Easy Facebook Share Button

05 02 2016

நாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள் 

நாம் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதோடு மாத்திரமின்றி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிட வேண்டும். சிவப்பரிசி - இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தரும். மீன் - நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஒக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஒக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவும். வாழைப்பழம் - தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும்.

இது தவிர, மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் விற்றமின் ‘சி’ சத்து 33 சதவிகிதம் உள்ளது. முட்டை - இது மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும். வல்லாரைக்கீரை - நினைவாற்றலுக்கு உதவும். எள் - மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது. எள்ளில் உள்ள துத்தநாகம் (Zinc) ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும்.

virakesari.lk 19 12 2015