தமிழ்மக்கள் பேரவை: நிராகரிக்கப்பட்டவர்களின் கூடாரம்

26 12 2015 

தமிழ்மக்கள் பேரவை: நிராகரிக்கப்பட்டவர்களின் கூடாரம்   கனக சுதர்சன்

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஒப்பான ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் npc meetகடந்த 19.12.2015 இரவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை உருவாக்கியிருப்பவர்கள் தீவிரத் தமிழ்த்தேசியவாதிகள். இவர்கள் என்றும் நடைமுறை சார்ந்து சிந்திப்பவர்களல்ல. நாடு கடந்த தமிழீழம் எப்படி ஒரு சுவாரசியமாக கற்பனை அமைப்போ, அதைப்போன்றதே இந்த அமைப்பும். அது நாடு கடந்து உள்ளது. இது நாட்டுக்குள்ளே உள்ளது. அவ்வளவுதான் வேறுபாடு.

நாடு கடந்த தமிழீழ அரசில் உள்ளதைப்போல இதிலும் துறைசார்ந்த நிபுணர்கள் உள்ளனர். அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் துறைசார்ந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதவி கொடுக்கப்படவில்லை என்றால் என்னாவது என்ற அடிப்படையில் இந்த ஏற்பாடு. நாடு கடந்த தமிழீழத்தை ஆதரிப்போர் இந்த அமைப்பை ஆதரிக்கிறார்கள். இந்த அமைப்பினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். இரண்டு அமைப்புகளும் பெயரளவில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொண்டவையே தவிர, நடைமுறை உபயோகங்களைக் கொண்டவையல்ல. நடைமுறை உபயோகங்களுக்குரியவையுமல்ல.

நாடு கடந்த தமிழீழ அரசு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வைப் பெறுவதற்காக உழைக்கும் என்று சொல்லப்பட்டது. சர்வதேச அளவில் ஒரு அபிப்பிராய உருவாக்கியாகச் செயற்படும் என்றும் கூறப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வைச் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. அப்படி எதுவும் நடந்ததாக இல்லை. இதுவரையில் அது எட்டிய இலக்குகள், செய்த சாதனைகள் என்ன என்று யாருக்கும் தெரியாது.புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், உலகளாவிய அளவில் உள்ள தமிழ்த்தேசியப் புத்திஜீவிகளால் – பிரமுகர்களால்- உருவாக்கப்பட்ட இந்த நாடுகடந்த அரசு பெரும் எதிர்பார்ப்புகளைப் பலரிடம் உண்டு பண்ணியது. பெரும்பாலான தமிழர்களின் முள்ளந்தண்டில் மகிழ்ச்சி சில்லிட மகிழ்ந்து பெருமையுற்றனர். இலங்கை அரசாங்கமோ இதைப்பார்த்துக் கலங்கியது. இறுதியில் எல்லாம் புஸ்வாணமாகி விட்டன.

இப்பொழுது தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு இரகசிய அமைப்புப்போல கள்ளத்தனமான ஏற்பாடுகளின் வழியே இது உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பின் கூட்டம் நடந்து முடிந்த பிறகு அதில் கலந்து கொண்ட வடக்கின் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் உட்பட எவரும் வாய்திறந்து வெளிப்படையாகப் பேசமுடியாதவர்களாக இருந்தனர். பின்னர் பேசியவர்களும் இது ஒரு அரசியற் கட்சியோ அமைப்போ இல்லை எனத் தடுமாறுகின்றனர். இதற்கு என்ன காரணம்? உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், யுத்தம் முடிந்த ஆறு ஆண்டுகாலப் பகுதியில் என்ன சாதனைகளைச் செய்தனர்? அவற்றினால் எத்தகைய பயன்களைத் தமிழ்ச்சமூகம் பெற்றது? என்று எந்தப் பதிவுகளும் இல்லை. அப்படியான காரியங்கள் எதுவும் நடந்ததும் இல்லை. இதனால், இவர்கள் தங்கள் நெஞ்சை நிமிர்த்தி வெளிப்படையாகப் பேசமுடியாதிருக்கின்றனர். தாங்கள் சார்ந்திருக்கும் துறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கவோ, அந்தத் துறைகளுக்கூடாகச் சிறப்பான சேவைகளை ஆற்றவோ முடியாதவர்கள், இப்படி சிவில் அமைப்புகளின் அடையாளத்தின் வழியாகத் தங்கள் முகங்களுக்கு அழகிய முத்திரைகளை உண்டு பண்ண முயற்சிக்கின்றனர்.

இவர்கள் முன்வைக்கின்ற பிரதான குற்றச்சாட்டு அல்லது பிரகடனம் என்னவென்றால், தேர்தல் ஜனநாயகத்தையோ, தேர்தலின் மூலமாகப் பெறப்படும் கதிரை அதிகாரத்தையோ மட்டும் தமிழ் மக்கள் நம்பியிருக்க முடியாது. பின்கதவுகளின் வழியாகவும் மூடப்பட்ட அறைகளுக்குள்ளும் பேசி தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காண முடியாது. இதற்கு ஒரு சில தனிநபர்களை நம்பிப் பயனில்லை என்பதாகும்.

இங்கேதான் பிரதானமான கேள்விகளே எழுகின்றன.

தேர்தற்காலங்களில் இந்த அமைப்பினர் எப்படியெல்லாம் செயற்பட்டனர்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். அதைப் பலப்படுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களே  இவர்கள். ஒற்றுமையைப் பற்றி அதிகமாக வலியுறுத்தியவர்களும் இவர்களே. அப்பொழுதெல்லாம் இவர்களுடைய விழிப்புணர்வு எப்படி இருந்தது? ஆக, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் இவர்கள் இடம்மாறி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்தனர். அந்த முன்னணி எதிர்பாராத அளவுக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்ற மாதிரி, இப்பொழுது ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்கின்றனர். இது புதிய மொந்தையில் பழைய கள்ளுத்தான்.தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை வெற்றியடைய வைக்க முடியாது என்ற நிலையில் புதியதொரு கலரைப் புசிக் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரிய அளவிற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. குறிப்பாக, பாராளுமன்றத்தேர்தல் நடந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே இப்படி ஒரு நிலை மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட ஒரு தரப்பு இன்னொரு வடிவில் அரங்கில் முதன்மையடையத் துடிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை விட ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் மேலும் சிதைவை விரும்பப்போவதில்லை. தாங்கள் கொடுத்த ஆதரவைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே தமிழ் மக்கள் பேரவையை அவர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால், தமிழ் மக்கள் பேரவையும் அதை ஆதரிக்கும் சிவில் அமைப்புகள் என்ற பேரிலான புனைவு அமைப்புகளும் தாம் தனித்த அரசியலை விரும்பவில்லை எனச் சொல்லி வருவதைக் காண்கிறோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே இந்த உபாய அமைப்பு உருவாக்கப்பட்டது என்று வேறு நிரூபிக்க முயற்சிக்கப்படுகிறது. இதேவேளை இந்த அமைப்பில் தமிழ்த்தேசியத்தை வலுவுட்ட விரும்புவோர் தாராளமாகத் தங்கள் பங்களிப்புகளை இணைந்து வழங்கலாம் என்று சொல்லவும் படுகிறது. இந்த முரண்கள் ஏன்? அல்லது இந்த நாடகங்கள் எதற்காக? அடிப்படையில் அரசியல் முனைப்பே பலரிடமும் மேலோங்கியிருக்கிறது. அதற்காகவே இந்த ஆலாய்பறக்கும் காரியங்கள் அத்தனையும்.

இயக்கங்களின் காலம் முடிந்த பிறகான அல்லது ஆயுதப்போராட்டங்களின் பின்னான தமிழ் அரசியல் என்பது, பிரமுகர்களின் அரசியலாகவே உள்ளது. ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களும் அரச பதவிகளில் உள்ள அதிகாரிகளுமே இப்பொழுது அதிமாக அரசியல் அரங்கில் நிற்கிறார்கள். ஆகவேதான் இதில் பெரும் போட்டி. அதிகம் றிஸ்க் எடுக்காத ஒரு தொழிலாகவும் கூடிய அங்கீகாரத்தை உடைய பதவிகளை வழங்குவதாகவும் இந்த அரசியல் இருக்கிறது. எனவே போட்டியாளர்கள் முண்டியடிக்கிறார்கள். ஆனால், போட்டியாளர்களின் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. எனவே வெவ்வேறு களமுனைகளைத் திறப்பதற்காக சிறு சிறு வேறுபாடுகளைக் காட்ட வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இதற்காகவே இந்தக் கலர் வித்தைகள்.

முன்பொரு காலம் சட்டத்தரணிகள் தமிழ் அரசியலைத் தங்கள் சட்டைப்பையினுள் வைத்திருந்தனர். இயக்கங்களின் காலத்தில் களம் வேறு விதமாக அமைந்தது. இப்பொழுது அரச உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், மதகுருக்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், வங்கி அதிகாரிகள் என இந்த வட்டம் சற்று மாறுபாடாக விரிந்துள்ளது. ஆனால் அடிப்படையில் எல்லாமே கதிரைக்கும் அதிகாரத்துக்குமான போட்டிதான். அதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சுலோகமே தமிழீழம். தமிழீழம் சாத்தியமாகப் போவதில்லை என்று இவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். அப்படித் தெரியாத – விளங்காவர்களும் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்களுக்குப் பட்டாலும் புரியாது. கெட்டாலும் விளங்காது.

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சி எடுத்த போது அதைப் பெருமையாகக் கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். அதனுடைய விளைவு எத்தனை ஆயிரம் உயிர்களைக் குடித்தது என்பது வரலாறு. இப்பொழுது தமிழ் மக்கள் பேரவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்திருக்கிறது என சிவில் அமைப்புகளின் அமையம் தெரிவித்திருக்கிறது. இதன் விளைவுகள் எப்படி அமையப்போகின்றன என்பதைக் காத்திருந்துதான் அறிய வேண்டும் என்றில்லை. கடந்த கால அனுபவங்களும் நிகழ்கால நிலவரங்களும் தெளிவாகவே சொல்கின்றன. இதே அரசியற் பிரகடனத்தோடும் விடாப்பிடியோடும் களமாடிய – தம்மை அர்ப்பணித்த புலிகள் இறுதியில் பெற்றுக்கொண்டது இந்தப் பிரகடனம் தவறானது என்பதையே. பெரும் இழப்புகளையும் பெரும் தியாகங்களையும் செய்தும் பெற முடியாத வெற்றியை, உலகம் நிராகரித்த போக்கினை, சாத்தியப்படாத இலக்கினை நோக்கிக் கற்பனைக் குதிரைகளில் சவாரி செய்ய விரும்புகின்றனர் சிலர்.

தமிழ் அரசியல் இன்று பேருக்கும் புகழுக்குமான கூடாரங்களில் தொங்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவே இந்த மாதிரியான அமைப்புகளின் தோற்றமும் விளைவுகளும். இதனால்தான் நாடுகடந்த தமிழீழ அரசும் தமிழ் மக்கள் பேரவையும் அரசியல் அரங்கில் முன்னிற்கத் துடிக்கின்றன. இது எவ்வளவு கொடுமையானது? அர்ப்பணிப்பும் மக்கள் மீதான அக்கறையும் இல்லாத பிரமுகர்த்தன அரசியல் விருப்பு எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் கடந்த கால வரலாற்றிலும் உலக அனுபவத்திலும் கண்டிருக்கிறோம். இவர்கள் மக்கள் பணியாற்றுவதற்கான களம் தாரளமாகத் திறந்திருக்கிறது. போரினால் துயருற்றவர்களின் கண்ணீரைத் துடைத்தாலே அது பேராறுதலாகும். அப்படியான பணிகளுக்கூடாகத் தங்கள் தகுதியை வளர்த்து, அதன் மூலம்  பலம்பெற்று ஒரு அரசியல் அமைப்பாகுவதே சிறப்பு.

அதுவே படிநிலை வளர்ச்சியாகும். அதுவே சரியானதுமாகும். அதாவது கீழிருந்து மேலெழுவது. அப்படிக் கீழிருந்து மேலெழும்போதே மக்களின் உணர்வுகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அத்தகைய அடிப்படையிலிருந்து மேலெழும்போதே அந்த அமைப்பு சரியானதாக – பலமானதாக இருக்கும். இது மேல்நிலைச் சக்திகள் தங்கள் நிலையிலிருந்து எடுக்கும் தீர்மானங்களை கீழ்நோக்கிப் பிரயோகிக்க முற்படுவதாகும். இது அதிகாரத்தின் பாற்பட்டது. இதில் மக்களின் உணர்வுகளுக்கான மதிப்பு வழங்கப்படாது, தாம் எடுக்கின்ற தீர்மானங்களையும் தமது விருப்பங்களையும் மக்களின் பேரிலான விருப்பங்களாகவும் மக்களுடைய உணர்வாகவும் அவர்களுடைய தீர்மானங்களாகவும் காட்டும் நுட்பமான அதிகாரத்துவம் இதில் உள்ளது. இதனையே பொது அபிப்பிராயமாகக் கட்டமைக்கவும் இவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு நல்ல ஆதாரம், இந்த அமைப்புகளில் இருப்போர் அத்தனைபேரும் உயர் பீடங்களில் இருப்போர். குறிப்பாக அதிகார பீடங்களைச் சேர்ந்தோர். மருத்துவம், மதம், கல்வி, சிவில் அமைப்புகள், விவசாயம் மற்றும் கடல் தொழில் சார்ந்த அமைப்புகளின் தலைமைப்பொறுப்புகளில் உள்ளோர் என அதிகார உச்சத்தில் இருப்போர்.

ஆகவே, இப்படி உயர் நிலையில் இருந்து கொண்டு தாம் எடுக்கின்ற தீர்மானங்களைப் பொதுமைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதுதான் இவர்கள் ஜனநாயகமா? தனிமனிதர்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் தவறாக அமையலாம் என்றும் இரகசிய அறைகளுக்குள் நடக்கின்ற பேச்சுகள் பிழையாக அமைந்து விடும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இது சம்மந்தன், சுமந்திரன் ஆகியோரையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இன்றைய அரசியல் நடவடிக்கைகளையும் குறித்துச் சொல்லப்படுகிறது. நடைமுறைக்கு ஒவ்வாத வகையிலான தீர்மானங்களையும் மக்களை விட்டு விலகிய சிந்தனைகளையும் கொண்டவர்கள் எத்தனைபேர் பகிரங்கமாகக் கூடி அமைப்புகளை உருவாக்கினாலும் அவற்றினால் பயன் கிட்டப்போவதில்லை.

பல எலிகள் கூடினால் வளையெடுக்காது என்பதும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதும் முதுமொழி. இதன் அர்த்தம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியானதாகச் செயற்படுகிறது. அதற்கு மாற்றமைப்புகள் உருவாகக் கூடாது என்பதல்ல. அதற்கான மாற்றுக்கள் தமிழ் மக்கள் பேரவையோ நாடு கடந்த தமிழீழ அரசோ அல்ல என்பதேயாகும்.

thenee.com  24 12 2015