மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை -2 Featured

09 07 2025

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன் -2

சிறப்புக் கட்டுரை

மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன.எவ்வளவோ பிரச்சாரத்திற்குப் பிறகும், எத்தனையோ தெளிவுரைகள் வழங்கியதற்குப் பிறகும், அத்தகைய காரியங்கள் நடைபெறுவது – அதிலும் கல்வி கற்றவர்களே அத்தகைய காரியங்களில் ஈடுபடுவது, கொடுமையானதும் வேதனைக்குரியதும் ஆகும்.

 

அண்மையிலே நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் சமுதாயத்தை மூடநம்பிக்கை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை உணர்த்துகிறது. சென்னையை அடுத்த கொளத்தூர், ரெட்டேரிப் பகுதியைச் சேர்ந்தவர் திலகராஜ் என்பவர். இரத்தப் பரிசோதனை மய்யம் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மைனா என்ற லட்சுமி அழகு நிலையத்தில் பயிற்சி பெற்றவர். இவர்களுடைய மகள் சினேகா, அழகுக் கலையில் ஆர்வம் கொண்டவர்.தாய் – மகள் இருவரும் சேர்ந்து, தனியாக அழகு நிலையம் நடத்த முடிவு செய்து, புழலை அடுத்த புத்தகரத்தில் ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் கடையை வாடகைக்கு எடுத்தனர். 1-9-2013 அன்று காலை 5.30 மணி அளவில் ‘லட்சுமி அழகு நிலையம்’எனப் பெயரிடப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.

 

குரோம்பேட்டை நாகப்பா நகரைச் சேர்ந்த புரோகிதர் இராமமூர்த்தி என்பவர் கடையின் உள்ளே ‘ஹோமம்’வளர்த்தார். பின்னர், டிஜிட்டல் போர்டால் ஆன கடையின் பெயர்ப் பலகைக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மலர் மாலை வைத்து ‘பூஜை’ நடத்தினார். பூஜைகள் முடிந்ததும் ‘நல்லநேரம்’ பார்த்து, கடையின் முன் பகுதியில் பெயர்ப் பலகையை மாட்ட திலகராஜ், அவரது மகள் சினேகா, எலக்ட்ரீஷியன் நவீன்சந்திரன்,புரோகிதர் ராமமூர்த்தி ஆகிய நால்வரும் கடையின் உள்ளே இருந்து பெயர்ப் பலகையை வெளியே தூக்கி வந்தனர். கடையின் முன்பு பால்கனியில் நின்றவாறு நால்வரும் பெயர்ப் பலகையை மாட்ட, உயர்த்தித் தூக்கினார்கள். அந்தப் பலகையை ‘வாஸ்து சாஸ்திர’ப்படி வைக்குமாறு புரோகிதர் ராமமூர்த்தி சொன்னார். அவர் அறிவுரைக்கேற்ப, பெயர்ப் பலகையை அப்படியும் இப்படியுமாக அந்த நால்வரும் மாற்றி மாற்றி வைத்தனர்.

 

இறுதியாக, புரோகிதர் சொன்னபடி பெயர்ப் பலகையைத் திருப்பி வைத்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பெயர்ப் பலகையில் இருந்த இரும்பு உரசி, அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து, அதைப் பிடித்துக்கொண்டிருந்த அந்த நான்கு பேரையும் மின்சாரம் தாக்கி, அதே இடத்தில் அவர்கள் கருகிப் பரிதாபமாகப் பலியாயினர். இந்தச் செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளிவந்திருந்தன. நெஞ்சைப் பிழிந்திடும் இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் 2-9-2013 அன்று மின்சாரம் தாக்கி இறந்தோர் இல்லத்திற்குச் சென்று, திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

வார ஏடு ஒன்றில் வந்த மற்றொரு செய்தி. பில்லி சூனியம், மந்திரங்களால் பெருமளவுக்குப் பணம் குவித்த திவ்யானந்தா என்ற பூசாரி பழனிச்சாமி என்பவர், தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 17ஆவது கிலோ மீட்டரில் இருமத்தூர் என்னும் இடத்தில், கொல்லாபுரி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில்,அதற்குப் போட்டியாக சிவகாளியம்மன் கோவில் ஒன்றைக் கட்டினார்.அந்தக் கோவிலுக்கு 8-9-2013 அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்து, அழைப்பிதழும் அச்சடித்து அனைவருக்கும் அனுப்பி இருந்தார். அந்தப் பூசாரியார், ”எதிரிகளின் கை, கால்களை விளங்காமல் செய்கிறேன், சாகடிக்கிறேன்,பில்லி சூனியம், செய்வினைசெய்கிறேன்” என்று லட்சம் லட்சமாய்ப் பணம் பிடுங்குவதாகவும்; அம்மன் கோவில் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து,72 அடி உயர சிமெண்ட் சிலையைச் செய்து, நிறுவி இருப்பதாகவும்; தனது பில்லி சூனியத் தொழிலுக்காகவே அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னுடைய சுயலாபத்துக்காக பில்லி சூனியம், செய்வினை என்றெல்லாம் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றியதோடு, பூசாரி பழனிச்சாமி அரசு நிலத்தையும் ஆக்கிரமித்ததால், கும்பாபிஷேகத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறதாம்.

 

மற்றொரு செய்தி, நரபலியைப் பற்றியது. 15-4-2013 அன்று ‘நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா?’ என்ற தலைப்பில், ‘முரசொலி’யில் வெளியிடப்பட்ட எனது கடிதத்தில்,சென்னை, வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி விளக்கியிருந்தேன். குடுகுடுப்பைக்காரன் ஒருவன் ‘செய்வினை’ வைத்திருப்பதாகச் சொன்னதை நம்பி, சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், குடுகுடுப்பைக்காரன் கொடுத்த தாயத்தைக் கட்டிக்கொண்டு, கீதா என்பவரின் குழந்தை இரண்டரை வயது விஷ்ணுவை, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலில் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணுவின் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். மகேஸ்வரி குடுகுடுப்பைக்காரன் பேச்சை நம்பி, ‘தோஷம்’ கழிக்கும் நோக்கத்தில், குழந்தையை நரபலிக் காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தார்கள்.

 

‘‘நரபலி பற்றிய இந்தச் செய்தியைப் படித்தபோது,நாம் 21ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட் டுள்ள சம்பவம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது. ‘‘நாம் மீள வேண்டுமானால் – சுயமரியாதை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்று நினைத்தால் – அடிமைப்படுத்தும் மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களையும் முதலில் விட்டுவிட வேண்டும்” என்று தந்தை பெரியார் அவர்கள் 1923ஆம் ஆண்டில் எடுத்துச் சொன்ன அறிவுரை, 90 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகும் இன்னமும் நமது சமூகத்தில் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை என்பதை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பகுத்தறிவு – அறிவியல் மனப்பான்மை குறித்த பிரச்சாரம் இன்னும் தீவிரமாகவும் இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சட்டநெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.

 

மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி – கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால்; அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம்!” என்கிறார் கலைஞர். (முரசொலி – 10.09.2013)

 

கலைஞர் கருத்தை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும். மூடநம்பிக்கை தனிமனித நம்பிக்கையல்ல. அது சட்டப்படி களையப்பட வேண்டியது. அப்படி பல நம்பிக்கைகள், நடைமுறைகள் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளன. கணவன் இறந்தபின் மனைவியை தீயில் தள்ளி கணவனோடு கொளுத்தினால் சொர்க்கம் என்பது மக்கள் நம்பிக்கையாய் இருந்தது. அதை அனுமதிக்க முடியுமா? சட்டத்தால் தடுத்தோம் அல்லவா?

பெற்ற பிள்ளையை சாமியாருக்குக் கறிசமைத்தால் புண்ணியம் என்ற மக்கள் நம்பிக்கையைச் சட்டம் இன்றைக்கு ஏற்குமா? நரபலி கொடுத்தால் கேடு நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை சட்ட அமைச்சர் அதை அனுமதிப்பாரா? தடுப்பாரா?

 

சோதிடத்தை நம்பும் பெற்றோர் தன் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று சோதிடர் சொன்னதால் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் அரசு அதை ஏற்குமா? பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கச் சொல்லுமா? தடுக்க வேண்டியவற்றைச் சட்டப்படி தடுத்துத்தான் ஆகவேண்டும்! அமைச்சர்கள் சமூகப் பொறுப்புடன் பதில் கூறவேண்டும். Unmai.in may2 2025