சர்வதேச சமூகத்தை நம்புவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு?

thinakural.lk 07 06 2014

சர்வதேச சமூகத்தை நம்புவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு?  

தமிழ்த் தலைமையின் பார்வை இன்று இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு சம்பந்தன் மோடிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்திய அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் அளித்த உறுதிமொழிகளை ராஜபக்ஷவின் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் அக்கடிதத்தில் கூறியிருக்கின்றார். மற்றைய உலகத் தலைவர்களுக்கு விடுத்த கோரிக்கையைப் போலவே மோடிக்கு விடுத்த கோரிக்கையிலும் எவ்வாறான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பது பற்றி சம்பந்தன் எதுவும் சொல்லவில்லை.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் தெரிவிக்க அதிகாரம் பெற்றவரான நிர்மலா சீதாராமன் "சிலோன் ருடே' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று கூறியதை சென்ற வாரமும் இப்பத்தி குறிப்பிட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் மோடிக்குமிடையே இடம்பெற்ற உரையாடலின் போது காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்படப் பதின்மூன்றாவது திருத்தத்தைத் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மோடி கூறியிருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினையில் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் தீர்வு பதின்மூன்றாவது திருத்தமே என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

பொலிஸ் அதிகாரத்தையும் காணி அதிகாரத்தையும் வழங்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி பிடிவாதம் பிடிக்கின்ற நிலையில் மோடியின் முயற்சிக்கூடாக அவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு கிடைப்பது தமிழ் மக்களுக்கு ஒரு வெற்றி. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இப்போது வெளியிடப்படும் கருத்துகளும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவுக்கு கிடைத்த அனுபவமும் அவநம்பிக்கையைத் தருகின்றன. இந்தியப் பிரதமர் மோடி எதைச் சொன்னாலும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கூடாகவே தீர்வு என்றும் மாகாண சபைகளுக்கு என்னென்ன அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்றும் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 17.01.2012 இல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களை ( பதின்மூன்று பிளஸ்) வழங்குவதற்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார் என்று இப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதற்கு சில தினங்களுக்குப் பின் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவ்வாறான எந்த உறுதி மொழியையும் கிருஷ்ணாவுக்கு அளிக்கவில்லை என்று கூறினார். ஜனாதிபதி உண்மையாகவே அந்த வாக்குறுதியை தனக்கு அளித்தார் என்றும் இப்போது அதை மறுப்பது ஏன் என்பதைத் தெளிவுபடுத்துமாறும் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிய கடிதம் கவனத்தில் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணங்காவிட்டால் மோடி என்ன செய்வார் என்ற கேள்வி இந்தப் பின்னணியில் எழுகின்றது. இது ஒரு நிரானுகூல எதிர்வுகூறலல்ல. இலங்கை அரசாங்கத்தின் சிந்தனைப் போக்கை புரிந்துகொண்ட நிலையில் நியாயபூர்வமாகத் தோன்றும் சந்தேகம். இராஜதந்திர அழுத்தங்கள் பலனளிக்காவிட்டால் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கலாம் என்றும், தேவை ஏற்படுமாயின் படைபலத்தையும் பிரயோகிக்கலாம் என்றும் ஆர்வ மிகுதியினால் தமிழ் வட்டாரங்களிலிருந்து ஆலோசனைகள் வரலாம். இவை நடைமுறைச் சாத்தியமற்ற ஆலோசனைகள்.

இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக வளர்க்க வேண்டும் என்பது மோடியின் கனவு. இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாட்டை வளர்ப்பது அதற்குத் தடையாக இருக்குமென்பதால் அவசர நடவடிக்கை எதையும் அவர் எடுக்கமாட்டார். இந்தியப் பெருமுதலாளிகளின் ஆசீர்வாதத்துடன் அவர்களின் பிரதிநிதியாகவே மோடி பதவி ஏற்றிருக்கின்றார். இந்திய முதலாளிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் அவர் செய்யப்போவதில்லை. மோட்டார் வாகனங்கள், மின்சார உபகரணங்கள், எலேக்ரோனிக் பொருட்கள் என இந்தியாவின் பல்வேறு உற்பத்திகளுக்கு இன்று இலங்கை பிரதான சந்தையாக விளங்குகின்றது. எனவே பொருளாதாரத் தடை இந்தியாவையே வெகுவாகப் பாதிக்கும்.

பாரதீய ஜனதா கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டி எனக் கருதப்படும் ஆர்.எஸ். எஸ்ஸின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “ஓர்கனைசரின்“ முன்னாள் ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ். முக்கியஸ்தருமான சேஷாத்திரி சாரி தெரிவித்திருக்கும் ஒரு கருத்து இலங்கை தமிழர் விடயத்தில் பாரதீய ஜனதா கட்சியின் எல்லை எது என்பதைத் தெளிவு படுத்துகின்றது. சென்ற வருட ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது தவறு என்றும் அந்த வருடமும் இந்தியா நடுநிலை வகித்திருக்க வேண்டும் என்றும் அண்மையில் ஒரு நேர்காணலில் அவர் கூறினார். எங்கள் பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்காமல் வெளிநாடுகளை எதிர்பார்ப்பது பலனளிக்கப் போவதில்லை. பிரச்சினைகளின் தீர்வுக்கு வெளிநாடுகளில் வைத்த நம்பிக்கை எந்தப் பலனையும் தரவில்லை.

இனப்பிரச்சினைக்குச் சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று ஐந்து வருடங்களாகக் கூறுகின்ற போதிலும் எதுவும் நடக்கவில்லை. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா மாநாடு எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என்பதும் பொய்க்கதை. போர்க் குற்றங்களுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தண்டனை வழங்குவது இனப் பிரச்சினையையும் காணி அபகரிப்பு போன்ற மற்றைய பிரச்சினைகளையும் தீர்க்கப் போவதில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவுமாறு இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். இப்போது அதே கோரிக்கையைப் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்திடம் விடுக்கின்றோம்.

சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் எனக் கூறுவதில் உண்மை உண்டென்றால் ஏன் பதின்மூன்றாவது திருத்தத்துக்காக இந்திய அரசாங்கங்களை நாட வேண்டும்? சர்வதேச சமூகம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவது நடைமுறைச் சாத்தியமில்லை. ஏதாவதொரு தீர்வுக்கு அரசாங்கத்தைச் சம்மதிக்க வைத்தாலும் கூட சர்வஜன வாக்கெடுப்பில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறக்கூடிய நிலையில் சர்வதேச சமூகம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களல்ல. அரசியல் தேவை கருதியே சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று கூறி வருகின்றார்கள்.

வெளிநாடுகளை நாடிச் செல்லும் நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டு நிறைவில் ஆற்றிய உரையில் சம்பந்தன் இவ்வாறு விளக்கமளிக்கின்றார். “பேரம் பேசுவதற்கு அடிப்படையான அகப்பலம் எல்லாம் அழிந்தொழிந்து போன பின்னர் நிர்க்கதியாகி இருள் சூழ்ந்த அரசியல் எதிர்காலத்தை எதிர்நோக்கி நிற்கும் எமது மக்களுக்கு இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை ஒளி அனைத்துலக சமூகம் எமது தேசியப் போராட்டத்தின் மீது நியாயத்தின் அடிப்படையில் கொண்டிருக்கின்ற ஈடுபாடுதான்.“ அனைத்துலக சமூகம் எத்தகைய ஈடுபாடு கொண்டிருக்கின்றது என்பது இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளது. மொத்தத்தில் இது ஒரு தோல்வி மனோபாவக் கூற்று. அகப்பலத்தை இழக்கும் நிலை ஏன் ஏற்பட்டது எனச் சிந்தித்து அதற்கேற்றவாறு போராட்டத்தைக் தகவமைத்து முன்னேறாமல் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தங்கியிருப்பதற்கு மேற்கொண்ட முடிவு எவ்வித பலனையும் தரவில்லை. பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்தது தான் மிச்சம்.

தீர்வொன்றில் கருத்தீடுபாடு கொண்ட மக்களின் ஆதரவு அகப்பலத்துக்கான பிரதான அம்சம். சமஷ்டிக் கோரிக்கையில் கருத்தீடுபாடு கொண்ட மக்களின் ஆதரவு அன்று அகப்பலமாக இருந்தது. முஸ்லிம்களும் ஆதரவாளர்களாக இருந்தனர். சமஷ்டிக் கோரிக்கையைத் தலைவர்கள் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என்பது தனியான விமர்சனத்துக்குரியது. எனினும் அக்கோரிக்கைக்கு அன்று இருந்த ஆதரவு அன்றைய போராட்டங்களுக்கு அகப்பலமாக விளங்கியது. சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட்டுத் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்ததும் அகப்பலத்தில் வீழ்ச்சி தொடங்கியது. முஸ்லிம்கள் தனி அரசியல் பாதையில் செல்லத் தொடங்கினர். தனிநாட்டு கோரிக்கைக்குத் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருக்கவில்லை. தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த தலைவர்கள் காலத்துக்குக் காலம் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்ததும் தனிநாட்டுக் கோரிக்கையின் விளைவான பாதிப்புகளும் அதற்கான ஆதரவில் மேலும் வீழ்ச்சியை எற்படுத்தின. மக்களின் உணர்வுபூர்வமான பின்னணி ஆதரவு இல்லாத நிலையில் அகப்பலம் பாதிப்புக்கு உள்ளானது.

பிரதான பிரச்சினையின் தீர்வு தொடர்பாகக் கட்சிக்குள் இறுக்கமான ஒருமைப்பாடு நிலவுவது அகப்பலத்துக்கு அத்தியாவசியமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அவ்வாறான ஒருமைப்பாடு இல்லை. இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுத்திட்டத்தை இன்றுவரை அவர்களால் முன்வைக்க முடியவில்லை. தமிழ் மக்கள் தங்கள் நாளாந்த அலுவல்களைத் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தாங்களே தீர்மானித்து நடைமுறைப்படுத்துவதற்குச் சிறிய அளவிலாவது கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் போது மக்களிடம் ஒரு நம்பிக்கை பிறக்கும். அகப்பலம் அதிகரிக்கும். இழந்த அகப்பலத்தை மீளப் பெற்றுப் போராட்டத்தை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தாமல் வெளிநாடுகளை எதிர்பார்த்ததன் விளைவாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பல பின்னடைவுகளைக் கண்டது.

இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் தீர்வுக் கோரிக்கை பதின்மூன்றாவது திருத்தமாகக் குறுகிவிட்டது. பிரச்சினைகள் நாளுக்குநாள் வளர்கின்றன. வெளிநாடுகளின் மேலாதிக்க நிகழ்ச்சி நிரலுக்குத் தமிழ்த் தலைவர்கள் துணைபோகும் நிலை உருவாகியிருக்கின்றது. இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டமொன்றைத் தமிழ்த் தலைமை முன்வைக்காத நிலையில் எந்தத் தீர்வுக்காக வாக்களிக்கின்றோம் என்று தெரியாமலே தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றார்கள். அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தும் எதிர்மறை வாக்குகளே (NEGETIVE VOTES) அவை என்பதை விளங்கிக் கொள்வது சரியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவசியமானது. மாற்று வழி பற்றிச் சிறுபான்மை சமூகங்கள் சிந்திக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதைச் சென்ற வாரம் இப்பத்தி மேற்கோள் காட்டியிருந்தது. சிங்கள மக்களின் ஆதரவையும் வென்றெடுக்கக் கூடிய வகையில் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியல் நடவடிக்கைக்கூடாகவே முழுமையான அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல முடியும் என்ற சமகால யதார்த்தத்துக்கு அமைவானதும் அரசியல் தீர்வை நோக்கிய நகர்வுக்கும் கைகொடுக்கக் கூடியதுமான மாற்று வழியே தமிழினத்தின் விமோசனத்துக்கான இன்றைய தேவை.