ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறவேண்டும்

thinakkural.lk 02 07 2014

ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறவேண்டும்

1947 இல் இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதிலிருந்து இந்திய உப கண்டத்தில் அகதிகள் தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது. சுதந்திர இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனிநாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது பெருமளவில் அகதிகள் தமது சொந்த இடங்களை விட்டுத் துரத்தப்பட்டதுடன், இவர்கள் மிக மோசமான வன்முறைகளுக்கும் முகங்கொடுத்தனர். இது 1947 உடன் முடிவுக்கு வரவில்லை. 1950 களின் பிற்பகுதியில், சீனா திபேத்தியர்களுக்குத் சொந்தமான இடத்தைக் கைப்பற்ற முனைந்த போது பெருமளவான திபேத்தியர்கள் இந்தியாவுக்கு பலவந்தமாக விரட்டப்பட்டனர். 1971 இல் பங்களாதேஷ் தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது மேற்கு வங்காளிகள், பாகிஸ்தான் இராணுவத்தின் கொடுமைகளைத் தாங்கமுடியாது இந்தியாவில் புகலிடம் கோரினர். 1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பிக்கப்பட்ட போது பெருமளவான தமிழ் அகதிகள் இந்தியாவில் தஞ்சம் கோரினர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியராகக் கடமைபுரியும் இராமு மணிவண்ணன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் அகதிகளுக்காகப் பணியாற்றியுள்ளார். இவர் முதலில் திபேத்திய சமூகத்திற்காகவும் பின்னர் ஈழத்தமிழ் அகதிகளுக்காகவும் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவில் வாழும் அகதிகள் தொடர்பில் இராமு மணிவண்ணன் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதில் இந்தியா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. திபேத்தியர்கள் தொடக்கம் ஆப்கானியர்கள், பர்மியர்கள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் வரை இந்தியா நீண்டகாலமாக அகதிகளுக்குத் தஞ்சம் கொடுக்கும் ஒரு நாடாக விளங்குகிறது. இருப்பினும் இந்தியாவில் அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற சட்டங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 1951 இல் உருவாக்கப்பட்ட ஜெனீவாவின் அகதிகளுக்கான சாசனத்தில் இந்தியா இன்னமும் கைச்சாத்திடவில்லை. இந்தச் சிக்கலான பிரச்சினையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் அகதிகளைக் கொண்டுள்ள ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியா பிரிக்கப்பட்டதானது இந்தப் பிரச்சினையை உணர்வு ரீதியாக நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை நாங்கள் உணர்வு ரீதியாகத் தீர்க்கவேண்டும். பாதிப்புக்களுக்கு உள்ளாகும் அயல் நாட்டைச் சேர்ந்தவர்களை வரவேற்கின்ற, அவர்களுக்குப் புகலிடம் வழங்குகின்ற பாரம்பரியத்தையும் ஈடுபாட்டையும் கடப்பாட்டையும் இந்தியா கொண்டுள்ளது. ஆப்கான், பர்மா, திபேத் போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் பிரச்சினைகளையும் அவர்களின் மனிதாபிமான மற்றும் சமூக அவாக்கள் தொடர்பாகவும் இந்தியா மிகவும் சிறந்த வகையில் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் ஜெனீவா சாசனத்தில் கையெழுத்திடுவதன் ஊடான சட்ட ரீதியான தேவைகளை இந்தியா இன்னமும் நிறைவேற்றவில்லை. அகதிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிதி மற்றும் பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்படத் தேவையில்லை என இந்தியா கருதுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், இந்தியா இந்த சாசனத்தில் கையெழுத்திட வேண்டும் என நான் கருதுகிறேன்.

கேள்வி: அகதிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு இந்தியா சட்டங்களை இயற்ற வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?

பதில்: சட்ட ரீதியான பாதுகாப்பான பொறிமுறையை மேம்படுத்தி அதனை வழங்குவதற்கும், இது மீறப்பட முடியாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அகதிகள் தொடர்பான சட்டங்கள் தற்போது மாநில மற்றும் தேசிய அளவில் இல்லாததால் இவர்கள் கருத்திலெடுக்கப்படுவதில்லை. ஆனால் சட்டம் இயற்றப்படும் போது, இந்திய மத்திய அரசு மற்றும் அனைத்துலக நிறுவனங்கள் அகதிகளின் பிரச்சினைகளில் தலையீடு செய்ய வேண்டும் என்பதற்கான நல்லதொரு காரணத்தை நாம் கொண்டிருக்க முடியும்.

கேள்வி: இந்திய உபகண்டத்தின் எல்லைப் பிராந்தியங்களைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் புகலிடம் கோருவது வழமையானதாகும். ஏன் இந்தியாவால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது? கொலனித்துவ ஆட்சியைப் பொறுத்தளவில் இந்தச் சூழலானது எவ்வளவு தூரம் சட்டத்தில் தாக்கம் செலுத்துகிறது? கொலனித்துவத்தின் பின்னான நாடுகள் அரசியல், சமய, இன முரண்பாடுகளைத் தீர்ப்பதில் தோல்வியடைவது ஏன்?

பதில்: கொலனித்துவம் என்பது அகதிகளின் அதிகரித்த எண்ணிக்கைக்கு ஒரு காரணமாகும். இந்திய உப கண்டப் பிராந்தியத்திலோ அல்லது ஆபிரிக்கா போன்ற கொலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிலோ இது ஒரு சவாலாகக் காணப்பட்டாலும் கூட, கொலனித்துவத்திலிருந்து நாங்கள் விடுபட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. மக்களாகிய நாங்கள், எமது தலைமைத்துவம் இந்த முரண்பாடுகள் மேலும் தூண்டப்படுவதற்கு காரணமாக உள்ளோம். மிதவாத தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் போன்றன முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. இதனால் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. கொலனித்துவ பேரரசுகளின் அதிகார ஆட்சியை விட நாங்கள் எமது அண்டை நாடுகளுடனும் எமது நாட்டிற்குள் வாழும் சிறுபான்மையினருடனும் மிக மோசமான கொலனித்துவ அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றோம். இது தென்னாசியா முழுமைக்கும் பொருத்தமானதாகும்.

கேள்வி: அண்டை நாடுகளைச் சேர்ந்த அகதிகளை இந்தியா வரவேற்கின்ற போதிலும் அவர்களை சமமான வகையில் பராமரிப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. திபேத்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாக தமிழர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்போதும் சமமானதல்ல. இருப்பினும், நிலைமைகளும் வரவேற்கப்படும் விதமும் வித்தியாசப்படுகின்றன. அரசியலை விட திபேத்தியர்கள் கலாசார ரீதியாக இந்தியாவுடன் அதிகம் ஒன்றுவதால் இவர்கள் வரவேற்கப்படுகின்றனர். பர்மியர்கள் இந்தியாவின் வடகிழக்கில் அதிகம் வாழ்ந்தாலும் கூட இவர்கள இந்திய மத்திய அரசாங்கம் அதிகளவில் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இவர்கள் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இடம்பெற்ற அரசியல் மற்றும் ஆயுதப் போரால் பாதிப்புற்றவர்கள் என்ற வகையில் இந்தியாவில் அதிகம் வரவேற்கப்படுகின்றனர். இவர்கள் மிகப்பெரிய துன்பங்களை வாழ்வில் சந்தித்துள்ளனர். இதனால் இவர்களின் வேதனைகள் மற்றும் வலி போன்றவற்றை நீக்கவேண்டும். ஈழத்தமிழர்கள் இந்தியாவில் புகலிடம் கோரும் போது இவர்கள் சாதாரண மக்களாக நோக்கப்பட்டு இவர்களின் மனவடுக்களைத் தீர்ப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கேள்வி: ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவில் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்? இவர்கள் தொடர்பான அணுகுமுறையில் அல்லது தமிழ் அகதிகளை முகாமை செய்வதில் ஏதாவது மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய தேவையுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஆம். இலங்கையில் நிலவும் யதார்த்தமான சூழல் தொடர்பாக நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்தியா தனது அகதிகள் தொடர்பான கோட்பாட்டை மீள்பரிசீலிக்க வேண்டும். போருக்குப் பின்னான ஈழத்தமிழ் அகதிகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக இந்தியா பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு ஒரு மாற்றம் தேவை. ஈழத்தமிழர்கள் தொடர்பில் நாங்கள் கொண்டுள்ள பார்வையை மாற்ற வேண்டும். இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழர்களைப் பார்க்கின்றதோ அதற்கும் இந்தியா தமிழர்களை நோக்குவதற்கும் இடையில் வேறுபாடு காணப்பட வேண்டும். இவ்வாறான ஒரு அரசியல் மற்றும் செயற்பாடு சார் மாற்றத்தை நாங்கள் இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: இந்தியாவுக்கும் இந்தியாவில் வாழும் பல்வேறு அகதிகள் சமூகத்திற்கும் இடையில் நிலவும் குழப்பநிலையானது அரசியல் சார்ந்ததாகும். இந்தியாவில் வாழும் அகதிகளுக்கு எந்த வகையான எவ்வளவு அரசியல் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்?

பதில்: அகதி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைகளுக்கு அப்பால் இவர்களின் அரசியல் உரிமைகளை நாங்கள் அடையாளங் கண்டுகொள்ள வேண்டிய தேவையுள்ளது. நாங்கள் அகதிகளின் பிரச்சினையை இவர்களுக்குத் தொண்டாற்றுவதன் மூலம் தீர்க்கமுடியும் எனக் கருதுகிறோம். ஆனால் இவர்கள் சந்திக்கும் அரசியல் சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உரிமையை நாங்கள் வழங்க வேண்டும். இவர்கள் அரசியல் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் அனுமதிக்க வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் அனுபவிப்பதை விட அதிக உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதல்ல. அச்சமின்றி, தண்டனையின்றி அவர்களுக்கு எவ்வளவு சுதந்திரத்தை வழங்க முடியுமோ அதனை வழங்கி அவர்களுக்காக நாங்கள் பணியாற்ற வேண்டும்.

கேள்வி: அண்மைய காலங்களில் அனைத்துலக நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அங்கு வாழுவோர் தமது நாடுகளில் புகலிடம் கோரியுள்ளவர்கள், பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்காக குரல் எழுப்புவதையும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கும் ஆதரவாக உள்ளன. இந்தச் சூழலில் தமக்கான அரசியல் உரிமைகள் தொடர்பாக வெளிப்படையாகக் கதைக்கும் அகதிகள் சமூகத்தின் தலைவிதி எப்படி அமையும்? அல்லது தேசியவாதம் என்பதை விட அனைத்துலக ரீதியில் அகதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: உரிமைகள் என்பது ஒன்று தான். ஒரேமாதிரியானது. உரிமைகள் பிரபஞ்சம் சார்ந்தது. எமது தேசியவாதம் என்ற ரீதியில் அகதிகளுக்கான பிரச்சினை அமையவில்லை. தேசியவாதம் என்பது மிகைப்படுத்தப்படும் போது அகதிகளுக்கான பிரச்சினை அனைத்துலக மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய தேவையேற்படுகிறது. சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள், நீதி மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் மக்கட் கூட்டமானது தனது சொந்த நாட்டில் அல்லது அனைத்துலக நாடுகளில் அகதிகளாகின்றனர்.