குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பாலே சிறந்தது
புதிதாகப் பிறக்கும் குழந்தையொன்றின் வளர்ச்சிப்படிகளில் தாய்ப்பால் ஊட்டுவது இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெறுகின்றது . அதேவேளை, தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்ப்புப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 42 வீதத்தால் குறைவாகும் என புதிய அறிவியல் ஆராய்ச்சிகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
அதற்கமைய தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் பற்றியும் அதனை மென்மேலும் ஊக்குவிக்கவும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் சுகாதார அமைச்சினாலும் சுகாதார கல்விப்பணியகத்தாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பார்க்கின்ற போது அண்மையில் "தாய்ப்பால் ஊட்டுவோம் வாழ்வை வெல்வோம்" என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளர் கருத்தரங்கொன்று சுகாதாரக் கல்விப் பணியகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் விசேட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அதன்போது அங்கு பகிர்ந்தளிக்கப்பட்டக் கருத்துக்கள் பதிவுசெய்யப்படுகின்றன.
இந்நிகழ்வில் முதலாவதாக "தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம்" பற்றி கலந்துரையாடிய வைத்திய நிபுணர் ஹீரண்யா ஜயவிக்ரம பேசுகையில், ஒரு குழந்தை பிறந்தது முதல் தொடர்ச்சியாக ஆறுமாதகாலம் தாய்ப்பால் ஊட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப்பிடித்துள்ளது. அந்தவகையில் தாய்ப்பாலானது ஊட்டச்சத்து, போசனை என்பவற்றையும் தாண்டி ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தின் அருமருந்தாகக் காணப்படுகின்றது. அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மதிப்பீட்டறிக்கைகளின் பிரகாரம் இலங்கையில் சிசு மரணவீதமானது 8.7 வீதமாகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சிசுவின் வளர்ச்சிக்கு காரணமாக தாய்ப்பாலில் அடங்கியுள்ள "அக்சிட்டோசின்" எனப்படும் மூலக்கூறானது குழந்தையின் எதிர்கால நல்வாழ்வுக்கு கால்கோலாக அமைகின்றது. இன்று உலகளாவிய ரீதியில் தாய்ப்பாலுக்குப் பதிலாக புட்டிப்பால் பருக்கும் வழக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலென்பது அருகிவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு குறிப்பாக ஒரு சிலரின் மூடநம்பிக்கைகளும் காரணமாகவுள்ளன. தாய்ப்பால் ஊட்டினால் தங்களது மேனியின் வனப்புக் குறைந்து விடுமென கருதுவோரும் சமூகத்தில் இருப்பதும் தாய்ப்பால் ஊட்டுவதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கக் காரணமாகவுள்ளது. குழந்தைக்கு கிரமமாகத் தாய்ப்பால் ஊட்டுவதினால் அவர்களை நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாகவுள்ளது. அதேபோல, குழந்தையின் வளர்ச்சியில் குறிப்பாக அறிவு வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுமென்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. புதிதாக பிறக்கும் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை வலியுறுத்தி தேசியக்கொள்கைகள் அமுலாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து முதலாவது மணித்தியாலத்துக்குள் தாய்ப்பால் ஊட்டல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலதிக ஆகாரங்களை கொடுக்கத் தொடங்கி இரண்டு வருடங்கள் வரையில் கட்டாயமாக குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
புட்டிப்பால் பருக்குவது ( feeding bottle) போன்ற வழிமுறைகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. கடந்த 2000 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட சில மிலேனிய வருட குறிக்கோள்களின் போது தாய்ப்பாலூட்டலைப்பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் உலகின் பல்வேறு வலயங்கள் மற்றும் பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த 192 நாடுகள் பங்குபற்றியிருந்தன. அதன் 2015ஆம் ஆண்டளவில் தாய்ப்பாலூட்டும் வீதம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. மேலும் சந்தைகளில் விற்கும் பால்மாக்களை குழந்தைகளுக்கு பருக்குவதானது விஷம் கொடுப்பதற்கு நிகராகுமென மருத்துவர்கள் பகிரங்கமாக கருத்துவெளியிட்டிருக்கின்றனர். பொதுவாக போதிய நோய் எதிர்ப்புச் சக்தியின்மையே குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதற்குக் காரணமாக அமைகின்றது. அதன் அடிப்படையில் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 35 வீதமாக அந்நிலைமை பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிழக்காசியா மற்றும் பசுபிக்கில் 41 வீதமாகவும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 49 வீதமாகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 53 வீதமாகவும் இந்நிலைமை பதிவாகின்றது.
தாய்ப்பாலுட்டுவதினால் தாய்க்கும் சேய்க் கும் கிடைக்கும் நன்மைகளும் பலாபலன்களும் அதிகமாகும். குழந்தையின் நோய்எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதுடன் அடிக்கடி நோய்நிலைமைகளுக்குள்ளாகும் நிலையும் குறைவடையும். குழந்தையின் மூளைவளர்ச்சியில் தாய்ப் பால் அதீத தாக்கத்தை செலுத்துவதுடன் அதன் சுய திறமைகளை வெளிக்கொணர்வதில் குறிப்பிட்டளவு பங்களிப்பைச் செலுத்துகின்றமையை மறுக்க இயலாது. சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பால்மாக்களில் DHA போன்று மூலக்கூறுகள் இருக்கின்றன என்றெல்லாம் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை எவ்விதத்திலும் தாய்ப்பாலுக்கு நிகராகாது. தாய்ப்பாலில் அடங்கியுள்ள லெக்டோஸ் எனும் போசனைப்பதார்த்தம் புரதச் சத்துடையது. அதனுடன் ஏனைய செயற்கை இரசாயன மூலப்பொருள்களிலான பால்மாக்கள் போட்டிப்போட முடியாது. ஆனால் ஒரு சிலர் விலங்குகளின் சேர்மானங்களுடன் தயாரிக்கப்பட்ட பால்மாக்களை உபயோகிக்கும் போது முற்றிலும் முரணான செயற்பாடாகவே அமைகின்றமையை பார்க்கக் கூடியதாகவுள்ளது. சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (formula) மூலப்பொருட்கள் அடங்கிய பால்மாக்களை இன்று அதிகம் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை காணலாம். இதனால் குழந்தைகள் பல்வேறு நோய் நிலைமைகளுக்கு குறிப்பாக இதயக்கோளாறுகளுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
பால்மா பருக்கப்பட்டு வளரும் குழந்தைகளையும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளையும் வைத்துப்பார்க்கும் போது வெளிப்படையான வித்தியாசங்களை அவதானிக்கலாம். அவர்களில் உடலளவில் பெருத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். சில குழந்தைகள் மந்தபோசனையுடன் வளரும். அவற்றின் கல்வி கற்கும் திறன்கள் என்பவை சற்று பின்னடைவை எதிர்நோக்கியே காணப்படும். பிரச்சினைகளை சந்தித்தல், அவற்றுக்குத் தீர்வு காணல், மன ரீதியாக தளர்வடைதல் என்பன இக்குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக காணப்படுகின்றன. “எண்டரே பெக்டர்ஸ்" என்ற மாநாடானது 1961 ஆம் ஆண்டு மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போது பால்மா வகைகளினால் ஏற்பட்ட சிசு மரணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் பெல்ஜியம், நியூஸிலாந்து, லண்டன், கனடா போன்ற நாடுகளின் பால்மா வகைகளை உற்பத்திசெய்யும் நிறுவனங்களை முற்றுகையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டு "பெபா-1” என்ற உற்பத்திகள் சிசு வளர்ச்சிக்கு பாதகமாக விளங்கியமையால் அதனை சோதனையிட்டது. அதன்போது கெப்ரிக் சல்பேட் என்ற இரசாயனம் கலக்கப்பட்டிருந்தமையால் அந்நிறுவனம் முற்றுகையிடப்பட்டது. மேலும் அதேபோல் கனடாவில் காணப்படும் ஒரு பிரபல நிறுவனம் தனது உற்பத்தி பொருளான பால்மாவை குழந்தையின் வளர்ச்சிக்கு பாதகமான மூலக்கூறுகளை சேர்த்திருந்தமையால் சர்வதேச சுகாதார அமைப்பினால் எச்சரிக்கைக்குள்ளாகியிருந்தது.
குழந்தைகளை பிரசவித்து வேலைக்குச்செல்லும் அரச துறையில் பணிபுரியும் பெண்களுக்கு தாய்ப்பாலூட்டலுக்காக விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரசவத்தின் பின்னர் 84 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படுகிறது. வேலையின் போது வாரத்தில் ஒரு நாளும் தினமும் அரை மணித்தியாலமும் விடுமுறையாக வழங்கப்படுகின்றது. இவ்வாறான நலனோம்பு வழிமுறைகள் குழந்தையினதும் தாயினதும் ஆரோக்கியத்துக்காக அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே ஆரோக்கியமான எதிர்கால சமூகத்துக்கு பயனுடைய செயல்திறன் மிக்க பிரஜைகளை நாட்டுக்கு அளிப்பதை நோக்காக கொண்டு இளம் தாய்மார்கள் செயற்பட வேண்டும். கட்டாயமாக பால்மா உபயோகத்தை கூடிய மட்டும் தவிர்த்து தாய்ப்பாலை பருக்க வேண்டும். தாய்ப்பாலை சேமித்து வைப்பதற்கு சந்தையில் புதிய உத்திகளுடன் கூடிய உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை கொள்வனவு செய்து தாய்ப்பாலை குளிர்சாதனப்பெட்டியிலிட்டு உபயோகப்படுத்தலாம். மார்பகங்களை அடிக்கடி கழுவுவதை தவிர்க்க வேண்டுமெனவும் வைத்திய நிபுணர்கள் ஆலோசனை வழங் குகின்றனர். இதனால் மார்பகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகும். கைகளை மாத்திரம் நன்றாக கழுவினால் போதுமானது. இரவில் குழந்தைக்கு பால் கொடுப்பது சிறந்தது. அப்போது குழந்தை வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் வளர்ச்சி ஓமோன்கள் சுரக்கும். எனவே பால் மாவைக் கொடுத்து குழந்தையின் வளர்ச்சியை சீர்குலைக்காமல், தாய்ப்பாலை கொடுத்து ஆரோக்கிய பிரஜைகளை நாட்டுக்களிக்க வேண்டும்.
virakesari.lk 04 08 2014