கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

25 11 2015

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

ருப்படமாட்டோமோ? என அச்சம் தோன்றுகிறது. நம் ஈழத்தமிழினத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்!  எங்கள் கிராமத்தில் வாழைத்தோட்டம் போடுவார்கள் ஆரம்பத்தில் அவ்வாழைகள் செழித்துக் குலைதள்ளும், காலம் செல்லச்செல்ல நிலத்தின் வீரியம் கெட்டு, அதன் பின் வளரும் வாழைகள் சுருண்டு 'குருக்கன்" அடிக்கும் 
என்ன செய்தாலும் அது உருப்படாது. பின்னர் விவசாயி முழு வாழைத்தோட்டத்தையும் அழித்து, வேறுபயிர் செய்து, சிலகாலம் சென்றதும் மீண்டும் வாழை நடுவான். பழையபடி வாழை செழித்துக் குலை தள்ளும். இந்நிகழ்வுகளை ஊரில் கவனித்திருக்கிறேன். இதே நிகழ்வுகள் நம் இனத்திலும் நடக்கின்றன.
★★★
ஒருகாலத்தில் உலகே வியக்கும் வண்ணம், ஈழத்தமிழர்கள் வலிமை பெற்றிருந்தனர். சிங்களவர் மத்தியிலேயே, தமிழர்கள் அறிவாளிகள் எனும் கருத்து ஆழப் பதிவாகியிருந்தது. எந்தத் துறையானாலும் தமது அறிவாலும், ஆளுமையாலும், மற்றவர்களை ஆட்சி செய்யும் வலிமையோடு, தமிழர்கள் தகுதிபெற்றிருந்தனர்.
வாழை செழித்துக் குலைதள்ளிய காலமது.
★★★
பின் அந்த ஆற்றல் மெல்லமெல்ல நம்மிடம் தேய, தேய்ந்திருந்த சிங்களவர் வளரத்தொடங்கினார்கள். தனி ஈழக் கொள்கையை முன்வைத்து, நாம் போராடத் தொடங்கிய காலத்தில்தான், நம் அறிவு வறட்சி மெல்லமெல்ல உச்சந்தொட்டது. அது நம் துரதிர்ஷ்டம். கஷ்டகாலத்தில் கதியிழந்து நின்றோம். அதே காலத்தில் சிங்களவர்கள்,
அறிவிலும் ஆளுமையிலும் உயரத்தொடங்கி, உச்சந் தொடும் எல்லைக்கு வளர்ந்தனர். நாம் தேய்ந்தோம்! அவர்கள் வளர்ந்தனர்! நமக்கு ஆதரவாக இம்மண்ணுக்கு வந்த, இந்திய அமைதிப்படையின் பலத்தை நாம் இழந்ததும், தமக்கு எதிராக வந்த அமைதிப்படையின் பலத்தை, அவர்கள் பெற்றதுமே என் கூற்றுக்காம் சான்றுகள். வாழை குருக்கன் அடித்துச் சுருளத் தொடங்கிய காலம் அது.
★★★
கடந்த முப்பதாண்டுப் போரில், கிட்டத்தட்ட  திறந்தவெளிச் சிறைச்சாலையாய் நம் மண் மாற,அதற்குள் வளர்ந்த புதியதலைமுறை, மெல்ல மெல்ல தன் வீரியம் இழந்தது. ஆயுத அச்சுறுத்தல், கருத்துச் சுதந்திரமின்மை, போர்ப் பாதிப்பு, வெளி உலகத்தொடர்பின்மை எனும் அழுத்தங்களுள், ஒரு தலைமுறைக்காலத்தை இழந்த நம் இளையவர்கள், தமிழர்களின் பண்டைச்சிறப்பிழந்து சுருண்டனர் பரீட்சை முடிவுகளே அறிவின் அடையாளம் என, நிலைமை மாற்றமடைய, வெறும் புத்தகப்பூச்சிகளாய் மாறி உயர் சித்திகளைத் தாம் பெற்றுவிட்டதாய் உவந்து, அறிவெழுச்சியும், ஆளுமையும் இழந்து, வரிசைப்படுத்தலில், சிங்களவருக்கு வெகு பின்னால் தள்ளப்பட்டனர் நம் இளைஞர்கள்.சேதம் சிகரம் தொட்ட காலம் இது.
★★★
போர், பேரழிவு, ஈடுசெய்யமுடியா இழப்பு என,பல பாதிப்புக்களையும் சந்தித்து, மீண்டும் ஒரு சமநிலை நோக்கி நகரத் தொடங்கினோம்.ஜனவரி 8 இன் பின்னான புரட்சி, அதில் தமிழர்களின் ராஜதந்திர நகர்வு, தேர்தல் வெற்றி, எதிர்க்கட்சித்தலைவர் பதவி, உலகின் ஆதரவுக்கரம் என, அடுத்தடுத்து தமிழர் சார்பான நன்மைகள் நிகழ, மீண்டும் நம் வாழைத்தோட்டம் செழிப்பதற்காம், காலம் வந்துவிட்டது எனக் கனவு கண்டேன். ஆனால், அது நடக்காது போல் தெரிகிறது!
★★★
தாமே தமிழரின் ஏகத்தலைமை என்று அறைகூவி, பதவிபெற்ற நம் தமிழ்த்தலைவர்கள், வரலாற்றின் மிக இக்கட்டான காலகட்டத்தில் தாம் வாழ்வதையும், இப்போது எடுக்கப்படப்போகும் முடிவுகளே, இனிவருங்காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் நல் வாழ்வை, உறுதிப்படுத்தப்போகிறது என்பதையும் அறியாதவர்கள் போல்,உலகம் நகைக்க இயங்கத்தொடங்கியிருக்கின்றனர்.
★★★
உலகத்தின் அழுத்தம் காரணமாக, சிங்கள இனத்தின் பேரினவாதப் பெருந்தலைமைகள்,தம் இனநலம் நோக்கி ஒன்றாகி, ஒத்த குரலில் பேசத் தலைப்பட்டிருக்கும் இக்காலத்தில்,கைகோர்த்து நம் பலம் காட்டவேண்டிய இப்போதைய அவசிய நேரத்தில், நம் தமிழ்த்தலைவர்கள் இனத்தின் எதிர்கால நிலைமை உணராது, தம்முள் பகைத்து விளையாடி நிற்கின்றனர்.தம் சுகத்திற்காய்ச் சூதாடி,தம்மையும் இழந்து, எம்மையும் பணயம் வைத்து,
துகிலுரியப்படும் பாஞ்சாலியாய்த் தமிழினம் பதறி நிற்க,இன்னும் எதை வைத்துச் சூதாடலாம் எனும் இறுமாப்பில்,நம் பாண்டவத் தலைவர்களின் இருப்பு. 'சீச்சீ! இவையும் சிலவோ' எனத் தூற்றத் தோன்றுகிறது.
★★★
சுமந்திரனுக்கும், வடக்கின் முதலமைச்சருக்குமான இழுபறிச் செய்திகளே, சென்றவாரம் பூராகவும் பத்திரிகைகளை நிரப்பின.கட்சிக்குத் துரோகம் செய்தார்,பொய் கூறினார், மாற்றணியை ஆதரித்தார் என்பனவாய்,
முதலமைச்சர் மேல் குற்றம் சாட்டி, அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி,அவுஸ்திரேலியாவில் சுமந்திரன் அளித்த பேட்டி,பலரையும் அதிரச்செய்தது.பிரச்சினைக் களமான நம் மண்ணில் அவ்வறிக்கையை வெளியிடாமல், புலம்பெயர் நாடொன்றில்,சுமந்திரன் அவ்வறிக்கையை வெளியிட்டதன் ரகசியம் எவருக்கும் புரியவில்லை.புலம்பெயர் தமிழரைத்தான் அவரும் போற்ற நினைக்கிறாரோ ?
★★★
இன அக்கறையின்மையில், நம் தமிழ்த்தலைவர்கள் மட்டும் என்றில்லை,ஜனநாயகத்தூண்களில் ஒன்றாய்க் கருதப்படும்,தமிழ் ஊடகங்களிடமும்,தலைவர்களின் அதே பொறுப்புணர்ச்சியின்மை! ஆளுக்கு ஆள் கட்சி பிரிந்து அல்லது கட்சி பிரித்து,தங்களின் வியாபாரம் சிறக்க,பகை வளர்த்து இனம் பிரித்து மகிழ்கின்றனர்.
★★★
சுமந்திரனின் நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலுக்கு,இதுவரை முதலமைச்சரிடம் இருந்து எந்தப்பதிலும் இல்லை.
அது அவரது வழமையான பாணி.தன்னை நோக்கி வீசப்படும் நியாயமான வினாக்களுக்கு,பதிலுரைக்கவேண்டும் எனும் ஜனநாயகப் பொறுப்புணர்ச்சி,அவரிடம் என்றுமே இருந்ததில்லை.பதிலுரைத்தல் பணிதலாகி விடுமோ எனும் ஆணவமுனைப்பு அவரிடம்.தன் கருத்தே முடிவானது எனும்,நீதிபதி மனப்பான்மை இன்னும் நீடிக்கிறது. அரசியல் அனுபவமின்மையின் வெளிப்பாடு அது!
★★★
கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளேனும், இப்பகையைச் சரிசெய்யுமோ? என எதிர்பார்த்தால் நிகழ்வுகள் நேர்மாறாய் நடக்கின்றன. தமிழரசுக்கட்சியின் வலிய தலைவர்களாய்க் கருதப்படும், சம்பந்தன், மாவை சேனாதிராஜா, மாகாணசபை முதல்வர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர்,சரிபிழை உரைக்கும் துணிவின்றி, 'இது சுமந்திரனின் கருத்து, கட்சியின் கருத்தல்ல' என்றும்,'முதலமைச்சரிடம் இது பற்றிப் பேசுவோம்' என்றும்,
'சொல்லப்பட்ட விடயங்கள் பற்றி ஆராய்ந்து முடிவெடுப்போம்' என்றும், ஒட்டியும் ஒட்டாமலும் அறிக்கை விட்டு நிற்கின்றனர்.
★★★
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்,'ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,சுமந்திரன் சொன்னகுற்றச்சாட்டுப் பற்றிக்கருத்துரைக்காமல், 'நீக்கப்படவேண்டியவர் சுமந்திரனே!' என்று, ஆத்திரத்தோடு அறிக்கை விடுகிறார்.மக்களின் ஆதரவிழந்து தேர்தலில் தோற்றுப்போன அவருக்கு, தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கத் தடையாய் இருந்த, சுமந்திரன் மேல் கோபம் என்பது வெளிப்படத் தெரிகிறது.அண்மைக்கால அவரது அறிக்கைகள் எல்லாமே,இனத்திற்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை,உட்பகைவர்க்கு சகுனப்பிழையாய் ஆகவேண்டும் என்பதாயே இருக்கிறது.விரக்தியின் வெளிப்பாடு அது!
★★★
இதுவரை மௌனம் காத்த,'ரெலோ' அமைப்பின் தலைவர் அடைக்கலநாதன்,'நீக்கப்படுவதற்கு முதல்வர் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் அல்லர்.அவர் கூட்டமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்' என்று அறிக்கை விட்டிருக்கிறார்.அவரது அறிக்கையில் தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்தியம் மீதான வெறுப்புத்தெரிகிறது.இதுவரை 'புளொட்' அமைப்பின் தலைவர் சித்தார்த்தனிடம் இருந்து,இவ்விடயம் பற்றி அறிக்கை ஏதும் இல்லை.
★★★
தலைவர்களின் இந்தச் சண்டையில்,ஒன்றுபட்டிருக்க வேண்டிய மக்களும் பிரியத் தொடங்கியிருப்பதே,பெரும் வேதனைக்குரிய விடயம்.நீதியரசரின் தோற்றத்தாலும், உணர்ச்சியை மிகுவிக்கும் அறிக்கைகளாலும்,ஈர்க்கப்பட்டிருக்கும் பலரும், பிரச்சினை பற்றி எந்த ஆராய்வுமின்றி, நீதியரசரை ஆதரித்தும், சுமந்திரனை எதிர்த்தும்,இணையங்களில் அறிக்கை மேல் அறிக்கையாய் விட்டு,தம் பங்குக்கு இனத்தைப் பிரித்து நிற்கின்றனர்.
★★★
பிரச்சினையைத் தீர்க்க இரண்டே வழிகள்தான் இருக்கின்றன.வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் இவை.
அதற்கான நியாயபூர்வமான பதில்கள் இவை.ஆகவே குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளைச் சொன்ன சுமந்திரனை, கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
இது ஒரு வழி! அல்லது,
வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்களில் நியாயமில்லை. ஆகவே குற்றச்சாட்டுகள் ஏற்கப்படவேண்டும். குற்றம் செய்த முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்கவேண்டும். இது மற்றொரு வழி.
இவ்விரண்டில் ஒன்றைச் செய்வதுதான்,நடுநிலையான அணுகுமுறை.ஆனால் இதனைச் சுமந்திரன் சார்ந்த கட்சித்தலைவர்களோ,கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களோ,பொறுப்புணர்ச்சியோடு இருக்க வேண்டிய ஊடகங்களோ,இதுவரை பாதிப்புகளுக்கு ஆளாகி வெளிவந்திருக்கும் பொது மக்களோ, கடைப்பிடிப்பதாய்த் தெரியவில்லை.அனைவர் கருத்திலும் ஆராயாத பக்கச்சார்பே முடிவாய் இருக்கிறது.இனம் எப்படி உருப்படும்?
★★★
இப்படியே போனால்,இன ஒற்றுமை உடையப்போகிறது.எதிரிகள் 'மித்திரபேதம்" செய்யாமலே, நாம் பிரிந்து பலமிழக்கப்போகிறோம். யதார்த்தம் இல்லாத கதாநாயகனின் செயற்பாடுகளுக்கு, கைதட்டி, விசிலடித்து மகிழும் 'கலரி' ரசிகர்களாகவே இன்னும் நாங்கள். நம் அறியாமையைப் பயன்படுத்துபவர்களாகவே தலைவர்கள்.இப்போதைக்கு வாழைகள் செழித்துக் குலைதள்ளாது போல் தெரிகிறது. காலம் தமிழர் சார்பாய் இன்னும் கனியவில்லை என்பது மட்டும் நிச்சயம்! 
★★★
பெரும்போர், அழிவு, அமைதி, ஒருமைப்பாடு என, தோன்றிய ஒளிக்கீறல்கள், வெறும் மின்னல் கீறல்களாய் மறைந்துவிடும் போல் தெரிகிறது. இவ்விடத்தில் ஒரு சித்தர் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.         'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்         நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்         கொண்டு வந்தான் ஒரு தோண்டி-மெத்தக்         கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி'
தமிழர்தம் 'தோண்டி' தலைவர்களிடமிருந்து தப்புமா? உடையுமா? 'விதியே! விதியே! தமிழச்சாதியை என் செயக்கருதி இருக்கிறாயடா?'
★★★★★★

uharam.com 14 11 2015 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-