தமிழக அரசின் அபார சாதனை! Featured
10 08 2025
தமிழக அரசின் அபார சாதனை!
இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள மாநிலமாக தமிழகம் உருவாகியிருப்பது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அபார சாதனை மட்டுமின்றி தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றாகும்.மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி விகிதத்தைக் காட்டி, தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி சில தினங்களுக்கு முன் வந்த நிலையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட மதிப்பீட்டில், தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை இன்னும் அதிகரித்து 11.19 சதவீதமாக குறிப்பிட்டிருப்பது மேலும் பெருமை சேர்த்துள்ளது.
இருந்தாலும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டின் வளர்ச்சியில் பிரதான இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசம் – 8.99, ஆந்திரா – 8.21, தெலங்கானா – 8.08, கர்நாடகா – 7.37, மகாராஷ்டிரா – 7.27 என அவையனைத்தும் தமிழகத்தை விட குறைந்த சதவீத வளர்ச்சியையே எட்டியுள்ளன.
அதேநேரம், தனிநபர் வருவாயில் தமிழகம் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயில் எதிரொலிப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மூன்று பேர் உள்ள வீட்டில் ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டுவதற்கும், 10 பேர் உள்ள வீட்டில் ரூ.1 லட்சம் வருவாய் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்றல்ல என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. நாட்டில் தனிநபர் வருவாயும் உயரும் வகையில் அமையும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே உண்மையான வளர்ச்சியாக அமையும்.
hindutamil.in 07 aug 25