Easy Facebook Share Button

10 05 2014

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம் 

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப் பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம். எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.

பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் குணமாகும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க உதவும்.

மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன் வெளியேற்றும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. இரத்தத்தில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்து சேருவது ஆபத்தானது. இக் கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்கும். இரத்தம் தூய்மைப்படும். கண் தொடர்பான நோய்கள் (கண்வலி, கண் எரிச்சல், கண்களிலிருந்து நீர்வடிதல், பார்வை மங்கல், மாலைக்கண்) போன்ற நோய்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும். வயிற்று வலியுடன் உப்பு சத்தும் ஏற்படுவதுண்டு. அதற்கு முருங்கைக் கீரையின் சாற்றுடன் உப்பு, வசம்புத் தூளையும் சேர்த்துக் குழைத்து வயிற்றின் மேல் பற்றாகப் போட வலியும் உப்பு சத்தும் சமன்படும்.

குழந்தை பிறந்து பால் சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். முருங்கைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதனால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் குணமடையும். ஆகையால் தினம் ஒரு கீரையை உண்டு முன்கூட்டியே நோய் வராமல் பாதுகாக்க இது ஓர் அற்புதமான இயற்கை வழி. இது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

virakesari.lk nov 2013  -எம். என். ஜாஷீம் சித்த ஆயுர்வேதம் (பாரம்பரியம்) சாய்ந்தமருது.