14 02 2025
புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை
எம்மில் சிலர் புகை பிடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். புகை பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்ற விழிப்புணர்வை பொருட்படுத்தாது தொடர்ந்து புகை பழக்கத்தை மேற்கொள்ளும் இவர்களுக்கு திடீரென்று நுரையீரல் பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலான அளவில் பிரத்யேக திரவம் சேகரமாகி மூச்சு விடுவதை கடினமாக்கி விடும். இதனை மருத்துவ மொழியில் புளூரல் எஃபியூஸன் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நெஞ்சு வலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உட்கார்ந்து இருக்கும்போதும் நிற்கும் போதும் மூச்சு விடுவதில் அசௌகரியம் என பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய நுரையீரல் பகுதியில் இயல்பான அளவை விட கூடுதலாக நீர் கோர்த்திருக்கிறது என்பதனை உணர்ந்து, உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று நுரையீரல் சிகிச்சை நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
உங்களுடைய நுரையீரல் பகுதிக்கும் மார்பு பகுதிக்கும் இடையே புளூரல் எனும் மெல்லிய சவ்வு அமைய பெற்றிருக்கிறது. இந்த சவ்வு பகுதியில் சிறிய அளவிலான திரவம் இருக்கும். இவை இயற்கையாக உள்ள பாதுகாப்பு அம்சமாகும். இதன் காரணமாக நீங்கள் சுவாசிக்கும் போது நுரையீரல் விரிவடைவதை எளிதாக்குகிறது. ஆனால் சிலருக்கு இத்தகைய சவ்வு பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலான அளவிற்கு நீர் சேகரமாகும் . இது நுரையீரலின் இயங்கு தன்மையை பாதிக்கிறது. இதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் நுரையீரல் இயங்குத்திறன் பாதிப்பு பாரிய அளவில் ஏற்பட்டு, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும்.
இதய செயலிழப்பு, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய் ,மார்பகப் புற்று நோய், இதய பாதிப்பிற்கான சத்திர சிகிச்சை, காச நோய், கணைய பாதிப்பு, உணவு குழாய் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளுக்கு மார்பக எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், நுரையீரல் பகுதியில் உள்ள பிரத்யேக திரவ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். முதலில் விலாப் பகுதியில் சிறிய அளவில் பிரத்யேகமாக துளையிட்டு அதனுள் குழாயை செலுத்தி நுரையீரல் பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலாக சேமிக்கப்பட்டிருக்கும் நீரை வெளியேற்றுவார்கள். இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் . சிலருக்கு அப்பகுதியில் உள்ள நீர் வெளியேறுவதில் தடை இருந்தால் பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் அதனை நீக்கி, சீரமைத்து முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் சபரி நாத் தொகுப்பு அனுஷா
விழிப்புணர்வை பொருட்படுத்தாது தொடர்ந்து புகை பழக்கத்தை மேற்கொள்ளும் இவர்களுக்கு திடீரென்று நுரையீரல் பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலான அளவில் பிரத்யேக திரவம்
Published By: 03 Feb, 2025 virakesari.lk