அவதானம் : மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள்
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். மனித வாழ்வில் ஆரோக்கியம் முக்கியமானதாகும். உலகில் வாழும் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் என்ன விலை கொடுக்கவும் தயாராய் உள்ளனர்.தற்காலத்தில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதயநோய், நீரிழிவு (சர்க்கரை/சீனி) வியாதி, சிறுநீரக நோய், குருதியமுக்கம், வாதம், பக்கவாதம், புற்று நோய், மன அழுத்தம்…. போன்ற நோய்கள் அதிகரித்துள்ளன. உலக சனத்தொகையில் 33 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றா நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
நீரிழிவு தொற்றா நோயினால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி சர்வதேச ரீதியில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சுமார் 20 வீதமானவர்கள் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை, எதிர்வரும் 2020ம் ஆண்டில் தற்போதுள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
உலகில் மருந்து உற்பத்தி நிறுத்தப்படுமானால், 72 வீதமான மக்கள் இறப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. இத்தகவல்கள் தொற்றா நோயாளர்களை மாத்திரமன்றி, சுகதேகிகளையும் ஒரு கணம் நிலை குலையச் செய்து விடுவதாக உள்ளன. எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதுடன், மரண அபாயத்தை உண்டு பண்ணுவதாகவும் அமைந்துள்ளது.
அரச, தனியார் வைத்தியசாலைகளில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று கணிசமானளவு அதிகரித்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்குரிய ஒருநாள் மருத்துச் செலவு மாத்திரம் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மீறி தொற்றா நோய்கள் எங்களுடன் போராடி, உயிரைப் பறித்து வெற்றிபெறும் நிலையும் காணப்படுகின்றது. இதனை நாங்கள் இறை தீர்ப்பு அல்லது தலையெழுத்து என ஏற்றுக் கொண்டு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம்.தொற்றா நோய்களின் அதிகரித்த தாக்கத்திற்கு எங்களது உணவு உள்ளிட்ட அன்றாட பழக்க வழக்கங்களே காரணம் எனத் தெரிவிக்கும் வைத்தியர்கள். முறையான உணவுப் பழக்கம், உடற் பயிற்சி என்பனவற்றினால் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும் என ஆலோசனை தெரிவிக்கின்றனர். எவர் எதைத் தெரிவித்த போதிலும், நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாது, உதாசீனம் செய்து பின்னர் அவஸ்தைப்படுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.
சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் நோயற்ற சுகதேகியாக வாழ வேண்டும். இதுவே எங்கள் ஒவ்வொருவரினதும் அவாவாகும். எங்களது உடலிலுள்ள இரத்தம் கெட்டுப் போகாது பாதுகாக்கும் விடயத்தில் நாங்கள் அதிகம் அக்கறை, கவனம் செலுத்த வேண்டும். அதிகம் ஆபத்து, அவலங்களை ஏற்படுத்தும் தொற்றா நோய்கள் குறித்து சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவதானமாகத் தொழிற்பட வெண்டும். தொற்றா நோய்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் பெற்றவர்களாக மிளிர வேண்டும்.தொற்றா நோய்கள் விடயத்தில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தாது அலட்சியப் போக்குடனே நடந்து கொள்ளுகின்றனர். இவ்வாறானவர்கள் பின்னர் அங்க அவயவங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எமது உடலுக்குள் சிறிய அளவில் உட்புகும் தொற்றா நோயானது, பல்வேறு துறைகளில் எம்மை பாதிக்கச் செய்கின்றது. பின்னர் நிரந்தர இயலாமைக்கு இட்டுச் செல்கின்றது. இதனால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் துன்ப துயரங்களை எதிர்கொள்ளுவது தவிர்க்க முடியாதாகி விடுகின்றது.
இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக எதிர்வு கூறப்படும் தொற்றா நோய்களில் பெரும்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நோய் நீரிழிவு நோயாகும். இதற்கு சீரான உணவுப் பழக்கவழக்கம் இல்லாமை. உடற்பயிற்சி இன்மை. பரம்பரை. பிறநோய்கள் என்பனவற்றை காரணங்களாக குறிப்பிடலாம்;.இவர்கள் கொழுப்பு, எண்ணெய், சீனி, உப்பு கலந்த உணவை அதிகம் எடுக்காது தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என வைத்தியர்கள் நமக்கு ஆலோசனை தெரிவிக்கின்றனர் நாளாந்த உணவில் ஐந்து வகை மரக்கறி, மூன்று பழ வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதேபோன்று அதிகம் நீர் அருந்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாங்கள் உண்ணுகின்ற சோறு மற்றும் மா சேர்ந்த உணவுகளின் அளவு நோயற்ற வாழ்வை பேணிக்காப்பதற்கு மிகவும் முக்கியமான செயன்முறையாகும். இலங்கை மக்களின் பிரதான உணவாக அரிசி (சோறு) இருப்பதுடன் உடலின் நித்திய தொழிற்பாட்டிற்கு அவசியமான சக்தியையும் அது வழங்குகின்றது.அவிந்த அரிசிகளின் தவிட்டுப்பட்டையிலுள்ள விற்றமின், புரதம், மற்றும் நார்ப்பொருட்கள் அரிசி மணிக்குள்ளே அதிகமாக ஒன்று சேர்ந்து இருப்பதனால் அவ்வாறான அரிசிகளில் போசனைத்தன்மையும் அதிகமாகும். ஒருவர் வாழ்கின்ற நாடு, உயரத்திற்கு தகுந்த உடற் பருமன் (டீஆஐ), இப்பொழுது இருக்கின்ற நோய்கள், நோய்களை பராமரிப்பதிலுள்ள அபாயத்தன்மை போன்றவற்றையும் கருத்திற் கொண்டு சோறு அல்லது மா உணவுகளின் அளவை தீர்மானிக்க முடியும்.
டீஆஐ அதிகச்சுட்டி உள்ளவர்கள் அதாவது மிகைபருமன் உள்ளவர்கள் அல்லது நீரிழிவு நோய் அல்லது அதைக் குணமாக்கக் கூடிய வாய்ப்பை உடையவர்களாயின் சோறு அல்லது மா உணவுகளின் அளவை குறைத்தல் வேண்டும்.
அதிகமானோர் வெள்ளை அரிசியை விட சிவப்பு அரிசி குணநலமிக்கது என்றுகருதுகின்றனர். வெள்ளை அரிசியை விட சிவப்பு அரிசி அதிக பயன்கள் உள்ளனவே. அதில், வெள்ளை அரிசியை விட கொஞ்சம் அதிகமாக புரோட்டீனும் நார்த்தன்மையும் உள்ளதோடு மக்னீசியம், மற்றும் பொட்டாசியம் போன்ற கனிப்பொருட்கள் மிகைத்து காணப்படுகின்றன. அத்துடன் விட்டமின் டீ, விட்டமின் நு போன்றவைகளினாலும் கணிப்பிடத்தக்க அளவில் செழிப்புற்றிருக்கின்றது.
தற்காலத்தில் அதிகமானவர்கள் வீடுகளில் உணவு சமைப்பதை விடுத்து, தயார் செய்யப்பட்ட உடனடி உணவாக கடைகளில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறான உணவுப் பழக்கமுள்ளவர்களை எளிதில் நோய் தொற்றிக் கொள்வது கவனிப்பிற்குரியது.உணவுப் பழக்கத்தில் மாத்திரமன்றி, உடற்பயிற்சி குறித்தும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உடற் பயிற்சியை மேற்கொள்ளுவதற்கு அதிகமானவர்கள் விருப்பமாகவுள்ள போதிலும், நேரமின்மை முக்கிய பிரச்சினையாகும். இதனால் இவ்விடயம் கவனிக்கப்படாது தவிர்க்கப்படுகின்றது. சிலர் உபகரணங்களின் உதவியுடன் உடற் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களாகவும், மற்றும் சிலர் தினசரி மைதானத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களாகவும் உள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
virakesari.lk 14 02 2016