தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 90

02 01 2018

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 90) 1983 ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்: இராணுவத்தின் வெறியாட்டம்

என்.கே. அஷோக்பரன் LLB (Hons)

1983 மே 18 ஆம் திகதி இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்த நிலையில், குறித்த உள்ளூராட்சித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்திருந்ததோடு, தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில், யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்த கே.வி.இரட்ணசிங்கம், எஸ்.எஸ். முத்தையா மற்றும் வல்வெட்டித் துறையில் போட்டியிட இருந்த இன்னொருவர் ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் 1983 ஏப்ரல் 29 ஆம் திகதி சுடப்பட்டார்கள். அவர்கள் சுடப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேர்தலைப் புறக்கணிக்கும் அறிவிப்பை மீறியமையினாலேயே இந்த மரணங்கள் சம்பவித்தன என்று ஒரு துண்டுச்சீட்டில் எழுதப்பட்டிருந்த செய்தியையும் விட்டுச் சென்றிருந்தார்கள். இந்தச் சம்பவம் யாழ். மாவட்டத்தில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதை பெரும் சவாலாக மாற்றியிருந்தது. இந்தச் சம்பவங்களின் பின் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் வட மாகாணத்தில் குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தது.

தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பு எவ்வாறாக இருப்பினும், குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் உறுதியாக இருந்தார்கள். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுடன், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியான முரண்பாட்டு நிலை ஒன்று உருவாகியிருந்தது. ஆனால், வலிமை மிகுந்த தலைவராக அறியப்பட்ட அமிர்தலிங்கம், ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு, அவை தான் வளர்த்துவிட்டதாகப் பரவலாக நம்பப்பட்ட தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாக இருப்பினும், அஞ்சுபவராக இருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மும்முரமான தேர்தல் பிரசாரத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஈடுபட்டிருந்தது. இருதரப்பிடையேயும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த தீ பற்றியெரிய அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

முதல் முறுகல்

1983 மே எட்டாம் திகதி, யாழ்ப்பாணத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாபெரும் பிரசாரக் கூட்டமொன்று அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதனிடையே ஆயுதங்களுடன் நுழைந்த சில விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, கூட்டத்தைக் கலைத்ததுடன், அமிர்தலிங்கத்துக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினார்கள். அங்கு வந்திருந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் இளைஞன் ஒருவன், அமிர்தலிங்கத்தை பார்த்து “30 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேள்வியெழுப்பியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றி, தன்னுடைய நூலில் எம். ஆர். நாராயண் சுவாமி குறிப்பிடுகிறார். அதன் பின்னர், குறித்த கூட்டத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமிர்தலிங்கத்தினுடைய வாகனத்திலேறி, அதனைக் கடத்திக் கொண்டு சென்ற அந்த ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள், அந்த வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து, வாகனத்தின் சக்கரங்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தி, வாகனத்தை ஒரு சுடலை அருகே விட்டுச் சென்றதாகவும் குறித்த நூலில் எம். ஆர். நாராயண் சுவாமி பதிவு செய்கிறார்.

முடிவு தமிழ்மக்கள் கையில்

ஆனால், இதனைக் கண்டு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கலங்கவில்லை. தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்தும் அவரும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் மாறவில்லை. “நாங்கள் ஆயுதங்களைக் கண்டு அஞ்சவில்லை; மக்களின் முடிவு எதுவோ, அதனை ஏற்றுக் கொள்ள நாம் தயார்” என்பதே அமிர்தலிங்கத்தினது நிலைப்பாடாக இருந்தது. தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதிகளான தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களின் விரக்தியின் விளைவாக உண்டான கோபத்தின் பிரதிநிதிகளாக அடையாளம் காணப்படக் கூடிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இந்த வெளிப்படையான முறுகல், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்று. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கப் போகும் முடிவானது, தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பாதையையும் சேர்த்தே தீர்மானிப்பதாக அமைந்தது.

வடக்கில் களமிறங்கிய இராணுவம்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட இருந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலிருந்தே, வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலின் போது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம். அதிலும் குறிப்பாக தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளின் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதை இலங்கையின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உணர்ந்திருந்தது. அதன் விளைவாகத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக இராணுவத்தைக் களமிறக்கியிருந்தது. இதற்காக அநுராதபுர இராணுவ முகாமிலிருந்து மேலதிக படைகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டிருந்தன. வழமையைப் போலல்லாது, வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் தலா ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா மூன்று இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஆனால், இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட அலட்சியத்துடனே நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பை முழுமையாக வழங்குவதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் வசதிகளைக் கூட, தமக்குப் பெற்றுத்தரவில்லை என்றும் அன்று இந்த வாக்குச்சாவடிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிய இராணுவத்தின் படைக் குழுவொன்றுக்குத் தலைமை தாங்கியவரும், 2009 இல் இறுதி யுத்தத்தின் போது, வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று, யுத்த வெற்றியை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்ததாகச் சொல்லும் இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தன்னுடைய ‘நந்திக் கடலுக்கான பாதை’ (ஆங்கிலம்) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

வாக்குச் சாவடி மீது தாக்குதல்

தேர்தல் தினத்தன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் வாக்குச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்தது போலவே, யாழ்ப்பாணத்தின் கந்தர்மடம் எனுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மீது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் கைக்குண்டு ஒன்றை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஓர் இராணுவவீரர் துப்பாக்கிச் சூட்டுக்கிரையானார். அங்கிருந்த மற்ற இரு இராணுவ வீரர்களும் சில பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்திய போதும், அங்கு தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பினர் அங்கிருந்து தப்பிச் செல்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இராணுவத்தின் வெறியாட்டம்

இராணுப்படை வீரன் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டமையானது யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டிருந்த ஏனைய இராணுவ வீரர்களை வெறி கொள்ளச் செய்தது. அவர்களது வெறி ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் மீது வெளிப்பட்டிருந்தால் கூட அதில் ஏதோ நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். அது போராடும் ஆயுதம் தாங்கிய இருதரப்புக்கு இடையான யுத்தம்; ஆனால், இலங்கை இராணுவத்தின் வெறி அப்பாவித் தமிழ் மக்களை நோக்கித் திரும்பியதுதான் மிகக் கொடுமையான விசயம். தேர்தல் முடிவடைந்து, வாக்குப் பெட்டிகளை யாழ். மத்திய கல்லூரிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்த பின், கலைந்த இலங்கை இராணுவத்தின் படைகள், யாழ்ப்பாண நகரை நோக்கி விரைந்தன. யாழ். நகருக்குள் வெறித்தனமாக நுழைந்த இராணுவத்தினர், வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் நெருப்பு வைத்தனர். இந்தக் கோர ஆட்டத்தில் ஏறத்தாழ 64 வீடுகளும் கட்டடங்களும் அழிக்கப்பட்டன. ஏறத்தாழ மூன்று மினி பஸ்கள், ஆறு கார்கள், மூன்று மோட்டார் வண்டிகள், 36 சைக்கிள்கள் அழிக்கப்பட்டன. கட்டுப்பாடின்றி அப்பாவித் தமிழ் மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்திய இலங்கை இராணுவ வீரர்களை உடனடியாகக் கட்டுப்படுத்தும் இயலுமை அங்கிருந்த கட்டளையிடும் அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. பல மணிநேரங்களின் பின்னரே குறித்த வெறியாட்டம் நடத்திய இராணுவ வீரர்களை முகாம்களுக்குள் கொண்டுவர இராணுவத்தின் கட்டளை அதிகாரிகளால் முடிந்தது.

நியாயங்களும் அநியாயங்களும்

தன்னுடைய சக இராணுவீரன் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக சினங்கொண்ட இலங்கை இராணுவ வீரர்கள் சட்டவிரோதமான முறையில் தனியார் சொத்துகளை அழித்தபோது, அதனைக் கண்ட தனக்கு ஒரு வித திருப்தி உணர்வு ஏற்பட்டது என்று மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். அதன் பின்னர், இது தவறு; இப்படி நடக்க விட்டிருக்கக் கூடாது. இதற்குக் காரணமான வீரர்களை அதிரடியாக இலங்கை இராணுவம் விசாரணை நடத்தி இராணுவத்திலிருந்து வெளியேற்றியது என்று ஆயிரம் நியாயங்களை பக்கம் பக்கமாகச் சொன்னாலும் தமிழ் மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் ஏன் வெறுத்தார்கள் என்பதன் காரணம், மேஜர் ஜெனரல் அப்பாவி மக்களின் சொத்துகள் அழித்தொழிக்கப்பட்டபோது, தனக்கு திருப்தி உணர்வொன்று வந்ததாகச் சொன்ன சொற்களில் அடங்கியிருக்கிறது.

ஒரு மக்கள் கூட்டத்தின் துன்பத்தில் நீங்கள் திருப்தி கண்டால், நீங்கள் ஒரு ‘சேடிஸ்ட்’ (மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்). உங்களை அம்மக்கள் வெறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தன்னுடைய அதே நூலிலே ரோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) இலங்கை இராணுவ வீரர்கள் மீது மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்கள் மீது கூடத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். தன் பிள்ளையை இராணுவத்துக்கு அனுப்பியதற்காக ஜே.வி.பி, ஓர் இராணுவ வீரனின் தந்தையைக் கொன்றதாகக் குறிப்பிடுகிறார். ஜே.வி.பி இராணுவ வீரர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கொன்றபோது, ஒரு சக இராணுவ வீரனைக் கொன்ற கோபத்தை இலங்கை இராணுவம் அப்பாவி சிங்கள மக்கள் மீதும், அவர்களது சொத்துகள் மீதும் காட்டவில்லையே! ஜே.வி.பிக்கும் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் இடையில் வித்தியாசம் காணத்தெரிந்த இலங்கை இராணுவத்துக்கு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது ஏன்? இதற்கு இனவெறி என்பதைத் தாண்டி வேறொரு வியாக்கியானமும் இருந்ததாக கருதுவது கடினம். தமது சக இராணுவ வீரனைக் கொன்ற ஆயுததாரிகள் மீது, அந்த அமைப்பினர் மீது இராணுவம் தாக்குதலை மேற்கொண்டிருந்தால், அது முற்றிலும் நியாயப்படுத்தத் தக்கதொன்று. ஆனால், யாழ். நகருக்குள் நுழைந்து அப்பாவித் தமிழ் மக்களின் சொத்துகளை அழித்தொழித்ததுடன், ஓர் அப்பாவிக் குடிமகனின் உயிரையும் பறித்த இலங்கை இராணுவத்தின் இந்த வெறியாட்டத்துக்கு எந்த நியாயங்களும் சொல்லப்பட முடியாது. தமிழ் மக்களின் முடிவு தமிழ் மக்கள் ஏன் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை ஆதரித்தார்கள் என்ற கேள்வி இலங்கை அரசியல் அரங்கிலும், சர்வதேசத்திலும் முன்வைக்கப்படும் ஒரு கேள்வியாகும். தமிழ் மக்கள் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை ஆதரித்தார்கள் என்பதைவிட, அந்த ஆயுதக் குழுக்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் பொருத்தமான கருத்தாக இருக்கும். உள்ளூராட்சித் தேர்தலின் வாக்களிப்பு வீதமும் தமிழ் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தமக்கான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டிருந்ததையே சுட்டிக் காட்டி நின்றது.

(அடுத்த வாரம் தொடரும்) may 16 2017