நிலைப்பாட்டை மாற்றுவாரா விக்கி?
நிலைப்பாட்டை மாற்றுவாரா விக்கி?
வடக்கு - கிழக்கு தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையை முன்னைய ஆட்சியாளர்கள் உதட்டளவில் ஏற்றுக்கொண்டார்களே தவிர அவற்றைத் தீர்ப்பதற்காக உணர்வுபூர்வமான நடவடிக்கைகள் எடுத்த வரலாறு கிடையாது. யுத்தம் முடிந்தால் தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்ட அரசியல் தலைவர்கள் தான் அதிகம். அந்த யுத்தம் தான் தமிழர்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் கருதினார்கள். பிரச்சினைக்கான தீர்வைத் தேடித்தான் அந்த யுத்தம் உருவானது என்ற உண்மையை அவர்கள் ஏற்க மறுத்தனர்.அந்த யுத்தம் 2009 இல் முடித்து வைக்கப்பட்டபோது தமிழர்களின் பிரச்சினைகள் உச்சத்தில் இருந்தன. இடம்பெயர்வு, காணிகள் இழப்பு, தொழில் இழப்பு, காணாமல் ஆக்கப்பட்டமை என எண்ணற்ற பிரச்சினைகளை தமிழர்கள் யுத்த முடிவில் சுமந்து நின்றனர்.
யுத்தம் முடிந்த பின் அவர்களின் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தேடி ஓடினர், போராடினர். அப்போதைய மகிந்த அரசு இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்கவில்லை. முன்னைய ஆட்சியாளர்களைப் போல் அவரும் தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டாரே தவிர அவற்றைத் தீர்ப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், நடவடிக்கை எடுப்பதுபோல் காட்டிக் கொண்டார்.
யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்கு மேல் மகிந்த இந்த நாட்டை ஆட்சி செய்தார். இந்த 5 வருடங்களுக்குள் அவர் தமிழரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான், மகிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது. யுத்தம் முடிந்து 5 வருடங்களாக அவரால் செய்ய முடியாததை புதிய அரசு வெறும் ஒரு வருடத்துக்குள் செய்துள்ளமை தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விடயமாகும்.
காணிகள் விடுவிப்பு,சில அரசியல் கைதிகள் விடுவிப்பு என பல பிரச்சினைகளை இந்த அரசு தீர்த்துக் கொண்டு வருகின்றது. மகிந்த அரசுடன் ஒப்பிடுகையில் இது மிக வேகமான நகர்வாகும். இருந்தும், இது போதாது என சில கடும்போக்குவாதிகள் குற்றஞ்சாட்டுகின்றமைதான் கவலைக்குறிய விடயம். ஆனால்,30 வருடப் பிரச்சினைகளை வெறும் ஒரு வருடத்துக்குள் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஏனோ அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இந்த நாட்டில் இனி இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த அரசு செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். தமிழருடன் தொடர்புபட்ட அனைத்து விடயங்களுடனும் கைகோர்த்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து நின்று அவர்களுக்கு இந்த அரசு நம்பிக்கை ஊட்டி வருவதையும் அவதானிக்கலாம்.
அந்த வகையில்,யாழில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழரின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்து மீண்டும் நம்பிக்கையூட்டியுள்ளார்.
அதிகாரம் பகிரப்படும், தமிழர்களின் பறிபோன 4500 ஏக்கர் நிலம் விரைவில் விடுவிக்கப்படும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், வடக்கிற்கு தமிழ் மொழி மூலம் கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல வாக்குறுதிகளை பிரதமர் அந்த நிகழ்வில் வழங்கி இருந்தார்.
மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறி இந்த அரசுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் முரண்பட்டுக் கொண்டு நிற்கும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் அருகில் வைத்துக் கொண்டுதான் பிரதமர் இந்த வாக்குறுதிகளை வழங்கினார்.
இந்த உறுதி மொழியை ஏற்று வடக்கு முதலமைச்சர் இனியாவது அவரது நிலைபாட்டை மாற்றுவாரா, இந்த அரசுடனும் கூட்டமைப்புடனும் இனியாவது இணைந்து செயற்படுவாரா அல்லது ஒரே இரவில் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் அவர் தொடர்ந்தும் இருப்பாரா என்ற கேள்வி இப்போது தமிழர் தரப்பில் எழுப்பப்படுகின்றது.
கடுபோக்கு அரசியலைக் கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியல் மூலம் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் என்ற நடைமுறைச் சாத்தியமான நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தபோதிலும், அந்த நிலைப்பாட்டுடன் வடக்கு முதலமைச்சர் உடன்படாது அவர் தொடர்ந்தும் கடும்போக்கு முரண்பாட்டு அரசியலை நடத்தி வருவதை நாம் அறிவோம். இதன் விளைவாகத்தான் அவரை இணைத் தலைவராகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவையும் உருவானது.
கூட்டமைப்பின் புதிய நிலைப்பாடு ஒரு வருடத்துக்குள் தமிழர்க்குப் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தும்கூட அந்த நிலைப்பாடு வெற்றிப் பாதையில் பயனிக்கின்ற போதிலும் கூட வடக்கு முதலமைச்சர் சில கடும்போக்குவாதிகளுடன் சேர்ந்து கொண்டு எல்லாப் பிரச்சினைகளும் ஒரே இரவில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிலைப்பாட்டில் உள்ளார்.அவரது அந்த நிலைப்பாடு சாத்தியமற்றது என்பதை அவர் ஏன் உணராமல் இருக்கின்றார் என்று தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தத் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு முதலமைச்சர் தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகளை சுட்டிக் காட்டினார். பிரதமர் அந்தப் பிரச்சினைகள் எவற்றையும் மறுக்கவில்லை.அந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் மிக விரைவில் தீர்வு முன் வைக்கப்படும் என உறுதியளித்தார். பிரதமரின் இந்த வாக்குறுதியை வடக்கு முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றுவாரா, இந்த அரசுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து செயற்படுவாரா என்ற கேள்விகள் இப்போது தமிழர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.இவற்றுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?
கடுபோக்கு அரசியலைக் கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியல் மூலமே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் என்ற நடைமுறைச் சாத்தியமான நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தபோதிலும், அந்த நிலைப்பாட்டுடன் வடக்கு முதலமைச்சர் உடன்படாது அவர் தொடர்ந்தும் கடும்போக்கு முரண்பாட்டு அரசியலை நடத்தி வருகிறார். கூட்டமைப்பின் புதிய நிலைப்பாடு ஒரு வருடத்துக்குள் தமிழருக்குப் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தும்கூட அந்த நிலைப்பாடு வெற்றிப் பாதையில் பயணிக்கின்ற போதிலும் கூட வடக்கு முதலமைச்சர் சில கடும்போக்குவாதிகளுடன் சேர்ந்து கொண்டு எல்லாப் பிரச்சினைகளும் ஒரே இரவில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிலைப்பாட்டில் இருப்பது தமிழர்க்கு எந்தவித நன்மைகளையும் கொண்டு வராது.
onlineuthayan.com 16 01 2016 - எம்.ஐ.முபாறக்