தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 27) மீண்டும் ஏமாற்றம்

16 07 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 27) மீண்டும் ஏமாற்றம்

என்.கே.அஷோக்பரன் (LLB Hons)

'மாவட்ட சபைகள் வரைவு'
மாவட்ட சபைகள் பற்றிய சட்ட வரைவு, அமைச்சர் திருச்செல்வத்தால் உருவாக்கப்பட்டிருப்பினும், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அல்லது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடியதொன்றாக அது இருக்கவில்லை. ஓர் உள்ளூராட்சி அமைப்பின் வடிவத்தை ஒத்ததாக அமைந்த அது, மத்திய அமைச்சர்களினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இது நிச்சயம், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அதிகாரப்பகிர்வு அல்ல. அன்றைய தமிழ் ஊடகப்பரப்பில் இது 'மா-வட்ட-சபை' அதாவது பெரிய வட்டம், அதாவது சூனியம் - தமிழ் மக்களுக்கு ஒன்றுமே தராத சூனிய சபை என்று விமர்சிக்கப்பட்டது. இந்த வரைவுபற்றிய தகவல் வெளியே கசிந்தபோது, அது தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடம் கூட கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.இலங்கை தமிழரசுக் கட்சியானது, டட்லி சேனநாயக்க ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வழங்கியது, அதில் மாவட்ட சபைகளூடான அதிகாரப் பகிர்வு முக்கியம் வாய்ந்ததொன்று. மாவட்ட சபைகளூடான அதிகாரப்பகிர்வு நடைமுறைப்படுத்தப்படாவிடின் தமிழரசுக் கட்சி, அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமையே அர்த்தமற்றதொன்றாகிவிடும்.

பத்திரிகைகளில் இந்த வரைவு பற்றிய தகவல் கசிந்ததும், டட்லியின் ஆட்சி அமைய உறுதுணையாகவிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் ஹேம பஸ்நாயக்க, குறித்த மாவட்ட சபைகள் வரைவின் பிரதியொன்றைத் தனக்குத் தர வேண்டும் என பிரதமர் டட்லி சேனநாயக்கவை கேட்டுக்கொண்டார். இக்காலப்பகுதியில் ஹேம பஸ்நாயக்கவுடனான டட்லி சேனநாயக்கவின் உறவு விரிசலடைந்திருந்தது.பத்திரிகையாளர் சந்திப்பொன்றைக் கூட்டிய பிரதமர் டட்லி சேனநாயக்க, தன்னிடம் முன்னாள் பிரதம நீதியரசர் ஹேம பஸ்நாயக்க, மாவட்ட சபைகள் சட்ட வரைவின் பிரதியைக் கேட்டிருந்ததாகவும் ஆனால், மாவட்ட சபைகள் பற்றி எந்த சட்ட வரைவும் உருவாக்கப்படவில்லை எனவும். தான் தன்னுடைய அமைச்சர்களுடன் மாவட்ட சபைகள் பற்றி கலந்துரையாடியதாகவும் அத்துடன் சமஷ்டிக் கட்சியினருடன் (தமிழரசுக் கட்சியினர்) அமைச்சர் திருச்செல்வத்தின் முன்மொழிவுகள் பற்றிக் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் டட்லியின் இக்கருத்து பற்றி அமைச்சர் திருச்செல்வத்திடம் கேட்கப்பட்டபோது, அவர் கருத்துக்கூற மறுத்ததுடன், தேவையான பதிலைப் பிரதமர் ஏற்கெனவே வழங்கிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

1965 முதல் 1970 வரையான டட்லி சேனநாயக்க தலைமையிலான எழுதரப்புக் கூட்டணி ஆட்சியில், மொத்தமாக 15 இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன. இதில் அநேகமானவற்றில் அரசாங்கம் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் தோல்வியையே சந்திக்க வேண்டியதாகவிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க இடைத் தேர்தல் கல்முனைத் தொகுதிக்கான இடைத் தேர்தலாகும். 1968 பெப்ரவரி 18 அன்று இடம்பெற்ற கல்முனை தேர்தல் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக (அரசாங்கம் சார்பாக) மசூர் மௌலானா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக எம்.ஸி.அஹமட் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.இந்த இடைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். கல்முனை இடைதேர்தல் தோல்விக்கு பின்பு 'மாவட்ட சபைகள் சட்டமூலத்தை' ஒத்தி வைக்குமாறு அரசாங்கத்தரப்பிலிருந்த பிரதான கட்சியினரிடமிருந்து பிரதமர் டட்லிக்கு அழுத்தம் தரப்பட்டது. அதேவேளை, தமிழரசுக் கட்சி மாவட்ட சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் தந்தது. பிரதமர் டட்லி சேனநாயக்க, அமைச்சர் திருச்செல்வத்தின் மாவட்ட சபைகள் சட்ட வரைவை கலந்துரையாடலுக்குப் பின் ஏற்றுக்கொண்டு அவ்வரைவைத் தனது 'தேசிய அரசாங்கத்தின்' கட்சித் தலைவர்கள் முன்பு சமர்ப்பித்தார்.1968 ஏப்ரல் 22ஆம் திகதி குறித்த சட்டமூலமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சரவை குறித்த சட்டமூலத்தை ஒவ்வொரு சரத்தாக கவனமாகவும், விரிவாகவும் பரிசீலித்தது. அதன் பின் குறித்த சட்டமூலமானது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக்குழு முன்பு, 1968 மே 21ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

'மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கை'

1968 மே 22ஆம் திகதி, சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியின் குழுவொன்று, பிரதமர் டட்லி சேனநாயக்கவைச் சந்தித்து தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பதாக மாவட்ட சபைகள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.தான் இப்போது அதனைச் செய்யும் நிலையில் இல்லை என்று கூறிய பிரதமர் டட்லி சேனநாயக்க, இதைச் செய்ய முடியாமைக்காக தான் பதவி விலகத்தயார் என்று தமிழரசுக் கட்சி குழுவினரிடம் கூறினார். நீங்கள் பதவி விலகுவதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்று செல்வநாயகம், பிரதமர் டட்லியிடம் தெரிவித்தார். கலந்துரையாடல்களுக்கு பின்பு, மாவட்ட சபைகள் பற்றிய அரசாங்கத்தின் கொள்கையைப் பிரகடனம் செய்யும் ஒரு 'வெள்ளை அறிக்கையை' (அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் டட்லி சேனநாயக்க இணக்கம் தெரிவித்தார்.

1968 ஜூன் 7ஆம் திகதி மாவட்ட சபைகள் குறித்த வெள்ளை அறிக்கையானது, அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மாவட்டத்துக்கு ஒன்று என்ற ரீதியில் 22 மாவட்ட சபைகள் அமைக்கப்படும் எனவும், குறித்த சபைகள் அரசாங்கத்தின் நெறிப்படுத்தலின் கீழும், கட்டுப்பாட்டின் கீழும் செயற்படும் எனவும், காலத்துக்குக் காலம் மாவட்ட சபைகளுக்கு பொதுவான அல்லது குறிப்பிட்ட நெறிப்படுத்தல்களை வழங்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு உண்டு எனவும், அந்நெறிப்படுத்தல்களின்படி ஒழுகுதல் மாவட்டசபைகளின் கடமை எனவும் குறித்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தமிழ் மக்கள் விரும்பிய அதிகாரப்பகிர்வே அல்ல. இது அதிகாரப்பரவலாக்கலும் அல்ல. குறிப்பாக, தமிழ் மக்களை இது எந்த வகையிலும் திருப்திப்படுத்தப்படவில்லை. ஆனால், இதைக்கூட எதிர்த்தரப்பிலிருந்து சிங்களக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதை நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சதி என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. எழுதரப்புக் கூட்டணி அரசாங்கமானது, மாவட்ட சபைகளை அமைப்பதன் ஊடாக சிங்கள மக்களை, தமிழர்களிடம் விற்கப்பார்க்கிறது என இனவாதத்தைத் தூண்டும் விசமப் பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஒரு 'கிளிஷே'-வான இந்தப் பிரசாரம் மாறிப்போனது. எப்போதெல்லாம் அதிகாரத்திலுள்ள அரசாங்கம் (அது எந்தக் கட்சியாக இருப்பினும்) இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவொரு தீர்வை முன்வைக்கும் போதும் எதிர்க்கட்சிகள் (அது எந்தக் கட்சியாக இருப்பினும்) 'நாட்டைத் துண்டாடுகிறார்கள், சிங்கள மக்களைத் தமிழ் மக்களிடம் விற்றுவிடுகிறார்கள், சிங்கள மக்களை இல்லாதொழிக்க முயல்கிறார்கள்' என்ற ரீதியிலான பிரசாரத்தை முன்னெடுத்தன, முன்னெடுக்கின்றன.குறிப்பிட்ட அந்த தீர்வு முன்மொழிவானது, தமிழ் மக்களுக்கு எந்தவொரு அதிகாரத்தையும் தராது, சூனியமான, அர்த்தமற்றதொரு முன்மொழிவாக இருப்பினும் கூட, அதனைப் பூதாகரப்படுத்தி நாட்டைத் துண்டாடும், சிங்கள மக்களை இல்லாதொழிக்கும் சதி என்பது போலான பிரசார யுக்தியை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பது இந்நாட்டின் 'பழக்கவழக்கமாகவே' மாறிவிட்டது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஏனைய அனைத்து பேரினவாதக் கட்சிகளும் செய்திருக்கின்றன.

மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் வி.நவரட்ணம் மற்றும் ஆர்.ஜி.சேனநாயக்க ஆகியோர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் வெள்ளை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.ஹபராதுவவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ப்றின்ஸ் குணசேகர குறித்த வெள்ளை அறிக்கையின் பிரதியொன்றை தீயிட்டுகொழுத்தி அவையின் மையத்தில் வீசியெறிந்தார். இந்த தீயிட்டுக் கொழுத்தும் 'பழக்கமும்' இலங்கை அரசியலில் பிரிக்கப்படமுடியாத ஒன்றாகிவிட்டது.

எதிர்கட்சிகள் ஹைட் பார்க் கோனரில் எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்தின, அங்கும் மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கையின் பல பிரதிகள் கொழுத்தப்பட்டன. கொழும்பு நகர மண்டபத்தில் கூட்டமொன்றை நடத்திய பௌத்த மகா சங்கமும், மாவட்ட சபைகளுக்கு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தன.எதிர்க்கட்சி வரிசையில் வெளிநடப்பு செய்யாது இருந்த இருவரில் ஒருவரான வி.நரவட்ணம் (தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்திய ஆட்பதிவு சட்டமூலத்தை எதிர்த்து, அரசாங்கத்துக்கெதிராக வாக்களித்ததால், தமிழரசுக் கட்சியிலிருந்து, தமிழரசுக் கட்சியினரால் நீக்கப்பட்டவர்) 'தமிழ் மக்களின் பார்வையைப் பதிவு செய்வதற்காகவே தான் அவையில் இருந்ததாக' தனது நூலில் பதிவு செய்கிறார். 'சிங்கள அரசாங்கங்களும், சிங்கள அரசியல் தலைவர்களும் தமது வாக்கைக் காப்பாற்றுவார்கள் என இதற்கு மேலும் நம்பப்படமுடியாது.சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து செல்லும் நிலையை அடைந்து விட்டோம். வரலாற்றில் ஒப்பந்தங்கள் எல்லாம் தோற்றுவிட்டன. இதற்குப் பிறகும் தமிழர்கள் ஒப்பந்தங்கள் போடத் தயாராக இல்லை. 'டட்லி-செல்வா' ஒப்பந்தமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கடைசி நம்பிக்கைத் துரோகமாக இருக்கட்டும்.தமிழ் மக்கள் ஆதிகாலத்திலிருந்ததைப் போன்றதொரு தமிழ் அரசை தமிழர்களின் தாயக பூமியான வடக்கிலும் கிழக்கிலும் அமைப்பது ஒன்றே தமிழ் மக்கள் சமத்துவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குரிய ஒரே வழி' என வி.நவரட்ணம் பேசினார்.

அவரது உரையின் போது பிரதமர் டட்லியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் குறுக்கீடு செய்ததாகவும், அவர்களது குறுக்கீட்டின் இயல்பத்தன்மையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது எனினும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குறுக்கீடு செய்ததைத்தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என வி.நவரட்ணம் குறிப்பிடுகிறார். அத்தோடு மாவட்ட சபைகளைக் கைவிடுமாறும், 'தனிச் சிங்களச்' சட்டத்தை தமிழ் மாகாணங்களில் அமுல்ப்படுத்தும் நடவடிக்கைக்குத் துணைபோக வேண்டாம் என்று தமிழரசுக் கட்சியினரிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் வி.நவரட்ணம் பதிவு செய்கிறார்.தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்பு, தமிழரசுக் கட்சியின் குழுவொன்று 1968 ஜூன் 30 அன்று, பிரதமர் டட்லி சேனநாயக்கவைச் சந்தித்து மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையொட்டி நடந்த நிகழ்வுகள் பற்றிய தமது விசனத்தைப் பதிவு செய்தனர். பிரதமரின் சந்திப்பின் பின்பான பத்திரிகையாளர் சந்திப்பில், அது ஒரு வெளிப்படையானதும், நேரடியானதுமான கூட்டமாக அமைந்தது என்றும் 'திரு.பண்டாரநாயக்க எங்களைக் கைவிட்டார்;. திருமதி. பண்டாரநாயக்கவும் எங்களைக் கைவிட்டார்;. இப்போது நீங்களும் எங்களைக் கைவிட்டு விட்டீர்கள்' என்று தான் பிரதமர் டட்லியிடம் சொன்னதாகவும் சா.ஜே.வே.செல்வநாயகம் கூறினார்.

இந்தக் காலப்பகுதியில்தான், தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்கள், சிங்களம் கற்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலவரையறை நிறைவை நெருங்கியது. காலவரையறை நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்தது. பிரதமர் டட்லி சேனநாயக்க இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தாலும், மொழித் திணைக்களம் பத்மநாதன், சுரேந்திரநாதன், குலமணி என்ற மூன்று தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வ மொழி அறிவின்மையைக் காரணம் காட்டி, அதாவது சிங்களமொழி அறிவின்மையைக் காரணம் காட்டி சேவையிலிருந்து நீக்கியது. தமிழரசுக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தபோதே இந்த வேலை நீக்கம் நடந்தது.

yarl.com 23 02 2016