28 01 2017

நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்!

- கருணாகரன்
“எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன? பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள். கடன் பட்டு பைக்கை வாங்கிக் கொடுத்தால், வேலை வெட்டியில்லாமல், அந்த பைக்கில் இன்னும் நான்கைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு இரவு பகல் என்றில்லாமல் எங்கெல்லாமே அலைகிறார்கள்.

எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? எப்போது வருவார்கள் என்று எதையுமே அறிய முடிவதில்லை. ஊரிலே அட்டகாசம், அடாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிற வாள் வெட்டுக் குறூப்புகளின்ர தொடுப்புகள் கிடைச்சால்... வீட்டில நிம்மதியாக இருக்கேலாத நிலைமை வந்திடும். அல்லது இணையங்களிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். யார் யாரெல்லாமோ வருகிறார்கள்; போகிறார்கள். இப்படி வாறவன், போறவனோட சேர்ந்து, தேவையில்லாத தொடர்புகளால் போதைப்பழக்கத்துக்கும் அடிமைப்படுவர்களோ...!!!??? இப்பிடியெல்லாம் இருந்தால் நாளைக்கு இவர்களுடைய எதிர்காலம் எப்பிடியிருக்கப்போகுது” என்று பெருந்துக்கத்தை அவிழ்த்துப் போடுகிறார்கள் பெரியவர்கள்.

இந்த மாதிரியான கவலைகள் பெரும்பாலான பெற்றோரை ஆட்டிப்படைக்கின்றன. பெற்றோருடைய இந்தக் கவலைகளில் நியாயமுள்ளதைப் போலவே பலருக்குத் தெரியும். ஏனென்றால், பிள்ளைகள் பாதிக்கப்பட்டால், அல்லது சட்டரீதியான பிரச்சினைகளில் சிக்கினால், அவர்களை மீட்டெடுப்பது பெற்றோர்தானே. அதற்காக அவர்கள் பெரிய விலைகளைக் கூடக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அவர்களுடைய கவலைகள் நியாயமானவை என்றே படும். ஆனால், இது சரியானதா என்று உளவியலாளர்களையும் இளைஞர்களையும் சமூகவியல் துறையினரையும் கேட்டால் பதில் வேறு விதமாகவே இருக்கும். அவர்கள் இளைய தலைமுறையின் நோக்கு நிலையிலிலும் உடற்கூற்றியலின் அடிப்படையிலும் இதைப்பற்றி வேறு விதமாக விளக்கமளிப்பார்கள். குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தவர்கள், இளமைப்பருவத்தினராக விருத்தியடையும்போது உடல், உள ரீதியான மாற்றங்கள் நிகழும். இது இயற்கை. இந்த நேரத்தில் அவர்களிடம் கூடிய உடல் வளர்ச்சி ஏற்படும். சக்தி அதிகரிப்பு நிகழும். அகச்சுரப்புகள் இரசாயன விளைவாக உண்டாகும். பாலியல் விருத்தியும் சிந்தனை விரிவாக்கமும் அறிவுப் பரப்பின் விசாலிப்பும் ஏற்படும். இதெல்லாம் இளைஞர்களிடம் மாற்றங்களையும் புதிய எண்ணங்களையும் உண்டாக்கும். மாற்றங்களுக்கான ஆவலைத் தூண்டும்.

சிறுவர்களாக இருந்தபோதிருந்த நிலை மாறி, சுயாதீனத்தன்மையோடு முடிவுகளை எடுக்கவும், சுயமாகச் செயற்படவும் முனைவர். எதையும் பரீட்சித்துப் பார்க்கவும் செய்து பார்க்கவும் முயற்சிப்பர். விளைவுகளைப் பற்றிய அனுபவம் இல்லை என்பது ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், துணிச்சலாக அந்தக் காரியங்களில் ஈடுபடுவர். புதிய எண்ணங்களின் வழியாகப் பழைய கருத்து நிலைகளோடும் வழமைகளோடும் மோதுவதற்கு முனைவர். என்னதான் சிந்திக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணக்கூடியவர்களாக இருப்பர். பல முனைகளிலும் கேள்விகளை எழுப்புவர். மறுப்புகளைச் செய்வர். இதெல்லாம் கூர்ப்பின் வெளிப்பாடு. பரிணாம விதியின் தொழிற்பாடு. இதைப் பெரும்பாலான பெற்றோரும் மூத்தோரும் புரிந்து கொள்வதில்லை. தாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, தமக்கு முன்னிருந்த தலைமுறையுடன் - பெற்றோருடன் நடத்திய மோதல்களையும் விலகல்களையும் இலகுவாக மறந்து விட்டு, இப்போது புதிய சட்ட அதிகாரிகளாக எழுந்து நிற்கிறார்கள். இதனால் மோதல்களும் விலகல்களும் இடைவெளிகளும் ஏற்படுகின்றன.

இளைஞர்கள் பெற்றோரையும் சமூகத்தையும் விட்டு, மறுதலையாக இயங்க முற்படுகிறார்கள். கட்டுப்பாடுகளின் இறுக்கத்தை மறுதலிக்கும் சுயாதீனப்பருவம் அது என்பதைப் புரிந்து கொள்ளாதன் விளைவே இது. அதுவரையும் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் பெற்றோரில் தங்கி வாழ்ந்த நிலை மாறுதலடையும் இளைமைப்பருவத்தில் இருக்காது. கூடவே துணையாக தம்மைப்போல இருக்கும் ஏனைய இளைஞர்களும் ஒன்று சேரும்போது, அவர்களுக்கு அணிசார்ந்த, சகபாடிகள் கிடைத்த உற்சாகமும் பலமும் கிடைத்து விடுகிறது. இது அவர்களை மேலும் தனியாக விலகிச் செல்ல வைக்கிறது. கூடவே இதைப் புரிந்து கொண்டு, அரவணைப்பதற்குப் பதிலாகக் கண்டனங்களையும் கட்டுப்பாடுகளையும் இறுக்கங்களையும் விதிக்கும்போது இளைஞர்கள் மேலும் விலகிச் செல்கிறார்கள். அல்லது மீறுகிறார்கள். மீறல்கள் அதிகரிக்க சட்டங்களையும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சமூகம் முன்வைக்கிறது. நாடும் நீதித்துறையும் கூட இவ்வாறான மதிப்பீட்டுக்கே வருகிறது. இது இளைஞர்களை மேலும் விரக்திக்கும் ஆத்திரத்துக்கும் இட்டுச் செல்கிறது.

இப்படியே முடிவில்லாத அளவில் இந்த மோதல் பெற்றோருக்கும் அல்லது மூத்தோருக்கும் இளைஞர்களுக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விளைவாக, இளைஞர்கள் குற்றச்செயல்களிலும் தனித்து இயங்கும் நிலையிலும் புதிய ஒரு உலகத்தை உருவாக்குகிறார்கள். அந்த உலகம் சமூகத்துக்கு நெருக்கடியாகவும் சிலவேளை அமைந்து விடுகிறது. ஆனால், விதிவிலக்காகச் சில பெற்றோரும் மூத்தோரும் இளைஞர்களை, அவர்களுடைய பருவத்தின் மாறுதல்களோடும் உணர்வுகளோடும் புரிந்து கொள்கிறார்கள். அப்படிப் புரிந்து கொள்ளும்போது இளைஞர்களுக்கும் அவர்களுக்குமிடையில் மிகுந்த நெருக்கமும் அந்நியோன்யமும் புரிந்துணர்வும் ஏற்படுகிறது. அங்கே நட்பும் தோழமையும் அன்பிணைப்பும் நிகழ்கிறது. அப்படியான நிலையில், மோதல்களும் விலகல்களும் தணிந்து விடுகின்றன. வழிப்படுத்தலும் இணைந்து பயணித்தலும் கலந்து பேசுதலும் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வுகளும் நடக்கின்றன. இது போன்ற எண்ணற்ற நற் சாத்தியங்கள் நிகழ்கின்றன. ஆனால், இது ரொம்பக் குறைவு. அநேகமான இடங்களிலும் விடுபடல்களும் விலகல்களுமே அதிகம். இதனால்தான்

இளைய தலைமுறை தடுமாறி, தளம்பிச் செல்கிறது. இதற்கான பெரும் பெறுப்பு மூத்தோர்களிடமும் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும்தான் உள்ளது. ஆனால், இதை, தங்களுடைய தவறையும் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பதிலாக தங்கள் தவறுகளை மூடி மறைத்துக் கொண்டு, இளைய தலைமுறையையே குற்றம் சாட்டுகின்றனர். இதுவே இன்றைய பெரும் பிரச்சினையும் பொதுப் பிரச்சினையுமாகும். இளைய தலைமுறை என்பது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் வளம். உழைப்புத்திறன், மூளைத்திறன் ஆகியவற்றைக் கொண்ட நிகழ்கால, எதிர்காலச் சக்தி. வீடும் சமூகமும் நாடும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் இளைய தலைமுறையின் ஆற்றலே பதிலீடும் வெல்லும் மார்க்கமுமாகும். இதை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வளம் இழக்கப்படும். இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு இழக்கப்பட்ட இந்த வளம் கொஞ்சமல்ல. ஜே.வி.பி கிளர்ச்சிகளிலும் ஈழப்போராட்டத்திலும் இழக்கப்பட்ட இளைய தலைமுறையின் எண்ணிக்கை ஏறக்குறைய மூன்று இலட்சத்துக்கும் அதிகம். இது உயிரிழப்பு மட்டும். இதை விட உடல் உறுப்பு இழப்பும் உளச் சிதைவினால் ஏற்பட்ட இழப்பும் இன்னொரு வகையானது. ஆகவே சுதந்திரத்துக்குப் பிந்திய

இலங்கையின் வளர்ச்சியில் இந்த இழப்புகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. இழக்கப்பட்ட இந்த இளைய தலைமுறையின் வளம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், இன்றைய இலங்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். இலங்கையின் வளர்ச்சியானது, தன்னுடைய எல்லைக்கோட்டை மாற்றியமைத்திருக்கும். ஆனால், அதற்கான இடத்தை அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் வழிகாட்டிகளும் கல்வியாளர்களும் வழங்கவில்லை. இன்னும் இதே நிலைமையே காணப்படுகிறது என்பதால்தான் நாட்டில் குற்றச் செயல்களும் வறுமையும் வளர்ச்சிக்குறைபாடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதை மாற்றியமைப்பதற்கு யாரும் தயாருமில்லை; முன்வருவதுமில்லை. ஒரு சிறிய உதாரணம். நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை பெரியது. இலட்சக்கணக்கானவர்கள் வேலையற்றிருக்கிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினர். அதேவேளை நாடு கடனில் மூழ்க்கிக் கிடக்கிறது. மேலும் மேலும் கடன் வாங்கப்படுகிறது. இந்த நிலையில் வேலையற்றிருப்போருக்கு வேலைகளை வழங்கி, அவர்களை உழைப்புச் சக்திகளாக மாற்றக்கூடிய திராணியும் திட்டமும் நாட்டிடம் இல்லை. அப்படி அனைவரையும் உழைப்புச் சக்திகளாக மாற்றினால், நாடு உற்பத்தியில் மேம்படும். அதனால் வளர்ச்சி ஏற்படும்; கடன் சுமை குறையும். இதை, இந்த எளிய உண்மையை, நம்முடைய தலைவர்கள் உணர்ந்து கொள்ளத் தயாரில்லை. இளைய தலைமுறையினரைக் குறித்து, அங்கங்கே மின்மினிகளைப் போல சிறிய அளவிலான வெளிச்சங்களாக சில நம்பிக்கையுட்டும் அக்கறைகள் சிலரால் வெளிப்படுத்தப்படுவதுண்டு. ஆனால், அதிகாரத்தரப்பிடம் அதற்கான அங்கிகாரமும் வெளியும் கிடைப்பதில்லை. அதிகம் ஏன், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தில் இளைஞர்களுக்கான இடம் மிகக் குறைவாகவே உள்ளது. அண்மைய சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அமைப்புகள், நிர்வாகங்கள், மன்றுகள் போன்றவற்றில் இளையதலைமுறையினரும் பெண்களும் குறிப்பிட்டளவு வீதத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாய விதியொன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நல்ல விசயம். ஓரளவுக்குப் பரவாயில்லை என்று சொல்லக்கூடியது. ஆனால் “இளைய தலைமுறையே இந்த நாட்டின் நாளைய சொத்து“, “இளைஞர்களே நாளைய தலைவர்கள்“ என்றெல்லாம் உரத்த குரலில் சொல்வோர், இளைய தலைமுறைக்குரிய இடத்தை வழங்குவதில்லை. தங்களால் எழுந்து நடமாட முடியாத நிலையிலும் தாம் வைத்திருக்கும் அதிகாரத்தையும் வகிக்கின்ற பதவியையும் இளையோரிடத்தில் கைமாற்றுவதற்கு இவர்கள் முன்வருவதில்லை. குறைந்த பட்சம் இளைய தலைமுறையின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொள்வது கூட இல்லை.

இது சமூகத்தின் பொதுக்குணமாகவே உள்ளது. இதனால்தான் “இளங்கன்று பயமறியாது”, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “பிஞ்சிலே பழுத்தது”, “ஏரிமுதிரா இளநாம்பன்கள்”, “வாலிப மிடுக்கு நாலு நாளில் படுக்கும்“ என்ற மாதிரியான சொல்லடைகள் சமூகத்தில் வலுவாக உள்ளன. இந்தச் சொல்லடைகளுக்குப் பின்னிருக்கும் மனநிலைகள் என்னவென்று விளங்கிக்கொள்வதற்கு அதிக சிரமப்படத்தேவையில்லை. இளைய தலைமுறையின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதுடன், அவர்களைக் குறித்த அவநம்பிக்கையும் வெளிப்படுத்துவதாகும். கூடவே, அவர்களுக்குரிய அங்கிகாரத்தை வழங்க மறுப்பதுமாகும். ஆனால், இது தவறானது மட்டுமல்ல, இந்தச் சொல்லடைகளுக்கும் “நாளைய எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளிலே” “இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்“ என்று சொல்வதற்குமிடையில் நேர் முரண்பாடுகள் உள்ளதையும் நாம் கவனிக்கலாம். இரண்டும் இளைஞர்களுக்கு எதிரானது. ஒன்று நேரடியாகவே அவர்களை அவநம்பிக்கைப்படுத்திப் பார்ப்பது. மற்றது, அவர்களைப் பொய்யாகப் போற்றிப் புகழ்ந்துரைப்பது. இரண்டினாலும் இளைய தலைமுறைக்கு எதுவும் ஆகப்போவதில்லை. பதிலாக, இளைய தலைமுறைக்கு முன்னுள்ள புதிய உலகச் சவால்களை எதிர்கொள்ளத்தக்க விதத்தில் அறிவு, ஆற்றல், வாய்ப்பு போன்றவற்றையே வழங்க வேண்டும். அதுவே பயனுடையது. குறிப்பாக தொழிற்கல்வி, தொடர்கல்வி, வேலைவாய்ப்பு, உற்பத்தி சார்ந்த அறிவையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் என ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட செயற்திட்டமும் செயற்பாடுகளும் தேவை.

ஆனால், இதை அரசியல் தரப்புகளோ, உயர் சிந்தனைக் குழாமோ சிந்திப்பதில்லை. பதிலாக கட்டுப்பாடுகளையும் விதிகளையுமே குடும்பத்திலிருந்து, சமூகம், அரசு, நாடு எனச் சகல தரப்பும் விதிக்க முனைகின்றன. இதுவே பிரச்சினைகளுக்கான காரணமாகும். ஒருவரை வழிப்படுத்துவதும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் அளிப்பதும் வேறு; விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பது வேறு. ஆனால், அரசும் அதிகாரத்தரப்பினரும் பெற்றோரும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதிலேயே குறியாக உள்ளனர். அதில்தான் அவர்களுக்கு நம்பிக்கையும் அதிகம். இரண்டாவது முறைமையை யாரும் பின்பற்றத் தயாரில்லை. அப்படிச் செய்தால், அது தமது பிடியை விட்டுச் சென்று விடும் என்ற கவலையும் இளைய தலைமுறை எதையும் சீராகச் செய்யக்கூடியதல்ல என்ற அவநம்பிக்கையும் அவர்களிடமுள்ளது. இது முற்றிலும் தவறானது. இது மிக மோசமான நம்பிக்கை இழப்பையும் அதனால் மன உடைவையும் இளைய தலைமுறையிடம் உண்டாக்கும் என்பதை ஏன் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளைய தலைமுறையின் ஆற்றலிலும் அறிவிலும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது பழகிய பதவிச் சுகத்தின் வெளிப்பாடா? ஆனால், இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. தாங்களும் ஒரு போது, இதேபோல அங்கிகாரம் மறுக்கப்பட்ட, வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு தலைமுறையாக, ஒரு தரப்பாக இருந்திருக்கிறோம் என்பதை. அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய மன உடைவுகளும் உணர்வுகளும் ஏற்பட்டன என்பதை. அப்போது இதேபோல பொறுப்பில்லாமல் திரியும் தலைமுறை என்றும் சொல்வழி கேளாதவர்கள் எனவும் சொல்லப்பட்ட அவச் சொற்களைக் கடந்து வந்தவர்கள் என்பதையும் ஏனோ இலகுவாக மறந்து விடுகிறார்கள். உண்மையில் இளைய தலைமுறையின் விடயங்களைக் கவனிப்பதும் கையாள்வதும் முக்கியமான ஒன்று. அது அவசியமானது.

ஏனென்றால் இந்த நாட்டின் வளமும் எதிர்காலமும் அவர்கள் என்பதால். இதற்கு நாம் இளைய தலைமுறையைப்பற்றிய சில அடிப்படையான விசயங்களைப் புரிந்து கொள்வது அவசியம். “பருவ வயது எப்பேர்ப்பட்ட சிறந்த சூழ்நிலைகளிலும் கொந்தளிப்புமிக்கதாய் இருக்கலாம். இளசுகள் பருவமெய்தும்போது புதுப் புது உணர்ச்சிகள் அவர்களது மனதைத் தாக்குகின்றன. ஆசிரியர்களாலும் மற்ற இளைஞர்களாலும்கூட தினமும் அவர்கள் தொல்லைகளை எதிர்ப்படுகிறார்கள். தொலைக்காட்சி, சினிமா, இசை, இன்டர்நெட் ஆகியவற்றின் செல்வாக்குக்கு எந்நேரமும் ஆளாகிறார்கள். பருவ வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும் கவலையும் நிறைந்த காலம்” என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. “இளைஞர்களால் பெரும்பாலும் மன அழுத்தத்தையும் கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை; அதற்குத் தேவையான அனுபவம் அவர்களிடம் கொஞ்சம்கூட இல்லை. சரியான வழிநடத்துதல் இல்லாவிட்டால், அவர்கள் சுலபமாக தீங்கான பாதையில் சென்றுவிடுவார்கள்” என்கிறது ஆய்வொன்று. “பெரும்பாலும் பருவ வயதில் அல்லது அக்காலத்தை தாண்டும் வயதில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆரம்பமாவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. வன்முறை, தறிகெட்ட பாலுறவு போன்ற மற்றக் கெட்ட நடத்தைகளும் அந்த வயதில்தான் ஆரம்பமாகின்றன“ என்கிறது ஐ.நாவின் அறிக்கை. இது நமக்கும் தெரியும். இளைய வயதினர் தவறிழைப்பதற்கு குடும்பச்சூழல், பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் காரணமாகின்றன. முறையான கல்வி, சிறப்பான வழிப்படுத்தல்கள், அதிக வாய்ப்புகளை அளித்தல் என்றெல்லாம் இருக்குமானால் பெருமளவு இளைஞர்கள் சீரான வாழ்க்கையும் தொழில்களையும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். அநேக குடும்பங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது பிள்ளைகள் தனித்து விடப்படுகிறார்கள். இதனால், கோடிக்கணக்கான பிள்ளைகள் பாடசாலையிலிருந்து திரும்பும்போது வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை. அப்படியே பெற்றோர் வந்தாலும், அவர்கள் பெரும்பாலும் களைப்படைந்திருக்கிறார்கள். அதோடு வேலையில் சந்தித்த பிரச்சினைகளைப் பற்றிய சிந்தையில் மூழ்கியிருக்கிறார்கள். இதன் விளைவு? அநேக இளவயதினருக்குப் பெற்றோரின் கவனிப்பு கிடைப்பதில்லை. “நாங்கள் குடும்பமாக நேரம் செலவிடுவதே இல்லை” எனச் சொல்கிறார் ஓர் இளைஞர் என்கிறது இன்னொரு வாக்குமூலம். இந்தமாதிரியான நிலைமை நீடிப்பது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

“கடந்த 30 ஆண்டுகளாகப் படிப்படியாக தோன்றியிருக்கும் பிள்ளை வளர்ப்புப் பாணிகள், ஒட்டுதலில்லாத, மௌனமான, படிப்புக் கோளாறுள்ள, கட்டுப்படுத்த முடியாத பிள்ளைகளையே உருவாக்கி வருகின்றன” என்று டாக்டர் ராபர்ட் ஷா கூறுகிறார். “பொருள் வளங்களுக்கும் சாதனைகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் சிக்கிக்கொள்ளும் பெற்றோர்கள், தங்கள் நேரத்தையெல்லாம் வேலைக்காகவே அர்ப்பணிக்கவும் பணத்தை தண்ணீராய் செலவழிக்கவும் வேண்டியிருக்கிறது. ஆகவே, பிள்ளைகளோடு பாசப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு நேரமே இருப்பதில்லை” என்றும் அவர் கூறுகிறார். இளைய தலைமுறையினரின் நலனை அச்சுறுத்தும் மற்றொரு விசயம், வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள். பெரியவர்களின் கவனிப்பில்லாமல்தான் எக்கச்சக்கமான நேரத்தை செலவழிக்கிறார்கள். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் பிள்ளைகள் நேரத்தை செலவிடும்போது, அவர்கள் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தவிர, மீடியாக்களின் தாக்கமும் இணையத்தளங்களும் இளைய தலைமுறையைத் தடுமாற வைக்கிறது. புதிய உலகம் ஏராளமான நெருக்கடிகளை பெற்றோருக்கும் அரசுக்கும் இளைய தலைமுறைக்குமிடையில் உண்டாக்கியுள்ளது. இதை வெற்றிகொள்வதே இன்றைய சவால்.

ஏனென்றால், நாளைய எதிர்காலமும் இன்றைய வாழ்க்கையும் நாட்டின் வளமும் இளைய தலைமுறை என்பதால். கவலைகளும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் சட்டங்களும் இளைய தலைமுறையை வழிப்படுத்துவதற்கோ, வளப்படுத்துவதற்கோ உதவப்போவதில்லை. பதிலாக வாய்ப்பளித்தலும் அரவணைத்தலும் நம்பிக்கையூட்டலுமே அவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களைப் புதிய தளத்தில் இயங்க வைக்கும். அதுவே நம் கவலைகளையும் போக்கும். அரசியலில் கூட நரையும் திரையுமானவர்கள் விலகி, நாளைய தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதுவே புதிய உலகைச் சமைக்கும். 

tamilmirror'lk 16 01 2016

Published in Tamil
18 01 2017

மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2

மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்கள்
அரசியல் அமைப்புக்கிணங்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு மாகாண பொலிஸ் ஆணைக்குழு தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.ஒவ்வொரு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் அதற்கான தவிசாளரையும் ஏனைய இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். மாகாண முதலமைச்சரும் உரிய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து வழங்கிய பெயர் குறிப்பிடுதலை பரிசீலனை செய்த பின்னர் மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும் அரசியலமைப்புப் பேரவையால் நியமிக்கப்படல் வேண்டும்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பெண்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும் முழு நேர அடிப்படையில் சேவை புரிய வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் உறுப்பினர்களும் 5 வருட காலப் பகுதிக்கு பதவி வகிக்க வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதன் செயலாளரும் ( உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ) அதன் செயலகமும் ஒத்துழைக்க வேண்டும்.
பொலிஸின் முகாமைத்துவம், பொது நிர்வாகம், பொலிஸ் சேவை மற்றும் குற்றவியல் நீதி ஆகிய துறைகளில் அனுபவங்களைக் கொண்டவர்களாக மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களின் தவிசாளரும் இருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் தத்துவங்களும் பணிகளும் கீழ்வருவனவாக இருத்தல் வேண்டும்
உரிய மாகாண பொலிஸின் அலுவலர்களுக்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்காக திட்டங்களை விருத்தி செய்தலும் வகுத்தமைத்தலும் அத்தகைய திட்டங்களுக்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெறுதலும்.
உரிய மாகாண பொலிஸில் சேவை புரிவதற்காக பொலிஸ் அலுவலர்களை ஆட்சேர்ப்பதும் பதவியுயர்வு வழங்குவதும் மற்றும் குறிப்பிடப்பட்ட முடிவுகளுக்கான ஏற்புறுதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் அத்துடன், மாகாண பொலிஸ் ஒன்றில் சேவையாற்றுவதற்காக ஆட்களை ஆட்சேர்ப்பு செய்யுமிடத்து குறிப்பிடப்பட்ட மாகாண மக்களால் பேசப்படும் மொழிகளைக் கவனத்தில் கொண்டு தெரிவு செய்வதற்காக கருத்தில் கொள்ளப்படுகின்ற ஆளின் மொழியியல் ஆற்றல் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

உரிய மாகாண பொலிஸ் ஆணையாளரின் நியமனம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விதப்புரைகளை வழங்குதல்.
உரிய மாகாண பொலிஸ் ஆணையாளர்களின் விதப்புரையின் பேரில் மாகாண பொலிஸ் அலுவலர்களின் உள்ளக இடமாற்றம்,
உரிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு பொலிஸ் அலுவலர்களை ஒரு மாகாண பொலிஸிலிருந்து இன்னொரு மாகாண பொலிஸுக்கு இடமாற்றம் செய்தல்.
சேவையை முடிவுறுத்தல் உள்ளடங்கலாக உரிய மாகாண பொலிஸின் பொலிஸ் அலுவலர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் தேசிய பொலிஸினால் விடுவிக்கப்பட்ட பொலிஸ் அலுவலர்களை உரிய மாகாண பொலிஸின் சேவை புரிவதற்க õக தேசிய பொலிஸில் இருந்து உள்வாங்கல்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் மாகாண பொலிஸ் படையிலிருந்து பொலிஸ் அலுவலர்களை தேசிய பொலிஸுக்கு உள்வாங்கப்படுவதற்காக விடுவித்தல்.
மாகாண பொலிஸில் பொலிஸ் அலுவலர்களாக சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழு அந்த மாகாணத்தின் இன மற்றும் மொழியியல் விகிதாசாரங்களை முறையாக கருத்தில் கொள்ள வேண்டும்.
குறித்தவொரு மாகாண பொலிஸில் பொலிஸ் அலுவலர்களாக சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய மாகாணத்தில் சாதாரணமாக வதியும் விண்ணப்பதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

குறித்தவொரு மாகாண பொலிஸில் பொலிஸ் அலுவலர்களாக சேவை புரிவதற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் போது உரிய மாகாண மக்களால் பேசப்படும் ஆதிக்கம் மிக்க மொழியை பேசும் திறனுள்ள அத்தகைய அலுவலர்கள் முறையாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணைக்குழு அதன் பணிகளில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளையோ உரிய மாகாண பொலிஸ் ஆணையாளருக்கு அல்லது உரிய மாகாண பொலிஸில் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பதவித் தரத்தை விடக் குறையாத பதவித் தரமொன்றை வகிக்கும் ஏனைய எந்த அலுவலருக்கும் கையளிக்கலாம்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவொன்றின் முடிவொன்றினால் இன்னலுற்ற எந்த பொலிஸ் அலுவலரும் நிர்வாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு மேன்முறையீடு செய்யலாம்.
06. பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி ( பொலிஸ் மா அதிபர்)
பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி இலங்கை பொலிஸின் தலைவராக இருத்தல் வேண்டும்.
ஒட்டுமொத்த முகாமைத்துவம், நிர்வாகம் மற்றும் மாகாண பொலிஸின் கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றல் என்பவற்றுடன் தொடர்பான கருமங்கள் மீது மாகாண பொலிஸ் ஆணையாளர்களுக்கு பணிப்புரைகளை விடுக்க பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி தத்துவமளிக்கப்பட வேண்டும்.
ஆயின், எவ்வாறாயினும் மாகாண பொலிஸுக்கு பிரத்தியேகமான நியாயாதிக்கம் அளிக்கப்பட்டுள்ள கருமங்கள் தொடர்பாக மாகாண பொலிஸ் ஆணையாளர்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதற்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதிக்கு தத்துவமளிக்கப்படலாகாது.

தேசிய பொலிஸின் முகாமைத்துவத்துக்கும் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி இருத்தல் வேண்டும்.
அரசியல் அமைப்புப் பேரவையின் விதிப்புரையின் மீது பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும்.
எவரேனும் (ஒரேயொரு) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியே பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியாக நியமிக்கப்பட்ட உரியத்துடையவராக இருத்தல் வேண்டும். மாகாண பொலிஸ் ஆணையாளர்கள் அந்த வகுதிக்கு உரியவர்களாக இருத்தல் வேண்டும்.
பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் நியமனத்தைத் தொடர்ந்து, அவர் அத்தகைய பதவியில் 63 வருட வயதைப் பூர்த்தி செய்யும் வரையில் சேவை புரிய உரித்துடையவராக இருத்தல் வேண்டுமென்பதுடன் அவரது சேவை அத்தகைய வயதுக்கு மேல் நீடிக்கப்படவும் கூடாது.
பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி ஒருவரின் உச்சபட்ச சேவைக் காலம் 4 வருடங்களாக இருத்தல் வேண்டும்.

பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி தொடர்பாக ஒழுக்காற்று கட்டுப்பாட்டைப் பிரயோகிக்க அரசியலமைப்புப் பேரவைக்கு தத்துவமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
(அ) சட்டத்தை பாராதூரமாக மீறல் (ஆ) இலஞ்சம், ஊழல் அல்லது மோசடி (இ) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் (ஈ) பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதிப் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தல் அல்லது (உ) சுகவீனம் ஆகிய ஏதுக்கள் மீதல்லாது பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் சேவை முடிவுறுத்தப்படக் கூடாது.
மேலே சொல்லப்பட்ட ஏதுக்களில் ஒன்றுக்கு அல்லது அதற்கு அதிகமானவற்றுக்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி குற்றமுடையவராவார் என ஒரு விசாரணையைத் தொடர்ந்து தீர்மானமொன்று அரசியலமைப்புப் பேரவையால் எடுக்கப்படும் போது அரசியலமைப்புப் பேரவை பாராளுமன்றத்துக்கு நிருபம் ஒன்றை அனுப்ப வேண்டுமென்பதுடன் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் சேவையை முடிவுறுத்தும் தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களிப்பதன் மீது மாத்திரம் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதியின் சேவை முடிவுறுத்தப்பட வேண்டும்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி கடமைப்பட்டிருத்தல் வேண்டும்.
விசாரணைகளை மேற்கொள்ளல் உள்ளடங்கலாக கடமைகளையும் பணிகளையும் புரியும் போது மாகாண பொலிஸினால் பின்பற்றப்பட வேண்டிய நியமங்களையும் வழிகாட்டு நெறிகளையும் குறிப்பிடுவதற்கு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி உரித்துடையவராதல் வேண்டும்.
குற்றவியல் கருமங்கள் சட்டத்தில் பரஸ்பர உதவியளித்தலின் பொருட்டு பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி மத்திய அதிகாரியாக இருத்தல் வேண்டும்.
இலங்கைப் பொலிஸை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வெளிநாட்டு சட்ட அமுலாக்க முகவராண்மைகளுடன் ஒப்பந்தங்களுக்குட்படுவதற்கும் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி உரித்துடையவராதல் வேண்டும்.
பொலிஸ் சேவையின் கொள்கைகள் , பொலிஸ் சேவைக்கான தேவைகள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய விடயங்கள் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி “பொலிஸ்’ விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வகைப்பொறுப்பு உடையவராக இருத்தல் வேண்டும்.
ஆயின் , எவ்வாறாயினும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக குறித்த விசாரணைகளை மையப்படுத்தி அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு தத்துவமளித்தலாகாது.

07. மாகாணப் பொலிஸ் ஆணையாளர்கள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் நியமிக்கப்படுதல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் படையின் பிரதானியாக மாகாணப் பொலிஸ் ஆணையாளர் இருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரைகளை வழங்குவதற்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸின் ஒட்டுமொத்த முகாமைத்துவத்திற்கும் நிர்வாகத்திற்கும் மாகாணப் பொலிஸ் ஆணையாளர் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவின் விதப்புரையின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் மாகாணப் பொலிஸ் ஆணையாளர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும்.
மாகாணப் பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்டு பரிசீலிக்கப்படுவதற்கு எந்தவொரு சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியும் தகைமையுடையவராதல் வேண்டும்.
மாகாணப் பொலிஸ் ஆணையாளர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நியமனத்தில் அவர் 61 வயதைப் பூர்த்தி செய்யும் வரையில் சேவையாற்றுவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும். அந்த வயதிற்கு அப்பால் அவரது சேவை நீடிக்கப்படலாகாது.

ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் மாகாணப் பொலிஸ் ஆணையாளர் ஒருவர் சேவையாற்றுவதற்கான ஆகக் கூடுதலான வருடங்களின் எண்ணிக்கை 3 வருடங்களாக இருத்தல் வேண்டும். அதன் பின்னர் அதே மாகாணத்தில் மாகாணப் பொலிஸ் ஆணையாளராக அவர் மீள நியமிக்கப்படுவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தலாகாது.

மாகாணப் பொலிஸ் ஆணையாளர் தொடர்பில் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு மாகாணத்தின் பொலிஸ் ஆணையாளர் தொடர்ந்து வேறு ஒரு மாகாணத்தின் மாகாணப் பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்படுவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
மாகாண பொலிஸ் ஆணையாளர் ஒருவர் தேசிய பொலிஸ் படையில் இணைவதற்கான உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியாக நியமிக்கப்படுவதற்காகப் பரிசீலிக்கப்படுவதற்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் உரித்தினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பின்வரும் காரணங்களின் அடிப்படையிலன்றி மாகாணப் பொலிஸ் ஆணையாளர் ஒருவரின் சேவைகள் முடிவுறுத்தப்படலாகாது.
சட்டத்தைப்பாரதூரமாக மீறுதல்
இலஞ்சம், ஊழல் அல்லது மோசடி
அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லது தவறான பயண்பாடு
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்துதல்.
சுகவீனம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணையாளர் குற்றமுடையவராக இருக்கின்றார் என விசாரணை நடத்தப்பட்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானத்திற்கு வந்த பின்னர் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்குப் பத்திரம் ஒன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணையாளரின் சேவைகளை முடிவுறுத்தும் தீர்மானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் சார்பாக வாக்களிக்கும் பட்சத்தில் மாத்திரமே சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணையாளரின் சேவைகள் முடிவுறுத்தப்படுதல் வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோசனைகளைச் செயற்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர் கடப்பாடுடையவராக இருத்தல் வேண்டும்.
பொலிஸ் சேவைக் கொள்கை, சட்டமும் ஒழுங்கும் பற்றிய விடயங்கள் மற்றும் பொலிஸ் சேவைத் தேவைப்பாடுகள் ஆகியவற்றின் மீது உரிய மாகாண சபையின் அமைச்சர்கள் சபையின் “சட்டமும் ஒழுங்கும் ‘ என்னும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள உரிய அமைச்சருக்கு மாகாணப் பொலிஸ் ஆணையாளர்கள் பொறுப்பாதல் வேண்டும். ஆயின் அத்தகைய மாகாண அமைச்சர், குற்றப் புலனாய்வுகளை நடத்துதல் தொடர்பில் வழக்கிற்குக் குறித்த அறிவுறுத்தல்களை வழங்குவதற்குத் தத்துவமளிக்கப்படலாகாது.

thinakkural/lk 06 12 2016
Published in Tamil
08 01 2017

மாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 1

அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவுக்கு தேசிய, பொது மக்கள் பாதுகாப்பு , பொது ஒழுங்கு, பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு பரிந்துரைத் திருக்கும் விடயங்கள்: மாகாணங்கள் தோறும் மாகாணப் பொலிஸ் படை நிறுவப்படுவதுடன், மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுக்களையும் அமைப்பதற்கு தேசிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு ,பொலிஸ் சட்ட வலுவூட்டல் பற்றிய உப குழு அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு பரிந்துரைத்திருக்கிறது.
சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவை தலைவராகக் கொண்டதும் 11 உறுப்பினர்களை உள்ளடக்கியதுமான இந்த உப குழுவுக்கு லங்கா சம சமாஜா கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசக் கூட்டணி, மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, இலங்கை மக்கள் முன்னணி, வட மாகாண சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தரணிகள் சங்கம், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் கூட்டமைப்பு, பாராளுமன்ற கூட்டு எதிர்க்கட்சி உட்பட கட்சிகள், அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு இந்த உப குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.உப குழுவானது மாகாணப் பொலிஸ் தொடர்பாக பரிந்துரைத்திருக்கும் விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.

*மாகாணப் பொலிஸ்

(அ)ஒவ்வொரு மாகாணத்திற்குமென மாகாணப் பொலிஸ் காணப்படும்.
(ஆ) மாகாணப் பொலிஸானது
(அம் மாகாணத்தின் பெயர்) மாகாணப் பொலிஸ் என அறியப்படும் ( உதா : சப்ரகமுவ மாகாண பொலிஸ்)
(இ) ஒவ்வொரு மாகாணப் பொலிஸும் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
* மாகாணப் பொலிஸ் தலைமைப் பணியகம்
* ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திற்குமான ஒரு மாவட்டப் பணியகம் ( பிராந்தியம்)
* முதலமைச்சர் மற்றும் உரிய மாகாணத்தின் பொலிஸ் ஆணைக்குழு என்பவற்றுடன் கலந்தாலோசித்து மாகாணப் பொலிஸ் ஆணையாளரினால் தீர்மானிக்கப்பட்டவாறான எண்ணிக்கையிலான தொழிற்பாட்டுப் பணியகங்கள்.
மாகாணப் பொலிஸ் பயிற்சி நிறுவகம்
(ஈ) மாகாணப் பொலிஸாரின் நிறுவனப் பிரசன்னமானது மாகாணப் பொலிஸ் தலைமையகம், பணியகங்கள், அலகுகள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் காவலரண்கள் என்ற வடிவங்களை எடுக்கும்.
(உ) மாகாணப் பொலிஸ் தலைமையகம், பணியகங்கள், அலகுகள், பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் காவலரண்கள் என்பன உரிய மாகாணப் பொலிஸ் ஆணைக்குழு மற்றும் முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய மாகாணப் பொலிஸ் ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்டவாறாக அமைக்கப்படும்.
(ஊ) ஒரு மாகாணப் பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய மாகாணத்திற்குள் மாத்திரம் தமது அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் சாதாரணமாக செயற்படுத்துவர். எவ்வாறாயினும், மாகாண பொலிஸ் ஆணையாளருடனும் கலந்தாலோசித்து பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் பிரகாரம் அவரிடம் ஒப்புவிக்கப்பட்ட சட்டபூர்வமான கடமைக்கு விளைவுகொடுக்கும் நோக்கத்திற்காக மாகாணப் பொலிஸ் உத்தியோகத்தரானவர்கள் அவரது மாகாணத்திற்கு வெளியேயும் அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் ஆற்ற முடியும்.
(எ) பொலிஸ்மா அதிபருடன் கலந்தாலோசித்து விருத்தி செய்யப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாகாணப் பொலிஸார் தேசிய பொலிஸாருடன் ஒத்துழைத்துச் செயற்படுவர்.
(ஏ) இரண்டு அல்லது பல மாகாணப் பொலிஸாருக்காகவோ அல்லது தேசிய மற்றும் ஒரு மாகாணப் பொலிஸாருக்காகவோ அல்லது தேசிய மற்றும் இரண்டு அல்லது பல பொலிஸாருக்காகவோ ஒரு கூட்டு விசாரணையை அல்லது நடவடிக்கையை பொறுப்பெடுத்து நிறைவேற்றுவது சட்ட ரீதியானதாக இருக்கும்.
(ஐ) ஒரு இயற்கை அனர்த்தத்திற்குப் பதிற்செயற்பாடு காட்டுவது தவிர்ந்த ஏனைய நிலைமைகளில் ஒரு அரச அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்படுத்தும் பொழுது எழும் நிலைமைக்கான செயல் விளைவுடைய பதிற்செயற்பாட்டைச் செய்யும் நோக்குடன் பொலிஸார் பரிசோதகர் தலைமை அதிபதி ஒன்றோ அல்லது பலவோ மாகாணப் பொலிஸாரினை தனது நேரடிக் கட்டளையின் கீழ் கொண்டு வருவார்.
(ஒ) உரிய மாகாண ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதி உரிய மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து அங்கே முறைமை ரீதியானதும் பரந்துபட்டதுமான (அ) கீழ்ப்படியாமை அல்லது (ஆ) வேண்டுமென்ற மீறுகை அல்லது கடமைகள் மற்றும் தொழிற்பாடுகளில் பராதீனம் செய்தல் அல்லது (இ) புரட்சி அல்லது கலக நடத்தை அல்லது (ஈ) இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறைமை மீது தாக்குதல் அல்லது தாக்குதல் ஏற்படக் கூடிய நிலை என்ற எண்ணம் உருவாக்கப்படும் பொழுது ஜனாதிபதியின் இயைபுடன் அவர் உரிய மாகாணப் பொலிஸின் தொழிற்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆயுதங்களைக் களைவதற்கும் படிநிலை எடுப்பார்.

அதற்குப் பின்பு அவர் உரிய மாகாணப் பொலிஸுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் தேசிய பொலிஸ் படையால் நிறைவேற்றப்படச் செய்வார். விசாரணையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் உரிய மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய முறையில் கடமைகளையும் அதிகாரங்களையும் தொழிற்பாடுகளையும் ஆற்றுகின்றனர் என்ற கருத்தை பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதி பெறுவாராயின் விதிக்கப்பட்ட இடை நிறுத்தத்தை அவர் பின்வாங்குவதுடன் உரிய மாகாணப் பொலிஸார் தமது தொழிற்பாட்டை மீளத் தொடங்குவார்.

மாகாண ஆளுநர், பிரதம அமைச்சர், மாகாணப் பொலிஸ் ஆணையாளர் என்போருடன் கலந்தாலோசிப்பதைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தத்தை அகற்றுவது பொருத்தமற்றது எனக் கருத்துக் கொண்டிருப்பாராயின் ஜனாதிபதியின் இணக்கத்துடன் உரிய மாகாண பொலிஸ் படை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் கடமைகள், அதிகாரங்கள், தொழிற்பாடுகள் என்பன தேசிய பொலிஸாரால் மேற்கொள்ளப்படும். கலைப்பைத் தொடர்ந்து உரிய மாகாணப் பொலிஸ் ஆணைக் குழுவிற்கு உரிய மாகாண பொலிஸினை மீள அமைத்துச் செயற்படுத்துவதற்குப் பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதி உதவுவார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

(ச்) அரசியலமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்ட ஒரு தேசிய பொலிஸ் ஆணைக்குழு காணப்படும்.
(ஞ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவானது அதன் தவிசாளர் மற்றும் ஏனைய நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
(ஞி) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் உறுப்பினர்களும் ஜனாதிபதி யின் இணக்கத்தைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்படுவர்.
(ஞீ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும், உறுப்பினர்களும் பொலிஸ் முகாமைத்துவம், பொலிஸ் நிர்வாகம், குற்றவியல் நீதி, சமூகவியல் துறைகளில் அனுபவமுடைய ஆட்களாக இருப்பர்.
(ஞு) மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவாகப் பெண்கள் இருக்கக் கூடாது.
(ஞூ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் உறுப்பினர்களும் முழு நேர அடிப்படையில் சேவை புரிய வேண்டும்.
(ஞ்) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தவிசாளரும் உறுப்பினர்களும் 5 வருட காலப் பகுதிக்கு பதவி வகிக்க வேண்டும்.
(ட) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அதன் செயலாளரும் ( தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ) அதன் செயலகமும் ஒத்துழைக்க வேண்டும்.
(டி) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தத்துவங்களும் பணிகளும் கீழ் வருவனவாக இருத்தல் வேண்டும்.
* தேசிய பொலிஸின் அலுவலர்களுக்கான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ( சேவையை முடிவுறுத்தல் உள்ளடங்கலாக) ஆகியவற்றுக்காக திட்டங்களை விருத்தி செய்தலும் வகுத்தமைத்தலும்.
* தேசிய பொலிஸின் பொலிஸ் அலுவலர்கள் தொடர்பாக மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
* மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களால் ஆக்கப்பட்ட மாகாண பொலிஸின் அலுவலர்களின் ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம் , பதவியுயர்வு , ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்காக திட்டத்தை அங்கீகரித்தல்.
* மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களால் மாகாண பொலிஸுக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ஏற்புறுதி செய்தல்.
* பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியின் விதப்புரையின் பேரில் (அ) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆணையாளர் (ஆ) விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி மற்றும் ( இ) தேசிய பொலிஸின் தொழிற்பாட்டு மற்றும் பிரதேச பிரிவுகளின் தலைவர்கள் ஆகியவர்களின் நியமனம்
* உள்ளக அலுவல்கள் பிரிவின் பணிப்பாளரின் நியமனம்
* பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதியின் விதப்புரைகளுக்கு அமைவாக பொலிஸ் அலுவலர்களின் தேசிய பொலிஸின் உள்ளக இடமாற்றம்.
* உள்ளக அலுவல்கள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் கருத்தில் கொண்டு, குற்றங்களுக்கும் இழைத்தமைக்குப் பொறுப்பானவர்கள் என கண்டுகொள்ளப்பட்ட பொலிஸ் அலுவலர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து நிறுவனத்தின் பரிசீலனையை, சட்டத்துறை தலைமை அதிபதிக்கு விதந்துரைத்தல்.
* உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் மாகாண பொலிஸின் பொலிஸ் அலுவலர்களை தேசிய பொலிஸ் படைக்கு உள்வாங்குதல்.
* உரிய மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் ஒருப்பாட்டுடன் உரிய மாகாண பொலிஸுக்கு உள்வாங்குவதற்காக தேசிய பொலிஸில் இருந்து பொலிஸ் அலுவலர்களை விடுவித்தல்.
(டீ) தெரிவு செய்தல், ஆட்சேர்ப்பு, நியமனம், பயிற்சி, பதவியுயர்வு மற்றும் பொலிஸ் அலுவலர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு தொடர்பான மாகாண பொலிஸுக்கான வழிகாட்டு நெறிகள், விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் ஆகியவற்றை தேசிய பொலிஸ் ஆணைக்குழு மாகாண பொலிஸுடன் கலந்தாலோசித்து வகுத்தல் வேண்டும். ( இது தெரிவு செய்தல், ஆட்சேர்ப்பு, நியமனம், பயிற்சி, பதவியுயர்வு மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது தேசிய நியமனங்களுடனான பற்றுறுதியை உறுதிப்படுத்துவதற்காகும்).

தேசிய மற்றும் மாகாண பொலிஸின் பொலிஸ் அலுவலர்களுக்கு வழங்கப்படும் கவனிப்புகளையும் சம்பளங்களையும் ஏனைய வேதனாதிகளையும் தேசிய பொலிஸ் ஆணைக் குழு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தால் தேசிய பொலிஸுக்கும் மாகாண பொலிஸுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு பங்கீடு செய்ய வேண்டும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதன் பணிகளில் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டதையோ பொலிஸ் பரிசோதகர் தலைமை அதிபதிக்கு கையளிப்பதற்கு உரித்துடையதாக இருத்தல் வேண்டும்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முடிபுகள் நிர்வாக மேன்முறையீட்டு நியாயசபையில் மேன்முறையீடு செய்யப்பட முடியுமாக இருத்தல் வேண்டும். தேசிய பொலிஸ் ஆணைக் குழு உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கத்துடனும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் எழுத்தாணை பற்றிய நியாயாதிக்கத்துடனும் இசைந்து செல்ல வேண்டும்.

thinakkural.lk 06 12 2016
continue.......
Published in Tamil