29 05 2017

தாங்கொணாத் துயரம்

நடேசன்

விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரthuyaramம்பச் thuyaram2சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தலிங்கம், பத்மநாபா நான் அறிந்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்கு மாறாக நான் பழகியவர்களில் பல காலமாக பிரபாகரனை சரியாகப் புரிந்து இருந்தவர்களில், முன்னாள் வட- கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப்பெருமாள் என். எல். எவ். ரி மற்றும் பிஎல். எவ். ரி யில் இருந்து, தற்பொழுது கனடாவில் வசிக்கும் மனேரஞ்சன், ம ூன்றாவது தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் என்பவர்களாகும். வரதராஜப்பெருமாள் நாங்கள் அறியக்காலத்திலே அரசியலுக்கு வந்து சிறை சென்றதுடன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அதேபோல் மனோரஞ்சன் யாழ்பாணத்தின் புழுதிபடியாதமேனியர். கண்டியில் மூவினங்களோடு படித்து வளர்ந்தவர். ஜோர்ச் குருசேவ் மட்டும் யாழ்பாணத்துச்சாதி, மத, மற்றும் குறிச்சி என்ற குறுநில மன்னவர்கள் மனப்பான்மையை மீறி உருவாகிய ஒரு சுயம்புலிங்கம்.
90களின் பின்னர் விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் சாமானியர்கள் அல்ல. நிட்சயமாக எமது தமிழ்மண்ணில் உதித்தவர்களில் அறிவும், தியாகமனப்பான்பையும் அளவுக்கு அதிகமாகக்கொண்டவர்கள்.பலர் வாய்ப்பிருந்தும் வெளிநாடு போக மறுத்தவர்கள்.சிலர் மேற்கு நாடுகளில் இருந்து போராட தாய்நாட்டுக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லாம் தாம் சார்ந்த சமூகத்திற்காக உடல், பொருளை மற்றும் குடும்ப உறவுகளைத் உதறித்தள்ளியவர்கள். ஆனால் பலர் இலகுவாக விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பலர் விடுதலைப்புலிகளை ஏற்காதபோதிலும் மனத்தில் அவர்கள் மீது சிறிது நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். நாய்க்கு விசர் பிடித்த பின்பும் எனது நாய் என்னைக் கடியாது என்பது போன்ற மன நிலை இவர்களுக்கு இருந்திருக்கிறது. அல்லது இலங்கை அரசின் மீது வெறுப்பு கண்ணை மறைத்திருக்கலாம்.

இந்திய அமைதிபடைகாலத்தில் எந்த இயக்கச்சம்பந்தமில்லாத யாழ்ப்பாண வைத்தியசாலை பிணஅறையில்வேலை செய்தவர்கள், ஈபி எல் ஆர் எவ் ஆல் பிடிக்கப்பட்ட தமிழ்த்தேசிய இராணுவத்தினரையோ அல்லது இந்திய இராணுவத்திற்குப் பொருள்கள் வினியோகித்தால் கொலை செய்யப்பட்டவர்களை நான் இங்குசொல்லவில்லை . நான் குறிப்பிடுபவர்கள் மற்ற இயக்கங்களைப் புலிகள் தடைசெய்யப்பட்ட பின்பு யாழ்ப்பாணத்தில் வாழலாம் என நினைத்த இருந்த மாற்று இயக்கத்தினர், இடதுசாரிகள் மற்றும் பழைய தமிழ் அரசியல்க்கட்சிகளின் ஆதரவாளர்கள். இவர்களே துணுக்காய் வதை முகாமில் சாம்பலாகி உரமாகியவர்கள்.

சமீபத்தில் நான் ரொரண்ரோ, கனடா சென்றபோது எனது நண்பர் சிவா முருகுப்பிள்ளை ஒரு புத்தகத்தைத்திணித்தார். அதன் தலையங்கம் பழைய காலத்து நாவலின்(மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம்) பெயர் போல் ‘தாங்கொணாத் துயரம்’ என இருந்தது. அத்துடன் தொகுப்பு பத்தகமாக இருந்தது. தொகுப்பு புத்தகங்கள் சோம்பேறிகளால் வெளியிடப்படுபவை என எனது தனிப்பட்டகருத்து. எழுதுவதற்கு சோம்பலால் பலர் எழுதியதை தொகுத்துவிட்டுஆசிரியராகுவது. தற்காலத்தில் பலர் இப்படியான விடயங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதால் பெட்டிக்குள் வைத்துவிட்டேன்.

மெல்பேன் வந்து இரண்டு மாதங்களில் பிரயாணப்பெட்டியை எடுத்து, அடுக்க முயற்சித்தபோது கையிலெடுத்துப்பார்த்த பின்பு அதை கீழே வைக்கமுடியவில்லை. இதயத்தில் சுரண்டி இரத்தத்தைக்கசியவைக்கக்கூடியதாக முதல்க்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.

அன்ரன் எனப்படும் விவேகானந்தன், கண்டியில் படித்த பிராமண குலத்தை சேர்ந்தவர். விசுவானந்ததேவனோடு பி.எல். எவ். ரி இயக்கத்தில் இருந்தவர். அவரது மனைவி சாந்தி தனது கணவனை எப்படி விடுதலைப்புலிகள் கொண்டு சென்றார்கள் என்பதையும், அவரைத்தேடி பல வருடங்களாக அவர்களது முகாங்களுக்கு மாறி மாறி அலைந்ததையும், இறுதியில் 2-9 1993யில் இவ்வுலகைவிட்டு விடுதலை செய்ததாக, தாங்கள் கொலை செய்ததை விடுதலைப்புலி உறுப்பினர்கள்

12-2 1995 ஆண்டு வந்துசொல்கிறார்கள். அதாவது ஒன்றரை வருடத்தின் பின்பு,“நாங்கள் முன்னாலும் பின்னாலும் இவ்வளவு காலமும் திரிந்துகொண்டிருந்தோம். ஏன் இப்பொழுது எங்களுக்குகுச் சொல்கிறீர்கள்”என்கிறார் சாந்தி.

“இப்பொழுதான் உங்களுக்கு அறிவிக்கும்படியான அனுமதி கிடைத்தது.”
“அவர் என்ன செய்தார்? அவர் யாரையாவது சுட்டாரா? அப்படியென்றால் அவரைப்பொதுமக்கள் முன்னிலையில் கொலை செய்திருக்கவேண்டும்.” மீண்டும் சாந்தி.
“அவர் துரோகி” எனக்கூறிச் சென்றார்கள்.

சாந்தியின் எழுத்து, இடதுசாரியாகிய அன்ரனது போராட்ட வரலாற்றைச் சொல்வதுடன் சாந்தியின் போராட்டத்தையும் சொல்கிறது. சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் முகாங்களுக்கு வருடக்கணக்காகத் அலைந்த சாந்தியின் மன ஓட்டம் எழுத்தில் தெரிகிறது.

இதில் உள்ள சிறப்பான கட்டுரை மனேரஞ்சனுடையது. மனேரஞ்சன் எனக்குப் பழக்கமானவர் ஆனாலும் அவரது போராட்டகாலம் எனக்குத் தெரியாது. கண்டியில் படித்துக்கொண்டிருந்தாலும், போராட்டத்தைத்தேடி யாழ்ப்பாணம் வந்து இயக்கத்தில் சேருகிறார். இயக்கங்களில் சேருங்காலத்தில் இலங்கை அரசுக்கு எதிரான நோக்கத்தில் பலர் இளைஞர்கள் எந்த வள்ளம் கரைக்கு வருகிறதே அதில் ஏறிய காலத்தில் மனோரஞ்சன் போன்றவர்கள் ஆயுதத்திற்கு முதன்மையளிக்காது மக்களில் நம்பிக்கைகொண்டு இடதுசாரி இயக்கத்தில் சேருகிறார்கள்.

மனோரஞ்சனின் அரசியல் கட்டுரைகள் கூர்மையானவையாததால் அக்காலத்தில் உதயத்தில் நான் பிரசுரித்தேன்.எனக்குப் பிரபாகரனும் அவரது பரிவாரங்களும் எத்தனை சாந்திகளை உருவாக்கியிருப்பார்கள்? இப்படியாக ஆயிரக்கணக்கானவர்களின் சாபங்கள் மட்டும் சாதாரணமானதா என எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. இந்து மற்றும் புத்த மதத்தின் கலாச்சாரத் தன்மை என்னில், என்னையறியாது உள்ளதால் மே 18 என்பது ஒருவிதத்தில் பிரமாண்டமான தீர்ப்பு(Judgement day) எழுதிய நாளாக இருக்கலாம் என மனத்தில் மோதுகிறது
thenee 23 05 2017

Published in Tamil
22 05 2017

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடைகிறது?

இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக தனது கொள்கையை இந்தியா மீள வடிவமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தென்படுகிறது. கடந்த 11 12 ஆம் திகதிகளில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விஜயமானது இதற்கான ஆதாரமாக அமைந்திருக்கின்றது. இலங்கைத் தமிழர் கட்சிகளை உள்ளடக்கிய குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இறுதி நேரத்தில் மட்டுமே இந்தியப் பிரதமர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். அந்தச் சந்திப்பு மோடி பயணமாவதற்கு முன்பாக விமான நிலையத்தில் வைத்து 15 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது.

இந்த விடயம் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மத்திய மலையகப் பகுதிகளைச் சேர்ந்த அவர்களின் தலைவர்களுடனான மோடியின் ஈடுபாட்டிலிருந்தும் மிகவும் முரண்பட்டதாக காணப்படுகிறது. அவர்களுக்காக அவர் வைத்தியசாலையொன்றை திறந்து வைத்திருந்தார். அத்துடன் வழமையான பொதுக் கூட்டமொன்றிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். மேலும் அவர்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார்.மோடியின் பயணமானது இந்தியாவின் அழுத்தம் கொடுக்கும் விடயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைத் தமிழர் விவகாரத்திலிருந்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் விவகாரங்களுக்கு மாற்றப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக அமைந்திருக்கின்றது.

இலங்கைத் தமிழர்களுடனான விரக்தி

இந்தியாவின் கொள்கை மாற்றமடைவதற்கு இரு காரணங்கள் அடிப்படையாக காணப்படுகின்றன. 34 வருடமாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆயினும் அதனால் எந்த பெறுபேறும் இதுவரை ஏற்பட்டிருக்கவில்லை.உண்மையில் அதன் ஈடுபாடு பணம் மற்றும் உயிர்களை அதிகளவுக்கு எடுத்துக் கொண்டிருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் 1500 படை வீரர்களை இந்தியா இழந்திருக்கின்றது. 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ்ப் புலிகளை கொண்டுவருவதற்கு முயற்சிப்பதில் இந்த இழப்பு ஏற்பட்டிருந்தது.

இலங்கை இந்திய உடன்படிக்கையினூடாக தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அந்த முயற்சிகளும் தோல்வி கண்டிருந்தன. ஏனெனில் கொழும்பு அதற்கு இசைவான போக்கை கொண்டிருக்கவில்லை. 2009 இல் தமிழ்ப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்திருந்த போதிலும் அதற்குப் பின்னர் கூட தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் தனது வாக்குறுதிகளை கொழும்பு நிறைவேற்றவில்லை. புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா உதவி அளித்திருந்தது என்பதையும் கொழும்பு மறந்துவருகின்றது. இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது உதவியாக அமையுமென கருதப்பட்டது.

யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் தற்போது கடந்துள்ளன. இலங்கை இந்திய உடன்படிக்கையிலுள்ள அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான விடயங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படாமல் தொடர்ந்து இருந்து வருகின்றன. தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது உட்பட யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளித்திருந்த தனது உறுதிமொழிகளை கூட நிறைவேற்றுவதற்கு கொழும்பு தவறி வருகின்றமை அதிகரித்து வருகின்றமை கொழும்புடனான இந்தியாவின் விரக்திக்கு காரணமாகும்.

அரசியலிலிருந்து பொருளாதாரத்திற்கு

இதேவேளை தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றிக் கொண்டுள்ளது. அரசியலிலிருந்து பொருளாதாரமாக அந்தக் கொள்கை மாறுதலடைந்துள்ளது. பலவேறுபட்ட சமூகங்கள் தமது அரசியல், பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் கவனம் செலுத்துவதிலும் பார்க்க வர்த்தக மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதிலேயே புதுடில்லி இப்போது அதிகளவுக்கு ஆர்வம் காட்டி வருகின்றது.அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றின் பொருளாதார சுயநல தன்மைக்கு அப்பால் புதுடில்லி இப்போது பொருளாதார ரீதியில் ஏனைய நாடுகளுடன் அதிகளவுக்கு செயற்படுவதும் உறவுகளை வலுப்படுத்துவதும் அரசியல் ரீதியில் அனுகூலமானதாக அமையுமென நம்புகின்றது.

பொருளாதார ரீதியில் வலுவூட்டப்பட்டால் விளிம்பு நிலையிலுள்ள அல்லது ஓரங்கட்டப்பட்ட நிலையிலுள்ள சமூகங்கள் தமது அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்தக்கூடியதாக இருக்குமெனவும் டில்லி நம்புகின்றது. வர்த்தகம், முதலீடு என்பவற்றினூடாகவும் இந்தியாவின் நிதியுதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களினூடாகவும் பொருளாதார ரீதியில் செயற்படுவது பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கு கொண்டு செல்லுமெனவும் காலப்போக்கில் அது அரசியல் ரீதியாக வலுவூட்டுவதற்கு வழிவகுக்குமெனவும் டில்லி கருதுகின்றது.

இதனடிப்படையில் விடயங்களை இந்தியா முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின் பின்னர் இந்தியாவினால் வழங்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகளை இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியா முயற்சித்திருந்தது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தில் வர்த்தக முதலீட்டுக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் இலங்கைத் தமிழர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

அவர்களின் தலைவர்களும் கருத்துருவாக்கிகளும் உண்மையில் 34 வருடங்களுக்கு முன்னர் இந்தியா உறுதியளித்திருந்த அரசியல் தீர்வை தங்களுக்குப் பெற்றுத்தருவதற்கு இந்தியா செய்ய வேண்டுமென தாங்கள் எதிர்பார்ப்பதாகவே அவர்கள் கூறுகின்றனர்.ஆனால் அரசியல் தீர்வொன்று கிடைப்பதற்கு இந்தியாவால் அதிகளவுக்கு செய்ய முடியாத தன்மையே காணப்படுகிறது. 1987 இல் இருந்து இடம்பெற்று வரும் நிகழ்வுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. 1987 இந்திய இலங்கை உடன்படிக்கையின் போது இராணுவ ரீதியான போது அச்சுறுத்தல் ஆதரவாக காணப்பட்ட போதும் உடன்படிக்கைக்க ஆதரவான நிலைமை காணப்பட்டது. ஆயினும் அது செயற்பட்டிருக்கவில்லை. உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு இந்தியாவால் கொழும்பை வலியுறுத்த மட்டுமே முடியும்.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவால் நிர்ப்பந்திக்க முடியாது. தண்ணீருக்கருகில் குதிரையை உங்களால் கொண்டு செல்ல முடியும். ஆனால் தண்ணீரை குடிக்குமாறு குதிரையை வற்புறுத்த முடியாது என்று கூறுவது போன்றே விடயங்கள் சென்று கொண்டிருக்கின்றன.தமது பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதற்கு இந்தியா முன்வந்ததை தமிழர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருகையில், இலங்கையின் தெற்கிலுள்ள பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் தலைமைத்துவத்தைச் சேர்ந்த குறைந்தது ஒரு பகுதியினர் இந்தியாவின் திட்டங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றனர். பரஸ்பர நலனுக்காக வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான இந்தியாவின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இது தொடர்பாக ஆர்வத்துடன் உள்ளது. அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பாளரும் சிங்கள தேசியவாதத் தலைவருமான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட ஆர்வத்துடன் உள்ளார். மே 11 இல் மோடியுடனான அவரின் சந்திப்பு இதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. ஆதலால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கிலும் பார்க்க சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்குடன் பிணைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இந்தியா பார்க்கின்றது.

கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் பங்குகளைக் கொண்டிருப்பதில் இந்தியா ஆர்வத்துடன் இருக்கின்றது. ஏனெனில் கொழும்புத் துறைமுகத்தின் 70% வர்த்தக நடவடிக்கைகள் இந்தியாவுடனேயே காணப்படுகின்றன. திருகோணமலை துறைமுகம் கேந்திரோபாய பெறுமானத்தைக் கொண்டதாகும். சீன ஊடுருவல்களிலிருந்தும் பாதுகாப்பாக விளங்குவதற்கு வங்காள விரிகுடாவை இந்திய ஏரியாக வைத்திருப்பது இந்தியாவின் திட்டமாகும்.

இந்திய வம்சாவளித் தமிழர்களுடனான உறவுகளை புதுப்பித்தல்

பெருந்தோட்டத் துறையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுடன் தனது உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது. 15,00,000 இந்திய வம்சாவளித் தமிழர்கள் வலுவான சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். காலனித்துவ காலங்களில் அவர்களின் நலன்புரி விடயங்களில் ஒரு பகுதிக்கு இந்திய அரசாங்கம் பொறுப்பை ஏற்றிருந்தது. கண்டியில் முகவர் ஒன்றையும் கொண்டிருந்தது.
இன்றுவரை கண்டியில் உதவி உயர்ஸ்தானிகர் ஒருவர் இந்திய இராஜதந்திரியாக இப்போதும் இருந்து வருகின்றார். 1947 1948 களில் இந்தியாவுக்கு பின்னர் இலங்கை சுதந்திரமடைந்தது. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது. இந்தியா அவர்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்பியது.

ஆனால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் பிரஜைகளாக வர வேண்டுமென இந்தியா விரும்பியதுடன் அவர்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதன் பெறுபேறாக பல வருடங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாக இருந்தனர். இந்தப் பிரச்சினைக்கு 1960 களில் ஒரு பகுதித் தீர்வு காணப்பட்டது. சிறிமா சாஸ்திரி உடன்படிக்கை சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமையையும் சிலருக்கு இந்திய பிரஜாவுரிமையையும் வழங்கியது.

இதனால் எஞ்சியிருந்த நாடற்றவர்கள் வதிவிட உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர். காலப்போக்கில் இந்திய வம்சாவளித் தலைவர் எஸ். தொண்டமானின் அரசியல் பேரப்பேச்சு ஆற்றலும் தீர்க்கதரிசனமும் சகல இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொடுத்தது. எவ்வாறாயினும் இலங்கையில் மிகவும் பின்தங்கிய பிரதான சமூகமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்ந்து இருந்தனர். தொடர்ந்தும் லயன் அறைகளில் வாழ்கின்றனர். கல்வி, பொருளாதார வாய்ப்புகளும் சிறிதளவாகவே உள்ளன.

வீடுகளை நிர்மாணிக்க அவர்களுக்கு நிலம் இல்லை. அரசாங்க நலன்புரித் திட்டங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொழில் செய்யும் பெருந்தோட்டக் கம்பனிகளினால் அவர்கள் பராமரிக்கப்படுபவர்களாக கருதப்பட்டு அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்கள் சிலவற்றை இந்திய அரசாங்கம் முன்னர் கொண்டிருந்தது. அதற்கான உதவியையும் அதிகரித்திருந்தது. யுத்தத்துக்குப் பின்னர் அவர்களுக்கு 4000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மே 12 இல் மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் தீர்மானத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். 20,000 வீடுகளை இந்திய வம்சாவளித் தமிழ் தலைவர்கள் கோரியுள்ளனர்.

அவற்றை புதுடில்லி வழங்கும் சாத்தியப்பாடு காணப்படுகிறது. இந்திய வம்சாவளித் தமிழர்களும் அவர்களின் தலைவர்களும் இந்தியாவிடமிருந்து அபிவிருத்தி உதவியை நாடுகின்றதையிட்டு இந்திய அரசாங்கமும் பிரதமர் மோடியும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடக்கிலுள்ள தமிழர்களின் தலைவர்கள் மற்றும் கருத்துருவாக்கிகள் போன்றதாக இது அமைந்திருக்கவில்லை. அவர்கள் இந்த மாதிரியான உதவியை விரும்பாமை மாத்திரமன்றி அதை தேவையற்ற ஒன்றாக கருதுகின்றனர்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அண்மைக்கால இந்தியா வம்சாவளியினராவர். அத்துடன் புலம்பெயர் இந்திய சமூகத்தின் அங்கமாகவும் அவர்கள் விளங்குகின்றனர். சுதேச இலங்கைத் தமிழர்களுக்கு முரண்பட்டவர்களாக இந்தியப் புலம்பெயர் சமூகம் காணப்படுகிறது. இந்திய வம்சாவளி மக்களின் உலக அமைப்பான கோபியோ ஊடாக புலம்பெயர்ந்த இந்திய சமூகத்துடன் இந்திய அரசாங்கங்கள் தொடர்பாடல்களை வளர்த்து வருகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களும் அதன் அங்கமாக உள்ளனர்.கோபியோ மாநாடுகளில் சமுகமளிப்பதற்கான வாய்ப்பையும் அவர்களின் தலைவர்கள் கொண்டிருக்கின்றனர். உயர்மட்ட இந்தியத் தலைவர்கள் வர்த்தகர்களுடன் தமது தற்போதைய நிலைவரம், அபிலாஷைகள் தொடர்பான விடயங்களை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இலங்கைக்கான மோடியின் இந்தத் தடவை விஜயமானது இந்திய வம்சாவளித் தமிழர்கள் மற்றும் தெற்கிலுள்ள சிங்கள பெரும்பான்மையினர் மீது இந்தியா தனது கவனத்தை செலுத்தும் என்பதற்கான தெளிவான குறிகாட்டியாக காணப்படுகின்றது. இலங்கைத் தமிழர் விவகாரங்களில் சிறியளவு ஈடுபாட்டை மட்டுமே கொண்டிருக்கும்.
நன்றி; சவுத் ஏசியன் மொனிட்டர் thinakkural 18 05 2017

Published in Tamil
Saturday, 13 May 2017 00:00

திருப்புமுனை!!

13 05 2017

திருப்புமுனை!!

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை.தேர்தலில் தோல்வியடைந் தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.அதற்கான அடித்தள அரசியல் செயற்பாடுகளை அவர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றார்.நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சமாதான நிலைமை, முழு நாட்டின் ஐக்கியத்திற்கும் நிரந்தரமான சமாதான நிலைமைக்கும் வழி சமைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு இப்போது சந்தேகத்திற்கு உரியதாக மாறியிருக் கின்றது. இது துரதிர்ஷ்டவசமானது.அது மட்டுமல்ல. இந்த நிலைமையானது, இந்த நாட்டின் அரசியல் நிலைமைகள் ஸ்திரமற்ற ஒரு தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான அடையாளமாகவும் திகழ்கின்றது.அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளும் ஒரு முக்கியமான கால கட்டத்தை அடைந்திருப்பதையும் அடையாளப்படுத்தியிருக்கின்றது.இந்த அரசியல் கால கட்டம் என்பது தமிழ் மக்களுடைய அரசியலை வலுவானதொரு பாதையில் முன்னோக்கி நகர்த்திச் செல்லப் போகின்றதா அல்லது அதலபாதாளத்தில் வீழ்த்திவிடப் போகின்றதா என்பதை நிர்ணயிக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக இந்த ஆட்சியைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காக முதலில் திரைமறைவில் நின்று முழு மூச்சுடன் செயற்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலரும் இந்த ஆட்சியின் கீழ் 2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதியாக நம்பினர்.கூட்டமைப்பின் ஏனைய கட்சியைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் மக்களையும் நம்பிக்கை வைக்குமாறு அவர் கோரி வந்தார்.இந்த நாட்டின் இருபெரும் சிங்கள அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள் ளப்படுவதென்பது, இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே கிடைத்தற்கரியதொரு சந்தர்ப்பமாகவும் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டது.இவ்வாறு குறிப்பிடப்பட்டது மிகவும் பொருத்தமானது. இதில் சந்தேகப்படுவதற்கு எதுவுமில்லை.

காரணம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி ஆளும் கட்சியாக அதிகாரத்தில் இருக்கும் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை வலுவாக எதிர்த்துச் செயற்பட்டது. அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சிகள் பயனற்றுப் போயின.அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்த்து அந்த முயற்சியைத் தொடரவிடாமல் தடைபோட்டிருந்தது.இவ்வாறு இந்த இரண்டு பெரும்பான்மை இன அரசியல் கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் செயற்பட்டு, அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்திருந்தன என்பது அரசியல் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்த இரண்டு பேரின அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்ததென்பது முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கின்றது.ஒன்றையொன்று எதிர்த்து அரசியல் தீர்வு காண்கின்ற நடவடிக்கையைப் பாழ்படுத்திய இந்தக் கட்சிகள் இரண்டும் இணைந்து அதிகாரத்தில் இருக்கும்போது, அரசியல் தீர்வுக்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியானது வரலாற்றின் வழக்கத்துக்கு மாறாக பாரிய எதிர்ப்பின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்படலாம்.அதற்கான சரியான சந்தர்ப்பமாக இந்தத் தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் கருதப்பட்டது.ஆனால் இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் இலவுகாத்த கிளியின் நிலைமைக்குத் தமிழ் மக்களை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றதே என்று கருதத் தக்க வகையில் அமைந்திருக்கின்றன.இந்த அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்வாங்கக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

புதிய அரசியலமைப்பின் தேவை

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன.ஆயினும் அந்தப் பேச்சுவார்த்தைகள் பயனற்றவைகளாக முறிந்து போயின. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பேரின சிங்கள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்டன.அல்லது மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்பட முடியாத வகையில் கிடப்பில் போடப்பட்டன.அது மட்டுமல்லாமல், அரசியல் தீர்வு என்பது சிறுபான்மை இன மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதாக இருக்க வேண்டும்.அரசியலில் அவர்களுக்கான அசைக்க முடியாத – கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இல்லாதொழிக்கப்பட முடியாத வகையிலான அரசியல் உரிமைகளை அளிப்பதாக அமைய வேண்டும்.

இத்தகைய ஒரு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமானால், இலங்கையின் அரசியலமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் தீர்வு குறித்து சிந்தித்தவர்கள் உறுதியாக நம்பினார்கள்.அரசியல் தீர்வு என்பது அதிகாரப் பரவலாக்கலை – அதிகாரங்களை இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள்.இந்த வகையில் எத்தனை பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டாலும், அவற்றில் எட்டப்படுகின்ற இணக்கப்பாடுகள், உடன்பாடுகள் என்பன சட்ட ரீதியாக அரசியலமைப்புக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவும் ஏற்பட்டிருந்தது.இந்தப் பின்னணியிலேயே, யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

இனப்பிரச்சினையை இனிமேலும் இழுத்தடித்துச் செல்ல முடியாது. அதற்கு ஓர் அரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்ற சிந்தனைப் போக்குடைய நிலையில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து, அதனை நிலைநிறுத்துவதற்கான தேசிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேசிய அளவிலான தேவை நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் மத்தியில் முதலில் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை.ஆயினும், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு தனக்கும் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அரசியல் நலன்களுக்காக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை, முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷபயன்படுத்தியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஜனாதிபதிக்குரிய அதிகார்களைப் பயன்படுத்தி காலம் காலமாகத் தானே ஜனாதிபதியாக – ஒரு சக்கரவர்த்தியைப் போல ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட அரசியல் காய் நகர்த்தல்களை அவர்கள் (இப்போதைய ஆட்சியாளர்கள்) விரும்பவில்லை.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறையில் ஆட்சி நடத்துவதற்குப் பதிலாக சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்காக மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.அது மட்டுமல்லாமல், நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையைப் பயன்படுத்தி அரசியல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெற்றிகொள்ள முடியாதவராகத் திகழ்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும். விகிதாசாரத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் மிகவும் உறுதியாகத் தீர்மானித்தார்கள். நாட்டிற்குப் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதன் ஊடாகவே இதனைச் சாதிக்க முடியும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகச் செயற்பட்ட அவர்களுக்குத் துணை புரிந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கமைய, புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு காண்பதற்கு அவசியமான விடயங்களையும் உள்ளடக்குவதற்கு அவர்கள் இணங்கினார்கள்.அரசியல் தீர்வு காண்பதற்குரிய அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் பிரதான நோக்கமாகும்.ஆனால், அரசியல் தீர்விலும் பார்க்க, நிறைவேற்று அதிகாரத்தையும், விகிதாசாரத் தேர்தல் முறையையும் வைத்துக் கொண்டு தமது அரசியல் எதிரிகள் குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ அணியினர் நீண்ட காலம் ஆட்சி நடத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது. அத்தகைய வாய்ப்பினை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.

மேதினம் ஏற்படுத்தியுள்ள திருப்பம்

இத்தகைய ஒரு நிலைமையில்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.அரசாங்கத்தின் அந்தச் செயற்பாடுகள் வெற்றியளிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினர் உள் ளிட்ட, ஏனைய அரசியல் தரப்புக்களைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினராகிய மஹிந்த அணியினர் புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.அரசியலமைப்பில் வேண்டுமானால், திருத்தங்களைக் கொண்டு வரலாம். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை.

தேர்தலில் தோல்வியடைந்தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அதற்கான அடித்தள அரசியல் செயற்பாடுகளை அவர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றார்.பொதுமக்களைப் பெரிய அளவில் அரசியல் ரீதியாகக் கவர்ந்திழுக்கத் தக்க வகையில் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயர் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை.ஊழல் புரிந்தார்கள் என்று கடந்த ஆட்சியில் அதிகாரம் படைத்திருந்த பலர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்கள் சட்டரீதியாகத் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.அதேவேளை, முன்னைய அரசாங்கத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளை இல்லாமல் செய்யத்தக்க வகையிலான நடவடிக்கைகளையோ வேலைத்திட்டங்களையோ புதிய அரசாங்கம் வலுவான முறையில் செயற்படுத்தவுமில்லை.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு போன்ற பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் அரசாங்கத்தினால் தீர்வு காண முடியவில்லை.
அல்லது இந்தப் பிரச்சினைகளில் முன்னைய அரசாங்கத்தின் போது இருந்த நிலைமைகளில் பெரிய மாற்றத்தையும் காட்ட முடியவில்லை.மொத்தத்தில் புதிய அரசாங்கம் சிங்கள மக்களுக்குக் கூட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை.அதேநேரம், சிங்கள மக்களைக் கவரத்தக்க வகையில் அரசியல், பொருளாதாரம், சமூகம் என்பவற்றில் புதிய நிலைமைகளை உருவாக்கவும் இந்த ஆட்சியாளர்களினால் முடியாமல் போயிருக்கின்றது.மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளதன் மூலம் தமிழ் மக்களுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கிவிடப் போகின்றார்கள் என்ற மஹிந்த ராஜபக் ஷ அணியினருடைய அரசியல் பிரசாரங்கள் வலுப்பெற்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் மே தினத்தன்று காலிமுகத்திடலில் நாட்டு மக்களை கடல் அலையாகத் திரட்டிக் காட்டுகின்றேன் என சவால்விட்டு அதற்கேற்ற வகையில் மேதினத்தன்று மஹிந்த ராஜபக் ஷ மக்கள் கூட்டத்தைப் பிரமாண்டமான முறையில் அணிதிரட்டியிருந்தார்.அவருடைய மேதினக் கூட்டத்தில் அணி திரண்டிருந்த அனைவருமே அவருக்கு ஆதரவானவர்கள்.இந்த ஆதரவாளர்களே மஹிந்த ராஜபக் ஷவின் வாக்கு வங்கியின் சொந்தக்காரர்கள் என்று அனுமானிக்க முடியாது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.ஆனாலும், மேதினத்தன்று மக்கள் மத்தியில் தனக்கு உள்ள செல்வாக்கைக் காட்டும் வகையில் மக்கள் கூட்டத்தை அணி திரட்டியிருப்பது, அரசாங்கத் தரப்பினரை, அரசியல் ரீதியாகச் சற்று கவலையடையச் செய்திருக்கின்றது.புதிய அரசியலமைப்பானது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஆகவே அதற்கு ஆதரவளிக்க முடியாது என மஹிந்த ராஜபக் ஷ அந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்த கருத்தும் அரசாங்கத்தைச் சிந்திக்கச் செய்திருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்த நிலைப்பாடு காரணமாக, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்வாங்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது என சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எழுச்சியானது, நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் இருப்பை கேள்விக்கு உள்ளாக்க வல்லது.மக்களின் ஆதரவைப் பெற்ற அவர் எழுச்சியுற்றால், தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு வரநேரிடும்.அத்தகைய ஒரு நிலைமைக்கு உள்ளாக்கத்தக்க செயற்பாடுகளைச் செய்வதற்கு நிச்சயம் அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்காது.மஹிந்த ராஜபக் ஷவின் எதிர்ப்பையும் மீறி, புதிய அரசியலமைப்பை உருவாக்கினால், அதனையே அரசியல் முதலீடாகக் கொண்டு மஹிந்த ராஜபக் ஷ அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற அரசியல் அச்சமே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் அடிப்படையிலேயே சம்பந்தனின் கருத்தும் வெளிவந்திருக்கின்றது.

திருப்பு முனை நிலைமை

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு காணப்படும் என்ற கூட்டமைப்பு தலைமையின் நிலைப்பாடு தளர்வடையும் நிலையிலேயே இப்போதைய அரசியல் நிலைமை காணப்படுகின்றது.அரசியல் தீர்வு காணும் விடயத்தை விட்டு, ஏனைய நிலைமைகளை நோக்கினாலும்கூட, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று காலம் காலமாகத் தமிழ்த்தரப்பினர் குரல் கொடுத்து வந்தனர்.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தக் கோரிக்கை வேகத்துடன் பலராலும் முன்னெடுக்கப்பட்டது. ஐநா மனித உரிமைப் பேரவை மட்டுமல்லாமல், பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும்கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன.தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதற்காகக் குரல் கொடுத்திருந்தது. மக்களை அணி திரட்டி வீதிகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியிருந்தது.ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த வருடம் முன்மொழியப்பட்ட இந்தச்சட்டத்திற்கு இப்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிக்கின்றது. இந்தச் சட்டம் முன்னர் இருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்திலும் பார்க்க பல விடயங்களில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கத்தக்கவை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.புதிய சட்டமானது, நிறைவேற்று அதிகாரத்தை விரிவாக்க வல்லது, பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிக்கத்தக்கது.நாட்டின் பன்மைத்துவத்தைத் திணறச் செய்ய வல்லது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான ஓட்டைகளைக் கொண்டுள்ளது.மொத்தத்தில் மக்களுடைய பல உரிமைகளைப் பாதிக்கத்தக்க வகையிலேயே இந்தப் புதிய பயங்கரவாதச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தச் சட்டத்தில் முக்கியமான சில திருத்தங்களைச் செய்யுமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்த போதிலும், அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய மூன்று விடயங்களையும் அரசு தூக்கி எறிந்துவிட்டு, இந்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது குறித்து கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.

அரசுக்கு ஆதரவளித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை இந்தச் சட்டம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் தூக்கி எறிந்திருப்பதானது, அரசு கூட்டமைப்பைப் பொருட்படுத்தாத வகையில் தனது விருப்பப்படி நடப்பதையே காட்டுகின்றது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் என்று பலதரப்பட்ட பிரச்சினைகளிலும் அரசாங்கம் கூட்டமைப்பைத் தூக்கி எறிந்த நிலையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது.இதனால் மக்கள் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகள் குறித்து சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.அது மட்டுமல்லாமல், தாங்களே வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.அது மட்டுமன்றி கூட்டமைப்பின் வழிநடத்தலுக்குப் பதிலாகப் புதிய அரசியல் வழிநடத்தல் குறித்த சிந்தனையும் தமிழர் தரப்பில் எழுந்துள்ளது.இத்தகைய பின்னணியில்தான் தமிழ் அரசியல் என்பது மிகவும் சிக்கலான ஒரு கட்டத்தில் இப்போது வந்து நிற்கின்றது.அவ்வாறு வந்து நிற்பது மட்டுமல்லாமல் ஒரு புதிய திருப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. அந்தத் திருப்பம் என்ன அதனை ஏற்படுத்தப் போவது யார் என்பது உடனடியாகப் பதில் கிடைக்காத பெறுமதி மிக்க கேள்வியாக அமைந்திருக்கின்றது.
-செல்வரட்னம் சிறிதரன்- ilakkiyainfo.com 07 05 2017

Published in Tamil
06 05 2017

பேச மறந்த சூரியன்

“என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால், நான் விறகாக மாறி அடுப்பெரிக்கப் பயன்படுவேன்; நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால், வெறும் கல்லைப்போல் பொடியாகிவிடமாட்டேன்; தேங்காய்போலச் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; உங்களுக்காகவே பயன்படுவேன்” - இது மு.கருணாநிதியின் பொன்மொழியாகப் போற்றப்படும் வசனம்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள், காங்கிரசல்லாத பிற கட்சிகளின் எழுச்சி போன்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் குறிப்பிடத்தகுந்தவை. அக்காலகட்டத்தின் வரலாறு இங்கு இன்னமும் விரிவாகப் பதிவு செய்யப்படாமலும் பொருட்படுத்தப்படாமலும் இருக்கிறது. தமிழகம் உருவான வரலாறு தெரியாமலே இரண்டு தலைமுறைத் தமிழர்கள் வாழ்ந்தும் மறைந்தும் போயினர். இன்றும்கூட அந்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்போதிருந்த பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம், தமிழ்த்தேசியக் கட்சி, நாம் தமிழர் இயக்கம்(ஆதித்தனார்) உள்ளிட்ட கட்சிகள் வீழ்ந்த நிலையில் தி.க, தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களை மட்டும் முன்னிறுத்திக் கட்டமைத்த வரலாற்றை உருவாக்கியுள்ளன.

1949 ஜூலை 9 அன்று திராவிடர் கழகத் தலைவர் பெரியார் செய்துகொண்ட பொருந்தாத் திருமணத்தைக் காரணமாகக் கொண்டு திராவிட இயக்கத்திலிருந்து வெளியேறிய அண்ணாதுரை, திராவிட நாடு இதழில் ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை, விரட்டப் படுகிறோம்!’ என்றொரு அறிக்கையை வெளியிட்டார். அண்ணாவின் அழைப்பை ஏற்று, 17.09.1949 அன்று சென்னை, பவழக்காரத்தெரு, 7 ஆம் எண் இல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டியின் மூன்றில் இருபங்கிற்கும் மேலான கமிட்டி உறுப்பினர்கள் கூடிய கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் அப்போதைய துணைத் தலைவர் குடந்தை கே.கே. நீலமேகம் தலைமைவகித்தார். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுஅமைப்பைத் தொடங்குவதென்று முடிவெடுத்தனர். அந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை.

திராவிட நாடு 03.07.1949 இதழில் அண்ணா வெளியிட்ட அறிக்கையில் ஈ.வெ.கி. சம்பத், என்.வி. நடராசன், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், சத்தியவாணி முத்து உள்ளிட்ட 29 பேர் கையெழுத்திட்டிருந்தனர். அந்தப் பட்டியலில் கருணாநிதியின் பெயர் இல்லை. 18.09.1949 அன்று ராயபுரம் ராபின்ஸன் பூங்காவில் தி.மு.க வின் துவக்க விழா பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்ட அழைப்பிதழில் கடைசிப் பெயராக எம். கருணாநிதி எனும் பெயர் இருந்தது. மூன்றாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்தான் 1957 தேர்தலில் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் நின்று ஜெயித்தார். இந்தத் தேர்தலில் தி.மு.க மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படவோ தேர்தல் சின்னம் ஒதுக்கப்படவோ இல்லை. எனவே உதயசூரியன், யானை, சேவல், நட்சத்திரம் ஆகிய சின்னங்களில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 112 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, 15 இடங்களில் வெற்றி பெற்றது.

தொடக்க நிலையில் மூன்றாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரின் பின்னாளைய வளர்ச்சி மிக வேகமானது. தாம் கவனம் செலுத்தும் விஷயங்களில் ஆழ்ந்து போகும் குணத்தை அத்தனைப் பெருந்தலைவர்களிடத்திலும் காணக்கூடிய பொதுப்பண்பாகச் சுட்டலாம். ஆனால், ஒரே நேரத்தில் பல நிகழ்வுகளுள் ஆழ்ந்த கவனம் செலுத்தும் அரிய பண்பு கருணாநிதியுடையது. எத்தனை செயல்பாடுகளுக்குள் ஈடுபட்டிருந்தாலும் அங்கே தான் எப்படிக் கவனிக்கப்படுகிறோம், தான் முன்னிலைப்படுவது எப்படி என்பதையும் சேர்த்தே கவனித்து இயங்கும் மனம் அவருடையது. அவரின் அபாரமான வளர்ச்சிக்கு இந்தப் பண்பே அடிகோலியது. எப்போதும் தன்னைச் சுற்றியே அரசியல் இயங்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக தானே இருக்க வேண்டுமென்றும் கருதுபவர். இடைப்பட்ட எவரையும் பொருட்படுத்தாது முன்னேறும் அவ்வாற்றலே இன்றைக்கும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக அவரை உருவாக்கியது. அந்தப் போர்க்களத்தில் சொந்த மகனாக இருந்தாலும் அவரால் விட்டுக்கொடுக்க இயலாது.

எந்தப் பிரச்சனையென்றாலும் அந்த இடத்தில் தான் இருக்க வேண்டுமென்றும் தானே முதலில் எதிர்வினை செய்ய வேண்டுமென்றும் நினைப்பார். அவசரநிலைப் பிரகடனத்தின்போது அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்டது, ஈழத்தமிழர் பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது, இந்திய அரசியலமைப்புச் சட்ட நகலைக் கொளுத்தியது எனப் பல உதாரணங்களைக் காட்ட முடியும். அவருடைய உடல் ஒத்துழைத்தவரையிலும் மனம் உறுதியாக இருந்த வரையிலும் இதில் மாற்றமில்லை. பெரும்வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது, தமிழக அரசு மந்தமாகவே செயல்பட்டிருந்த நேரம். ஆனால் கருணாநிதி, மாவட்டச் செயலாளரை அழைத்து, ‘கோட்டூர்புரம் பாலத்தைப் பார்க்க வேண்டும், சைதாப்பேட்டைக்குப் போக வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதாகச் செய்தியுண்டு. முதல்வராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், பரபரப்பானதொரு நிகழ்வின்போது வீட்டுக்குள் முடங்க முடியாது என்பதே அவரின் முதன்மைப் பண்பு.

கருணாநிதி முன்னின்று நடத்திய முக்கியமான போராட்டங்களில் கல்லக்குடிப் போராட்டத்தைக் குறிப்பிடுவர். திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லக்குடி எனும் ஊர் வடநாட்டுத் தொழிலதிபரான டால்மியாவின் பெயரால் டால்மியாபுரம் என்று மாற்றப்பட்டது. மெல்ல மெல்ல கல்லக்குடி என்ற பெயரே இருட்டடிப்பு செய்யப்பட்டது. மீண்டும் கல்லக்குடி என்ற பெயரையே சூட்ட வேண்டுமென்றும் தென்னாட்டின் மீது வட இந்தியா செலுத்தும் ஆதிக்கத்தை நினைவூட்டுவதாக டால்மியாபுரம் எனும் பெயர் இருப்பதாகவும் கருதிய தி.மு.கவினர் 15 ஜூலை 1953 அன்று பெயர் மாற்றப் போராட்டத்தை நடத்தினர். “தோழர் கருணாநிதி கலைஞர். கதைகளிலேதான் கைவரிசை காட்டமுடியும்; கற்பனைச் சித்திரத்திலேதான் அட்டைக் கத்தியினைத் தீட்டிக்காட்ட முடியும்’ என்று பலர் கேலி பேசுவதாகக் கேள்விப்பட்டேன். தோழர் கருணாநிதி கலைஞராகுமுன் ஒரு நடிகர்; நடிகராவதற்கு முன் ஒரு லட்சிய மாணவர். மூன்று துறையிலே பணிபுரிந்தார் என்பது மட்டுமல்ல - தொல்லையும் பட்டிருக்கிறார். கதையிலே மட்டுமல்ல; கற்பனையோடு என்ற அளவிலே அல்ல; கடமையிலே எடுத்ததை - முன்வைத்த காலைத் தவறவிடமாட்டார் என்ற நம்பிக்கையை நாடு அறியத்தான், நான் அவரை டால்மியாபுரம் போராட்டத் தலைவனாக நியமித்தேன்” என்று பாராட்டினார் அண்ணா.

களத்தில் முன்னேறிய தி.மு.க வினர், டால்மியாபுரம் தொடர்நிலையப் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்ததுடன் தொடர் இருப்புப் பாதையில் படுத்து ரயில் போக்குவரத்தைத் தடுத்தனர். அப்போது காவலர்களுடன் நடந்த கைகலப்பில் இருவர் மரணமடைந்தனர். கருணாநிதி உட்படப் பிற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

உண்மையில் அந்தப் பகுதியில் ஒரே ஒரு ரயில் மட்டுமே அப்போது இயங்கிக்கொண்டிருந்ததாகவும் அந்த வழியாகச் செல்லும் ரயில் கிளம்பிப்போனதை உறுதிசெய்த பிறகே தண்டவாளத்தில் தலையை வைத்தார் கருணாநிதி என்றும் இன்றுவரையில் அந்த நிகழ்வைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் இத்தகைய விமர்சனங்களையும் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டு முன்னேறுபவர் அவரென்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன்மூலமாக, ‘கல்லக்குடி கொண்டான்’ என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

திராவிட இயக்கமே ஒரு பரப்புரை இயக்கமென்பதால், மக்களின் பேராதரவினைப் பெறுவதற்கான அத்தனை ஆர்ப்பாட்டமான செயல்பாடுகளிலும் அக்காலத் திராவிட இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, மொழியுணர்வினைத் தூண்டுதல், அப்போதைய சிறந்த பேச்சாளர்களிடமிருந்து பேச்சுமொழியைக் கைப்பற்றுதல். மக்களை ஈர்த்த அந்த மேடைமொழியே தி.மு.க பிற்காலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கருவிகளில் முதன்மையாக இருந்தது எனலாம். காங்கிரசு அரசின் தவறுகள், அதன்மீது மக்களுக்கு இருந்த கோபம் ஆகியவற்றைத் தங்களின் அடுக்குமொழியால் மக்களிடம் மிகைப்படுத்தி அவர்களின் வெறுப்பைத் தூண்டினர். இந்தி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மாநில சுயாட்சி, மொழியரசியல் என இன்றைக்கு எவையெல்லாம் தி.மு.கவின் அடையாளங்களென்று பேசப்படுகிறதோ அவையெவற்றையுமே அது உருவாக்கவில்லை. அவற்றையெல்லாம் தீவிரமாகப் பேசுவதான பாவனையுடன் வெகுமக்கள் முழக்கமாக மாற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றது. அன்றைய முதன்மை ஊடகங்களான திரைப்படம், இதழ்கள், மேடை ஆகிய அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மேடைப் பேச்சுகள் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இன்றைக்கு அதைப் படிக்குமொருவர் வெகு எளிதாகவே அந்த அடுக்கு மொழியில் படிந்திருக்கும் வெற்றுப்பூச்சை அடையாளங் காண முடியும். அந்த அலங்கார மொழி பற்றிப் பேசும் கண்ணதாசன், அவர்களின் தட்டையான மொழி தன்னையும் பிடித்துக்கொள்ளுமோ எனும் அச்சத்தால் ஒரு கட்டத்துக்குப் பின் கழகத்தவரின் எழுத்துகளைப் படிக்கவில்லை என்று வனவாசத்தில் குறிப்பிடுகின்றார்.

பேசுவதும் எழுதுவதும் மட்டு மன்றி, மற்றவர்களின் எழுத்துகளைச் சற்றே மாற்றித் தனதாக்கிக் கொள்ளும் ஆற்றலுள்ளவர் கருணாநிதி. ‘வீரன் ஒரு முறைதான் சாவான்.கோழை பல முறை சாவான்’ என்ற புகழ்பெற்ற பொன் மொழியை, “வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை” என்று மாற்றிப் பயன்படுத்தினார். பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவதும் ஒருவகை மொழி விளையாட்டு. `ஆண்டவனை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘அது பிரச்சனை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்’ என்று பதிலிறுத்தார்.

1930களிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. முதலில் சைவ அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டு, பின் திராவிட இயக்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. 1957 இல் நடைபெற்ற தி.மு.க இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் நடக்கும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 13, 1957 அன்று, அந்நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிப்பதென்று முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி, நடுவணரசின் இந்தித்திணிப்பை எதிர்த்து முழக்கமிட்டார். “இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு. ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கும் உணவு. தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்புப் போராட்டம், குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாடும் போராட்டம் ஆகியவற்றில் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைதாகிப் பின் விடுதலையாகினர். மாணவர்களிடையே பெரும் கலவரம் வெடித்து, இரண்டு வார காலம் தொடர்ந்தது. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்; நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். அந்தப் போராட்டத்தின் தாக்கத்தால் 1967 தேர்தலில் காங்கிரஸ் வீழ்ந்து, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. மாணவர் தலைவரான பெ. சீனிவாசன், காமராஜரைத் தோற்கடித்தார். அன்று ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்றளவும் தனித்து நிற்க இயலாமல் திராவிடக் கட்சிகளுடன் கூடியே தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.

தமிழக அரசியலில் ஆட்சியைப் பிடிக்க, மொழியரசியல் கை கொடுத்தது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் ஒன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரையிலும் படித்துவிட முடியும் என்ற நிலை உள்ளது. ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, நிர்வாக மொழியாக, வழக்காடு மொழியாகத் தமிழுக்கு அளிக்க வேண்டிய இடத்தை அளியாது செம்மொழி அங்கீகரிப்பை மட்டும் வழங்கி என்ன பயன்? அரசியல்ரீதியாகவும் கல்விப் பின்புலத்திலும் அவற்றை விரித்தோமானால் தனிக்கட்டுரை அளவுக்கு விரியும். 2006 இல் ஆட்சியைப் பிடித்த பிறகு, நடந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய முதல்வரான கருணாநிதி, தமிழகத்தில் உருதுவையும் பாடமொழியாகக் கொண்டு வருவதாக அறிவித்தார். தமிழகத்தின் எல்லையோரங்களில் வாழும் பிற மொழியினருக்காக, தெலுங்கு, கன்னடம், மலையாளமும் மற்றும் மதரசாக்களில் அரபியும் உருதுவும் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில் அவ்வறிவிப்பு பெரும்குழப்பத்தை ஏற்படுத்தியது. அதற்குத் தமிழறிஞர்கள் தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதன்பின் அது அறிவிப்பின் அளவிலேயே நின்று போனது. இப்படி, தான் செல்லுமிடங்களிலெல்லாம் அவர்களின் அபிமானத்தைப் பெற, உடனடி அறிவிப்புகளை மட்டும் செய்துவிட்டு, செயல்படுத்தாமலே கடந்து போவதும் அவருடைய அரசியல் தந்திரங்களிலொன்று.

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பிற்காலத்தில் தன் பேரன் தயாநிதி மாறனுக்கு நடுவணரசில் அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தபோது அவருக்கு இந்தி தெரியுமென்பதால் பதவி கொடுத்தேன் என்றார். கேள்விகளுக்கு அஞ்சாது, எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இப்படியொரு பதிலைத் தந்தவர் பின்னர், இந்தியோ ஆங்கிலமோ அறியாத அழகிரிக்கும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தார்.

தமிழ்மொழியின்மீது மிகுந்த பற்றுக் கொண்ட இயக்கமாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.கவின் நீண்ட ஆட்சியில் தமிழுக்கான வளர்ச்சித் திட்டமென்று நூலகத் திட்டம் தவிர்த்து காத்திரமான திட்டங்களாக எவற்றையும் சொல்ல முடியவில்லை. தமிழகத்தின் கலை, பண்பாடு, அரசியல் சார்ந்து எழுதப்படும் ஆங்கில நூல்களைத் தமிழுக்குப் பெயர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தஞ்சையிலும் அடைபட்டிருக்கும் ஆவணங்களை, ஓலைச்சுவடிகளை நூலாக்கும் முயற்சிகளுமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட கலைக்களஞ்சியம், பேரகராதி போன்ற சீரிய செயல்திட்டங்கள் மறுபதிப்பு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள் போன்ற வரலாற்று ஆய்வுகளுக்கும் அதே நிலை தான். எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ தங்களைத் தமிழுணர்வாளர்களென்ற பிம்பத்துக்குள் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால், கருணாநிதியின் அத்தகைய பிம்பமும் செயல்பாடுகளமற்ற தன்மையுமே அவர்மீதான தமிழறிஞர்களின் கோபத்துக்குக் காரணம்.

ஈழத்தில் நடைபெற்ற தமிழர்க்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி களும் போராடின. தமிழினத் தலைவரென்று தன்னைப் பெருமையாகச் சுட்டிக்கொள்பவர், 1956 தொடங்கி
எப்போதுமே ஈழத்துக்கு ஆதரவு தருவதாகச் சொன்னவர்,

2008 - 09 இனப்படுகொலையின்போது நடுவணரசு அவருடைய ஆதரவிலேயே இருந்தும்கூட எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார். அக்டோபர், 6, 2008 இல் நடந்த மயிலை மாங்கொல்லை மாநாட்டில், “ஈழப் போரைத் தடுக்க முடியவில்லையென்றால் எனக்கு எதற்கு இந்தப் பதவி?” என்றும் முழங்கினார்.ஈழத்தமிழர் நாடற்று அகதிகளானபோதும் தமிழக மீனவர்உரிமை பறிக்கப்பட்டபோதும் 1974 இல் ஓர் உடன்பாட்டின் படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோதும் அவர் பேசினார்; முழங்கினார்; செயல்படவில்லை.இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்று திடீர் உண்ணாவிரதம் தொடங்கினார். நிதியமைச்சர் ப. சிதம்பரம் அனுப்பிய செய்தியின் பேரில்

போர்நிறுத்தம் வந்துவிட்டதாகச் சொல்லி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார். மனித உரிமை மீறல், இனப்படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா சபையின் ஆய்வறிக்கை கூறியபோதும் தனது அணியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி மகிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கச் செய்தார். பார்வதி அம்மாளின் சிகிச்சைக்குத் தன் செல்வாக்கைப் பயன்படுத்தாதவர், தன் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி
பெற நடக்கமுடியாத நிலையிலும் தில்லிக்குப் பறந்தார்.

அவருடைய ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களைப் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அன்றைய ஆட்சியில் கருணாநிதி எவ்வாறு புதியபுதிய உத்திகளின் மூலமாக ஊழலில் ஈடுபட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியது. இந்திராகாந்தி, “விஞ்ஞானரீதியாக ஊழல் செய்தவர்” என்று இவரைச் சிறப்பித்துப் பேசியதும் பின்னர் அவருடனே கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தபிறகு நடவடிக்கை எடுக்காமல் விடுவித்ததும் வரலாறு. அது, இன்றைக்குக் கோடிகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல், பி.எஸ்.என்.எல் ஊழல் என்று தனி நூலளவுக்கு விரியும். அவர் மட்டுமல்லாது அவரைச் சுற்றியிருந்த பிற அமைச்சர்களுமே தத்தம் மாவட்டத்தின் செல்வாக்கைக் கொண்டு குறுநில மன்னர்களைப்போல் கோலோச்சி ஊழல் செய்தனர்.

இந்தியாவிலேயே முதல்முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தியதும் தமிழ்நாடு ஏழை எளிய மக்களுக்கு இலவசக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை. டைடல் மென்பொருள் பூங்கா, உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைத்தது ஆகியவை தமிழகத்தில் ஐ.டி. துறை வளர்ச்சி அடைய உதவியது. ஆண்களுக்குச் சமமாக சொத்துரிமை, வேலைவாய்ப்பில் 30 % இட ஒதுக்கீடு என்று பெண்களுக்கான முன் னேற்றத் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டன. விவசாயிகள், நுகர்வோர் நேரடியான கொள்முதலுக்காக, இடைத்தரகர் நீக்கப்பட்ட உழவர் சந்தைத் திட்டம் 1999 இல் தொடங்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம் கட்டுவது, குமரி முனையில் வள்ளுவர் சிலை வைப்பது போன்ற கலைச்செயல்களில் ஈடுபாடு கொண்டவர். ஆனால், தம் நீண்டகால ஆட்சியில் மக்களுக்கான தொழில், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் கோட்டை விட்டார். மக்களை இலவசங்களுக்கு அடிமைப்படுத்துவதன் தொடக்கம் திராவிட ஆட்சியில் நிகழ்ந்தது. கருணாநிதிக்குப் பின்னால் வந்தவர்களும் கருவூலத்தைப் பற்றிய கவலையின்றி அதனை விஸ்தரித்தபடியே சென்றதுடன் உழைப்பை மறந்த தலைமுறையொன்றை உருவாக்கியுள்ளனர். திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்று தேசிய அளவில் அறிமுகப்படுத்தித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தனர்.அனைவரும் அர்ச்சகராகும் திட்டமென்று ஒன்றைக் கொண்டுவந்து சத்தமில்லாமல் ஓரமாய் வைத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். சாதிக்கு எதிரானவரென்று தன் குடும்பத்தை உதாரணமாகச் சொல்லிக்கொண்டு சாதி அரசியலை உரமிட்டு வளர்த்தார். எல்லாவற்றுக்கும் உடனுக்குடனே எதிர்வினை செய்பவர், உடுமலைப் பேட்டை சங்கர் கொலையான பின்னர், இரண்டு நாட்கள் கழித்து அதைக் கண்டித்ததை மறந்துவிட முடியாது. சாதி சமயப் பூசல்களை ஒழிக்க நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்தார். ஆனால் அதையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கட்டவே முடிந்தது.

நீண்ட நெடுங்காலமாக அரசியல் செய்துவரும் தேர்ந்த அரசியல்வாதி என்றும் ராஜதந்திரி என்றும் அரசியலாளர்களால் பாராட்டப்படுபவர் கருணாநிதி. பிற்காலத்தில் அது அவருடைய குடும்ப ஆதிக்க அரசியலுக்கு உதவியது. ஒரு கட்டத்தில் அவரையும் மீறி, அவருடைய கவனத்துக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.

எம்.ஜி.ஆர் தொடங்கிவைத்த பகை அரசியலைப் பின்னாளில் பேரளவில் ஜெயலலிதா வளர்த்தெடுத்தார். திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்த தி.மு.கவும் அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.கவும் மக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் வெறுப்பரசியலை ஊதிப் பெருக்கின. அரசியலுக்கு வெளியே சந்திக்கும்போது மாற்றுக்கட்சிகளிடமும் நட்புப் பாராட்டும் நல்மரபு இன்றைக்குத் தமிழகத்தில் இல்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் விட அரசியல் நாகரிகம் அறிந்தவர், மாற்றுக்கட்சிகளை மதிப்பவர் என்று கருணாநிதியைக் கூறுவர். அதில் உண்மையில்லாமல் இல்லை. தன்னுடைய தனிமனித விருப்பு வெறுப்புகளை நகர்த்திவிட்டு ஆட்சி நடத்துவதும் அரசியல் செய்வதும் கருணாநிதியின் பண்பு. அவரே, பிற்காலத்தில் ஜெயலலிதாவிடமிருந்து அவருடைய ஆடம்பரப் பண்புகளை எடுத்துக்கொண்டார்.வேண்டியபோது அரவணைத்துக் கொள்வதும் வேண்டாதபோது மிகக் கடுமையாக விமர்சிப்பதும் கருணாநிதியின் மற்றொரு முகம். 1957இல் சட்டப் பேரவையில் நுழைந்தவுடன் தி.மு.க. வைத்த முதல் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ‘பத்து லட்சம் பக்தவத்சலம்’ என்பது. நிரூபிக்காமலே மேடையில் குற்றம் சாட்டி அவரை இகழ்ந்தனர். கம்யூனிஸ்ட்தோழர்களுடன் உறவு வைக்கும்போது தோழர் பி. இராமமூர்த்தியைப் புகழும் கருணாநிதி, உறவு முறிந்த மறுகணம் நொண்டிப் பார்ப்பான் என்று சொல்லவும் தயங்க மாட்டார். இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா போன்ற பெண் அரசியல்வாதிகளைப் பற்றிய அவருடைய சொற்கள் சொல்லுந்தரமன்று.

1957 தொடங்கி 2016 வரையிலும் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியே இல்லாது வெற்றி பெற்ற ஒரே தலைவர் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு மக்கள் அபிமானத்தைப் பெற்றவர் அவர். தி.மு.கவின் பிற தலைவர்கள் அறிவுஜீவிப் பிம்பத்திற்கு ஆசைப்பட்டபோது மக்களுடன் நெருங்கித் தம்மை மக்கள் தலைவராகத் தகவமைத்துக்கொண்டார். உடல்நலமில்லாது இத்தனை மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் முன்னைப்போல் எழுந்து வந்து முரசொலியில் உடன்பிறப்புக்குக் கடிதம் எழுத மாட்டாரா என்று ஏங்கும் தொண்டர்கள் ஏராளம். எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ மக்களின் அன்பைப் பெற்ற இத்தலைவர்களின் மனம் முழுக்க முழுக்க அரசியல்மயப்பட்டது என்று கூற இயலாது. ஆனால், கருணாநிதி 24 X 7 நேர அரசியல்வாதி. அவரும் திரைத்துறையில் இருந்தவர்; ஆயினும் அவருடைய மனம் எப்போதும் அரசியலில் தோய்ந்திருந்தது. அவருடைய எழுத்துகளிலும் அதுவே வெளிப்பட்டது. சட்டசபைக்குப் போகாமல் இருந்தாலும் எத்தனைவிதமான அலைகள் அடித்தாலும் வெற்றியின் பக்கத்திலேயே அவர் இருந்தார். காரணம், மக்கள் அவர்பக்கம் நின்றனர். முதல்வராக முடியாமல் அவரை வீழ்த்தியது அவருடைய குடும்ப அரசியலே அன்றி மக்களல்லர்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள், மக்கள்நலனை முதன்மைப்படுத்திய செயல்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தனரேயன்றி அவர்கள் தங்களை எங்குமே முன்னிறுத்திக் கொள்ளவில்லை. அதுவொரு அரசியல் காலம். ஆனால் காங்கிரசிலேயே தன்னையொரு பிம்பமாக வடிவமைத்துக் கொண்டவர் காமராசர். அதனாலேயே ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சத்தியமூர்த்தி, ராஜாஜி, சி. சுப்பிரமணியம் போன்றோர் மறக்கப்பட்டபோதும் காமராசர் மக்கள் மனத்தில் இன்றும் வாழ்கிறார். பிம்ப அரசியலை முதன்மையாக வைத்து முன்னகர்ந்தவர்களில் முதன்மையானவர் கருணாநிதி. திரைத்துறைப் பிம்பத்தின் துணையுடன் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதன் பின்னரே தங்கள் அரசியல் பிம்பத்தை வளர்த்தெடுத்தனர்.

தான் செய்ததை எங்காவது சொல்லிக்காட்டி விடும் குண விசேஷம் இவருடைய தனிச்சிறப்பு. இவரளவுக்கு மற்ற தலைவர்கள் கவனத்தில் வைத்திருப்பார்களா என்பது ஐயமே! அதில் என்னுடைய தனிப்பட்ட அனுபவமொன்று, ம.பொ.சியின் நூற்றாண்டு விழாவில் அவருக்குச் சிலை வைப்பதாக அறிவித்ததை ஐந்து வருடங்கள் கழித்து நிறைவேற்றினார் கருணாநிதி. தியாகராய நகர் நாற்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சிலையைத் திறந்துவைத்துப் பேசுகையில், அவர் யார் யாருக்கெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பட்டியலிட்டதுடன் பரலி சு. நெல்லையப்பர், 1960களில் உதவி கேட்டு அவருக்கு எழுதிய கடிதமொன்றைத் தேடியெடுத்துப் படித்துக் காண்பித்தார். மிகுந்த சுறுசுறுப்பும் உழைக்கும் ஆர்வமும் கொண்டவர். அதற்காக வாழ்வின் பிற்பகுதியில் தன் வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றிக் கொண்டவர். “அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும். யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாயிருந்தால், அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள். கல்லிலும் முள்ளிலும் கட்டாந்தரையிலும் அடித்து அவுட் ஆகாமல் பந்து கோலுக்குள் நுழைந்திட வேண்டும். கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி தோல்விகள் இயற்கைதான். எனினும் விடா முயற்சியும் கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை” என்று ‘நெஞ்சுக்கு நீதி’யின் ‘என்னுரை’யில் குறிப்பிடுகின்றார். விடாமுயற்சியுடனும் ஓயா உழைப்புடனும் தோல்விகளால் துவளாமலும் துவண்டாலும் மீண்டும் எழுவதையுமே தன் வாழ்முறையாக்கிக் கொண்டவர். ஒருமுறை, புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அதைச் சரிசெய்வதற்கான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு, தகவல் வருவதற்காக இரவு 2.30 மணி வரையிலும் தலைமைச் செயலகத்தில் காத்திருந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கல்லறையிலும்கூட, ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று எழுதிவைக்கும் விருப்பத்தையும் ‘நெஞ்சுக்கு நீதி’யின் என்னுரையிலே வெளிப்படுத்தியிருப்பார்.

பிப்ரவரி 14 அன்று முகநூலில் காதல் வாழ்த்துகளுக்கு இணையாக கருணாநிதி பற்றிய நினைவுகள் பகிரப்பட்டிருந்தன. காதலர் தினத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் ஒரே தலைவர் கலைஞர்தான் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தபிறகே காரணம் விளங்கியது. இந்த ஆண்டு அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வாழ்த்தவில்லையென்பதும் கருணாநிதி விரும்பியபடியே ஒரு செய்தியாகிவிட்டது.உடல்நலம் குன்றியிருக்கும் 92 வயது கருணாநிதிக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏதும் இல்லை. மூப்பின் காரணமாக ஏற்படும் மறதி, உணர்வுக்குறைவு, பேச இயலாமை, கால் மூட்டு வலி ஆகியவற்றால் அவதிப்படுகிறார். தான் வளர்த்த கட்சியில் தன் குடும்பத்தினரால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களே அவருடைய நோய்மையின் பெருந்துயரம். ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து, தமிழ்நாட்டில் பெரும் சிக்கல்கள் தொடர்ந்திருக்கையில், எதையும் அறியாதவராய் கோபாலபுரம் இல்லத்து மாடியறையில் முடக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர், நினைவுகள் குறைந்து அசைவுகள் மறந்தவராய் இருக்கிறார். எழுதியெழுதிக் களைத்த அந்தக் கைகள் இன்று எழுத மறந்திருக்கின்றன. ஆனாலும் மாடியின் ஒரு முனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவர் உதய சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

kalachuvadu.com april 2017

Published in Tamil