புரையோடிப்போயுள்ள பிரச்சினையின் தீர்வுக்கும் நிலையான சமாதானத்துக்கும் சரியான சந்தர்ப்பம்

13 03 2016

புரையோடிப்போயுள்ள பிரச்சினையின் தீர்வுக்கும் நிலையான சமாதானத்துக்கும் சரியான சந்தர்ப்பம்

"இன்னொரு அடுத்த தடவை என்றொன்று கிடையாது' இவ்வாறு துல்லியமாக, அண்மையில் சீத்தா ஜயவர்த்தன ஞாபகார்த்த உரை நிகழ்த்திய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிவைத்தார். இந்த சிறப்பான சுலோகத்தினை இந்த நாட்டில் நிலையான நல்லிணக்கம், சமாதானம் மற்றும் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு இறைமையுள்ள குடிமகனும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக, மீண்டும் வேதாளம் முருங்கையில் என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருட நிறைவை நினைவு கூருமுகமாக உரையாற்றுகையில் அடிக்கடி கூறப்பட்டு வரும் கடந்த கால நிகழ்வுகள் இரண்டினை அவர் சற்று கவலையோடு கூறிவைத்தார். அதாவது, பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் (1958) அல்லது டட்லி செல்வநாயகம் ஒப்பந்தமானது (1965) நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒரு பிரபாகரன் களத்தில் இறங்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்பதாகும். குறித்த 2 ஒப்பந்தங்களும் இரு சிங்கள தலைவர்களாலும் ஒரு தலைப்பட்சமாகவே கிழித்தெறியப்பட்டன. தமிழர் வெறுப்புணர்வு கொண்ட சிங்கள அதிதீவிரவாதிகளுக்கு அடிபணிந்தே அவர்கள் பின்வாங்கினர். எனவே, நாடு சுதந்திரமடைந்து 3 தசாப்தங்களுக்கு மேலாக நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வந்த ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான அரசாங்கங்களே பின்வரும் விளைவுகளுக்கு பொறுப்பாளிகள் என்பது வரலாறு:

தமிழர் வேறு வழியின்றி தனி நாட்டுக் கோரிக்கையினை முன்வைப்பதற்கு தள்ளப்பட்டமை, தொடர்ச்சியான அடக்கு முறையும் காலத்துக்குக் காலம் தமிழருக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்களும். யுத்தம் வெடித்து, பெருவாரியான உயிர், உடைமை அழிப்புகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பாரிய பின்னடைவும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்; "உதயன்' இதழுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில் (24.01.2016) கடந்த கால எல்லா அரசாங்கங்களும் இழைத்த வரலாற்று ரீதியான தவறுகளை அகற்றிவிடுவதோடு தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று கூறிவைத்தார். பரந்து பட்ட சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல என்று அவர் கூறியுள்ளது உண்மை தான். அதே வேளை, சிங்கள தலைவர்கள் தமது சொந்த வாக்கு வங்கி நலன்களுக்காக ஒட்டுமொத்தமான சிங்கள மக்கள் மத்தியில் தேசிய மட்டத்திலான பிரதான பிரச்சினைகளை எடுத்து விளக்குவதில்லை என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தான் ஆட்சி செய்த காலத்தில் உத்தேசித்த அளவிலானது போன்ற தீர்வை, (இன்று பிரபாகரனும் மறைந்து யுத்தமும் முற்றுப்பெற்று விட்ட நிலையில்) தமிழர் எதிர்பார்க்க முடியாதென்றும் சற்று இலாவகமாக கூறிவைத்துள்ளார். பிரச்சினைக்கான வரலாற்று பின்புலம் கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதாவது, 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் இயற்றப்பட்ட காலம் முதல் தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட பாராபட்சங்கள் அத்தோடு தொடர்ச்சியான பயங்கர அடக்கு முறைகளின் ஒட்டு மொத்த விளைவாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது என்பதை ஏன் அனேகமாக எல்லா சிங்களத் தலைவர்களும் சிங்கள அரசியல் ஆய்வாளர்களும் இலகுவாக மறந்து விடுகின்றார்கள் என்பது புரியாத புதிராயுள்ளது.

இறைமை

நாட்டின் இறைமையான அனைத்து மக்களுக்குமே உரித்தானது என்பது இயல்பானதும் மறுத்துரைக்க முடியாததும் ஆகும். உயிர் வாழும் உரிமை, சமத்துவம், சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பு இவையாவும் தான் ஜனநாயகத்தின் ஆணி வேராகும். இந்த வகையில் சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் இவற்றை இடையறாது பேணிப்பாதுகாப்பது அரசாங்கத்தின் கடப்பாடாகும். ஆக, 1956ல் சிங்களம் மட்டும் சட்டம் காரணமாகத்தான் இரு தசாப்தங்கள் காத்திருந்த பின் தனி நாட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவும் அதனைத் தொடர்ந்து வந்த யுத்தமும் அரசினால் உருவாக்கப் பட்டவையாகும். இது தொடர்பாக, "அவசரகாலம் 58 இலங்கையின் இனக்கலவரம் தொடர்பான தொகுப்பு' என்ற நூலில் தார்சி வித்தாச்சி கூறிவைத்துள்ளதைப் பார்ப்போம். தமிழருக்கு எதிராக கண்மூடித்தனமாக தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டதோடு அவர்களை வடக்குக்கும் கிழக்குக்கும கப்பலேற்றிய விடயம் மனிதனால் மனிதனுக்கு விளைவித்த ஈனம் என்றும் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து போகும் நிலைமை வந்து விட்டதா, என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சம்பந்தப்பட்ட ஏனையோர்களாலும் வித்தாச்சியின் நூல் கட்டாயம் படிக்கப்பட வேண்டும் என்பது எனது ஆணித்தரமான ஆலோனையாகும்.

ஒற்றையாட்சி

1972 அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டது போலவே, இலங்கை ஒரு ஒற்றையாட்சிக் கட்டமைப்பாக விளங்குமென இன்றைய தேசிய ஒற்றுமை அரசாங்க தலைவர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. அதே நேரம் பௌத்தம் அதி முதன்மை ஸ்தானத்தில் உயர்த்தி வைக்கப்படும். 1990 களில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா நாட்டுக்குத் தேவையென்னவென்றால் ஒற்றுமை ஒழிய ஒற்றையாட்சி அல்ல என்று கூறிவைத்தார். ஒற்றையாட்சி முறைமையானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல, அதே போல் சிங்கள மக்களைப் பொறுத்தவரை சம்ஷ்டி முறைமை ஏற்க முடியாத பிரிவினை வாதம் என்பதாகும். ஏனென்றால் சமஷ்டி ஆட்சி முறைமையானது பிரிவினையே ஒழிய வேறல்ல என்ற சிங்க மக்கள் மத்தியில் செய்யப்பட்டு வந்த தவறான பிரசாரம் சிங்கள மக்கள் மனங்களில் ஆளப்பதிந்துள்ளது. ஒற்றையாட்சி என்பது பிரிக்க முடியாத என்ற வியாக்கியானம் சில அரசியலமைப்பு சட்டவல்லுனர்களால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒற்றையாட்சி என்பதற்கு வேறு விதமான அர்த்தமும் இருக்கிறதாயினும் அது யாது என்பதில் இணக்கப்பாடு இல்லை என்றும் கூறப்படுவதாக அரசியலமைப்பு நிபுணர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கூட கூறியுள்ளதைக் காணலாம். (டெயிலி மிரர். 20.01.2016)

இதனிடையில் "ஒற்றையாட்சி' கட்டமைப்பு முறைமையும் அதனோடிணைந்து பௌத்தத்துக்கு அதிபிரதான ஸ்தானம் என்று வரும் போது அது சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்திற்கு வலுவூட்டுவதற்கு நிகரானது என்பது யதார்த்தமாயுள்ளது. ஒற்றையாட்சி முறைமையின் கீழ் கணிசமானளவு அதிகாரப்பகிர்வுக்கு இடமுண்டு என்பதை அத்தாட்சிப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் குறிப்பாக ஸ்கொத்லாந்தை உதாரணமாக காட்டுவதுண்டு. ஸ்கொட்லாந்துக்கென தனியான பாராளுமன்றம் மட்டுமல்லாமல் .கிரிக்கற் குழுவும் இருக்கின்றது என்றும் எடுத்துக் காட்டுவதுண்டு. அடுத்ததாக ஒற்றையாட்சியா, சமஷ்டியா என்ற அடையாளங்கள் அவசியமற்றது என்றும் சில அரசியலமைப்பு நிபுணர்களால் கூறப்படுகிறது. அதாவது, எவ்வாறானதும் எவ்வளவானதுமான அதிகாரம் பகிரப்படுகிறது என்பது தான் அவசியமாகும் என்று விளக்கமளிக்கப்படுகிறது. அப்படியென்றால் ஒற்றையாட்சி என்ற அடையாளம் எதற்காக என்ற கேள்வி எழுகிறது.

சம்பந்தன் என்ன கூறியுள்ளார்?

த.தே.கூ. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தன் அண்மைய நாட்களில் கூறிவைத்துள்ளதைப்பார்ப்போம் புதிய அரசியலமைப்பானது தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியானதொரு தீர்வைக் கொண்டதாயிருக்க வேண்டிய தோடு எல்லோரும் அதற்கு அவசியமான ஒத்துழைப்பினை நல்க வேண்டும். முன்பு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புகள் அனைத்து மக்களினதும் கருத்துக்கள் உள்வாங்கப்படாது இணக்கப்பாட்டினைப் பெற்றுக் கொள்ளாது. ஒரு தலைப்பட்சமாகவும் எதேச்சாதிகாரமாகவும் இயற்றப்பட்டதாலேயே நாடு பெரிய நெருக்கடிக்கும் பின்னடைவுக்கும் ஆளாக்கப்பட்டு வந்துள்ளது. நாடு பல வருடங்கள் பின்னோக்கி நகர்ந்துள்ளது. தமிழ் மக்கள் படுமோசமான இன்னல்களை அனுபவித்துள்ளனர். புதிய அரசியலமைப்பின் ஊடாக பிளவு படாத நாடு ஒன்றுக்குள் நிலையானதொரு தீர்வு காணப்படும் என நாம் நம்புகின்றோம்.

சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, "எல்லா மக்களும் கைகோர்த்து "நான் ஒரு இலங்கையன் இது எனது நாடு' என்று பெருமையோடு பேச வேண்டும். அவ்வாறாகவே மக்களின் இறைமை; போற்றிப் பேணப்படும் என்பதாகும். எனவே, 6 தசாப்தங்களாக நாட்டை உலுக்கி வந்துள்ள தமிழ் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டியதே இன்று தவிர்க்கக் கூடாத தேவையாயுள்ளது. - 

thinkkural.lk 24 202 2016