்த சந்தைப் பொருளாதாரமும் சமூக வெளியில் உருவாகிக்கொண்டிருக்கும் பிளவுகளும் கைகோத்துச்செல்லும் நிலை என்ற நெருக்கடியைக் கொண்டுதான் நமது இன்றைய தலைவிதி வரையறுக்கப்பட்டிருக்கிறது. பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்டதற்குப் பிறகும், உலகமயமான சந்தையின் வரவுக்குப் பிறகும் எங்கும் புதுப்புதுச் சுவர்கள் தோன்ற ஆரம்பித்து வெவ்வேறு இன மக்களையும் அவர்கள் கலாசாரங்களையும் பிரித்துவிட்டிருக்கின்றன. ஒருவேளை, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில்தான் ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கக் கூடும்.

ஸ்லாவாய் ஜிஜெக்  த கார்டியன் -