Easy Facebook Share Button

12 05 2014 

மார்பக புற்றுநோயை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புச் சத்து

கொழுப்பு சத்தின் பொதுவான ஒரு பக்க விளைவாக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதாக அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குறிப்பாக மார்பகப் புற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கு கொழுப்புசத்து குறைவான ஸ்டேடின்ஸ் போன்ற மருந்து வகைகள் உதவக்கூடும் என்று இவர்கள் சமீபத்தில் வெளிவந்துள்ள மருத்துவப் பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

 

அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் புற்றுநோய் அதிகரிப்பதற்கான ஈஸ்ட்ரோஜென் என்னும் ஓமோனை உடலில் உற்பத்தி செய்வதாக முந்தைய ஆய்வுகள் தெரிவித்திருந்தன. டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடலில் அதிக கொழுப்பு சேரும்போது அது 27-ஹெச்ஸி என்ற மூலக்கூறாகப் பிரிந்து சில திசுக்களில் ஈஸ்ட்ரோஜென் விளைவை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர்.

இந்த சோதனையை எலிகளிடத்தில் மேற்கொண்டபோது அவற்றின் புற்றுநோய் செல்கள் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் இந்த மூலக்கூறினை ஊசி மருந்தாக உடலில் ஏற்றும்போதும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தாங்கள் கண்டறிந்தது ஒரு மூலக்கூறின் சக்தி மட்டுமே என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர் டொனால்ட் மெக்டோனல், ஆரோக்கியமான உணவு வகைகளுக்கு மாறுவதன் மூலமும், கொழுப்புச்சத்து குறைவான மருந்துகளை உட்கொள்வதன் மூலமும் இதற்குத் தீர்வு காணமுடியும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.