தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? - 1949

 02 02 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன ?  1949 இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம்

என்.கே.அஷோக்பரன்

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் 1948இல் ஜி.ஜி. பொன்னம்பலம் இணைந்து கொண்டு கைத்தொழில் மற்றும் கடற்றொழில் கபினட் அமைச்சராகினார். அதுவரைகாலமும் ஜி.ஜி.பொன்னம்பலம் பின்பற்றிய அரசியல்வழியில் இது ஒரு திருப்பம்தான். ஆனால், இந்த இணைப்பின் மூலம் ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தமிழ் மக்களுக்கென தமிழர் பிரதேசங்களில் பல ஆக்கபூர்வமான திட்டங்களை உருவாக்க முடிந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பனிக்கட்டித் தொழிற்சாலைகள், மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரி, மானிப்பாய் ஆஸ்பத்திரி, கடற்றொழில் அபிவிருத்தி, கைதடி வயோதிபர் மடம், வட மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்தி எனப் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியமாயின. இது மட்டுமல்லாது இலங்கைத் தேசியக் கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்தும் நிறங்களையும் உள்ளடக்கியது ஜி.ஜி.யினது பங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இணைப்பு- அரசியல் ரீதியில் ஜி.ஜி.யின் 50ற்கு 50-யோ, தமிழ் மக்களின் சுயாட்சியையோ வென்றெடுக்கும் வாய்ப்பைத் தரவில்லை. ஜி.ஜி.யின் இந்த நிலைப்பாட்டு மாற்றத்தை சா.ஜே.வே.செல்வநாயகம், சி.வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் எதிர்த்ததன் விளைவாகவே பிரிவு உண்டானதாக பல கட்டுரையாளர்களும் கருத்துரைக்கிறார்கள்.

சிலர், செல்வநாயகம் உட்பட்ட சில முக்கிய தலைவர்களுக்கு கபினெட் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுத்தர ஜி.ஜி. தவறியதுதான் பிரிவுக்கு மூல காரணம் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள். எது எவ்வாறாயினும், குறிப்பிட்ட பிரிவை கொள்கை ரீதியில் செல்வநாயகம் தலைமையிலான குழுவினரால் நியாயப்படுத்த முடிந்திருந்தது. இதனிடையே இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் அன்றைய நாடாளுமன்றினால் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், அது தொடர்பிலான ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் நிலைப்பாடு அவர் மீது பலத்த விமர்சனங்களை உருவாக்கியது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோனதற்கு ஜி.ஜி. ஆதரவளித்தார் என்பது அன்றுமுதல் இன்றுவரை ஜி.ஜி.பொன்னம்பலம் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனமாகும். குறிப்பாக தமிழரசுக் கட்சி அன்று இந்த விமர்சனத்தைக் கடுமையாக முன்வைத்ததுடன், ஜி.ஜி.பொன்னம்பலத்துக்கு எதிரான வலிமையான பிரசாரமாக இதனைக் கைக்கொண்டது.

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை தொடர்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ன செய்தார், அவர் இழைத்த தவறு என்ன என்பது பற்றி இங்கு ஆராய்தல் அவசியமாகிறது. இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் அக்கறையற்றுச் செயற்பட்டவராக இருக்கமுடியாது. ஏனெனில் அவர் ஆற்றிய 50இற்கு 50 உரையிலாகட்டும், சோல்பரி குழு முன்பு ஆற்றிய உரையிலாகட்டும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சம உரிமை, பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பற்றியெல்லாம் பேசியவர். குறிப்பாக சோல்பரி குழு தமிழ்க் காங்கிரஸின் சாட்சியத்தைக் கேட்பதற்கென ஒதுக்கிய மூன்று நாட்களில், ஒருநாள் முழுவதையும் ஒதுக்கி இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகள் பற்றியும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றியும் பேசினார் ஜி.ஜி. ஆகவே, இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பில் ஜி.ஜி. அக்கறையற்றிருந்தார் என்று சொல்லமுடியாது. அப்படியாயின் அம்மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்குக் காரணமான சட்டங்களுள் ஒன்றுக்கு ஜி.ஜி. ஆதரவளித்தாரா? அப்படி ஆதரவளித்தாராயின் அதன் மூலம் அம்மக்களுக்கு ஜி.ஜி. பெரும் அநீதி இழைத்துவிட்டாரல்லவா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது. இந்த விஷயம் கொஞ்சம் சிக்கலானது. ஆனால், எளிமையாக புரியவைக்க முயல்கிறேன். இங்கே இரண்டு சட்டங்கள் முக்கியம் பெறுகின்றன. முதலாவதாக 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை பிரஜாவுரிமைச்சட்டம், மற்றயைது 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் காலனித்துவ நாடுகளிலுள்ள அனைத்து மக்களும் பிரித்தானிய முடியின் குடிமக்களாக இருந்தார்கள். காலனித்துவத்திலிருந்து நாடுகள் சுதந்திரம் பெற்றபோது ஒவ்வொரு சுதந்திர நாடும் தமக்கென குடியுரிமைச் சட்டத்தை வரைந்து கொள்ளுதல் அவசியமானது. அவ்வகையில் 1948இல் அன்றைய டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இலங்கை பிரஜாவுரிமைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இது சமர்ப்பிக்கப்பட்டபோது ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எதிர்க்கட்சியில் இருந்தது. குறித்த சட்டமூலமானது பின்வருமாறு வழங்கியது:

(அ) இலங்கையில் பிறந்த ஒருவருடைய தகப்பன் இலங்கையில் பிறந்தவராகவோ, அல்லது

(ஆ) அவருடைய தந்தை வழிப் பேரனும், தந்தை வழிப்பாட்டனும் இலங்கையிற் பிறந்தவர்களாகவோ இருந்தால், அவர் இலங்கைப் பிரஜையாகவே கருதப்படுவர். அத்துடன்,

(இ) இலங்கைக்கு வெளியே பிறந்தவர் இலங்கைப் பிரஜையாக மதிக்கப்பட வேண்டுமேயானால் அவருடைய தந்தையும், தந்தை வழிப் பேரனும் இலங்கையிற் பிறந்திருத்தல் வேண்டும். அல்லது,

(ஈ) அவரின் தந்தை வழிப்பேரனும், பாட்டனும், இலங்கையில் பிறந்திருத்தல் வேண்டும்.

இச்சட்டமூலம் இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனை அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்தார். இதனைக் கடுமையாக எதிர்த்து அவர் பேசியது 1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற ஹன்சார்டின் 1821 - 1861 பக்கங்களில் பதிவாகியுள்ளது. இதனை இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் கூட கடுமையாக எதிர்த்தன. ஆகவே, இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோவதற்கு ஜி.ஜி. பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்பதில் உண்மையில்லை. மாறாக, அனைத்துத் தமிழ்க் கட்சிகளைப் போலவும் அவர் அன்று அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார்

- எதிர்த்தே வாக்களித்தார். ஆயினும் அன்றைய அரசாங்கம் அச்சட்டத்தை நிறைவேற்றியது. இதன் பின்னர், ஜி.ஜி.பொன்னம்பலம் - அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் 'எதிர்வினை - ஒத்துழைப்பு' வழங்குவது பற்றிப் பேச்சு நடத்தியபோது, பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தார். அதனை அன்றைய பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்பின்னர் அன்றைய அரசாங்கத்தில் இணைந்து கபினெட் அமைச்சரானார் ஜி.ஜி.பொன்னம்பலம். பிரஜாவுரிமை இழந்த இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதாகத் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற டி.எஸ்.சேனநாயக்க 1949ஆம் ஆண்டில்

இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார். இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை மசோதாவின்படி இலங்கையில் குடும்பமாக ஏழு வருடங்கள் வசித்தவர்களும், விவாகமாகாமல், பத்து வருடங்கள் வசித்தவர்களும் பிரஜா உரிமை பெறுவதற்கு உரிமை பெற்றார்கள். இலங்கை இந்திய காங்கிரஸும், தமிழ்க் காங்கிரஸும் ஏழு வருட காலப்பகுதியை, ஐந்தாகக் குறைக்கக் கோரின. ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த மசோதா சட்டமானால் ஏறத்தாழ 100,000 பிரஜாவுரிமையை இழந்த இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமையைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. இந்த மசோதாவுக்குத்தான் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவாக வாக்களித்திருந்தார். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் இழைத்த அநீதியை, இந்திய-பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் முற்றாக சரிசெய்து விடவில்லை. அது ஒரு முழுமையான தீர்வுமில்லை.

உண்மையில் இதைவிட நியாயமான, முழுமையான தீர்வொன்றுக்காக ஜி.ஜி.பொன்னம்பலம் உழைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோக ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரவளித்தார் என்ற கருத்தில் உண்மையில்லை. ஏனெனில், அந்த மசோதாவை ஜி.ஜி.பொன்னம்பலம் கடுமையாக எதிர்த்திருந்தார். மாறாக இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒருதொகை இந்திய வம்சாவளி மக்களுக்கேனும் பிரஜாவுரிமை வழங்கிய இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமை சட்டத்துக்கே அவர் ஆதரவளித்திருந்தார் என்பதே நிதர்சனம். அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸிலிருந்து 1949இல் பிரிந்து, இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதானது, ஜி.ஜி.யின் அபிவிருத்தி சார் இணக்க அரசியலுக்கு மாற்றாக தமிழ் மக்களுக்கான சுயாட்சி சார் உரிமை அரசியலுக்கான பாதையின் தொடக்கமாகக் கருதப்படத்தக்கது.

tamilmirror 24 08 2015