19 05 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 153)

ஜே.ஆர் முன்மொழிந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை

1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஒரு மாதகாலத்தின் பின்னர் மீண்டும் ஒன்றுகூடிய சர்வகட்சி மாநாட்டில், புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவு, ஜே.ஆர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, கிராமோதய மண்டலங்கள் முதல், நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபையாக, மாநிலங்களின் சபை ஒன்றை அமைப்பது வரை, கீழிருந்து மேலாக ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த, ஜே.ஆர் அரசாங்கம் விளைந்திருந்தது. படிநிலையின் அடித்தளத்தில், கிராமமட்டத்தில் ஏறத்தாழ 4,500 கிராமோதய மண்டலங்களை ஸ்தாபிக்கவும்; அதற்கடுத்த தளத்தில், ஏறத்தாழ 250 அளவிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளாகப் பிரதேச சபைகளை ஸ்தாபிக்கவும்; மூன்றாவது மட்டத்தில், ஏலவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், ஆனால் அதைவிடவும் சற்றே அதிகாரங்கள் கூடிய 25 மாவட்ட சபைகளை ஸ்தாபிக்கவும் முன்மொழியப்பட்டிருந்தது. இதற்கு மேலாக, நான்காவது மட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள் இணைந்து, மாகாண சபையொன்றை ஸ்தாபிக்கக் கூடியதாகவும் முன்மொழியப்பட்டிருந்தது. அதாவது, ஒரு மாகாணத்துக்குட்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்ட சபைகள், தாம் இணைய விரும்பினால், அதற்கு அம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் ஒப்புதல் அளித்தால், அவை மாகாண சபையாக உருவாக முடியும். அத்தோடு மாவட்ட சபைகள், தமது அதிகாரத்திலிருந்து குறித்த மாகாணசபைக்குப் பாரப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டமைவதோடு, மாவட்ட சபைகள் தீர்மானிப்பதன் அடிப்படையிலாக, மாகாண சபை உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. இதைவிடவும் மாகாண சபையின் முதலமைச்சராக, மாகாண சபையின் ஆதரவைப் பெற்ற நபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு உரியதாக இருக்கும். மேலும் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை அல்லது மாகாண சபை உறுப்பினர்களை, மாகாண அல்லது மாவட்ட சபை அமைச்சராக நியமிக்க முடியும் என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. இந்தப் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையின் ஐந்தாவது தளத்தில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது அவையாக, 75 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களின் சபை அமைக்கப்படும். இதில், 25 மாவட்ட சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் அங்கம் வகிப்பார்கள். இதைவிட, ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும், தலா இருவர் என்ற அடிப்படையில், மொத்தம் 18 பேர் நியமிக்கப்படுவார்கள். இவர்கள், அம்மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட சபைகளில், போதியளவு பிரதிநிதித்துவம் பெறாது, சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். இதைவிட, ஏழு பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் என்றும்,அந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையில் முன்மொழியப்பட்டிருந்தது. குறித்த மாநிலங்களின் சபை, ஆலோசனை வழங்கும் சபையாகவே அமையும் என்பதுடன், சட்டவாக்கத்தைத் தாமதிக்கச் செய்யும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது என்றும் முன்மொழியப்பட்டிருந்தது. குறித்த முன்மொழிவு அடங்கிய சட்டமூல வரைவும், குறித்த முன்மொழிவு பற்றிய ஜே.ஆரின் காரண காரிய விளக்கமும் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சர்வகட்சி மாநாடு 1984 டிசெம்பர் 21ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. குறித்த முன்மொழிவுகள் பற்றிக் கருத்துரைத்த சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான லலித் அத்துலத்முதலி, “குறித்த சட்டவரைவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்பு, மக்களின் கருத்துகள் பெறப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு

இந்த முன்மொழிவு, ஜே.ஆர் அரசாங்கத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருதரப்புக்குள்ளும் இரண்டு தரப்புகளை, இந்த முன்மொழிவுகள் தோற்றுவித்திருந்தன. இந்த முன்மொழிவுகளுக்கு, முதலில் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரையும் சம்மதிக்க வைக்க வேண்டிய தேவை, ஜே.ஆருக்கு இருந்தது. இது தொடர்பில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில், குறித்த முன்மொழிவுகளின்படியானதொரு கட்டமைப்பு, இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையைக் கொண்ட அரசமைப்புக்கு ஆபத்தானதா என, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும் என, அன்றைய பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாச, தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். பிரேமதாசவுக்கு அடுத்ததாகப் பேசிய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன, “புதிய முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது சபையோ, மாகாண சபைகளோ, சமஷ்டிக் கட்டமைப்பை ஸ்தாபிக்கவில்லை. ஆகவே, நிச்சயமாக அதனால், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குப் பாதிப்பு வராது” என்று கூறியதுடன், தனிநாடு கோரிநிற்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, அந்தக் கோரிக்கையைக் கைவிடச் செய்வதற்கு மாவட்ட சபைகளைவிடச் சற்றே மேம்பட்டதொரு கட்டமைப்பை வழங்கவேண்டியதாக உள்ளதைக் குறித்த முன்மொழிவுக்கான தன்பக்க நியாயமாகப் பதிவுசெய்தார். ஆனால், இந்த நியாயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஜே.ஆர் அரசாங்கத்திலும் இருந்த, ‘சிங்கள-பௌத்த’ கடும்போக்குத் தேசியவாதிகளைத் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை. இதைவிட, குறித்த முன்மொழிவுகள் சிங்கள-பௌத்த தேசியவாத பௌத்த பிக்குகளையும் திருப்திப்படுத்துவதாக இருக்கவில்லை. ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு எதிரான பெரும் எதிர்ப்பு, பௌத்த பிக்குகளிடமிருந்து வந்தது. அமரபுர நிக்காயாவின் தலைவராக இருந்த மாதிஹே பண்ணசீஹ தேரர், குறித்த முன்மொழிவுகள் பற்றி ஆராய, பெளத்த பிக்குகளுக்கான கூட்டமொன்றை ஜெயவர்தனபுர கோட்டை நாக விகாரையில் உடனடியாகக் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில், குறித்த முன்மொழிவுகள், இலங்கையின் அரசமைப்புக்கும் பௌத்தத்துக்கும் சிங்கள இனத்துக்கும் நாட்டுக்கும் பெரும் ஆபத்தென்று குறிப்பிட்ட அவர், இந்த மாகாணசபை முறைமைக்கு முழுமையான எதிர்ப்பு, சத்தியாக்கிரகப் போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு எதிராக, கட்சிக்குள்ளும் வௌியேயும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியிருந்தன.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள்ளும், குறித்த முன்மொழிவுகள் பற்றி, முரண்பட்ட நிலைப்பாடுகள் உருவாகி இருந்தன. கொழும்பில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழுவில், எம்.சிவசிதம்பரத்தை உள்ளடக்கிய சிலர், குறித்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏதுவானவையாக இல்லை என்பதால், அவை நிராகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை உள்ளடக்கிய சிலர், குறித்த முன்மொழிவுகள், முழுமையாகத் திருப்திகரமானதாக இல்லாத போதும், அவற்றை நிராகரித்தால், அது ஜே.ஆர் அரசாங்கத்துடனான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையிடுவதாகவே அமையும் என்றும் கருதினர். அவருடைய எண்ணம், இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த முன்மொழிவுகளை மேம்படுத்த, ஜே.ஆர் அரசாங்கத்தோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியோடு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு, தமிழர்களிடையே சரிந்துகொண்டிருந்தது. இந்தச் சூழலில், அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தி இந்தப்பிரச்சினைக்கு உகந்ததொரு தீர்வுகாண்பதுதான், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிடம் இருந்த ஒரே அரசியல் மூலதனமாகும். இதை இழக்க, அமிர்தலிங்கம் விரும்பி இருக்காததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், இந்தப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடையுமானால், அதற்கு மாற்றாக எழுச்சியடைந்து வந்த வழி, பேரழிவும் இரத்தமும் துன்பமும் நிறைந்த வழி என்பதும், இங்கு தமிழர்களைப் பொறுத்தவரை கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாக இருந்தது. குறித்த முன்மொழிவுகள் பற்றிய, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாட்டைத் தௌிவாக எடுத்துரைக்கத் தயாராகிக் கொண்டு, 1984 டிசெம்பர் 21ஆம் திகதி மீளக் கூடிய சர்வகட்சி மாநாட்டில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சமுகமளித்தார். ஆனால், சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆரின் நடவடிக்கை, அமிர்தலிங்கத்துக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது.

அமிருக்கு, ஜே.ஆர் கொடுத்த அதிர்ச்சி

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய ஜே.ஆர், “எனது அரசாங்கத்தின் முன்மொழிவுகள் பற்றிய கருத்துகளை, அனைத்துத் தரப்பினரும் எழுத்துமூலம் சமர்ப்பிக்கவும்” என்று கூறியதுடன், குறித்த முன்மொழிவுகளை, மிகக் கவனமாகப் பரிசீலிக்குமாறு சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற அழைக்கப்பட்டிருந்த மஹா சங்கத்தினரிடம் வினயமாகக் கேட்டுக் கொண்டார். மேலும் குறித்த முன்மொழிவுகளை, மக்கள் முன் சமர்ப்பித்து, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் அல்லது தேர்தல் ஒன்றின் மூலம் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததுடன், மறுதிகதி அறிவிக்காமல், சர்வகட்சி மாநாட்டை ஒத்தி வைத்தார். இந்த ஒத்திவைப்பு, அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சியைத் தந்தது. மறுதிகதி அறிவிக்காமல் ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமிர்தலிங்கம், தான் கருத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார். கருத்துரைக்க அமிர்தலிங்கத்தை அனுமதிக்காத ஜே.ஆர், தன்னுடைய ஆவணங்களை எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வௌியேறிவிட்டார். முகத்தில் அறைந்தாற்போன்ற ஜே.ஆரின் அணுகுமுறை, அமிர்தலிங்கம் உள்ளிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினருக்குக் கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதே தினம் இரவில், மீண்டும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அரசியற்குழு கூடியபோது, முன்மொழிவுகளை எதிர்த்தவர்களின் கரம் ஓங்கியிருந்தது. ஜே.ஆர் நம்பத்தகாதவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று அவர்கள் சொன்னபோது, அமிர்தலிங்கத்தால் அக்கூற்றை இப்போது, நிச்சயம் மறுத்திருக்க முடியாது. மறுநாள் வௌியான அமிர்தலிங்கத்தின் அறிக்கை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த முன்மொழிவுகளை ஏற்கவில்லை என்பதாக அமைந்திருந்தது. அனெக்‌ஷர் ‘சி’ முன்மொழிவுகளின் படியான அம்சங்கள், பிராந்திய சுயாட்சி குறித்த முன்மொழிவுகளில் இல்லை என்பதை, அமிர்தலிங்கம் தன்னுடைய அறிக்கையில் தௌிவாகக் கோடிட்டுக்காட்டியிருந்தார். மறுபுறத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் குறித்த முன்மொழிவுகளை எதிர்த்தது. இந்த நாட்டு மக்கள், மிகத்தௌிவாக இந்த முன்மொழிவுகளை நிராகரிக்க வேண்டும் என்று, சிறிமாவோ தன்னுடைய அறிக்கையில் வேண்டியிருந்தார்.

கட்சிக்குள்ளும் எதிர்ப்பு

குறித்த முன்மொழிவுகளுக்குப் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு வலுத்திருந்த வேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின. அதுமட்டுமல்ல, ஜே.ஆரின் அமைச்சரவைக்குள்ளும் குறித்த முன்மொழிவுகளுக்கான கடும் எதிர்ப்பு சிங்கள-பௌத்த பேரினவாதியாக அறியப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூவிடமிருந்து வந்தது. “குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னால், யாருக்கும் ஆலோசனை வழங்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். குறித்த முன்மொழிவுகளுக்கு எதிராக, குறித்த முன்மொழிவுகள் கைவிடப்படவேண்டும் என்று, அமைச்சர் சிறில் மத்யூ எழுதிய திறந்த கடிதமொன்று, ஜே.ஆருக்குக் கடும் விசனத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பலகாலம் முன்பு எடுத்திருந்திருக்க வேண்டிய ஒரு முடிவை, தற்போது ஜே.ஆர் எடுத்திருந்தார். (தொடரும்) yarl.com  jul 30 2018

12 05 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 152 யார் பொறுப்பு?

அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது. 1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில் ‘கென்ட்’, ‘டொலர்’ பண்ணைகளில், விடுதலைப் புலிகள் அமைப்பால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது அரசாங்கம், அரச படைகளைத் தாண்டி, விடுதலைப் புலிகளால் சிங்களப் பொதுமக்கள் மீது, நடாத்தப்பட்ட முதல் தாக்குதலாகக் கருதப்படுகிறது. இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘பயங்கரவாதிகள்’ என்ற அரசாங்கத்தின் பிரசாரத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. இது பற்றி, அப்போது இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வினவப்பட்டபோது, அவர் இதற்குச் சற்றே வேறுபட்ட வியாக்கியானம் ஒன்றைக் கொடுத்திருந்தார். போர் புரியாதவர்களைக் கொல்வதை தான் எதிர்ப்பதாகச் சொன்ன பிரபாகரன், ஆனால், அங்கு கொல்லப்பட்டவர்கள் பொதுமக்கள் அல்ல; மாறாகத் தமிழர் தாயகத்தைச் சிங்கள மயப்படுத்தும் இராணுவத்தின் திட்டத்துக்கேற்ப, திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட குற்றவாளிகள். அத்தோடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்று போராளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு பெண் மட்டும் மரணித்ததாக ஒத்துக் கொண்ட பிரபாகரன், தன்னுடைய கணவரை விட்டுப்பிரியாது நின்றதால், குறித்த கட்டடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அவர் மரணித்ததாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் குறித்த திட்டமிட்ட குடியேற்றம் என்பது, திறந்த சிறைச்சாலைத் திட்டமாக உருவாக்கப்பட்டு, குற்றவாளிகள்தான் அங்கு, அவர்களது குடும்பத்தினருடன் குடியேற்றப்பட்டிருந்தார்கள். ஆயினும், போரியல் பொருள்கோடலில், இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் சிவிலியன்கள்தான்; அவர்கள் அரச படைகளோ, போராளிகளோ அல்ல; ஆகவே, குறித்த வியாக்கியானத்தின் வலுத்தன்மை, இங்கு அர்த்தமற்றதாகிறது. மறுபுறத்தில், அரசாங்கம் தன்னை முழுமையாக, இந்தத் துயரச் சம்பவத்தின் பொறுப்பிலிருந்து, விடுவித்துக்கொள்ளவும் முடியாது. தேசிய கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த வண.பிதா செலஸ்டைன் பெனான்டோ, குறித்த மணலாற்றுச் சம்பவமானது, அரசாங்கத்தின் தேவையற்ற ஆத்திரமூட்டலின் விளைவாக ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததாக மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு பதிவு செய்கிறது. ஏலவே, தமிழ் வணிகர்கள் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்த பண்ணை நிலத்தை, அந்தக் குத்தகையை இரத்துச் செய்து, அரசாங்கம் மீளக் கைப்பற்றி, அங்கு ஏலவே, 1977 கலவரத்தின் விளைவாக, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து குடியேறியிருந்த தமிழர்களை அங்கிருந்து விரட்டியடித்து, அந்த இடத்தில், தெற்கிலிருந்து சிங்களக் குற்றவாளிகளைக் கொண்டு வந்து, திறந்தவௌிச் சிறைச்சாலையொன்றை நிறுவ வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் 1950களிலிருந்து தமிழர் தாயகத்தின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் வகையில்,

அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தக்கூடாது என்று தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் போது, அதை மீறி இதைச் செய்ததானது, அரசாங்கத்தின் அலட்சியத்தை மட்டுமல்ல, தமிழ்மக்களை ஆத்திரமூட்டும் செயலையும் சுட்டி நிற்கிறது. குறித்த சம்பவத்தின் உயிர்ப்பலிகள், சௌமியமூர்த்தி தொண்டமானைக் கவலை கொள்ளச் செய்திருந்தாலும், “தமிழ் மக்களுக்கும் தன்மானம், சுயகௌரவம், தமது மொழி, மதம், அடையாளம் மீதான பற்று உண்டென்பதை உணராத சிங்களத் தலைவர்களுக்கு, இது மிகச் சிறந்த பாடம். அரசாங்கம் தமது கையில் இருப்பதால், தாம் பலம் மிக்கவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால், அவர்களை விடப் பலமான சக்திகள் உண்டு” என அவர் குறிப்பிட்டதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்கள், இந்த இரண்டு பண்ணை நிலங்களில் மட்டுமல்ல; முல்லைத்தீவின் ஒதியமலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், அலம்பில், நாயாறு, குமுழமுனை, திருகோணமலையில் அமரவயல், தென்னமரவடி உள்ளிட்ட கிராமங்களிலும் இடம்பெற்றன. இங்கு காலம்காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை, உடனடியாக வௌியேறுமாறு இராணுவம் அறிவித்தது. அரசாங்கங்கள் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, குறிப்பாக, காடு வெட்டிப் புதிய கழனி பெருக்கும் திட்டங்களாக அவை அமையும் போது, அதற்கு முன் காடாக இருந்த நிலத்தை, அபிவிருத்தி செய்வதற்காக அங்கு நிலம், வீடு, விவசாய வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அங்கு மக்களைக் குடியேற்றுவதில் நியாயமுண்டு.

இன்று வடக்கில் குறிப்பிடத்தக்க நகராக வளர்ந்திருக்கும் கிளிநொச்சி கூட, 1930களில் இவ்வாறு அரச குடியேற்றமாகக் காடு வெட்டி, கழனி செய்த திட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால், இத்தகைய திட்டங்கள், தமது நோக்கமாக அபிவிருத்தி, அண்மித்த பெருநகரங்களின் சனநெருக்கடியைக் குறைத்தலைக் கொண்டிருக்கும். இதுபோன்ற அபிவிருத்தி திட்டங்களின் போதுகூட, குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைக் கருத்திற்கொள்வது அவசியம். ஆனால், மணலாறு உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்றது அபிவிருத்திசார் குடியேற்றமோ, காடு வெட்டிக் கழனி பெருக்கும் குடியேற்றமோ அல்ல; மாறாக, அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களை, அரசாங்கம் இராணுவக் கரம் கொண்டு விரட்டியடித்துவிட்டு, அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றி, குறித்த நிலப்பரப்பின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் திட்டமிட்ட செயல். இதைத்தான், அரசாங்கத்தின் தேவையற்ற கோபமூட்டும் செயல் என்று வண.பிதா செலஸ்டைன் பெனான்டோ குறிப்பிட்டிருந்தார். தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிரதேசங்களில், அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள், அங்கிருந்து வௌியேறத் தொடங்கியதாக ‘மணலாறு’ என்ற தன்னுடைய நூலில், விஜயரட்ணம் பதிவு செய்கிறார்.

தொடர்ந்த வன்முறையும் பதிலடியும்

கென்ட், டொலர் பாம் தாக்குதலைத் தொடர்ந்து, 1984 டிசெம்பர் முதலாம் திகதி இரவு நாயாறு, கொக்கிளாய் மீனவக் கிராமங்கள் மீது விடுதலைப் புலிகள் அமைப்பால் தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டது. நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்கள் இங்கு அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டிருந்தன என்றும், இந்தத் தாக்குதலில், இரண்டு மீனவக் குடியேற்றங்களைச் சேர்ந்த, 59 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார். அடுத்தடுத்து இரண்டு நாள்களில் பொதுமக்கள் மீதான தாக்குதலை விடுதலைப்புலிகள் முன்னெடுத்திருந்தமை, அரசாங்கத்தையும் வடக்கில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்ததுடன், வடக்கில் குடியேற்றப்பட்ட மக்கள் அங்கிருந்து உடனடியாக வௌியேறத் தொடங்கினார்கள்.

வன்முறை வழி நீதியின் அடிப்படை

ஹுப்ரூ வேதாகமத்துக்கும் முந்தைய ஹமுராபிச் சட்டக் காலத்திலிருந்தே, ‘பல்லுக்குப் பல்’ என்பதுதான் நடைமுறையிலிருந்து வந்தது. இதை இலத்தீனில் ‘லெக்ஸ் ரலியொனிஸ்’ (lex talionis) பதிலடிச் சட்டம் என்பார்கள். அதாவது, சட்ட ரீதியாக ஏற்புடைய பதிலடி. ஆனால், ‘பல்லுக்குப் பல்’, ‘கண்ணுக்குக் கண்’ என்று பேச்சுவழக்கில் வழங்கி வந்தாலும், அதன் விரிவாக்கம் ‘ஒரு பல்லுக்கு ஒரு பல்’, ‘ஒரு கண்ணுக்கு ஒரு கண்’ என்பதாகும். இது, பதிலடியானது சமவிகிதத்தில் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஆனால், ஹமுராபிச் சட்டத்தைக் கொண்டிருந்த மெசப்பத்தேமிய நாகரிகத்திலிருந்து, மனிதன் பலதூரம் முன்னகர்ந்து, ‘கண்ணுக்குக் கண்’ என்பது குருடான உலகத்தை உருவாக்கிவிடும் என்ற நிலையை அடைந்தான். அதன் விளைவுதான், மனித உரிமைகள் சாசனம் முதல், ஜெனீவா ஒப்பந்தங்கள் வரை மனிதத்தை முன்னிறுத்தும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனாலும், அவ்வப்போது முற்காலத்தயப் போக்குகள் (primitive tendencies) மனிதனுக்குள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மணலாற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு, நடந்தியிருந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்து சிங்கள மக்கள் வௌியேறுவதைத் தடுக்க, மணலாறு பகுதியிலிருந்து, தமிழ் மக்களை வௌியேற்றும் கைங்கரியத்தை, அரசாங்க படைகள் முன்னெடுத்ததாகத் தன்னுடைய நூலில் விஜயரட்ணம் குறிப்பிடுகிறார்.

மேலும், 1984 டிசெம்பர் இரண்டாம் திகதி, பதவியா இராணுவ முகாமிலிருந்து முல்லைத்தீவில் அமைந்திருந்த ஒதியமலை என்ற தமிழ்க் கிராமத்துக்குள் அதிகாலையில் நுழைந்த ஏறத்தாழ 30 இராணுவத்தினர், வீடுகளுக்குள் சென்று, ஆண்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஏறத்தாழ 27 இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். மேலும், மூன்றாம் திகதி மணலாற்றில் புகுந்த இராணுவம், திறந்த துப்பாக்கிச் சூடு, வீடுகளுக்கு எரியூட்டுதல் என்பவற்றை நடத்தி, அங்கு வாழ்ந்துவந்த தமிழ் மக்களை, அங்கிருந்து வௌியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். தொடர்ந்து, முல்லைத்தீவு, திருகோணமலையின் பல கிராமங்களிலுமிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவங்களும் வன்முறைகளும் டிசெம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்தன. தாக்குதல் நடத்தும் தரப்பு எதுவாக இருப்பினும், பெரும் பாதிப்பைச் சந்திக்கும் தரப்பு, அப்பாவிப் பொதுமக்களாகவே இருப்பதுதான் யுத்தத்தின் பெருங்கோரம். காலங்காலமாகத் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த கிராமங்களிலிருந்து, அரசாங்கத்தின் வன்முறைக்கரம் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். 1984 டிசெம்பரில் உச்சத்தையடைந்த விரட்டியடிப்பின் விளைவாக, சில காலத்திலேயே கொக்கிளாய், கருணாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, அண்டங்குளம், கணுக்கேணி, உதயனார்குளம் ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் முற்றாக வௌியேற்றப்பட்டிருந்தார்கள். ஒதியமலை, பெரியகுளம், தண்டுவான், குமுழாமுனை, தண்ணியூற்று, முள்ளிவயல், செம்மலை, தண்ணிமுறிப்பு, அலம்பில் ஆகிய பகுதிகளில் பெருமளவு மக்கள் வௌியேறியிருந்தார்கள்.

குடியேற்றங்களைக் கைவிடாத அரசு

மணலாற்றில் நடந்த தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்திருந்த இலங்கை அரசாங்கம், அப்பகுதியில் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தொடர்வதில் உறுதியாக இருந்தது. ஆகவே, குறித்த பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக, மணலாற்று குடியேற்றங்களில் இராணுவ காவலரண்களை அமைக்கவும், மேலும், அங்குள்ள குடியேற்றவாசிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கவும் அரசாங்கத்தின் பாதுகாப்புச் சபை தீர்மானித்திருந்தது. மணலாறு என்ற தமிழர் பிரதேசம் வெலிஓய (வெலி-மணல், ஓய-ஆறு) ஆன கதை இதுதான். கென்ட் பாமுக்கு அருகில், இலங்கை இராணுவத்தின் வெலிஓய முகாம் ஸ்தாபிக்கப்பட்டது. கென்ட் பாம், ‘கல்யாணிபுர’ ஆனது. இந்த வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் மத்தியில்தான் சர்வகட்சி மாநாட்டில், அரசாங்கக் கட்டமைப்பு தொடர்பிலான சட்டமூல வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 14ஆம் திகதி சமர்ப்பிப்பதாக இருந்த இந்த முன்மொழிவை, அவர் டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, டிசெம்பர் 14ஆம் திகதி கூடிய சர்வகட்சி மாநாட்டில் ஜே.ஆரால் புதிய ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறையை ஸ்தாபிக்கும் சட்டமூல வரைவை சமர்ப்பித்திருந்தார். ( தொடரும்) yarl.com  july 22 2018

05 05 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 151)

திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்கள்

1950களில் இருந்து, தமிழ்த் தலைமைகள் முக்கியமாக எதிர்த்து வந்ததொரு விடயம், தமிழர் பிரதேசங்களில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த, திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆகும். இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள், குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச் சிதைப்பதாக அமைகின்றன என்பது, தமிழ் மக்களின் அச்சமாகும். ஆனால், திட்டமிட்ட குடியேற்றங்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர் பிரதேசங்களில், சிங்கள மக்கள், அரசாங்கத்தால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டமை, தொடர்ந்து கொண்டிருந்ததானது, தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களின் மனநிலையையும் எண்ணப்பாட்டையும் பிரதிபலிப்பதாகவே அமைந்தது. திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றித் தமிழ்த் தலைமைகள் பேசும்போது, அதற்கெதிராகப் பொதுவான ஒரு விமர்சனம் எழுவதுண்டு. தமிழ் மக்கள் வடக்கு -கிழக்கிலிருந்து வந்து, கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கை நகரங்களில் காணி வாங்கி, வீடு கட்டி வாழ முடியுமென்றால், சிங்கள மக்கள் ஏன் வடக்கு-கிழக்குக்குச் சென்று வாழ முடியாது, ஏன் வாழக் கூடாது என்பதுவே அந்த விமர்சனமாகும். தர்க்க சாஸ்திரத்தில், தர்க்கத் தவறுகள் (logical fallacies) என்று ஒரு விடயம் உண்டு. அதில், முக்கியமானதொரு தர்க்கத் தவறானது, தவறான சமநிலை (false equivalency) ஆகும். சுருங்கக்கூறின், ஒன்றுக்கொன்று வேறுபட்ட விடயங்களை, ஒத்த விடயங்களாகக் கருதி, இரண்டையும் சமமானதாகக் கொள்ளுதல் ஆகும். இது தர்க்க ரீதியில் தவறானதாகும்.

இன்னொரு முக்கியமான தர்க்கத் தவறானது, ‘வைக்கோல் மனிதன் தவறு’ (straw man fallacy) என்று சுட்டப்படும். அதாவது, ஒருவர் சொன்ன கருத்தை, எதிர்ப்பதற்குப் பதிலாக, ஒருவர் சொல்லாத கருத்தை, அவர் சொன்ன கருத்தாக உருவகப்படுத்திக்கொண்டு, அதனை எதிர்த்து வாதிடுவதாகும். ‘தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வந்து வாழ முடியுமென்றால், சிங்கள மக்கள் ஏன் வடக்கில் சென்று வாழ முடியாது’ என்ற வாதத்தை, தமிழ்த் தலைமைகளின் திட்டமிட்ட அரச குடியேற்றங்களுக்கு எதிரான வாதமாக முன்வைப்பதில், மேற்சொன்ன இரண்டு தர்க்கத்தவறுகளும் இடம்பெறுகின்றன. முதலாவதாக, தனிநபர்கள் தாமாகத் தனிப்பட்ட முறையில், இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து வாழ்வதும், அரசாங்கம் திட்டமிட்டு, ஒரு பகுதியிலிருந்து மக்களைப் பெருந்தொகையில் அழைத்து வந்து, இன்னோர் இடத்தில் அவர்களுக்கான குடியேற்றங்களை அமைத்து, அவர்களுக்கு உதவிசெய்து குடியேற்றுவதும், சமமான விடயங்கள் அல்ல.

தமிழ் மக்கள் வடக்கிலிருந்து, கொழும்புக்கு இடம்பெயர்ந்து வாழ்வதற்கு, அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. தமிழ் மக்கள் தனிப்பட்ட ரீதியில் காணிகளையும் வீடுகளையும் வாங்கி, அங்கு இடம்பெயர்ந்து, தாமே தமக்கான வாழ்வாதாரத்தையும் தேடிக் கொண்டார்கள். ஆனால், வடக்கு-கிழக்கில் அரசாங்கம், திட்டமிட்டுத் தனியாருடைய பெருங்காணிகளைக் கையகப்படுத்தி அல்லது அரச காணிகளில், தென்னிலங்கையிலிருந்து மக்களை அழைத்துச் சென்று குடியேற்றி, அவர்களுக்கான வீடுவாசல், அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, அரச குடியேற்றங்களை உருவாக்கின. இதைத்தான் தமிழ்த் தலைமைகள் எதிர்த்தார்களே அன்றி, சிங்கள மக்கள் தென்னிலங்கையிலிருந்து தாமாகத் விரும்பி வந்து, வடக்கு-கிழக்கில் குடியேறுவதைத் தமிழ்த் தலைமைகளோ, தமிழ் மக்களோ எதிர்க்கவில்லை. ஆகவே, தமிழ்த்தலைமைகள் சிங்கள மக்கள் வடக்கு-கிழக்கில் வந்து வாழ்வதை எதிர்க்கிறார்கள் என்பதில், எந்த உண்மையும் இல்லை. மாறாக, அரசாங்கம் திட்டமிட்டு, சிங்கள மக்களைத் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றுவதைத் தான் அவர்கள், திட்டமிட்ட குடிப்பரம்பல் சிதைப்பு என்ற அடிப்படையில் எதிர்த்தார்கள். இந்தப் புரிதல் மிக முக்கியமானது.

மணலாறு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்று அறியப்பட்ட சிறு ஆறை ஒட்டி, தமிழ்க் கிராமங்களும், அதையொட்டிய விவசாய நிலங்களும், தமிழ் வணிகர்களுக்கு உரியதாக இருந்தன. அரச காணிகளான இவை, 99 வருடக் குத்தகைக்கு, தமிழ் வணிகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நாவலர் ஃபாம், கென்ட் ஃபாம், டொலர் ஃபாம், சிலோன் தியேட்டேர்ஸ் ஃபாம், ரெயில்வே குறுப் ஃபாம், ஃபோஸ்ட் மாஸ்டர் குறுப் ஃபாம் எனக் கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள், 16 தனியார் தோட்டங்களாக அமைந்திருந்தன. 1977ஆம் ஆண்டு, இன வன்முறைகளைத் தொடர்ந்து, மலையகத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள், டொலர் மற்றும் கென்ட் ஃபாம்களில் குடியேற்றப்பட்டிருந்தனர். 1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து, மணலாற்றை ஒட்டிய குடியேற்றங்களில் இருந்து, தமிழ் மக்களை விரட்டும் கைங்கரியத்தை, அரச படைகளூடாக அரசாங்கம், முன்னெடுக்கத் தொடங்கியிருந்ததாக, மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு, தனது அறிக்கையொன்றில் குறிப்பிடுகிறது. குறிப்பாக, 1984இன் நடுப்பகுதியில், கென்ட் மற்றும் டொலர் ஃபாமுக்குள் நுழைந்த பொலிஸார், அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அங்கிருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை முன்னெடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் கண்காணிப்பில், சிங்கள மக்களைக் குடியேற்றும் பணி இடம்பெற்றது. கென்ட் மற்றும் டொலர் ஃபாம்களில் குடியேற்றப்பட்டிருந்தவர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள்; அவர்கள் அங்கிருந்து, இத்தகைய விதத்தில் வௌியேற்றப்பட்டமையானது, சௌமியமூர்த்தி தொண்டமானுக்குக் கடும் விசனத்தை உருவாக்கியது. இதைக் கண்டித்து அவர், அமைச்சரவையில் கருத்துரைத்த போது, சிறில் மத்யூ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி உள்ளிட்ட அமைச்சர்கள், “அவர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குகிறார்கள்” என்று கூறி, தமது நடவடிக்கையை நியாயப்படுத்தியதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். லலித் அத்துலத்முதலி, பயங்கரவாதத்துக்கு உதவுகிறார்கள் என்ற பல்லவியோடு, இந்த மக்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பயங்கரவாத இயக்கங்களில் வலிந்து சேர்க்கப்படுகிறார்கள்; ஆகவே அவர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்ற சரணத்தையும் இணைத்துப் பாடினார்.

தமிழ் மக்கள் வௌியேற்றப்பட்டு, கென்ட் மற்றும் டொலர் ஃபாம்களில் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் குடியேற்றப்பட்டனர். இதைச் சிறைச்சாலை மறுசீரமைப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்ட அமைச்சர் அத்துலத்முதலி, சிறைக்கைதிகள் மறுவாழ்வு தொடர்பிலான திறந்த சிறைச்சாலை பரீட்சார்த்த முயற்சி என்றும், சிறைக்கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் இங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இது அப்பகுதியின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் செயல் மட்டுமல்ல, மாறாகக் குற்றவாளிகள் குடியேற்றப்பட்டமையானது, அதற்கு அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளும் செயலாக அமைந்தது. மறுபுறத்தில், இந்த நடவடிக்கையானது, இஸ்‌ரேலின் ஆலோசனையின்படி, லலித் அத்துலத்முதலியால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்று, சிலர் கருத்துரைக்கிறார்கள். பலஸ்தீன கெரில்லா இயக்கங்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த, இஸ்‌ரேல் எல்லையோரக் கிராமங்களில், யூதக் குடியேற்றங்களை உருவாக்கி, அதன் மூலம் கெரில்லாப் படைகளின் ஊடுருவலையும் அவர்களது வழங்கல் சங்கிலியையும் தடுத்தனர். இதையொத்த நடவடிக்கையே, இங்கு முன்னெடுக்கப்பட்டது என்பது சில விமர்சகர்களது கருத்தாகும்.

கென்ட், டொலர் ஃபாம் படுகொலைகள்

இந்த நிலையில், 1984 நவம்பரில், வடக்கில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. குறிப்பாகப் பொலிஸ், அரச படைகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையேயான தாக்குதல்கள், கணிசமானளவில் அதிகரித்திருந்த காலப்பகுதி அதுவாகும். முல்லைத்தீவில் நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், ஏலவே அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், பொலிஸ் மற்றும் அரச படைகளால் அங்கிருந்து விரட்டப்பட்டு வருவதும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கவனத்தை, மணலாற்றின் பக்கம் திருப்பியது. இதுவரை காலமும் பொலிஸ், அரசபடைகள் மற்றும் அரச இயந்திரம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் வன்முறைக் கரம், முதன் முறையாகச் சிங்களப் பொதுமக்களைப் பதம் பார்த்தது. 1984 நவம்பர் 30ஆம் திகதி, இரவோடிரவாக மணலாற்றுக்கு வந்திறங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த 50 போராளிகள், கென்ட், டொலர் ஃபாம்களுக்குள் நுழைந்து, அங்கிருந்த சிறைக் காவலர்கள், ஆண்கள் மற்றும் சில பெண்கள், குழந்தைகள் மீது துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இந்தத் தாக்குதலில், அங்கு குடியேற்றப்பட்டிருந்த குற்றவாளிகள், சிறைக் காவலர்கள், மற்றைய காவலர்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 80 ஆண்கள் உயிரிழந்திருந்தனர். அரசபடைகள், தமிழ்ச் சிவிலியன்கள் மீது கட்டவிழ்த்து வந்த வன்முறையை மட்டுமே இதுவரை அறிந்திருந்த உலகத்துக்கு, முதல் தடவையாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்று, சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழ் நாட்டில் கூட, குறித்த தாக்குதல் தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டதாக 1984 டிசெம்பர் நான்காம் திகதி வௌியான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

1950கள் முதல், தமிழர்கள் மீது பொலிஸ், அரசபடைகள் நடத்திய தாக்குதலைக்கூட மறந்தும் இன அழிப்பு என்று குறிப்பிடாத அரசியல் விமர்சகர்கள் கூட, இந்தச் சம்பவத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய இன அழிப்பு என்று விளிப்பதைக் காணலாம். கென்ட், டொலர் ஃபாம் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் தாம், 30 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்தனர். இதைத் தவறு என்று தனது நூலில் குறிப்பிடும் ரீ.சபாரட்ணம், தாக்குதல் நடத்திய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர் பொலிஸ், இராணுவம் அவ்விடத்துக்கு விரையும் முன்பே, அங்கிருந்து வௌியேறி விட்டிருந்ததாகவும், பொலிஸ், இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களையே சுட்டுக் கொன்றதாகவும் கூறுகிறார்.

எது எவ்வாறாயினும், சிங்களப் பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மீதான முதற்கறையாக அமைந்தது. மற்றொரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவான ஈ.பீ.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா, இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருந்தார். அரசாங்கத்துடனும் அரச படைகளோடும் தான் யுத்தமேயன்றி, சிங்களப் பொதுமக்களோடு அல்ல என்பது அவரது கருத்தாக இருந்தது. இது மிகச் சரியான கருத்தாகும். அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதலானது, எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதொன்றல்ல; அது, மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இலங்கையில் இடம்பெறுவது பயங்கரவாதப் பிரச்சினைதான் என்று நிறுவ, பகிரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்த ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இந்தத் துயரம் மிகு சம்பவம், பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகச் சர்வதேச ரீதியில் பெரும் பிரசாரத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால், அரசாங்கத்தின் படைகள் இத்தோடு நின்றுவிடவில்லை. ( தொடரும்)  yarl.com jul18 2018

27 04 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 151)

‘கிழட்டு நரி’ தந்திரம்

  • “மெத்தப் பழையதோர் இல்லம், நீ நுழைந்ததும் தரை மட்டமானது.
  • உந்தன் நரித்தந்திரம் கொண்டு பல நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டாய்.
  • பலநூறு பொறிகளிலுமிருந்தும் நீ தப்பித்துக் கொண்டாய்,
  • ஒரு கிழட்டு நரியைப் போல!”

செய்யத் அஹ்மட் அதிப் பிஷாவாரி என்ற கவிஞன், பாரசீக மொழியில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைச் சுட்டி எழுதிய கவிதை இது. இன்றும் ஈரானியர்கள், பிரித்தானியாவைக் ‘கிழட்டு நரி’ என்று வர்ணிக்கிறார்கள். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவையும் ‘கிழட்டு நரி’ என்று, பொதுவௌியில் பலரும் விளித்திருக்கிறார்கள். சிலர் ‘ஆசியாவின் நரி’ என்றும், சிலர் ‘இருபதாம் நூற்றாண்டின் நரி’ என்றும் விளித்திருக்கிறார்கள். ‘நரி’ என்பதன் முன்னுள்ள அடைமொழி மாறுபட்டாலும், ‘நரி’ என்பது மட்டும் ஜே.ஆரோடு தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. இந்தச் சொற்பயன்பாடானது, வௌிப்பார்வையில் எதிர்மறையான தோற்றத்தைக் கொடுப்பினும், அதிகார அரசியல் பார்வையில், இதை மிகப்பெரியதொரு புகழாரமாகவே கொள்ளலாம். ‘சிங்கத்தால் தன்னைப் பொறிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியாது. நரியால், ஓநாயிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஆகவே ஒருவன் பொறிகளை அடையாளம் காண நரியாகவும், ஓநாய்களைப் பயமுறுத்த, சிங்கமாகவும் இருக்க வேண்டும்’ என்று, தனது ‘இளவரசன்’ என்ற நூலில், நிக்கோலோ மக்கியாவலி எழுதுகிறார்.

1970ஆம் ஆண்டுத் தேர்தலில், டட்லி சேனாநாயக்கவின் தலைமையின் கீழ், வெறும் 17 ஆசனங்களை மட்டுமே பெற்றுப் படுதோல்வி அடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியை, 1977 தேர்தலில் 5/6 என்ற வரலாறு காணாத, பெரும்பான்மைப் பலத்தை வென்றெடுக்கச் செய்ததில், ஜே.ஆரின் பங்கு மறுக்கப்பட முடியாதது. அதேபோல, இரண்டாவது குடியரசு அரசமைப்பின் அறிமுகமாகட்டும், அதனூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அறிமுகமாகட்டும், மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாது, சர்வஜன வாக்கெடுப்பினூடாக 5/6 பெரும்பான்மைப் பலத்தை கொண்டிருந்த நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடித்ததாகட்டும், இனப்பிரச்சினை விவகாரத்தில் நடந்துகொண்ட விதமாகட்டும், தன் முன்னாலிருந்த பொறிகளை ஜே.ஆர், இதுவரை நேர்வழியிலோ, சூழ்ச்சியாலோ வெற்றிகரமாகக் கடந்துகொண்டிருந்தார். ஆனால், இதுவரை அவரால் தாண்ட முடியாத பொறியாக இருந்தது இந்திராவும் இந்தியாவும். இந்திரா காந்தியின் அகால மரணம், அந்தப் பொறியைத் தகர்த்திருந்தது. இப்போது, ஜே.ஆருக்கு முன்பிருந்தது அரியதொரு வாய்ப்பு. அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்டிருந்த இந்திரா காந்தியின் இடத்தில், இப்போது அரசியல் குழந்தையான ராஜீவ் காந்தி. இது, ஜே.ஆருக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம். அவர் அதை, இந்தப் பொழுதில் சிறப்பாகவே கையாண்டிருந்தார் எனலாம்.

இறுதிச் சடங்கில் புதியதோர் ஆரம்பம்

இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, இந்தியா சென்றிருந்த ஜே.ஆர், புதிய பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தியுடன் மிகச் சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். குறித்த சந்திப்புப் பற்றிய, பல பதிவுகளையும் பார்க்கும் போது, தானறிந்த அரசியல் கலையின் அனைத்து உத்திகளையும் ஜே.ஆர் பயன்படுத்தினார் என்றே கூறலாம். தன்னை, இந்தியாவினதும் நேரு குடும்பத்தினதும் நண்பனாக ராஜீவிடம் அறிமுகப்படுத்திய ஜே.ஆர், தன்னை ஒரு கருணைமிக்க, சிறந்த பௌத்தன் என்றும் காட்டிக்கொள்ளத் தவறவில்லை. மகாத்மா காந்தியையும் நேருவையும் புகழ்ந்த ஜே.ஆர், 1940களில் இந்திய காங்கிரஸ் நடாத்திய மாநாடொன்றில் தான் கலந்துகொண்டதையும் குறிப்பிட்டிருந்ததுடன், ஜவஹர்லால் நேருவுடன், தான் தொடர்ந்து தொடர்புகளைப் பேணியதையும் ராஜீவிடம் எடுத்துரைத்தார். இந்த ஆலாபனைகளில், இந்திரா காந்தியுடனான உறவு பற்றிக் குறிப்பிடுவதை ஜே.ஆர், இலாவகமாகத் தவிர்த்துவிட்டார் என்று தோன்றுகிறது. ஆலாபனைகளைத் தொடர்ந்து, முக்கிய விடயத்துக்குள் நுழைந்த ஜே.ஆர், தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு, நியாயத்தை வழங்கவே விரும்புவதாகவும், ஆனால் தன்னைச் சூழ, சிங்களத் தீவிரப்போக்குடைய அமைச்சர்கள் இருப்பதால், தன்னால் அதைச் செய்யமுடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், தமிழ் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள், தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, தன்னுடைய நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டினார். அதாவது, தான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவே விரும்புகி‌றார். ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், வன்முறையை முன்னெடுக்கும் போது, தன்னால் அரசியல் தீர்வொன்றை எட்ட முடியாது. ஆகவே, அரசியல் தீர்வை எட்டுவதற்கு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த, இந்தியா உதவவேண்டும். அதாவது இந்தியா, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான், ஜே.ஆர் சொன்னதற்குள் பொதிந்திருந்த உட்பொருள் ஆகும். அடுத்ததாக, இந்திரா காந்தியின் நிலைப்பாடு பற்றிக் கருத்துரைத்த ஜே.ஆர், இந்திரா காந்தியைத் தமிழ்த் தீவிரப் போக்காளர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களே இந்திரா காந்தியைப் பக்கச்சார்புடன் நடந்துகொள்ளத் தூண்டியதாகவும், அதில் கோபால்சாமி பார்த்தசாரதியின் பங்கு முக்கியமானது என்றும், சிங்கள மக்கள், கோபால்சாமி பார்த்தசாரதி மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்ததுடன், வேறோர் இந்திய அதிகாரியை நியமித்தால், சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடும் என்றும் தெரிவித்தார். அதாவது, இந்திரா காந்தியின் மகனிடம், தாயாரைப் பற்றிக் குறை கூற முடியாது; ஆகவே, இந்திரா காந்தியைச் சூழ்ந்தவர்கள் தான் தவறானவர்கள் என்று ஜே.ஆர், இந்திரா காந்தியை நேரடியாகக் குறைசொல்லாது தவிர்த்ததுடன், சர்வ கட்சி மாநாடு, வெற்றி அளிக்காததற்கான பழியை, இலாவகமாக கோபால்சாமி பார்த்தசாரதி மீது திருப்பி விட்டிருந்தார்.

அதாவது, பார்த்தசாரதி ஒரு தமிழர் என்பதால், அவர் தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்கள மக்கள் நினைக்கிறார்கள்; ஆகவே, அவருடைய மத்தியஸ்தத்தைச் சிங்கள மக்கள் ஏற்கத் தயாரில்லை என்றும், ஆளை மாற்றினால், இந்த முயற்சி வெற்றியளிக்கும் என்றும் கருத்துரைக்கிறார். இறுதியாக ஜே.ஆர், இந்தியா இராணுவ ரீதியாகத் தலையீடு செய்யுமோ என்ற அச்சம், இந்திய மத்தியஸ்தத்தின் நிமித்தம், இலங்கை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று, தன்னுடைய நீண்டநாள் அச்சத்தை ராஜீவிடமும் பதிவுசெய்தார். அதாவது, இந்தியா இராணுவ ரீதியில் தலையிடாது என்ற உறுதிமொழியை, இந்திரா காந்தியிடம் பெற்றுக்கொண்டதைப் போல, ராஜீவிடமும் பெற்றுக்கொள்ள, ஜே.ஆர் விரும்பினார். சுருக்கமாக, புதியதோர் ஆரம்பத்தை ஜே.ஆர், ராஜீவிடம் வேண்டி நின்றார்.

வென்றது தந்திரம்

ஜே.ஆரின் ‘கிழட்டு நரி’த் தந்திரம், அரசியல் குழந்தையான ராஜீவ் காந்தியிடம், இந்தச் சந்தர்ப்பத்தில் வெற்றிபெற்றது என்றே கூறலாம். இதற்குச் சில அரசியல் விமர்சகர்கள், இராஜதந்திரம், சர்வதேச, பூகோள அரசியல் தொடர்பிலான ராஜீவ் காந்தியின் அனுபவக் குறைவே காரணம் என்கிறார்கள். மறுபுறத்தில் சில விமர்சகர்கள், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமரான ராஜீவ் காந்தியின் முன், இலங்கை விவகாரத்தை விட முக்கியமான பல காரியங்கள் இருந்ததால், அவர் இலங்கை விவகாரத்தில், அப்போது பெரும் சிரத்தை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். எவ்வாறிருப்பினும், ஜே.ஆரின் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்த்த ராஜீவ் காந்தி, சில உறுதிமொழிகளை ஜே.ஆருக்கு வழங்கினார். இலங்கை மீது, ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்காது; இலங்கையின் ஒற்றுமையும் ஆட்புல ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படும்; இலங்கை விவகாரத்தில் இந்தியா சார்பில் மத்தியஸ்தராகச் செயற்படும் கோபால்சாமி பார்த்தசாரதிக்குப் பதிலாக, வேறொரு நபரை நியமித்தல் ஆகிய உறுதிமொழிகளை வழங்கியதுடன், புதியதோர் ஆரம்பத்துக்கும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில், அரசியல் தீர்வு அமையவேண்டும் என்றும், அது அவ்வாறு நடக்காவிட்டால், நீளும் முரண்பாடு இலங்கையைப் பிளவடையச் செய்யும் என்றும் ராஜீவ் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி கொண்ட ஜே.ஆர், ராஜீவுக்கு வாழ்த்துரைத்து விடைபெற்றார். கொழும்பு திரும்பிய ஜே.ஆர், ஊடகங்களை உற்சாகத்தோடு எதிர்கொண்டார். இந்தியாவின் இளைய பிரதமர், இலங்கை விவகாரம் தொடர்பில் புதியதோர் ஆரம்பத்துக்குச் சம்மதித்துள்ளார் என்று ஊடகங்களுக்கு மகிழ்ச்சியுடன் சொன்ன ஜே.ஆர், இலங்கையின் பிரிவினையை ஒருபோதும் இந்தியா ஆதரிக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ராஜீவ் காந்தியுடனான சந்திப்பைச் சாதகமான மாற்றமாகவே ஜே.ஆர் பார்த்தாரெனச் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்று, ஜே.ஆர் நம்பியதாகவும் சிலர் கருத்துரைக்கிறார்கள். குறிப்பாக, ராஜீவ் காந்தியினதும், அவரது வௌிவிவகார அமைச்சரான றொமேஷ் பண்டாரியினதும் அரசியல் அனுபவக் குறைவை, தனக்குச் சாதமானதாக ஜே.ஆர் கருதியிருந்தார்.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது சர்வகட்சி மாநாடு

மறுபுறுத்தில், ராஜீவ் காந்திக்கு இலங்கையை பற்றி யோசிக்கும் அவகாசம் இருக்கவில்லை. இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, அவர் இந்தியாவின் பிரதமராகவும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்றிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து, தன்னுடையை அரசியல் நிலையைப் பலப்படுத்தவே அவர் விரும்பினார். 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதியில், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ராஜீவின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. இது, ஜே.ஆருக்குத் தேவையான இடைவௌியை வழங்கியது. இந்த இடைவௌியின் முழுப் பயனையும் பெற்றுக் கொள்ள விரும்பிய ஜே.ஆர், 1984 நவம்பர் 14ஆம் திகதி, மீளத் தொடரவிருந்த சர்வகட்சி மாநாட்டை, ஒரு மாதகாலம், அதாவது டிசெம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம், “அரசாங்கக் கட்டமைப்பு பற்றி, சட்டமூல முன்மொழிவுகள் தயாராகவில்லை” என்பதுதான். மறுபுறத்தில், பாதுகாப்புக் கெடுபிடிகளை ஜே.ஆர் அரசாங்கம் பலப்படுத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக, 1984 நவம்பரில், இலங்கையின் வடக்கு, வடமேற்குக் கடற்பரப்பில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தமிழ்நாட்டுடனான கடற்போக்குவரத்து, ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டது. ஆயினும், இக்காலப்பகுதியில் இச்செயற்பாடு, வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படவில்லை என்று, கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார். அதற்கு, இலங்கைக் கடற்படையின் வளக்குறைபாடு, ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது, 1984 டிசெம்பர் 14ஆம் திகதி, ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கவிருந்த அரசாங்கக் கட்டமைப்பு முறை தொடர்பிலான சட்ட முன்வரைவு மட்டும்தான், தமிழர்களுக்கு ஜனநாயக அரசியல் பாதையின் தொலைவில் தெரிந்த, மெல்லிய ஒளியாக இருந்தது. (தொடரும்) yarl.com  july 09 2019

20 04 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 149

அதிகரித்த இந்திய அழுத்தம்

1984 ஒக்டோபர் இறுதிவாரத்தில், தலைநகர் கொழும்பில் நடந்த குண்டுத்தாக்குதல்கள், இலங்கை அரசாங்கத்தையும் ஜனாதிபதி ஜே.ஆரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. தன்னுடைய இராணுவவழித் தீர்வுத் திட்டத்துக்கு, இந்தியா கடும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ஜே.ஆர், மீண்டும் உணர்ந்த தருணம் இது. இதேவேளை, 1984 ஒக்டோபர் 27ஆம் திகதி, அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் றிச்சட் மேர்ஃபி, இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்திருந்தார். சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கை இனப்பிரச்சினை, அரசியல் ரீதியில்தான் தீர்க்கப்பட வேண்டும்; ஆனால், அது இலங்கை அரசாங்கத்தால்தான் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, அந்நியர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அங்கு, ‘அந்நியர்’ என்று சுட்டியது, இந்தியாவைத் தான் என்பது வௌ்ளிடைமலை. ஜே.ஆரைச் சமாதானப்படுத்த, இத்தகைய கருத்தை அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருந்தாலும், இலங்கை விவகாரத்தில், இந்தியாவுடன் நேரடியாக முரண்பட, அமெரிக்கா ஒரு போதும் தயாராக இருக்கவில்லை என்பதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இலங்கைக்கு நேரடியாகவும், வௌிப்படையாகவும் அமெரிக்கா எந்த இராணுவ உதவியையும் செய்யவில்லை. இதுபற்றிக் கருத்துரைக்கும் கே.எம்.டி.சில்வா, ‘இந்திய இராஜதந்திர அழுத்தமானது, மேற்கு நாடுகள் இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவுவதைத் தடைசெய்தது. ஆனால், இந்திய அழுத்தத்துக்கு உட்படாத பாகிஸ்தான், சீனா மற்றும் இஸ்‌ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை, தனக்கு தேவையான இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டது’ என்று அவர் பதிவு செய்கிறார். இதில், இஸ்‌ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் செய்த உதவிகளுக்குப் பின்னால் இருந்தது, அமெரிக்காதான் என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். இலங்கைப் பிரச்சினையையும் ‘பனிப்போரின்’ ஓர் அங்கமாக, அக்ஷய் மிஷ்ரா விவரிக்கிறார். அன்றைய, சோவியத் சார்பு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் நடந்த பனிப்போரின் முக்கிய களம், இலங்கைத் தீவு என்று அவர் விவரிக்கிறார். இந்த விவரணத்தின் ஏற்புடைமை பற்றிய வாதத்தைவிட, இலங்கையின் அரசியலில் சர்வதேச நாடுகளின், வல்லரசுகளின் பங்கு எவ்வளவு தூரம் இருந்தது என்பதை உணர்தல்தான் இங்கு முக்கியமானது. திரைகளுக்கு பின்னால் நடக்கும், இந்த இராஜதந்திர மற்றும் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது. இலங்கையின் 30 வருட கால யுத்தம் என்பது, வெறுமனே, இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் இளைஞர்ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் நடந்தது என்ற புரிதல் மேலோட்டமானது. அது மட்டுமல்ல, அர்த்தமற்றதும் கூட. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது; தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் எவ்வாறு உருவாகின; அவற்றின் அரசியல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது. இவை அனைத்தின் பின்னணியிலும் இருந்தவர்கள் யார்? பின்னணியிலிருந்த அரசியல் என்ன? என்பவற்றைப் புரிந்துகொள்ளாது, இலங்கையின் இனப்பிரச்சினையையும் யுத்தத்தையும் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியாது.

இந்திராவின் அகால மரணம்

ஜே.ஆரின் ‘இராணு ரீதியான அணுகுமுறை’ என்ற திட்டத்துக்கு, இந்தியா சிம்மசொப்பனமாக இருந்தது. இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி டொனல்ட் றேகனின் விசேட தூதுவர் வேர்னன் வோல்டேர்ஸ், “இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்கக்கூடும்” என்ற எச்சரிக்கையை, ஜனாதிபதி ஜே.ஆருக்குத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவுக்கு விஜயம் செய்த அவர், “இலங்கை மீது நேரடி இராணுவ நடவடிக்கையை, இந்தியா மேற்கொள்ளக்கூடாது” என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். ஆனால், அன்றைய இந்தியா, அமெரிக்க சார்புடைய இந்தியாவாக இருக்கவில்லை. ஆகவே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை என்று வோல்டேர்ஸ் கூறியதையும் கே.எம்.டி சில்வா பதிவுசெய்கிறார். இந்தச் சிக்கல் நிறைந்த சூழலில்தான், 1984 ஒக்டோபர் 31ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது மெய்ப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்படும் துயரச் சம்பவம் இடம்பெற்றது. இந்த அதிர்ச்சி மிக்க சம்பவம், ஜே.ஆர் அரசாங்கத்துக்குத் துயரத்திலும் ஓர் ஆசிர்வாதமாக அமைந்தது. தொடர்ந்த இந்திய அழுத்தத்திலிருந்து, ஜே.ஆருக்கு மூச்சுவிட, ஒரு சிறிய இடைவேளை கிடைத்ததைப் போல, இந்தச் சம்பவம் அமைந்தது. மேலும், ஜே.ஆர் - இந்திரா ஆகியோருக்கு இடையிலான உறவு, மிகப் பலவீனமானதாகவும் பரஸ்பர ஐயமும், நம்பிக்கையீனமும் கொண்டதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் இனி மாற்றம் வரும் என்று ஜே.ஆர் எதிர்பார்த்தார். குறிப்பாக, அடுத்ததாக ஆட்சிக் கட்டில் ஏறிய, இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, இந்திரா போலல்லாது, நேரு போல, இலங்கை விவகாரத்தைக் கையாள்வார் என்று, ஜே.ஆர் எதிர்பார்த்ததாக கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.

சோகத்தில் தமிழர்கள்

இந்திராவின் அகால மரணம், இலங்கைத் தமிழ்த் தலைமைகளை, மிகுந்த அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தது. “தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்கும் ஒரே தடுப்பரணாக இருந்தவர், இந்திரா காந்தி” என்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மிகுந்த சோகத்துடன் கருத்துரைத்தார். எதிர்காலம் பற்றி, நிச்சயமற்றிருந்த தமிழர்கள், இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, அச்சத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். ராஜீவ் காந்திக்கு, அமிர்தலிங்கம் அனுப்பிய தந்தியில், ‘இலங்கை மக்கள், தமது தாயை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஜீவ் காந்திக்கு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் துயர்பகிர்வுக் கடிதமொன்றை அனுப்பி இருந்தார். அதில், இந்திரா காந்தியை ‘அன்னை’ என்று விளித்திருந்தவர், இந்திரா காந்தியின் கொலையை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றமென்றும் அதைத் தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அன்னை இந்திரா, அடக்குமுறைக்குள்ளான தமிழீழ மக்கள் மீது இரக்கமும், புரிந்துணர்வும் கொண்டிருந்ததுடன், அவர்களுக்கு உதவியும் செய்ததாகவும் குறிப்பிட்டதுடன், அவரது தனிப்பட்ட அக்கறை இல்லாவிட்டால், எமது சமூகம் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்றும், தமிழ் மக்கள் எப்போதும் இந்திரா காந்தியை அன்புடனும், மரியாதையுடனும், தீராத நன்றியுடனும் நினைவுகூர்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்திரா காந்தியின் மறைவின் சோகம், வெறுமனே ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளாலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களாலும் மட்டும் வௌிப்படுத்தப்படவில்லை; மாறாகத் தமிழர் தாயகமே, இந்திராவின் அகாலமரணச் செய்தியறிந்து சோகமயமாகி இருந்தது.

தமிழர் தாயகமெங்கும், வீடுகள் உட்படக் கறுப்புக் கொடிகள் பறந்தன; கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டன; போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. மறுபுறத்தில், இந்திரா காந்தியின் அகால மரணம், சிங்கள-பௌத்த தேசியவாத அரசியல் தலைமைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக, சில விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள். வடக்கில், இலங்கை இராணுவத்தினர் சிலர், துக்கம் அனுஷ்டித்த தமிழ் மக்களை நோக்கி, “அம்மா எங்கே?”, “அம்மா எங்கே?” என்று, நக்கலாகக் கேட்டதாகவும் சிலர் பதிவு செய்கிறார்கள். இந்திரா காந்தியின் மரணம், எத்தகைய மகிழ்ச்சியைத் தந்திருக்குமென்பது, இந்திரா காந்தி என்ற ஆளுமையின் கீழான, இந்தியா என்ற பிராந்திய வல்லரசின் மீதான அச்சமும், அதிருப்தியும் எவ்வளவு தூரம் இலங்கை அரசியலில் ஊடுருவி இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. தனிப்பட்ட உணர்வுகள் எவ்வாறு அமைந்திருந்தாலும், இந்திரா காந்தியின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்ற 1984 நவம்பர் மூன்றாம் திகதியை, இலங்கை அரசாங்கம் துக்கதினமாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தியின் மரணச் செய்தி வௌிவந்த நாள் முதல், அமைதி காத்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு நடைபெற்ற நவம்பர் மூன்றாம் திகதி, ஏறத்தாழ அரைமணிக்கொருமுறை, வடக்கில் குண்டுகளை வெடிக்கச் செய்தன. ‘இது மரியாதையின் முகமாக நடத்தப்பட்டது’ என்று, ரீ.சபாரட்ணம் தன்னுடைய நூலில் கருத்துரைக்கிறார்.

புதியதோர் ஆரம்பம்

இந்திராவின் மரணம், ஜே.ஆருக்கு மூச்சுவிட, ஓர் இடைவௌியை மட்டுமல்ல, புதிய தலைமையுடனான, புதிய உறவொன்றைக் கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கி இருந்தது. இந்திராவின் அகால மறைவைத் தொடர்ந்து, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, பிரதமராகப் பதவியேற்றிருந்தார். ராஜீவின் அரசியல் பிரவேசம் கூட, சந்தர்ப்ப சூழலால் அமைந்தது என்பதுதான் பொது அபிப்பிராயம். இந்திராவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவர் ராஜீவின் தம்பியான சஞ்சய் காந்தியே. விமானியாகப் பயிற்சி பெற்றிருந்த ராஜீவ், இந்திய விமானசேவையில் விமானியாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததுடன், 1980 வரை அரசியலிலிருந்து விலகியே இருந்தார். சஞ்சய் காந்திதான், நேரு-காந்தி குடும்பத்தின் அடுத்த அரசியல் வாரிசாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அவரது தாயார் இந்திரா காந்தியுடன், அரசியல் பயணத்தை மேற்கொண்டிருந்தார். 1980 ஜூன் மாதத்தில், விமான சாகச முயற்சியொன்றில் ஏற்பட்ட விபத்தில், சஞ்சய் காந்தி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, இந்திராவின் வற்புறுத்தலின் பெயரில், ராஜீவ் காந்தி 1980இன் பிற்பகுதியில் அரசியலில் நுழைந்தார்.

1984 நவம்பரில் ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது, அவரது நேரடி அரசியல் அனுபவம் என்பது ஏறத்தாழ நான்கு வருடங்களேயாகும். அவர் அரசியலுக்கு அந்நியர் இல்லை. ஆனால், அவரது வாழ்வின் பெரும்பகுதி, அரசியலிலிருந்து அந்நியப்பட்டே இருந்ததால், அவரது நேரடி அரசியல் கள அனுபவம் என்பது, மிகக் குறைவானது. ஜே.ஆர் இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பார்த்தார். இந்திராவுடன் தனக்கு உருவாக்க முடியாதிருந்த நல்ல உறவை, ராஜீவுடன் உருவாக்குவதற்கான நல்லதோர் ஆரம்பமாக, இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கை அவர் பயன்படுத்தினார். இந்திரா காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஜே.ஆர், ராஜீவுடன் மிகச் சுருக்கமான சந்திப்பொன்றை நடத்தியிருந்ததோடு, அந்தச் சந்திப்பில், தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார். இந்தியாவானது, தமிழ் மக்களுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவே இலங்கை மக்கள் கருதுகிறார்கள் என்றும், அதற்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக இலங்கை மக்கள் உணர்கிறார்கள் என்றும் ராஜிவிடம் எடுத்துரைத்த ஜே.ஆர். இந்தியாவின் செல்வாக்கை தாம் விரும்பும் அதேவேளை, இலங்கை தொடர்பில் இந்தியா புதியதோர் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு ராஜீவிடமிருந்து சாதகமானதொரு பதில் கிடைத்ததானது, ஜே.ஆருக்கு நிறைந்த நம்பிக்கையைத் தந்தது. (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)yarl.com 02 07 2018

13 04 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 148)  

தலைநகரை அதிர வைத்த தாக்குதல்கள்

வல்பொல ராஹுல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் நிராகரித்ததை, ஜே.ஆர், தனக்குச் சாதகமான பிரசாரமாக மாற்றினார். தாம் சமாதானத்தை விரும்பினாலும், தாம் நேசக்கரம் நீட்டினாலும், ‘பயங்கரவாதிகள்’ அதை ஏற்கத் தயாரில்லை என்ற பாணியில், அந்தப் பிரசாரம் அமைந்திருந்தது. இதன் உட்பொருளாக, இராணுவ நடவடிக்கைதான் ஒரே வழி என்பது வௌிப்படுத்தப்பட்டிருந்தது. ஜே.ஆர் சமாதானத்தையும் சுமுகமான தீர்வையும் விரும்பியிருந்தால், சர்வகட்சி மாநாடும், பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வுத் தீர்வுக்கு, அவர் இந்தியாவிடம் இணங்கிய, ‘அனெக்ஷர் சி’ முன்மொழிவுகளும் அவரது கையில்தான் இருந்தன. அவற்றை மிகச் சுலபமாக நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், ஜே.ஆரின் நோக்கம், சமாதானமும் சுமுகத் தீர்வுமாக இங்கு இருந்திருக்க முடியாது. தனது, இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான காரணங்களையே அவர் தேடிக்கொண்டிருந்தார்.

வடக்கு, கிழக்கில் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த வேளை, 1984 ஒக்டோபர் மாதத்தின் இறுதிப்பகுதியில், தலைநகர் கொழும்பை ஆட்டிப்போட்ட தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ‘ஈரோஸ்’ (ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம்) நடாத்தியது. 1984 ஒக்டோபர் 22ஆம் திகதி, புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, பாலியகொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில், தொடர்ந்து நடந்த குண்டுவெடிப்புகள், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைத் தந்தன. வடக்கு, கிழக்கில் வன்முறைத் தாக்குதல் நடக்கும்போது, அதற்கப்பால் உள்ள பிரதேசங்களுக்கு அவை வெறும் செய்திதான். ஆனால், இலங்கையின் தலைநகரில் அது நடக்கும் போது, அது வெறும் செய்தியாகக் கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. உடனடியாக ஊடகச் சந்திப்பை நடத்திய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, பொதுமக்களை அமைதி காக்குமாறு வேண்டினார். “பயங்கரவாதிகளின் எண்ணம், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்த, சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதாகும். பயங்கரவாதிகளின் இந்த நோக்கம் நிறைவேறக் கூடாது. ஆகவே, சிங்கள மக்கள் அமைதி காக்கவும்” என்று அவர் வேண்டியிருந்தார். இந்தத் தாக்குதலின் பின்னணியில், இந்தியா இருந்ததெனச் சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். பேச்சுவார்த்தை மேசையிலிருந்து ஜே.ஆர் நழுவி, அமெரிக்கா, இஸ்‌ரேல் உள்ளிட்ட நாடுகளின் பின்புலத்துடன், இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்துக்கு அதிருப்தியை அளித்தது. ‘ஜே.ஆர், வன்முறை வழியை நாடினால், இந்தியாவும் அதை உரிய வகையில் எதிர்கொள்ளத் தயார்’ என்ற செய்தியை, குறித்த தாக்குதல் உணர்த்துவதாக அமைந்ததுடன், ஜே.ஆரைப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பச் சொல்லும் எச்சரிக்கையாகவும் அமைந்தது என அவர்கள் கருத்துரைக்கிறார்கள். இந்தியாவின் கடும் அதிருப்திக்கு மத்தியில் ஜே.ஆர், மேற்கின் உதவியுடன் தன்னுடைய இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்தபோது, மறுபுறத்தில் இந்தியா, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்தது.

இலங்கை அரசியலில் முக்கியமான திருப்பம்

இதில் ஜே.ஆருக்கு புரிபடாது போன ஒரே விடயம், ஜே.ஆரைப் பின்புலத்தில் ஆதரித்த எந்தவொரு மேற்கு நாடும், இந்தியாவை நேரடியாக எதிர்க்கப்போவதில்லை என்பதுதான். ஜே.ஆருக்கு இன்னொரு விடயமும் புரிந்திருக்காது போயிருந்தது. தமிழர்களின் தலைமை, தமிழ் உயர்குழாமிடமிருந்து விலகிக் கொண்டிருந்தது. இந்த மாற்றம்தான், இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியமானதொரு திருப்பம். உயர்குழாமும், இலங்கை அரசியலும் பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் கோல்ப்றூக்-கமரன் அரசமைப்பின் மூலம், உள்நாட்டவருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதிலிருந்து இலங்கையின் அரசியல், இலங்கையின் உயர்குழாமின் கட்டுப்பாட்டில்தான் இருந்துகொண்டிருந்தது. பெரும் தனவான்களும், நிலவுடைமையாளர்களும், முதலியார்களும் கொலனித்துவக் காலத்தில், மேற்கத்தேய கல்வி கற்றதன் வாயிலாக உருவான புதிய உயர்-மத்திய தர தொழில் நிபுணர்களையும் கொண்ட உயர்குழாம் தான், இலங்கையின் அரசியலை வடிவமைத்தது. இது பற்றிய கடுமையான விமர்சனப் பார்வை, முதலில் இடதுசாரிய அரசியல் ஆய்வாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கை அரசியலை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கை அரசியலின் இந்தப் பரிமாணத்தையும் விளங்கிக் கொள்வது அத்தியாவசியமானது. இது தனித்து ஆராயப்படக்கூடிய ஒரு பரப்பு. ஆனால், மிகச் சுருக்கமாகவேனும் இதனை இங்கு நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். இலங்கையின் சுதந்திரத்தை, இரத்தம் சிந்தாது பெற்ற சுதந்திரம் என்று, சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்க வர்ணித்தார்.

ஆனால், 1948இல் இலங்கை பெற்றது சுதந்திரம் அல்ல; மாறாக, டொமினியன் அந்தஸ்துதான். 1947இல் பிரித்தானியா வகுத்தளித்த, பெரும்பாலும் சோல்பரிக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றியமைந்த சோல்பரி அரசமைப்பின்படி, பிரித்தானிய ‘வெஸ்மின்ஸ்டர்’ மாதிரியை ஒத்த அமைப்பு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது, இது 1972இல் இலங்கை குடியரசு ஆகும் வரை தொடர்ந்தது. அதாவது 1948இலிருந்து 1972 வரை, இலங்கை தொழில்நுட்ப ரீதியில், பிரித்தானிய முடியாட்சிக்குக் கீழ்ப்பட்ட நாடுதான். இலங்கையின் அயலவர்களின் நிலையிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. இந்தியாவும், பாகிஸ்தானும் விரைவில் தமக்கென்ற சுதந்திர அரசமைப்பைத் தாம் வடிவமைத்துக்கொண்டன. 1946இல் அமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சபை, தன்னுடைய கடமையை 1950இல் நிறைவு செய்ததுடன், அந்த அரசமைப்பு ஏற்கப்பட்டு, 1950இல் இந்தியா குடியரசாகியது.

பாகிஸ்தான் 1956இல் குடியரசாகியது. ஆனால் இலங்கையில், 1972இல் இடதுசாரித் தோழர்களுடன் சிறிமாவோ பண்டாரநாயக்க கைகோர்த்தது வரை, அதற்கான தேவையை இலங்கை அரசியல் தலைவர்கள் உணரவே இல்லை. ஏனென்றால், அதற்கான அவசியப்பாடு, இலங்கையின் உயர்குழாம் அரசியல் தலைமைகளுக்கு இருக்கவில்லை. இலங்கையின் சிங்கள அரசியல் பரப்பை எடுத்துக் கொண்டால், சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையிலான அவர்களது அரசியல், கண்டியச் சிங்களவர், கீழ்நாட்டுச் சிங்களவர் என்ற இருபெரும் பிரிவுகளும், அப்பிரிவுகளுக்குரிய மேற்குறிப்பிட்ட உயர்குழாமால்தான் வடிவமைக்கப்பட்டு, பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவும் கண்டியத் தலைவர்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் சமஷ்டி கோரியது, கண்டியச் சிங்களவர்களாகிய தம்முடைய தனித்த அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேயாகும்.

ஆனால், 1931இல் டொனமூர் அரசமைப்பின் கீழ், சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கைக் குடிப்பரம்பலில் சிங்கள பௌத்தர்கள் அதீத பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உணரப்பட்டது. இதன் பின்னர், பிரிவடைந்த சிங்கள அடையாளங்களுக்குப் பதிலாக, ஒருமித்த சிங்கள பௌத்த தேசிய அடையாளம்தான் தமக்குச் சாதகமானது என்று, சிங்களத் தலைவர்கள் கருதினார்கள். இது, அவர்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வழிசமைத்தது. மறுபுறத்தில், தமிழ்த் தலைமைகள் ஆரம்பத்தில் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்காது, இலங்கைத் ‘தேசியஅரசு’ என்ற ஒற்றையாட்சிக்குள், அதிகாரச் சமநிலையைக் கோரின. இக்கோரிக்கையானது, நிச்சயம் தமிழ் மக்களின் விருப்பின் பிரதிபலிப்பாக இருந்திருக்க முடியாது. மாறாக, மேற்கத்திய பாணியிலான, குறிப்பாக பிரித்தானியாவின் மாதிரியிலான தேசிய அரசொன்றைக் கட்டியெழுப்பும், பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற, உயர்குழாமின் எண்ணமாகவே இருந்தது.

சுதந்திர இலங்கை அரசியலைத் தீர்மானித்தவர்கள், ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆவார். இலங்கையை ஆட்சி செய்த, செய்கின்ற பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுள் டீ.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குடும்ப ரீதியிலான பிணைப்புகளைக் கொண்ட உறவினர்கள். எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் நிலவுடைமையாளர்கள். இவர்கள் அத்தனை பேரும் ஆங்கிலப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள். டீ.எஸ். சேனநாயக்கவையும் சிறிமாவோ பண்டாரநாயக்கவையும் தவிர, ஏனையவர்கள் அனைவரும் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தவர்கள். இது சிறியதோர் உதாரணம் மட்டும்தான். இலங்கை அரசியலை வடிவமைத்ததும், கொண்டு நடத்தியதும் இப்படிச் சில குடும்பங்களும், உறவினர்களும், நண்பர்களும்தான். தெற்காசியாவின் சந்ததி அரசியலைப் பற்றிய இந்தர் மல்ஹோத்ராவின் நூலில், ‘இலங்கை தான், சந்ததி அரசியலில் மிக முக்கியமானதும், முன்னணியானதுமான நாடு’ என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்மக்களின் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கையின் தமிழர் அரசியலில் பொன்னம்பலம், குமாரசுவாமி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினர். இதன் பின்னணியில், யாழ்ப்பாண சைவத் தமிழ் வேளாளர் என்ற அடையாளம் செல்வாக்குச் செலுத்தியது. அதன் பின்னர், தனித்த குடும்ப செல்வாக்குக்குப் பதிலாக ஜீ.ஜீ. பொன்னம்பலம், சா.ஜே.வே.செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் என, ஆங்கிலக் கல்வி கற்ற, ‘அப்புக்காத்துகள்’ என்ற உயர்குழாமின் ஆதிக்கத்துக்குள் தமிழ் அரசியல் வந்தது. இதனாலேயே தமிழர் அரசியலை, ‘அப்புக்காத்துகளின் அரசியல்’ என்று ஹாஸ்யத்துடன் சிலர் விளித்ததை, அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதைவிடவும், இதற்குள் பிரதேசவாத, சாதிய அடையாளங்களும் முக்கியத்துவம் பெற்றதை மறுக்க முடியாது. குறிப்பாக, யாழ்ப்பாண சைவத் தமிழ் வேளாளர்களின் செல்வாக்கு, தமிழ் அரசியலை வடிவமைத்தது எனலாம். இங்கு செல்வநாயகத்தை, விதிவிலக்காகச் சிலர் குறிப்பிடலாம். ஆனால், செல்வநாயகம் மேற்குறித்த செல்வாக்குக் குழுவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டவர் அல்லர்; மாறாக, அவர்களுடன் ஒன்றித்துப் பயணித்தவர். இவர்கள்தான், முதன்முதலில் இலங்கை என்ற, ஒற்றையாட்சி தேசிய அரசைக் கட்டியமைக்க முயன்றார்கள்.

அது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஆதிக்கத்துக்குள் விழுந்ததும், சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தாலும், ஒற்றையாட்சிக்குள்ளான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராகவே இருந்தார்கள். இங்கு சிங்களவர்கள் இடையேயும் தமிழர்கள் இடையேயும் அரசியலானது, சமூகத்தளத்தில் மேலிருந்து கீழ்நோக்கிய, அதிகாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது எனச் சில விமர்சகர்கள், குறிப்பாக இடதுசாரி விமர்சகர்கள் கருத்துரைக்கிறார்கள். இது, ஒரு மக்கள் கூட்டத்தினது அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிப்பதில், அந்த மக்கள் கூட்டத்தின் தலைமைக்கு, அதீத செல்வாக்கை வழங்கியது. அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்மானிப்பதும், வடிவமைப்பதும் அவர்களின் தலைமைகளாகவே இருந்தார்கள். இங்கு தலைமைகள் சொல்வதை, ஆமோதிப்பவர்களாக அல்லது ஆமோதிக்க வேண்டியவர்களாகவே மக்கள் இருந்தார்கள். அதிகாரப் பகிர்வோ, சமஷ்டியோ, தனிநாடோ, தமிழ்த் தலைமைகள் தாம் விரும்பியதை, தமிழ் மக்களின் அபிலாஷைகளாகப் பிரதிபலிக்கும் செல்வாக்கைக் கொண்டிருந்தார்கள்.

இலங்கை அரசாங்கம், இந்தக் காலகட்டத்தில் மிகக் குறைவானதோர் அதிகாரப் பகிர்வை வழங்கி இருந்தாலும், அதை ஏற்றதொரு தீர்வாகத் தமிழ் மக்கள் முன் சமர்ப்பிக்கும் அரசியல் வலு, தமிழ்த் தலைமைகளிடம் இருந்தது. ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியோடு, தமிழ்த் தலைமைகளின் இந்த அரசியல் வலு, குறைவடையத் தொடங்கியது. இதே தமிழ்த் தலைமைகள், அரசியல் பகட்டாரவாரமாக விதைத்த தனிநாடு என்ற அபிலாஷையைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மக்கள் மயப்படுத்தி, முன்னெடுக்கத் தொடங்கின. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின்பால் தமிழ் மக்களை நகர்த்திச் சென்றது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகளான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை, தமிழர் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தும் செயலானது, ஜே.ஆரின் குறுங்கால அரசியல் திட்டமான, இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சாதகமானதாக இருந்திருக்கலாம். ஆனால், ஜே.ஆர் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ, அது தமிழர் அரசியலின் உயர்குழாமின் செல்வாக்கைச் சிதைக்கவும் செய்தது. இனி ஜே.ஆர் விரும்பினாலும், மூடிய அறைகளுக்குள் ஒரு சில தலைவர்களுடன் உடன்படிக்கை செய்து, அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியாது என்ற சூழலை உருவாக்கி இருந்தது. தமிழ் மக்களின் அரசியல் இப்போது, உயர்குழாமைத் தாண்டி, மக்கள் மயமாகி இருந்தது. ( தொடரும்) yarl.com jun 25 2019

06 04 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 147) ஒரு பௌத்த துறவியின் தூது

“இலங்கைத் தீவானது புத்தருக்குச் சொந்தமானது. அது மூன்று இரத்தினங்களால் நிறைந்த திறைசேரியைப் போன்றது. அதனால் ஆதிகால இயக்கர்கள், இந்தத் தீவில் வாழ்ந்தது நிரந்தரமற்றதாக அமைந்ததைப் போலவே, தவறான நம்பிக்கையைக் கொண்டவர்கள், இந்தத் தீவில் வாழ்வதும் நிரந்தரமில்லை. பௌத்தரல்லாத ஒருவர், தனது வலிமையைக் கொண்டு இலங்கைத் தீவைச் சில காலம் ஆண்டாலும், புத்தரின் குறிப்பிட்டதொரு சக்தியால், அத்தகையவரது தொடராட்சி நிலைக்காது. ஆகவே, இலங்கை என்பது, பௌத்த மன்னர்களுக்கே பொருத்தமுடையது; ஆகவே, அவர்களது ஆட்சியே நிரந்தரமாக நீடிக்கும்” என்று ‘பூஜாவலிய’ என்ற 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிங்கள நூல் குறிப்பிடுகிறது. ‘சிங்கள-பௌத்த’ மேலாதிக்க மனப்பான்மையை மட்டுமல்ல, இலங்கை ஒரு பெளத்த தேசம் என்ற புனைவின் அடிப்படையையும் இது சுட்டி நிற்கிறது. இதைத் தன்னுடைய, ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ பற்றிய நூலில், ‘அரச மதமாகப் பௌத்தம்’ என்ற அத்தியாயத்தில், வல்பொல ராஹூல தேரர் சுட்டிக் காட்டுகிறார். அதுமட்டுமல்ல, “இலங்கை பெளத்தத்துக்கு உரியது; ஆகவே சோழர்கள், சேரர்கள் போன்ற பௌத்தரல்லாதவர்கள், இலங்கையின் அரியாசனத்துக்கு உரித்துடையவர்கள் அல்லர்” என்ற நிஸ்ஸங்க மல்லன் காலத்துக் கல்வெட்டுக் கூறுவதையும் போதிசத்துவர்கள் மட்டுமே, இலங்கையின் அரசனாக முடியும் என்ற நான்காம் மஹிந்த காலத்து, ஜேத்தவனாராமக் கல்வெட்டுக் குறிப்பிடுவதையும் வல்பொல ராஹூல தேரர் சுட்டிக் காட்டுகிறார். இந்த முயற்சிகள் மூலம், முழு இலங்கையும் ஒரு தனித்த, பௌத்த இறைமைக்கு உட்பட்டது என்றொரு வரலாற்றுப் புனைவைக் கட்டியெழுப்ப முனைகிறார்கள். இன்று, இலங்கை அரசியலில் கடந்துவிட முடியாத அரசியல் புனைவாக, இது ஆழவேர்விட்ட பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது. இதனால்தான் இன்றும், ‘துட்டகைமுனு’ இலங்கை அரசியல் தலைமைகளின் ஆதர்ஷ புருஷராகக் கொள்ளப்படுகிறார்.

சர்வகட்சி மாநாடு ஒத்திவைப்பும் அமிர்தலிங்கத்தின் அதிருப்தியும்

சர்வகட்சி மாநாடு மூலம், இந்தியாவில் தான் ஒத்துக்கொண்ட அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு ஏற்ப, அரசியல் தீர்வொன்றை வழங்குவதால், தான் ஆதர்ஷிக்கும் ‘துட்டகைமுனு’ ஆக முடியாது என்பதுதான், ஜே.ஆர் ஜெயவர்தனவின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்தியாவை வௌிப்படையாகவும் முழுமையாகவும் எதிர்த்துச் செல்லும் வலு, ஜே.ஆரிடம் இருக்கவில்லை. ஜே.ஆரை ஆதரித்த ஏனைய சர்வதேச சக்திகளும் நேரடியாக இந்தியாவுடன் முரண்பட விரும்பவில்லை. தன்னுடைய இராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டிருந்த ஜே.ஆருக்கு, இஸ்‌ரேலின் ஆதரவு அதிகம் இருந்ததாகப் பல ஆய்வாளர்களும் பதிவு செய்கிறார்கள். இஸ்‌ரேலிய உதவியுடன், இலங்கையின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தந்திரோபாயங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதை வௌிப்படையான சவாலாக இந்தியா பார்த்தது. இஸ்‌ரேலின் ‘மொஸாட்’, அமெரிக்காவின் ‘சீ.ஐ.ஏ’, பாகிஸ்தானின் ‘ஐ.எஸ்.ஐ’, ஐக்கிய இராச்சியத்தின் ‘எம்.ஐ.6’, இந்தியாவின் ‘றோ’ எனச் சர்வதேச சக்திகளின் உளவுத்துறைகள், இலங்கை இனப்பிரச்சினையின் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாகப் பலரும் பதிவுசெய்கிறார்கள். இது, வெறும் இலங்கைக்குள்ளான இனப்பிரச்சினை அல்ல; மாறாக. பூகோள அரசியல் போட்டியின் ஆடுகளம் என்பதுதான் யதார்த்தமாக இருந்தது. இந்த நிலையில்தான், செப்டெம்பர் 30ஆம் திகதி, ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன சர்வகட்சி மாநாட்டை, நவம்பர் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தார். பிராந்திய சபைகளை ஜே.ஆர் ஏற்றுக் கொள்ளாததும், மீண்டும் சர்வகட்சி மாநாட்டை ஒத்தி வைத்ததும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த பார்த்தசாரதியைத் தொடர்புகொண்ட அமிர்தலிங்கம், சர்வகட்சி மாநாடு தொடர்பிலான தமது அதிருப்தியைப் பதிவு செய்ததுடன், தாம் பொறுமை இழந்துவிட்டதாகவும், சர்வகட்சி மாநாட்டிலிருந்து வௌியேறத் தாம் எண்ணியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சர்வகட்சி மாநாடு என்பது, இந்தியாவின் குழந்தை; குறிப்பாக, இந்திராவின் குழந்தை. அது தோல்வியடைவது, இந்தியாவின் தோல்வியாகும். ஆகவே, அமிர்தலிங்கம் தரப்பினரைப் பொறுமைகாக்கக் கோரிய பார்த்தசாரதி, அவர்களுடைய கரிசனங்கள் பற்றி, இந்திரா காந்தி அறிந்திருப்பதாகவும் தமக்கு உள்ள மாற்று உபாயங்கள் பற்றித் தாம் ஆராய்வதாகவும் உறுதியளித்தார்.

வல்பொல ராஹுல தேரரின் அழைப்பு

இந்த நிலையில், 1984 ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில், பௌத்த பிக்குவான வல்பொல ராஹூல தேரர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களைத் தன்னுடைய தலைமையிலான பௌத்த பிக்குகளின் குழுவொன்று, தமிழ்நாட்டில் சென்னை நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், வன்முறை மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும் என்று கூறியும் அழைப்புக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். 19ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால ஏற்றிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத் தீயை, 20ஆம் நூற்றாண்டில் ஏந்திச் சென்றவர்களுள் முக்கியமானவர் வல்பொல ராஹூல தேரர் என்பவராவார். வல்பொல ராஹூல தேரர், ஒரு பௌத்த துறவி மட்டுமல்ல, பௌத்தம், குறிப்பாகத் தேரவாத பௌத்தம் பற்றிய புலமையாளர்களில் முக்கியமான ஒருவர். இலங்கை மட்டுமல்லாது, சர்வதேசப் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தவர். இது அவருடைய ஒரு முகம். ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத செயற்றிறனாளர் என்பது அவருடைய மறுமுகம். தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்ற, பௌத்த துறவிகள் தம் உயிரையும் தரத்தயார் என்ற தேசிய பகட்டாரவார எண்ணத்தைக் கொண்டிருந்தவர் என்பதோடு, சர்வகட்சி மாநாட்டில் மாவட்ட சபைகளைத் தாண்டிய தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதிலும் மிகஉறுதியாக இருந்தவர். தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்ற, இலங்கைத் தீவின் பௌத்த பாரம்பரியத்தைப் பேணிக் காக்க, பௌத்த துறவிகள் சமூக செயற்பாடுகள் மற்றும் அரசியலில் ஈடுபட வேண்டும் என, ‘பிக்குகளின் பாரம்பரியம்’ (ஆங்கிலம்) என்ற, அவர் 1974இல் எழுதிய நூலில், பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபட, வௌிப்படையாக அறைகூவல் விடுத்தார். பௌத்த துறவிகளின் நேரடி அரசியல் பிரவேசத்துக்கும் - சமகால அரசியலுக்கும், தமக்கான அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்களின் உருவாக்கத்துக்கும் ஊற்றுவாயாக, வல்பொல ராஹூல தேரரைக் கருதலாம்.

பௌத்த பிக்குகளின் அரசியல் பற்றி, ‘இலங்கையின் பௌத்த துறவிகள்’ பற்றிய தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிடும் எச்.எல். செனவிரட்ன, ‘மேல்தட்டு பௌத்த பிக்குகளின் போர்வெறியைத் தூண்டும் பிரசாரமும், இராணுவ நடவடிக்கை மூலமான வெற்றியே இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்ற கோட்பாடும், பௌத்த துறவறத்தின் சமூக மற்றும் மனிதாபிமான கரிசனைக் குறைவைக் காட்டுகிறது. பௌத்தத் துறவறமானது, சமாதானம் தொடர்பிலான ஸ்திரமான நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இனப்பிரச்சினை இலகுவாகத் தீர்க்கப்பட்டிருக்கும்’ என்று பதிவு செய்கிறார். கௌதம புத்தர் போதித்த, புனித அட்டவழிப்பாதையில் செல்லும் கடப்பாடுடைய பிக்குகளின் அரசியல் ஈடுபாடு என்பது, மதரீதியான பார்வையில் ஏற்புடையதல்ல. இத்தகைய வாதம் இலங்கை, மியான்மார், தாய்லாந்து உள்ளிட்ட பலநாடுகளின் பௌத்த பிக்குகளின் அரசியல் பற்றி, முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனமாகும். இது தனித்து ஆராயப்படத்தக்க பெரும் வாதப் பரப்பாகும். புலைமைத்தளத்தில், ‘அரசியல் பௌத்தம்’ என்று இதை விளிக்கிறார்கள். யதார்த்தத்தில் மதங்கள், அரசியலின் முக்கிய கருவியாகப் பயன்பட்டதை, பயன்பட்டுக்கொண்டிருப்பதைக் காணலாம். பௌத்தமும் இதற்கு விதிவிலக்கல்ல. சுதந்திர இலங்கையின் முதல் ஆட்சியாளர்களான டீ.எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவல ஆகியோர் பௌத்த துறவிகளின் நேரடி அரசியல் பங்களிப்பை விரும்பவில்லை. மாறாக, அவர்களை ம‌ய்யநிலை அரசியலிலிருந்து சற்று அந்நியப்படுத்தியே வைத்திருந்தார்கள் என்று சில விமர்சகர்கள் கருத்துரைக்கிறார்கள். ஆனால், எஸ். டபிள்யு.ஆர். டீ. பண்டாரநாயக்கவின் ‘பஞ்சமாபலவேகய’வுடன் இந்த நிலை மாறுகிறது. எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன போன்ற தலைவர்கள், பௌத்தத்தைத் தமது அரசியலுக்குச் சாதகமான கருவியாகப் பயன்படுத்தினார்கள் என்பது மறுக்க முடியாதது.

தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் மறுப்பு

‘சிங்கள-பௌத்த’ தேசியவாதியாக அறியப்பட்ட வல்பொல ராஹூல தேரர், ஜே.ஆருக்கும் இனவெறி கக்கும் சிங்கள-பௌத்த தேசியவாதியான அமைச்சர் சிறில் மத்யூவுக்கும் நெருக்கமானவராகவும் திகழ்ந்தார். சர்வகட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வல்பொல ராஹூல தேரர், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தமை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலைவர்களுக்கு ஆச்சரியத்தையும் அதன் உள்நோக்கம் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது. சர்வகட்சி மாநாட்டில், வெறும் பிராந்திய சபைகளைக் கோரிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கோரிக்கையையே நிராகரித்து, மாவட்ட சபைகளை விட, அதிகமான தீர்வொன்றை வழங்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்த வல்பொல ராஹூல தேரர், தனிநாடு கோரும் தம்மிடம் எந்தச் சமரசத்தை முன்வைக்கப் போகிறார் என்பது, தமிழ் ஆயுதக் குழுக்களின் தலைவர்களுக்கு ஆச்சரியத்தையும் இதற்குப் பின்னால், வேறேதும் நிகழ்ச்சிநிரல் இருக்கக்கூடும் என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிச்சயமற்ற சூழலில், இதைத் தவிர்ப்பதே சாலச்சிறந்தது என்று கருதிய டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் அமைப்புகளின் தலைமைகள், வல்பொல ராஹூல தேரரின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இணைந்து அனுப்பிய பதில் கடிதத்தில், ‘பௌத்த துறவிகள் குழுவோடு நாம் பேசத் தயாராக இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களோடு பேசுவது தமிழ்மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வைப் பெற்றுத் தராது’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், வல்பொல ராஹூல தேரரின் அழைப்பை மறுத்து, தனியாகப் பதில் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், ‘நாம் வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்ல; நாம் பயங்கரவாதத்தில் ஈடுபடவுமில்லை; அடிமையாக வாழாதிருப்பது மட்டுமே எங்களுடைய ஒரே எண்ணம். நாம் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நாம் அமைதியாக வாழவே விருப்பம் கொண்டுள்ளோம். அரசாங்கத்தின் ஆயுதம் கொண்ட அடக்குமுறையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ளவே, நாம் ஆயுதம் ஏந்தியுள்ளோம். வணக்கத்துக்குரிய பௌத்த துறவியான நீங்கள், பௌத்த மதத்தை அவமதிக்கும் அரசாங்கமொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதையிட்டு வருத்தம் கொள்கிறோம். நீங்கள் உண்மையில் சமாதானத்தை விரும்பினால், நீங்கள் உண்மையில் பௌத்தத்துக்கும் பௌத்த தர்மத்துக்கும் மதிப்பளித்தால் தயவுசெய்து அடக்குமுறையை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம், அதன் அடக்குமுறையை நிறுத்த அறிவுறுத்துங்கள். எமக்கு அமைதி வேண்டும்; ஆனால், அதற்காக நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திடம் மண்டியிட்டு ஏமாற்றமடைய, நாம் தயாரில்லை’ என்று குறிப்பிட்டிருந்ததாக, ரீ.சபாரட்ணம் தனது நூலில் மேற்கோள் காட்டுகிறார். 1984 ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துப் பரவிய வன்முறைகள், ஒக்டோபர் மாதத்திலும் தொடர்ந்ததுடன், தலைநகர் கொழும்பையும் எட்டிப் பார்த்தது. ( தொடரும்) 

05 04 2019

கறுப்பும் காவியும் - 16 கண்ணா கருமை நிறக் கண்ணா

மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை. ஆனால் மகாபாரதத்தின் கண்ணனுக்கும், கீதையின் கண்ணனுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! மேற்காணும் இரு நூல்களிலும் கண்ணன் எப்படிக் காட்டப்பட்டுள்ளார் என்னும் செய்திகளை பார்க்க வேண்டும். எவ்வாறு இந்துத் தத்துவம் பற்றிய செய்திகள் டாக்டர் ராதாகிருஷ்ணன் நூலிலிருந்து மேற்கோள்களாகத் தரப்பட்டதோ, அவ்வாறே, மகாபாரதச் செய்திகள் ராஜாஜி அவர்களின் உரையிலிருந்தும், பகவத் கீதைச் செய்திகள் பக்தி வேதாந்த பிரபு பாதர் நூலிலிருந்தும் இங்கு தரப்பட்டுள்ளன. கண்ணன் அவதாரம் என்று கூடச் சொல்லக்கூடாது, அவரே முழுமுதற் கடவுள் என்கிறார், கீதைக்கு உரை எழுதியுள்ள பிரபு பாதர். "அவர் (ஸ்ரீகிருஷ்ணர்) மிகச் சிறந்த மனிதர் என்று கூட எண்ணக்கூடாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளாவார்" என்கிறார் அவர்.

ஆனால் மகாபாரதமோ, அவரை ஒரு சாதாரணக் கதை மாந்தராகவே காட்டுகிறது. அந்நூலில், எந்த ஒரு இடத்திலும் அவர் நேர்மையாக வழி கட்டியதாக இல்லை. சூழ்ச்சி, சதி, தந்திரம் இவற்றின் மூலமே பாண்டவர்களுக்கு வெற்றி தேடித் தரும் பாத்திரமாக அவர் படைக்கப் பட்டுள்ளார். சில இடங்களில், மற்ற பாத்திரங்களால், மிக இழிவாக அவர் பேசப்படுகின்றார். எடுத்துக்காட்டிற்கு ஓர் இடத்தைப் பார்ப்போம். மகாபாரதத்தின் 18 பருவங்களில் இரண்டாம் பருவம் சபா பருவம். இதில் ஸ்ரீகிருஷ்ணர் எப்படியெல்லாம் பழிக்கப்படுகின்றார் என்பதை ராஜாஜியின் எழுத்து வழி காணலாம். மாயன் என்னும் அசுரன் கட்டிக்கொடுத்த இந்திரப்பிரஸ்தம் என்ற மாளிகையில் (அதையும் ஓர் அசுரன்தான் காட்டிக்கொடுக்க வேண்டியுள்ளது) யுதிஷ்டிரன் (தருமர்) ராஜசூய யாகம் செய்ய நண்பர்கள் வலியுறுத்துகின்றனர். கண்ணனிடம் கலந்துரையாடுகின்றார் தருமர். மகத நாட்டு அரசன் ஜராசந்தன் ஏற்கனவே 84 அரசர்களை வென்றுள்ளார். இன்னும் 14 அரசர்களை வென்றுவிட்டால், பிறகு அவன்தான் ராஜசூய யாகம் செய்து, பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள இயலும் என்று கூறிவிட்டு, அந்த ஜராசந்தனை நாம் கொன்றுவிட்டால், பிறகு யுதிஷ்டிரன் இந்த யாகத்தைச் செய்யலாம், பேரரசனாகவும் ஆகிவிடலாம் என்று கண்ணன் விடை சொல்கின்றான். (கண்ணனுக்கும் ஜராசந்தனுக்கும் ஏற்கனவே பகை உள்ளது. அதனைத் தீர்த்துக்கொள்ளவும் கண்ணன் காட்டிய வழியாக இது இருக்கலாம்)

தருமர் உடனடியாகப் பின்வாங்கி விடுகிறார். 'நம்மால் ஜராசந்தனைப் போரில் வெல்ல முடியாது' என்கிறார். போரில் வேண்டாம், தந்திரமாகக் கொன்றுவிடலாம் என்பது கண்ணன் கருத்து. தந்திரமாகக் கொல்வதைத் தருமர் வேண்டாம் என்று சொல்லவில்லை. (என்ன தருமமோ!) அமைதியாக இருக்கிறார். மௌனம் சம்மதம் ஆகிறது. பீமனையும், அர்ச்சுனனையும் மாறுவேடத்தில் அழைத்துக்கொண்டு போய், ஜராசந்தனை 'ஒண்டிக்கு ஒண்டி' சண்டைக்கு அழைத்து, ஜராசந்தனும், பீமனும் 13 நாள்கள் சண்டையிட்ட பின், கண்ணன் மறைமுகமாக ஒரு புல்லைக் கையிலெடுத்து மறைமுகமாகச் சில வழிகளை சொல்லிக் கொடுக்க, இறுதியில் அவனைக் கொன்று பீமன் வென்று விடுகிறான். இதுதான் ஜராசந்தனை வதம் செய்த 'வீரதீரக் கதை'. பிறகு ராஜசூய யாகம் தொடங்குகிறது.

யாகம் தொடங்குவதற்கு முன் துவாரகாபுரி அரசன் கண்ணனுக்கு அக்கிர பூஜை (முதல் மரியாதை) செய்வதென்று தருமர் முடிவெடுத்ததும், சேடி நாடு அரசன் சிசுபாலன் கொதித்தெழுகிறான். கண்ணனைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசுகிறான். சிசுபாலனுடன் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், மணவறையிலிருந்து மணமகள் ருக்மணியைக் கவர்ந்து வந்தவன் அல்லவா கண்ணன்! அந்தக் கோபம் இன்னும் அடங்கவில்லை. கண்ணனை மட்டுமின்றி, பீஷ்மர், தருமர் எல்லோரையும் அவ்வளவு பெரிய அவையில் சிசுபாலன் 'வெளுத்து வாங்குகிறான்'. இதோ சிசுபாலன் பேச்சின் ஒரு பகுதியைக் கேளுங்கள்: இங்கே அக்கிர பூஜை செய்யப் போகிறவன்(தருமன்) முறைகெட்ட முறையில் பிறந்தவன். ஆலோசனை சொன்னவனோ (பீஷ்மர்), எப்போதும் தாழ்ந்த இடத்தையே தேடி ஓடுகின்ற தாயின் (கங்கா) வயிற்றில் பிறந்தவன். மரியாதையை அங்கீகரிக்கிறவனோ, மாடு மேய்க்கிறவர்கள் குலத்தில் வளர்ந்த மூடன். இந்த சபையோர்கள் ஊமைகள். இங்கே யோக்கியர்களுக்கு இடமில்லை"

தொடர்ந்தும் சிசுபாலன் நிறைய பேசுகின்றான். "ஏ கிருஷ்ணனே, இந்தப் பாண்டவர்கள்தான் சுயநலத்தைக் கருதி முறையைப் புறக்கணித்து உனக்கு மரியாதை செய்கிறார்கள், ஆனால் நீ எப்படி ஒப்புக் கொள்ளலாம்? உனக்கும் தெரியாமல் போயிற்றா? தரையில் சிந்திய அவியுணவை (யாகத்தில் படைக்கப்படும் பொருள்) யாரும் கவனிக்காதிருந்தால் ஒரு நாய் தின்று விடுவது போல, உனக்குப் பொருத்தமில்லாத மரியாதையை நீ ஏற்றுக்கொள்வாயா? கண்ணில்லாத குருடனுக்கு சௌந்தர்யமான பொருளைக் காட்டுவது போலவும், ஆண்தன்மை இல்லாதவனுக்கு விவாகம் செய்து கொடுப்பது போலவும், ராஜ்ஜியமில்லாத உனக்கு அரசர்க்குரிய இந்த மரியாதையைச் செய்து பரிகசிக்கிறார்கள்." இவ்வளவு கடுமையாய் ஒரு 'முழுமுதற் கடவுளை' ஒரு சாதாரண அரசன் பேசுவதும் மகாபாரதத்தில்தான் இருக்கிறது. "நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் எண்ணில் இருக்கின்றன" (இயல் 9, பதம் 4)என்று கண்ணன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கீதையும், மகாபாரதத்தில்தான் இருக்கிறது. (எல்லா ஜீவன்களும் எனக்குள் இருக்கின்றன என்பது கண்ணனின் வாக்கு. சிசுபாலன் மட்டும் வெளியே இருக்கிறான் போலிருக்கிறது). ஒரே நூலில் எப்படி இத்தனை முரண்? ஒரே நூல் என்று சொல்லப்படுகிறதே தவிர, இரண்டும் வெவ்வேறு நூல்கள். வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டவை. கி.பி. 6 ஆம் நூற்றாண்டில், இடைச் செருகலாக கீதை திணிக்கப்பட்டுள்ளது என்பதே ஆய்வாளர்களின் முடிவு. ஏன் திணிக்கப்பட வேண்டும்? காலப்போக்கில், மனுநீதி மக்களால் புறக்கணிக்கப் படுகிறது. வருண தருமம் மறையத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், மீண்டும் வருண தருமத்தை நிலைநாட்ட இப்படி ஒரு நூல் எழுதப்பட்டு, மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆம், கீதை என்பது வருணம் காக்க வந்த நூலே! கீதையின் உட்புகுந்து தேடினால் உண்மை விளங்கும்!! (தொடரும்)subavee blog  15 08 2018

22 03 2019

கறுப்பும் காவியும் - 15 எழுதக் கூசும் கதைகள்

கறுப்பு நிற மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறத்திலேயே ஒரு கடவுள் அவதாரத்தை உருவாக்கி, அந்த அவதாரத்திற்குக் கிருஷ்ணர் என்று பெயர் சூட்டினர். கிருஷ்ணன் என்றாலும், கண்ணன் என்றாலும் கருப்பன் என்றுதான் பொருள். கடவுள் அவதாரத்தைக் கறுப்பாக உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? புத்த மதம் பரவத் தொடங்கிய பின்னர், பார்ப்பன ரல்லாதார் (கறுப்பு மக்கள்) அம்மதத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இவர்கள் நிலைநாட்ட விரும்பிய நால்வருண அமைப்பைப் புத்தமதம் தகர்க்கத் தொடங்கியது. இதனை, "பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்" (Revolution and counter revolution in ancient India) என்னும் தன் நூலில் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருப்பார்.

"(புத்த மதக் கொள்கைகளால்) சதுர்வருணத்தின் அடிப்படையே உடைக்கப்பட்டது. சதுர்வருணத்தின் அமைப்புமுறை தலைகீழானது. சூத்திரர்களும், பெண்களும் சந்நியாசிகளாக ஏற்கப்பட்டனர்." The frame work of Chaturvarnya had been broken. The order of Chaturvarnya had been turned upside down. Shudras and Women could become Sanyasis (Part III - chapter - Krishna and his Gita)

இதுதான் காரணம். வெகு மக்கள் தங்களை விட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சம். அப்படிப் போய்விட்டால் தங்களுக்கு யார் அடிமைகள்? அடிமைகள் இல்லாவிட்டால், தாங்கள் எப்படி எசமானர்களாக வாழ முடியும்? ஆதலால் அவர்களை எப்படியேனும் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டது. அதே நேரம், அந்தக் கறுப்புக் கடவுளை மிகப் பெரியவராகவும் ஆக்கிவிடக் கூடாது அல்லவா! என்ன நடந்திருக்கிறது பாருங்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்கிறார், கிருஷ்ணன் அவதாரம்தான். ஆனாலும் பார்ப்பனர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருந்திருக்கிறான். மரியாதை என்றால் எப்படிப்பட்ட மரியாதை? இதோ அவர் வரிகள்:-

"எவ்வாறாயினும், ஆரியச் சிந்தனையாளர்களிடம் கிருஷ்ணர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தருமர் நடத்திய ராஜசூய யாகத்திற்கு வந்திருந்த பார்ப்பன விருந்தினர்களின் கால்களை அவர் கழுவினார் என்று சொல்லப்படுகிறது." (Krishna, however, had great respect for the Aryan thinkers and it is said that he washed the feet of the Brahmin guests at the Rajasuyayagna of King Yudhisthira)

எவ்வளவு தந்திரம். நம்மைப் போலவே ஒருவரைக் கடவுள் அவதாரம் என்று சொல்லிவிட்டு, அவர் பார்ப்பனரின் கால்களைக் கழுவுகின்றார் என்கின்றனர். உங்கள் கடவுள் நிலையே இதுதான் என்றால், உங்கள் நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்களை அவர்கள் எச்சரிக்கின்றனர். இது மட்டுமன்று. கண்ணன் அல்லது கிருஷ்ணன் என்னும் கடவுள் எப்படி எல்லாம், சாதாரண மனிதனை விடக் குறைவான ஒழுக்கம் கொண்டவராகக் காட்டப்படுகிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர் பற்றி விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பாகவதம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. அம்பேத்கர் இந்த மூன்று நூல்களைப் பற்றியும், அவை தரும் கதைகளை பற்றியும் எழுதியுள்ளார். அவர் சொல்லுவார், "விஷ்ணு புராணம் சற்று நாகரிகமாகப் பேசும். ஹரிவம்சம் கொஞ்சம் கீழே இறங்கும். பாகவதம் பற்றிச் சொல்லவே வேண்டாம். அனைத்தையும் ஆபாசத்தில் அள்ளி வீசும்."

"இந்துமதத்தின் புதிர்கள்" (Riddles in Hinduism) என்னும் அண்ணல் அம்பேத்கரின் நூல் ஒவ்வொருவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. ராமாயணம், மகாபாரதம், பாகவதம் எனப் பல்வேறு புராண, இதிகாசங்களிலிருந்து சான்றுகளை அடுக்கி அதில் அவர் எழுதியிருப்பார். ஆனாலும் கிருஷ்ணன் பற்றிய கதைகளை எழுதும்போது, அவர் கைகள் நடுங்குகின்றன. சொல்லக் கூசும் கதைகளாக அவை உள்ளன. "எழுதுவதற்கே சங்கடமாக (feel delegate) உள்ளது. என்னால் இயன்றவரையில் நாகரிகமாக எழுத முயல்கிறேன்" என்கின்றார் (Riddles in Hinduism - Part 3 - appendix)

 யமுனை ஆற்றில் குளிக்கப்போன கோபியர்களின் ஆடைகளைக் கவர்ந்து கொண்டு மரத்தில் ஏறி அமர்ந்தபடி, அந்தப் பெண்களை நிர்வாணமாகத் தன்னை நோக்கி வரச் சொன்ன அந்த 'ஆன்மிக' அனுபவத்தைத்தான் சொல்ல முடியாமல் அம்பேத்கர் தவிக்கிறார். இந்தக் காட்சி பாகவதத்தில் உள்ளது. இந்த "இறையனுபவம்" எதற்காக? யாருக்கு வழிகாட்டுவதற்காக? வேறொன்றுமில்லை, கறுப்புக் கடவுள்களின் 'லட்சணம்' இதுதான் என்று சொல்வதற்காக! இன்னமும் பாருங்கள், கிருஷ்ணருக்கு எத்தனை மனைவியர், எத்தனை குழந்தைகள் என்று.....மொத்தம் 16,108 மனைவியர். இவர்களுள் ருக்மணி, சத்யபாமா உள்ளிட்ட எட்டுப் பேர் தலைமை மனைவியர்(?). மற்ற 16100 பேர் உடன்வாழும் மனைவியர். குழந்தைகள் எவ்வளவு தெரியுமா? மொத்தம் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் (1,80,000) பேர். ஐயோ, கடவுள் அவதாரம் வேறு எந்தப் பணிகளையும் செய்யவில்லையா? இப்படியெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வது நாம் இல்லை. அவாள், அவாளின் புராணங்கள்தாம் இவற்றை எல்லாம் சொல்கின்றன. இப்படியெல்லாம் ஒரு கடவுள் அவதாரத்தைக் கொச்சைப்படுத்தும் அதே வேளையில், அதே கிருஷ்ணரின் வாயால், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்று கீதையில் சொல்ல வைத்துள்ளனர். கீதையில் எல்லாம் நானே என்று சொல்லும் கிருஷ்ணரின் நிலை, மகாபாரதத்தில் மிக மோசமாக உள்ளது. பாரதம், கீதை ஆகியனவற்றிற்குள்ளும் கொஞ்சம் போய்வர வேண்டியுள்ளது. (தொடரும்)subavee blog aug 6 2018

22 03 2019

நஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்

"இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் எல்லாக் கட்சிகளையும்போல பிஜேபியும் போட்டியிடுகிறது என்று நினைத்தால் அது பெரும் தவறு. இந்திய மக்கள் பிஜேபியை ஒரு கட்சியாக நினைக்க வேண்டாம், அதுவொரு பாசிச அமைப்பு." -- பொருளாதார அறிஞர்.அமர்த்தியா சென். "மோடி பிரதமராவதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஏமாற்றுக்காரர் இதுவரை பிரதமர் ஆனதே கிடையாது. என் இறுதிநாளில் நிற்கிறேன். அவர் மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து போராடுவேன்." -- மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பிஜேபி முன்னாள் சட்டத் துறை அமைச்சர்.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் பல ஆண்டுகாலம் முரணாக இருந்த பல கட்சிகள் இன்று பாசிச எதிர்ப்பு என்ற ஒரு குடையின் கீழ் அணிவகுத்து உள்ளனர். குறிப்பாக உத்திரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதியும் பல ஆண்டுகாலமாக எதிரெதிர் அரசியல் செய்தவர்கள். இந்த 16வது பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கத்தில் பழையது அனைத்தையும் மறந்து தேசப் பாதுகாப்புக்காக கூட்டணியாக களம் காண்கின்றனர். இப்படி பல இடங்களில் இந்த அணிசேர்க்கை நடைபெற்று உள்ளது. இடதுசாரிகள் அவர்களின் பலம் தவிர்த்த பிற இடங்களில் அரசியலில் மாற்றுக் கருத்துடைய ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் ஒரு சில கட்சிகளைத் தவிர அனைவரும் பாசிச பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்று ஒரு புள்ளியில் இணைவதற்கு முக்கிய காரணம், அவர்கள் பண்பாட்டு தளத்தில் செய்து வருகின்ற மோசமான செயல்பாடே. இதுவரை இந்திய தேசத்தில் இருந்த அற்புதமான அம்சங்களை சிதறடித்துவிடும் என்ற அச்சமும் முக்கிய காரணம். சமீபத்தில் வந்த ஒரு சோப்புப் பவுடர் விளம்பரத்தில் வடமாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்டும் ரக்ஷா பந்தன் திருவிழாவில் குழந்தைகள் எல்லோரும் கலர் பவுடர் தூவிக் கொண்டாடும்போது, இஸ்லாமிய சிறுவன் தொழுகைக்குச் செல்ல வேண்டுமென்று இந்து மதத்தைச் சேர்ந்த பெண் தோழி அந்தத் தெரு முழுக்க சென்று அனைத்து வண்ணங்களையும் தான் பெற்று யார் கையிலும் வர்ணம் இல்லை என்று தெரிந்த பின்பு தனது தோழனை சைக்கிளில் உட்கார வைத்து தொழுகைக்கு பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அப்போது ஒருவன் கையில் மட்டும் ஒரு வர்ணம் இருக்கும். அதனை அவன் அடிக்க கை ஓங்கும் போது அவன்கூட இருக்கும் நண்பன் அதனைத் தட்டி விடுவான், அந்த விளம்பரம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது. அந்த இஸ்லாமியத் தோழனை இறக்கிவிடும் போது தோழி சொல்லுவாள் “தொழுகை முடிந்து வந்தபின்பு நான் கண்டிப்பாக வர்ணம் அடிப்பேன்” என்று. அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே சரியென தலையாட்டிச் செல்வான். அந்த தலையாட்டுதலுக்குப் பின்பு நானும் உங்கள் நிகழ்வில் கலந்திடுவேனென்று அந்த விளம்பரம் உணர்த்தும். இந்தியாவில் மதவேற்றுமை இன்றி பரஸ்பரம் உறவு கொள்ளும் இந்த அமைப்பு முறை உன்னதமானது. எல்லோரையும் ரசிக்க வைக்கும் அந்தக் குழந்தைகள் கொண்டாட்டத்தைத் தான் பாசிஸ்டுகள் சிதைக்கப் பார்கிறார்கள். அந்த பிஞ்சு மனங்களில் தான் நஞ்சு விதைக்கிறார்கள். இந்தியாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரை இயக்குனர்கள் பிஜேபிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதே போல கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது எழுத்தாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து கூட்டு அறிக்கை வெளிட்டுள்ளனர்.

இந்தியாவில் பலநூறு கட்சிகள் இருக்கும்போது ஏன் பிஜேபியை மட்டும் பெரும்பான்மை எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைக் கலைஞர்கள், அறிவுஜீவிகள் என்று எல்லோரும் எதிர்க்க வேண்டும்? காரணம் இங்குள்ள பன்முகத் தன்மையை முற்றிலும் அழித்துவிடும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் இந்தியா முழுக்க செய்த வன்முறைகளும் கலவரங்களும் சாட்சியமாக உள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் அல்லது வைத்திருப்பவர்கள் என்ற காரணத்தைச் சொல்லி மட்டும் இந்தியா முழுக்க நூறுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. இப்படியான வன்முறை நடக்கும் அதே வேலையில் மக்கள் மனங்களில் பண்பாட்டு ரீதியான மாற்றங்களையும் விதைத்து வருகிறார்கள். குறிப்பாக பல வகையில் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைப்பதைத்தான் பெரும் கவலையாகப் பார்க்க வேண்டியுள்ளது. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாகவும், வாய்ப்பிருக்கும் இதர முறைகளிலும் அவர்கள் மிக நுட்பமாக தங்களது கருத்தைத் திணித்து வருகிறார்கள். இது ஆட்சியிலிருந்து அகற்றுவதைவிட சவாலானது. சில மாதத்திற்கு முன்பு ஒரு பூங்காவில் ஒரு சிறுவனோடு சேர்ந்து எனது மகன் வெகு நேரம் விளையாடிக் கொண்டு இருந்தான். இருவரும் பரஸ்பரம் தங்களது பள்ளி வகுப்பு போன்றவற்றை பகிர்ந்தபடியே விளையாடிக் கொண்டு இருந்தனர். இருவரும் நான்காம் வகுப்பு மாணவர்கள். கிளம்பும் போது மகனை “போகலாமென்று” உருதுவில் எனது மனைவி அழைத்தார். அந்த பையன் நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் என்று கேட்டான். இவன் உருது என்று சொல்கிறான். அப்படியென்றால் என்ன என்று அவன் கேட்கிறான். இவன் நாங்கள் முஸ்லீம் என்பதால் உருதுவில் பேசுவதாக சொன்னான். முஸ்லீம் என்ற வார்த்தை அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. “இவ்வளவு நேரம் முஸ்லீம் பையன் கூடவா விளையான்டேன். ஐயோ! எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்னை அடிச்சே போடுவாங்களே” என்று அலறியபடி ஓடுகிறான். ஏன் அவன் பயந்து ஓடுகிறான் என்று ஒன்றும் புரியாமல் இவன் நிற்கிறான். அய்ந்து ஆண்டுகளில் மோடி செய்த சாதனை இதுதான். ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து பயந்து ஓடும் அபாய சூழலை இந்துத்துவ சித்தாந்தம் வளர்க்கும் மோடி உருவாக்கி வைத்துள்ளார்.

குழந்தைகள் மனம்வரை இந்துத்துவக் கருத்தோட்டத்தை திணிப்பதன் மூலம் தங்களது இருப்பை எப்போதும் பாதுகாத்திட முடியும் என்பதுதான் அவர்களின் திட்டம். அதற்காக அவர்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதை சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பல்வேறு தரவுகளோடு வெளியிட்டதைப் பார்த்தோம். குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஒரு பாசிச சிந்தனையுடைய தத்துவம் அதைத் தான் செய்யும் அதற்காக வருத்தப்படாது. பாசிச சிந்தனை விதைக்கப்பட்டவர்களிடம் எந்தக் கருணையும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஈழத்திலும் மியான்மரிலும் ஹிட்லரின் ஜெர்மனியிலும் குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதின் வழியே அறிவோம். இந்த வன்ம மனநிலையை மிகத் தீவிரமாக இந்துத்துவ சக்திகள் செய்து வருகிறது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியா முழுக்க பல பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடத்து மதப் பாகுபாடு மனநிலை உருவாகியுள்ளது என்று ஆய்வுகள் சொல்கிறது. “நசிய இரோம்” எழுதிய “mothering a muslim” என்ற புத்தகத்தில் அவற்றை விரிவாகப் பதிவு செய்கிறார். இஸ்லாமியக் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களைக் குறிப்பிடுகின்றார். குழந்தைகள் முதன்முதலாக தாங்கள் ஒரு முஸ்லீம் என்பதையும் மற்றவர்களை விடவும் மாறுபட்டவர்கள் என்பதையும் பள்ளியில் தான் தெரிந்து கொள்கிறார்கள். அதுவும் மோசமான சம்பவங்களோடு. “அம்மா நாம பாகிஸ்தான் போகனுமாமா? அது எங்கமா இருக்கு?” என்று நான்கு வயது குழந்தை அம்மாவிடம் கேட்டதை அவளது தாய் பதறிச் சொல்கிறாள். அந்தக் குழந்தையிடம் அந்தக் கேள்வியைக் கேட்ட அதே நான்காம் வகுப்பு குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது? கோவையில் கலவரம் நடந்தபின்பு இதே போலத் தான் மதங்கள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத இஸ்லாமியக் குழந்தைகளிடம் பள்ளியில் பிரிவினை செய்து பிற குழந்தைகளிடமிருந்து ஆசிரியர்களே இஸ்லாமியக் குழந்தைகளைப் பிரித்து வைத்தார்கள்.

அந்த புத்தகத்தில் மற்றொரு சம்பவம், டெல்லியில் படிக்கும் ஒரு குழந்தை எவ்வளவு குளிர் எடுத்தாலும் மப்ளர் போட்டுக் கொண்டு போகாதாம். அவளது அம்மா மிரட்டிக் கேட்டதால் “மப்ளர் போட்டால் நீ ஹமாசுல சேர்ந்திட்டையா” என்று சக மாணவிகள் கிண்டல் செய்வதாக சொல்லி அழுதிருக்கிறாள். இதில் மிக முக்கியமாக கிண்டல் செய்யும் மற்ற மாணவிகள் மப்ளரோடுதான் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால் இஸ்லாமியக் குழந்தைகள் தலைக்கு மப்ளர் போட்டால் அவர்களை தீவிரவாதக் குழுக்களோடு இணைத்துப் பேசுவதை கவலையோடு ஆசிரியர் பதிவு செய்கிறார். இஸ்லாமியக் குழந்தை மப்ளரோடு வந்தால் அவள் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களோடு சேர்ந்தவள் என்ற மனநிலையை சக மாணவிகளுக்கு உருவாக்கியது யார்??? அந்தப் புத்தகத்தில் வரும் இன்னொரு சம்பவம். ஒரு கல்லூரி மாணவி குறிப்பிடுகிறாள். “தான் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும்போது கூட படித்த மாணவன் அவளை விரும்பியதாகவும் தானும் விரும்பியதாகவும், ஆனால் இருவரும் காதலைச் சொல்லாமல் கண்களில் மட்டுமே பேசிவந்து, கடைசித் தேர்வில் அந்த மாணவன் “உன்னை எனக்குப் பிடிக்கும். நீ முஸ்லிமாக இல்லாமல் இருந்திருந்தால் உன்னைக் காதலித்து இருப்பேன். முஸ்லீம்கள் நல்லவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள்” என்று அவன் காதலை முறித்ததை சொல்கிறாள் அவள். இஸ்லாமிய வெறுப்பு மனநிலை உருவாக்கத்தால் கிடைக்க வேண்டிய சின்ன சந்தோசங்கள் கூட கிடைப்பதில்லை என்று பதிவு செய்கிறார். இப்படி ஏராளமான அனுபவங்களை அந்தப் புத்தகத்தில் நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சோப்பு பவுடர் விளம்பரங்களில் குழந்தைகளால் நிகழ்த்தப்படும் மதச் சார்பற்றத் தன்மையை ரசிக்கும், கொண்டாடும் நாம் அதன் விழுமியங்கள் சமூகத்தில் தொடர்ந்து நிலவ வேண்டுமென்பதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டாமா?

இந்தியாவில் இருக்கும் எல்லாக் கட்சிகளைப் போல பிஜேபியும் ஒரு கட்சியாக இருந்தால் இங்கே எந்தப் பிரச்னையும் இல்லை. மக்கள் அவர்களின் வாக்குச் சீட்டை வைத்து தங்களுக்கான கட்சியைத் தேர்வு செய்து கொள்வார்கள். ஆனால் பிஜேபி என்பது ஹிட்லர், முசோலினி தத்துவங்களை தாங்கிச் செயல்படும் அமைப்பு முறை. இந்த அமைப்பு முறைதான் தேசத்தை நேசிக்கும் எல்லோருக்கும் அச்சமாக உள்ளது. அந்த அச்சத்தின் வெளிப்பாடே ஜனநாயக அமைப்புகளின் கூட்டுச் சேர்க்கை. நமக்குத் தெரியாமல் நம் வீட்டுக் குழந்தைகளை அவர்கள் தத்துவம் நோக்கி இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இழுத்த குழந்தைகளின் மனதில் வெறுப்பையும் வன்மத்தையும் வளர்க்கிறார்கள். மதவேற்றுமை இல்லாமல் சகோதரத்துவ எண்ணங்களோடு பழகும் மதச்சார்பற்ற மாண்பை சிதைக்க நினைக்கும் அவர்களின் கனவை எதைக் கொண்டு முறியடிக்கப் போகிறோம்? - அ.கரீம் keetru.com apr 12 2019