தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பண்டா-செல்வா' ஒப்பந்தம் - கிழித்தெறியப்பட்டது

05 03 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பண்டா-செல்வா' ஒப்பந்தம் - கிழித்தெறியப்பட்டது

-என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும். அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல் டி.எஸ்.சேனநாயக்கவின் மரணத்துக்குப்பின் சேர்.ஜோன் கொத்தலாவலதான் பிரதமராவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில், அன்றைய ஆளுநர் சோல்பரி பிரபு டி.எஸ்.சேனநாயக்கவின் மகனான டட்லி சேனநாயக்கவை பிரதமராக நியமித்திருந்தார். ஆனால், 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகினார் டட்லி சேனநாயக்க, அத்தோடு அரசியலிலிருந்தும் விலகினார். அதைத் தொடர்ந்து டட்லி சேனநாயக்கவின் உறவினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான சேர். ஜோன் கொத்தலாவல பிரதமரானார். ஆனால், 1956ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 1957இல் டட்லி சேனநாயக்க மீண்டும் அரசியலினுள் பிரவேசித்தார். இவ்வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியினுள் இன்னொரு செல்வாக்கு மிக்க தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருந்தார். இந்தத் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீள ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவர சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். குறிப்பாக 1956ஆம் ஆண்டு தேர்தலில் களனித் தொகுதியில் ஆர்.ஜி.சேனாநாயக்கவினால் தோற்கடிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மீண்டும் அரசியல் எழுச்சிக்கான வாய்ப்பொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இந்தச் சூழலில்தான் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் உருவாகியிருந்தது. அத்தோடு சிங்களப் பேரினவாத சக்திகள் மத்தியில் அதற்கு எதிர்ப்பும் உருவாகியிருந்தது. பிக்குகள் முன்னணி 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. பண்டாரநாயக்க எழுச்சிபெறச் செய்த பேரினவாதம், பண்டாரநாயக்கவுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவதை தமக்கு உகந்த சந்தர்ப்பமாக மாற்ற நினைத்தார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. 'கலரி பொலிடிக்ஸ்' என்று சொல்லப்படும் ஜனரஞ்சக அரசியல் சித்து விளையாட்டுக்களில் கைதேர்ந்தவரான ஜே.ஆர். இந்தச் சூழலில் ஒரு நடைப் பயணத்தை நடத்தத் திட்டமிட்டார். முதலில் கொழும்பிலிருந்து, அநுராதபுரம் வரை நடைப்பயணம் செல்வது எனவும், அநுராதபுரத்தை அடைந்ததும் அங்கு போதி மரத்தின் முன்பாக, அதனைச் சாட்சியாக வைத்து நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என எல்லோரும் சத்தியப்பிரமாணம் செய்வது எனவும் திட்டமிட்டார்.

ஆனால், கொழும்பு- அநுராதபுரம் என்பது தூரம் அதிகமானதாகவும், அதிலும் மக்கள் பெருமளவு வசிக்காத காட்டுப்பகுதி அதிகமாகவும் இருப்பதும் சிக்கலானதாகவும், பயன்குறைவானதாகவும் இருந்தது. அதனால் கொழும்பிலிருந்து- கண்டி வரை நடை பயணம் செய்வது எனவும், தலதா மாளிகை புனித தந்ததாது முன்பு 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் படி நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்கப்போவதில்லை எனச் சத்தியப்பிரமாணம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பிலிருந்து நடைபயணமாகப் புறப்பட்டு, ஒக்டோபர் 8ஆம் திகதி பௌர்ணமி (போயா) தினத்தன்று கண்டியை அடைந்து அங்கு கூட்டம் நடத்துவதே திட்டம். அதன்படி கொழும்பிலிருந்து பெரும் பேரணியாக நடைபயணம் புறப்பட்டது. பண்டாரநாயக்கவும், அவரது அரசாங்கமும் இந்த அரசியல் விளையாட்டின் சூத்திரத்தை அறிந்திருந்தார்கள். இந்த பயணம் வெற்றியளித்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமாக்குவதனூடாகத் தமது அரசாங்கத்தைப் பலமிழக்கச்செய்யும், ஆதலால் இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.

அரசாங்கத்தின் தேசியப் பத்திரிகைகள் இந்த நடைபயணத்தைக் கடுமையாக விமர்சித்தன. நடைபயணம் கொழும்பிலிருந்து புறப்பட்டநாளில் நடைபயணம் மீது கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டது, நடைபவனி சென்றவர்கள் தாக்கப்பட்டார்கள். முதல்நாள் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் நடைபவனியில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இரண்டாம் நாள் நடைபயணம் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்லை வரைசென்று அங்கு இரவு தங்குவதாகத் திட்டம். அத்தனகல்லை பண்டாரநாயக்கவின் ஆதரவுப் பிரதேசம். அங்கு ஜே.ஆர். தங்க முடிவெடுத்ததை தனக்கெதிரான தனிப்பட்ட சவாலாக பண்டாரநாயக்க கருதினார். ஜே.ஆரின் பேரணியைக் காலையிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் உறவினரும், கம்பஹாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.பண்டாரநாயக்க வசம் ஒப்படைக்கப்பட்டது.

காலையில் இம்புல்கொட சந்தியில் வைத்து பண்டாரநாயக்கவின் தலைமையில் வீதியின் நடுவே கூடியிருந்த பெருமளவிலான ஆதரவாளர்களினால் ஜே.ஆரின் அளவில் சிறுத்திருந்த நடைபவனி தடுத்து நிறுத்தப்பட்டது. பொலிஸாரும் நடைபவனியைத் தொடர்வது வன்முறையை ஏற்படுத்தும் என்பதால் அதனைக் கைவிடச் சொன்னார்கள். ஜே.ஆர். தான் மட்டும் தனியே செல்ல அனுமதி கேட்டார், அதுவும் மறுக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி ஜே.ஆர். நடைபவனியைக் கைவிடுவதாக அறிவித்தார்.

ஆனால், 8ஆம் திகதி திட்டமிட்டபடி கண்டியில் கூட்டம் இடம்பெற்றது. அதில் டட்லியும், ஜே.ஆரும் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கண்டித்து உரையாற்றியிருந்தனர். ஜே.ஆரின் கண்டி நடைபயணம் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் நோக்கம் தோல்வியடையவில்லை. 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்துக்கெதிரான அலை பெருக்கெடுத்தது. 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஏறத்தாழ 5 மாதங்களாகியும் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் எடுக்காது இருந்தமை செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினரிடத்தே அதிருப்தியை அதிகரித்தது. இந்நிலையில் அதிகரித்துவரும் பேரினவாத சக்திகளின் அழுத்தத்தைச் சமாளிக்கவும், சிங்களமயமாக்கலின் ஒரு பகுதியாகவும் பண்டாரநாயக்க அரசாங்கம் 1957ஆம் ஆண்டு  டிசெம்பரில் புதியதொரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது.

அதுவரை மோட்டார் வாகனப் பதிவுகள் இரண்டு ஆங்கில எழுத்துக்களையும், எண்களையும் கொண்டு இருந்தது. புதிய சட்டத்தினூடாக ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக சிங்கள எழுத்தானස්‍රි (ஸ்ரீ)அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் ஒரு தேவையாக இருக்கவேயில்லை, இதனால் அடையப்பெறப்போகும் விளைபயனொன்றும் இல்லை. 'தனிச் சிங்களச்' சட்டம் கூட சிங்களம் மட்டும் பேசும் மக்களுக்கு சாதகமானதொன்றென்று கூறலாம், அதாவது ஆங்கிலம் அல்லாமல் சிங்களம் பயன்படுத்தப்படுவதானது, சிங்கள மக்கள் தங்கள் கருமங்களை ஆற்ற ஏதுவாக அமைந்தது, ஆனால் வாகனங்களில் சிங்கள 'ස්‍රි'யை அறிமுகப்படுத்துவதால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. வெறுமனே சிங்கள பேரினவாத சக்திகளுக்கு கிளுகிளுப்பூட்டுதற்கான ஓர் அடையாளபூர்வ உத்தியாகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது தமிழ் மக்களை இன்னும் அலட்சியப்படுத்தி, அவர்களைச் சினங்கொள்ளச் செய்யும் நடவடிக்கையானது. இலங்கைத் தமிழரசுக் கட்சி சிங்கள 'ස්‍රි'க்குப் பதிலாக 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தின் கொள்கைப்பிரகாரம் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் 'ஸ்ரீ' பயன்படுத்த சட்டத்தில் இடம்தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் பண்டாரநாயக்கவினால் நிராகரிக்கப்பட்டது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்மொழிப் பாவனைக்கு இணங்கிய பண்டாரநாயக்க, அந்த இணக்கப்பாட்டுக்கு எதிராக தமிழ் 'ஸ்ரீ' யை அனுமதிக்காது, சிங்கள 'ස්‍රි'யைத் திணித்தமையானது தமிழரசுக்கட்சியையும், தமிழர்களையும் கடும் அதிருப்திக்கும், விசனத்துக்கும் உள்ளாக்கியது.  'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஒப்பந்தத்துக்கு முரணான நடவடிக்கையொன்றை எடுத்தமை, ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது தொடர்பில் கடும் ஐயப்பாட்டை தோற்றுவித்தது. இந்நிலையில், சிங்கள 'ස්‍රි' திணிப்பை எதிர்த்து அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாரானது.

ஜனவரி 1, 1958 முதல் தமிழர்களுடைய வாகனங்களில் தமிழ் 'ஸ்ரீ' பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சி வேண்டுகோள் விடுத்தது. பல இடங்களிலும் கூட்டங்கள் கூட்டி இந்தக் கருத்தைப் பரப்பியது. தமிழ் 'ஸ்ரீ'-யைப் பயன்படுத்துவதனூடாக சிங்கள 'ස්‍රි' திணிக்கப்படுவதை எதிர்ப்பதே தமிழரசுக் கட்சியின் நோக்கம். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் வாகனங்களில் சிங்கள 'ස්‍රි'-க்குப் பதிலாக தமிழ் ';ஸ்ரீ'-யைப் பயன்படுத்தினர். இதனைத் தொடர்ந்து '(சிங்கள)› எதிர்ப்பு' போராட்டம் வடக்கிலும், கிழக்கிலும் பரவலாகப் பரவியது.

பஸ்களில் உள்ள சிங்கள 'ස්‍රි' அழிக்கப்பட்டு தமிழ் 'ஸ்ரீ' எழுதப்பட்டது. இதனைப் பற்றி எஸ்.சிவநாயகம் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'யாழ்ப்பாணத்துக்கு சிங்கள 'ස්‍රි' பொறிக்கப்பட்ட பேருந்துகளை அனுப்பியதனூடாக அரசாங்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இந்த அர்த்தமற்ற புதிய சட்டம் தமிழர்களைக் கோபம் கொள்ளச் செய்தது. '(சிங்கள) ස්‍රි'-க்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்றது, அதன் ஒரு பகுதியாக அரசாங்க பஸ்களில் உள்ள சிங்கள 'ස්‍රි' அழிக்கப்பட்டு, தமிழ் 'ஸ்ரீ' எழுதப்பட்டது.'

சா.ஜே.வே.செல்வநாயகம் நேரடியாக இரண்டு '(சிங்கள)›' எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். ஒன்று 1958ஆம் ஆண்டு மார்ச்சில் யாழ்ப்பாணத்திலும், மற்றையது 1958ஆம் ஆண்டு ஏப்ரலில் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பில் பஸ்களில் சிங்கள 'ස්‍රි' எழுத்தை மாற்றியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட செல்வநாயகம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். அவருக்கு ஒருவார காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மட்டக்களப்புச் சிறையில் ஒருவாரகாலம் சிறைவாசம் அனுபவித்துத் திரும்பினார் செல்வநாயகம்.

தமிழரசுக் கட்சியின் '(சிங்கள) ස්‍රි' எதிர்ப்புப் போராட்டம் ஒரு புறம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, மறுபுறத்தில் 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் கைவிடப்படவேண்டும் என்ற அழுத்தம் சிங்களப் பேரினவாத சக்திகளினால் கடுமையாக முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் தன் பங்குக்கு இந்த அழுத்தத்தைக் கடுமையாகக் கொடுத்தது. இந்நிலையில் ஏப்ரல் 9, 1958 அன்று 100 பிக்குகள் மற்றும் 300 பேர் கொண்ட குழுவொன்றும் அமைச்சர் விமலா விஜயவர்த்தன தலைமையில் பிரதமர் பண்டாரநாயக்கவின் இல்லத்துக்கு முன் சென்று அமர்ந்து 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத பண்டாரநாயக்க, தன்னுடைய கபினட் அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அத்துடன் அக்குழுவினரின் வேண்டுகோளின்படி, தான் 'பண்டா-செல்வா' ஒப்பந்தத்தை இரத்துச்செய்வதாக பிரதமர் பண்டாரநாயக்க எழுத்துமூலம் அறிவித்தார். சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள-தமிழ் தலைவர்களிடையே எட்டப்பட்ட முதலாவது உடன்படிக்கை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'பண்டா-செல்வா' ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்குள்ளாகவே, நிறைவேற்றப்படாது கிழித்தெறியப்பட்டது. இங்கு கிழித்தெறியப்பட்டது வெறும் ஒப்பந்தம் மட்டுமல்ல, இலங்கையில் சிங்கள-தமிழ் மக்களிடையேனான இணக்கப்பாடு பற்றிய நம்பிக்கையும் கிழித்தெறியப்பட்டது.

'பண்டா-செல்வா' ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டதை 'இலங்கையின் இன உறவுகளின் வரலாற்றில் இது ஒரு கவலை பொருந்திய நாள்' என சௌமியமூர்த்தி தொண்டமான் வர்ணித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பலரும் இதனைக் கடுமையாகக் கண்டித்தனர். செல்வநாயகம் தமிழரசுக் கட்சி இந்நிலையயை எதிர்கொள்ளத் தயார் என அறிவித்தார். தான் வளர்த்த பாம்பு தன்னைத் தீண்டியதுதான் பண்டாரநாயக்கவுக்கு நடந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ் பிரதேசங்களின் '(சிங்கள) ස්‍රි' எதிர்ப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றன. இதற்கு எதிராக பௌத்த பிக்குகள் அரசாங்கக் கட்டடிடங்களிலிருந்த பெயர்ப்பலகைகளிலிருந்த தமிழ் எழுத்துக்களை அழிக்கத் தொடங்கினார்கள். அத்தோடு தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வும், வெறுப்புணர்ச்சியும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆங்காங்கே தாக்குதல்களும், வன்முறைச் சம்பவங்களும் ஆரம்பமாயின. இந்தச் சம்பவங்கள் மாபெரும் கலவரமாக மாறி இனப்பிரச்சினையின் இன்னொரு கோரமுகத்தை '1958 கலவரமாக' வெளிக்காட்டியது.

yarl.com 15 09 2015