தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 19) கவிழ்ந்தது ஸ்ரீமாவோவின் அரசாங்கம்

19 05 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 19)  கவிழ்ந்தது ஸ்ரீமாவோவின் அரசாங்கம்

ஆங்கிலேயரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த 'ரைம்ஸ் ஒப் சிலோன்' பத்திரிகைக்கு போட்டியாக, 1918ஆம் ஆண்டு டி.ஆர்.விஜயவர்த்தன எனும் வணிகரால் 'லேக் ஹவுஸ்' ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கைப் பத்திரிகைத் துறையில் 'லேக் ஹவுஸினது' பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்பு, இலங்கை பத்திரிகைச் சந்தையில் 2ஃ3 பங்கை லேக் ஹவுஸ் கொண்டிருந்தது. பத்திரிகைத் துறையின் சக்கரவர்த்தியாக மட்டுமல்லாது, அரசியலையும் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த நிறுவனமாக அது உருவாகியிருந்தது.

1950இல் டி.ஆர்.விஜயவர்த்தனவின் மறைவுக்குப் பின்னர், 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக டி.ஆர். விஜயவர்த்தனவின் மருமகனான எஸ்மண்ட் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இன்றைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையாவார் அத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் உறவினருமாவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகளை தமக்கு எதிரான நிலைப்பாடுடையதாகவே கருதினர். 1956 தேர்தல் காலத்திலும் அதன் பின்பும்கூட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு கடும் சவாலாக 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள் இருந்ததாக பல அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

ஆயினும் 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தை முடக்கும் எந்தவொரு நேரடி நடவடிக்கையையும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க எடுக்கவில்லை. ஆனால், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அணுகுமுறை, அவருடைய கணவருடையதைப் போலன்றி வேறானதாக இருந்தது. இதற்கு அவருடன் ஆதரவுநிலையில் இருந்த இடதுசாரிக் கட்சிகளின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். 1960ஆம் ஆண்டு தேர்தல்களின் போது ஸ்ரீமாவின் 'சோசலிஸ-சிங்கள பேரினவாத' போக்கினை 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள் கடுமையாகச் சாடின. 1960இல் ஆட்சிப்படியேறியதும், சிம்மாசன உரையிலேயே 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஸ்ரீமாவோ அரசாங்கம் முனைப்புக் காட்டியது. எதிர்க்கட்சிகளும், 'லேக் ஹவுஸ்' நிறுவனமும் இந்த 'ஊடக சுதந்திரத்துக்கெதிரான' நடவடிக்கையை எதிர்த்து கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தன.

இவற்றின் விளைவாக 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சி உடனடியாக நடக்கவில்லை. ஆனால், இந்த விடயம் இதனுடன் நின்று விடவில்லை.1963 செப்டம்பர் 23இல், ஸ்ரீமாவோ அரசாங்கமானது ஊடகக் கட்டுப்பாடுகள் பற்றி ஆராய ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தது. ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் அரசாங்கத்தின் பகீரதப்பிரயத்தனங்களின் இன்னொரு வழிமுறையாக இது இருந்தது. அன்றைய முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களான 'லேக் ஹவுஸ்' நிறுவனம், மற்றும் 'ரைம்ஸ் ஒப் சிலோன்' நிறுவனம் ஆகியவற்றை முடக்கி, கையகப்படுத்துவதே இந்த 'ஊடக ஆணைக்குழுவின்' பின்னாலிருந்த அரசியல் நோக்கம் என்பதை, அதன் சிபாரிசுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.இவ்விரு நிறுவனங்களையும் முதலாளித்துவத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆதரிக்கும் நிறுவனங்களாகவும் கிறிஸ்தவ ஆதரவுநிலை கொண்ட அமைப்புக்களாகவுமே பிரதமர் ஸ்ரீமாவின் 'சோஸலிஸ-சிங்களபௌத்த பேரினவாத' கொள்கை பார்த்தது. ஆகவே, இதனை முடக்க வேண்டியதை முக்கியத்துவமிக்கதாக பிரதமர் ஸ்ரீமாவின் அரசாங்கம் கருதியது. இதற்கு ஏற்றாற்போலவே, 1964 ஒக்டோபரில் வெளிவந்த ஊடக ஆணைக்குழுவின் அறிக்கையில் 'லேக் ஹவுஸ்'

(அஸோஸியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒ‡ப் சிலோன் லிமிடட்) நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்தவேண்டும் எனவும், 'ரைம்ஸ் ஒ‡ப் சிலோன்' நிறுவனத்தை நடத்த கூட்டுறவு அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அந்நியர் இங்குள்ள பத்திரிகை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நிலையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் சிபாரிசுகள் செய்யப்பட்டன. இதன்படி பத்திரிகைகளைத் தேசியமயமாக்குவதற்கான சட்டமூலம் செனட் சபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, பின்னர் கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விடத்தில் 'புத்திசாலித்தனமாகச்' செயற்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வந்த சட்டமூலத்துக்கு எதிர்த்தரப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுசரணை அளிக்கச் செய்ததனூடாக, அதன் மீதான வாதம் நடைபெறும் திகதியை 1965 பெப்ரவரிக்கு ஒத்திவைக்கச்செய்தார்.

இது அரசாங்கத்துக்குக் கடுஞ்சவாலாக மாறியது. இதனை முறியடிக்க, நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டு, மீண்டும் புதிய கூட்டத்தொடரொன்றைக் கூட்டி, புதிதாக இந்த சட்டமூலத்தை அரசாங்கமே சமர்ப்பிக்க முடிவெடுத்தது. அதனடிப்படையில் பிரதமரின் வேண்டுகோளின்படி ஆளுநர் நாடாளுமன்றத்தை 1964 நவம்பர் 12ஆம் திகதி ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரை நவம்பர் 20இல் தொடங்க ஆணையிட்டார்.'பத்திரிகைத் துறையில் தனியுடைமையை இல்லாதொழிக்க எனது அரசாங்கம் எடுத்த முயற்சி நடைமுறைச் சிக்கல்களில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்து, புதிய கூட்டத்தொடரொன்றை ஆரம்பிப்பதே இந்தச் சிக்கலை மீறி, 'ஊடக ஆணைக்குழுவின்' சிபாரிசுகளை அமுலாக்குவதற்கான ஒரே வழியாகும்' என பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார்.

ஸ்ரீமாவோ அரசாங்கம் கவிழ்ந்தது 

1964 நவம்பர் 20இல் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. ஆளுநரின் சிம்மாசன உரை நிகழ்ந்தது. 1964 டிசம்பர் 3ஆம் திகதி சிம்மாசன உரை மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதன்போது, மதியம், தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ஸ்ரீமாவுக்கு அனுப்பிவைத்த அவைத் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரும், அமைச்சருமானசி. பி. டி சில்வா, மேலும் 13 ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சிக்கு மாறினார். சி.பி. டி சில்வாவுடன், மஹாநாம சமரவீர (இன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தந்தையார்), பி.பி.விக்ரமசூரிய, விஜேபாஹூ விஜேசிங்ஹ, எட்மண்ட் விஜேசூரிய, ஏ.எச். டி சில்வா, இந்திரசேன டி சொய்ஸா, சி.முனவீர, அல்பேர்ட் சில்வா, சேர் ரஸீக் ‡பறீட், எஸ்.பி.லேனாவ, லக்ஷ்மன் டி சில்வா, டி.இ.திலகரத்ன, ஆர்.சிங்க்ள்டன்-சல்மான் ஆகியோர் ஆளுந்தரப்பிலிருந்து எதிர்த்தரப்புக்கு மாறினர். நாடாளுமன்றின் அவையில் இந்த மாறுதல் எதிர்கட்சியினரின் பலத்த ஆரவாரத்தின் மத்தியில் நடந்தது. சி.பி.டி சில்வா எதிர்த்தரப்பில் சென்று அமர்ந்ததும், எதிர்த்தரப்பிலிருந்த ஆர்.ஜி.சேனநாயக்க எழுந்து, ஆளுந்தரப்புக்கு மாறினார். தான் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததற்கு 'இந்திய-இலங்கை' ஒப்பந்தம் (ஸ்ரீமா-சாஸ்த்ரி) என்ற சாதனை தான் காரணமென்றார். ஆனால் 'ஸ்ரீமா-சாஸ்த்ரி' ஒப்பந்த்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதியாக சௌமியமூர்த்தி தொண்டமான் ஸ்ரீமாவோ அரசாங்கத்துக்கெதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்சி மாறல்களைத் தொடர்ந்து சிம்மாசன உரை மீதான வாக்களிப்பு இடம்பெற முன்பு, முன்னாள் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயானந்த தஹநாயக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை, சிம்மாசன உரையில் திருத்தமாக முன்மொழிந்தார். அந்த திருத்தம் 74க்கு 73 என்ற எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு வாக்கினால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் கவிழ்ந்தது.

'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாகக் கடுமையாகச் சாடியவை. அந்தக் காலப்பகுதியில் வெளிவந்த பத்திரிகை ஆக்கங்களே இதற்குச் சான்று. ஆனால், 'லேக் ஹவுஸை' தேசியமயமாக்குவதன் ஊடாகக் கையகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சியும் கடுமையாக எதிர்த்தது. 1964 ஒக்டோபரில் வெளியிட்ட அறிக்கையொன்றில், 'லேக் ஹவுஸ்' பத்திரிகைகள் தமிழ்மக்களுக்கும், எமது கட்சிக்கும் எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளது, ஆயினும், ஊடக சுதந்திரத்தை அழிப்பது, எவ்வகையிலும் பொருத்தமானதொரு தீர்வல்ல' என்று இலங்கை தமிழரசுக் கட்சி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஸ்ரீமாவோவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியும் வாக்களித்தது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் அல்லது அரசாங்கம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால், பிரதமர் பதவி விலகுவதுடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படுவதே 'வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற' மரபு. 1964 டிசம்பர் 3ஆம் திகதி வாகெடுப்பில், ஸ்ரீமாவோ அரசாங்கம் தோல்வி கண்டிருப்பினும் டிசம்பர் 7ஆம் திகதி வரை அவர் பதவி விலகவில்லை அல்லது, நாடாளுமன்றத்தைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்தும்படி ஆளுநரிடம் கோரவுமில்லை.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் டொக்டர். ஈ.எம்.வி. நாகநாதன், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டதும் விரைவில் பதவி விலகுவதே மரபாகும் என்றும் குறிப்பிட்டார். இறுதியாக 1964 டிசம்பர் 7ஆம் திகதி பிரதமர் ஸ்ரீமாவோவின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 மார்ச் 22ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு ஸ்ரீமாவோவின் ஆட்சி வீழ்ந்தமையானது தமிழர் அரசியலைப் பொறுத்தவரையிலும் முக்கியத்துவமிக்கதொன்றாகும். தமிழர் தரப்பின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிசாயக்காத போக்கு ஸ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்டது.ஆகவே, தமிழ் மக்களுக்கும் மாற்றம் ஒன்று தேவைப்பட்டது. ஆனால், தமிழ் மக்களின் தலைவிதியோ அல்லது துரதிர்ஷ்டமோ, இன்று வரை தமிழ் மக்கள் மெத்தப்பிரயத்தனத்துடன் ஆதரவளித்த மாற்றங்கள் எதுவுமே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ததே கிடையாது. தேர்தலில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு போட்டியாக பலமான கூட்டணியொன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க தீர்மானித்தார். ஸ்ரீமாவோ மற்றும் அவரது 

'மார்க்ஸிய' நண்பர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத் தடுப்பதற்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சி ஒன்றை உருவாக்கவும், ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசரான நீதியரசர் பஸ்நாயக்க ஆகியோரும் மும்முரம் காட்டினர்.
இலங்கை அரசியலின் முக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு தமிழர் அரசியல் வரலாற்றை மட்டும் பார்ப்பது ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழர் அரசியல் வரலாற்றையும், அதனூடாக தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு இலங்கை அரசியலின் முக்கிய நிகழ்வுகளையும், அதுசார்ந்த தமிழ்த் தரப்பின் நடவடிக்கைகளையும் அதன் சூழமைவுடன் தெரிந்துகொள்ளுதல் அவசியமாகும். 

இதன் தொடர்ச்சியாகத்தான் டட்லி-செல்வா ஒப்பந்தமும், இலங்கை தமிழரசுக் கட்சி டட்லி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் முடிவும் எட்டப்பட்டது. தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கியமாக பேசப்படும் ஒப்பந்தங்களில் டட்லி-செல்வா ஒப்பந்தமும் ஒன்று. மாற்றம் எதிர்பார்த்த தமிழ்மக்களுக்கு மீண்டும் ஏமாற்றம் காத்திருந்தது.

28 12 2015