மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்
“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்.
“இவவோடை டின்னர் சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால் தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு ஸ்டைல் காட்டுவா” என நீட்டி முடித்தார். மற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல் வாகினராக இருக்கிறார்கள்.
மாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேரநெருக்கடி மிக்கதாகவும் மாறிவிட்டது. பல்வேறு பராக்குகளுக்கு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இரசிப்பதற்கோ, நன்கு மென்று தின்பதற்கோ நேரமின்றி வாயில் போடுவதும் விழுங்குவதுமாக அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். இதனால் தானோ என்னவோ அவர்கள் பெரும்பாலும் குண்டுப் பீப்பாக்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள். மெதுவாக உண்ணல் அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, ஆறுதலாகச் சாப்பிடுவதானது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்கிறது. 35 அதிக எடையுள்ளவர்களையும் 35 சாதாரண எடை உள்ளவர்களையும் கொண்டு 2 நாட்களுக்கு மட்டும் செய்யப்பட்ட ஆய்வு பற்றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்சிகையின் ஜனவரி 2ஆம் திகதி இதழில் வெளியாகியுள்ளது.
அதன் பிரகாரம் சாதாரண எடை உள்ளவர்கள் ஆறுதலாகச் சாப்பிடும்போது வழமையை விட 88 கலோரிகள் குறைவாகவே உள்ளெடுத்திருந்தனர். ஆனால் அதிக எடையுள்ளவர்கள் 58 கலோரிகள் குறைவாக உள்ளெடுத்திருந்தனர். வேறுபாடுகள் இருந்தபோதும் உட்கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உணவின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்தது. ஆறுதலாக சாப்பிடுவது என்பது சுமார் 22 நிமிடங்களை எடுத்தது. விரைவாகச் சாப்பிடுவது சுமார் 8 நிமிடங்களை எடுத்தது.
ஆறுதலாக சாப்பிடும்போது அதீத எடையுள்ளவர்கள் வழமையை விட 33 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம் எனவும் அந்த ஆய்வு கூறியது. அதேவேளை சாதாரண எடையுள்ளவர்களும் சற்றுக் குறைவாக அதாவது 27 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்பிக்கை எங்களில் பலரிடையே இருக்கிறது. உணவு சமிபாட்டு நொதியங்களை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமிபாடடைவதைப் பாதிக்கும் என்பது தவறான கருத்தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்களை சிறியதாக்கி கரையச் செய்வதால் சமிபாடு துரிதமாக்கி விரைவில் உறிஞ்ச செய்யும் என்பதே உண்மையாகும்.
இந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் ஞாபகப்படுத்தலாம். ஒருவர் உணவு உட்கொள்கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறுவதற்கு உட்கொள்ள ஆரம்பித்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் மூளைக்குத் தேவைப்படுகிறது என்பதாகும். இதைத் தவிர ஜப்பானில் 1700 இளம் பெண்களிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் ஆறுதலாகச் சாப்பிடுவதால் விரைவிலேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது என்றும் அதனால் அவர்கள் உள்ளெடுக்கும் உணவின் கலோரி வலு குறைவாகவே இருக்கிறது எனவும் கூறியது. University of Rhode Island செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது ஆறுதலாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 28.4 கிராமை உட்கொள்வதாகவும், இடைநடுவான வேகத்தில் உண்பவர்கள் நிமிடத்திற்கு 56.7 கிராமை உட்கொள்வதாகவும், வேகமாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 88 கிராமை உட்கொள்வதாகவும் கண்டறிந்தது.
நன்மைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறுதலாக உண்பதின் நன்மைகளை நாம் சுலபமாக ஊகித்து அறியலாம். ஆறுதலாக சாப்பிடும்போது குறைந்த அளவு கலோரிகளே உள்ளெடுக்கப்படுகிறது. இது ஏன்? விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதீதமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக ஆறுதலாகச் சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் ஓரளவு உண்ணும்போதே 20 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது. ஆறுதலாகச் சாப்பிடும்போது நீர் அருந்துவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைப்பதால் உணவின் இடையே நீர் அருந்துவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.
நிதானமாகச் சாப்பிடும்போது நன்கு மென்று உண்ணக் கூடியதாக இருக்கும். மென்று உண்ணுவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரிமானம் எச்சிலில் ஆரம்பித்து விடுகிறது. எனவே ஆறுதலாகச் சாப்படும்போது உணவு நன்கு ஜீரணமாகும். உணவை ஆறுதலாக சாப்பிடும்போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும் என்பது உண்மையே. ஆறுதலாக உண்ணும்போது சுவைகளை சப்புக்கொட்டி ரசிக்க முடிகிறது. வாசனையை நன்கு நுகர முடிகிறது. உணவு தயாரிக்கப்பட்ட விதத்தையும் அதன் பதத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் மனத் திருப்தி ஏற்படுகிறது. இதனால் உணவு உண்ணும் செயற்பாடானது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
உணவு வேளையை மேலும் மகிழ்ச்சியாக்க நாம் செய்ய வேண்டியது என்ன? இரசனையோடு உண்ணுங்கள் மென்மையான இசையை பின்னணியில் இசைக்க வையுங்கள். பளீரெனத் தெறிக்கும் ஒளிகளை அணைத்து மெல்லிய இதமான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். வேறு சுவாரஷ்யமான விடயங்களில் மனத்தைச் செலுத்தாதீர்கள். தொலைக்காட்சி பார்ப்பது, விவாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிருங்கள். உணவில் மட்டுமே மனத்தைச் செலுத்துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுயஉணர்வை மிகைப்படுத்தி அரிய அனுபவத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும். திருப்தி கிட்டும். மற்றவர்களுடன் சேர்ந்து உண்ணும்போது, இடையில் ஒரு சில நிமிடங்களுக்கு உண்பதை நிறுத்தி அவர்களுடன் சில வார்த்தைகள் பேசுங்கள். நேரம் கழியும் விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்டிவிடும். ஆயினும் சுவாரஷ்யமான விடயங்களை ஆரம்பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறிவிடாதீர்கள்.
நன்கு சாப்பிட்டு வயிறு நிறைந்திருக்கும் தருணத்தில்தானே பொதுவாக ஈற்றுணவு (dessert) வருகிறது. இருந்தபோதும் ஈற்றுணவின் இனிப்பும் நறுமணமும் நிறைந்த வயிறு நிறைந்ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றை சாப்பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். முதலில் ஈற்றுணவை சுவையுங்கள். கேக் அல்லது புடிங் போன்ற எது கிடைத்தாலும் சிறுகக் கடியுங்கள். அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்கிய உணவிற்கு செல்லுங்கள். தேவையற்ற கலோரிகளை உள்ளெடுப்பதை இதனால் தடுக்க முடியும். பழங்களும் காய்கறிகளும் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்பிட கூடிய நேரம் தேவைப்படுவதால் நீங்கள் ஆறுதலாகவே சாப்பிட முடியும். அது முன்கூறிய நன்மைகளைத் தரும்.
உணவு உட்கொள்ளும் பாத்திரத்தை சிறிதாகத் தேர்ந்தெடுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும். மெதுவாகச் சாப்பிடுங்கள் என்பது சொல்வதற்கு சுலபம். ஆனால் மும்முரமான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்பிடுவது கஷ்டம்தான். ஆனால் உணவு நேரங்களை ஒழுங்கு முறையில் கடைப்பிடித்து நேரம் தவறாது உண்ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்தால் நேரம் ஒதுக்குவதில் சிரமமிருக்காது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள். அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்.
virakesari.lk 06 09 2014