நீ செய்த தவறுக்கு.! எனக்கு ஏன் மரணதண்டனை.?

20  03 2016

நீ செய்த தவறுக்கு.! எனக்கு ஏன் மரணதண்டனை.?

சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத்தேடி தினம் எனது விடியல் அமைகிறது. கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது. எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய சம்பளப் பணம் அனைத்தையும் செலவிட்டார். அம்மா தான் வீடுகளில் கூலிவேலை செய்து என்னை வளர்த்து வந்தாள். இதுமாத்திரமின்றி, பாடசாலைகளுக்கருகே அச்சாறு விற்றும் வந்தார். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அச்சாறு விற்கச்சென்ற வேளை விபத்தொன்றில் சிக்கி அம்மா இறந்துவிட்டாள்.

அதற்கு பின்னர் அப்பா என்னைக் கவனித்துக்கொள்வதற்காக அம்மாவின் தங்கையை அழைத்து வந்தார். சித்தியின் கணவரும் அவரை விட்டு பிரிந்து சென்றிருந்தார். சித்தி தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டுக்கு வந்தார். அதற்கு பின்னர் இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தார். சித்தியின் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்காக எனது கல்வியை பாதியில் இடைநிறுத்திக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. சித்தி தன் பிள்ளைகளை எனது பொறுப்பில் விட்டு அவரும் வேலைக்குச் சென்றார். சித்தியின் நான்கு பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சிறிய வயதிலேயே என் தலைமீது விழுந்தது.

இவ்வளவு நடந்தும் அப்பா குடியை விடவில்லை. எனக்கு பதினைந்து வயதான நிலையில் அனைத்து வீட்டுவேலைகளையும் நானே செய்ய வேண்டியேற்பட்டது. இது எல்லாவற்றிற்கு மேலாக சித்தியின் பேச்சுக்களையும் தந்தை குடித்துவிட்டு வந்து செய்யும் அட்டகாசங்களையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

வீட்டில் நான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களையும் நரக வேதனையுடனே கழித்தேன். இதிலிருந்து விடியல் கிட்டாதா? என்று எண்ணியிருந்த சந்தர்ப்பத்தில் தான் சமனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் எங்கள் வீட்டிற்கு அருகே தான் இருந்தார். நான் தேடிய விடியல், சுதந்திரம், அன்பு, பாசம் எல்லாமே அவரிடமிருந்து கிடைக்கும் என நம்பினேன். காலப்போக்கில் நமது நட்பு காதலாக மாறியது. அவரிடம் நான் தூய்மையான அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன் ஆதலால் அவர் என்ன வேலை செய்கிறார் என்று கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை.

வீட்டுப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே, நான் சமனுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்துவிட்டேன். அதற்கு பிறகு நான் சமனுடன் கழித்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் சுவர்க்கத்தில் இருப்பதாய் உணர்ந்தேன். சமன் எனக்கு உடுத்துவதற்கு நல்ல உடைகளை வாங்கித்தந்தார். குறையேதும் சொல்ல முடியாதபடி என்னைப் பார்த்துக்கொண்டார். காலப்போக்கில் சமன் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர் என அறிந்துகொண்டேன். இந்தத்தொழிலை விட்டுவிடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். பயனில்லை. ஒரு சமயம் பொலிஸாருக்கு பயந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்தபோது எதிரே வந்த கனரகவாகனத்தில் மோதி உயிரிழந்தார்.

எனக்கோ தலைசுற்றுவது போலிருந்தது. வாழ்க்கையில் நான் ஏங்கித்தவித்தவை சமன் மூலம் கிட்டியது. அவையும் நிலைக்கவில்லையே.. கடவுளே உனக்கு ஈவு இரக்கமே இல்லையா? என் அன்புத் தாயையும் அழைத்துக்கொண்டாய். என் உயிருக்கு உயிரான சமனையும் அழைத்துக்கொண்டாயே என்று கடவுளை திட்டித் தீர்த்துக் கொண்டேன்.

அதற்கு பிறகு என்ன செய்வதென்று புரியவில்லை. மீண்டும் சித்தியிடம் தஞ்சமடையவும் மனமில்லை. சமனின் எஜமான் அவரின் இறுதிக் கிரியைகளுக்கான அனைத்தை செலவையும் ஏற்றுக்கொண்டார். யாருமில்லாமல் தவித்த எனக்கு சமனின் எஜமான் அடைக்கலமளித்து பராமரித்து வந்தார். அந்த வேளையில்தான் சரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. எஜமானரும் என்னை சரத்துடன் சேர்த்துவைத்தார். நாங்கள் புதுவாழ்க்கையை ஆரம்பித்தோம். எனது வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசியது. அதுவும் கடவுளுக்கு பொறுக்கவில்லை. எனக்கு அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. சரத் தன் எஜமானிக்கு பாதுகாவலராக செயற்பட்டு வந்தார்.

திடீரென்று ஒருநாள் போதைப் பொருட்களுடன் சரத் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். நீதிமன்றத்தில் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. சரத் சிறை சென்ற சில நாட்களில் நான் கர்ப்பமடைந்தேன். இந்த சந்தோஷத்தை யாரிடம் கூறி பகிர்ந்துகொள்வதென்றே தெரியவில்லை. . குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையிலும் நான் இல்லை. சரத்தின் எஜமானிடம் சென்று எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை எனக்கூறி அழுதேன் அவரும் புரிந்துகொண்டார். எஜமானர் மூலமாக கொழும்பின் ஒரு பகுதியில் வைத்து கருக்கலைப்பு செய்துகொண்டேன். அதற்கு பின்னர் எஜமான் என்னை அவருக்கு தெரிந்த பெண்ணொருவருக்கு விற்று விட்டார். அவர் இவ்வாறு செய்வார் என்று நான் சற்றும் நினைக்கவில்லை.

அதற்கு பிறகு ஒவ்வொரு இரவையும் விலைமாதுவாக கழிக்க வேண்டியதாக இருந்தது. எனக்கு இருபத்து நான்கு வயதாகும் வரை அந்தப் பெண்மணியின் கீழ் தொழில்புரிந்து வந்தேன். அதன் போது நான் அவருடன் சண்டைபிடித்துவிட்டு அங்கிருந்து தெரிந்த ஒருவர் மூலம் மசாஜ் நிலையமொன்றுக்கு பணிக்கு வந்தேன். வெளியிலிருந்து பார்ப்போருக்கு தான் அது மசாஜ் நிலையம். ஆனால், உள்ளே வந்து பார்த்த பிறகுதான் மசாஜ் நிலையத்தின் சுயரூபம் தெரியும். இந்த மசாஜ் நிலையம் பகலில் மசாஜ் செய்யும் நிலையமாகவும் இரவில் விலைமாதுக்களை விற்பனை செய்யும் இடமாகவும் இரகசியமாக செயற்பட்டு வந்தது.

இங்கு வந்ததன் பின்னர் நான் நிறைய பணம் சம்பாதித்தேன். காலப்போக்கில் போதைவஸ்துக்கும் அடிமையாகினேன். நான் சம்பாதித்த பணம் போதைவஸ்து வாங்குவதில் கரைந்து போனது. எதிர்காலத்திற்காக நான் சேமித்து வைத்திருந்த பணமும் தீர்ந்துபோனது. இவ்வாறு காலம் கழித்துக் கொண்டிருந்தபோது தான் நிலந்தவை சந்தித்தேன். அவருடன் பழகியவேளை போதைவஸ்து பாவனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன். எனக்கும் அவருக்குமிடையில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

நிலந்தவிற்கு பணம் மிகப்பெரிய தேவையாக இருந்தது.

ஆனால், ஏன் எதற்காக என்று தெரியவில்லை. அவருடன் நெருக்கமான உறவைப் பேணிவந்ததால் நான் கருவுற்றேன். இதுபற்றி நான் அவரிடம் கூறிய போது அவர் கூறிய பதில் என்தலையில் இடி விழுவது போலிருந்தது. "இந்தக் குழந்தைக்கு நான் தகப்பன் கிடையாது. என்னால் அதற்கு பொறுப்பேற்கவும் முடியாது. இதற்கு பின்னர் நீ தொடர்ந்து என்னுடன் சேர்ந்து வாழவேண்டுமேன்றால் கருக்கலைப்பு செய்ய வேண்டும்" என கடுமையாக கூறிவிட்டார்.

ஆனால், அந்த நேரம் கருக்கலைப்பு கட்டத்தை நான் தாண்டி விட்டேன். இனி கருக்கலைப்பு செய்ய முடியாது என்று வைத்தியர் கூறிவிட்டார் என்று எனது நிலையையும் அவரிடம் கூறினேன். ஆனால், அவற்றை அவர் கேட்பதாக இல்லை. அவர் என்னை மன்னிப்பதாகவும் இல்லை. அவர் அடிக்கொருமுறை இது வேறொருவருடைய குழந்தை என்று என்னை காயப்படுத்திக்கொண்டே இருந்தார்.

நானும் ஆரம்பத்தில் குழந்தையைப் பெற்றவுடன் யாருக்காவது வளர்க்க கொடுத்து விடுவோமென்று தான் நினைத்திருந்தேன். ஐந்து வயதிலிருந்து சித்தியின் பிள்ளைகளை வளர்க்க நான் பட்ட வேதனைகள் தொடர்ந்து அடிக்கடி என் மனதில் எழுந்து வந்தன. இதுவே காலப்போக்கில் ரணமாக மாறி மிருகமாக மாறிப்போனேன். நான் இவ்வாறு மாறியதை என்னாலேயே நம்ப முடியவில்லை.

வீட்டில் வைத்து யாருமில்லாத சந்தர்ப்பத்தில் எனக்கு பிரசவ வலி வந்தது. உதவிக்கு கூட யாருமில்லை. வீட்டில் வைத்தே என் குழந்தையை பிரசவித்தேன். என் குழந்தை முகத்தை பார்க்கும் வரையிலிருந்த பாசம் முகத்தை பார்த்த பின்னர் மாறிப்போனது. ஒரு பக்கம் நிலந்த "இது என் குழந்தையல்ல எனக் கூறியது, மறுபக்கம் சித்தியின் கொடுமைகள் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ஆட்டிப்படைக்க, பிறந்த என் பச்சிளம் பாலகனை என் கைகளாலேயே துடிக்கத்துடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்.

கொலை செய்த வேகத்தில் நான் வாங்கி வைத்திருந்த போதை வஸ்துக்கள் அனைத்தையும் உண்டு மயங்கிப்போனேன். அதற்குபிறகு பொலிஸார் என்னைக் கைது செய்தனர். கைவிலங்குகளே இறுதியில் எனக்கு வளையல்களாக மாறிப்போயின. சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல் ?

virakesari.lk 20 03 2016