தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 26) கசக்கத் தொடங்கிய தேனிலவு

09 07 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 26) கசக்கத் தொடங்கிய தேனிலவு

'டட்லிகே படே, மசாலா வடே'
'டட்லிகே படே, மசாலா வடே' ('டட்லியின் வயிற்றில், மாசாலா வடை') என்பது 1965 முதல் 1970 வரையாக டட்லி சேனநாயக்க தலைமையிலான ஏழுதரப்புக் கூட்டணியை விமர்சிக்க, எதிர்க்கட்சிகள் பயன்படுத்திய இனத்துவேசம் மிக்கதொரு சொற்றொடர். 'மசாலா வடை' என்பது தமிழர்களின் உணவுப் பண்டமாகவே பொதுவாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள், சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்பட்டது. இதில் உணவுப் பண்டமொன்று குறிப்பிடப்படுவதற்கு இன்னொரு சுவாரஷ்யமான காரணமும் உண்டு. அது டட்லி சேனநாயக்கவின் உணவுக்கான வேட்கை. டட்லி சேனநாயக்க பற்றி எழுதிய பலரும், அவரது போஜனப் பிரியம் பற்றியும் எழுதத் தவறவில்லை. பிரதமர் டட்லியின் உணவுப் பிரியத்தையும், இனத்துவேசத்தையும் ஒன்றுபடுத்தி உருவான சொற்றொடர்தான், 'டட்லிகே படே, மசாலா வடே'.

இந்தத் தொடர் விமர்சனங்கள், பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கும் கடுஞ்சவாலாக இருந்தது. இலங்கை தமிழரசுக் கட்சியுடனான கூட்டும், கொஞ்சம் கசக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியிருந்தன. ஆளுநர் வில்லியம் கொபல்லாவவின் பதவிக்காலம் முடிவை எட்டியிருந்தது. அவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர். இப்போது, ஆளுநர் நியமனம் தொடர்பில் பரிந்துரை செய்யும் வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான டட்லி சேனநாயக்கவுக்கு இருந்தது. நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என்றே எண்ணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் சிலர் ஆளுநர் பதவியை எதிர்பார்த்திருந்தனர். இதில் குறிப்பிடத்தக்க ஒருவர் முன்னாள் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல. ஆனால், பிரதமர் டட்லி சேனநாயக்க என்ன காரணத்தினாலோ ஆளுநர் பதவியை சேர் ஜோன் கொத்தலாவலவுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய முன்வரவில்லை. வேறு எந்தத் தெரிவுகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில், அன்று ஆளுநராக இருந்த வில்லியம் கொபல்லாவவுக்கு இன்னொரு பதவிக்காலத்தை வழங்க டட்லி சேனநாயக்க முடிவெடுத்தார்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன - டட்லி சேனநாயக்க ஆகியோருக்கிடையான உறவும் விரிசலடைந்திருந்தது. தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதாக டட்லி சேனநாயக்க உணர்ந்தார். தனது பிரதமர் பதவிக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒருவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மட்டும்தான் என அவர் நினைத்திருக்கலாம், ஆகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை கொஞ்சம் தூரமாகவே வைத்திருந்தார். பிரதமர் டட்லியின் சந்தேகக்கண் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் பக்கமும் திரும்பியது. தன்னுடைய பிரதமர் பதவியை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அடைய வேண்டுமெனில் அது எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் உதவியின்றி நடக்க முடியாது என்று டட்லி நினைத்தார். 'ஏழுதரப்புக் கூட்டணியின்' பத்துப்பேர் கொண்ட உயர்குழாமில் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவும் ஓர் அங்கத்தவர், அந்த குழாமும் கலைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான சிறில் மத்தியூஸுடனான

டட்லி சேனநாயக்கவின் உறவும் பலவீனமடைந்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, 1965இல் ஏழுதரப்பு கூட்டணி அமைத்தாலும், அது ஆட்சிக்கு வருவதற்கு பௌத்த பிக்குகளின் ஆதரவைத் திரட்டிய பெருமை முன்னாள் பிரதம நீதியரசர் ஹேம பஸ்நாயக்கவையே சாரும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கெதிராக பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கச் செய்தவர் அவர். டட்லி சேனநாயக்க-ஹேம பஸ்நாயக்க ஆகியோருக்கிடையான உறவும் விரிசலடைந்திருந்தது.
இத்தகைய உட்கட்சிப் பூசல்களும், முரண்பாடுகளும் மிக்கதொரு சூழலில் தன்கட்சியையும், எழுதரப்புக் கூட்டணியையும் நிர்வகிக்கும் பெருஞ்சவால் பிரதமர் டட்லி சேனநாயக்க முன்பு இருந்தது. இதில் குறிப்பான தமிழரசுக் கட்சியுடனான தேனிலவுக் கூட்டணி, பிரதமர் டட்லிக்கு பெருஞ்சவாலைத் தந்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்குமான சந்திப்பொன்றின் போது ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும், அமைச்சர் திருச்செல்வத்துக்கும் கடும் முரண்பாடொன்றும் ஏற்பட்டது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை இதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

'இராணி அப்புக்காத்துக்கும், இராணி அப்புக்காத்துக்கும் சண்டை'

தமிழ்க் கட்சிகளிடையேயான உறவும் சுமுகமாக இருக்கவில்லை. குறிப்பாக இருபெரும் தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) என்ற இரண்டுக்குமிடையிலான பாரம்பரிய மோதல் தொடர்ந்துகொண்டு இருந்தது. இவ்விரு கட்சிகளும் டட்லியின் ஏழுதரப்புக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தாலும், ஒன்றையொன்று தாக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பயன்படுத்திக்கொண்டன. இந்த முறுகல் நிலையை அமைச்சர் திருச்செல்வத்தின் கனிஷ்ட அமைச்சராக இருந்த ரணசிங்க பிரேமதாஸ, நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இலங்கையின் புகழ்பூத்த ஓர் இராணி அப்புக்காத்துவுக்கு (அமைச்சர் திருச்செல்வத்துக்கு) சார்பாக, இன்னொரு புகழ்பூத்த இராணி அப்புக்காத்துவிடம் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) வாதிட வேண்டிய சூழலில் தானிருப்பதாகச் சொல்லியதன் மூலம் சுட்டிக்காட்டினார்.

'மாவட்ட சபைகள்'

மாவட்ட சபைகள் உருவாக்கப்படும் என்ற 'டட்லி-செல்வா' உடன்பாட்டை நிறைவேற்றவேண்டும் என தமிழரசுக் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. தமிழரசுக் கட்சி சார்பில் சா.ஜே.வே.செல்வநாயகம், டொக்டர். ஈ.எம்.வி.நாகநாதன், எம்.திருச்செல்வம், அ.அமிர்தலிங்கம் மற்றும் இராசமாணிக்கம் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழு மாவட்ட சபைகள் பற்றி பிரதமர் டட்லியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் போது பிரதமர் டட்லி 'சில மாதங்கள் கழிந்துவிட்டால், நீங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க மாட்டீர்கள் என்று நான் நினைத்தேன்' என்று சொன்னார், அதற்கு செல்வநாயகம் 'நாங்கள் மக்களாணையின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறோம். தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதே அந்த மக்களாணையாகும். அந்த வாக்குறுதியை நாம் எப்படி மீறுவது? என்று கேட்டார். டட்லி சேனநாயக்கவின் கேள்வி தமிழரசுக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்காமல் இல்லை. ஏனென்றால் டட்லி சேனநாயக்க 'கனவான்தன்மைமிகு அரசியல்வாதியாகவே' அறியப்பட்டார். 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் கையெழுத்தானபோது இருதலைவர்களும் கைலாகு கொடுத்துக்கொண்டனர், அப்போது செல்வநாயகம் டட்லியிடம் 'நான் உங்களை நம்புகிறேன்' என்று சொன்னார், அதற்கு டட்லி 'நான் முப்பது வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஒருபோதும் கொடுத்த சத்தியவாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை' என்று பதிலிறுத்தார். இது நடந்து சில மாதங்களிலேயே 'நீங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க மாட்டீர்கள்' என்று சொன்ன பிரதமர் டட்லியின் நிலைப்பாடு நிச்சயம் யாரையும் அதிர்ச்சிக்குள்ளாகக்கூடியதொன்று தான்.

ஆனால், பிரதமர் டட்லி ஏமாற்றத்தை உடனடியாகவே வழங்கவில்லை. ஜூலை 8, 1966ஆம் ஆண்டு சிம்மாசன உரையில் மாவட்ட சபைகள் ஸ்தாபிப்பது தொடர்பான அரசாங்கத்தின் எண்ணம் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி, மாவட்ட சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்தத் தொடங்கியது. இதன்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன மாவட்ட சபைகளுக்கான சட்டமூல வரைவொன்றை வழங்குமாறு தமிழரசுக் கட்சியைக் கேட்டுக்கொண்டார். இதன்படி அமைச்சர் முருகேசன் திருச்செல்வத்தினால் மாவட்ட சபைகள் தொடர்பான சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டது. பின்வரும் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

01. மாவட்ட சபைகள் குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் ஆகியவர்களையும், மேலும் உள்ளூராட்சி அமைச்சரால் நியமிக்கப்படும் மூவரையும் கொண்டமையும்.
02. சபை நியமிக்கு ஏழு பேருக்கு அதிகமில்லாத ஒரு நிர்வாகக் குழுவினைக் கொண்டமையும்.
03. மாவட்ட சபையான குறித்த மாவட்டத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதுடன் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
04. நிதி அமைச்சரின் அனுமதியுடன், கடன் திரட்டும் அதிகாரம் கொண்டிருக்கும்.
05. அத்தோடு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொறுப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டிருக்கும். குறித்த விடயங்கள் விவசாயம், உணவு, கால்நடை, தொழிற்றுறை, மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, பிராந்திய திட்டமிடல், கல்வி (குறிப்பிட்ட), கலாசார அலுவல்கள், பாரம்பரிய மருத்துவம், சமூக நலன்புரி மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
06. மத்திய அமைச்சர்களுக்கு மாவட்ட சபைகளை இயக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் இருக்கும். அரசாங்க அதிபர் மாவட்ட சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருப்பார்.
07. ஒரு மாவட்ட சபைக்கு மற்றொரு மாவட்ட சபையுடன் ஒன்றிணையும் அதிகாரம் இல்லை.

இவ்வாறாக மாவட்ட சபைகள் பற்றிய சட்ட மூலம் வரையப்பட்ட பொழுது, எதிர்க்கட்சிகள் இதுபற்றிய கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தன. டட்லி சேனநாயக்க எமது தாய்நாட்டை தமிழரசுக் கட்சியிடம் அடகு வைத்துவிட்டார் என்ற பிரசாரங்கள் எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டன. ஒக்டோபர் 17, 1966இல் உரையாற்றிய டட்லி சேனநாயக்க: 'எனது எதிரிகள் நான் சமஷ்டிக் கட்சியினருடன் (தமிழரசுக் கட்சி) ஒப்பந்தமொன்று செய்துவிட்டதாக அண்மைக்காலத்தில் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். நான் செய்ததெல்லாம் சமஷ்டிக் கட்சியினரின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்றை அமைத்ததுதான். இது தேசிய அரசாங்கம். இந்நாட்டின் பல்லின, பல்மத மக்களின் ஆதரவுடன், ஒத்துழைப்புடன் உருவான தேசிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தின் நோக்கம் கடந்த 9 வருடங்களான இந்நாட்டுக்கு மறுக்கப்பட்ட பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதாகும்' என்று பேசினார்.

1966 நவம்பரில் மன்னாரில் தமிழரசுக் கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் திருச்செல்வம், தான் சமஷ்டித் தீர்வையே விரும்புவதாகவும், அந்நிலைப்பாடில் தான் உறுதியாக இருப்பதாகவும் உரையாற்றினார். இந்தப் பேச்சு டெய்லி நியூஸ் பத்திரிகையில் 'சமஷ்டியே சிறந்ததொரு அரசாங்க முறை என்கிறார் திரு' என்ற தலைப்பில் வெளியானது. இது அரசாங்கத்திற்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின் நடந்த அரசாங்க தரப்புப் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் இது விவாதப் பொருளானது. பிரதமர் டட்லி சேனநாயக்க, அமைச்சர் திருச்செல்வத்தின் கருத்தைக் கண்டித்தார். அமைச்சரான அவர் ஒரு கருத்தைச் சொல்லும் போது, அது அரசாங்கத்தின் கொள்கையாகவே பார்க்கப்படும் எனவும் ஆகவே, கூட்டுப்பொறுப்பு நிமித்தம் இதுபோன்ற கருத்துச் சொல்வதை அவர் தவிர்க்க வேண்டும் எனவும் கண்டிப்புடன் கூறினார். இந்த நிலையில் திருச்செல்வம் பதவி விலகுவதை சா.ஜே.வே.செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் தடுத்துவிட்டாலும், இங்கு ஆரம்பித்த விரிசல், ஐக்கிய தேசியக் கட்சி-தமிழரசுக் கட்சியின் தேனிலவுக் கூட்டணியை முடிவினை நோக்கி அழைத்துச் சென்றது

yarl.com 15 02 2016