தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 15) கோடீஸ்வரன் வழக்கு':

21 04 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 16) கோடீஸ்வரன் வழக்கு': 'தனிச்சிங்களச்' சட்டத்துக்;கெதிரான சட்டப் போராட்டம்

என்.கே.அஷோக்பரன் LLB(Hons)

தமிழ் அரச உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவரும், அரசாங்க எழுதுவினைஞருமான செல்லையா கோடீஸ்வரன், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற மறுத்தார். சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாவிட்டால் வருடாந்த ஊதிய உயர்வைத் தர மறுக்கும் ஸ்ரீமாவோ அரசாங்கத்தின் 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபத்தின் விளைவாக அவருக்கு கிடைக்கவேண்டிய ஊதிய அதிகரிப்பு கிடைக்கவில்லை. இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வைக் கேட்டும், அது கிடைக்காமைக்கான காரணமாக இருந்த 1961 டிசம்பர் திறைசேரி சுற்றுநிருபம் மற்றும் 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் ('தனிச்சிங்களச்' சட்டம்) ஆகியன அன்று நடைமுறையிலிருந்த சோல்பரி அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யதார். இந்த வழக்கில் முன்னாள் மன்றாடியார் நாயகம் எம்.திருச்செல்வம் க்யூ.ஸீ, சீ. ரங்கநாதன் க்யூ.ஸீ, சீ. நவரட்ணம் க்யூ.ஸீ ஆகிய முன்னணி சட்டத்தரணிகள் ஆஜராகினர்.வழக்குப்பற்றிய விடயத்துக்;குச் செல்வதற்கு முன்பதாக சோல்பரி அரசியல் யாப்பு பற்றியும் அதன் 29(2) சரத்து பற்றியும் அறிதல் அவசியமாகும். 

சோல்பரி அரசியல் யாப்பின் 29(2) சரத்து

1833 கோல்புறூக்-கமரன் அரசியலமைப்பு முதல் ஆங்கிலேய காலனித்துவத்தின் கீழ், காலத்துக்;கு காலம் சுதேசிகளுக்கு பிரதிநிதித்துவமும், அதிகாரமும் வழங்கும் வௌ;வேறு அரசியல் யாப்புக்கள் வழங்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியாளர்களால், 1948இல் இலங்கை டொமினியன் அந்தஸ்த்து பெறுவதற்கு முன்பு வழங்கப்பட்ட அரசியல் யாப்பே சோல்பரி அரசியல் யாப்பாகும். பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்றத்தையொத்ததொரு இரு அவைகள் கொண்ட சட்டவாக்கசபையை இங்கு உருவாக்கியதுடன், வெஸ்மினிஸ்டர் மாதிரியிலான கபினட் நிர்வாக முறையையும் ஸ்தாபித்தது. சோல்பரி அரசியல் யாப்பானது 1944ல் டொனமூர் அரசயிலமைப்பின் கீழ் இயங்கிய அமைச்சரவை சமர்ப்பித்த அரசியல் யாப்பு வரைவையே பெருமளவு கொண்டிருந்தது. இந்த யாப்பு வரைவானது சேர் ஐவர் ஜென்னிங்ஸால் வெஸ்மினிஸ்டர் மாதிரியில் உருவாக்கப்பட்டது. 

இந்த சோல்பரி யாப்பில் 29(2) சரத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றது. 29(2) சரத்தானது மதச் சுதந்திரத்தைத் தடுக்கும் எந்தவொரு சட்டத்தையும்; ஒரு குறுப்பிட்ட சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறைபாடுகளுக்கு அல்லது தடைகளுக்கு உட்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும்; அல்லது குறிப்பிட்ட சமூகத்தை மல்லது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஏதேனும் சலுகை அல்லது சாதகத்தன்மை அளிக்கும் எந்தவொரு சட்டத்தையும், எந்தவொரு மதநிறுவனத்தின் யாப்பையும் அதன் இசைவின்றி மாற்றும் எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் உருவாக்க முடியாது என்கிறது. 29(2) சரத்தில் குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்படுமானால் அவை வலுவற்ற சட்டமாகும் என 29(3) சரத்து கூறியது. 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் சேர்ந்த மக்களை பெரும்பான்மையாகவும், வேறு சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்களை சிறுபான்மையாகவும் கொண்ட ஒரு நாட்டின் அரசியல் யாப்பில் இவ்வகைப் பாதுகாப்பு சிறுபான்மை மக்களுக்கு அவசியமான ஒன்றாகிறது. இந்தப் பாதுகாப்பானது சிறுபான்மையினருக்கெதிரான சட்டங்கள் உருவாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு வழங்கியதே அன்றி சிறுபான்மையினருக்கெதிரான நிர்வாக நடவடிக்கைகள் சார்ந்த பாதுகாப்பை வழங்கவில்லை. இதுபற்றிக் தனது 'இலங்கை தமிழ்த் தேசியம் (ஆங்கிலம்) என்ற நூலில் பேராசிரியர் ஏ. ஜெயரட்ணம் வில்சன், உரிமைகள் சட்டம் ஒன்று வழங்கப்பட்டிருக்குமேயானால் அது சிறுபான்மையினருக்கு பலமான பாதுகாப்பாக இருந்திருக்கும். ஏனெனில், அது நிர்வாக நடவடிக்கைகள் சார்ந்த பாதுகாப்பையும் வழங்கியிருக்கும் ஆனால், சேர் ஐவர் ஜென்னிங்ஸ் அதனை விட, 29(2) வகையான பாதுகாப்பையே தெரிவுசெய்தார்' என்று குறிப்பிடுகிறார். 

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க வல்ல இந்த 29(2) சரத்தானது பொறிமுறை ரீதியில் மிகுந்த வலுவுள்ளதொன்றாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதாவது 29(2) சரத்தை நாடாளுமன்றத்தால் 3ல் 2 பலங்கொண்டும் இல்லாதொழிக்கமுடியாததொன்றாக அது கட்டமைக்கப்பட்டிருந்தது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் எதிர் ரணசிங்ஹ வழக்கில், ப்ரிவி கவுன்ஸில் வழங்கிய தீர்ப்பில் 'இலங்கைப் பிரஜைகளிடையான உரிமைச் சமநிலையை, அவர்கள் அனைவரும் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை 29(2) சரத்து பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதனால், 29(2) சரத்து மாற்றியமைக்கப்பட முடியாது' என்று குறிப்பிட்டிருந்தது. பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தன்னுடைய கட்டுரையொன்றில் '29(2) சரத்தானது சிறுபான்மையினர், கொழும்பின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அடிப்படை நிபந்தனையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. வேறு வகையில் சொல்வதானால் அது மாற்ற முடியாததும் பாதிப்பிற்குட்படுத்த முடியாததுமான விசேட தன்மையைக் கொண்ட சரத்தாகும்' என்று கூறினார். ஆகவே, கட்டமைப்பு ரீதியில் பலமானதொன்றாகவே அது இருக்கும் என சோல்பரி ஆணைக்குழுவினர் எண்ணங்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறானதொன்றாக இருக்கவில்லை. அதற்கான மிகச்சிறந்த உதாரணம் இந்த கோடீஸ்வரன் வழக்கு.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கோடீஸ்வரன் வழக்கு 

தனக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வை அரசாங்கம் சட்டத்துக்;கு புறம்பான வகையில் வழங்க மறுக்கிறது என்பதே அரச எழுதுவினைஞரான கோடீஸ்வரனின் வழக்கு. அதாவது, 1961ஆம் ஆண்டு டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபம் சிங்கள மொழியில் தேர்ச்சி பெறாத அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வைத் தடைசெய்தது. இந்தத் திறைசேரி சுற்றுநிருபமானது சட்டவிரோதமானது. ஏனெனில், அது நடைமுறைப்படுத்த விளையும் 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் ('தனிச்சிங்களச்' சட்டம்) அரசியல் யாப்பின் 29(2) சரத்துக்;கு முரணானது ஆகவே அச்சட்டம் செல்லுபடியற்றது, ஆகவே, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் 1961 டிசம்பர் திறைசேரி சுற்றுநிருபமும் செல்லுபடியற்றது என்பதே கோடீஸ்வரன் தரப்பின் வாதம். இதற்கு பதில்தரப்பில் வாதிட்ட அரசாங்கம், 'தனிச்சிங்களச்' சட்டம் 29(2) சரத்துக்;கு முரணில்லை என்று குறிப்பிட்டதுடன், ஒரு அரச உத்தியோகத்தர், முடியின் விருப்பின் பேரில் சேவையாற்றுவதால், அவர் தன் சம்பளத்துக்;காக முடியை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற சட்டக்கோட்பாட்டை முன்னிறுத்தி இந்த வழக்கை ஆட்சேபித்தது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஓ. எல். டி க்றெஸ்டர் வழக்கினை கோடீஸ்வரனுக்குச் சாதகமாகத் தீர்த்ததுடன், 1956ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ மொழிச் சட்டமும் ('தனிச்சிங்களச்' சட்டம்), 1961 டிசெம்பர் திறைசேரி சுற்றுநிருபமும், அரசியல் யாப்பின் 29(2) சரத்துக்;கு முரணானது என 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி தீர்ப்பு வழங்கினார்.கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, அரசாங்கத்தரப்பு, உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு பிரதம நீதியரசர் ‡பெனான்டோ மற்றும் நீதியரசர் சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. 

உயர் நீதிமன்றமானது, ஓர் அரச சேவையாளன் தன்னுடைய சம்பளத்துக்;காக முடிக்கெதிராக நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்ற அடிப்படையில், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. இந்த முதற் புள்ளியிலேயே வழக்கு தீர்ந்து விட்ட காரணத்தால், அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் பற்றி ஆராய்வதை உயர்நீதிமன்றம் தேவையற்றதெனக் கருதியது. அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் ஆராயப்படும் தேவை ஏற்பட்டிருப்பின் இவ்வழக்கு 5 நீதியரசர்களைக் கொண்ட அவைக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என பிரதம நீதியரசர் ‡பெனான்டோ தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பு 1967இல் வழங்கப்பட்டது. கோடீஸ்வரன் தரப்பில், பிரித்தானிய ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. ப்ரிவி கவுன்ஸில் என்பது பிரித்தானியாவின் மீயுயர் நீதிமன்றமாகும். சட்டப் பிரபுக்களைக் கொண்ட ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை சோல்பரி அரசியல் யாப்பில் வழங்கப்பட்டிருந்தது.

1962ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கானது, 1968ஆம் ஆண்டு பிரித்தானிய ப்ரிவி கவுன்ஸிலில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. கோடீஸ்வரன் தரப்பில் சேர் டிங்கிள் ‡புட் க்யூ.ஸீ., சீ. ரங்கநாதன் க்யூ.ஸீ., எம்.பி.சொலமன், எஸ்.சீ.க்றொசெட்-தம்பையா மற்றும் எம்.ஐ.ஹமவி ஹனீ‡பா ஆகிய சட்டத்தரணிகளும், அரசாங்கத் தரப்பில், ஈ.எ‡ப்.என்.க்றேஷியன் க்யூ.ஸீ., ஆர்.கே.ஹந்து, எச்.எல்.டி.சில்வா ஆகிய சட்டத்தரணிகளும் ஆஜராகினர். ப்ரிவி கவுன்ஸிலில் ஹொட்சன் பிரபு, வைகன்ட் டில்ஹோர்ன், டொனவன் பிரபு, பியேர்ஸன் பிரபு, டிப்லொக் பிரபு ஆகிய சட்டப் பிரபுக்கள் முன்னிலையில் கோடீஸ்வரன் வழக்கின் மேன்முறையீடு விசாரிக்கப்பட்டது. ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பு டிப்லொக் பிரபுவினால் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் அரசாங்க சேவையாளளொருவன் தனது சம்பளத்தொகைக்காக முடிக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிரான கோடீஸ்வரனின் மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும் என ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு 1969ல் வழங்கப்பட்டது.

எந்த அரசியல் அமைப்பு சார்ந்த பிரச்சினையை இந்த வழக்கில் ஆராய்வது தேவையற்றது என உயர்நீதிமன்றம் கருதியதோ, அது ஆராயப்பட வேண்டும் என ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பளித்தது. இப்போது அதனை மீண்டும் விசாரித்து, 'தனிச்சிங்களச்' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துடன் பொருந்திப்போகிறதா, அல்லதா அதற்கு முரணானதா என்று ஆராய வேண்டிய கடப்பாடு உயர்நீதிமன்றத்துக்;கு ஏற்பட்டது. சட்டவியல் நிபுணர்களின் கருத்துப்படி, அன்று இந்த அரசியலமைப்பு விடயம் பற்றி உயர்நீதிமன்றம் எந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பினும் அது மீண்டும் ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டால் 'தனிச்சிங்களச்' சட்டம் அரசியலமைப்பின் 29(2) சரத்துக்;கு முரணானது ஆதலால் அச்சட்டம் வலுவற்றது என்ற தீர்ப்பே யதார்த்தமானது. இது நடந்தால் 'தனிச்சிங்களச்' சட்டம் இல்லாதொழியும் நிலை ஏற்படும். ஆனால் உடனடியா இவ்வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. 

ப்ரிவி கவுன்ஸில் தீர்ப்பு வந்தபோது, 1969ல் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் இருந்தது. ப்ரிவி கவுன்ஸிலின் இந்தத் தீர்ப்பு அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு பெரும் சவாலைத் தந்தது. 1970ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணியினர், 1971ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தினூடாக ப்ரிவி கவுன்ஸிலுக்கு மேன்முறையீடு செய்யும் முறையை இல்லாதொழித்தனர். இத்தோடு கோடீஸ்வரன் வழக்கு என்ற 'தனிச்சிங்களச்' சட்டத்துக்;கு எதிரான சட்டப் போராட்டம் அரசாங்கத்தின் இரும்புக்கரத்தால் அடக்கப்பட்டது. 

மேலும், 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பை நாடாளுமன்றத்துக்;கு புறம்பாக அரசியலமைப்பு அவை என்ற வடிவில் கூடி ஸ்ரீமாவோ அரசாங்கம் நிறைவேற்றியது. இதன் மூலம் சோல்பரி யாப்பு வழங்கிய 29(2) என்ற சட்டப் பாதுகாப்பும் இல்லாதொழிக்கப்பட்டது. பி.எச். பாமரின் 'சிலோன் - ஒரு பிரிந்த தேசம் (ஆங்கிலம்)' என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சோல்பரி பிரபு 29(2) சரத்தின் வலுவின்மை பற்றிய தனதும், சோல்பரி ஆணைக்குழுவின் ஏனைய ஆணையாளர்களதும் கசப்பான ஏமாற்றத்தைப் பதிவு செய்தார். அத்துடன் 'அடிப்படை மனித உரிமைகள், குறிப்பாக தனி மனித சுதந்திரமானது மாற்றமுடியாத, அழிக்கமுடியாத சரத்தொன்றின் ஊடாகப் பாதுகாக்கப்படுதல் எல்லா நாடுகளுக்கும், எல்லா அரசியல் யாப்புகளிற்கும் அவசியமானதொன்றாகும். ஆயினும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையிலான மீளிணக்கப்பாடென்பது அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பினைத் தாண்டி அதிகாரத்திலுள்ள அரசாங்கத்தினதும், அதனை அதிகாரத்துக்;குக்கொண்டு வந்த மக்களினதும் நல்லெண்ணம், பொது உணர்வு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றிலேயே தங்கியிருக்கிறது' என தனது எண்ணத்தைப் பதிவு செய்கிறார்.

yarl.com 30 11 2015