தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் - பகுதி – 2

17 02 2016

தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் - பகுதி – 2

 -  டி.பி.எஸ்.ஜெயராஜ்

தமிழ் அரசின் தேசிய கீதங்கள் தமிழ் அரசின் தேசிய கீதங்களில் ஒன்று பரமஹம்சதாசன் எழுதிய“வாழ்கnamo ஈழத் தமிழகம், வாழ்க என்றும் வாழ்கவே” என்பதாகும். மற்றொன்று, முன்னாள் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் தந்தையும் மற்றும் தற்போதைய அம்பாறை மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பாட்டனாருமான திருக்கோவில் அரியநாயகம் எழுதிய “எங்கள் ஈழத் தமிழ்திருநாடே, கலைவாழும் பொன்னாடே” என்கிற பாடல். அரியநாயகம் இந்தப் பாடலை திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் “மாலையிட்ட மங்கை” படத்திற்காக எழுதிய “எங்கள் திராவிடப் பொன்னாடு” என்கிற பாடலைத் தழுவி எழுதியிருந்தார். மூன்றாவது கீதம் தற்போது சென்னையில் வாழும் ஈழத்து புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய “வாழியவே, வழியவே,வாழியவே, எங்கள் தங்கமாமணித் தமிழ் ஈழம்” எனபதாகும்

இந்த “தமிழ்ஈழ தேசிய கீதங்களின்” பதிப்புகள் யாவும் கடந்த தசாப்தங்களில் தமிழ் தீவிர தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதம் என்பன எழுச்சி பெற்றிருந்த காலத்தில் பாடப்பட்டவையாகும். இந்தப் பாடல்கள் யாவம் தமிழ்த் தாயை புகழ்ந்து படும் பாடல்கள் அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து என்பதிலும் வித்தியாசமானவையாகும். தமிழ் கலாச்சார விழாக்கள் எல்லாவற்றிலும் தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடுவது கட்டாயமான ஒன்றாகும். தமிழ் மொழியினை தமிழ்த் தாயாக பிரதிநிதித்துவப் படுத்தி வாழ்த்திப் பாடுவது என்பதை தமிழர் அல்லாத ஒருவரால் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். வழக்கமாக கலாச்சார நிகழ்வுகளில் சுப்பிரமணிய பாரதியின் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்கிற பாடல் அல்லது பாரதிதாசனின் “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” போன்ற பாடல்கள்தான் தமிழ் தாயை கௌரவப் படுத்திப் பாடப்படுவதுண்டு. பொதுவாக தமிழ் போர்க்குணம் உயர்வடைந்தபோது மற்றும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றம் பெற்ற பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய கீதத்தை தமிழில் பாடும் பழக்கமும் விரைவாக அற்றுப்போனது. உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் மிகவும் பொதுவாக இசை மட்டுமே ஒலிக்கப்பட்டு வந்தது. வடக்கு மற்றும் கிழக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளின் எல்லைக் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ ஏற்றெடுத்ததின் பின்னர் அங்கு ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.

எல்.ரீ.ரீ.ஈ தேசிய கீதத்துக்கு மாற்றீடாக ஒரு தமிழ் ஈழ தேசிய கீதத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்கள் புலிக்கொடியின் பண்புகளை வானளாவப் பாராட்டினார்கள். அவர்களின் புலிக்கொடி தமிழ் ஈழமாக அல்லது தமிழ் தேசியக் கொடியாகச் சித்தரிக்கப் பட்டது. எல்.ரீ.ரீ.ஈயின் கவிஞர் புதுவை இரத்தினதுரை “ஏறுது பார் கொடி ஏறுது பார்” என்கிற பாடலை எழுதினார். எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான விழாக்களில் புலிக் கொடியினை எற்றுவது கட்டாயமாக இருந்தது, அப்போது இந்தப் பாடல் பாடப்படுவது வழக்கம். ஸ்ரீலங்கா ஆயுதப் படைகள் எல்.ரீ.ரீ.ஈயிடம் இருந்து பிரதேசங்களை மீளக் கைப்பற்ற ஆரம்பித்ததும் கொழும்பின் சட்ட நிருவாகம் அதன் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை திரும்ப பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கில் இன மோதல் விரிவடைந்ததின் காரணமாக தேசிய கீதம் பாடுவது கணிசமான அளவு குறைவடைந்த போதிலும், மே 2009ல் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடித்ததின் பின்னர் திரும்பவும் அந்த நடைமுறை எழுச்சி பெறத் தொடங்கியது. இதன் விளைவாக வடக்கு மற்றும் கிழக்கில் தேசியக் கொடியும் பெருமையுடன் பறக்க விடப்பட்டது கூடவே தேசிய கீதமும் அந்தப் பிரதேசங்களில் இசைக்கப்படத் தொடங்கிற்று. ஒரு அர்த்தத்தில் சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்களில் நிலவியதை அது புதுப்பித்துக் காட்டுவதைப் போல் இருந்தது.

இலங்கை கந்தர்வ சபை

காலனித்துவ பிடியில் இருந்து 1948, பெப்ரவரி 4 ல் தீவு தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தபோது, இப்போது நாம் பாடும் தேசிய கீதம் வழக்கத்தில் இருக்கவில்லை. இலங்கை விடுதலை அடைந்த போதும் பின்னர் முழு சுதந்திர அந்தஸ்தை பெற்றபோதும், அனுமதி பெற்ற ஒரு சுதேச தேசிய கீதம் இருக்கவில்லை. தேசிய கீதம் ஒன்றை உருவாக்கும் பணியினை இலங்கை கந்தர்வ சபை ஏற்றெடுத்தது. அதற்காக ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு பொருத்தமான கீதத்தை தெரிவு செய்யும் கடமையை உறுதிப்படுத்துவதற்காக சபையினால் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவில் எஸ்எல்பி ஹப்புக்கொட்டுவ, கலாநிதி ஓஎச்டி விஜேசேகரா, லயனல் antherm-2எதிரிசிங்ஹ, முதலியார் ஈஏ அபேசேகர, எல்எல்கே குணதுங்க மற்றும் பி.பி.இலங்கசிங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள். ஒரு சர்ச்சைக்குரிய முடிவாக குழுவில் இருந்த இருவர் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டார்கள். பி.பி.இலங்கசிங்கவினால் எழுதப்பட்டு லயனல் எதிரிசிங்காவினால் இசையமைக்கப்பட்ட ஒரு பாடல் புதிய தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. அது ஸ்ரீலங்காமாதாஃபல யச மகிமாஃஜய ஜய என ஆரம்பமாகி ஜய ஜய தாத நங்காஃ ஸ்ரீலங்கா மாதா என முடிவடையும். உண்மையில் தெரிவுக் குழவில் இடம்பெற்றிருந்த இரண்டு அங்கத்தவர்கள் சமர்ப்பித்த பாடல் தேசியப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றது பரவலான ஆத்திரம் மற்றும் எதிர்ப்பு என்பனவற்றைக் கிளப்பியது. அது அப்பட்டமான ;அநீதியாகக் கருதப்பட்டது.

இலங்கசிங்க – எதிரிசிங்க இரட்டையர்களின் பாடல், சுதந்திர தினத்தன்று காலை தேசியப் பாடல் என்று இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்பப்பட்ட போதும், பரவலான எதிர்ப்பு காரணமாக உத்தியோகபூர்வ சுதந்திர தின விழாவில் அது பாடப்படவில்லை. அந்தப் பாடல் குறைபாடற்றதாகவும் மற்றும் பழி கூற முடியாதபடி இருந்த அதேவேளை, அதைப் பின்பற்ற எடுத்த முடிவு பாரபட்சமானது என்கிற உணர்வை ஏற்படுத்தியதால் அது விமர்சனத்தையும் மற்றும் எதிர்ப்பையும் கிளப்பிவிட்டது. அதன்படி தேசியப் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற பாடல் மக்களைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதப் பட்டதால் அது நம்பகத்தன்மையை இழக்கத் தொடங்கியது. இதற்கிடையில் மற்றொரு பாடல் ஒன்று தேசியகீதத்துக்கு சாத்தியமானதைப் போல மெதுவாக மக்களின் உள்ளத்தைக் கவரத் தொடங்கியது. அதுதான் பிரபலமான ஓவியரும் மற்றும் கவிஞருமான ஆனந்த சமரக்கோன் எழுதிய புகழ் பெற்ற பாடலான  “நமோ நமோ மாதா” என்கிற பாடல். இந்தப் பாடலும் கூட போட்டிக்கு சமர்ப்பிக்கப் பட்டிருந்தது ஆனால் கவனிக்கப் படவில்லை. தவிரவும் வெற்றி பெற்ற “யச மகிமா” பாடலானது அது வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்ட முறை காரணமாக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்தது.” நமோ நமோ மாதா” பாடல் எந்தவித உத்தியோகபூர்வ அந்தஸ்தும் இன்றியே பரந்த வெளிப்பாட்டையும் மற்றும் மக்களின் பாராட்டையும் அனுபவிக்கத் தொடங்கியது. சாதாரண மக்களிடையே அது மிகவும் புகழ் பெற்றிருந்ததுடன்” யச மகிமாவை”விட “நமோ நமோ மாதா”வுக்கே பொது மக்களின் கருத்து சாதகமாக இருந்தது. அந்தப் பாடல் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பானது. உத்தியோகபூர்வ அங்கீகாரம் இல்லாமலிருந்த போதும் இப்போது “நமோ நமோ மாதா” நடைமுறை தேசிய கீதமாக பிரபலம் பெறத் தொடங்கியது.

சுதந்திரம் பெற்றதின் முதல் வருட நிறைவு பெப்ரவரி 4,1949ல் ரொறிங்டன் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது, அங்கு சுதந்திர நினைவு கட்டிடம் வைபவ ரீதியாக பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது. தேசியக் கொடி பெருமையுடன் பறக்க விடப்பட்டதுடன் நான்கு இளம் விளையாட்டு வீரர்கள் எரியும் தீச்சுடர்களை ஏந்தியவாறு சதுக்கத்தில் நுழைந்து சுதந்திர மண்டபத்தின் படிகளில் ஓடி ஏறினார்கள். அவர்கள் ஒருமித்து சுதந்திர தீபத்தை ஏற்றினார்கள். அந்த நால்வரும் தீவின் நான்கு பிரதான சமூகங்களான – சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் இனத்தை சேர்ந்தவாகளாக இருந்தார்கள். அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய கீதம் இல்லாதபடியால் “யச மகிமா” மற்றும் “நமோ நமோ மாதா” ஆகிய இரண்டுமே தேசியப் பாடல்களாக அந்த வைபவத்தில் பாடப்பட்டன. அந்த இரண்டு பாடல்களின் உத்தியோகப் பற்றற்ற தமிழ் பதிப்பும கூட அங்கு பாடப்பட்டது. தேசியப் பாடல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்படும் என்றும் அங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சமூகங்களை இணைத்துச் செயற்படும் சூழ்நிலை நிலவியது.

“நமோ நமோ மாதா”

1950 ல் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தனா, பரவலான புகழ பெற்ற ஆனந்த சமரக்கோன் அவர்களால் எழுதப்பட்ட “நமோ நமோ மாதா” என்கிற பாடல் முறைப்படி உத்தியோகபூர்வ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஒரு அமைச்சரவை பத்திரத்தைச் சமர்ப்பித்தார். பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்கா, இந்த விடயத்தில் இறுதி முடிவு செய்வதற்காக ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை பொது நிர்வாக மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சேர்.ஈ.ஏ.பி விஜேரட்னவின் தலைமையில் நியமித்தார். விஜேரட்ன தலைமை தாங்கிய குழு “நமோ நமோ மாதா” மற்றும் சில பாடல்களை கருத்தில் எடுத்து ஆராய்ந்த பின்னர் சமரக்கோனின் பாடல்தான் தேசிய கீதமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தது. 1951 ஆகஸ்ட்டில் சேர்.விஜேரட்ன, “நமோ நமோ மாதா” என்கிற பாடல்தான் தேசிய கீதமாக இருக்கவேண்டும் என்கிற அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். அது அமைச்சரவையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் 22, 1951ல் முறைப்படி பின்பற்றப்பட்டது. பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க, பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பும் முறைப்படி பின்பற்றப்படும் என அப்போது அறிவித்தார்.

சேர். ஈஏபி விஜேரட்ன தலைமையிலான தெரிவுக்குழு, தேசிய கீதத்திற்கு ஒரு உண்மையான தமிழ் பதிப்பும் இருக்கவேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது. கொழும்பு சஹிராக் கல்லூரியில் ஒரு ஆசிரியராக இருந்த தமிழ் கல்விமானாகிய பண்டிதமணி எம்.நல்லதம்பி அவர்களிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டு தெளிவான ஒரு மொழிபெயர்ப்பும் இயற்றப்பட்டது. தமிழ் பதிப்பும் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் விரிவாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம் கிடைத்த நான்கு ஆண்டுகளின் பின்னர் 4 பெப்ரவரி,1952ல் “நமோ நமோ மாதா” பாடல் உத்தியோகபூர்வ தேசிய கீதமாக சுதந்திர தின விழாக்களில் பாடப்பட்டது. அதன் தமிழ் பதிப்பான “நமோ நமோ தாயே” என்பதும் யாழ்ப்பாணம், வவுனியா,மன்னார், திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு கச்சேரிகளில் சுதந்திர தினம் தொடர்பான நிகழ்வுகளில் பாடப்பட்டது. பொருத்தமான மொழி பெயர்ப்பு கிடைத்திருந்ததால் ஸ்ரீலங்காத் தமிழர்கள் தேசிய கீதத்தை உணர்ச்சிபூர்வமாகவும் மற்றும் உற்சாகத்துடனும் தங்கள் தாய்மொழியில் பாடினார்கள்.

1954ல் பிரதமராக இருந்த சேர்.ஜோண் கொத்தலாவல யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பிரதமரை பாராட்டிக் கௌரவிக்கும் விழாவின்போது தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பு பாடப்பட்டது. மார்ச் 12,1952ல் அரசாங்கம் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் “நமோ நமோ மாதா” தான் தேசிய கீதம் என்று பெரிய அளவில் விளம்பரங்களைப் பிரசுரித்தது. அதன் சிங்கள மற்றும் தமிழ் வார்த்தைகள் முறையே சிங்களம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்த அதேவேளை ஆங்கிலப் பத்திரிகைகளில் சிங்கள வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பிரசுரமாகியிருந்தது.

இப்போது நமோ நமோ மாதா உத்தியோகபூர்வ தேசிய கீதமாகப் பாடப்பட்டு வரும் அதேவேளை அன்று அதன் மெட்டிலோ அல்லது பாடும் விதத்திலோ ஒரு ஒழுங்கு இருக்கவில்லை. பல்வேறு பாடகர் குழுவும் அதைப் பல்வேறு வழிகளில் பாடினார்கள். இது அதிக குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே தேசிய கீதத்தை பாடுவதில் ஒரு ஒழுங்கமைப்பை உறுதிப் படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்தது. 1953ல் பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினரிடையே ஆனந்த சமரக்கோன் அவர்களும், தேவர் சூரியசேன மற்றும் ஜேடிஏ பெரேரா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்பதற்கான வழிகாட்டி நெறிகளை அமைத்ததுடன் மேலும் அதற்கு சரியான ஒரு மெட்டினையும் வரையறை செய்தது. அதற்கான மெல்லிசையானது சமரக்கோன் அவர்களால் இசையமைக்கப்பட்ட அசல் மெட்டில் இருந்து பகுத்தெடுக்கப்பட்டது.

(தொடரும்)