ஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம்

13 07 2016

ஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம்

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்களுக்கிடையில் பல பிளவுகள் ஏற்பட்டன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துக்களையும் பணத்தையும் கையகப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த பிளவுகள் அனைத்தும் ஏற்பட்டன.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டது என அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி.என அழைக்கப்படும் கே.பத்மநாதன் அறிவித்ததை தொடர்ந்து மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டது.

தலைவர் பிரபாகரன் இல்லை என்று ஒரு தரப்பும் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார், மீண்டும் வருவார், ஆயுதப்போராட்டம் தொடரும் என ஒரு தரப்புமாக முட்டி மோதிக்கொண்டன. இந்த மோதல்கள் இன்றும் தொடர்கிறது.கே.பியிடம் பெருந்தொகை சொத்துக்களும் பணமும் இருந்தாலும் அதை விட தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார், மீண்டும் வருவார் என்ற தரப்பிடமே அதை விட பெருந்தொகை பணமும் சொத்துக்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வெளிநாடுகளில் இருக்கும் பணத்தையும் சொத்துக்களையும் இலக்கு வைத்து தமிழ்நாட்டில் உள்ள பழ.நெடுமாறன், சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்கள் மீண்டும் ஆயுதப்போராட்டம் என முழுங்கி வருகின்றனர்.

மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகளின் அசையும் அசையாக சொத்துக்கள் மதிப்பிடமுடியாதவை. ஓவ்வொரு நாடுகளிலும் வர்த்தக நிலையங்கள், கப்பல்கள், என கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தன. இது தவிர வங்கிகளில் பெருந்தொகை பணமும் பல்வேறு நபர்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டிருந்தன.ஓவ்வொரு நாடுகளிலும் உள்ள விடுதலைப்புலிகளின் கிளைகள் வங்கிக்கணக்குகளிலும் மறைமுகமாகவும் பணத்தை வைத்திருந்த அதேவேளை சர்வதேச பிரிவிடமும் கையளிக்கப்பட்டிருந்தது.2009 ஜனவரிக்கு பின்னர் மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் எதுவும் வன்னிக்கு பணமாகவோ ஆயுதமாகவோ சென்றடையவில்லை என்பது இறுதி யுத்தம் வரை களத்தில் நின்று தப்பி வந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் வசூலிக்கப்பட்ட பணங்கள் யுத்தம் நிறைவடைந்த 2009 மே 19ல் அந்தந்த நாடுகளின் கிளைகளிடமும் சர்வதேச கிளைகளிடமுமே இருந்தன.இந்த பணத்தை இலக்கு வைத்தே விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரிவில் பாரிய பிளவு ஏற்பட்டது.கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதன் தலைமையிலும், நெடியவன் தலைமையிலும் இரு பெரிய பிரிவுகளாக பிளவு பட்ட அதேவேளை அதற்குள்ளும் இப்போது பிளவுகள் ஏற்பட்டு பல பிரிவுகளாகி உள்ளன. கே.பி. கைது செய்யப்பட்ட பின் வெளிநாடுகளில் கே.பியின் கீழ் இருந்த சொத்துக்களை நோர்வேயிலிருக்கும் சர்வே என்பவர் உட்பட பலர் தமதாக்கி கொண்டனர்.

கே.பி குழுவை விட நெடியவன் தலைமையிலான குழுவிடமே பெரும் சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இது தவிர றெஜி தலைமையிலான தமிழர் புனர்வாழ்வு கழகத்திடமும் பெருந்தொகை பணமும் சொத்துக்களும் காணப்பட்டன. இவற்றில் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்த பணத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கிய போதிலும் சொத்துக்கள் றெஜியின் நெருங்கிய சகாக்களின் பெயர்களிலும் உறவினர்களின் பெயர்களிலும் இருந்ததால் அவை தனிநபர்களின் வசம் சென்று விட்டன.

உதாரணமாக கிளிநொச்சியில் றெஜியின் உறவினர்கள் பலருக்கு வீடுகள் காணிகள் என ஏராளமான சொத்துக்கள் இப்போது காணப்படுகிறது. இவை அனைத்தும் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு சொந்தமானவையே.லண்டனில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத் பொறுப்பாளர் றெஜி இன்ரப்போலினால் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவானார். அவர் தலைமறைவான பின்னர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களும் மாயமாக மறைந்துள்ளன.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தலைவர் றெஜியின் குடும்பம் தற்போது தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகிறது. தென்னாபிரிக்காவிலேயே பெருந்தொகையான சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சொத்துக்களுக்களை இலக்கு வைத்தே புலம்பெயர் நாடுகளில் பல பிரிவுகள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்கின்றனர்.மேற்குலக நாடுகளில் உள்ள மக்களிடம் ஆயுதப்போராட்டத்திற்கென பெருந்தொகையான பணத்தை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அனுபவ ரீதியாக கண்டு கொண்டவர்கள் மீண்டும் பணத்தை வசூலிக்க வேண்டுமாக இருந்தால் ஆயுதப்போராட்டம் தான் ஒரே வழி என நம்புகின்றனர். அதற்காகவே மீண்டும் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் அதற்கு ஆதரவு தர வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

புலம்பெயர் தேசங்களில் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் என்ற இலக்கை நோக்கியே நகர்த்தப்படுகிறதே தவிர இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி அல்ல.ஜனநாயக கட்டமைப்பாக திகழும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெற்ற காலத்தில் கூட தமிழர் அமைப்புக்களின் செயல்பாடுகள் ஈழத்தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் ஜனநாயக ரீதியான செயல்பாடுகளாக காணப்படவில்லை. மாறாக மீண்டும் ஆயுதப்போராட்டம் என்றும் ஈழப்பிரகடனம் என்றும் கூறி வெறும் உணர்ச்சி அரசியலை செய்வதிலேயே காலத்தை கடத்தியிருந்தனர்.

இதேவேளை மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகளின் பணத்தை இலக்கு வைத்து தமிழகத்திலும் பல இயக்கங்கள் உருவாகின. அவற்றில் முக்கியமானவை சீமானின் நாம் தமிழர் கட்சி, திருமுருகன் காந்தி என்ற நபரின் தலைமையிலான மே 17 இயக்கம் என்பன முக்கியமானவையாகும்.

மே 17 இயக்கம் என்பது விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட தினத்தை கொண்டாடும் முகமாக இந்திய றோ உளவு அமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த இயக்கத்தின் இலக்கு ஈழத்தமிழர்கள் அரசியல் தீர்வை நோக்கி நகர்வதை தடுப்பது. இரண்டாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பணத்தையும் சொத்துக்களையும் அபகரிப்பது. இந்த இலக்குகளை நகர்த்துவதில் இந்திய அரசும் அதன் உளவு அமைப்பான றோவும் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தியை மிக நேர்த்தியாக வழிநடத்தி வருகின்றன. இதனை அண்மையில் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் போது அவதானிக்க முடிந்தது.

ஐ.நா.மனித உரிமை பேரவை என்பது நாடுகளில் மனித உரிமை விடயங்களை கையாளும் அமைப்பே தவிர ஆயுதப்போராட்டத்தையோ தீவிரவாதத்தையோ ஆதரிக்கும் அமைப்பு அல்ல. ஐ.நா.மனித உரிமை பேரவை இலங்கையின் இனப்பிரச்சினை என்பதை விட இலங்கையில் இறுதி யுத்தகாலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் இராணுவ ஆக்கிரமிப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை என்பன பற்றியே அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை ஐ.நா.மனித உரிமை பேரவையிலோ அல்லது இராஜதந்திரிகள் மட்டத்திலோ முன்வைப்பதற்கு தமிழகத்திலிருந்து ஜெனிவாவுக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த விடயங்களை கையாள்வதற்கு இலங்கையிலும் மேற்குலக நாடுகளிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பலர் உள்ளனர். இலங்கையில் தமிழர் பிரதேசங்களின் உண்மை நிலவரங்களை இலங்கையிலிருந்து வரும் அரசியல் செயல்பாட்டாளர்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்களிடமிருந்தே ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிக்கள் பெற விரும்புவர். தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களிடமிருந்து இலங்கையின் தமிழர் பிரதேச நிலவரங்களை பெற எந்த இராஜதந்திரியும் முற்பட மாட்டார்.இந்நிலையிலேயே அண்மையில் ஜெனிவாவுக்கு வந்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி என்பவர் ஜெனிவாவில் பக்க அறை ஒன்றில் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஈழப்பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

1980ஆம் ஆண்டுகளின் பின் இந்தியாவின் றோ உளவு அமைப்பு தமிழீழம் என புறப்பட்ட தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சிகளையும் ஆயுதங்களையும் பண உதவிகளையும் வழங்கியது. அப்போது இந்தியா தமிழ் ஈழத்தை பெற்றுத்தருவதற்காக எமக்கு உதவி செய்கிறது என ஈழத்தமிழர்கள் பலரும் நம்பினர். தமிழ் இயக்கங்கள் அனைத்தும் நம்பின. தமிழீழ போராட்டத்தை இந்திய அரசும் இந்திய உளவு அமைப்பான றோவும் ஊக்குவித்தன. ஆனால் இந்திய றோ உளவு அமைப்பிற்கோ இந்திய அரசிற்கோ தமிழீழத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் இயக்கங்களை தமது தேவைக்கு பயன்படுத்தும் இலங்கை அரசை தனது வழிக்கு கொண்டுவருவதுதே அவர்களின் இலக்காக இருந்தது. இதற்காகவே தமிழர் தரப்புக்கு உதவி செய்வதாக ஈழத்தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இந்திய தரப்பு நாடகம் ஆடியது.

அதே நிலைதான் இன்றும் காணப்படுகிறது. மே 17 இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி திருமுருகன் காந்தி போன்றவர்கள் ஊடாக ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக காட்டிக் கொண்டு தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதே இந்தியாவின் நோக்கமாகும்.2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து 6 மாதங்களின் பின் ஐரோப்பாவிற்கு வந்த பழ.நெடுமாறனின் மகள் மாவீரர் தின நிகழ்ச்சி மற்றும் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை சந்தித்த அவர் நீங்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிப்பீர்களா என்ற கேள்வியையே பிரதானமாக கேட்டார். சிறிது காலத்தின் பின்னர்தான் அவர் இந்திய றோ அமைப்பின் உளவாளியாகவே ஐரோப்பிய நாட்டிற்கு வந்தார் என்பதை இங்குள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களும் செயல்பாட்டாளர்களும் அறிந்து கொண்டனர். அவர் புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய உளவு அமைப்பிற்காக வேலை செய்து திரும்பியிருக்கிறார் என்ற உண்மையை காலம் கடந்தே புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் புரிந்து கொண்டன.

அதேபோன்றுதான் இந்திய உளவு அமைப்பு தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தமிழகத்திலிருந்து சிலரை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. தமிழகத்திலிருந்து வருபவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பணத்திலேயே ஐரோப்பாவிற்கு வருகின்றனர்.வருடத்தில் மூன்று தடவை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கமாகும். கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி என்பவர் தவறாது ஒவ்வொரு தடவையும் சுவிட்சர்லாந்திற்கு வந்து ஒரு மாதம் ஜெனிவாவில் தங்கியிருப்பது மட்டுமன்றி அதன் பின் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விட்டே தமிழ்நாட்டிற்கு செல்வார்.

இவர் முழுநேரமாக இந்த இயக்கத்தின் செயல்பாட்டாளராக இருப்பதாகவும் அறிய முடிகிறது. வருடத்தில் மூன்று தடைவை ஐரோப்பாவிற்கு வருவது நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஐரோப்பாவில் தங்கியிருப்பது உட்பட அனைத்து செலவுகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் அதாவது விடுதலைப்போராட்டத்திற்கென புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் வழங்கிய பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது.ஆயுதப்போராட்டத்திற்கென வங்கிகளில் பணத்தை பெற்று மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளிடம் கொடுத்த பின் அந்த வங்கிக்கடனை செலுத்த முடியாது தற்கொலை செய்து கொண்டவர்கள் பலர். பல குடும்பங்கள் வங்கிக்கடன் பிரச்சினையால் பிரிந்த சம்பவங்களும் உண்டு.

அந்த அப்பாவி மக்களின் பணத்தை இலக்கு வைத்தே தமிழகத்தில் உள்ள மே 17 இயக்கம், சீமானின் நாம் தமிழர் கட்சி, தொல் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, பழநெடுமாறனின் உலக தமிழர் அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கென நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது.அதேபோன்று ஜெனிவாவுக்கு வந்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகிறது.தமிழீழத்தை தங்களால் மட்டுமே பெற்றுத்தர முடியும் என உணர்ச்சி பேச்சுக்களை பேசி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை ஏமாற்றும் தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகளின் நடவடிக்கைகள் அண்மைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருவதையே அவதானிக்க முடிகிறது.

புலம்பெயர் ஈழத்தமிழர்களை ஏமாற்றிப்பிழைப்பதையும் வருமானம் ஈட்டும் தொழிலாகவும் கொண்டு செயல்பட்டு வரும் திருமுருகன் காந்தி போன்ற தமிழகத்தவர்களால் புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் பேராபத்தாகவே முடியும்.தமிழீழ செயல்பாட்டாளர்கள் என்ற பெயரில் தமிழகத்தில் இயங்கி வரும் இந்த போலிகளை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் அரசியல் செயல்பாட்டாளர்களும் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

thinakathir.com 10 07 2016