தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? தனிச் சிங்களச் சட்டம்' - வாதப்பிரதிவாதங்கள்,
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? தனிச் சிங்களச் சட்டம்' சமர்ப்பிக்கப்பட்டபோது அங்கு எழுந்த வாதப்பிரதிவாதங்கள்,
என்.கே.அஷோக்பரன் LLB (Hons)சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியமை இலங்கை அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டதொரு நிகழ்வாகும். 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், சுருக்கமாக 'தனிச் சிங்களச் சட்டம்' இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. தமிழர்களின் தனிவழி அரசியலுக்கான தேவை உருவாகத் தொடங்கியது இங்குதான். மொழியுரிமைப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்ததன் மூலம், இலங்கையின் எதிர்கால அரசியலை இனப்பிரச்சினை எனும் காலனிடம் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கையளித்தது.
1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தான் வழங்கிய சிங்கள மொழியை இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக்குவேன் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் முகமாக, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விரைவிலேயே உத்தியோகபூர்வ மொழிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 'சிங்கள மொழி இலங்கையின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும்' அச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய நிலவரத்தின்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 70 சதவீதம். சிங்கள-பௌத்த தேசியத்தின் மீட்பராக, அதையே இலங்கையின் சுதேசியமாக, மேற்கத்தேய காலனித்துவத்திலிருந்து பெறும் விடுதலையாக வியாக்கியானம் செய்த பண்டாரநாயக்க, இலங்கையிலுள்ள சிறுபான்மையினரின் நலன்கள் பற்றிச் சிந்திக்காது, தான் செய்யப் போகும் காரியம் இந்நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் எனும் தூரதரிசனத்தை துறந்து செயற்பட்டார். இதன் விளைவுகளையே இந்த நாடு இன்று வரை அனுபவிக்கிறது.
இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட போது அதனைச் சுற்றி இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களை நாம் கருத்திற் கொள்ளுதல் முக்கியமானதாகும். சுயநல, பேரினவாத அரசியல் பேச்சுக்களையும், அதற்கெதிரான தீர்க்கதரிசனங்கொண்ட கருத்துக்களையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். குறிப்பாக கலாநிதி என்.எம் பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆகிய இடதுசாரித் தலைவர்களின் கருத்துக்கள் தீர்க்கதரிசனம் மிக்கவையாக அமைந்தன. அதுபோல பேரினவாத அரசியலின் அபத்த முகத்தையும் இந்த வாதப்-பிரதிவாதங்களில் காணலாம். ஜூன் 14, 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய அன்றைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பிலிப் குணவர்த்தன (இன்றைய அமைச்சரான தினேஷ் குணவர்த்தனவின் தந்தையார்) 'இந்தச் (தனிச் சிங்கள) சட்டத்தினூடாக எமது தேசியப் போராட்டத்தில் ஒரு முக்கியத்துவம் மிக்க அடைவை எய்துகிறோம். சிங்கள மொழியை அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு அது இருந்த நிலைக்கு மீட்டு வருதலானது இந்தத் தீவின் வரலாற்றில் முக்கியத்துவமிக்கதொன்றாகும்' என்று பேசினார். அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பதாக, இந்தத் தீவு ஒரு நாடாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அதுபோலவே
அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்பு இலங்கையில் சிங்களம் மட்டும்தான் பேசப்பட்டதா? இலங்கை ஒருநாடாகவே இல்லாத பொழுதில் ஒரு தேசமாக எவ்வாறு இருந்திருக்க முடியும்? வரலாற்றில் கண்டி இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவும், றுகுணு இராச்சியம் தனித்துவம் மிக்கதாகவுமே இருக்கின்ற போது, சிங்கள தேசம் கூட அந்நியர் ஆட்சிக்கு முன்பு ஒரு தேசமாக இருக்கவில்லை என்பது புலனாகிறது. இந்நிலையில் சிறுபான்மையினரின் நலன்களை மறந்து, பேரினவாத அரசியலைக் கட்டவிழ்த்து விட்ட ஒரு சட்டத்தை சுதேசியத்தின் பெயரால் நியாயப்படுத்துதல் என்பது எவ்வளவு அபத்தமானது.
சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்பது பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட எண்ணக்கரு என்று சொல்லிவிட முடியாது. இலங்கையில் 'சுயபாஷா' பற்றி 1932களிலிருந்து முன்மொழிவுகள், வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சிங்கம், தமிழ் எனும் இரு சுதேசியர் பேசும் மொழிகளையும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் ஆக்குதல் பற்றியே பேசின. சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்க வேண்டும் என்ற பிரேரணையை 1943, ஜூன் 22ஆம் திகதி அரச சபையில் (டொனமூர் யாப்பின் கீழ் சட்டவாக்கத்துறை அரச சபை என அழைக்கப்பட்டது) முன்வைத்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்பிரேரணை, 1944ஆம் ஆண்டு மே 24இல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது பேச்சில் சிங்களம் உத்தியோகபூர்வ மொழி ஆக்கப்பட வேண்டும் எனச்சொன்ன ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழ் மொழிக்குரிய இடம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: 'தமிழ் மொழியையும் இணைத்துக்கொள்வதற்கான எனது விருப்பம் பற்றி விளக்க விரும்புகிறேன். தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். அத்தோடு தமிழ் பேசும் மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டும்'. சிங்கள-தமிழ் தேசிய சமத்துவ நிலையிலிருந்து தமிழ், தமிழ் பேசும் மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் எண்ணத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்திருந்தார்.
இலங்கையில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்டோர் பேசும் மொழியாக சிங்களம் இருப்பதால், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டும் எனப் பேசிய அவர், தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தாய்மொழியான தமிழ்மொழியும், சிங்களமொழியுடன் சம அந்தஸ்தில் இணைக்கப்பட வேண்டும்' என்றார். அன்று இந்த இருமொழி நிலைப்பாட்டை (அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த) பண்டாரநாயக்க ஏற்றுக் கொண்டார். சிங்கள மொழி மட்டும் எனத் தொடங்கிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன, விவாதத்தின் இறுதியில் இருமொழி என்ற நிலைப்பாட்டை எட்டியிருந்தார். இது நடந்து ஏற்தாழ 12 ஆண்டுகளின் பின் தனது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமரான பண்டாரநாயக்க 'தனிச் சிங்கள' சட்டத்தைக் கொண்டு வந்தார்.
பண்டாரநாயக்கவின் ஆதரவாளரும் தீவிர சிய்கத் தேசியவாதியுமான மெத்தானந்த 'ஐதரசன் குண்டுகளால் கூட தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்படுவதை தடுக்க முடியாது' என்று கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தை 1956இல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்தது. ஒன்றுக்கொன்று வைரிகளான இரு பெரும் தேசியக் கட்சிகளும் 'தனிச் சிங்கள' சட்டத்தை ஆதரித்தே வாக்களித்தன. தமிழ்க் கட்சிகளும் (இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), இடதுசாரிக் கட்சிகளுமே 'தனிச் சிங்களச்' சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. லங்கா சமசமாஜக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லெஸ்லி குணவர்த்தன, 'திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும்.
நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது' என்று 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசினார். பிரபல சட்டத்தரணியும், வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா, 'உங்களுக்கு இருமொழிகள் - ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி - இரு நாடு வேண்டுமா' என்று நாடாளுமன்றத்தில் கர்ஜித்தார். 'சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா? எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால்,
நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்' என கொல்வின் ஆர்.டி. சில்வா தீர்க்க தரிசனத்துடன் பேசினார். மற்றுமொரு பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி என்.எம்.பெரேராவும் 'தனிச்சிங்கள' சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 'பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது.
இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை. அந்த முடிவானது சிங்கள 'கொவிகம' தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால், அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம் ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. நீங்கள் சிறுபான்மையினர் பிரச்சினையை, எமது தோழர்களைக் கொல்வதனூடாக, தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள். நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள். இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது' என்று உணர்ச்சி பொங்க கலாநிதி என்.எம். பெரேரா பேசினார். எத்தனை தூரநோக்குடைய கருத்துக்கள். ஆனால், இவையெல்லாம் பண்டாரநாயக்கவையோ, அவருக்கு ஆதரவளித்த ஐ.தே.க-வின் நிலைப்பாட்டையோ மாற்றவில்லை.
விரக்தியின் உச்சத்தில் நாடாளுமன்ற உறுப்பின் சி.சுந்தரலிங்கம், பிரதமர் பண்டாரநாயக்கவை நோக்கி இப்படிப் பேசினார்: 'பிரதமர் அவர்களே எனது வேலை இனி இங்கில்லை, வெளியில்தான் இருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிரான, அநீதிக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுப்பது என நான் எண்ணுகிறேன். நீங்கள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்புகிறீர்கள். பிரதமர் அவர்களே, நான் உங்களுக்கொன்றை உறுதியளிக்கிறேன், இறைவன் அருளால் நீங்கள் பிரிவடைந்த இலங்கையைப் பெறுவீர்கள்' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். 'தனிச் சிங்களச்' சட்டம் பற்றிப் பேசும் போது, 'ஏற்கெனவே இது இனக் கலவரத்தை உருவாக்கிவிட்டது. இன்றிலிருந்து பத்துவருடங்களில் இது இன்னும் பல மடங்கு அதிகமாகும். இந்தச் சட்டமூலம் நாட்டைப் பிரிப்பதை நோக்கியே நகர்கிறது. இதன் கீழ் உருவாகும் ஒவ்வொரு உத்தரவும் இன்னும் பிரிவினையைத் தூண்டும்' என கம்யுனிஸ்ட் கட்சியின் பீற்றர் கெனமன் கூறினார்.
என்.எம்.பெரேரா, ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் 8 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் 'தனிச் சிங்களச்' சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்களின் கணிப்பின் படி கலவரங்களும் அமைதியின்மையும் உருவானது. இலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாகத் திகழும் 'தனிச் சிங்கள' சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழரது எதிர்ப்பரசியல் சா.ஜே.வே. செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரக வடிவமெடுத்தது. அது பலன் தந்ததா? -
tamilmirror.lk 07 09 2015