தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 13)

06 04 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 13) தனிச் சிங்கள' சட்ட அமுலாக்கத்துக்கெதிரான அஹிம்சைவழி போராட்டம்

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தின் பிரவேசம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், குடியியல் மறுப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 'தமிழரசு தபால் சேவையைத்' தொடங்கியமை கொழும்பில் அரசாங்கத்துக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. அன்றைய கனிஷ்ட பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க படைத் தளபதிகளுடனும், நீதியமைச்சர் சாம் பி.ஸி.பெர்ணான்டோவுடனும் கலந்தாலோசித்துவிட்டு உடனடியாக 1961 ஏப்ரல் 15ல், 15 இராணுவ அதிகாரிகள் தலைமையில் 300 இராணுவ வீரர்களை விசேட புகையிரதமொன்றில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தனர். ஏப்ரல் 17ஆம் திகதி, ஆளுநர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். அன்றைய தினமே விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினூடாக பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கை தமிழரசுக் கட்சியையும், ஜாதிக விமுக்தி பெரமுணவையும் தடைசெய்தார்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் சகல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தடைசெய்யப்பட்டதுடன், ஊரடங்கும் அமுலப்படுத்தப்பட்டது.அத்துடன் தணிக்கை முறையும் அமுலுக்குகொண்டுவரப்பட்டது. இலங்கையின் அன்றைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் வின்ஸ்ட்டன் விஜேக்கோன் யாழ்.நகர் விரைந்து, அங்கு முகாமிட்ட படைகளுக்கு தானே நேரடியாகத் தலைமையேற்றார். இந்த இராணுவ நடவடிக்கைகள் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு எதிராகவோ. வன்முறையாளர்களுக்கு எதிராகவோ எடுக்கப்பட்டதல்ல மாறாக அறவழியில், அஹிம்சைவழியில், காந்திய வழியில் தமது பிறப்புரிமையை காப்பாற்றிக்கொள்வதற்காக ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் போராடியவர்கள் மீது ஏவப்பட்டிருந்தன.தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கெதிராக, அவர்களின் ஜனநாயகவழிப் போராட்டத்தை அந்நாட்டின் அரசாங்கம் இராணுவங்கொண்டு அடக்க விளைவதானது எவ்வகையில் நியாயமானதாகும்?

இந்நிலையில், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தேசத்துக்கு உரையொன்றை நிகழ்த்தினார். அதில் பெரும்பான்மையான அவசரகால நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடத்தும் பிரதேசங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னதோடு மக்களை அமைதியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் சமஷ்டிக் கட்சியின் (தமிழரசுக் கட்சியின்) கோரிக்கைகள் நியாயமானவை அல்ல எனவும், சமஷ்டிக் கட்சியினர் தமக்கென தனியானதொரு தபால் சேவையையும், பொலிஸ் சேவையையும் ஆரம்பித்துள்ளனர் எனவும், அத்தோடு கச்சேரிகளை ஸ்தாபித்து அரச காணிகளை தமது ஆதரவாளர்களுக்கு வழங்கவுள்ளார்கள் எனவும், இத்தகைய நடவடிக்கைகளால் சமஷ்டிக்கட்சி சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்நாட்டின் அரசாங்கத்தை எதிர்க்கிறதென்றும், தனிநாடொன்று அமைக்கும் நோக்கில் செயற்படுகிறதென்றும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தனது பேச்சில் குறிப்பிட்டார். 

பிரதமர் தனது பேச்சில், தனியான பொலிஸ், அரச காணிகளை ஆதரவாளர்களுக்கு வழங்குதல், தனிநாடு என்ற அம்சங்களை முன்னிறுத்திப் பேசியமை பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் தமிழர்கள் மீதான சந்தேகம், வெறுப்பு என்பவற்றை விளைவிப்பதாகவே இருந்தது. தமது பிறப்புரிமையை மறுக்கும் அரசாங்கத்தின் பேரினவாதச் சட்டத்துக்கெதிரான போராட்டத்தை இந்த நாட்டின் அரசாங்கத்துக்கெதிரான போராட்டமாகச் சித்தரித்தன் வாயிலாகவும், அதனை இராணுவங்கொண்டு அடக்க முனைந்ததன் மூலமும் இன முறுகலை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவதை விடுத்து, அதற்கு உரம்போடும் செயலையே அரசாங்கம் செய்தது.

'வரலாற்றுத் தவறு' என்ற சொற்றொடருக்கு இது ஒரு முக்கிய உதாரணம். இதுபற்றி பின்னர் தனது நூலொன்றில் எழுதிய அன்டன் பாலசிங்கம், 'அடக்குமுறையாளனின் வன்முறை, அடக்கப்படுபவனின் அஹிம்சையை அமைதியாக்கியது. இந்த வரலாற்றுச் சம்பவம் தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான முக்கிய அரசியல் அனுபவம் ஒன்றை உணர்த்தியது. எந்தவித மனிதத்தன்மையும், நாகரிகமும், நெறிமுறைகளுமற்ற இனவெறி கொண்ட அடக்குமுறையாளனின் இராணுவபலத்துக்கு, அடக்கப்படுபவனின் அஹிம்சையினால் ஈடுகொடுக்க முடியாது என்ற பாடத்தை தமிழ் மக்கள் அனுபவரீதியாக உணர்ந்துகொண்டார்கள். துப்பாக்கிகளுக்கு முன்னால் தமிழ் மக்களின் அஹிம்சை பலமும், வீரியமுமற்றதொரு கட்டமைப்பாக இருந்தது' என்று குறிப்பிடுகிறார்.

30 ஆண்டுகால யுத்தம் பற்றி பேசுபவர்கள், தமிழ் பயங்கரவாதம் பற்றி பேசுபவர்கள் அதன் ஆரம்பத்தை, அதன் தோற்றுவாயைப் பற்றி பேசுவதில்லை, யோசிப்பதில்லை. முளையிலேயே களைந்திருக்க வேண்டிய இனப்பிரச்சினையை, குறுகிய அரசியல் இலாபங்களுக்கும், இனவாத வாக்குவங்கி அரசியலுக்குமாக உரமேற்றி வளர்த்து இந்நாட்டையும், நாட்டு மக்களையும் படுகுழிக்குள் தள்ளிய வரலாற்றுத்தவறை நாம் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைமைகள் கேட்ட குறைந்தபட்ச மொழியுரிமைச் சமரசங்களையாவது அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்திருக்குமானால், இலங்கையின் வரலாறு மாற்றியெழுதப்பட்டிருக்கும்.

1961, ஏப்ரல் 18இல் இராணுவம் அறவழியில் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக்கட்சித் தொண்டர்களை கடுமமையாகத் தாக்கி, போராட்டத்தைக் கலைத்தது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு என வடக்கு-கிழக்கு எங்கும் இடம்பெற்ற அஹிம்சைவழி சத்தியாக்கிரக போராட்டங்கள், குடியியல் மறுப்புப் போராட்டங்கள் என்பன இராணுவபலம் கொண்டு கலைக்கப்பட்டன. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமது மண்ணில் இராணுவம் புகுந்து தம்மைத் தாக்கியமை அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த என்.க்யூ.டயஸின் உத்தரவின் படி, அவசரகாலச் சட்டத்தின் கீழ், அறவழியில் போராடிய தமிழ்த்தலைவர்கள் 90 பேர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார்கள். சா.ஜே.வே.செல்வநாயகம் உட்பட கைதுசெய்யப்பட்ட 90 பேரும் பனாகொட இராணுவப் படைநிலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். ஏறக்குறைய 6 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட தமிழ்த்தலைவர்கள், 1961 ஒக்டோபர் 4ல் விடுவிக்கப்பட்டார்கள்.

பொதுத் தொழிற்சங்கங்களின் பிளவும், தமிழ் தொழிற்சங்கங்களின் உருவாக்கமும்

';தனிச்சிங்களச்' சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புக்காட்டியது. இதேவேளை, தமிழ்த் தலைமைகள் தொடர்ந்தும் 'தனிச்சிங்களச்' சட்டத்தை கடுமையாக எதிர்த்ததுடன், தமிழ் அரச உத்தியோகத்தர்களை சிங்களம் கற்க வேண்டாம் எனவும், சிங்களத்தில் பணிபுரிய வேண்டாம் எனவும் வலியுறுத்தின. 1961 டிசெம்பரில், பிரதமர் ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் திறைசேரி சுற்றுநிருபம் இல.560 இனூடாக 1956ன் பின்னர் நியமனம் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது பதவிகளில் நீடிப்பதற்கும், வருடாந்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கும், பதவி உயர்வைப் பெறுவதற்கும் உத்தியோகபூர்வ மொழியில் (அதாவது சிங்கள மொழியில்) குறைந்தபட்ச தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும் என அறிவித்தது. தமிழ் அரச உத்தியோகத்தர்களை சிங்கள மொழியில் குறைந்தபட்ச தேர்ச்சியைப் பெற வைக்கும் முகமாகவும், அதன் மூலம் தமிழ்த்தலைமைகளின் கோரிக்கையை அர்த்தமற்றதாக்குவதும் என சூட்சுமங்கள் நிறைந்ததாக அந்த அறிவிப்பு இருந்தது.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு என்பவற்றைக் காட்டி தமிழ் உத்தியோகத்தர்களை சிங்கள மொழித் தேர்ச்சி பெற வைத்து, 'தனிச் சிங்களச்' சட்டத்தை தமிழரிடையேயும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலாம் என்பது ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் திட்டம். அவர்கள் புரிந்துகொள்ளாத ஒரு விடயம், சிங்களவர்களுக்கு சிங்களம் எப்படியோ, அதுபோலவேதான் தமிழர்களுக்கு தமிழும் என்பது. 'சிங்கள தேசத்தின் உயிர்க்குருதி சிங்கள மொழி' என்று சிங்களத் தலைவர்கள் கர்ஜித்த வேளையில், தமிழர்களுக்கும் தமிழ்மொழி அவ்வாறானதொன்றே என்பதை அவர்களை புரிந்துகொள்ளாததுதான் இலங்கை இனப்பிரச்சினையின் மூலவேர் ஆகிறது.

அன்றைய காலகட்டத்தில் பலம்பொருந்திய தொழிற்சங்கங்களுள் ஒன்றாக பொது எழுவினைஞர் சேவை ஒன்றியம் காணப்பட்டது. தமிழ் அரச சேவையாளர்கள் பலருக்கும், சிங்கள மொழியில் தேர்ச்சிபெற ஆறுமாதகால அவகாசம் வழங்கும் அறிவிப்பை அரசாங்கம் வழங்கியது.தேர்ச்சி பெறாத பட்சத்தில் தமது பதவிகளை இழக்கும் நிலையை அவர்கள் எதிர்கொண்டனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அவர்களை ஆதரித்துக்காக்க வேண்டிய தொழிற்சங்கம் அமைதியாக இருந்தது. சிங்கள அரச சேவையாளர்கள் 'தனிச்சிங்களச்' சட்டத்தை தமக்கு சாதகமான ஒன்றாகப் பார்த்தார்கள் அதனால் அச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரச சேவையாளர்களுக்காக குரல் கொடுக்க அவர்கள் முன்வரவில்லை.

தொழிலாளர் வர்க்கத்தை, இனவாதம் வெற்றிகரமாக இருகூறிட்டது. 1959லேயே சில அரச உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து அரசாங்க சேவையர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர். 1956 'தனிச்சிங்களச்' சட்டத்தின் பின் என்றாவது ஒருநாள் தொழிற்சங்கங்கள் இனரீதியில் பிரிவடையும் என்பதற்கான முதல் சமிக்ஞையாக அது இருந்தது. 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்துக்கெதிரா, தமிழ் அரச சேவையாளர்களுக்கு ஆதரவான பொது எழுதுவினைஞர் சேவை ஒன்றியம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவ்வமைப்பிலிருந்து தமிழ் அரச சேவையாளர்கள் விலகி, அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர்.

மொழிவாரியாக அல்லது இனவாரியாக தோற்றம் பெற்ற முக்கிய தொழிற்சங்கமாக இது அமைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஒன்றரைத் தசாப்த காலத்தினுள் இன்னும் அதிகமான தமிழ் தொழிற்சங்கங்கள் உருவாகின. அரச கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், புகைவண்டிப் பகுதி ஊழியர் சங்கம், புகைவண்டிப் பகுதி எழுதுவினைஞர் சங்கம், அஞ்சல் எழுதுவினைஞர் சங்கம், தமிழ் ஆசிரியர் சங்கம், துறைமுக தொழிலாளர் கழகம், நெற்சந்தைப்படுத்தும் சபை ஊழியர் சங்கம், இலங்கைத் தொழிலாளர் கழகம் (பெருந்தோட்டத்துறை) என தமிழ் தொழிலாளர்கள் தமக்கான தொழிற்சங்கங்களை உருவாக்கினர். 1956ல் 'தனிச்சிங்களச்' சட்ட விவாதத்தின் போது கலாநிதி.கொல்வின் ஆர்.டி. சில்வா சொன்ன வார்த்தைகள் உண்மையாகிக்கொண்டிருந்தன: 'இரு மொழி, ஒரு தேசம்; ஒரு மொழி, இரு தேசம்'.

செல்லையா கோடீஸ்வரன், கே. சிவானந்தசுந்தரம், ஆர். பாலசுப்ரமணியம், ரி. சோமசுந்தரம், ஆடியபாதம், ஐயர் உள்ளிட்ட தமிழ் அரச சேவையாளர்கள் பலரும் பொது எழுதுவினைஞர் சேவை ஒன்றியத்திலிருந்து விலகி அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை உருவாக்கினர். செல்லையா கோடீஸ்வரன் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அரசாங்க எழுதுவினைஞரான செல்லையா கோடீஸ்வரன் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்தார். மேலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால் வருடாந்த ஊதிய உயர்வைத் தர மறுக்கும் ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 1961 டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்தையும், 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தையும் ('தனிச்சிங்களச்' சட்டம்) எதிர்த்து கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய முடிவெடுத்தார். இந்த வழக்கில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் க்யு.ஸீ, சீ. ரங்கநாதன் க்யு.ஸீ, சீ. நவரட்ணம் க்யு.ஸீ ஆகிய முன்னணி சட்டத்தரணிகள் ஆஜராகினர். 'கோடீஸ்வரன் வழக்கு' எனப் பிரபலமாக அறிப்பட்ட இவ்வழக்கு 'தனிச்சிங்களச்' சட்டத்துக்கெதிரான சட்டப் போராட்டமாக உருவாகியது.

yarl.com  23 11 2015