யதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல

24 01 2016

யதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல

தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் பெருவாரியாக ஒரே புள்ளியில் ஒருங்கிணைகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், அதற்கு எதிராக விமர்சனங்களும், வியாக்கியானங்களும் பலமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த விமர்சனங்களிலும், வியாக்கியானங்களிலும் குறிப்பிட்டளவான நியாயப்பாடுகள் இருந்திருக்கின்றன. அதனை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை முன்வைக்கும் தரப்புக்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட கூடியது. அரசியல் மற்றும் அது சார்பிலான போராட்டக் களங்களில் 'நிராகரிக்கப்பட்டவர்கள்' என்கிற விடயம் காலத்துக்கு ஏற்ப மாறக் கூடியது. அதில் பிரச்சினையில்லை. நேற்றைய துரோகிகள் இன்றைய தியாகிகள் ஆவது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒன்றும் புதிதில்லை. அதுபோல, கடந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டு தூக்கியெறியப்பட்டவர்கள், பெரும் ஆரவாரத்தோடு மீண்டும் வரவேற்கப்பட்ட காட்சிகளும் இங்கு அரங்கேறியிருக்கின்றன. ஆக, நிராகரிக்கப்பட்டவர்கள் கருத்துக்கூற லாயக்கற்றவர்கள் என்கிற வாதம் ஒப்புக்கொள்ளக் கூடியவையல்ல.

அதுபோலவே, மக்கள் பெருவாரியாக ஒருங்கிணையும் முடிவொன்றை எடுக்கின்றார்கள் என்றால், அதற்குப் பின்னாலுள்ள நியாயப்பாடுகள், தேவைகள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்த முடிவினை மதிக்க வேண்டிய தேவையும் உண்டு. அதுதான், ஜனநாயக வாதத்தின் அடிப்படை. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், 'மக்கள் பாமரர்கள்' 'ஏதுவும் அறியாத அறிவிலிகள்' என்பது மாதிரியான விமர்சனங்களும், வாதங்களும் எரிச்சலூட்டுகின்றன. அவை, உண்மையில் அக்கறையான மனநிலையோடு வைக்கப்படுகின்றதா?, என்கிற கேள்வியையும் எழுப்பி விடுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய அரசியலரங்கில் ஒரு தரப்பினால் 'புறக்கணிப்புக் கோசம்' பலமாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அதனைப் புறந்தள்ளிய தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் வீழ்ச்சியை உறுதி செய்வதில் கவனமாக இருந்தார்கள். அது, குறிப்பிட்டளவான ஜனநாயக வெளியை குறுகிய காலத்துக்காவது திறக்கும் என்றும் நம்பினார்கள். அதன்போக்கிலேயே அந்தத் தேர்தலை எதிர்கொண்டார்கள். அது, சாத்தியப்பட்டது.

தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தினை முன்வைத்த தரப்புக்கள், அதற்காக முன்மொழிந்த காரணங்கள் பலவற்றை மக்கள் ஏற்கெனவே உணர்ந்திருந்தார்கள். ஆனால், அதனையும் மீறி தேர்தலில் பங்களித்து மஹிந்தவின் வீழ்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்கிற தேவைப்பாடு மக்களுக்கு ஏன் ஏற்பட்டது, அதன் அத்தியாவசியம் எப்படிப்பட்டது?, என்பது மாதிரியான உரையாடல்கள் உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான சூழல் தமிழ்த் தேசிய அரசியல்- ஊடகப் பரப்பில் உருவாகியிருக்கவில்லை. அதனால், இன்னமும் அந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படவும் இல்லை. மாறாக, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு இரு பிரிவுகளை தமக்குள் உருவாக்கிக் கொண்டு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றது. அதிகமாக, ஒரு தரப்பினை மற்றொரு தரப்பு எந்த நிலைக்கு சென்றாவது விமர்சிக்க வேண்டும், பிழை கண்டுபிடிக்க வேண்டும் என்பது மாதிரியான அடிப்படைகளோடு இயங்குகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் சுதந்திரத்துக்கு முந்தைய சிலோனில் ஆரம்பித்துவிட்டவை. அவை பெற்றுத் தந்த அனுபவமும், போதித்த படிப்பினையும் தமிழ் மக்களிடம் அதிகமாக உண்டு. ஏனெனில், தமிழ் மக்களின் ஒவ்வொரு போராட்ட வடிவமும் தோற்றம் பெற்ற விதமும், அவை வீச்சம் பெற்ற விதமும் படுவேகமானவை. அந்த வேகம் அதிக நேரங்களில் இயல்பினை மீறியதாக இருந்திருக்கின்றன. அவை, பெற்றுக் கொடுத்த நன்மைகளும், தீமைகளும் அதிகமானவை.

சீரான வேகம் என்பது வீதிப் போக்குவரத்துக்கு மாத்திரமல்ல. அனைத்து வழிகளிலும் அவசியமானவை என்பதை யார் உணராவிட்டாலும், தமிழ் மக்கள் தற்போது உணர்ந்து வைத்திருப்பார்கள். ஏனெனில், பெற்றுக் கொண்ட படிப்பினைகள் அப்படிப்பட்டவை. அப்படியான சூழ்நிலையில், மக்கள் முடிவொன்றுக்கு வருகின்றார்கள் என்றால், அதனை பகுப்பாய்வு செய்வது தொடர்பில் அடிமட்டத்திலிருந்து உரையாடல்களை மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, இரண்டு மூன்று நிலைகள் கடந்து நின்று மக்களுக்கான உரையாடல்களை ஆரம்பிக்க முடியாது. அது, சரியான அரசியலாகவும் இருக்காது. அது, மக்களின் கருத்துக்களை புறக்கணிக்கும் தன்மை கொண்டதாகவும் அமைந்துவிடுகின்றன.

அதுபோலவே, உலக ஒழுங்கு, சர்வதேச அரசியல், பிராந்திய ஆதிக்கம் என்கிற விடயங்கள் பற்றியும் தற்போது மக்களிடம் குறிப்பிட்டளவான தெளிவு உண்டு. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியிலும், வீழ்ச்சிலும் அவை எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன என்பது தொடர்பில் பெற்றுக் கொண்ட பெரும் படிப்பினையொன்றை கண்டு ஆறாரை ஆண்டுகள் தான் ஆகின்றன. அப்படியிருக்க அவை தொடர்பிலான தெளிவாற்ற அல்லது புரிதலற்ற தன்மையோடு பெரும்பான்மை தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்கிற வாதத்தினை முன்வைப்பவர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் அரசியல் அதிகாரங்கள் மற்றும் அது சார்பிலான முன்னோக்கிய பயணம் தொடர்பில் விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு தயாராக இல்லை. அதற்காக தொடர்ந்து போராடவும் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அவற்றினை பெற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் உலக ஒழுங்கின் போக்கு ஆகியவற்றை உள்வாங்கியே பிரதிபலித்தாக வேண்டியிருக்கின்றது. அந்த நிலையின் போக்கில் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இப்போது தமிழ் மக்கள் வந்து நின்கின்றார்கள். கள யதார்த்தம் உணர்த்தும் விடயத்தினை புறந்தள்ளிக் கொண்டு நெஞ்சை நிமித்திக் கொண்டு முன்செல்வது என்பது படுகுழிகளை நோக்கி எம்மை நகர்த்தும். அதற்கான கடந்தகால உதாரணங்கள் எம்மிடம் நிறைய உண்டு.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் இருக்கும் ஒரு தரப்பு யதார்த்த அரசியலை அல்லது அது சார்பிலான உணர்திறனை 'சரணாகதி அரசியல்' என்று முத்திரை குத்திக் கடந்து செல்லத் தயாராகின்றது. யதார்த்த அரசியல் என்பது என்றைக்குமே சரணாகதி அரசியல் ஆகாது. அப்படியான முத்திரை குத்தல்களும்- உரையாடல்களும் கூட அடிப்படையற்றவை. அவை, உண்மையான மனநிலைப் பிரதிபலிப்புக்கள் இல்லை.

நாணல் புல்லின் (கோரைப் புற்கள்) வாழ்வு பற்றிய கதைகள் நம்மிடையே உண்டு. ஆற்றோரங்களில் வளரும் நாணல் புற்கள் ஆறு பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் நீரோட்டத்தின் போக்கில் தன்னுடைய தலை சாய்த்து இசைந்து கொடுக்கும். கோடைக் காலங்களில் காற்று அடிக்குத் திசைக்கு ஏற்க தன்னுடைய தலையை அசைத்துக் கொள்ளும். நாணல் புல்லின் இந்த வாழ்வு நிலையை தமிழ்ச் சூழல் 'உறுதிப்பாடு அற்ற நிலை, அடிமைத்தனம்' என்கிற விடயங்களுக்கு உதாரணமாக முன்வைத்து வந்திருக்கின்றது. உண்மையிலேயே, இந்த உதாரணம் மேம்போக்கானதுதான். ஆனால், நாணல் புல்லின் வாழ்வுக் கதை உணர்த்தும் உண்மையான அர்த்தம் வேறு மாதிரியானது. அதாவது, காட்டாற்று வெள்ளங்களின் போது அந்த நீரோட்டத்தின் போக்கில் இசைந்து கொடுக்காத மரங்களும், செடிகளும், கொடிகளும் அடித்து செல்லப்படும். அதுபோலவே, சூறாவளிக் காற்றடித்து மரங்களும், செடிகளும் முறித்து வீழ்த்தப்பட்ட நேரங்களிலும், அந்தக் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுத்து, அந்த தருணத்தில் அதன் ஒழுங்கில் சென்று தன்னுடைய இருப்பினை நாணல் புல் காப்பாற்றிக் கொள்ளும். இங்கு, அதன் போக்கில் இசைந்து தன்னுடைய வாழ்வினைக் காப்பாற்றுதல் என்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக, தலைப் பரப்பினை மாத்திரமே அந்த ஒழுங்கில் அசைத்து நிலத்தோடு தனக்கு இருக்கின்ற உறுதிப்பாட்டையும், வலுவையும் நாணல் புல் என்றைக்குமே விட்டுக் கொடுத்ததில்லை.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்கள் நாணல் புல் நிலத்தோடு கொண்டிருக்கும் உறுதிப்பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கான முனைப்புக்கள் உலக ஒழுங்கினை உள்வாங்கி, கள யதார்த்தத்தினைப் புரிந்து கொண்ட நாணல் புல்லின் வெள்ளத்துக்கும், சூறாவளிக் காற்றுக்குள் ஈடுகொடுக்கும் தன்மை போன்றும் இருக்க வேண்டும். மாறாக, நிலத்தோடு கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை புரட்டிக்போடும் வகையிலான வாதம் அல்லது போக்கு என்பது ஒட்டுமொத்தமான இருப்பையும் காலி செய்து விடும். நடைமுறைச் சாத்தியம், கள யதார்தம் பற்றி அரசியல் உரையாடல்கள் இப்படியான நிலையிலிருந்து தான் செய்யப்படுகின்றன. மக்களும் அதன்போக்கிலேயே இப்போது இருக்கின்றார்கள். மாறாக, சரணாகதி அரசியல் என்கிற முன்வைப்போடு மக்கள் இசையவில்லை. அதற்கு, தமிழ்த் தேசிய உரிமை சார் அரசியலும் என்றைக்கும் இடம்கொடுக்காது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலை சரணாகதி அரசியலுக்கு உதாரணமாக முன்வைக்க முடியும். அது, ஒட்டுமொத்தமாக காலில் விழுந்து கொள்வது. அங்கு, உரிமைகளுக்கான, அதிகாரங்களுக்கான உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை. அன்று, சந்திரிக்கா சொன்னது வேதம், பின்னர் மஹிந்த சொன்னது வாக்கு. அதற்காக எல்லாமும் செய்வது. அங்கு, டக்ளஸுக்கு என்கிற சொந்தக் கருத்து ஏதும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எடுத்தது அப்படியான முடிவுகளை அல்ல. அது, தனித்துவம், உறுதிப்பாடு சார்ந்தது. கள யதார்த்தம் உணர்ந்தது. ஆக, சரணாகதி அரசியலுக்குத் தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள் என்கிற வாதத்தை முன்வைப்பவர்கள் கொஞ்சமாக சிந்தித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், யதார்த்த அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல.

tamilmirror.lk 13 01 2016