நல்லாட்சி அரசும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்

10 04 2016

நல்லாட்சி அரசும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை திறப்பு விழா வைபவத்தின் போது ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் அது மிகையல்ல. அதாவது, சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார். நாட்டில் நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு மற்றும் சுபிட்சம் தோன்றி நிலை பெறுவதற்கு, 26 வருட கால அழிவு யுத்தத்திற்கு இட்டுச்சென்ற அடிப்படைப் பிரச்சினைக்கு உறுதியான அரசியல் தீர்வு இன்றியமையாதது என்பதையே ஜனாதிபதி மைத்திரிபால வெகு தந்திரோபாயமாகக் கூறியுள்ளார்.

அதற்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு விரைவில் இயற்றப்படவுள்ள அரசியலமைப்பு பொருத்தமான கருவியாகக் கருதப்பட வேண்டும். புரையோடிப்போயுள்ள இந்தப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்று, குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதி எக்காரணம் கொண்டும் காப்பாற்றப்படாமல் விடக்கூடியதல்ல. இந்த வரலாற்றுப்பணியை நிறைவேற்ற விடாது, கொட்டிக்குழப்புவதற்கு இனவாத, இராணுவவாத சக்திகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கங்கணம்கட்டி நிற்பது கண்கூடு.

சாவகச்சேரி தற்கொலை அங்கி முதலியன இனவாதிகளின் வெறுவாய்க்கு அவல்

வெறுவாய்க்கு அவல் கிடைத்தது போலவே,சாவகச்சேரியில் கண்டு பிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் போன்ற சாதனங்கள் பயன் படுத்தப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ பெரிதும் கவலையடைந்துள்ளதாகக் காட்சியளித்து வருகின்றார். புலனாய்வு சேவைகள் செயலிழந்து விட்டால் நாடு கடினமானதொரு நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். அரசாங்கம் வாளாவிருக்காது உருப்படியாகச் செ யற்பட வேண்டும் என்று பேராதனையிலுள்ள கெற்றம்பே இராஜோபவனாராம விகாரையில் உரையாற்றும் போது ராஜபக்ஷ கூறியுள்ளார். சாவகச்சேரி சம்பவம் தொடர்பாக அவர் கூறியவை பற்றி இணையத்தளத்தில் பின்வருமாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; "இது நீங்களும் கோத்தாவும் தீட்டிய திட்டத்தின் மூலம் வெளியாகிய விடயமாகும். அதாவது, நல்லாட்சி அரசாங்கம் நாட்டை நன்றாக நடத்துவதற்கு வக்கற்று நிற்கிறது என்று சித்திரிப்பதே உங்களது நோக்கமாகும் மக்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.

ஆயுதப்படையினர் மீது அதீத அக்கறை உள்ளது என்று போகுமிடமெல்லாம் பறைசாற்றுவது மகிந்த ராஜபக்ஷவுக்கு கைவந்த கலையாகி விட்டது."ஏறத்தாழ அரைவாசி எண்ணிக்கையினர் சிரேஷ்ட புலனாய்வு சேவைப்பிரிவினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆகையால் கனிஷ்ட சேவையாளர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு தொடர்பு கொள்வதற்கு இயலாதுள்ளனர். இது மிகவும் ஆபத்தானதாகும். வடக்கில் வெடி மருந்துப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட விடயத்தை நான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். தான் அது தொடர்பாக கவனமெடுப்பதாக ஹெட்டியாராச்சி 03.04.2016ம் திகதி அனுராதபுரத்துக்கு அண்மித்த றம்பாவையில் பாதுகாப்புப் பிரிவினருக்கான சீருடை தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழா வைபவத்தின் போது உரையாற்றுகையில், “தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வரும் தருணத்தில அனைத்துத் தரவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அவசியமற்றதெனவும், பொருத்தமான நேரங்களிலேயே அது சாத்தியமாகும்“ என்றும் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் இராணுவத்தை வடக்கிலிருந்து வாபஸ்பெறக்கூடாது என்றும், அரசாங்கத்தின் கையா லாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக எனது ஆட்சியின் கீழ் பெருகியிருந்த ஊழல்கள் ஏற்படுத்திய விளைவு என்று சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் ராஜபக்ஷ, மைத்திரிரணில் அரசாங்கத்தை சீண்டியுள்ளார். குடும்ப ஆட்சி நடத்திய மகிந்த ராஜபக்ஷவின் சுடலை ஞானம். ஞானத்தால் நாம் நாட்டைப்பற்றியே சிந்திக்க வேண்டும். எம்மைப் பற்றியல்ல என்று மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். யுத்தத்தில் வெற்றியீட்டி, அவர் மார்தட்டிக் கொண்டாடினாரே தவிர யுத்தத்திற்கு இட்டுச் சென்ற அடிப்டைப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு நிஜமான சமாதானத்தை மலரச் செய்வதை விடுத்து, தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்குப் பேராசை கொண்டிருந்த ஒருவர் இவ்வாறான கருத்துகளைக் கூறுவது வேடிக்கையிலும் வேடிக்கையாய்யுள்ளது. இது சுடலை ஞானமே ஒழிய வேறல்ல.

சிகிரியாவில் இளைஞர் பெருவிழா

அண்மையில் சிகிரியாவில் நடத்தப்பட்ட "யொவுன்புர' என்றழைக்கப்பட்ட இளைஞர் பெருவிழாவில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக சிலர் சற்றுக் குறைத்து மதிப்பிடுவதாக அல்லது எள்ளி நகையாடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய சொற்பதங்களின் கருத்துகளைப்புரிந்து கொள்ளாதவர்களே இவ்வாறான எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும் மைத்திரிபால கூறிவைத்தார். இளைஞர்கள் தமது கனவுகளை நனவாக்குவதற்கு தாமே பாடுபட வேண்டும் என்று அவர் கூறிய அதேவேளை, தொழில் நுட்பவியல் துறையை தமது காட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமே ஒழிய அதற்கு அடிமையாகி விடக் கூடாதென்றும் அறிவுறுத்தினார். முகநூல் மற்றும் "ஸ்மாட்ஃபோன்' கலாசாரம் ஆக்கிரமித்து வரும் என்ற நிலைமையையே ஜனாதிபதி கருதியிருப்பார் எனலாம், மற்றும் பிரதமர் ரணில் தனதுரையில், இளைஞருக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று கூறியதோடு, தாம் அறிவிக்கவுள்ள நாட்டுக்கான அபிவிருத்தித் திட்டம் குறிப்பாக இளைஞருக்கே அதிக நன்மை பயக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மைத்திரிபால விக்ரமசிங்க அரசாங்கம் நடத்துவது நிச்சயமாக ராஜபக்ஷ நடத்திய எதேச்சாதிகார பாணியிலானதல்ல. என்றாறும் கூட, குறிப்பாக வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, அதாவது தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் 26 வருடகால அழிவு யுத்தம் நடந்த பிரதேசத்தில் நிஜமான சமாதான சூழல் உருவாகவில்லை, புலனாய்வுப்பிரிவினரின் கெடுபிடிகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன என்ற அங்கலாய்ப்புகள் மக்கள் மத்தியில் நீங்காத நிலையே காணப்படுகின்றன. இந்த நிலையைப் போக்குவதற்கு முக்கியமான 2 காரியங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்:

1. வடக்கு, கிழக்கில்; மிதமிஞ்சிய வகையில் நிலை கொண்டிருக்கும் ஆயுதப்படையினர் மேலும் காலதாமதமின்றி அகற்றப்பட வேண்டும். அவ்வாறாகவே, ஜூன் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் நிறைவேற்றி வைக்கப்படும் என்று சென்ற ஜனவரி மாதம் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி சாத்தியமாக்கப்பட முடியும்.

2. இயற்றப்படவுள்ள அரசியலமைப்பு மூலம் இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு தவறாது எட்டப்பட வேண்டும். இதுவே நாட்டின் சுபிட்சத்துக்கு வழிவகுக்கும்.

thinakural.lk 08 04 2016