29 08 2017

அறிந்தும் அறியாமலும் - 13: ஒன்றே இன்னொன்று

சுப வீரபாண்டியன்

கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்பதெல்லாம், கடவுள் உண்டு, இல்லை என்னும் வாதத்தின் வேறு பெயர்களே ஆகும். காலந்தோறும், நாடுகள் தோறும் இவ்வாதம் முடிவற்றதாகத் தொடர்ந்துகொண்டே உள்ளது. ‘உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்னும் சமரசப் போக்கும், "நாங்கள் கடவுள் என்கிறோம், நீங்கள் இயற்கை என்கிறீர்கள். விடுங்கள் இயற்கைதான் கடவுள்" என்று ஒத்துப்போகும் போக்கும், ‘நழுவல் போக்குகளாக'ச் சிலநேரம் எழுவதுண்டு. திருமூலரின் ‘அன்பே சிவம்' என்னும் பாடல் வரியை ஏற்றுக் கொள்வர் சிலர். "கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை விடுவோம், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குதானே?" என்று கேட்டு மறிப்பார் சிலர்

இயற்கை, அன்பு, சக்தி முதலான எந்த ஒரு சொல்லும், ‘கடவுள்' என்னும் கோட்பாட்டிற்குப் பொருந்திவரக் கூடிய, அதற்கு இணையான சொல் ஆக முடியாது. வாதத்தைத் தொடர விரும்பாதவர்களும், இயலாதவர்களும் ஏற்றுக்கொள்கின்ற ஓர் இடைநிலை ஏற்பாடுதான் அது! நாம் ஆயிரக்கணக்கான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்புடையவர்கள். அவற்றுள் ஒன்றாகவே ‘அன்பு' என்னும் உணர்ச்சி உள்ளது. அந்த ஒன்று மட்டுமே எப்படிக் கடவுளாக மாறும்? அப்படியானால் மற்ற உணர்ச்சிகளுக்கெல்லாம் என்ன பெயர்? மேலும், அன்பே கடவுள் என்றால், அறிவுக்கு என்ன பெயர்? அவ்வாறுதான் ‘சக்தி' என்பதும்! சக்தி என்றால் தமிழில் ஆற்றல். உலகில் உள்ள பொருள்(matter)களிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது. பொருளுக்கும், ஆற்றலுக்கும் (energy) உள்ள தொடர்பையும், அவை எந்த விகிதத்தில் எப்படி ஒன்று இன்னொன்றாக மாறுகின்றது என்பதையும் (E=mc2) தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து 1905ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் (Einstin)வெளியிட்டார். அதனைத்தான் பொதுச் சார்பியல் தத்துவம் (General Theory of Relativity)என நாம் அழைக்கின்றோம். பிறகு எப்படிப் பொருள் இல்லாமல் ஆற்றல்(சக்தி) மட்டும் கடவுளாகிவிடும்?

‘இயற்கைதான் கடவுள்' என்பது, ஏற்றுக்கொள்ளக் கூடிய கூற்று போலத் தோன்றும். ஆனால் அதுவும் பிழையானதே! இறை நம்பிக்கையாளர்கள், மழையை, நெருப்பை, காற்றைக் கடவுள் என்று சிலவேளைகளில் கூறினாலும் (வருண பகவான், வாயு பகவான்), இவற்றையெல்லாம் கடவுள்தான் நமக்குத் தருகின்றார் என்றும் நம்புகின்றனர். பூமி, வானம், பேரண்டம் எல்லாவற்றையும் கடவுள்தான் படைத்தார் என்கின்றனர். அதாவது இயற்கையையே இயக்குகின்ற, இயற்கையை விஞ்சிய ஆற்றல் (Super natural power) ஒன்று இருப்பதாக எண்ணுகின்றனர். பிறகு எப்படி அவர்கள் இயற்கையைக் கடவுள் என ஏற்க முடியும்?

பேரண்டம் (Universe), உலகம், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்தும், அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறும் படைப்புக் கொள்கையை (Theory of Creation) நம்புவோரும், எதுவும், யாராலும் படைக்கப்படவில்லை, இயற்கையாக ஒன்று, இன்னொன்றாக மாறி வளர்ந்த வளர்ச்சியே உண்மையானது என்று கூறும் பரிணாமக் கொள்கையை (Theory of Evolution)ஏற்போரும், ஒரு நாளும் ஒன்றுபட முடியாது. இவ்விரு கருத்துகளும், இரு துருவங்களாகவே நிற்கும்!

"கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை. மாறாக, மனிதர்களே கடவுளைப்படைத்தார்கள். அதாவது, மனித மூளை என்னும் ‘பொருளில்' இருந்து உருவான ‘கருத்து'தான் கடவுள். ஆதலால், பொருள்தான் முதலில் தோன்றியது. கடவுள் என்னும் கருத்து பின்னால் தோன்றியது" என்பதே பொருள் முதல் வாதம் (Materialism). "குயவர் இல்லாமல் பானை வர முடியுமா? தச்சர் இல்லாமல் நாற்காலி வர முடியுமா? எந்த ஒன்றும், ஆக்குவோன், படைப்போன் இல்லாமல் தானே உருவாக முடியாது. உலகமும் அப்படித்தான். படைத்தவன் இல்லாமல் தானே வந்திருக்க முடியாது. அந்தக் கடவுள் சிந்தனை(கருத்து)தான் முதலில்! பொருள்கள் எல்லாம், அந்தக் கருத்திலிருந்து பிறந்து வளர்ந்தவையே" என்று கூறுவது கருத்து முதல் வாதம்(Idealism). கடவுள் என்று கூறாமல், பிரம்மம், ஆன்மா(பரமாத்மா, ஜீவாத்மா) என இரண்டு சொற்களைக் கூறி, அவை இரண்டுமே ஒன்றுதான்(‘அஹம் பிரம்மாஸ்மி') என்கிறது ஓர் உபநிடதம். "உலகம் ஒரு மாயை. எல்லாம் வெறும் தோற்றம். ஆத்மா ஒன்றே உண்மை. பிரம்மமும், ஆத்மாவும் இரண்டில்லை, ஒன்றேதான்" என்றார் ஆதிசங்கரர். இதனைத்தான் அத்துவைதம் (துவைதம் = இரண்டு, அ+துவைதம் = இரண்டில்லை) அல்லது மாயாவாதம் என்று கூறுகின்றனர். இந்த அத்வைதக் கொள்கையைத்தான், தன் வாழ்நாள் முழுவதும், வெவ்வேறு வடிவங்களில் உயர்த்திப் பிடித்தார் விவேகானந்தர். "தெய்வம் நீ என்று உணர்" என்றார் பாரதியார். ஆக மொத்தம், யாக்ஞவல்லீயரின் உபநிடதக் கொள்கைதான், இந்து மதத்தின் கருத்து முதல் வாதமாகக் காட்சியளிக்கிறது.

‘உலகே மாயம்' என்னும் கோட்பாட்டை உலகத்திற்கு அறிவித்த யாக்ஞவல்லீயர், ஜனக மன்னருக்கும் அதனை எடுத்துரைத்தாராம். அவரின் அறிவுத்திறன் கண்டு வியந்த மன்னர், 10 ஆயிரம் பசுமாடுகளையும், ஓர் இலக்கம் (ஒரு லட்சம்) பொற்காசுகளையும் பரிசாக அவருக்கு அளித்தாராம். "பசு மாடுகள், பொற்காசுகள் எல்லாம் மாயை. எனக்கு எதற்கு இந்த மாயத்தோற்றங்கள்?" என்று கேட்டு யாக்ஞவல்லீயர் அவை அனைத்தையும் புறக்கணித்துவிடவில்லை. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, இரண்டு பெண்களை மணந்து கொண்டு இன்பமாக வாழ்ந்தாராம். ‘உலகே மாயம், வாழ்வே மாயம், பொருள்கள் எல்லாம் மாயம்' என்று எழுதலாம். பேசலாம். ஆனால் பொருள்கள் இன்றி இவ்வுலகில் எவர் ஒருவராலும் வாழ முடியாது. அது சரி...ஆனால், பொருள்கள் எல்லாம் கடவுளால் படைக்கப்பட்டவைதானே என்கின்றனர், கருத்து முதல்வாதிகள். பொருள்கள் படைக்கப்பட்டவைகளாக இருந்தால், அவை அழியக்கூடியனவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் தர்க்கம் (logic).

எந்தப் பொருளையும், யாராலும், கடவுள் உள்பட அழிக்க முடியவில்லை என்பதுதானே உண்மை. சிவபெருமான் ‘நெற்றிக் கண்ணைத்' திறந்து எதிரில் உள்ளவரைச் சாம்பலாக்கி விட்டதாகப் புராணம் சொல்கிறது. சாம்பலும் இந்தப் பிரபஞ்சத்தில்தானே உள்ளது. முற்றுமாக அழிந்துவிடவில்லையே! திடப்பொருளைத் திரவமாக்கலாம், திரவத்தைக் காற்றாக(வாயு) ஆக்கலாம். வடிவ மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியுமே அல்லாமல், ஒன்றுமே இல்லாத சூனியமாக்கிவிட முடியுமா? அப்படியானால் எந்த ஒன்றையும் முற்றாக அழிக்க முடியவில்லை என்றுதானே பொருள். அழிக்க முடியாத ஒன்று எப்படி ஆக்கப்பட்டிருக்கும்? சூனியம்(வெறுமை) ஆக்கமுடியாத ஒன்று, எப்படிச் சூனியத்திலிருந்து வந்திருக்க முடியும்? நாம் காணும் பொருள் அனைத்தும், ஏற்கனவே உலகில் இருந்தவைதான். புதிதென்று ஏதும் இல்லை. ஒரு வீட்டில் புதிய கதவொன்று வந்துள்ளதென்றால், எங்கோ ஒரு பழைய மரம் வெட்டப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம். ஒன்றே இன்னொன்று, ஒன்றிலிருந்து இன்னொன்று, ஒன்றுக்காக இன்னொன்று இப்படித்தான் உலகம் இயங்குகின்றது.

உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வடிவத்திலிருந்து, இன்னொரு வடிவத்திற்கு மாறுகின்றன. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுகின்றன. மற்றபடி உருவாக்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை. நிகழ்வதெல்லாம் உருமாற்றமும், இடமாற்றமுமே! இவ்விரு மாற்றங்களுக்கும் மனித உழைப்பே அடிப்படையாக உள்ளது. இந்த அடிப்படையில், உலகில் உள்ள அனைத்தும் கடவுளால் ஆக்கப்படவில்லை, மனித உழைப்பினால் ஆக்கப்படுகிறது என்னும் கோட்பாட்டை, 1848இல், சமூக விஞ்ஞானிகளான கார்ல் மார்க்சும், ஃபிரெடரிக் எங்கெல்சும் முன்வைத்தனர். ‘இயக்கவியல் பொருள் முதல்வாதம்' (Dialectical Materialism)என்று அத் தத்துவத்திற்குப் பெயர் சூட்டினர். அவர்களுக்கு முன்பே, அதற்கு வித்திட்ட ஜெர்மானியத் தத்துவாசிரியர்கள் இருவரை நாம் மறக்காமல் குறிக்க வேண்டும். ஒருவர், ஃபிரடெரிக் ஹெகல் (Fredrich Hegal - 1770 -1831). இன்னொருவர், ஃபாயர்பாக் (Feuerbach - 1804 - 1872)தத்துவத் துறையில், இவ்விருவரின் கொடையும் மிகப் பெரியது.

அறிஞர் ஹெகல்தான், இயக்கவியல் சிந்தனையை மிகத் தெளிவாக வெளியிட்டவர். "உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதனால் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கும். இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது" என்னும் அரிய செய்தியை அவரே வெளியிட்டார். ஆனால் இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் கடவுளே என்று நம்பிய கருத்து முதல்வாதியாக அவர் இருந்தார். கடவுளை மறுத்துப் பகுத்தறிவுக் கருத்தைச் சொன்னவர் ஃபாயர் பாக். அவர் இறுதியாக ஆற்றிய உரையின் சில பகுதிகளை, எழுத்தாளர் ஜவஹரின் நூல் (கம்யூனிசம் நேற்று & இன்று & நாளை) நமக்குத் தமிழில் தருகிறது. இதோ அவ்வரிகள்: மனிதர்களைக் கடவுளின் நண்பர்களாக இருப்பதிலிருந்து, மனிதர்களின் நண்பர்களாக நம்பிக்கைவாதிகளாய் இருப்பதிலிருந்து, சிந்தனையாளர்களாக பிரார்த்தனை செய்பவர்களிலிருந்து, உழைப்பவர்களாக சொர்க்கத்துக்கு மனுப் போடுபவர்களிலிருந்து, இந்த உலகத்தின் மாணவர்களாக பாதி மிருகம், பாதி தேவதை என்று ஒப்புக்கொள்ளும் கிறித்துவர்களிடமிருந்து, மனிதர்களாக, முழுமையான மனிதர்களாக ஆக்குவதையே என் கடமையாக் கொண்டுள்ளேன்". இவ்வாறு இயங்கியலை ஹெகலும், பொருள்முதல் வாதத்தைப் ஃபாயர்பாக்கும் முன்வைக்க, இரண்டையும் செழுமைப்படுத்தி, ஒருங்கிணைத்து (synthesis) ‘இயங்கியல் பொருள்முதல் வாதத்தை' இவ்வுலகிற்கு அளித்தனர், மார்க்-சும், எங்கெல்சும்! ( சந்திப்போம்) tamil.oneindia.com 24 07 2014

Published in Tamil

25 08 2017

நல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்'

அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் நிலையில் கொண்டாட்டம் எதுவும் இருக்கவில்லை. அது தொடர்பாக அரசாங்கத் தலைவர்கள் அபூர்வமாகவே குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், 2015 தேர்தல்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான இயக்கத்தின் முன்னணியில் நின்ற சிவில் சமூகத் தலைவர்கள் சத்தியாக்கிரக வடிவத்தில் பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இரு வருடங்களுக்கு முன்ன் அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழிகளை நினைவுபடுத்துவதற்காக இந்த சத்தியாக்கிரக வடிவத்திலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எவ்வாறாயினும், ஏற்றுக் கொள்வதற்கான சாதகமான பெறுபேறுகள் பலவற்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவற்றில் பிரதானமானது, இன சிறுபான்மையினர் மத்தியிலான உறவுகளில் ஏற்பட்ட மேம்பாடாகும். அத்துடன் அரசாங்க மட்டத்தில் அச்ச உணர்வு குறைந்து இருக்கின்றமையும் முன்னேற்றமாக காணப்படுகிறது.

புதிய அரசாங்கத்தின் நூறுநாள் நிகழ்ச்சித் திட்டத்தில் 19 ஆவது திருத்தம் முக்கியமான விடயமாக காணப்பட்டது. அரசாங்கத்தின் கிளைகளுக்கிடையிலான வேறுபட்ட அதிகாரங்களை உறுதிப்படுத்தவதாக அந்தத் திட்டம் அமைந்திருந்தது. அத்துடன், நீண்டகாலமாக அரசியல் சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமூலம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.தகவல் உரிமைச் சட்டமானது அரசாங்கம் அதிகளவுக்கு வெளிப்படைத் தன்மையையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் கொண்டிருப்பதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளது.அதேவேளை பொது நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சிவில் சமூகத் தலைவர்கள் அரசாங்கம் அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். நிறைவேற்றப்படாமல் இருக்கும் உறுதிமொழிகளை ஞாபகமூட்டுவதற்காக முன்வைத்திருந்தனர்.இந்நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அது தொடர்பாக அதிகளவுக்கு

ஊடகங்களில் பிரபல்யப்படுத்தப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தை உருவாக்குவதற்கான அதிகாரத்தை அதிகளவுக்கு அரசியல்வாதிகள் கொண்டிருப்பதால் அவர்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன என்பதே காரணம் என்பதை சிவில் சமூகத்திற்கு இது நினைவூட்டுவதாக அமைந்திருக்கின்றது.நல்லாட்சியின் விழுமியங்களை நிலை நிறுத்தும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆற்றலானது அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த விடயம் அவர்களின் நோக்கம் இழக்கப்பட்டிருக்கவில்லை என்பதை சாதகமான முறையில் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
சிவில் சமூகத்தின் அரங்கில் ஆளும் அரசியல்வாதிகள் இணைந்து கொள்ள தயாராக இருக்கும் தன்மையானது சிவில் சமூகத்தின் சாதகமான வகிபாகத்தை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற போதிலும் பல விடயங்களில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க வேண்டிய தன்மையை கொண்டிருக்கின்ற போதிலும் அரசாங்கத்துடன் செயற்படுவதற்கு சிவில் சமூகம் நாடியிருப்பதை இது காண்பிக்கின்றது. வேறு மாற்று வழியை அவர்கள் பார்க்காததால் இதனை அவர்கள் நாடியுள்ளனர்.இதுவரை அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அதாவது அரசாங்கத்திற்கு மாற்றீடாக அமையக்கூடியவை நல்லாட்சியின் விழுமியங்கள் தொடர்பாக ஆர்வமெதனையும் காண்பித்திருக்கவிலை. அத்துடன், சர்வதேச தரத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் மனித உரிமைகளை நிலை நிறுத்துதல் போன்றவற்றிலும் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.

கடந்த அரசாங்க காலத்தில் இவை யாவுமே மீறப்பட்டிருந்தன. ஆனால், முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள் இப்போது அவற்றை மிக இலகுவாக மறுப்பார்கள். தாங்கள் நல்லாட்சியின் விழுமியங்களையும் விதிமுறைகளையும் மீறியிருந்தார்கள் என்பதை அவர்கள் சாதாரணமாக மறுத்துவிடுவார்கள்.குறிப்பாக கூட்டு எதிரணியின் தலைவர்கள் கடந்த காலத்தில் தாங்கள் மிகையாக மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து எந்தவொரு கவலையான உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. அத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் நல்லாட்சிக்குமான மாற்றுத் திட்டம் ஒன்றுடன் முன்வருவதற்கும் அவர்கள் தவறியுள்ளனர்.

மூன்றாவது வருடம்
தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு சிவில் சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் பரிசீலனைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் தனது வாக்குத் தளத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், தனது அரசியல் எதிராளிகளை பலவீனப்படுத்துவதையும் நாடியிருக்கின்றது.சிவில் சமூகத்தைப் போன்றல்லாமல் நல்லாட்சி உறுதிமொழிகள் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கை காணப்படுகிறது. அரசியல் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியப்பாட்டை எவை கொண்டிருக்கின்றனவோ அவற்றுக்கு அப்பால் செல்வதற்கு அரசியல் தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்.அரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்றாவது வருடம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.தே.க.வும் சு.க.வும் ஒன்றாக அரசாங்கத்தை ஆரம்பித்து மூன்று வருடம் ஆரம்பிக்கும் நிலையில் கடந்த தேர்தல்களின் போது அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்பதே கேள்வியாக காணப்படுகிறது.
தேர்தல்களுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் மக்களுக்கு சிறப்பானவற்றை செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இப்போது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பிலும் பார்க்க அச்சமயம் அதிகமாக காணப்பட்டது. இன நெருக்கடிக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கத்தின் உறுதிப்பாடுகள், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல், அதிகளவுக்கு காணப்படும் ஊழல், மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற விடயங்களில் குறைந்தளவே தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் ஊழல் தொடர்பான பதிவுகள் மற்றும் மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விவகாரங்களில் நலன்களின் முரண்பாடு போன்ற விடயங்கள் குறித்து விமர்சனத்துக்கு அரசாங்கம் இலக்காகியிருந்தது. இதன் விளைவாக வெளிவிவகார அமைச்சர் இராஜிநாமா செய்திருந்தார். எவ்வாறாயினும், தனது சொந்த உறுப்பினர்களை விசாரணை செய்யும் பாதையில் அரசாங்கம் செல்வதற்கான சாத்தியப்பாடு இல்லை.அத்துடன், தனது அரசியல் எதிராளிகளை வெற்றிகரமான முறையில் அரசாங்கத்தினால் விசாரணை செய்யக் கூடியதாக அமையுமா? என்ற கேள்வியும் காணப்படுகின்றது. இதேபோன்று அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாகவும் அரசாங்கம் ஒற்றையாட்சி முறைமை அல்லது பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமையான இடத்தைக் கொண்டிருத்தல் போன்ற விடயத்துக்கு அப்பால் செல்ல முடியாது. அதாவது அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க விரும்பினால் இதற்கு அப்பால் செல்ல முடியாது.

துரதிர்ஷ்டவசமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இப்போது வழங்கப்படுவதற்கு கடினமானவையாக காணப்படுகின்றன. இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் விடயமே அரசாங்கத்தின் அதிகளவுக்கு ஏமாற்றமளிக்கும் தோல்வியாக காணப்படுகின்றது. பிளவுபட்ட கடந்த காலத்திலிருந்தும் பகிர்ந்து கொள்ளும் எதிர்காலத்திற்கு செல்வதற்கான தன்மையை கொண்டிருப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கமானது இந்த சந்தர்ப்பத்தை கொண்டிருந்தது. ஐ.தே.க.வும் சு.க.வும் தமது முன்னைய பதவிக் காலங்களின் போது இன நெருக்கடிக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு இணங்கியிருந்தன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் அதிகாரத்தில் இருந்த போது யோசனைகளை முன்வைக்கக்கூடியதாக இருந்தது. இப்போது இக்கட்சிகள் ஒன்றிணைந்திருக்கும் நிலையில் இணைந்த தீர்வை முன்வைப்பதற்கான சகல சாத்தியப்பாடும் காணப்படுகின்றது. தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திலுள்ளோருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் ஊடாக இணைந்த தீர்வை காண்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

விரயமாக்கப்பட்ட வாய்ப்பு
இன நெருக்கடியின் வரலாற்றின் அடிப்படையில் அதற்கு அவசர தீர்வை கண்டுகொள்வதற்கு விசேட முயற்சி ஒன்று தேவைப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் இன நெருக்கடிக்கு செயற்படக்கூடிய தீர்வொன்றை காணக் கூடியதாக இருக்காவிட்டால் அது அரசாங்கம் வாய்ப்பை இழந்ததாக அமைந்துவிடும். அத்துடன் அன்றாடம் சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாகவும் தீர்வொன்றை கண்டுகொள்ள வேண்டியுள்ளது.

இராணுவக கட்டுப்பாட்டிலிருந்து காணிகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளுதல், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் போன்ற அன்றாட விடயங்களும் காணப்படுகின்றன. இன சிறுபான்மையினர் குறிப்பாக வட, கிழக்கு மக்களுக்கு இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அவர்களின் காணியை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன், காணாமல் போனோர் விவகாரத்திற்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. இன சிறுபான்மைக் கட்சிகளின் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் தமது வழிக்கு அப்பால் சென்று அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடன் காணப்பகின்றனர்.அவர்களுக்கு அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியமை அவர்களை அனுகூலமற்ற நிலைப்பாட்டுக்கு தள்ளிவிட்டுள்ளது. அதாவது தமது தேர்தல் தொகுதிகளில் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக இது அனுகூலமற்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றுள்ளது. '

அரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென அதற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் வெளிப்படையான கோரிக்கை விடுக்க ஆரம்பித்திருந்தது. அவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஏனெனில், அரசாங்கத்துடனான அவர்களின் ஒத்துழைப்பு செயற்பாடு அவர்கள் எதிர்பார்த்த எந்தவொரு பெறுபேற்றையும் கொடுத்திருக்கவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கையாள்வதில் அரசாங்கம் தாழ்ந்த மட்டத்திலான நடவடிக்கைகளையே எடுத்திருக்கின்றது. இந்த விடயம் அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை தொடர்பாக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

காணாமல் போனோர் அலுவலகத்தை ஆரம்பிப்பது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள போதிலும் இதுவரை அது செயற்படவில்லை. முதலில் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சென்றுள்ளது. இப்போது அரசாங்கம் தயக்கத்துடன் இருப்பதாக தென்படுகின்றது. அரசியல் அரங்கின் ஒரு பிரிவினரால் வெளிப்படுத்தப்படும் கவலைகளை பார்க்கும் போது அவர்கள் கடந்த காலத்திலிருந்தும் மேலெழுந்து வரும் உண்மைகளுக்கு அஞ்சுவதாக தோன்றுகிறது. அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் ஏனைய மாற்றீடுகள் குறித்து அவர்கள் பரிசீலிப்பதற்கு வழிநடத்திச் செல்லப்பட முடியுமென கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் இடம்பெற்றன. சில பகுதிகளில் ஈ.பி.டி.பி. வெற்றி பெற்றுள்ளது.

முன்னணி இடமான நல்லூர் பகுதி உட்பட சில பகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விடயம் மக்கள் நாடுவது களத்தில் முன்னேற்றங்களே என்றும் அரசியல் உரிமைகளை மட்டுமல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுப்பதாக இது அமைந்திருக்கிறது. களத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான உறுதிப்பாட்டையே ஈ.பி.டி.பி. கடந்த இரு தசாப்தங்களில் கொண்டிருந்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பிரச்சினையாக இருப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதில் அந்த அமைப்பு கவனம் செலுத்துவதாகும். தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களில் அதிகளவுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை.

இதேவேளை உருக்கு வீடுகளை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முன்னைய தீர்மானத்துக்கு எதிராக பல மாதங்களாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், 50,000 கல் வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது நிலைவரம் தொடர்பான தீவிரத் தன்மையை தணித்துவிடும் போக்கை கொண்டிருக்கின்றது.களத்தில் மக்களுக்கான அனுகூலங்களை நிறைவேற்றுதல் அரசின் ஜீவிதத்துக்கான பாதைக்கு தேவையானதாக அமையும். அத்துடன், அரசின் அரசியல் நேச அணிகளின் ஜீவிதத்துக்கும் இது தேவையான பாதையாக அமைந்துவிடும்.

thinakkural.lk 22 08 2017

Published in Tamil
21 08 2017

அறிந்தும் அறியாமலும் -12: முடிவற்ற முரண்!

இலக்கியங்களில் எவற்றைப் படிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளை இதுவரை பகிர்ந்து கொண்டோம். இலக்கியம் என்பது வாழ்க்கையோடு தொடர்புடையது; வாழ்விலிருந்து பிறப்பது. எனவே இலக்கியம் பயில்வது என்பதன் பொருள், வாழ்வை அறிவது என்பதே ஆகும்! வாழ்தல் எப்படி என்று அறிந்து கொள்வதற்கு முன், வாழ்க்கை என்றால் என்ன என்னும் ஒரு வினா நம்முன் விரிகிறது. வாழ்க்கை, உலகம், இயற்கை ஆகிய மூன்றினையும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளையும் விளங்கிக்கொள்ள, அறிஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக முயல்கின்றனர். இன்றுவரை இறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அது தொடர்பான, முடிவற்ற ஆய்வையும், படிப்பையும்தாம் "தத்துவம்" (Philosophy) என்று கூறுகின்றோம்.

தத்துவம் என்று சொன்னவுடனேயே, அது நடைமுறை வாழ்க்கைக்குத் தொடர்பற்றது என்றும், அன்றாட வாழ்க்கைக்குப் பயனற்றது என்றும் பலர் கருதுகின்றனர். இப்போதும், தெளிவின்றிப் பேசுகின்றவர்களைப் பார்த்து, "பெரிய தத்துவம் மாதிரிப் பேசிக் கொண்டிருக்கிறான்" என்று கூறுவதுண்டு. தத்துவம் நம்மைப் போன்ற எளிய மக்களுக்கெல்லாம் புரியாது என்பதே அதன் பொருள். தத்துவம் என்றால் ‘மெய்யறிவு'. ஒன்றைப் பற்றிய உண்மைகளைத் தேடுவதே மெய்யறிவு. அது எப்படிப் புரியாததாகவும், பயனற்றதாகவும் ஆகும்? ஒவ்வொரு துறை அறிவின் எல்லையும் உண்மையறிதலே! அதனால்தான், அறிவியல், வரலாறு, வணிகம், மருத்துவம் என எந்தத் துறையில் பட்டம் பெற்றாலும், அத்துறையின் உயர்ந்த கல்விக்கான பட்டம், Doctor of Philosophy(Ph.D) என்றே உள்ளது. இலக்கியம், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறை ஆய்வாளர்களும் ‘தத்துவாசிரியர்கள்' (Theoreticians)என்றே அழைக்கப்படுகின்றனர்.

எனவே, உலகில் உள்ள பல்வேறு தத்துவங்களையும் அறிந்து கொள்வது, அறிவாளிகளுக்கான இன்றைய அடிப்படைத் தேவையாக உள்ளது. அத்துறையில், பல்வேறு மொழிகளில், ஆயிரக்கணக்கான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றையேனும் நாம் கற்றே ஆக வேண்டும். உலக அறங்கள், உலக மதங்கள், உலக வாழ்க்கை பற்றிய அனைத்து அறிவும், தத்துவ நூல்களுக்குள்ளேதான் பொதிந்து கிடக்கின்றன. தத்துவத்தை மேலைத் தத்துவம், கீழைத் தத்துவம் என்று இரண்டாகப் பிரிப்பர். தத்துவங்கள் கூடவா, மேலை நாடுகளுக்கு உரியனவென்றும், கீழை நாடுகளுக்கு உரியனவென்றும் பிரிந்து நிற்கும் என்று கேட்டால், ஆம் என்பதே விடை. நம் வாழ்க்கையை மரபு, மனம் போன்ற அகக் காரணிகளும், தட்பவெப்பம், புவி அமைப்பு போன்ற புறக் காரணிகளும்தாம் தீர்மானிக்கின்றன. அகப் புறக் காரணிகள் இரண்டுமே, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளிலும், இந்தியா, சீனா, ஐப்பான் போன்ற கீழை நாடுகளிலும் வேறுவேறாகவே உள்ளன. ஆதலால் இரு பகுதிகளுக்குமான தத்துவங்களும், பல நுட்பமான செய்திகளில் வேறுபட்டு நிற்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன. கால வரிசையில் நோக்கும் போது, கிரேக்க, ரோமானியத் தத்துவங்களும், இந்திய, சீனத் தத்துவங்களும் தொன்மையானவை. ஐரோப்பியத் தத்துவங்கள் நவீனத் தன்மை உடையவை. ஐரோப்பியத் தத்துவாசிரியர்கள், "தங்களுக்கு முன்னால் இருந்தவர்களுடைய தத்துவத்தை விமர்சனம் செய்து, மறுத்து, முற்றிலும் மாறான தத்துவத்தை உருவாக்கினர்" என்றும், "இந்தியாவில் பல்வேறு வேறுபட்ட மாற்றுத் தத்துவங்கள் தங்கள் தோற்றத்தைப் பழையதிலிருந்தே பெற்றன. பின்னால் வந்த தத்துவங்கள், கருத்தளவிலாவது, பழையனவற்றின் கண்ணோட்டத்தையே கொண்டிருந்தன" என்றும் தன் நூலில் குறிப்பிடுகின்றார், இந்தியத் தத்துவ வரலாற்று ஆசிரியர்களில் புகழ்பெற்றவரான, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

இஃதே அடிப்படை உண்மை. மேலைப் பண்பாடு, புதுமையில் கிளை விரிக்கும். கீழைப் பண்பாடோ, மரபில் காலூன்றும். மரபு, புதுமை ஆகிய இரண்டினையும் அறிந்து கொள்வதே தத்துவப் படிப்பு. உலகின் தொடக்கநிலைத் தத்துவாசிரியர்களில் புகழ் பெற்றவர்களாக, மகாவீரர்(கி.மு. 540 & 468), கன்பூசியஸ்(கி.மு. 551 & 479), கௌதமபுத்தர்(கி.மு.560 & 480), சாக்ரடீஸ் (கி.மு.470 & 399), எபி கூரஸ் (கி.மு. 341 & 270), சாணக்கியர் (கி.மு. 370 & 283) ஆகியோர் அறியப்படுகின்றனர். சாக்ரடீஸைத் தொடர்ந்து, பிளேட்டோவும், அரிஸ்டாடிலும் இடம் பெறுகின்றனர். ஆசிவகம் என்னும் சமயத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலரும் மகாவீரர், புத்தர் காலத்தைச் சேர்ந்தவரே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனத்தின் தாவ் நெறித் தத்துவமும் (Taoism) மிகப் பழைமையானதே! உலகிலேயே மிகத் தொன்மையான தத்துவங்கள், இந்து மதத்தின் வேதங்கள்தாம் என்று கூறுவோர் உண்டு. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், தன்னுடைய "இந்தியத் தத்துவம்" நூலில், வேதங்கள் குறித்து மிகப் பெருமையாகப் பேசுகின்றார். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதை எந்த ஓர் ஆய்வாளரும் மறுக்கவில்லை. கி.மு. 1500 & 1000 என்னும் காலகட்டத்தைச் சேர்ந்தவையாக அவை இருக்கக் கூடும். அவை புனிதமானவை என இன்றும் இந்து மதத்தினர் கருதுகின்றனர்.

நான்கு வேதங்களும் சமற்கிருத மொழியல் இருந்தமையால், அவற்றுள் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பிறமொழியினர் தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வேதங்களைச் சூத்திரர்கள், பெண்கள் (பார்ப்பனப் பெண்கள் உள்பட), குழந்தைகள் படிக்கக் கூடாது என்று கடுமையான விதிகள் இருந்தமையால், அவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள வெகுமக்களால் இயலவில்லை. இன்றைக்கும் இந்தியாவில், வெகுமக்களால் வேதங்கள் பாராட்டப்படுகின்றனவேயன்றிப் படிக்கப்படவில்லை. வேதம் என்றால் மிக உயர்ந்தது, புனிதமானது என்று இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் நம்புகின்றனர். ஆனால் அவர்களுக்கும் வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பது தெரியாது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில், நிலைமைகள் மாறின. வேதங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மொழிகளிலும் அவை இன்று காணப்படுகின்றன. அவற்றைப் படித்த ஆய்வாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தத்தைத்தான் வெளிப்படுத்தி உள்ளனர். "மனிதர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைக் கடவுளின் முன் வைக்கும் இசைப்பாடல்களின் தொகுப்புகளேயன்றி, வேதங்களில் தத்துவங்கள் என எவையும் காணப்படவில்லை" என்பதே அவர்களின் கருத்து.

வேத ஆய்வுகளில் புகழ்பெற்ற, வைதீகப் பற்றுடைய, வங்காள அறிஞர் எச்.வி.சாஸ்திரி, "வேதம் என்ற சொல்லே, ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும், பயபக்தி மிக்க ஓர் உணர்வைத் தோற்றுவிக்கும். வேதத்தைப் படிப்பவன் அதிசயப் பிறவியாகக் கருதப்படுவான். வேதத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவன் சிவன் அல்லது விஷ்ணுவின் மறு அவதாரமாகவே கருதப்படுவான்" என்று கூறுகின்றார். அதே நேரத்தில், வேதங்கள் என்பவை, " சில செய்யு-ள்கள், இசைப் பாடல்கள் ஆகியவை அடங்கிய ஒரு பாடல் திரட்டுதானே அன்றி, அது ஒரு தத்துவ நூல் இல்லை" என்கிறார். எனினும், வேத காலத்திற்குப் பிறகு தோன்றிய உபநிடதங்கள் சிலவற்றில், சில தத்துவக் கருத்துகள் காணப்படுகின்றன. வேதங்களின் இறுதிக் காலத்தில் தோன்றியவை என்பதால், உபநிடதங்களுக்கு வேதாந்தங்கள் (அந்தம் & இறுதி) என்ற பெயரும் உண்டு. உபநிடதங்களில் பல, புத்தர் காலத்திற்கு முந்தியவை. மைத்ரீயம், மண்டூக்யம் போன்ற உபநிடதங்கள் புத்தருக்குப் பிந்தியவை. 108 உபநிடதங்கள் என்று கூறப்பட்டாலும், பத்துக்கும் சற்றுக் கூடுதலான உபநிடதங்களே இன்று உள்ளன. அவற்றுள் பிர்ஹதரண்யம், சாண்டோக்கியம், தைத்ரீயம், ஐதரோயம், கௌசீதகி ஆகியன புகழ்ந்து பேசப்படுகின்றன. அனைத்து உபநிடதங்களும் ஆத்மாவையும் பிரம்மத்தையும் பற்றித்தான் பேசுகின்றன. எனினும் அவற்றை அவை விளக்கவில்லை. விளக்கவே முடியாததுதான் பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள். வானம், பூமி, வெளி என ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டு, அவை பிரம்மமா எனக் கேட்டு, இல்லை, இல்லை (நேதி, நேதி) என்று கூறுகின்றன. அதனால், உபநிடதங்கள் "நேதித் தத்துவத்தை" முன்வைக்கின்றன என்னும் கருத்து எழுந்தது. உபநிடதங்களில் லோகாயுதம், சாங்கியம் போன்ற தத்துவங்களுக்கு மறுப்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே பொருள்முதல் வாதத்தை எடுத்துக் கூறும் லோகாயுதா போன்ற தத்துவங்கள், உபநிடதங்களுக்கு முந்தியவை என்பது புரிகிறது. "எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படையான கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையேயான உறவு பற்றியதுதான்" என்று சுருக்கமாகச் சொல்வார் எங்கெல்ஸ். அதாவது, கருத்து முதல்வாதத்திற்கும், பொருள் முதல் வாதத்திற்கும் இடையேயான முடிவற்ற முரணிலிருந்தே தத்துவங்கள் தோன்றுகின்றன என்று கூறலாம். அது சரி, கருத்து முதல் வாதம் (சிந்தனை), பொருள் முதல் வாதம்(இருத்தல்) என்றால் என்ன, ஏன் அவற்றுக்கிடையே மோதல் நிகழ்கிறது என்னும் வினாக்கள் நம்மில் பலருக்கு எழலாம். அவ்வினாக்களுக்கான விடையே, தத்துவத் துறையின் முதல் பாடம். அப்பாடத்தை இனி நாம் படிக்கலாம்.
( சந்திப்போம் tamil.oneindia.com 20 07 2014

Published in Tamil
14 08 2017

அறிந்தும் அறியாமலும் - 11: மூளைதான் அலாவுதீன் பூதம்!

சுப வீரபாண்டியன் ‘

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய்' ஆத்திசூடியும், திருக்குறளும் இங்கே தொட்டுக் காட்டப்பட்டன. அவை வெறும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே! தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை தமிழில் எழுத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. யார் யாருக்கு எந்தெந்தத் துறையில் எவையெவை வேண்டுமோ அவற்றைத் தேடி எடுத்துப் படிப்பது அவரவர் விருப்பம்! சரி, படிக்கலாம் என்று முடிவெடுத்த பிறகும், படிப்பதற்குப் பல தடைகள் உள்ளனவே, என்ன செய்யலாம் என்பது சிலரின் வினா. நூல்களைப் படிக்க இயலாமைக்குப் பொதுவாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. (1) படிக்க நேரமில்லை (2) படிப்பது சலிப்பாய் (Boredom) உள்ளது (3) படிக்கத் தொடங்கியவுடன் தூக்கம் வந்து விடுகின்றது.

இவை மூன்றுக்குமே அடிப்படைக் காரணம் ஒன்றுதான். படிப்பில், படிக்க எடுக்கும் நூலில் நமக்கு ஈடுபாடு ஏற்படவில்லை என்பதே அந்தக் காரணம். ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஒரு நூலைத் தேடி, அது கிடைத்தவுடன் அமர்ந்து படிக்கத் தொடங்கும்போது எந்தச் சலிப்பும் ஏற்படாது, உறங்க நினைத்தாலும் உறக்கம் வராது. எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை இங்கு நாம் பகிர்ந்து கொள்ளலாம். நான் காரைக்குடி, அழகப்பர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். தமிழ் நூல்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது படித்தவைகளில் பெரும்பாலானவை நாவல்கள்தாம். ஆங்கில நாவல்களையும் படிக்க விருப்பம் ஏற்பட்டது. ஆனால் 10 பக்கங்களைக் கூட என்னால் தாண்ட முடியவில்லை. அந்தப் பத்துப் பக்கங்களும் புரியுவும் இல்லை. அகராதியைப் புரட்ட, என் சோம்பல் இடம் தரவில்லை. என் ஆங்கில ஆசிரியரிடம் சொன்னேன். சிரித்துக் கொண்டார். பிறகு ஒரு நாள், கல்லூரி நூலகத்தில் என்னைப் பார்த்த அந்த ஆங்கிலப் பேராசிரியர், ஒரு நூலை என்னிடம் கொடுத்து, ‘போய்ப் படித்துப் பார்' என்றார். அந்த நூல், சற்றுக் கடினமான நடையில்தான் இருந்தது. படித்தவுடன் புரியவில்லை. ஆனாலும், அகராதியை அருகில் வைத்துக் கொண்டு விடாமல் நான் படித்தேன். இரண்டு, மூன்று நாள்கள் அந்த நூலைப் படிப்பதே என் வேலையாக இருந்தது. படித்து முடித்தும் விட்டேன். அந்த நூலின் பெயரும், அதன் உள்ளடக்கமும், என் வயதுக்கு மிக இணக்கமாக இருந்தன என்பவைதான் அதற்கான காரணங்கள். அந்த ஆங்கில நூலின் பெயர், "From girlhood to womanhood" என்பது.

பெண்ணின் உடல் வளர்ச்சி, பூப்படைதல், தாய்மை அடைதல் போன்ற பல செய்திகளை அந்நூல் கூறிற்று. அந்த வயதில், பெண்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எந்த இளைஞனுக்குத்தான் இருக்காது? அந்த இயல்பை உணர்ந்துதான், என் ஆசிரியரே எனக்கு அதனைக் கொடுத்திருக்கக் கூடும் என்பதைப் பிறகு உணர்ந்தேன். அதுதான், நான் முழுமையாகப் படித்து முடித்த முதல் ஆங்கில நூல். பிறகு, சின்னச் சின்ன ஆங்கில நூல்களையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இன்றைய இளைஞர்கள் எளிதாக, ஏராளமான ஆங்கில நூல்களை, குறிப்பாக நாவல்களைப் படித்து விடுகின்றனர். தமிழ் நூல்களைப் படிப்பதில் மனத்தடையே பெரிய இடையூறாக உள்ளது. போதுமான ஈடுபாடின்மை, காரணங்களைத் தேடுகின்றது. மனத்தடைகளை உடைத்துப் படிக்கத் தொடங்கியபின், அடுத்த கேள்வி, எப்படிப் படிக்கலாம் என்பது! படிப்பது எளிய செயலன்று, அது ஓர் அரிய கலை. எவற்றைப் படிப்பது என்பது எவ்வளவு முதன்மையானதோ, அவ்வாறே எப்படிப் படிப்பது என்பதும் மிகத் தேவையானது.

நூல்களைப் படிப்பதில் நான்கு முறைகள் உள்ளன.

(1) பிரித்துப் படிப்பது (2) விரைந்து படிப்பது

(3) குறித்துப் படிப்பது (4) ஆழ்ந்து படிப்பது

இவற்றின் அடுத்த கட்டம், ஆராய்ந்து படிப்பதும், ஒப்பிட்டுப் படிப்பதும் என்று கொள்ளலாம். படிக்கும் நூல்களின் அளவு, தன்மையைப் பொறுத்துப் படிக்கும் முறைகளும் மாறும். 1000 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலைப் பார்த்தவுடனேயே, இதனை நம்மால் படிக்க முடியாது என்று பலர் உடனடியாக முடிவெடுத்து விடுகின்றனர். பெரிய நூல்களைப் பார்த்தவுடன் ஏற்படுகின்ற மலைப்பு இயல்பானதுதான். அந்த மலைப்பை வெல்வதற்குப் ‘பிரித்துப் படிக்கும்' பழக்கம் உதவும். 1000 பக்கங்களையும் ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்று யார் கட்டளையிட்டார்கள்? ஒரு வாரத்தில் படிக்கலாம், ஒரு மாதம் எடுத்துக் கொண்டும் படிக்கலாம். ஒரு நாளைக்கு ஓர் இயல் என்று படிக்கலாம். அதுவும்கூட, மிகுதியான பக்கங்களைக் கொண்டிருந்தால், நம் தன்மைக்கும், பிற பணிகளுக்கும் ஏற்ற வகையில், ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படிப்பது என்று முடிவு செய்து கொள்ளலாம். இப்படிப் பிரித்துப் படிப்பதன் மூலம், எண்ணிக்கையில் மிகப் பல பக்கங்களைக் கொண்டுள்ள பெரிய நூல்களையும் நம்மால் படித்துவிட முடியும். படிக்கும் வகைகளிலேயே மிக மிக முதன்மையானது, விரைந்து படிப்பதுதான். நிதானமாகப் படித்தால்தான் புரியும், படித்தவைகள் மூளையிலும் பதியும் என்று நம்மில் பலர், பல்லாண்டுகளாக எண்ணி வருகின்றோம். அது முற்றிலும் தவறானது என இன்றைய உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நம் மூளையைப் பற்றிய, மிகத் தாழ்வான மதிப்பீடுதான், நம் தவறான புரிதலுக்குக் காரணம். நம் மூளையின் ஆற்றல், எந்தத் தலைமுறைக் கணிணியையும் விடக் கூடுதலானது. கணிப்பொறிகளைக் கண்டறிந்ததே, மனித மூளைதானே. ஓய்வற்றும், சலிப்பற்றும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றக் கூடியது நம் மூளை. விரைந்து படிப்பதைப் புரிந்து கொள்வது என்பதெல்லாம், அதற்கு மிக எளிய செயலே ஆகும். நிதானமாகப் படிக்கும்போதுதான், செய்திகளை நாம் தவற விட்டுவிடுவோம். ஏனெனில், நாம் மெதுவாகப் படிக்கும் போது, அந்த இடைவெளியில் நம் கவனம் எங்கெங்கோ சென்று திரும்பும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில், நம் மூளை ஆயிரம் செய்திகளை எண்ணிப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்காமல், விரைந்து படிப்பதன் மூலம் மட்டுமே, கவனக்குவிப்பு (concentration) நாம் படிக்கும் ஒரே நூலில் பதியும். மூளை மட்டுமன்று, நம் உடலின் உள்ளுறுப்புகளில் மிகப் பல ஓய்வே எடுப்பதில்லை. இதயம் எப்போதாவது ஓய்வெடுத்துக் கொள்கிறதா? சிறுநீரகம் என்றைக்காவது ஓய்வெடுக்கின்றதா? நரம்பு மண்டலத்திற்கு ஓய்வு உண்டா? எவையும் ஓய்வெடுப்பதில்லை. எனினும், பிற உறுப்புகளுக்கெல்லாம், ஒரே குறிப்பிட்ட பணிதான். ஆனால், மூளைக்கு மட்டும் பல கோடிப் பணிகள். ஆகவே, அதற்கு நாம் உரிய, தேவையான வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லயானால், தேவையற்ற பல வேலைகளில் அது இறங்கிவிடும்.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்' நாம் அறிந்த கதைதானே! அலாவுதீன் அந்த அற்புத விளக்கைத் தேய்த்தவுடன், உள்ளேயிருந்து ஒரு பூதம் வெளிவரும். எத்தனை கடுமையான வேலைகளைக் கொடுத்தாலும், அது ஒரு நொடியில் முடித்துவிடும். மீண்டும், மீண்டும் அதற்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அலாவுதீனுக்கே ஆபத்து வந்துவிடும் என்பதுதானே கதை. இந்தக் கற்பனைக் கதை ஒரு குறியீடு போலத் தோன்றுகிறது. நம் மூளைதான், அந்த அலாவுதீன் பூதம் என்று கருத இடமுள்ளது. மூளைக்கு நல்ல வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்றேல், அதுவே நமக்கு ஆபத்தாகி விடக்கூடும். ஆகவே, படிக்கும்போதும், வேறு சிந்தனைகளை நோக்கிச் சென்று விடாமல், கவனம் முழுவதும் படிப்பிலேயே இருப்பதற்கு ஒரே வழி, விரைந்து படிப்பதுதான் என்பது தெளிவாகின்றது. ‘குறித்துப் படிப்பது' என்பது எல்லா நூல்களுக்கும் ஏற்ற முறையென்று கூற முடியாது. பொழுதுபோக்கிற்காகப் படிக்கும் நூல்களை அப்படிப் படிக்க வேண்டிய தேவை இல்லை. மிக நல்ல, தேவையான நூல் என்றும், வாழ்க்கை முழுவதும் பயன்படக்கூடியது என்றும் நாம் கருதும் நூல்களைக் ‘குறித்துப் படிப்பதே' சரியானது. நூலின் முக்கியமான வரிகளை, எழுதுகோலால் சிலர் அடிக்கோடிட்டுக் கொள்வர். இன்று வந்துள்ள ஒளிரும் குறிப்பான்களால் (Highlighters)குறித்துக் கொள்வர் சிலர். அருகிலேயே சில குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வோரும் உண்டு. இவற்றைத் தாண்டி, அருகில் ஓர் ஏட்டினை வைத்துக் கொண்டு, நூலின் முக்கிய வரிகளை அதில் எழுதிக் கொண்டே படிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்வதன் மூலம், ஒரு நூலைப் படிப்பதற்குக் கூடுதல் நேரம் ஆகும் என்பது உண்மைதான். ஆனால் அதன் பயன்களும் மிகக் கூடுதல் என்பதை, அனுபவத்தில் நாம் உணரலாம். ஒரு முறை எழுதினால், மூன்று முறை படிப்பதற்குச் சமம் என்பது பொய்யில்லை. குறித்துப் படிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால், முக்கியமான நூல்களை, திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வது மிக எளிது. இறுதியில் உள்ள படிக்கும் முறை ‘ஆழ்ந்து படிப்பது' என்பது. முதல் மூன்று வகைகளில் எந்த முறையில் படித்தாலும், ஆழ்ந்து படிக்கும் பழக்கம் இல்லையென்றால், படிப்பே பயனற்றுப் போய்விடும்.

சிலர், நிறைய நூல்களைப் படிப்பார்கள். ஆனால் படித்தவை எவையும் அவர்களுக்கு நினைவில் நிற்பதில்லை. சிலருக்கு நினைவிலும் தங்கும். ஆனால் உரிய இடத்தில் அவற்றைப் பயன்படுத்த அவர்களுக்குத் தெரியாது. படிப்பு, நினைவாற்றல், வெளிப்படுத்தல் ஆகிய மூன்றும் ஒரு சங்கிலித் தொடர் போன்றது. அச் சங்கிலியின் கண்ணிகள் அறுபடாமல் இருப்பதற்கு, ஆழ்ந்த படிப்பே அடிப்படையாகும். ‘ஆழ்தல்' என்பதற்கு மூழ்குதல் என்று பொருள். ஒருவர் தண்ணீரில் மூழ்கியபிறகு, மீண்டும் வெளியில் வரும்வரை, தண்ணீர் மட்டும்தான் தெரியும். நாம் எந்தப் பணியில் ஈடுபடுகிறோமோ, அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அதுவாகவே ஆகிவிடுவதை ஆழ்தல் என்று கூறலாம். ஆழ்ந்து படிக்கும் போது, நம் கவனம் சிதறாது. பொருள் தெளிவாகப் புரியும். படிக்கும்போதே, நம் கண்களில் காட்சி விரியும். நூலும், நாமும் வேறு வேறாக இருந்த நிலை மாறி, அதுவும் நாமும் ஒன்று கலத்தல் (Assimilation) அங்கு நடைபெறும். அந்நிலையில் நாம் படிக்கும் அனைத்தும் நம் மூளையில் ஆழமாய்ப் பதியும். நீண்ட நெடு நாள்கள் நெஞ்சில் நிலைக்கும். உரிய இடத்திலும், உரிய நேரத்திலும் தாமே வந்து வெளிப்படும். படிப்பின் பயன் அதுதான்!
( சந்திப்போம்)

Published in Tamil

02 08 2017

கேட்டிலும் உண்டு ஓர் உறுதி ! -

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே? என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன.தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா?’ என்று,அக்கறையுடன் விசாரிப்போர் ஒருபுறம்.‘அஞ்சுவதுமில்லை, அஞ்சவருவதுமில்லை’ என்ற,நாவுக்கரசரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் எனக்கு,மிரட்டலாவது ஒன்றாவது.மொத்தத்தில் ‘உகர’ வாசகர்களின் அக்கறை உற்சாகம் தருகிறது.காரியசித்திக் கணபதி ஆலய நிர்மாணப் பணிகள்,சொற்பொழிவுக்காய் அடுத்தடுத்து வந்த பயணங்கள்,‘உகர’ ஆசிரியர் சொபீசனின்,தொழில் ரீதியான சீனப்பயணம் என்பவை காரணமாகவே,உகரக் கட்டுரைகளில் சிறிது இடைவெளி விடவேண்டி வந்தது.உண்மைக்காரணம் அதுவே.தயைகூர்ந்து அவ் இடைவெளியைப் பொறுத்தருளுங்கள்.இறையருள் வேண்டி மீண்டும் கட்டுரை முயற்சியைத் தொடர்கிறேன்.

அதென்ன உள்ள உவப்பு?

கட்டுரையின் முதல் அடியைப் படித்துவிட்டு நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.அவசரப்படாதீர்கள்!அதைப்பற்றித்தான் விரிவாய்ச் சொல்லப்போகிறேன்.

நம் வள்ளுவக் கடவுளார் ‘நட்பு ஆராய்தல்’ எனும் அதிகாரத்திலே,அற்புதமான ஒரு குறளை அமைத்திருக்கிறார்.ஒரு குறளென்ன ஒரு குறள்? அத்தனை குறள்களும் அற்புதங்கள் தானே!சொல்ல வந்த விடயத்தின் தேவை நோக்கியே,அற்புதம் என இக்குறளைத் தனித்துச் சொன்னேன்.‘குறளைச் சொல்லாமல் இது என்ன சுற்றி வளைப்பு?’ என்கிறீர்கள் போல,இதோ அந்தக் குறளைச் சொல்லி விடுகிறேன்.கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.கேடு வரும்போதே நமக்கு உறவானவர் யாரென உறுதியாய்த் தெரியவரும்.அதனால்தான் கேட்டினை உறவை அளக்கும் அளவுகோலாய் உரைக்கிறார் நம் வள்ளுவர்.

‘இவர் பெரிய பரிமேலழகராக்கும், எல்லோரும் சொல்லிச் சொல்லிப்புளித்துப் போன குறளையும்,அதன் பொருளையும் சொல்லி தேவையில்லாத பெருமை கொள்கிறார்’ என,நீங்கள் நினைப்பது புரிகிறது.இக்குறளையும் அதற்கான பொருளையும் சொல்வதல்ல எனது நோக்கம்.இன்றைய நிலையில், நமது நாட்டுச் சூழலில்,மழையால் விளைந்துள்ள பேரவலம் பற்றியும்,அப்பேரவலத்தால் விளைந்திருக்கும்,பகை மறந்த இன ஒற்றுமை பற்றியும்; சொல்லவே,வள்ளுவரின் இக்குறளை இங்கு நான் நினைவு கூர்ந்தேன்.

அரசியல்வாதிகளாலும் அறிஞர்களாலும் மதவாதிகளாலும்,செய்யமுடியாத ஒரு பெரிய விடயத்தை,இயற்கைப் பேரழிவு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.இயற்கை அனர்த்தத்தால், இருநூறிற்கு மேற்பட்ட உயிர்ப்பலிகள் நடந்திருக்கின்றன.காணாமல் போனோர் தொகையைப் பார்த்தால்,அவ் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் போல்த் தெரிகிறது.இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை, சொத்திழப்பு என,நிகழ்ந்திருக்கும் இழப்புக்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தால் தலைசுற்றிப் போகிறது.இவை அனைத்தும் பெரும்பாலும் சிங்களப் பகுதிகளிலேயே நடந்திருக்கின்றன.அவலப்பட்டு நிற்கிறார்கள் பேரினத்து மக்கள்.

மனிதாபிமானமுள்ள எவர்க்கும்,இச்செய்தி நெஞ்சை வருத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உறவிழப்பு, உடமையிழப்பு என்பதான,இப் பேரிழப்புக்களை நம் தமிழினம் மிக அண்மையில்த்தான் சந்தித்து முடித்தது.அந்தக் காயங்களின் வேதனைகளும் வடுக்களும்,இன்னும் தமிழனத்தார் நெஞ்சை விட்டு முழுமையாய் அகலவில்லை.இன்று பேரினத்தார்க்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்களோ இயற்கை தந்தவை.நம் இனத்தார்க்கு ஏற்பட்ட இழப்புக்களோ,ஆணவத்தாலும், கற்பனையான அச்சத்தாலும், சிற்றினம் தானே எனும் அலட்சியத்தாலும்,பேரினத்தாரால் விளைவிக்கப்பட்டவை.இதுதான் வித்தியாசம்.

ஆனாலும் அவை பற்றி ஆராய இது நேரமன்று.தமிழர்க்கும் சிங்களவர்க்குமான பகை என்பது,எப்போதும் உள்ளதன்று.- உருவாக்கப்பட்டது.ஒரு காலத்தில் தமிழர்க்கும் சிங்களவர்க்கும் இருந்த உறவு நிலையை,இன்று நினைத்தாலும் நம் மனம் சிலிர்க்கும்.அவர்கள் எங்களைத் தேடி வந்ததும்,நாங்கள் அவர்களைத் தேடிச் சென்றதும்,எங்கள் பனங்கள்ளையும் தோசையையும் அவர்களும்,அவர்களது கொண்டைப் பணியாரத்தையும் ‘கொக்கிஸை’யும் நாங்களும்,ஒருவருக்கொருவர் வழங்கி உபசரித்து மகிழ்ந்ததும் அந்தக்காலம்.புலிகளின் போராளிக் கவிஞரான புதுவையே அவ் இன்ப அனுபவத்தை,தன் கவிதைகளில் பதிக்கத் தவறவில்லை.‘‘முந்தி வெசாக்கால விடுமுறைக்கு நான் வருவேன் சந்திப்பாய், வீட்டில் தடல்புடலாய்ச் சாப்பாடு தந்து மகிழ்வாய்..... தமிழனுக்குப் பாய்விரித்து நித்திரைக்குப் போகும் வரை நீயருகில் நின்றிருப்பாய் !சித்திரையில் புதுவருடத்தினத்தில் நீ வருவாய் வந்தெங்கள் வீட்டில் வடை, தோசை என்றெல்லாம் உந்தனது ஆசைகளை உரைப்பாய் - சாப்பிடுவாய்ஆறு மணிக்கெல்லாம் அடிவளவுப் பனையிலே ஊறிவரும் கள்ளை உறிஞ்சி மகிழ்ந்திடுவாய் எங்களுக்குள் பேதம் எதுவும் இருக்கவில்லை தங்கச்சி என்றே என் தாரத்தை நீ அழைப்பாய் இன்றிவைகள் ஒன்றும் இயலாத காரியங்கள்”கவிதையைப்படிக்க கண்கள் கசிகின்றன.எத்தனை இனிய நல்வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.

சிங்கள இனத்தார்க்குக் கொடுமை செய்த ஆங்கிலேயரை,இலங்கை மண்ணிலிருந்து அப்புறப்படுத்த சேர். பொன் ராமநாதன் அவர்கள்,லண்டன் சென்று வாதிட்டு வென்ற வரலாறும்,தனி ஈழம் கோரத்தொடங்கிய பின்பும் கூட,ஸ்ரீமாவோ அம்மையாரின் பிரஜாவுரிமையை ஜே.ஆர். பறிக்க முற்பட்ட போது,அதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் அமரர் அமிர்தலிங்கம் வாதிட்ட வரலாறும்,தமிழர்களின் இனப்பற்று கடந்த மனிதாபிமானத்தின் ஆதாரங்கள்.அது போலவே துன்பப்பட்ட தமிழர்க்காக தம் இனத்தாரிடம் வாதிட்ட,விக்கிரமபாகு கருணாரட்ண போன்ற சில சிங்களத் தலைவர்களின்,குரல்களும் அதே மனிதாபிமானத்தின் ஆதாரங்களேயாம்.

எல்லா இனங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள்.எந்த இனத்தையும் முழுமையான தீய இனமென்றோ,முழுமையான நல்ல இனமென்றோ பிரித்தல் ஆகாது.நம் தேசம் பகையால் பிளவுறக் காரணம்,தீயவர்களை வலிமையாய்ச் செயற்படவிட்டு,நல்லவர்கள் அமைதியாய் இருந்ததேயாம்!தீயவர்கள், தம் கருத்தை வலியுறுத்தி வலியுறுத்தி,நல்லவர்களையும் தீயவர்களாக்கி இத்தேசத்தைச் சிதைத்தனர்.அதனாற்றான் இலங்கை என்னும் இச்சொர்க்க பூமியில்,இனத்துவேசம் என்னும் பகைவிதை விதைக்கப்பட்டு,அவ் விஷ விருட்சத்தின் வீரிய விளைவுகளால் இரத்த வெள்ளம் ஓடியது.

பகை இல்லாமல் இருப்பது சுலபம்.அதனை விதைத்துவிட்டால் பின் நீக்குவது மிகமிகக் கடினம்.விளைந்த பகையை நீக்கவேமுடியாதா? கேள்வி பிறக்கும்.மனித மனங்களுக்குள் சுருண்டு கிடக்கும் ஆணவப் பாம்புகள் ஆடத்தொடங்கிவிட்டால்,அதனை அடக்குவது கடினம் தான்.அடக்கவே முடியாதா? எனக் கேட்டால்,அடக்கலாம்! என்பதே பதிலாம்!அதற்கு பகைத்திறத்தார் இருவரும் வலிந்து முயலவேண்டும்.ஆணவப்பாம்பை அன்பென்னும் மகுடியால் மட்டுமே அசைக்கமுடியும்.அடக்கவும் முடியுமாம்!

விளைந்துவிட்ட பகையை ஊதி ஊதி உக்கிரப்படுத்த,நம் இரண்டு இனத்தாரிடமும் சிலர் அன்றும் இருந்தனர்.இன்றும் இருக்கவே செய்கின்றனர்.அவர்தமக்கு இனம்; பற்றிய கவலையில்லை.இனத்தலைமை பற்றிய கவலையேயாம்.நல்லார் ஒன்றுதிரண்டால் அன்றி,அத்தீயாரின் வலிமையை அறுக்கலாகாது என்பது நிஜம்.

பகைத்திறத்தாரிடம் அன்பை வெளிப்படுத்தும் வழி என்ன?பகைவர் வீழ்கையில் அவர்மேல் நாம் காட்டும் பரிவே அவ்வழியாம்.எதிரிகள் இடருற்ற காலத்தில் நம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதால்,அவர்தம் மனப்பகையின் வேரை அசைக்கலாம்.அதனால்த்தான் தோற்று நின்ற இராவணனை மன்னித்து அனுப்பி வைக்கிறான் இராமன்.ஈழத்தின் இறுதிப்போரின் முடிவில், ஆயிரமாய் உயிர் அழிவுகளைச் சந்தித்து,இழிவின் எல்லை தொட்டு ஈழத்தமிழர்கள் நின்ற வேளையில்,முன்னைய ஜனாதிபதி மஹிந்த மட்டும்,‘தமிழர்களும் நம் சகோதர்கள்தான்,இறந்த போராளி இளைஞர்களும் எம் பிள்ளைகள்தான் என்று நினையுங்கள்,நாம் செய்த தவறே அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது,இருபக்கமும் பேரழிவைச் சந்தித்து விட்டோம்.இனியேனும் பகை மறந்து ஒருமித்து வாழ்வோம்’ என,சிங்கள மக்களுக்கு உரைத்திருப்பாரேயானால்,அவர் ஒரு சரித்திரப் புருஷராகியிருப்பார்.இவ் இலங்கை மண் மீண்டும் சொர்க்கமாய் மாறியிருக்கும்.

என்ன செய்ய? இலங்கையில் விதியின் விளையாட்டு விட்டபாடில்லை. ‘மஹிந்தவுக்கு’,சரித்திரத்தில் தன் பெயரைப் பதிவு செய்வதைவிட,பதவிச் சுகத்தை பறிகொடுக்காமல் விடுவதிலேயே அதிக அக்கறை இருந்தது.அதனால்த்தான் ஒரு பக்கம் தமிழர்கள் துன்பத்தால் துவண்டு கிடக்க,அது பற்றிய எந்தக் கவலையுமில்லாமல்,காலிமுகத்திடலில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி,பகை விதையை மீண்டும் விதைத்து விளைவித்தார்.ஏற்றமிகு நம் இலங்கைத்தாயின் மடியில் மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டார்.

ஆண்டுகள் பல ஓடிவிட்ட இன்றைய நிலையிலும்,முன்னைய ஜனாதிபதியின் பாதையைப் பின்பற்றி இனப்பகை வளர்த்து,தத்தம் தலைமையை உறுதி செய்ய முனையும் தலைவர்கள்இத்தேசத்தின் இரண்டு இனத்தாரிலும் எழுச்சி பெற முயன்று வருவதுதான் கொடுமை.இரத்த வெள்ளத்தில் குளித்து எழுந்த பின்பும்;,அனுபவப்பதிவில்லாத அசடர்கள் அவர்கள்.அழிவின் பாதிப்பை அறியாத அறிவீனர்கள்.அறிவைப் புறந்தள்ளி வெற்றுணர்ச்சியின் வீம்பையே தலைமைப் பண்பாகக் கருதும்,அத்தகைய தலைவர்களைப் பின்பற்றவும்,இரு இனத்திலும் இன்றும் சிலர் இருக்கவே செய்கின்றனர்.அழிவுக்கு மீண்டும் மீண்டும் வித்திட நினைக்கும்,அவ் அறிவிலிகளை என் செய்ய?

இயற்கை,

இந்நிலையில்த்தான் பேரினத்தார்க்குப் பேரிடர் விளைத்திருக்கிறது.‘நமக்கு அழிவு நிகழ்த்திய மாதத்திலேயே,அவர்க்கும் அழிவு நிகழ்ந்த அதிசயத்தைப் பார்த்தீர்களா?’ என்று,மனிதாபிமானமே இல்லாமல்,மானுட வீழச்சியை மகிழ்ந்து கொண்டாட நினைக்கின்றனர் சிலர்.‘பேஸ்புக்கிலும்’ ‘டுவிற்றரிலும்’ ‘வாட்சப்பிலும்’ ‘வைபரிலுமாக’,தம் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்து,மானுட வீழ்ச்சியில் மகிழ்வு கொண்டாடுகிறது அக்கீழ்மைக் கூட்டம்.

ஆனாலும் மானுடம் மாளவில்லை.அச்சிறுமதியார் செயலையும் தாண்டி,“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்தம் மானுட நேசிப்பை,உலகறிய உரத்துச் சொன்ன சங்கப் புலவர்தம்,பாரம்பரியத்தில் வந்த தமிழர்தாம் நாம் என நிரூபித்து,இடருற்ற பேரினத்தார்க்கு கைகொடுக்கவும் கைகொடுப்பிக்கவுமாய்,முனைந்து நிற்கும் தமிழ்ச்சமூகம் சார்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகள்,தமிழினத்தைத் தலைநிமிரச் செய்திருக்கின்றன.

இடருற்ற சிங்கள மக்களுக்கு உதவுவதற்காய்,தமிழ் மக்கள் மத்தியில் உதவி கோரி நிற்கிறது அகில இலங்கை இந்துமாமன்றம்.அதுபோலவே வடமாகாண வர்;த்தகர்சங்கம்,பேரினத்தார்க்கு உதவ பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.இப்படியாய், இன்னும் பல அமைப்புக்களின் முயற்சிகள் பற்றி,அடுத்தடுத்து வரும் செய்திகளைக் கண்டு,தமிழர்தம் மனங்களில் மானுடம் சாகவில்லை எனும் உண்மை தெளிவாக,தலைநிமிர்ந்து நிற்கிறோம் நாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜூன் முதலாம் திகதியாகிய இன்று,ஊடகங்களில் வெளிப்பட்டிருக்கும் ஓர் செய்தி,உள்ளத்தில் உவப்பையும், உற்சாகத்தையும் விளைவிக்கிறது.அமெரிக்காவில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின்,தலைமைப் பிரதிநிதியாகிய விசுவநாதன் உருத்திரகுமார்,‘இயற்கை அனர்த்தத்தால் இடருற்ற இலங்கை மக்களுக்கு உதவ முன்வாருங்கள்’ என,புலம்பெயர் தமிழர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.இதுதான் ஆனந்தம் தந்த அச்செய்தி.பாராட்டப்படவேண்டிய நல்ல முன்னுதாரணம்.

போரும் பகையும் புலம்பெயர் தமிழர்களுக்கு பொழுதுபோக்கு..தமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு,நம்;மக்களின் பாதுகாப்பைப் பலயீனப்படுத்துவதே அவர்கள் வேலை..தமிழர்களை குறுகிய மனம் எனும் குட்டைக்குள் தள்ளுகிறவர்கள் அவர்கள்..இங்ஙனமாய் இதுவரை புலம்பெயர் தமிழர்மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை,உருத்திரகுமாரின் அறிக்கை உடைத்தெறிந்திருக்கிறது.இனப்பகை கடந்து சிந்திக்கவும் எங்களால் முடியும் என உரைத்திருக்கிறார் அவர்.

பாராட்டுக்கள்.

 தமிழர்கள், யார்க்கும் எதிரிகள் அல்லர்.அவர்கள் தமக்கான நியாயபூர்வமான உரிமைகளைக் கோரியும்,அநியாயமாய் தம் மேல் திணிக்கப்படும் அடக்குமுறைகளை எதிர்த்துமே போராடி வருகின்றனர்.தமது உரிமைகளைக் கோரும் அதே நேரத்தில்,மற்றையவர் உரிமைகளை மதிக்கவும், மானுடத்தை நேசிக்கவும் அவர்கள் தயங்கார் எனும்,உயரிய செய்தியை பேரினத்தார்க்கு இயற்கை விளைவித்திருக்கும் இவ் இடர் நேரத்தில்,தெளிவாக, துணிவாக, நியாயபூர்வமாக தமிழினம் உரைத்திருக்கிறது.

புறமுதுகிட்டவனோடு போர் செய்தல் ஆகாது என,போர்க்களத்திலேயே அறம் பேணி நிமிர்ந்தவர்கள் தமிழர்கள்.அந்நிமிர்வை இன்று தக்கநேரத்தில் தரணிக்கு நிரூபித்த,தக்கார் அனைவரையும் தமிழினத்தார் வணங்கி நிற்கின்றனர்.தமிழர்தம் இந்த நேசிப்புச் சமிக்ஞையை,பேரினத்தாரின் இதயங்கள் நேர்மையாய்க் கவனிக்குமாயின்,இம்மண்ணில் பல தசாப்தங்களாய் இனங்களைப் பிரித்து நீண்டு கிடக்கும்,இனப்பிரச்சினை எனும் இரும்பு வேலி,நூல்வேலியாய் நொடியில் அறுந்து போம்.இலங்கை அன்னை ஏற்றமுறுவாள்.அவ் ஏற்றத்திற்கு வழி செய்து,இடருற்று பேரினத்தார் இருக்கும் இந்நேரத்தில்,‘நாம் இருக்கிறோம் அஞ்ஞாதீர்!’ என,நல்ல தருணத்தில் நட்புக்கரம் நீட்டியுள்ள தமிழினத்தார் அனைவரையும்,மனமார வாழ்த்துகிறேன்.வள்ளுவர் வழிநின்று கேட்டிலும் உறுதி விளைவித்திருக்கும் அப்பெரியாரை,போற்றி மகிழ்கிறது என் உள்ளம்.

முடிந்து போன தலைமுறையோடு மூண்ட நம் இனப்பகை முடியட்டும்.புதிய தலைமுறை பகையில்லாப் புத்திலங்கையை உருவாக்கட்டும்.இனம் சார்ந்த பிரச்சினைகளில் வீரியத்தோடு செயற்படும்,நம் பல்கலைக்கழக இளைஞர்களுக்கு ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.உங்கள் உயர்வை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் தருணம் இது.எல்லா விடயங்களிலும் ஒன்றுகூடி இயங்குவது போலவே,பேரினத்தார் பேரிடர்ப்பட்டிருக்கும் இந்நேரத்திலும்,ஒன்றுகூடி உதவிக்கரம் நீட்ட அவர்தமை நாடி ஓடிச் செல்லுங்கள்.கூட்டம் கூடி, குழுக்கள் அமைத்து,பரிதவிக்கும் மக்கள் வாழும் பகுதிக்கெல்லாம் உங்களின் பயணம் உடன் நடக்கட்டும்.ஆகா! இவர்க்கா நாம் தவறிழைத்தோம் என,

அவர்களை ஏங்க வைக்க கிடைத்திருக்கும் தருணம் இது.அதனை விட்டுவிடாதீர்கள்.நீங்கள்தான் இம்மண்ணின் நாளைய தலைவர்கள்.அழுக்கை விதைத்து அசிங்கத்தை அறுவடை செய்த,முன்னைய தலைவர்களைப் போல அல்லாமல்,அன்பை விதைத்து அமைதியை அறுவடை செய்ய நீங்கள் முன்வரவேண்டும்.இஃது என் அன்பு வேண்டுகோள்.

நிறைவாக,

வெள்ள அனர்த்தம் தொடங்கி ஒருவாரம் முடிந்திருக்கும்,ஜூன் மாதம் பிறந்த இன்றைய நிலையிலும்,தமிழ்த்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் எவரிடமிருந்தும்,சிங்கள மக்களுக்கான அனுதாபச் செய்திகளோ, ஆதரவு முயற்சிகளோ,வெளிவந்ததாய்த் தெரியவில்லை.தம் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி,இடருற்ற சிங்கள மக்கள் மத்தியில் சென்று பணியாற்ற,அவர்களுள் எவரும் இன்றுவரை முயன்றதாயும் அறியவில்லை.அனைத்து இலங்கையருக்கும் பொதுவான,எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்றிருக்கும் சம்பந்தன் ஐயாவும்,இவ் இடர்கண்டும் மௌனமாய் இருக்கிறார்.அறிக்கை அரசியல் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கும் நம் வடமாகாண முதலமைச்சரும்,இதுவரை இவ் இடர் பற்றி ஏதும் பேசியதாய்த் தெரியவில்லை.அனைத்துத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து,இன்று இடருற்ற சிங்கள மக்கள் மத்தியில் போய் நின்றிருந்தால்,எத்துணை பெருமையாய் இருந்திருக்கும்.தலைவர்கள்தான் மக்களுக்கு வழிகாட்டவேண்டும்.இங்கோ மக்கள் தலைவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.என்ன செய்ய? நம் விதி அப்படியிருக்கிறது.நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவரின் அறிக்கையின் பின்னேனும்,நமது நாடுகடவாத் தலைவர்களின் புத்தியில் உண்மை உறைக்கட்டும்!

uharam.com 01 06 2017

Published in Tamil