விக்னேஸ்வரன்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கெதிரான புதிய சவால்

22 12 2015 

விக்னேஸ்வரன்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கெதிரான புதிய சவால்

“எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே விக்கினேஸ்வரன் பல்டி அடித்து விட்டார். விக்கினேஸ்வnpc cmரன் தவறிழைக்கிறார்“ என்று ஒரு சாரார் கொதித்துப்போயிருக்கிறார்கள் “படித்த மனிதர் என்பதற்கும் ஒரு நீதியரசர் என்பதற்கும் உரிய மரியாதைகளை அவர் இழந்து விட்டார். பொறுப்பற்ற தனங்களின் பின்னால் அலைகிறார். கற்றுக்குட்டித்தனமான அரசியலும் பிரமுகர்க் கவர்ச்சியும் அவரைப் பிடித்து ஆட்டுகின்றன. சுயமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக, இரவல் மூளையில் இயங்குகிறார். நன்றியிலிருந்தும் கண்ணியத்திலிருந்தும் வெது தூரத்திலிருக்கிறார். ஒற்றுமையைத் தமிழ் மக்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு மாறாக புதிய அணியை உருவாக்க முயற்சிக்கிறார். ஒற்றுமை என்ற மக்கள் விருப்பத்திற்கு எதிர்நிலையில் சென்று கொண்டிருக்கிறார். மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாகச் செயற்படுகிறார்“ என்று கடுமையான விமர்சனங்களை இந்தத் தரப்பினர் முன்வைக்கிறார்கள்.

இவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பலவீனப்படுவதை விரும்பவில்லை. அத்துடன் சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் இன்று முன்னெடுத்து வரும் அரசியற் தீர்வு மற்றும் அதனோடிணைந்த அரசியல் முயற்சிகள் தடைப்படக்கூடிய அபாய  நிலை உருவாகும் என்று அச்சமும் கவலையுமடைகிறார்கள்.

“தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் – உள் வீட்டுக்குள்ளேயே ஒரு சவாலாக, ஒரு போர் வீரனைப்போல விக்கினேஸ்வரன் செயற்படுகிறார். விக்கினேஸ்வரனையும் விட அரசியலிலும் போராட்டக் களத்திலும் கூடுதல் அனுபவமுடையவர்கள்  செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றோர். அவரை விட இளமையும் துடிப்பும் போர்ப்பயிற்சியுமுள்ளவர்கள்.  இவ்வளவு இருந்தும் கூட்டமைப்பினுள் எதையும் செய்ய முடியாமல், எல்லாவகையான அதிருப்திகளுக்கும் பதிலாக உள்ளே முனங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போதும் அப்படி முனகிக் கொண்டுதானிருக்கின்றனர். ஆனால், விக்கினேஸ்வரனோ, தள்ளாத வயதில் போர் வீரனாகிக் களமிறங்கியிருக்கிறார். நீதியரசராக இருந்தவர் கலகக்காரனாகியுள்ளார். அரசாங்கத்தின் காலடியில் சரணாகதியடைந்திருக்கும் கூட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் விக்கிக்குத்தான் உண்டு. அவர் அதைச் செய்கிறார். சிங்களவர்களின் ஆக்கிரமிப்புச் சிந்தனைக்கு எதிராக இன்று திரளக்கூடிய சக்தி விக்கியிடம்தான் உள்ளது. அவர் எதற்கும் வளைந்து கொடுக்காதவர்“ என மறுசாரார் சொல்கிறார்கள்.

இவர்களே விக்கிக்கு ஆதரவான படையும் ஆதரவைத் தேடும் படையுமாகும். இதில் யாழ்ப்பாணத்திலிருந்த வெளிவரும் வலம்புலி என்ற பத்திரிகையும்  அதன் ஆசிரியர் திரு. விஜயசுந்தரமும் வெளிப்படையான ஆதரவை வழங்குவதை அவதானிக்க முடிகிறது.

விக்கினேஸ்வரனுக்கான ஆதரவுத்தளத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் தலைவரும் ஒரு நாடு இரு தேசம் என்ற விருப்பக் குறியைக் கொண்டவருமான கஜேந்திரகுமாரும் பகிரங்கமாக விக்கினேஸ்வரனைப் பலப்படுத்த முயற்சிக்கிறார்கள். கூடவே புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் அபிமானச் சக்திகளும் அவர்களின் ஊடகங்களும் ஊக்கவிசையைக் கொடுக்கின்றன. யாழ்ப்பாணத்தில் சில மருத்துவர்களும் வவுனியாவில் சிவில் அமைப்புகளின் ஒன்றியப் பிரதிநிதியும் ஈரோஸ் அமைப்பின் ஜேர்மனிக் கிளையில் முன்னர் செயற்பட்டவருமான சிங்கம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சில முக்கியஸ்தர்கள் என ஒரு அணி களமிறங்கியிருக்கிறது. கிளிநொச்சியில் இருந்து சிறிதரன் தன்சார்பாக இரணைமடு நீர் விநியோகத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அணியைச் சேர்ந்த சிவமோகன் என்பவரை அனுப்பியிருக்கிறார். சில மதகுருக்களும் மத போதனையை விட அரசியற் பணியே அவசியம் என நினைத்து இந்த அணியோடு இரவு பகலாக கண்விழித்து உழைக்கிறார்கள். நல்லை ஆதீன முதல்வர் ஊறுகாயாக யாழ்ப்பாணத்தில் கடந்த 29 ஆம் திகதி இரவு யாழ்பாணத்தில் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்..

எப்படியோ இந்த நிகழ்ச்சிகளால் தமிழ் அரசியற் களம் பரபரப்பாகிச் சூடேறியுள்ளது. கூடவே கவலையும் அதிகமாகியுள்ளது. போர்க்குற்றம் குறித்த விசாரணைகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு மற்றும் காணாமற் போகடிக்கப்பட்டோரின் பிரச்சினை போன்ற பிரதான பிரச்சினைகளில் இருந்து இன்று தமிழ் அரசியல் விலகி, இந்த அக்கப்போரில் சிக்குண்டிருக்கிறது. இந்த அக்கப்போரைப் பார்த்துப் பிற சக்திகள் சிரிக்கின்றன. குறிப்பாக கொழும்புக்கு உச்ச கட்ட மகிழ்ச்சி. தமிழ்ச்சக்திகளின் பிரதான கவனம் சிதைந்தால் அதன் உச்ச பயனைப் பெறுவது கொழும்பாகவே இருக்க முடியும். அரசியற் தீர்வு தொடக்கம் தமிழ் மக்களுடைய அத்தனை பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைப் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை..

இதேவேளை, தமிழ் அரசியல் களமோ எதிரும் புதிருமான உரையாடலுக்குக் காரணமான நிகழ்ச்சிகளால் களை கட்டியிருக்கிறது. சனங்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் களிப்படைவதை அவதானிக்கலாம். ஆனால், கடந்த சில மாதங்களின் முன்பு வரை தேர்தல் வெற்றிகளால் மகிழ்ச்சியடைந்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதனுடைய ஆதரவாளர்களும் இன்று இந்த மாதிரியான நிலைமைகளால் கலங்கிப்போயிருக்கின்றனர். யாராலுமே தோற்கடிக்க முடியாது என்றிருந்த கூட்டமைப்பை அதனுடைய உள் வீட்டுக்காரரே தோற்கடிக்கின்றனர். அதிலும் மிகக் கவர்ச்சிகரமான நம்பிக்கைக்குரியவர் என்றிருந்த முதலமைச்சர் என்ற முக்கிய புள்ளி ஒருவரினால் அது தோற்கடிக்கப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கு இது மகிழ்ச்சியான தருணமா? அல்லது துக்கமான நாட்களா என்று தெரியவில்லை. விக்கினேஸ்வரன் ஒரு நிரந்தரத் தலையிடியாக இருப்பதை விட, இப்பொழுதே இதை ஒரு விதமாக எதிர்கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டால், பின்னர் ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறலாம் அல்லவா. எனவே இந்தத் தற்காலிக நெருக்கடியை அவர் கொஞ்சம் சிரமப்பட்டுக் கடக்கத்தான் வேணும். அதுதான் பாதுகாப்பானது மட்டுமல்ல, இன்றைய நிலையில் தமிழர்களுக்கு நல்லதும் கூட.

விக்கினேஸ்வரனும் அவருடைய புதிய கூட்டாளிகளும் கற்பனையில் குதிரைச் சவாரி செய்வோர். இவர்களில் எவரும் வலிகளை உணராதவர்கள். யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள். தங்கள் வாழ்வின் சுகபோகங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாதவர்கள். தங்கள் சட்டை கசங்காமல் இருப்பதில் கவனமாக இருப்போர். தங்கள் குடும்பங்களை மேல் மத்தியதர வாழ்க்கைக்கு அப்பால் வைத்திருப்போர். பிள்ளைகளை உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பிப்போர். ஆனால், இவர்களுக்குத் தமிழீழம் வேண்டும். தமிழ்த்தேசிய அடையாளம் தேவை. அதன் சாத்தியங்களைப் பற்றிய கவலை எல்லாம் கிடையாது. தமிழீழம் என்ற சொல்லோடும் தமிழ்த்தேசியம் என்ற பேச்சோடும் தங்கள் அடையாளங்களைத் தக்க வைக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் இவர்களுக்குக் கிடைத்தால் போதும். இது தங்களுக்குப் பெருமைக்குரிய ஒரு புனித அடையாளத்தைத் தந்து விடும். இனத்தின் சார்பாகச் சி்ந்தித்தவர்கள் என்று கல்வெட்டில் யாராவது எதிர்காலத்தில் பொறித்து விட வேண்டும் என்று ஆசைப்படுவோர்.

ஆகவே, இவர்கள் ஒரு அணியாகத் திரண்டு தங்கள் குதிரைகளை விரட்டிக்கொண்டிருக்கின்றனர். தங்கள் குறிக்கோளை எட்டுவதற்கான கள யதார்த்தம் எப்படி உள்ளது? அதைச் செயற்படுத்துவதற்கான தங்கள் திட்டங்கள் என்ன? அதற்கான உழைப்பென்ன? அதையெல்லாம் யார் செய்வது? அதில் தங்கள் பங்களிப்புகள் எப்படியானது? இந்த மாதிரியான கேள்வி ஒன்றும் யாரிடமும் கிடையாது. இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்ற சிந்தனையும் கிடையாது. பதிலாக இரண்டே இரண்டு அபிப்பிராயங்கள் மட்டும்தான் இவர்களுக்கு உண்டு.

ஒன்று, இலங்கை அரசாங்கத்தை எந்த நிலையிலும் எதிர்ப்பது. அப்படி எதிர்ப்பதே தமிழர்களுடைய கடமை. அதுவே போராட்டமாகும் என்பது. இரண்டாவது, தமிழீழம் என்பது சாத்தியமாகுதோ இல்லையோ. அதை ஒரு தாரக மந்திரமாகச் சொ்லலிக் கொள்ள வேண்டும். தமிழீழத்தின் அடையாளமாகக் கொள்ளப்படும் மாவீரர்களை நினைவு கூர வேண்டும் என வலியுறுத்துவது, கார்த்திகைப் புவைத் தங்களுடைய முகப்புத்தகத்திலும் பிற இடங்களிலும் அடையாளப்படுத்துவது, தமிழ்த்தேசியத்தின் பக்கமாகத் தாங்கள் நிற்பதாகவும் ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பைக் காட்டுவதுமாகும் இவை போதும் இவர்களுக்கு. இதற்கப்பால் நலிவடைந்த மக்களை எப்படி மீட்டெடுப்பது? புதிய அரசியலை எப்படி முன்னெடுப்பது? தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான நடைமுறைத்தீர்வுகள் என்ன? இந்தத் தீர்வுகளை எட்டுவதற்கான கால எல்லை என்ன? அதற்கான உழைப்பென்ன? என்ற மாதிரியான கொதிக்கும் கேள்விகள் எதுவும் இவர்களிடம் இல்லை. அப்படியான சிந்னையும் கிடையாது.

 இவர்களே புதிய அரசியற் கட்டமைப்பைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

இலங்கைத்தீவில் அமைதி உருவாகக் கூடாது என்று சிந்திக்கும் சக்திகளின் வலையில் இவர்கள் சிக்கியதே. இலங்கை ஏறக்குறைய பாகிஸ்தானைப்போல எப்போதும் கொதிநிலையில் உள்ள ஒரு நாடாகவே மாறியுள்ளது. சுதந்திரமடைந்த பிறகு பாகிஸ்தான் அமைதியில் சிரித்ததை விட துக்கத்தில் கொந்தளித்ததே அதிகம். சிந்திய இரத்தமும் கொஞ்சமல்ல இலங்கையும் அப்படித்தான். ஒன்றில் சிங்களவர்களிடத்தில் கிளர்ச்சிகள் உருவாகும். அல்லது தமிழர்களின் போராட்டங்கள் வலுக்கும். இப்பொழுது புதிய அரசாங்கத்துடன் ஒரு இணக்க நிலைப்பாட்டை எடுத்து நல்லுறவைப் பலப்படுத்தி, அரசியற் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கிறது. இந்த முயற்சி தொடர்பாக பல வகையான நம்பிக்கையீனங்களும் கேள்விகளும் ஒரு பக்கம் இருந்தாலும்  இது தவிர்க்க முடியாத ஒரு ஏற்படாகும். இதைக் குழப்புவற்கே உச்சகட்ட முயற்சிகள் நடக்கின்றன.

இப்படித் தீவிர நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமாக கூட்டமைப்பின் முயற்சிகள் குழப்பமடையும். ஆகவே பிரச்சினை எப்போதும் கொதிநிலையில் இருக்கும். இதுவே வெளிச்சக்திகளுக்கும் இனவாதிகளுக்கும் விருப்பமான ஒன்று. எப்பொழுதும் இந்த மாதிரியான  நிலைமைகளில் இனவாதச் சக்திகள்தான் படு பிற்போக்கான முறையில் இயங்கும். இப்பொழுதும் அப்படியான சக்திகளே விக்கினேஸ்வரனைத் தவறாகத் திசை திருப்பி, அவர் மீதேறிச் சவாரி செய்ய முயற்சிக்கின்றன. மிகுந்த நம்பிக்கையோடும் மதிப்போடும் வரவேற்கப்பட்ட ஒரு மனிதரை, ஒரு நீதியரசரை வரலாறு மிக எளிதாக குப்பைத் தொட்டியில் கழித்து விடுமோ என்று அஞ்சப்படுகிறது.

thenee.com 22 12 2015  கனக சுதர்சன்