31 08 2016

சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும்

இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது.எதிலும் கணனி எங்கும் கணனி எதற்கும் கணனி என்றாகி விட்ட நிலையில், கணனி அறிவுள்ளவர்கள்தான் நல்ல தொழில் வாய்ப்பைப் பெறலாம் என்ற நிலை உருவாகி விட்டது.அதிலும் முகநூல் ஆரம்பித்த பின்னர் கணனிக்குள் மணிக்கணக்காக முகத்தைப் புதைப்பவர்கள் இன்று பல்கிப் பெருகி விட்டார்கள். அதுபோல குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டு அவற்றின் பதிலுக்காக அடிக்கடி தமது கைத்தொலைபேசிகளை வருடிக் கொண்டிருப்பவர்களும் எண்ணிக்கையில் அதிகரித்து விட்டார்கள்.இதை அதிசயிக்கத்தக்க தொழில் நுட்ப வளர்ச்சி என்பதா அல்லது அநியாயமாக இளவட்டங்களை அழிக்கின்ற ஒன்று என்பதா?

முகவலை போன்ற சமூக வலைகள் இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு விட்ட நிலையில், முகத்தை முகம் பார்ப்பது என்பது அருகிக் கொண்டே போவதுதான் நிஜம்.முகத்தை முகம் பார்த்து சுக விசாரிப்புகள் செய்வது, புதினங்கள் பகிர்ந்து கொள்வது, சகஜமாக உரையாடுவது போன்றவற்றையெல்லாம் அடியோடு தொலைத்து விடுவோமா என்ற பயப்பிராந்தி எழுந்துள்ளது.நமது நிஜ முகங்கள் தொலைந்து போகின்ற அவலமே எஞ்சிக் கிடக்கின்றது. பிறரோடு பேசிப் பழகுவதைத் தவிர்த்து, உள்ளங்கைக்குள் இருக்கும் கையடக்கத் தொலைபேசியுடனான உறவை நெருக்கமாக்கி, தனக்குள் சிரித்து, புன்முறுவல் செய்து, தனி உலகில் வாழ முனைகின்ற கோலம் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றது. அதாவது உள்ளங்கை உலகம் பல இளவட்டங்களின் உலகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியா?

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவது எடை அதிகரிப்பிற்கு பெரிதும் கைகொடுக்கின்றது. தொழில்நுட்ப மோகம், எதையுமே உடம்பை வளைக்காமல் செய்ய உதவுவதால், உடற்பயிற்சி அற்ற உடம்பு நலம் கெட்டுப் போகின்றது. ஒரு சிலருக்கு உடல் எடையை அதிகம் இழக்கவும் வழிவகுத்துக் கொடுக்கின்றது.எதையாவது உண்ணும்போது அதை ரசித்து உண்ணுவது தவிர்க்கப்பட்டு, தன் புலன்கள் கணனியில் இருக்க, இயந்திரத்தனமாய் வாய்க்குள் உணவைத் தள்ளும் கேவலமும் அரங்கேறுகின்றது.
கண்களுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பது, தலைவேதனையும் சிலருக்குக் கொண்டுவருகின்றது. கூடவே கழுத்து வலியும் கைகோர்த்துக் கொள்வது வழமை. கண்களும் அழுத்தம் காரணமாக செந்நிறமடைகின்றன.

கணனிக் காய்ச்சலோ அல்லது கைத்தொலைபேசிக் காய்ச்சலோ ஒருவருக்குத் தொற்றி விட்டால், வேறு விடயங்களில் மனம் ஈடுபட முரண்டுபிடிக்கும். ஐயோ இது வேண்டாம் என்று ஏனையவற்றை ஒதுக்க முற்படும் மனோபாவம் மேலிடும். எங்கள் நிஜ உறவுகளை, நண்பர்களைத் தொலைத்து விட்டு, ஒரு மாய உலகில் நண்பாகளுக்காக அலைந்து கொண்டிருப்பதே இன்றைய யதார்த்தமாகி இருக்கின்றது. முகநூலில் பல நூறு நண்பர்கள் இருப்பதாகப் பீற்றிக் கொள்கிறோம். அவா்களில் எவராவது நாம் பதிவேற்றியதை லைக் செய்து இரண்டு வரி பாராட்டி எழுதி விட்டால் தலைகால் தெரியாமல் குதிக்கின்றோம்.

இந்த முகந்தெரியாத உறவுகள் பல்கிப் பெருக வேண்டும். ஆயிரக்கணக்கில் இருக்க வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டு; நம்மைச் சுற்றியிருக்கும் இளம் சந்ததியினர் ஏராளம் ஏராளம். முகம் தெரிந்த உறவுகள் பலவற்றை இழந்;துவிட்டு முகந்தெரியாத உறவுகளின் வருகையைக் கொண்டாடுகிற சமுதாயம் இது.உலக நாடுகளைப் போல், இலங்கையின் இணையப் பாவனையாளர்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறார்கள். 2000மாவது ஆண்டில் இலங்கை சனத்தொகையின் 0.5 வீதமானவர்களே இணையப் பாவனையாளராக இருந்துள்ளார்கள். இந்தத் தொகை 2010இல் 8.3 வீதமாக உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு நடுப்பகுதி வரை எடுத்த கணிப்பின்படி இலங்கை மொத்த சனத்தொகையான 6,087,164 இல் 27.4 வீதமானவர்கள் இணையப் பாவனையாளர்கள்
கணிசமான வளர்ச்சி...

கைத்தொலைபேசி பாவனைகளும், இணையத்துடனான இணைப்புகளும், முகநூல் மேய்ச்சல்களும் கூடவே சேர்ந்து கொண்டிருப்பது அபரித வளர்ச்சி.இந்த வருடம் கடந்த மார்ச் மாத முடிவில் எடுத்த கணிப்பொன்றின்படி,1.65 பில்லியன் தீவிர முகநூல் பாவனையாளர்கள், மாதாந்தம் இணையத்திற்கு வந்து போகின்றார்களாம். முகநூலை நேசிக்கும் அளவிற்கு இங்குள்ள நூலகங்களை எத்தனை பேர் நேசிக்கின்றார்கள்? அங்கும் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கும் வாசகர் கூட்டங்களை அல்லவா காணமுடிகின்றது?

பத்திரிகை வாசிப்பதற்காக அடிக்கடி நூலகம் செல்லும் எனக்கு, மேசையில் ஒரு பத்திரிகையை விரித்து வைத்துவிட்டு தன் கைத்தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்தபோது கோபம் வரவில்லை. இந்த இளஞ்சமுதாயத்தை இந்த நவீன மின்னியல் சாதனங்கள் இப்படி மாற்றியமைத்து விட்டனவே என்று கவலைப்பட்டேன்.மாறி விட்டதா இளஞ்சமுதாயம்? அல்லது மாற்றப்பட்டு விட்டதா இந்தச் சமுதாயம்?

வளருகின்ற தொழில் நுட்பங்கள், வளர வேண்டிய இளசுகளின் மூளைத்திறனை மழுங்கடிக்க வைக்கின்றனவா? நீங்களே நீதிபதிகள்.....
- ஏ.ஜே.ஞனேந்திரன் onlineuthayan.com/

Published in Tamil
24 08 2016

கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை

கருணாகரன்

வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே, ஊழல் குற்றச்சாட்டுக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுத்துகின்றன.

உண்மையில் இது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கைகளை மீறி நிகழ்ந்த செயலாகும். தான் நியமித்த அமைச்சர்களின் மீது யாரும் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியாது என்று விக்னேஸ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அப்படிக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால், சபையின் உறுப்பினர்கள் முதலமைச்சரின் நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்து விட்டனர். அவர்கள் சபையிலும் முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களிலும் தொடர்ச்சியாகக் கொடுத்த அழுத்தங்களை அடுத்து, முதலமைச்சரே அமைச்சர்களை விசாரிப்பதற்கான குழுவை நியமிப்பதற்கான சபையேற்பைக் கோரினார். ஆனால், இந்த விசாரணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. இதைச் சுட்டிக்காட்டிய பின்னர், தானே அதற்கான குழுவை நியமிப்பதாக சபைக்கு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இப்படி அமைச்சர்களின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள், எதிர்க்கட்சியினர் அல்ல. ஆளும்தரப்பைச் சேர்ந்த சகபாடிகளே. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருப்போர், கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர். சத்தியலிங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அவர் பதவியேற்ற ஓராண்டுக்குள்ளேயே பகிரங்கமாகியிருந்தன. குடும்ப உறுப்பினர்களை பதவிகளில் நியமித்தது தொடக்கம், ஒப்பந்த வேலைகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கினார் என்பது வரையில் பல குற்றச்சாட்டுகள். இதனையடுத்து, சத்தியலிங்கத்தின் பொறுப்பின் கீழிருந்த சில அமைச்சுகளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார். 'அந்தப் பொறுப்புகள் முதலமைச்சரின் நிர்வாகத்தின் கீழிருந்தே தன்னுடைய சம்மதத்தின் மூலமாக சத்தியலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இருந்தும் அவற்றின் வினைத்திறன் போதாமையாக இருப்பதனால், அதைத் தான் மீளப்பெறுவதாக' இதற்குச் சில காரணங்களை முதலமைச்சர் சொல்லியிருந்தார். இருந்தாலும் அது சத்தியலிங்கத்தின் மீதான நம்பிக்கையீனமாகவே பொதுவெளியில் பார்க்கப்பட்டது. அதில் ஓரளவு உண்மையுமுண்டு.

ஐங்கரநேசனின் மீதான குற்றச்சாட்டுகள் பளைப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் காற்றலை மூலம் மின்பெறு நிலையம் வழங்கும் நிதியைப் பயன்படுத்தியது தொடக்கம், பார்த்தீனியச் செடி ஒழிப்பு, மர நடுகை எனப் பலவற்றிலும் முறைகேடுகள் நடந்துள்ளன என ஊடகங்களிலும் முறைப்பாடுகளிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட அதிகமான ஊழல் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜாவின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாகத் தகவல். கட்டிட ஒப்பந்தங்களை வழங்குவதில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடக்கம் ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே அதிகார துஷ்பிரயோகம் செய்வதையிட்டு குருகுலராஜாவின் மீது கசப்புடன் இருக்கும் மக்களுக்கும் கல்விப் புலம் சார்ந்தவர்களுக்கும் குருகுலராஜா மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் இனிப்பைத் தந்திருக்கின்றன. ஆனால், குற்றச்சாட்டுகள் எல்லாம் நிரூபிக்கப்பட வேண்டும். அதுவே முக்கியமானது. அப்படி நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக இந்த மூன்று அமைச்சர்களின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். சிலவேளை இதில் ஒரு அமைச்சரோ அல்லது இரண்டு அமைச்சரோ மாட்டுப்பட மற்றவர் தப்பி விடவும் கூடும். இருந்தாலும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பது என்பது உண்மையே.

இத்தகைய முறைகேடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என வட மாகண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் ஆதாரங்களை முன்வைத்துச் சுட்டிக்காட்டியுமிருக்கிறார். தவராசா சுட்டிக்காட்டிய நியாயத்தையும் உண்மைகளையும் அப்பொழுது யாரும் பொருட்படுத்தவில்லை. பதிலாக ஏனையவர்கள் ஒன்று சேர்ந்து தவராசாவைப் பேசவிடாது தடுத்து விட்டனர். ஆனால், பயிரை மேயும் வேலிகள் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளையும் கடிக்கத்தொடங்கின. அடிமடியில் சூடு பிடித்தபோதே எல்லாம் கைமீறிச்செல்வதாக ஏனையவர்கள் உணர்ந்தனர். உடனே அலக்கப்பலக்க விழுந்தடித்துக்கொண்டு களத்தில் புகுந்திருக்கின்றனர். விஷம் தலைக்கேறினாலும் வெள்ளம் தலைக்கு மேலே போனாலும் ஒன்றுதான் என்பது எத்தனை சரியானது? இப்பொழுது மாகாண சபை கூனிக்குறுகிப்போய் நிற்கிறது. பொறுப்பேற்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் அது சில சாதனைப்புள்ளிகளையாவது எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வெளிநாட்டுப்பிரதிநிதிகளுடன் அடிக்கடி முதலமைச்சர் கைகுலுக்கிப் படங்களை எடுத்துக்கொண்டதற்கு அப்பால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சாதனைகள் என்று எதுவுமே இல்லை. எதிர்பார்ப்புகள் நொருங்கி கைதடிவெளியில் சிதிலங்களாகக் கிடக்கின்றன. ஜனங்களுடைய மனங்களிலும்தான். மக்களுக்கு இந்த மாகாண சபையிலும் விக்னேஸ்வரனுடைய நிர்வாகத்தின் மீதும் ஏராளமான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தன.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நிர்வகிப்பதற்கும் இராணுவ நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் மாகாண சபை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று எல்லாமே சரிந்து விட்டன. ஒரு காலத்தில் மதிப்பாக மாகாண சபையைப் பற்றிப் பேசியவர்கள் எல்லாம் இன்று அதைக் காறி உமிழும் நிலை வந்துள்ளது. இந்த இடத்தில் மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் கூற்றினை இங்கே குறிப்பிட வேண்டும். 'வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு, விசாரணை செய்வதற்கான தீர்மானத்தை வட மாகாண சபை நிறைவேற்றியுள்ளதானது மிகவும் அதிர்ச்சியை தருகின்றது. குற்றச்சாட்டுக்கள் உண்மையா, பொய்யா என்பது வேறு விடயம். இக்குற்றச்சாட்டுகளை கேள்விப்பட்டவுடன் தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் வரை அமைச்சு பதவிகளில் இருந்து தாமாகவே விலகியிருக்க வேண்டும். அதுதான் ஒழுக்கமான அரசியல் பண்பாடாகும்' எனச் சங்கரி குறிப்பிட்டிருப்பதைச் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் கவனத்திற் கொள்வது நல்லது. ஏனென்றால், ஒரு அரசியற் பண்பாட்டை வட மாகாண சபை இந்தச் சந்தர்ப்பத்தில் உருவாக்க வேண்டும். வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நடக்கின்ற முதலாவது ஆட்சி இதுவாகும். இந்த ஆட்சியில் வரையப்படும் அடிப்படைகளும் முன்மாதிரிகளும் வரலாற்றிற்குச் சிறப்பூட்டுவதுடன், எதிர்காலத்தில் அமையவுள்ள ஆட்சிகளுக்கும் வழிப்படுத்தலாக இருக்கும்.

ஆகவேதான் குறிப்பிட்ட அமைச்சர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் நடந்து முடியும் வரையிலும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பது மாண்புடைய செயலாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே, தமது தரப்பைச் சேர்ந்த அமைச்சர்களின் மீதான புகார்களை வெளிப்படையாகத் தெரிவித்து, அரசியல் நாகரீகமொன்றை நடுநிலைத்தன்மைமிக்கதாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த மாண்பை அமைச்சர்களும் பின்பற்றுவது சிறப்பானதாகும். இதேவேளை, மாகாண சபை மீதான தொடர்ச்சியான விமர்சனங்களும் கண்டனங்களும் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மாகாண சபையின் முதலாண்டு நிறைவில் மாகாண சபையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் காரசாரமாகத் தமது விமர்சனங்களை முன்வைத்துக் கேள்விகளை எழுப்பியிருந்தன. அந்த முதலாண்டிலேயே கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். இப்படி மேலும் இரண்டாண்டுகளுக்காக யாரும் காத்திருந்திருக்கத் தேவையில்லை. மாகாண சபையின் சாதனைகள் என்பது பிரேரணைகளைக் கொண்டு வருவதும் தீர்மானங்களை நிறைவேற்றுவதும்தான் என்று பகடியாக மக்கள் சொல்லுமளவுக்கே நிலைமை உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், வட மாகாண சபை முன்மாதிரியானதொரு மாகாண சபையாக நாடு முழுவதற்கும் முன்னுதாரணப்படும் என்று சொல்லப்பட்டது. அப்படித்தான் பலரும் எதிர்பார்த்தனர். இப்பொழுது 'தனியொருவன்' என்று எதிர்க் கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எழுப்புகின்ற கேள்விகளுக்கு அத்தனை உறுப்பினர்களும் தடுமாறுகிறார்கள். தவராசாவைப் போலத்தான் சம்பந்தனும் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால், அவர் தடுமாறி நடக்கிறரே தவிர ஆட்சியாளர்களைத் தன்னுடைய கேள்விகளால் திணறடிக்கவோ தடுமாற வைக்கவோ முடியாமலிருக்கிறார் என்று ஒரு நண்பர் ஆதங்கத்தோடு சொன்னார். அதில் உண்மையுண்டு. மாகாண சபையில் பொதுவாகவே நிதிக்கையாள்கையில் பல பிரச்சினைகள் உண்டென்பது இன்னொரு சுட்டிக்காட்டாகும். வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட '67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வட மாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை' என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை ஆதாரம் காட்டித் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை(16) நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'வட மாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல்இ வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 784 மில்லியன் ரூபாய் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதனையும் கணக்காய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இயங்கும் வட மாகாண சபையின் திணைக்களங்கள், அமைச்சு, அமைச்சின் அலுவலகங்கள் என்பன தனியார் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 28 கட்டடங்கள் உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட்டு பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை மறுத்துரைப்பதற்கு ஆளில்லை. மௌனமாகக் கடந்து செல்லுதல் அல்லது கள்ளமௌனம் காக்கப்படுகிறது. இது ஏன்? இது சரியானதா? இது குறித்த சமூக ஆர்வலர்களின் அக்கறைகள் என்ன? புத்திஜீவிகள் இது குறித்து ஏன் இன்னும் பேசாமலிருக்கிறார்கள்? சமூகமே எல்லாத் தவறுகளையும் மறைக்கப் பழகிவிட்டதா? அப்படியென்றால், தவறுகள்தான் இனிமேல் கொடியேறும். யார் தவறுகளைச் செய்தாலும் அவற்றைத் தட்டிக் கேட்கும் பண்பாடும் அறிவுப் பொறுப்பும் ஏனில்லாமல் போகிறது?

மாகாண சபையின் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட போதும் விமர்சனங்களை முன்வைத்தபோதும் அவற்றைக் கவனத்தில் எடுத்திருக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்குண்டு. அவர் ஒரு நீதியரசர். வயதில் முதிர்ந்தவர். பொறுப்புகளையும் பொறுப்புணர்வையும் நன்றாக உணரக் கூடியவர். அப்படியெல்லாம் இருந்தும் இந்தத்தவறுகள் எல்லாம் எப்படிக் கட்டுப்படுத்துவாரின்றித் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன? மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே இத்தனை சரிவை வடக்கு மாகாண சபை சந்தித்திருக்கிறது என்றால், இதனுடைய எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது? 'நாடு ஊழல் ஆட்சியிலிருந்து மீண்டு விட்டது என்று மக்கள் சந்தோசப்பட்டுக்கொண்டிக்கும் பொழுதுதான் வடக்கில் ஊழல் என்ற பேச்சுக் கேட்கிறது' என்றார் சிங்கள நண்பர் ஒருவர். அவருக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாற வேண்டியிருக்கிறது. 'ஆசை யாரைத்தான் விட்டது?' என்று ஒற்றை வசனத்தோடு இவற்றைக் கடந்து சென்று விட முடியாது. ஏனென்றால், இது ஜனங்களின் வாழ்க்கையோடும் வரலாற்றோடும் சம்மந்தப்பட்டதல்லவா? மக்களுக்காக உயிரையும் கொடுப்பதற்குத் துணிந்திருந்த சமூகத்திலிருந்துதான், இப்படி தங்களுக்கென இலாபங்களைத் திரட்டும் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். என்னவொரு காலமாற்றம், பத்து ஆண்டுகளுக்குள்ளேயே என்பதே நிதர்சனம்.

tamilmirror.lk 22 08 2016
Published in Tamil
17 08 2016

ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது.நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள்.அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது ‘தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா?’ என்பதுவேஇம்முறை விவாதத் தலைப்பாகியிருக்கிறது.இப்பட்டிமண்டபம், மாகாணசபை அளவில் நடந்து முடிந்து,சம்பந்தனாரிடம் மேன்முறையீட்டிற்குச் சென்றிருக்கிறது.அவரோ வழமைபோலவே, உறுதியாய்த் தீர்ப்புரைக்காமல்,அனைத்தையும் காலம் கனிவிக்கும் என்னும்தனது வழக்கமான தத்துவத்தின்படிஅதுவும் சரி, இதுவும் சரி என்னுமாப்போல் ‘சலாப்பி’தீர்ப்பினை இழுத்தடித்திருக்கிறார்.இவ்விவாதங்களால் இன ஒற்றுமை சிதைவதை அறியாமல்பட்டிமண்டபங்களில் இருஅணிக்கும் கைதட்டிப் பழகிய நம் தமிழ் மக்கள்,இவ்விடயத்திலும் அணி பிரிந்து கைதட்டி மகிழ்ந்து நிற்கின்றனர்.இப்பட்டிமண்டபத்தில் அணி பிரிந்து மோதுவது வடமாகாணசபையின்,ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியுமல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.வழமைபோலவே, இம்முறையும் ஆளுங்கட்சியே அணி பிரிந்து மோதுகிறது.ஆளுங்கட்சிக்குள்ளேயே நடக்கும் பட்டிமண்டபங்களின் வரிசையில்,இந்தத் தலைப்பிற்கு ஆறாவதோ, ஏழாவதோ இடம்.மாகாணசபையில் எதிர்க்கட்சியினர்,எங்களுக்கு வேலையே இல்லையா? என ஏங்கிகொட்டாவி விட்டுக் குதூகலித்து நிற்கின்றனர்.தமிழர் என்று ஒரு இனம் ! தனியே அவர்க்கு இது குணம் !

முதலில் இப்பிரச்சினை பற்றி,வாசகர்களுக்குச் சிறியதொரு முன்னோட்டம்.மத்திய அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தில்,நுவரெலியா, தம்புல்ல ஆகிய இடங்களிலிருப்பது போன்ற,ஒரு பொருளாதார மையத்தை வடக்கிலும் உருவாக்கி,விவசாய, பண்ணை உற்பத்திப் பொருட்களை,தகுந்த விலையில் உற்பத்தியாளர்களிடம் பெறவும்,குறைந்த விலையில் நுகர்வோருக்குத் தரவும் எனஇருநூறு கோடி ரூபாவை ஒதுக்கியது.இப் பொருளாதார மையத்தை அமைக்கவென,இடம் தேடத் தொடங்கியது மத்திய அரசு.அதற்குப் பொருத்தமான இடங்களைச் சிபாரிசு செய்யும்படி,வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவிடம் அது கேட்டுக்கொண்டது.அவ் அபிவிருத்திக்குழு,மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஆராய்ந்து மூன்று இடங்களை,பொருளாதாரமையம் அமைக்கப் பொருத்தமான இடங்களெனச் சிபாரிசு செய்தது.தாண்டிக்குளம், ஓமந்தை, தேக்கவத்தை என்பவையே,அச்சபை சிபாரிசு செய்த இடங்களாம்.

இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.இம் மூன்று இடங்களையும் சிபாரிசு செய்த,வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுவில்,முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,அரச அதிபர் எனப் பலரும் இருந்திருக்கின்றனர்.முக்கியமாக இன்று ஓமந்தையே இதற்கு உகந்த இடம் என,உறுதிபட உரைத்து மோதிநிற்கும் முதலமைச்சரும்,முன்பு இம்மூன்று இடங்களையும் சிபாரிசு செய்தகூட்டத்தில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக்குழு ஒன்று,நேரடியாக இம்மூன்று இடங்களுக்கும் விஜயம் செய்து,வவுனியா நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயேஅம்மையம் அமைய வேண்டும் எனும் தமது நிலைப்பாட்டின் அடிப்படையில்இம் மூன்று இடங்களில் பொருளாதார மையம் அமைக்க,பொருத்தமான இடமெனத் தாண்டிக்குளத்தைத் தேர்வு செய்தது.பிரச்சினை இங்குதான் ஆரம்பமானது.நமது வடமாகாண விவசாய அமைச்சர்,அரசின் இம்முடிவை எதிர்க்கத் தலைப்பட்டார்.எதிர்ப்புக்காக அவர் சொன்ன காரணங்கள் மூன்று.☛ அரசாங்கம் சொன்ன இடம், விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது முதற்காரணம்.☛ விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருந்த விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அடுத்த காரணம்

 சூழல் பாதிப்புறும் என்பது மூன்றாவது காரணம்.இங்குதான் வேடிக்கை தொடங்கியது.முன்னர் தாண்டிக்குளம் உட்பட்ட மூன்று இடங்களை அரசுக்கு சிபாரிசு செய்தமாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சரும்,அக்குழுவின் உறுப்பினரான விவசாய அமைச்சரோடு இணைந்துஅரசுக்குத் தனது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்.சிபாரிசு செய்தவர்களில் நீங்களும் இருந்தீர்களே என்ற கேள்வி வந்தபோது,முதலமைச்சரும் விவசாய அமைச்சரும்அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்துபின்னர் இடையில் தாம் சென்றுவிட்டதாய்ப் பதிலுரைத்தனர்.இங்கும் கேள்விகள் எழவே செய்தன.இன்று இத்துணைப் பிரச்சினைக்குரியதாய்க் கருதி மோதும்இம்முக்கிய விடயம்பற்றி தீர்மானிக்கும் கூட்டத்தில்முழுமையாய்க் கலந்துகொள்ளாமல் சென்றது ஏன்? என்பது முதற்கேள்வி.அங்கனம் சென்றாலும் பின்னர் தம் கைக்கு வந்த கூட்ட அறிக்கையைப் பார்த்த பின்னேனும்.இம்முடிவுபற்றி எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தது ஏன்? என்பது அடுத்த கேள்வி.மொத்தத்தில் தலைவர்கள் தம் பொறுப்புக்களைஎத்தனை தூரம் அலட்சியம் செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.இவ்விடத்தில் பழைய வரலாறு ஒன்றை நினைவுகூர வேண்டியிருக்கிறது.இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தபோது அமைக்கப்பட்டவடகிழக்கு மாகாண சபைக்கு எவரை முதலமைச்சராய் நியமிப்பது என,புலிகளிடம் அப்போதைய அரசு அபிப்பிராயம் கேட்டது.அவ்வேளை புலிகள், அப்பதவிக்கென சில பெயர்களைச் சிபாரிசு செய்தனர்.அப்பெயர்களில் ஒன்றாய் இருந்தஅப்போதைய யாழ். மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே. சிவஞானத்தை,அன்றைய ஜனபாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா முதலமைச்சராய் நியமிக்க,அம்முடிவோடு முரண்பட்ட புலிகள்,வேறொருவரை நியமிக்கவேண்டுமெனப் பின்னர் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினர்.அதன்பின் விளைந்த பெரும் பிரச்சினைகளுக்கு இவ்விடயமும் ஒரு காரணமாயிற்று.இன்றும் அதேபோல்தான், சிபாரிசின்போது அலட்சியமாய் இருந்துவிட்டுமுடிவு வந்தபின் மோதி நிற்கின்றனர் நம் தலைவர்கள்

தாண்டிக்குளம் வேண்டாமென்பதற்கு விவசாய அமைச்சர் சொன்ன காரணங்களைஎதிரணியினர் மறுத்து நிற்கின்றனர்.அமைச்சர் கருத்தும் எதிரணியினரின் மறுப்பும் பின்வருமாறு அமைகின்றன.☛ அரசாங்கம் சொன்ன இடம் விதை உற்பத்திப் பண்ணைக்கு உரியது. அவ்விடத்தை எடுத்தால் விதை உற்பத்தி பாதிக்கப்படும் என்பது அமைச்சர் சொன்ன முதற்காரணம்.இம்முதற் காரணம் பற்றிய எதிரணியினர் கூறும் இரண்டு பதிவுகள் சிந்திக்கவைக்கின்றன.

மகிந்த ஆட்சிக்காலத்தின்போது, இந்நெல் உற்பத்தி மையத்தின் ஒரு பகுதியை எடுத்து பஸ் நிலையம் அமைத்தார்கள். அப்போது, விவசாய அமைச்சரோ, மாகாண சபையோ அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன் என அவர்கள் முதலில் கேள்வி எழுப்பி பின்னர், இந்த விதை உற்பத்திப் பண்ணையை புளியங்குளத்தில் உள்ள 200 ஏக்கர் காணிக்கு நகர விரிவாக்கத்திற்காய் மாற்றுவதென ஏற்கனவே நகர அபிவிருத்தி திணைக்களம், 2009 அரச வர்த்தமானியில் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் எப்படியோ இந்த விதை உற்பத்தி நிலையம் மாற்றப்படவேண்டி உள்ளதால், இவ்விடத்தில் பொருளாதார மையம் அமைவதால் பாதிப்பு வராது என்று அமைச்சருக்குப் பதிலுரைத்து நிற்கின்றனர்.

☛ விதை உற்பத்திப் பண்ணையையொட்டியிருக்கும் விவசாயக் கல்லூரி பாதிப்படையும் என்பது அமைச்சர் சொல்லும் அடுத்த காரணம்
எதிரணியினர் இக்கருத்தையும் ஏற்க மறுக்கின்றனர். விவசாய மாணவர்களின் கல்லூரி இருப்பது இவ்வாராய்ச்சி மையத்தின் எதிர்ப்பக்கத்திலேயே. இம்மாணவர்கள் தம் கல்விமுயற்சிக்கு இவ்விதையுற்பத்திப் பண்ணையை நம்பியிருக்கவில்லை. எனவே, மாணவரின் கல்விக்கு இப்பொருளாதார மையத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் அவர்கள்.

☛ சூழல் பாதிப்புறும் என்பது அமைச்சர் சொல்லும் மூன்றாவது காரணம் இப்பொருளாதார மையத்தினால் ஏற்படும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் சூழலை பாதிக்கும் என்கிறார் அமைச்சர்.
அக்கருத்துக்கு எதிரணியினரிடமிருந்து வலிமையான பதில் வந்ததாய்த் தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஒரு நகர உருவாக்கத்தில் இத்தகைய பிரச்சினைகள் வருவது இயற்கையே. இப்பிரச்சினைகளைத் தீர்க்க வழி கண்டு பிடிக்கவேண்டுமே தவிர, இவற்றைக்கண்டு பின் வாங்குதல் கூடாது என்று உரைத்து நிற்கின்றனர். அதுமட்டுமன்றி, இதே பிரச்சினை ஓமந்தையில்கூட வரும்தானே என்பதும் அவர் வாதமாய் இருக்கிறது.

தாண்டிக்குளமோ? ஓமந்தையோ? எங்கேனும் அப் பொருளாதார மையம் அமைந்துவிட்டுப்போகட்டும்.வடக்குக்குள் அதை அமையவிட்டால் சரிதான்.ஆராயவேண்டிய பிரச்சினை வேறு.தலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட இக்குழப்பங்களால்,வன்னி மாவட்டத்தில் ஓமந்தை, தாண்டிக்குளம் எனஇரண்டு பிரிவுகள் உருவாகியிருக்கின்றன.தலைவர்களில்,பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும்,முதலமைச்சரும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும்மாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகராஜா ஆகியோரும்ஓமந்தை அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.அதுபோலவே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகனும், மாவை சேனாதிராஜாவும்,சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானமும்,சுகாதார அமைச்சர் சத்தியலிங்கமும்தாண்டிக்குளம் அணிக்காய் வாதிட்டு நிற்கின்றனர்.இவ்விரு குழுக்களின் பின்னால்,ஒன்றுபட்டு இருந்த வன்னி மாவட்ட மக்கள்இவ்விரண்டு அணிகள் சார்ந்து கட்சி பிரிந்துஉண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் நடத்தி நிற்பதுதான்வருத்தத்திற்குரிய செய்தி.இப்பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியாத நிலையில்,சென்ற மாதமளவில் மாகாண சபையில் இப்பிரச்சினை பற்றி ஆராயப்பட்டது.அப்போது முதலமைச்சரின் கருத்தை மீறி ஆளுங்கட்சி உறுப்பினர்கள்தாண்டிக்குளத்தில்தான் அம்மையம் அமையவேண்டுமெனஒரு பிரேரணையை நிறைவேற்றினர்.

வழமைபோலவே,முதலமைச்சர் தனது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் எண்ணி,மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தைதான் ஏற்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை எனக் கருத்துரைத்து,மாகாண சபை உறுப்பினர்களின் பிரேரணையை நிராகரித்தார்.அதன்போது, மாகாண சபை முதல்வர் சி.வி.கே. சிவஞானம்,சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நிராகரிக்கும் உரிமைமுதலமைச்சருக்கு இல்லை என அறிக்கை விடஆளுங்கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சி அழகாய் உருவாயிற்று.

இந்நிலையில் முதலமைச்சர்திடீரென ஒரு புதிய பாதை வகுத்தார்.ஓமந்தையிலும் இல்லாமல், தாண்டிக்குளத்திலும் இல்லாமல்தேக்கவத்தையில் இப்பொருளாதார மையத்தை அமைக்கலாமெனவும்,அதற்கு, ஏற்கனவே அமைச்சர் ரிச்சாட் பதியுதீன் அவர்களால்சில வருடங்களுக்கு முன் ஒரு தனியார் நிறுவனத்திற்குகுத்தகைக்கு வழங்கப்பெற்ற நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும்ஓர் புதிய திட்டத்தை அறிவித்தார்.முதலமைச்சரின் அத்திட்டத்தை மத்திய அமைச்சரவை நிராகரித்தது.அதன் பின்னர்தான்,பிரச்சினை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கொண்டு வரப்பட்டது.இதற்காகக் கூட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில்சம்பந்தன் இப்பிரச்சினை பற்றி ஆராய்ந்து,பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தறிய முற்பட்டதாகவும்,அக்கருத்துக் கணிப்பிலும் தாண்டிக்குளம் அணியே வெற்றி பெற்றதாகவும் செய்திகள் கசிந்தன.அதன்பின்னர்,இவ்விடயம் பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைப்பது போதாது.மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தும் அறியப்படவேண்டும் என பிரச்சினை கிளம்ப,அக்கருத்தறியும்பொறுப்பை மீண்டும்சம்பந்தர் முதலமைச்சரிடமே ஒப்படைத்தார்.முதலமைச்சர் ஒரு வாக்குச் சீட்டினைத் தயாரித்து,பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி,இவ்விடயம்பற்றிக் கருத்துக் கேட்டார்.அக்கருத்துக்கணிப்பில் முதலமைச்சருக்கு ஆதரவாக18 மாகாண சபை உறுப்பினர்களும், 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனராம்.தாண்டிக்குள அணிக்கு 5 பேர் மட்டுமே வாக்களித்தனராம்இக்கருத்துக்கணிப்பில் 15 பேர் நடுநிலை வகித்ததுதான் வேடிக்கை.இப்பதினைந்துபேரும் என்ன சொல்ல நினைந்தார்கள்?யார் செத்தால் நமக்கென்ன என்பதுதான் அவர்கள் நிலையா?

அல்லது நிச்சயமாய் உடையப்போகும் கட்சியில்பிற்காலத்தில் எவரின் கை ஓங்குகிறதோ அவரோடு இணைந்துகொள்ளலாம்அதுவரை மௌனம் காப்பதுதான் நல்லதென அவர்கள் நினைக்கிறார்களா?என்பதாய்க் கேள்விகள் பிறக்கின்றன.இவ்விடயத்தில் நடுநிலை என்பதற்கான அர்த்தத்தைஅவர்கள்தான் சொல்லவேண்டும்.நல்..ல்..ல்..ல்..ல தலைவர்கள். இதற்கிடையில், இது வன்னி மாவட்டம் சார்ந்த பிரச்சினை.இதில் கருத்துரைக்க, மற்றைய மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ,மாகாண சபை உறுப்பினர்களுக்கோ உரிமை இல்லைவன்னி மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள்தான்இவ்விடயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று,மத்திய அமைச்சரவை அறிவித்திருப்பதாய்ப் புதிய செய்தி வந்திருக்கிறது

இதற்கிடையில் மத்திய அரசு,இது தமது திட்டம்.இதில் எவரது அபிப்பிராயத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கமுடியாது.இந்த விடயத்தில் நாமே முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளதாயும் தெரிகிறது.இது ஒரு மிகச்சிறிய பிரச்சினை தேவையில்லாமல் நம் தலைவர்கள் மூட்டைப்பூச்சிக்கு துவக்கெடுத்து நிற்கின்றனர்.இச்சிறு பிரச்சினைக்குக்கூட ஒன்றுபட்டு தீர்வுகாண முடியாமல் தத்தளித்து நிற்கும்ஆளுங்கட்சியினரின் நிலையைக்காண பரிதாபமாய் இருக்கிறது.இவர்கள்தான்தமிழர்களின் பிரச்சினையை தீர்க்கப்போகிறார்களாம்.உருப்பட்டமாதிரித்தான்!பூனைகளின் சண்டையில்தற்போது குரங்கின் கையில் அப்பம்.இனியென்ன,பூனைகளுக்கு மிஞ்சப்போவது ஒன்றுமில்லை.அதன்பின்னர்???இருக்கவே இருக்கிறது, பூனைகளுக்கான இன ஒப்பாரி.நாமும் அவ் ஒப்பாரியோடு இணைந்து ஓலமிடஇப்போதே தயாராவோம்.

 uharam.com 16 07 2016
Published in Tamil
10 08 2016

கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம். புதிய அரசியலமைப்புக்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இருந்து கொண்டு, லால் விஜேநாயக்க வெளியிட்ட கருத்து தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் கடும் சினமடைய வைத்துள்ளது.

வடக்கிலுள்ள மக்கள் ஒற்றையாட்சியையே ஆதரித்ததாகவும் அவர் கூறியிருந்தார். அரசியலமைப்புக்கான யோசனைகளை வடக்கில் கூட்டாகவும் தனியாகவும் முன்வைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு ஒன்று பற்றிய விருப்பங்களையே வெளியிட்டிருந்தனர். அதுபற்றிய தமது எதிர்பார்ப்புகளையும் குறிப்பிட்டிருந்தனர். உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான சமஷ்டி முறைகள் இருந்தாலும், வடக்கிலுள்ள மக்கள் பெரும்பாலானோர் சமஷ்டி பற்றிய பொதுவான எண்ணக்கருவையே வெளிப்படுத்தியிருந்தனர்.அரை சமஷ்டி என்று கூறப்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் கூட சிலர் முன்னுதாரணமாக காட்டியிருந்தனர்.

ஆனாலும், புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கும் குழுவின் தலைவரான லால் விஜேநாயக்க, சமஷ்டியை வடக்கிலுள்ள மக்கள் கோரவில்லை என்றும் ஒற்றையாட்சியையே விரும்புகின்றனர் என்றும் வெளியிட்ட கருத்து அபத்தமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த, வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.தவராசா, இந்தக் கருத்தை முற்றாகவே நிராகரித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்திருந்த செவ்வி ஒன்றில், வடக்கு - கிழக்கில் 95 வீதமான தமிழ் மக்கள் சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றுக்கான விருப்பத்தையே வெளியிட்டனர் என்று கூறியிருக்கிறார்.புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் செயலமர்வுகளின் போது, சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளின் பிரதிகள் அதற்கு ஆதாரமாகத் தம்மிடம் இருப்பதாகவும் தவராசா குறிப்பிட்டிருக்கிறார்.

வடக்கிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்கு மாறாக, புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க, எதற்காக இப்படியொரு கருத்தை வெளியிட்டார் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இது தமிழர்களை ஒற்றையாட்சிக்குத் தயார்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார். அரசாங்கமே அவரைத் திட்டமிட்டு இவ்வாறு கூற வைத்திருக்கிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும், இதுபற்றி வாய்திறந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், இந்த விவகாரத்தை ஒட்டியதாகத் தான், கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், இரண்டு முக்கியமான விவகாரங்களை எடுத்துக் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஜேர்மனியின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட தொழில்நுட்பக்கூடத்தை திறந்து வைக்கும் அந்த நிகழ்வில், இரா.சம்பந்தன் உரையாற்றிய போது, ஜேர்மனி எப்படி தற்போது உலகில் சக்திவாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறியது என்று விளக்கியிருந்தார். இது தொழிற்பயிற்சிக் கூடத்தைக் கட்டிக்கொடுத்த ஜேர்மனிக்கு புகழாரம் சூட்டுவதற்காக அவர் வெளியிட்ட கருத்தாக கொள்ள முடியவில்லை.ஜேர்மனி 16 மாகாணங்கள் அல்லது மாநிலங்களின் கூட்டு அரசாக - வெற்றிகரமான ஒரு சமஷ்டி ஆட்சியாக மாறியிருக்கிறது என்ற முன்னுதாரணத்தைத் தான் அவர் காட்ட முனைந்திருந்தார் என்றே கருத வேண்டும். ஏனென்றால் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜேர்மனியின் சமஷ்டி அரசியலமைப்பின் மீதும் ஒரு தனிக்கவனம் இருக்கிறது.அடுத்து, முந்திய அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ் மக்களின் பங்கெடுக்காமையைச் சுட்டிக்காட்டியிருந்த இரா.சம்பந்தன், தற்போது பொதுவான இணக்கப்பாடுடன் உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுத்தரும் அனைத்து மக்களையும் அல்லது இறைமையுள்ள குடிமக்களை உள்ளடங்கிய அரசியலமைப்பை உருவாக்குவதில் மிகவும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் கரிசனையுடன் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். அரசியலமைப்பு மாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறது என்பதை இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு முன்பாகவும் தமிழ் மக்களுக்கு முன்பாகவும் அளித்துள்ள வாக்குறுதி தான் அது. சமஷ்டித் தீர்வில் வடக்கிலுள்ள மக்கள் அக்கறை கொள்ளவில்லை என்று லால் விஜயநாயக்க தெரிவித்த பின்னர் தான் அவர் இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. சமஷ்டித் தீர்வு பற்றிய யோசனைகள் எதையுமே, புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவின் அறிக்கையில், இடம்பெற்றிருக்கவில்லை என்றே தெரிகிறது.இப்படியானதொரு நிலையில், சமஷ்டி முறையிலான ஓர்அரசியலமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு கொண்டு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் மக்கள் எப்போதுமே, முக்கியமான தருணங்களில் தமது கருத்தை வெளிப்படுத்துவதில்லை, பொய் உறக்கத்தில் இருந்து விடுவது வழக்கம். அரசியலமைப்பு மாற்றத்துக்கான யோசனைகள் பெறப்பட்ட போதும் கூட பெருமளவானோர், உற்சாகத்துடன் சென்று அதற்கான ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு மாற்றத்தில் பங்களிக்கத் தயாராக உள்ள நிலையில், அரசாங்கம் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளப் போகிறது என்ற சந்தேகங்கள் உள்ளன.சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றுக்குள் திடீரென இலங்கை நுழைவது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஏனென்றால் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்பது பிரிவினைக்கான முதல் அடி என்றே அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்தது சிங்கள அரசியல் தலைமைகள் தான். இப்படியான நிலையில் சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றை திடீரென உருவாக்க முனையும் போது சிங்கள மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளைத் தூண்டி விட்டு குளிர்காய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள். அரசியல் தீர்வைக் குழப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் தருணம் பார்த்திருப்பதால், பொறுமையாகவே நகர்வுகளை செய்ய வேண்டும் என்று இரா.சம்பந்தன் மன்னாரில் நடந்த கருத்தரங்கில் கூறியிருந்தார்.

அரசியல்தீர்வு எதுவாக இருந்தாலும், அது சமஷ்யாகவோ, ஒற்றையாட்சியாகவோ இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு அதனைக் குழப்ப முனையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சியை இப்போது கூட கவிழ்ப்பது கடினமான காரியமில்லை என்று மஹிந்த ராஜபக்ஷவும் அவரது தரப்பினரும் பேசத் தொடங்கி விட்டார்கள். ஆக அவர்களுக்குப் பிரச்சினை அதிகாரமே தவிர, அரசியல் தீர்வு, சமஷ்டி என்பதெல்லாம் அல்ல. அதனால் தான் அடுத்தவாரம் கண்டியில் இருந்து அவர்கள் பாதயாத்திரையைத் தொடங்கப் போகிறார்கள். இந்தக் கட்டத்தில் அரசாங்கமோ, ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றையே மீண்டும் உருவாக்கும் முன்னேற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது. ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒன்றைத் தமிழர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான,அதனை ஏற்றுக்கொள்வதற்குத் தயார்படுத்துவதற்காகத் தான் லால் விஜயநாயக்க சமஷ்டி பற்றிய முரணான கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம். தமிழர்களின் எதிர்பார்ப்பு பற்றி அவர் இவ்வாறு கூறிவிட்டதால் தமிழர்களின் எதிர்பார்ப்பு அதுதான் என்பது இறுதியாகி விடாது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஓர் அரசியல்தீர்வு தான் - அரசியலமைப்புத் தான், நிலையான அமைதியை ஏற்படுத்தும்.

எந்தவொரு ஒற்றையாட்சி அரசியலமைப்பும் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக அமையாது. இது சிங்களத் தலைமைகளுக்கும் தெரியும் தமிழ்த் தலைமைகளுக்கும் தெரியும். சமஷ்டித் தீர்வை முன்வைத்து தேர்தல்களில் போட்டியிட்ட கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தேர்தல்களில் வாக்களித்திருக்கிறார்கள். அதனைப் புறக்கணித்து, சமஷ்டியைத் தமிழர்கள் கோரவில்லை என்ற அரைகுறை விளக்கத்தை கூறும் லால் விஜயநாயக்க போன்றவர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்த அரசியலமைப்பும் பிரதிபலிக்குமாக இருந்தால், அது மீண்டும் தமிழர்களை அந்நியப்படுத்துவதில் தான் போய் முடியும். தமிழர்களின் அரசியல் அபிலாஷை ஒற்றையாட்சி தான் என்று அரசாங்கமும் நம்புமாக இருந்தால், அதுபற்றி தமிழர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்க்கலாம். அந்தளவுக்கு விசப்பரீட்சைகளுக்குச் செல்ல எந்தவொரு சிங்களத் தலைமைகளும் தயாராகவே இருக்காது. கடந்தகாலங்களின் போது விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிராமல் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் முன்வர வேண்டும்.

tamilmirror.lk 22 07 2016
Published in Tamil
03 08 2016

இயற்கையைப் போற்றுவோம்

இயற்கை பற்றிப் பாடிய வள்ளலார் பெருமான் “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்” என்கிறார். இதைவிடச் சுருக்கமாக முழுமையாக யாராலும் சொல்ல முடியாது.செயற்கை எப்படி பொய்யானதாக இருக்கிறதோ, அதுபோல இயற்கை உண்மையானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பொய் பேசுவது, போலியாகச் சிரிப்பது, ஒழுக்கமின்றி வாழ்வது என நமது இயல்புக்கு எதிராக இயங்குவது செயற்கையானவை. செயற்கையில் உண்மை இல்லாமல் இருப்பதால் அதிலிருந்து எந்தவிதமான ஆக்க சக்தியும் வெளிப்படுவதில்லை, எனவே அது யாரையும் கவருவதுமில்லை. செயற்கைத்தன்மை இல்லாமல், நாம் நாமாக இயல்பாக வாழும்போது, நம்மில் ஒரு காந்தசக்தி எழுகிறது. அந்த உண்மைத்தன்மை நம்மில் ஓர் ஓர்மையை உருவாக்குகிறது; அது பிறரைக் காந்தமெனக் கவர்கிறது.

திருவள்ளுவர் சொன்னது, “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.” ஒருவருக்குள் பூதங்கள் ஐந்தும் அவரைப்பற்றி எள்ளி நகையாடும்போது, அவர் இயற்கைக்கு எதிராக இயங்குகிறார் என்பதை அறியலாம். இப்படிப்பட்டவர்கள் பலரைச் சில காலம் ஏமாற்றலாம், சிலரைப் பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அதனால்தான் “உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்” என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன்.இயற்கை உண்மையானது மட்டுமல்ல, இனிமையானதும்கூட. எப்போதும் லஞ்சம் வாங்கும், ஊழல் செய்யும், ஒழுக்கமற்ற ஓர் அதிகாரி நிச்சயம் இன்பமாக வாழ இயலாது. ஆனால் நேர்மையான, உண்மையான ஓர் அலுவலர் இயல்பாகவே இன்பமாக இருக்கிறார். அவருக்குள் அச்சமிருக்காது, நிமிர்ந்து நிற்பார்; கூச்சமிருக்காது, வளையமாட்டார்.

இப்படியாக, உண்மையாக இருக்க உதவுவதாலும், ஈடிலா இன்பம் அளிப்பதாலும் நாம் இயற்கையை விரும்புகிறோம். தனிமனித வாழ்வில் இயற்கையின் தன்மைகள் இப்படி அமைந்தால், அது பொதுவாழ்வில் எப்படி பரிணமிக்கிறது?இயற்கை அரசியலின் அடிப்படை நம்பிக்கைகளுள் முக்கியமானவை சிலவற்றை அறிஞர்கள் பட்டியலிடுகிறார்கள்:* வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும், அனைவரையும் காத்துக்கொண்டி ருக்கும் உயிர்ச் சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம்.

* அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கும் உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவை; எனவே அவற்றை அங்கீகரிப்பதும் மதிப்பதும் காத்துக்கொள்வதும் முக்கியமானது.
* சிறியவையோ பெரியவையோ அனைத்து மனித நடவடிக்கைகளும் உயிர்ச்சூழல்மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்வோம்.
* மேற்குறிப்பிட்ட தாக்கங்கள் வருங்காலத்தின்மீது படிந்து, மனிதர்களையும், ஏனைய உயிரினங்களையும் பல தலைமுறைகளுக்குப் பாதிக்கும். எனவே வருங்காலத் தலைமுறைகளின் உடல்நலம், நல்வாழ்வு போன்றவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
* தனிநபராக தனிப்பட்ட வாழ்விலும், கூட்டாக அரசியல் வாழ்விலும் நாம் பொறுப்புடையவராக இருத்தல் அவசியம்.
* தனிநபர் பங்கேற்பையும் தனிப்பட்ட பொறுப்புணர்வையும் அதிகரிக்கும், மையப்படுத்தப்படாத, அடிமட்டத் தன் னாட்சி வழங்கும் பசுமை சனநாயகத்தைப் போற்றுவோம்.
மேற்குறிப்பிட்ட நம்பிக்கைகளை ஏற்று வாழ்வதென்றால், இயற்கையை மதிப்பதும் போற்றுவதும்தான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். செயற்கையான சாதி, மதம், இனம், நிறம், தேசம் போன்ற வேறுபாடுகளைப் புறந்தள்ளி,
“காக்கைக் குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”எனும் பாரதியின் பரந்த பார்வையை நமதாக்க வேண்டும்.

வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இயற்கையைப் புகட்டுவது, போற்றுவது என்று முடிவெடுத்தாக வேண்டும். அப்படி செய்யும்போது இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கைக் கல்வி, இயற்கை வேலை என நமது வாழ்க்கையில் செயற்கையைப் புறந்தள்ளியாக வேண்டும். செயற்கை உரங்கள், இடுபொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைத் தவிர்த்து, இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை இயற்கை வேளாண்மை என்கிறோம். மேற்குறிப்பிட்ட நச்சுப் பொருட்கள் இல்லா உணவே இயற்கை உணவு என்றாகிறது.

ஆபத்தான பின்விளைவுகள், பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வேதியியல் பொருட்களைத் தவிர்த்து, இயற்கையான மூலிகைகளை, காய்களை, பழங்களை மருந்தெனக் கொள்வதே இயற்கை மருத்துவம் எனப்படுகிறது. “ஓடி விளையாடு பாப்பா” என்று குழந்தைமையை அனுமதித்து, தாய்மொழி வழிக் கல்வியோடு குழந்தைகளை இயல்பாக வளர்ந்தோங்கச் செய்வதைத்தான் இயற்கைக் கல்வி என்றழைக்கிறோம். உடன்பிறந்து, உள்ளுக்குள் ஊற்றெடுத்துப் பெருகி நிற்கும் ஆற்றல்களை, திறமைகளை வெளிக்கொணர்ந்து, உலகத்தார் பயன்பாட்டுக்குக் கொடுக்கும் வேலைகளே இயற்கை வேலைகள் எனப்படும். இப்படியாக இயற்கையோடு இயைந்து, இயற்கையாக, இயற்கைக்காக வாழ்வதுதான் ‘இசைபட வாழ்தல்’ என்றாகும்.

இத்தருணத்தில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. பூமி எனும் தோட்டத்தை நிர்வாகம் செய்யும் ஒரு தோட்டக்காரனைப் போல நம்மைக் கருதுவதா அல்லது ஒருங்கமைக்கப்படாத வனாந்திரத்திலுள்ள ஓர் உயிரியாக மட்டுமே நம்மைப் பார்ப்பதா? அதாவது இயற்கையின் மீதும், பிற உயிர்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, அதிகாரத்தை நிறுவி மேலாண்மை செய்வதா அல்லது இயற்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு நமது பங்களிப்பை மட்டும் செய்வதா?உண்மையில், இரண்டு மாதிரிகளின் அம்சங்களையும் கலந்து செயல்படுவதே சிறப்பு. ‘சூழல், மாளல், ஊழல்’ எனும் மும்மைதான் இன்றைய நமது பொதுவாழ்வை ஆட்டுவிக்கிறது. எனவே ‘வளங்களைக் காப்போம்; வாழ்வை வளர்ப்போம், வருங்காலத்தை தகவமைப்போம்’ என்பதுதான் நமக்கேற்ற இயற்கை அரசியலின் தாரக மந்திரமாக இருக்க முடியும்.

வளங்களைச் சூறையாடுவதும் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். தமிழக வளங்கள் அனைத்தும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே மேலாண்மை செய்யப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களோ குழுமங்களோ எக்காரணம் கொண்டும் அவற்றைச் செய்ய அனுமதிக்கக் கூடாது. தொழில் வருமானம் போன்ற ஈடுபாடுகளுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம் சூழலியல் அம்சங்களுக்கும் அவற்றின் பாதுகாப்புக்கும் தரப்பட்டாக வேண்டும்.இயற்கையாகத் தோன்றி, வாழ்ந்து, வளர்ந்து,முழுமை அடைய வேண்டிய உயிர்கள், சாதி ஆணவக் கொலை, கூலிப்படைக் கொலை, சாலை விபத்து, சாராயச்சாவு, தற்கொலை எனும் செயற்கை வழிகளில் அழித்தொழிக்கப்படுவது மாபெரும் தவறு. மனித உயிருக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாக வேண்டும்.

வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்வு, மகிழ்ச்சி என்ற பெயர்களில் மதுபானம், இலவசம், விரயம், இயற்கைவளக் கொள்ளை, நில அபகரிப்பு, நீர்நிலை அழிப்பு, அணுத்தீமை என பல்வேறு தீங்குகள் நமக்கு இழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே ஊழலின் ஊற்றுக்கண்கள்தான். இவற்றைத் தவிர்த்து, பசுமைகரமான மாற்றுக்களைக் கண்டறிந்து வருங்காலத்தைத் தக்க வழிகளில் தகவமைத்தாக வேண்டும்.

இம்மாதிரியான இயற்கை நெறிமுறைகளில் ஆழமான நம்பிக்கை கொள்ளும்போது, தமிழக சமூக-பொருளாதார-அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வருவது அடுத்த கட்டமாக அமையும். அதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கீழ்ப்படியாமை, ஒத்துழையாமை, அறவழிப் போராட்டங்கள் போன்ற இயற்கை இயக்கங்களாகவே இருக்க முடியும். வலிந்து மேற்கொள்ளும் தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறை போன்ற செயற்கையான செயல்பாடுகள் பயன்படாது. அவை நீடித்த நிலைத்த நன்மைகளைத் தரவும் முடியாது.மொத்தத்தில், பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளி, உண்மையாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். பாரதி ஃபார்முலாவும் அதுதான்:
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா!

kalachuvadu.com/ may 2016
Published in Tamil