தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 18) ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம்

12 05 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 18) ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் 

என்.கே. அஷோக்பரன் (LLB Hons)

'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் என்பது ஒரு வரலாற்றுச் சாதனை, சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில் ஒரு மிக முக்கிய நிகழ்வு. 'நாடற்றவர்கள்' என்ற நிலையிலிருந்த ஏறத்தாழ 970,000 மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினதும் லால் பகதூர் சாஸ்த்ரியினதும் சாதனை என்ற பெருமைச் சொற்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.ஆனால், அன்று இலங்கையில் வாழ்ந்துகொண்டிருந்த இந்திய வம்சாவழி மக்களின் மக்கள் பிரதிநிதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் வார்த்தைகளில் சொல்வதானால் இது ஒரு 'குதிரைப்பேரம்' வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் உண்மையில் ஒரு சாதனையா? இல்லை ஏற்கெனவே பிரஜாவுரிமையின்றி வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு வந்த சோதனையா?

இலங்கையில் 1964ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரஜாவுரிமையின்றி 'நாடற்றவர்களாக' வாழ்ந்து கொண்டிருந்த இந்திய வம்சாவழி மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 975,000 ஆக இருந்தது. 'கொத்தலாவல-நேரு' ஒப்பந்தத்துக்;கும் அதன் தோல்விக்கும் பின்னர், ஏறத்தாழ ஒரு தசாப்த காலத்தின் பின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பில் தனது கவனத்தை திருப்பியது.சர்வதேச அரசியலில், பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்குத் தனிப்பட்ட அக்கறை இருந்ததாக அன்றைய பிரதமரின் செயலாளராகவிருந்த பிரட்மன் வீரக்கோன் தனது 'ரென்டேர்ட் அன்டு ஸீஸர் (ஆங்கிலம்)' என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1961ஆம் ஆண்டு பெல்கிரேடில் நடந்த அணிசேரா நாடுகள் மாநாட்டில் உலகின் முதலாவது பெண் பிரதமராக அவர் ஆற்றிய உரையில், 'ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும் நான் சர்வதேச நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன், வன்முறையைக் கைவிடுங்கள்' என்ற அவரது குரல் உலகெங்கும் பேசப்பட்டது என பிரட்மன் வீரக்கோன் குறிப்பிடுகிறார்.

இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஏனைய சோசலிச நாடுகளுடன் மிக நெருங்கிய சர்வதேச உறவுகளை ஸ்ரீமாவோ பேணி வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்திய-சீன யுத்த காலத்தில் சமாதானத்தூதுவராக இருநாடுகளுக்கும் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சென்றிருக்கிறார்.ஆகவே, 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தத்தை பல இராஜதந்திர அறிஞர்களும், அரசறிவியலாளர்களும் புகழ்வது போல ஒரு சாதனையாகவே அவரும் பார்த்திருக்கலாம், ஆனால், இந்த இராஜதந்திர விளையாட்டில் பகடைக்காய்களாக அப்பாவி மக்கள் பயன்படுத்தப்பட்டதுதான் சோகத்துக்குரியது.இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை பற்றி பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்;கும், இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரிக்குமிடையில் 1964 ஒக்டோபர் 24ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. 4 நாட்களுக்கென திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள், இறுதியில் 6 நாட்கள் நடைபெற்றன.

1964 ஒக்டோபர் 30ஆம் திகதி இந்தியாவுக்கும்-இலங்கைக்குமிடையிலான இந்திய வம்சாவழி மக்களின் நிலை மற்றும் எதிர்காலம் பற்றிய ஒப்பந்தம் (ஸ்ரீமா-சாஸ்த்ரி) ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இலங்கையில் 'நாடற்றவர்களாக' இருக்கின்ற இந்திய வம்சாவழி மக்களுக்கு 'பிரஜாவுரிமையைப்' பெற்றுக்கொடுத்தலாகும். அதன் படி மொத்தமாக 975,000 அளவிலிருந்த 'நாடற்ற' இந்திய வம்சாவழி மக்களை ஒப்பந்தம் போட்டு தமக்கிடையே பிரித்துக்கொள்ள இந்திய-இலங்கை அரசாங்கங்கள் முடிவெடுத்தன.இந்த 975,000 பேரில் 300,000 பேருக்கு இலங்கை அரசாங்கம் பிரஜாவுரிமை அளிக்கும் எனவும், 525,000 பேரை இந்திய அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ளும் எனவும், அவர்களுக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கும் எனவும், இந்தச் செயற்பாடானது இந்த ஒப்பந்தம் வலுவுள்ள காலமான 15 வருடங்களுக்கு இடம்பெறும் எனவும். மிகுதி 150,000 பேரினது நிலைபற்றி பின்னொரு காலத்தில் இருநாடுகளிடையேயும் பேசித் தீர்மானிக்கப்படும் எனவும் வழங்கிய ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்துக்கு இருநாடுகளும் இணங்கின.

'நாடற்றவர்களுக்கு' பிரஜாவுரிமை பெற்றுக்கொடுத்திருக்கும் மகத்தான சாதனையல்லவா இது? இதுவரை காலமும் யாரும் கண்டுகொள்ளாத இந்தப்பிரச்சினைக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வெற்றிகரமான தீர்வொன்றினைக் கண்டிருக்கிறார் என்ற கருத்துடையவர்கள் பலர் இருக்கிறார்கள். இதில் பாதி உண்மை இருக்கிறது.பிரஜாவுரிமை இன்றி வாழ்ந்த மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பாராட்டலாம். ஆனால், அந்த மக்களின் மனநிலையை, விருப்பத்தை அறியாமல், 'குதிரைப்பேரம்' போல இந்தநாட்டில் பிறந்து வாழ்ந்துகொண்டிருந்த மக்களை கூறுபோட்டுப் பிரித்துக்கொண்டதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இதுபற்றி அன்று இந்திய வம்சாவழி மக்களின் மக்கள் பிரதிநிதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் தனது 'தேயிலையும் அரசியலும் (ஆங்கிலம்)' என்ற சுயசரிதை நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: 'இந்திய வம்சாவழி மக்களின் பிரஜாவுரிமை பற்றிய பேச்சுவார்த்தைக்காக டெல்லி செல்வதற்கு முன், அவர் (பிரதமர் ஸ்ரீமாவோ) என்னுடனோ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனோபிரஜாவுரிமைப் பிரச்சினை பற்றி கலந்தாலோசிக்கவில்லை. இதைவிட பாரதூரமானது என்னையோ வேறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களையோ இந்தப் பிரச்சினை பற்றிய எமது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துச்சொல்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்கவில்லை (அன்றைய காலத்தில் நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி தேவைப்பட்டது). இதன் பிறகுதான் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது. இது பிரஜாவுரிமைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை, மாறாக இன்னும் நிறைய பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது.

இந்த ஒப்பந்தம் எனக்கு சினத்தை ஏற்படுத்தியது. நான் அதனை 'குதிரைப்பேரம்' என்று விமர்சித்தேன். இந்திய வம்சாவழி மக்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்காமல், அவர்களது கருத்தைக் கேட்காமல் இந்தப் பிரச்சினைபற்றி பேச்சுவார்த்தை நடத்தவோ, தீர்வொன்றினை எட்டவோ இலங்கை அரசாங்கத்துக்கோ, இந்திய அரசாங்கத்துக்கோ எந்தவித உரிமையுமில்லை என நான் குறிப்பிட்டேன். பிரதமர் ஸ்ரீமாவோ எனது முதுகுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தியதையும் நான் கண்டித்தேன். நான் எப்போதும் ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தை எதிர்த்தே வந்திருக்கிறேன்.இன்று இந்த நாளிலும் கூட. நான் நேரடியாகச் சொல்கிறேன், அரை மில்லியன் 'இலங்கை-இந்திய' மக்களின் உரிமைகளைப் பேரம்பேசி இந்தியா மிகப்பெரிய தவறினை இழைத்துவிட்டது. இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையில் பிறந்தவர்கள் - அவர்களது முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் - ஆகவே 'மிக அண்மைய இந்திய வம்சாவழி' என்ற ஒரே 'பாவத்துக்காக' அவர்கள் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சக்தி வாய்ந்த பிரச்சாரத்தினூடாக இலங்கைவாழ் இந்திய வம்சாவழி மக்களை இந்திய குடியுரிமைப் பெறச் செய்ய முயன்றது, இவ்வாறுதான் இந்த ஒப்பந்தத்தை சாத்தியமாக்க முயன்றனர். ஆனால் இது படுதோல்வியிலேயே முடிந்தது. இந்திய பிரஜைகளாக தம்மை பதிந்து கொண்ட 8,0000 அளவிலானவர்கள் இன்னும் இங்குதான் வாழ்கிறார்கள்.'சௌமியமூர்த்தி தொண்டமான் தனது சுயசரிதையில் பதிவுசெய்திருந்த இந்த வார்த்தைகளின் நியாயமாக கோபம் பொதிந்திருப்பதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட தனித்துவத்தன்மைகள் கொண்ட மக்கள் கூட்டத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் போது, அவர்களினுடைய கருத்தைக் கேட்காமலேயே, அவர்களுக்கான தீர்வினை இருநாட்டு அரசாங்கங்கள் செய்துகொண்டு அவர்களை தமக்கிடையே 'பண்டங்களைப்போல' கூறிட்டுப் பங்கிட்டுக்கொள்வதை எப்படி நியாயமாகும்? மேலும் அவர் பயன்படுத்திய 'மிக அண்மைய இந்திய வம்சாவழி' என்ற சொற்றொடர் ஆழமான விடயத்தை உணர்த்துகிறது.

அதாவது இந்த இலங்கை நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையானவர்கள் வந்தேறு குடிகள்தான், அதுவும் குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான். விஜயனின் வருகையிலிருந்து இலங்கையின் வரலாறு தொடங்குகிறதென்றால், அந்த விஜயனும் அவன்வழி வந்தவர்களும் இந்திய வம்சாவழிதானே. மகாவம்சம் சொல்கின்ற சிங்கத்துக்கும், கலிங்க இளவரசிக்கும் பிறந்த சிங்ஹபாகு அரசாண்ட சிங்ஹபுர இந்தியாவின் ஒடிசாவிலல்லவா இருந்தது.இந்த சிங்ஹபாகுவின் மகனல்லவா விஜயன். கண்டிய இராச்சியத்தை ஆண்ட நாயக்க மன்னர்களும், அவர் வழிவந்தோரும் இந்திய வம்சாவழிதான். ஆகவே 'மிக அண்மையில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்' என்ற 'பாவத்திற்காகத்தான்' இந்த மக்கள் அவர்களது விருப்பத்துக்கு மாறாகத் தண்டிக்கப்படுகிறார்களா? என்பதே அவருடைய கேள்வியின் உட்பொருள்.

'இது சர்வதேச உறவுகளில் எங்கும் நடந்திராத நடவடிக்கை. அதிகாரத்தின் விளையாட்டில் அரை மில்லியன் மக்கள் பகடைக்காய்களாக்கப்பட்டிருக்கிறார்கள்' என இலங்கை தமிழரசுக் கட்சியின் சா.ஜே.வே.செல்வநாயகம் 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்தம் பற்றி பேசும் போது குறிப்பிட்டார். 1964 திருகோணமலை மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து தமிழரசுக்கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.பிரஜாவுரிமைப் பிரச்சினையை முக்கிய காரணம் காட்டி, ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையின் கீழான அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து விலகிய சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலானவர்கள், இது போன்றதொரு சூழலில் இன்னும் காத்திரமான எதிர்ப்பை இந்திய வம்சாவழி மக்களின் தலைவர்ளோடு இணைந்து வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தததுக்கெதிரான எதிர்ப்புக்குரல்கள் இந்தியாவிலும் ஒலித்தன. இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் உரையாற்றிய ஆச்சார்யா க்ரிபாலனி, இந்த ஒப்பந்தமானது இந்தியாவுக்கு எதிரானதென்றும், இந்திய வம்சாவழி மக்களின் விருப்பமின்றி இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் இதற்கெதிரான கண்டனங்கள் கடுமையாக எழுந்தன. நெடுஞ்செழியன், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இதனை இந்திய மத்திய அரசாங்கத்தின் துரோக நடவடிக்கையாகவே சித்தரித்தனர்.இத்தனை எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், பேனா மை காய்வதற்கு முன்பாகவே முதலிடியை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இறக்கினார். 1964 நவம்பரில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைப் பிரஜைகளாகப் பதிவுசெய்யும் இந்திய வம்சாவழிமக்கள் பொதுவான வாக்காளர் இடாப்பிலன்றி, தனியானதொரு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்யப்படுவார்கள் என பிரதமர் அறிவித்தார்.

பல இந்தியத் தலைவர்கள் இதனைக் கண்டித்தார்கள். சிலர், இது பாகுபாட்டை வெளிப்படுத்தும் நடவடிக்கை, ஒப்பந்தத்தின் நன்நோக்கிற்கு முரணாணது என்று குற்றம் சாட்டினர். ஆனால் இந்நிலையே தொடர்ந்தது.மக்களைப் பங்கிட்டுக்கொள்ளப் போடப்பட்ட ஒப்பந்தம், அவர்களது விருப்பத்தைப் பற்றிக் கருதவில்லை. இந்தியாவுக்கு மீள அழைக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய திட்டம், அவர்களுக்கான தொழில் வசதிகள், அவர்களது குடும்பம், உறவுகள் பற்றிய நிலை பற்றி எல்லாம் ஒப்பந்தத்தில் எதுவுமில்லை. ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் போது இருநாடுகளின் கண்காணிப்பு, மீளாராய்வு பற்றியெல்லாம் எந்தத்திட்டமுமில்லை.இலங்கை அரசாங்கம் தனியொரு தேர்தல் இடாப்பில் பதிவு செய்வதைக் கூட கேள்வி கேட்க ஒப்பந்தத்தில் இடமில்லை. அதாவது ஒப்பந்தம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவில்லாத ஒரு நிலையிலேயே இவ்வொப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.இந்தப் பங்கீட்டின் பின்னர் பங்கிடாத நட்டாற்றில் நிற்கும் மிகுதி 150,000 பேரின் நிலை என்ன என்ற கேள்விக்கும் பதிலில்லை. இராஜதந்திர நகர்வுகள் என்ற பார்வையில் ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் ஒரு சாதனையாக இருக்கலாம், ஆனால், இது நிச்சயம் ஒரு மக்கள் கூட்டத்துக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அநீதி என்ற கருத்தில் நிறைய நியாயங்கள் இருக்கிறது.

yarl.com 21 12 2015