கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது

22 06 2016

கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது

சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றைக் கண்டுகொள்ள முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டையே வட, கிழக்குத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய அரசியல் முகாமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருப்பதாக தென்படுகிறது.வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்ளும் பிரதிநிதிகளிடம் இந்த வலியுறுத்தலை கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்ந்து விடுத்து வருகின்றனர்.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைத்திருப்பதும் பிரதான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குவதும்nஇனநெருக்கடி உட்பட முக்கியமானnபிரச்சினைகளுக்கு இணக்கபூர்வமான தீர்வொன்றை எட்டுவதற்கானnஅரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றதென்ற அபிப்பிராயத்தை உலக நாடுகள் பலவற்றின் தலைவர்களும் அமைப்புகளும் வெளிப்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது.அவர்களின் எண்ணப்பாட்டிற்கு வலுவூட்டுவதாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் காணப்படுகின்றது. பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டிருக்கிறது.

உத்தேச அரசியலமைப்புத் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை திரட்டுவதை இலக்காகக் கொண்டு நியமிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் அறிக்கையும் கடந்த மே இறுதியில் வெளியிடப்பட்டிருக்கிறது.உரிமைகளுக்கான சட்ட மூலம் உட்பட விரிவான மறுசீரமைப்பு யோசனைகள் பலவற்றை உள்ளடக்கியதாக அந்த அறிக்கை அமைந்திருந்தாலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் அவர்களின் வரலாற்றுபூர்வ வதிவிடமுமான வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கு அதிகளவிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழு தவறிவிட்டதாக விமர்சனங்கள் மேலெழுந்திருப்பதையும் காணமுடிகிறது.

வட, கிழக்குப் பகுதிக்கு அதிகளவிலான அதிகாரப் பகிர்வு மூலம் இனநல்லிணக்கத்தை வலுப்படுத்த முடியுமென்பது சர்வதேச சமூகத்தினது மட்டுமன்றி தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின் கோரிக்கையாகவும் வலியுறுத்தலாகவும் நீண்ட காலமாக இருந்து வருகின்றதென்பது முக்கியமான விடயமாகும். ஆனால் இந்த விடயத்தில் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலியுறுத்தலான சமஷ்டிக் கட்டமைப்பைக் கொண்ட அரசியல் தீர்வை உள்ளடக்கியதாக அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென்பதற்கு பாராளுமன்ற ரீதியான கருத்தொருமைப்பாடு எட்டப்படுவதற்கான
சாத்தியப்பாடு குறைவாகவே இருப்பதாக தென்படுகிறது.இந்நிலையில் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரித்து அது தொடர்பாக மக்கள் ஆணையை பெற்றுக் கொள்வதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் போது அதற்கு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதென்பது பாரிய சவாலாக அமையக்கூடும்.

உண்மையில் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள் தொடர்பாகவும் அவர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளமை குறித்தும் தென்னிலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்களவர்கள் மத்தியில் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இந்த அபிப்பிராயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.சகல இன, மத சமூங்களும் சமத்துவமாக நடத்தப்படுவதற்கான கொள்கைகளை வகுத்து பாரபட்சமின்றி அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான கருத்தொருமைப்பாடு இதய சுத்தியுடன் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வலியும் விசனமும் துன்பம், அந்நியப்படுத்துவதும் கொண்டு செல்லப்பட்டதன் விளைவாகவே இனநெருக்கடிக்கு இணக்கபூர்வமானதும் மனிதாபிமானதுமான நியாயபூர்வமானதுமான தீர்வொன்றை எட்ட முடியாமல் இருக்கின்றதென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றும் கடந்த காலத்தில் ஏன் நழுவிச்சென்றன என்பது பற்றிய மீளாய்வும் தெளிவான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சம உரிமையையும் நிறைவேற்றக்கூடிய தீர்வை ஏற்கத் தயாராக இருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சி பிரிவினைவாதக் கோஷங்களை எழுப்புவதாக தென்னிலங்கையில் தீவிரமாக பரப்புரை செய்து வரும் இன, மத மேலாதிக்கவாத சக்திகளின் கருத்துக்கள் நியாயபூர்வமற்றவை என்பது பற்றிய புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான தெளிவூட்டல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் எதிர்காலத் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக எதிர்காலத் தலைமுறையினரின் நன்மைக்காக செயற்பட வேண்டும் என்பது பற்றியும் அதிகார பலத்தை பிரயோகிப்பதிலும் பார்க்க வேறுபாடுகளை களைவதற்கு ஆக்கபூர்வமான வழிமுறைகளை கைகொள்வது பற்றியும் அரசியல்வாதிகள் இதய சுத்தியுடன் சிந்திக்கும் மாற்றமே அதிகளவுக்கு தேவைப்படுவதாக தென்படுகிறது.இந்த மாற்றம் ஏற்படும் போது மட்டுமே சமாதான, சகவாழ்வுக்கான அத்திபாரத்தை வலுவடையச் செய்ய முடியும். தப்பெண்ணம், வெறுப்புணர்வு கொண்ட "சுவர்கள்' தகர்க்கப்பட்டு அநீதிகள் சீர்படுத்தப்படும் போதே சகல இன, மதச் சமூகங்கள் மத்தியில் சகவாழ்வு மேலோங்கி வலுப்பெறும்.

thinakkural.lk 22 06 2016