தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 87

12 12 2017

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 87  தமிழ்த் தலைமையின் மௌனமும் ஜே. ஆரின் வெற்றியும்

- என்.கே. அஷோக்பரன் LLB (Hons)

தமிழ்த் தரப்பின் மௌனம்
தன்னையும், ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் கொல்வதற்கான ‘நக்ஸலைட் சதி’ ஒன்றிருக்கிறது என்று பெரும் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதன் காரணமாக அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து, பொலிஸ் மற்றும் படைகள் என ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரத்தினையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பில் வெல்வதற்கான சகல கைங்கரியங்களையும் தகிடுதத்தங்களையும் முன்னெடுத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவான பிரசாரம், அதாவது விளக்குச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்

என்ற பிரசாரம் அரசாங்க இயந்திரத்தின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டது.
அவ்வேளையில், அதற்கு மாற்றான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை அரசாங்க இயந்திரத்தின் துணை கொண்டு முடக்கும் வேலைகளும் நடைபெற்றன. பத்திரிகைகள், அச்சகங்கள் மூடப்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்; தடுத்து வைக்கப்பட்டார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டார்கள். இப்படியாக நாடே பதற்றமானதொரு சூழலினை எதிர்கொண்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தினை நீட்டிப்பதை நாம் எதிர்க்கிறோம் என்று அறிவித்ததோடு தம்பணி நிறைவுற்றதைப் போல, எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மௌனம் காத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிரான எவ்வித செயல்துடிப்புமிக்க பிரசாரத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முன்னெடுக்கவில்லை என்பதுடன், அத்தகைய பிரசாரத்தை முன்னெடுத்த ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்துகூடச் செயற்படவில்லை.

1982 நவம்பர் நான்காம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுவானது, தாம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்ததுடன் நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைவதுடன் தாம் தமது பதவிகளைவிட்டு விலகுவதாகவும் முடிவெடுத்தது. அதன்படி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் இந்த நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும்போதான தமது பதவிவிலகல் கடிதங்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திடம் கையளித்தனர்.
இது மட்டும்தான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிக்கும் இந்தச் சர்வசனவாக்கெடுப்பு தொடர்பில் செய்த ஒரே செயல்துடிப்புமிக்க விடயம். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இந்த மௌனத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சர்வசனவாக்கெடுப்பில் தமக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்போவதில்லை என்று தனக்கு உறுதியளித்திருப்பதாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பகிரங்கமாகவே கூறியிருந்தார். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்ற செய்தியைத் தமிழ் மக்களுக்கு அவர் வழங்க எண்ணியிருக்கலாம்.
ஜே.ஆரின் இந்தப் பகிரங்க அறிவிப்புக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை மௌனத்தையே பதிலாகத் தந்தது. இந்த அமைதியையும் மௌனத்தையும் தமிழ்த் தலைமையின் பெரும் இராஜதந்திர நகர்வாகச் சிலர் வியாக்கியானம் செய்கின்றனர். நடைமுறை விடயங்களையும் சாத்தியக் கூறுகளையும் கணிக்கும்போது, ஏற்கெனவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தமையினால் 1988 வரை நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ஜே.ஆரே தொடரப்போவது நிச்சயம். மேலும், முழு அரசாங்க இயந்திரமும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே இயங்குகிறது.ஆகவே, இந்தச் சர்வசன வாக்கெடுப்பிலும் ஜே.ஆர் வெற்றி பெறப்போவது ஏறத்தாழ உறுதியான விசயம்.

தமிழ் மக்களது பிரச்சினை சார்ந்து ஏதேனும் முன்னேற்றகரமான அடைவுகள் பெறப்பட வேண்டுமாயின் அது நிச்சயம் ஆளும் அரசாங்கத்தின் இசைவின்றி அடையப்பெறப்பட முடியாது. ஆகவே, அடுத்த ஆறு வருடங்களுக்கு நிச்சயமாகப் பெரும்பான்மைப் பலத்தோடும், நிறைவேற்று அதிகாரத்தோடும் பதவியில் இருக்கப்போகும் ஓர் அரசாங்கத்தை முழுமையாக எதிர்ப்பதிலும், இணக்கப்பாடான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதனூடாகத் தமிழ் மக்களுக்குப் பொருத்தப்பாடானதொரு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்த்தலைமை எண்ணியிருக்கலாம். அதேவேளை, தமது நிலைப்பாட்டை உறுதிசெய்ய நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடையும்போது, பதவிவிலகும் தீர்மானத்தையும் எடுத்திருக்கலாம். ஆகவே, இந்த இராஜதந்திர நகர்வு சரியானது என்பது ஒருசாராரின் வியாக்கியானம். மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இந்த அமைதியை விமர்சிப்பவர்கள், இதனைக் ‘கள்ள மௌனம்’ என்று விமர்சிக்கிறார்கள்.

தனிநாட்டுக்கான மக்களாணையைக் கோரி அதில் வெற்றிபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, அதனை அடைவதற்கான எந்த முன்னோக்கிய நகர்வுகளையும் முன்னெடுக்காத நிலையில், மாவட்ட அபிவிருத்திச் சபைகள், மற்றும் ஒற்றையாட்சிக்குள்ளான அதிகாரப் பகிர்வு என்று அரசாங்கத்திடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. மேடைகளில் தாயகம், தேசியம், விடுதலை என்று பேசியவர்கள் இன்று ஆளும் அரசாங்கத்துக்கு ஆதரவாக மௌனம் காக்கிறார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். தமிழ்த் தலைமைகள் எவ்வாறு நடந்து கொண்டாலும் வடக்கு,கிழக்கு தமிழ் வாக்காளர்கள் தமது நிலைப்பாட்டை மீண்டும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தத் தவறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்வசன வாக்கெடுப்பு முடிவுகள்
பெரும் பரபரப்புகளுக்கு மத்தியிலும், இலங்கை வரலாற்றில் அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ளபோது நடைபெற்ற முதலாவது தேர்தல் என்ற பெருமையோடும், 1982 டிசெம்பர் 22 ஆம் திகதி இலங்கையின் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமாக பதிவுசெய்யப்பட்டிருந்த 8,145,015 வாக்காளர்களில் 5,768,662 வாக்காளர்கள், அதாவது ஏறத்தாழ 70.82%ஆனோர் குறித்த சர்வசன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர். அதில் 5,747,206 (99.63%) வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகக் காணப்பட்டன. வாக்களிப்பு முடிவுகளின் படி, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1989 ஓகஸ்ட் நான்காம் திகதி வரை நீட்டிப்பதற்கு ஆதரவாக 3,141,223 வாக்குகள், அதாவது 54.66% வாக்குகளும் அதற்கு எதிராக 2,605,983 வாக்குகள், அதாவது 45.34% வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இந்த முடிவுகளின் மூலம், ஏறத்தாழ ஆறு வருடங்களுக்கு ஏறத்தாழ வல்லாட்சியொன்றை முன்னெடுக்கத்தக்க பெரும் பலம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் வழங்கப்பட்டது என்று சொல்லலாம்.

இந்த சர்வசன வாக்கெடுப்பு முடிவுகளைத் தேர்தல் மாவட்டங்கள் அடிப்படையில் பார்த்தால், திகாமடுல்ல மாவட்டம் தவிர்ந்த ஏனைய வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் மட்டுமே ஆளும் அரசாங்கத்தினால் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, தமிழர் தாயகம் என்று அடையாளப்படுத்தப்படும் வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் ஏகோபித்து, அரசாங்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதியாகப் பறைசாற்றியிருந்தார்கள்.

இந்தச் சர்வசன வாக்கெடுப்பில், 493,705 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், 290,849 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 265,534 வாக்காளர்கள், அதாவது 91.29%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராகவும் 25,315 வாக்காளர்கள், அதாவது வெறும் 8.7%ஆனோர் மட்டுமே நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 119, 093 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வன்னித் தேர்தல் மாவட்டத்தில், 74,954 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 48,968 வாக்காளர்கள், அதாவது 65.33%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு எதிராகவும் 25,986 வாக்காளர்கள், அதாவது 34.66%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

133,646 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில், 91,338 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். 51,909 வாக்காளர்கள், அதாவது 56.83%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராகவும் 39,429 வாக்காளர்கள், அதாவது 43.16%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

172,480 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 120,453 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதில் 72,971 வாக்காளர்கள், அதாவது 60.58%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராகவும் 47,482 வாக்காளர்கள், அதாவது 39.42%ஆனோர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

ஆகவே, திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் தவிர்ந்த வடக்கு,கிழக்கு நிலப்பரப்பின் அறுதிப் பெரும்பான்மை ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கதுக்கு எதிராகவே அமைந்தது. தமது தலைமைகள் எத்தகைய அமைதி காத்தாலும், அவர்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தாலும், தமிழ் மக்கள் தம்முடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார்கள். அந்தச் செய்தியை மீண்டும் இந்த சர்வசனவாக்கெடுப்பிலும் உறுதிபட தென்னிலங்கைக்கும் உலகத்துக்கும் மீண்டும் எடுத்துரைத்திருந்தார்கள். அன்று, அந்தத் தெளிவு தமிழ் மக்களிடம் நிறையவே இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், ஜே.ஆருக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிராக இத்தகையதொரு உறுதியான நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் எடுத்தமையானது ஜே.ஆருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் விளைவுகளை தமிழ் மக்கள் சந்திக்க நீண்ட காலம் எடுக்கவில்லை. மாபெரும் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால், அது எத்தகைய பயங்கரமான வல்லாட்சியை உருவாக்கும், எத்தகைய அடக்குமுறைகளை தமக்கு எதிரான அப்பாவி மக்கள் மீது பிரயோகிக்கும் என்பதை உலகம் கண்டுகொள்ள ஏறத்தாழ ஏழு மாதங்களே தேவைப்பட்டன. இலங்கை வரலாற்றில் பல இரத்தக்கறை படிந்த கறுப்புப் பக்கங்களின், மிகக் கருகிய பக்கங்கள் எழுதப்படத் தயாராக இருந்தன. அதற்கான ஆரம்ப அறிகுறிகள் சர்வசன வாக்கெடுப்பு இடம்பெற்ற காலப்பகுதியிலேயே வடக்கில் தெரியத்தொடங்கியிருந்தன.

கத்தோலிக்க பாதிரியார்கள் கைது
1982 நவம்பர் 14 ஆம் திகதி கத்தோலிக்க பாதிரியார்களான சிங்கராயர் மற்றும் சின்னராசா ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குருநகர் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். 1982 ஒக்டோபர் 29 ஆம் திகதி, சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இவர்கள் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கத்தோலிக்க பாதிரியார்கள் கைது செய்யப்பட்டமையானது யாழ். கத்தோலிக்க மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பெரும் எதிர்ப்புணர்வையும் எழுச்சியையும் உருவாக்கியிருந்தது. மாணவர்கள், கத்தோலிக்க மதகுருமார் என்போர் குறித்த கைதுகளுக்கெதிராக தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். யாழ். மறைமாவட்ட ஆயரும் குறித்த கைதுகளுக்கெதிராகத் தனது கடுமையான கண்டனத்தை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் ஜே.ஆரோ, ஆளும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமோ இதனைப் பொருட்படுத்தவில்லை. 1982 டிசெம்பர் 15 ஆம் திகதி, கைதுகள் நடந்து ஒரு மாதம் கடந்திருந்த பொழுதில், வவுனியா புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஏறத்தாழ 500 பேர் கூடி, குறித்த கைதுகளுக்கெதிராக இறைவழிபாட்டையும் அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டமொன்றையும் முன்னெடுத்த வேளை, அங்கு தேவாலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியதுடன், அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட மக்கள் மீது கடுமையான தாக்குதலையும் நடத்தி குறித்த கூட்டத்தைக் கலைத்தனர்.

இதேவேளை, 1982 நவம்பர் 18 ஆம் திகதி, குறித்த, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரபல எழுத்தாளராக இருந்த நிர்மலா நித்தியானந்தன் கைது செய்யப்பட்டு, குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முதல் பெண் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த பதற்றம்மிகு சூழலில்தான், தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான தமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகிறது.

அரசியலமைப்புக்கான ஐந்தாவது திருத்தம்
மேலும், இந்தச் சர்வசன வாக்கெடுப்பு முடிவுகளைத் தேர்தல் தொகுதி ரீதியில் ஆராய்ந்தால், மொத்தமிருந்த 168 தொகுதிகளில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 48 தொகுதிகளில் தோல்வியடைந்தது எனலாம், அதாவது பெரும்பான்மையைப் பெறத் தவறியது. இது அந்தந்தத் தொகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கு வேட்டு வைப்பதாக அமைந்தது. இதன்படி 1983 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அமைச்சர், ஆறு பிரதி அமைச்சர்கள், இரண்டு மாவட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தனர்.

அவர்களின் பதவி விலகலுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான நியமனத்தினை குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் செய்ய முடியும். ஆனால், ஜே.ஆரின் திட்டம் வேறாக இருந்தது. அவர் இடைத்தேர்தலுக்குச் செல்ல விரும்பினார். ஆனால், 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பினூடாக ஜே.ஆர் அறிமுகப்படுத்தியிருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ, விருப்புவாக்கு தேர்தல் முறையின் கீழ் இடைத் தேர்தலுக்கான அவசியப்பாடு இருக்கவில்லை. ஆனால், இம்முறையின் கீழ் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகவே, இடைத் தேர்தல் ஒன்றை நடத்துவதானால், அரசியலமைப்புக்கு ஒரு திருத்தத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானது.

ஒரு கட்சியின் செயலாளர் குறித்த வெற்றிடங்களை நிரப்பத் தவறும் பட்சத்தில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துக்காக அரசியலமைப்புக்கு ஐந்தாவது திருத்தம் முன்வைக்கப்பட்டது.அரசியலமைப்புக்கான ஐந்தாவது திருத்தம், நாடாளுமன்றத்தில் 122-0 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில், ஓர் எதிர்ப்பு வாக்குகூட இன்றி நிறைவேற்றப்பட்டது. மைத்ரிபால சேனநாயக்க, எஸ்.டீ.பண்டாரநாயக்க மற்றும் ஹாலிம் இஷாக் ஆகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது, நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர்களைத் தவிர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்த போதும் அவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பின்போது நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்புக்கு ஐந்தாவது திருத்தத்தை முன்வைத்ததனூடாக இடைத் தேர்தல் நடத்துவதற்கான சட்ட ஏற்பாட்டை ஜே.ஆர் அரசாங்கம் உருவாக்கியது.

மாக்கியாவலியின் ‘இளவரசன்’
புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வெறும் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே அது ஐந்து முறை திருத்தப்பட்டுவிட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன், இது ஜே.ஆர் கொண்டிருந்த ஒப்பற்ற அதிகார பலத்தையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது.தான் நினைத்ததைச் செய்வதற்கு அரசியலமைப்பு தடையாக இருப்பின் அதனை மாற்றியமைக்கத்தக்க பெரும் அதிகாரபலம் அவரிடம் குவிந்து கிடந்தது. இடதுசாரிகள் விமர்சித்தது போலவே “ஜே.ஆரின் சர்வாதிகாரம்” இலங்கையில் ஆரம்பமாகியிருந்தது! மாக்கியாவலியின் இளவரசனாக அவர் உருவாகியிருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல.
(அடுத்த வாரம் தொடரும்) yarl.com  17 04 2017