Easy Facebook Share Button

12 06 2015

நீரிழிவு நோயும் அதன் வகைகளும்

நம் உடல் திசுக்களால் ஆனவை. உடலின் உள்ளே உள்ள திசுக்கள் நம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றன. அந்தத் திசுக்கள் இயங்கத் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பிரித்து வழங்குவதற்கு, ‘இன்சுலின்’ உதவுகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது, நம் உடலில் உள்ள கணையமே. இது, நமது வயிற்றின் பின் பகுதியில் உள்ளது. சில பல காரணிகளால் இன்சுலினின் அளவு குறையும்போது, திசுக்கள், தமக்குத் தேவையான குளுக்கோஸைப் பெற்றுக்கொள்ள முடியாததால், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது.

 இவ்வாறு இன்சுலின் குறைபாட்டால் இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ், இதயம், சிறுநீரகங்கள், கண்கள், நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களைப் பாதிக்கிறது. இயற்கையாக இரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் பிரித்தெடுக்கப்படாதவிடத்து, அதை மருந்துகள் மூலம் சரிக்கட்டாமல் விட்டுவிட்டால், பல மோசமான விளைவுகள் உண்டாகும். இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும். நீரிழிவு நோயை ‘டைப் 1 டயாபடிஸ்’, ‘டைப் 2 டாயாபடிஸ்’, ‘கெஸ்டேஷனல் டயாபடிஸ்’ (Gesgational diabetes) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

டைப் 1: குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவை டைப் 1 டயாபடிஸ் என்போம். அடிக்கடி தண்ணீர் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், திடீரென எடை குறைதல் என்பன இதன் அறிகுறிகள். நீரிழிவு மரபு சார்ந்த ஒரு நோய்தான் என்றாலும், டைப் 1 பரம்பரைக் காரணிகளால் வருவதல்ல. ஆனால் இந்நோய் பரம்பரையில் இருப்பின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வயதான பின் இது தோன்ற வாய்ப்பு உண்டு. டைப் 2: இது, படிப்படியாக அதிகரித்து, தீராத நோயாக மாறும். இந்நோய் முற்றிய பின்னர் மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் கண் தொடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும். பெரியவர்களும், இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தாகம் ஏற்படும். இது ஒரு பரம்பரை நோய். உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பவர்களே இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். ஆரம்ப கட்டத்திலேயே இது குறித்து முன்னெச்சரிக்கையாக இருந்தால் பாதிப்புகளைக் குறைக்கலாம். இரத்தத்தின் சர்க்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

கெஸ்டேஷனல் டயபாடிஸ்: இது, கருவுற்ற காலங்களில் தோன்றும் நீரிழிவைக் குறிக்கும். கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாகவே சரியாகிவிடும். இன்சுலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது. இதை உணவுக் கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துகளை இவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விடச் சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சற்றுக் குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, இவர்கள் பிரசவத்திற்குப் பிறகு வருடம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு என்பது மாச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தாகும். மாச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்ச்சத்து (fibre content) இருப்பதால், சர்க்கரை இரத்தத்தில் ஒரே சீராகச் சேருகிறது. காய்கறி, பழங்களைச் சேர்த்துக் கொள்ளும் போது நார்ச்சத்து உள்ளவற்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்குக் கீழே விளைவதைத் தவிர்க்க வேண்டும். (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்) பழங்களில் சப்போட்டா, பலாப்பழம், சீத்தா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழ வகைகளில் ஆப்பிள், வாழை. ஆரஞ்சு, பேரீக்காய். பப்பாளி, வெள்ளரிப் பழம், கொய்யாப்பழம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட அளவுக்கு சாப்பிட்டுக் கொள்ளலாம். பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரிய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரிய ஆப்பிள், பெரிய மாம்பழம், பெரிய கொய்யாப்பழம், சப்போட்டா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், சர்க்கரையில்லாத கோப்பி, தேநீர், பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜுஸ், தக்காளி சூப் போன்றவற்றை குறிப்பிட்ட அளவு சேர்த்துக் கொள்ளலாம். சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மது வகைகள், ஆப்பிள் ஜுஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை, கேக் முதலியவற்றை மறந்துவிடுவது நல்லது. கேழ்வரகு, கோதுமைக் கஞ்சி நல்லது.

virakesari.lk 23 06 2014