டேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும்

06 07 2016

டேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும்

ஒரு மனிதன் ஒன்றை எதிர்பார்த்து அதீத நம்பிக்கையில் ஒரு முற்சியில் களமிறங்குகிறான். ஆனால் இறைவனோ மறுதலையான தீர்ப்பை வழங்கி விடுகிறான். இதற்கு களநிலைவரங்களும் பலம் சேர்த்து விடுகின்றன. அதீத நம்பிக்கையில் களமிறங்கி அதிர்ச்சித் தோல்வியை இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தது போன்று இங்கிலாந்தில் டேவிட் கமரூன் சந்தித்துள்ளார். இருவருமே பதவியில் இருந்தவாறே மக்களின் தீர்மானத்துக்காக நாட்டு மக்களை நாடினர். மகிந்த தனிப்பட்ட ரீதியாக தனது தொடரிருப்புக்கு முன்கூட்டிய தேர்தல் ஒன்று ஊடாக மக்களின் கருத்தை அறிய முற்பட்ட வேளை அதிர்ச்சித் தோல்வியடைந்ததை அறிந்தோம்.

ஆனால் பொதுவான விடயம் ஒன்றுக்காக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டுமா என்ற கேள்வியை மக்களிடம் பதவியில் இருந்தவாறே கேட்டு மறுதலையான பதிலை பெற்றுக் கொண்டுள்ளார் கமரூன். சர்வஜன வாக்கெடுப்பு கருத்துக் கணிப்பு மக்கள் தீர்ப்பு என பலவாறாக கூறப்படினும் அதுவும் ஒருவகை இராஜாங்க செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு வகைத் தேர்தலே வழக்கமாக பதவியில் இருப்பவர்களாலேயே நடத்தப்படுகின்ற மக்கள் கருத்துக் கணிப்பு தேர்தல்கள் பெரும்பாலும் இல்லை என்பதையும் விட ஆம் என்ற வார்த்தையையே 50 % வீதத்திற்கும் மேலானாதாக பெறுபேறாக்குவதுண்டு. ஆனால் வித்தியாசமானதாகவும் விசித்திரமாகவும் கமரூனை ஏமாற்றமடையச் செய்துள்ள பெறுபேறுக்காக கேட்கப்பட்ட கேள்வி ஐக்கிய இராச்சியத்தின் சமூக, பொருளாதார அரசியல் நலன் சார்ந்தது என சுட்டிக்காட்டப்படுகிறது.

உலுக்கலும் உசுப்பலும்

உண்மையில் மகிந்தவுக்கு கமரூனை பிடித்திருந்தாலும் கமரூனுக்கு மகிந்தவை பிடிப்பதில்லை என்பதை இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பு மாநாட்டின் போது உணர முடிந்தது. இலங்கை மண்ணிலிருந்து கொண்டே சர்வதேசத்துக்கு இலங்கை பற்றிய காரசாரமான கருத்துகளை பரப்புரை செய்தார். தென்னிலங்கையர்களும் அவரை தங்களது காரசாரமான கருத்துகளால் தாக்காமலிருக்கவில்லை. என்றாலும் அதற்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை மக்கள் நிராகரித்தனர். ஆனால் பிரிட்டன் பொதுத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் கமரூனை அங்கீகரித்ததன் விளைவாக பிரதமராக இருந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் சர்வஜன வாக்கெடுப்பு பெறுபேறு உலக அரங்கை உலுக்கி கொண்டிருக்கிறது. கமரூனை உசுப்பிக் கொண்டிருக்கிறது.

பங்காளிக்கு நடந்தது என்ன?

பொதுநலவாய ஜனநாயக பாரம்பரியங்களின் கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பதை உலகுக்கு உணர்த்துவதில் வெற்றி கண்ட ஐக்கிய இராச்சியத்தின் ஐக்கியம் சீர்குலைந்து விட்டது போன்ற பிரமையை ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறு என மக்கள் வழங்கிய தீர்ப்பு உரைப்பதாக உலக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசியல் பொருளாதார ரீதியில் வலுவான நாடாக கருதப்பபடுகின்ற பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலும் ஒரு சிறந்த பங்காளி என்பதனை உலகமறியும் மூன்று தசாப்தத்துக்கும் மேலான பங்காளித்துவம் மக்களால் சுக்கு நூறாக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள், இருப்புகள், ஆதிக்கம், யுத்த வெறியாட்டம், சிம்மாசனம் யாவுமே 30 முதல் 40 வருடங்கள் வரையில் தான் என்ற பொதுவான கருத்தை பிரிட்டன் மக்களின் தீர்ப்பு உணர்த்துவதாக எண்ணத் தோன்றுகிறது. நின்று நிலைத்து நீடிக்கும் பாங்குக்கும் ஒரு வேட்டு வைக்கும் தத்துவம் வாக்குகளுக்குண்டு. என்பது உணரச் செய்யப்பட்டுள்ளது. மக்கள் நினைத்த மாத்திரத்திலும் தலைவர்கள் நினையாப் பிரகாரமும் மாற்றங்கள் இடம்பெற்று விடுவதுண்டு என்பதற்கு பிரிட்டிஷ் மக்கள் வழங்கிய தீர்ப்பு தக்க சான்றாகும்.

அசைத்தாலும் அசைவரா?

எது எவ்வாறாயினும் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான பின்னடைவு தோல்வியைக் கண்டு துவண்டு போயுள்ள கமரூன் பிறர் பதவி விலக வேண்டும் எனக் கோருவதற்கு முன்பாகவே தனது செல்வாக்கு சரிந்திருப்பது கண்டு அக்டோபரில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவிப்புச் செய்தார். தோல்விகளுக்கு விடையளிக்கும் பணியை கையாண்டார் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனரே ஒழிய பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு அல்ல எனக் கூறும் கமரூனுக்கு எதிரான சக்திகள் ஏற்கனவே ஆட்சியில் இருப்பதற்கு மக்கள் வழங்கிய ஆணையில் பிரதமர் பதவியை தொடரலாம் என கூறுகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் அடிமேல் அடி அடித்தாலும் காறித் துப்பினாலும் பதவிகளைத் துறப்பதில் நாட்டமிருப்பதில்லை. தோல்வி கண்டவர்களும் பின்கதவால் நுழைவதற்கு சித்தமாகவும் பிரயத்தனத்துடனும் இருப்பர். அவ்வாறு நடந்தேறியுமுள்ளது. சில சர்வதேச நாடுகளிலும் கதிரை அசைந்தாலும் ஆள் அசையாத செய்திகள் இலங்கைக்கும் தெரியாத விடயமல்ல. என்றாலும் பிரிட்டன் போன்ற நாடுகளில் பதவி விலகல் முன்மாதிரிகளை கடைப்பிடிக்கப்படுவதுண்டு.

முட்டுக் கட்டையும் முனகலும்

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைவரான பிரதமர் கமரூனின் விருப்பத்துக்கு மாறாக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ள தருணத்தில் அமெரிக்கத் தலைவர் ஒபாமாவுக்கும் எதிரிடையான தீர்மானம் கிடைத்துள்ளது. அவரது குடிவரவு, குடியகல்வு கொள்கைக்கு உயர்நீதிமன்றம் தடை போட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் பதவி விலகிச் செல்லக் காத்திருக்கும் ஒபாமாவுக்கு இறுதிக் கட்ட பின்னடைவு போன்று கூறப்படுகின்ற நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தில் நீதிபதிகள் 4 க்கு 4 ஆக பிளவு பட்டுள்ளனர். நிறைவேற்று செயற்பாடு மூலமாக குடிவரவு, குடியகல்வு கொள்கையை மாற்றும் ஒபாமாவின் திட்டம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. வழக்கமாக ஒன்பது நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றம் கடந்த பெப்ரவரியில் நீதியரசர் ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து எட்டாக மாறியது. அவருக்கு பதிலீடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பெயரை சிபாரிசு செய்த ஒபாமாவின் தெரிவுக்கு வாக்களிக்காது செனட் நிராகரித்துவிட்டது. ஒன்பது பேர் கொண்ட குழாம் இருந்திருந்தால் சிலவேளை ஒபாமாவின் எதிர்பார்ப்பு 5 க்கு 4 என்ற அடிப்படையில் கூட பெறுபேற்றைக் கொடுத்திருக்கலாம். அந்த வகையில் குடியேறிகளை உள்வாங்கும் ஒபாமாவின் கொள்கைக்கு முட்டுக் கட்டை போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் விரைவாகவோ அல்லது காலம் தாழ்த்தியோ குடிவரவு சீர்திருத்தம் சீராக்கப்படும் என்ற வாக்குறுதியை அமெரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ளார். எப்படியாயினும் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளதையும்விட பிரிட்டிஷ் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவே முழு உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தக்கதாகும்.

இலங்கையின் பார்வையில்

இந்தப் பின்னணிகளால் இலங்கையிலும் வரும் காலங்களில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்புக்கு சந்தர்ப்பம் உள்ளதை அறிய முடிகின்றது. நிச்சயமாக இரு பெரிய கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பதால் புதிய வாய்ப்புக்கான ஆணை கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியுமாயினும் எதிர்த்தரப்புகள் வாய்மூடிக் கொண்டிருக்கப் போவதில்லை. இல்லை எனும் வார்த்தைக்காக பலம் சேர்க்கக்கூடிய பாதையில் இராஜாங்கத்தாருக்கும் பிரிட்டிஷ் மக்கள் வழங்கிய தீர்ப்பு போன்று ஏற்பட்டு விடுமோ என்று அரசியல் கண்ணோட்டத்தில் கேள்வி எழுப்பலாம். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில பாராளுமன்றத்துக்கு வர அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக போராட்டம் சம்பந்தப்பட்டவர் பாராளுமன்றத்திற்கு வந்திருந்ததன் மூலமும் மத்திய வங்கி ஆளுநருக்கு கல்தா கொடுக்க வேண்டும் என்ற வெளியக போராட்டம் அர்ஜுன மகேந்திரனின் முன்பதான சேவை நீடிப்பை தாம் கோரப் போவதில்லை என்ற சமயோசிதமான கருத்து மூலமும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஒரே வார பிறழ் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்து விட்டதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டாமல் இருக்கத் தேவையில்லை.

பதற்றமும் நிர்மூலமும்

அது அவ்வாறிருக்க பிரிட்டிஷ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பில் விளைவுகள் தெளிவில்லை.ஆனால் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் வெளிக் கொணர்ந்து விட்டது. பொருளாதாரக் கொள்கை, பிற ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகள் மற்றும் உதவி வழங்கும் நேச நாடுகளுடனான உறவுகள் எத்தகைய தாக்கத்துக்குள்ளாகுமோ தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் புதிய பொருளாதாரக் கொள்கையை கைச்சாத்திடுவது பற்றி பிரஷ்தாபிக்கப்படுகிறது. புரட்சியும் புரட்டல்களுமே குறித்த பிரிட்டன் வெளியேறும் நொடிப் பொழுதுக்கு இட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. வேற்றுமையில் ஐக்கியப்பட்டதை இலட்சியமாகவும் இலக்காகவும் கொண்ட நாடுகளின் கூட்டான ஐரோப்பிய யூனியன் 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் மக்கள் அளித்த தீர்ப்பால் அழுத்தத்துக்குள் வீழ்த்தி தீவிர நடவடிக்கை எதற்கும் அவசரப்படத் தேவையில்லை என பூகோள அளவில் பிரஷ்தாபிக்கப்படுகின்ற போதிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளதை மறைப்பதற்குமில்லை ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமை முறைமை நிர்மூலமாகியுள்ளது. தனது பாதையை மாற்றிக் கொள்ளல் மக்களின் குரலுக்கு மதிப்பளித்தல், சீர்திருத்தம் போன்றன பற்றி உலகளாவிய ரீதியில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

நோக்கும் எதிர்பார்ப்பும்

அரசியல் பொருளாதார இலக்குகளைக் கொண்ட யூனியனில் ஸ்தாபக நாடுகளாக பிரான்ஸ், பெல்ஜியம், லக்ஸம்பேர்க், இத்தாலி, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் காணப்படுகின்றன. பிரிட்டனின் பாதையில் பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பின்லாந்து, ஹங்கேரி போன்ற நாடுகள் யூனியனை விட்டு பிரிந்து செல்லும் பாங்கு காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது. பிரான்ஸ் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சகல அங்கத்துவ நாடுகளிலும் ஆற்றுப்படுத்தலுக்கான தரமான சட்ட முறைமைகளூடாக சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன் உள்ளக சந்தையில் பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் மக்களின் இலக்கு நகர்வை நோக்காகக் கொண்டுள்ளது. வர்த்தகம் விவசாயம் கடற்றொழில் மற்றும் பிராந்திய அபிவிருத்தி தொடர்பில் பொதுக் கொள்கைகளை பேணுகிறது. 1999 இல் தாபிப்புக் கண்ட ஒரு நிதி யூனியன் 2002 இல் முழு அமுலாக்கத்துக்கு வந்தது. இதில் 19 அங்கத்துவ நாடுகள் யூரோ நாணயத்தை பயன்படுத்துகின்றன. ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய யூனியன் கவுன்சில், ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம், ஐரோப்பிய யூனியன் மத்திய வங்கி, கணக்காய்வாளர்களின் நீதிமன்றம் எனப்படும் ஏழு முதன்மை தீர்மானமெடுக்கும் அமைப்புகள் காணப்படுகின்றன.

ஐரோப்பிய யூனியன் ஆணைக்குழுவின் தலைவராக ஜீன் க்ளோட் ஜன்காவும் கவுன்சிலின் தலைவராக டொனால்ட் டஸ்க்கும் பாராளுமன்றத்தின் தலைவராக மார்டின் ச்சூஸும் காணப்படுகின்றனர். 2012 இல் ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் சமாதானப் பரிசு அளிக்கப்பட்டது. பொதுவான வெளிநாட்டு நாணயமாற்று கொள்கையூடாக வெளிவிவகார உறவுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்னேற்றமடைந்துள்ளது. உலகம் பூராகவும் ஐரோப்பிய யூனியன் நிரந்தர இராஜதந்திர உறவுகளை பேணி உலக வர்த்தக ஸ்தாபனம் எ8, எ20 போன்றவற்றை ஐ.நா. வில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் பூகோள செல்வாக்கு காரணமாக இது ஒரு ஆற்றல் நிறைந்த உயர் சக்தியாக விபரிக்கப்படுகிறது. இதேவேளையில் பிரிட்டிஷ் மக்கள் தீர்ப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்ற போதிலும் கமரூன் யூனியனில் தங்கியிருப்பதற்காக இலட்சக்கணக்கான மக்களின் விருப்பத்தை இதுவரையில் இணையம் வாயிலாக முடுக்கிவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஒரு பொதுவான தேர்தல் மூலமாக மக்கள் தங்களது தீர்ப்பையும் தீர்மானத்தையும் அறிவித்த பிறகு எந்தளவுக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறாமல் இருப்பது சாத்தியம் என்பது கேள்விக்குறியல்லவா?
கட்டுரையாளர் சட்டத்தரணி சுயாதீன தேசிய முன்னணியின் தலைவர் ஒலி, ஒளி பரப்பாளர்.

thinakkural.lk 27 06 2016