தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?(பகுதி 23) 1956க்குப் பின்னர் தமிழ் அமைச்சர்

18 06 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?(பகுதி 23)  1956க்குப் பின்னர் தமிழ் அமைச்சர்

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, 1965 டட்லி சேனநாயக்க அரசாங்கம் அமைந்தது வரை எந்தத் தமிழரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அதுவரை 'தனிச் சிங்கள அமைச்சரவையாகவே' இலங்கை அமைச்சரவை தொடர்ந்து இருந்தது. 1948 முதல் 1956 வரையான காலப்பகுதியில் ஆட்சிசெய்த அரசாங்கங்களில் சி.சிற்றம்பலம், சி.சுந்தரலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், வி.நல்லையா, சேர். கந்தையா வைத்தியநாதன், எஸ். நடேசன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், 1956இன் பின், 1965 வரை எந்தவொரு தமிழரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிலை 1965 டட்லி சேனநாயக்க தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் அமைந்த போது மாறியது. அத்தோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சௌமியமூர்த்தி தொண்டாமானும்,

வி. அண்ணாமலையும் பிரதிநிதிகள் சபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆர்.ஜேசுதாசனும், எஸ்.நடேசனும் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டார்கள். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரானார் முருகேசன் திருச்செல்வம் 'ஹத் ஹவுள'வின் (ஏழுதரப்புக் கூட்டு) முக்கிய பங்காளியான இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஆட்சியில் பங்குபற்றுவதற்கென 3 அமைச்சுப்பதவிகளை வழங்க, டட்லி சேனநாயக்க தயாராக இருந்தார். 'ஹத் ஹவுளவின்' இன்னொரு பங்காளியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்க டட்லி சேனநாயக்க முன்வந்தபோதும் அதனை ஏற்றுக்கொள்ள ஜீ.ஜீ.பொன்னம்பலம் மறுத்துவிட்டார். தமிழரசுக் கட்சியும் தன்னுடைய முடிவில் தெளிவாக இருப்பதாக அறிவித்தது. தமது இலட்சியமான சமஷ்டிமுறை அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வரை தமிழரசுக் கட்சியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சுப் பதவியை ஏற்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தது. தமிழ்க் கட்சிகள் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயங்கியதன் முக்கிய காரணம், அது அவர்களது தேர்தல் அரசியலை பாதித்துவிடும் என்ற அச்சமாக இருக்கலாம்.

ஆயினும், தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட ஓர் அமைச்சுப் பதவியை, முருகேசன் திருச்செல்வத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற மன்றாடியார் நாயகமான முருகேசன் திருச்செல்வம் நேரடித் தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. ஆனால், 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் உருவாகக் காரணமானவர்களில் முக்கியமானவர். ஆகவே, அவரை செனட் சபைக்கு நியமனம் செய்ததுடன், அவரை அமைச்சராக நியமிக்கவும் டட்லி சேனநாயக்கவும் தயாராக இருந்தார். எம்.திருச்செல்வம் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே சா.ஜே.வே.செல்வநாயகத்தின் கோரிக்கையாக இருந்தது. உள்நாட்டலுவல்கள் அமைச்சராக திருச்செல்வம் இருந்தால், உள்ளக நிர்வாகம் அவரின் கீழ் இருக்கும், இது அதிகாரப்பரவலாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதே இவ்வமைச்சைக் கோரியமைக்கு காரணம் என சா.ஜே.வே செல்வநாயகத்தின் வாழ்க்கைச்சரிதை நூலில், அந்நூலை எழுதிய அவரது மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார். ஆனால், டட்லி சேனநாயக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சை வழங்கத் தயாராக இருக்கவில்லை. அந்த அமைச்சுப் பொறுப்பை முன்னாள் பிரதமர் விஜயானந்த தஹநாயக்கவுக்கு வழங்கவே அவர் விரும்பினார். 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் முக்கிய அதிகாரப் பரவலாக்கல் முன்மொழிவான 'மாவட்ட சபைகளை' உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அடுத்தபடியாக பொறுப்புக்கொண்ட அமைச்சு உள்ளூராட்சி அமைச்சாகும். உள்ளூராட்சி அமைச்சை திருச்செல்வத்துக்;கு வழங்க டட்லி சேனநாயக்க சம்மதித்தார். ஆனால், உள்ளூராட்சி கனிஷ்ட அமைச்சராக தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ரணசிங்க பிரேமதாஸவை டட்லி சேனநாயக்க நியமித்தார். செனட்டர் திருச்செல்வத்தின் அமைச்சுச் செயற்பாடுகளில் ஒரு கண் வைத்துக்கொள்ள டட்லி சேனநாயக்க விரும்பியிருக்கலாம். 1968இல், திருச்செல்வம் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய போது, பிரேமதாஸ உள்ளூராட்சி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் காரணகர்த்தா என்ற வகையிலும், இன்று ஒரே ஒரு தமிழ் அமைச்சராகப் பொறுப்பெடுத்துக்கொண்டவர் என்ற வகையிலும், ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு திருச்செல்வத்தின் தோள்களில் இருந்தது. முதல்படியாக தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேலைகளை எம்.திருச்செல்வம் தொடங்கினார். 

தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் 1966 

1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்களச்' சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், 1958ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த விசேட ஏற்பாடுகளின் கீழ், தமிழ் மொழி மூலமான பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, தமிழ் மொழி மூலம் அரசசேவை பரீட்சைகள் எழுதுதல் (சேவையில் இணைந்தபின் குறிப்பிட்ட காலத்துள் உத்தியோகபூர்வ மொழியை (சிங்களம்) கற்றுத் தேற வேண்டும்), வடக்கு கிழக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிர்வாக விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ மொழிக்கு (சிங்களம்) எந்த பட்சபாதமுமின்றி தமிழில் கருமமாற்றுதல் ஆகிய ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், இவை சட்டரீதியான அங்கிகாரமுடையவை அல்ல. அதாவது இவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், 1958 முதல் 1966 வரை எந்தப் பிரதமரும் இதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

1958ன் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஒழுங்குகளை வரையும் பணியை எம்.திருச்செல்வம் மேற்கொண்டார். மிகச் சுருக்கமாக அமைந்த 1966 தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் பின்வரும் ஏற்பாடுகளைச் செய்தது: சிங்கள மொழியை உத்தியோகபூர்வமொழியாகப் பிரகடனம் செய்த 1956இன் உத்தியோகபூர்வமொழிச் சட்டத்துக்கு ('தனிச்சிங்களச்' சட்டம்) எந்த பாதிப்புமின்றி, தமிழ் மொழியானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சகல அரச மற்றும் பொதுச் செயற்பாடுகளுக்கும், கூட்டுத்தாபனங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுவதுடன், பதிவுகள் பேணப்படும் மொழியாகவும் இருக்கும். 

அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழியில் கருமமாற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களினதும், தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களினதும் தொடர்பாடல் மொழியாகவும் தமிழ் மொழி இருக்கும். சகல சட்டங்கள், கட்டளைச் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள், விதிகள், அறிவிப்புக்கள், வர்த்தமானி அறிவிப்புக்கள், அரச மற்றும் பொது அமைப்புக்களின் உத்தியோகபூர்வ வெளியீடுகள் ஆகியவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும். இந்த தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகளின் வரைவில் 'Tamil shall be used' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதாவது மேற்குறிப்பிட்ட விடயதானங்கள் தொடர்பில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று வரையப்பட்டது. நாடாளுமன்றத்தில் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள் ளப்பட்டபோது, எதிர்க்கட்சியிலிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, 'Tamil shall be used' க்கு பதிலாக, 'Tamil may be used' என்று மாற்றப்பட வேண்டும் எனக் கோரினார். 

அதாவது தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக தமிழ்மொழி பயன்படுத்தப்படலாம் என்று அமைய வேண்டும் என அவர் கோரினார். ஏனெனில், தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் எனச் சொல்லும் போது தமிழ் மொழியின் பயன்பாடு கட்டாயமாக்கப்படுகிறது. அதனை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை. 1958இல் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை பண்டாரநாயக்க நிறைவேற்றியபோது, அதனை எதிர்த்து, கண்டிக்கு பாதயாத்திரை செல்ல ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைப்பட்டார். இம்முறை களம் மாறியிருந்தது. டட்லி சேனநாயக்க தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம், கொண்டுவந்த தமிழ் மொழி விசேட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் சட்ட ஒழுங்குகளை இப்போது எதிர்க்கட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்த்தது. அதனுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணிப் பங்காளிகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் கூட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்ட ஒழுங்குகளை எதிர்த்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 'தனிச்சிங்களச்' சட்டத்தைக் கொண்டு வந்த போது அதனைக் கடுமையாக எதிர்த்து, 'இரு மொழி, ஒருநாடு; ஒரு மொழி இருநாடு' என்று சொன்ன அதே இடதுசாரிக் கட்சிகள், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வேண்டிய அதே இடதுசாரிக் கட்சிகள், இன்று படிப்படியாக தமது கொள்கைளை மாற்றி, பகிரங்கமாக தமிழ் மொழிக்கான குறைந்தபட்ச நடைமுறைப்படுத்தலைக் கூட எதிர்க்கும் நிலைக்கு வந்திருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் வாக்கு வங்கி அரசியலுக்காக தங்களுடைய கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, 'சிங்கள-பௌத்த' பேரினவாத அரசியலிடம் சோரம் போயின. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி இந்த தமிழ் மொழி விசேட சட்ட ஒழுங்குகளை எதிர்த்து பௌத்த பிக்குகளையும் ஒன்றுதிரட்டி, கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியபோது, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை வந்தது. பொலிஸார் 

நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தம்பராவே ரத்னசார என்ற பிக்கு கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்;குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணித் தலைவர்கள் (கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட) 'விகாரமகாதேவி பூங்காவில்' கூடி கொல்லப்பட்ட பௌத்த பிக்குவுக்கு நியாயம் பெறச் சூளுரைத்தனர். ஆர்ப்பாட்டம் கடுமையானது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடத்தலைப்பட்டனர். இதன் போது பொலிஸார் கடுமையாக தடியடி நடத்தினர். தடியடிக்கும் கட்டுப்படாதபோது, துப்பாக்கிச்சூடு நடத்தினர். டட்லி சேனநாயக்க பதற்றம் கொண்டார். உடனடியாக ஆளுநரிடம் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யுமாறும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் வேண்டினார். அவசரகால நிலை உடனடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரகாலநிலை டட்லி சேனநாயக்கவின் ஆட்சிக்காலம் முழுவதும் தொடர்ந்தது. நாடாளுமன்றத்திலும் விவாதம் நடந்தது. அதில் பேசிய சா.ஜே.வே.செல்வநாயகம், 'தனிச்சிங்களச் சட்டம்' நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தநாட்டின் தமிழ் பேசும் மக்களின் சுயமரியாதை இல்லாதொழிக்கப்பட்டது. இந்த தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்ட ஒழுங்குகளை நிறைவேற்றுவதன் மூலம் அந்த சுயமரியாதை ஓரளவுக்கேனும் திரும்பக் கிடைக்கும்' எனக் குறிப்பிட்டார். இறுதியில் இந்தச் சட்ட ஒழுங்குகள் 72 வாக்குகள் ஆதரவாகவும், 40 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் இந்த சட்ட ஒழுங்குகளுக்கு ஆதரவாக வாக்களித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில், இந்த தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட ஒழுங்குகள் என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிப் பாவனையை ஓரளவுக்கு உறுதிப்படுத்தினாலும், வடக்கு-கிழக்குக்கு வெளியே உள்ள தமிழ் மக்களின் நிலை பற்றி பேசவேயில்லை என்பது பெருங்குறையாகும். இதன் மூலம், டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் முக்கிய இணக்கப்பாடுகளிலொன்று குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்டது எனலாம். ஆனால், மற்றைய இணக்கப்பாடுகளுக்கு என்ன நடந்தது? தமிழரசுக் கட்சி ஏன் அரசாங்கத்திலிருந்து விலகியது? அரசாங்கத்திலிருந்து விலகினாலும், ஏன் அரசாங்கம் கவிழாது இருக்க தொடர்ந்தும் வெளியிலிருந்து ஆதரவளித்தது?

yarl.com 25 01 2016