தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 31) ஜே.வி.பியின் 1971 ஆயுதப்புரட்சி

13 08 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 31) ஜே.வி.பியின் 1971 ஆயுதப்புரட்சி

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

ரோஹண விஜேவீரவின் விடுதலையும் ஜே.வி.பியும் வளர்ச்சியும்
ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், ரோஹண விஜேவீரவையும் ஜனதா விமுக்தி பெரமுணவின் (ஜே.வி.பி) ஏனைய இளைஞர்கள் 12 பேரையும் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து ஜே.வி.பியினர் தமது அரசியலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியதுடன், தமது பத்திரிகையான 'ஜனதா விமுக்தி'யை (மக்கள் விடுதலை) பிரசுரிக்கவும் தொடங்கினர். ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், தாம் வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி தொடர்ந்து அழுத்தம் தந்தது.குறிப்பாக வங்கிகளை தேசியமயமாக்கல், பெருந்தோட்டங்களை அரசுடமையாக்கல், காணிச்சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருதல் மற்றும் ஏனைய சோசலிச திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜே.வி.பி. அழுத்தம் தந்தது. இலங்கையை அடக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டெடுப்பதுடன், இலங்கை இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையைத் தீர்ப்பதும் தமது நோக்கம் என ஜே.வி.பி கூறியது. பிரித்தானிய காலனித்துவம் இந்திய விரிவாக்கம் முதலாளித்துவத்தின் கொடுங்கரங்கள் என்பவற்றை தாம் அழித்தொழிக்க விரும்புவதாக ஜே.வி.பி கோசமிட்டது.

ஆனால், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினுடைய சோசலிச திட்டங்களை நிறைவேற்றத் தாம் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டது. 1970 ஓகஸ்ட் 10ஆம் திகதி கூட்டமொன்றில் உரையாற்றிய ரோஹண விஜேவீர, 'இந்த அரசாங்கம் தான் வாக்குறுதியளித்த சோசலிசத் திட்டங்களை நிறைவேற்ற நாம் முழுமையான ஆதரவளிப்போம், ஆனால், அதனை அது செய்யத் தவறுமாயின், நாம் அதனைச் செய்வோம்' என்று பேசினார். ஜே.வி.பி கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. குறிப்பாக பின்தங்கிய பிரதேச இளைஞர்கள் ஜே.வி.பியினரின் ஆவேசப் பேச்சுக்களின்பால் ஈர்க்கப்பட்டு அவ்வமைப்பில் சேரத் தொடங்கினர்.குறிப்பாக, 25 வயதுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்றிருந்த இளைஞர்கள் பெருமளவில் ஜே.வி.பியுடன் இணைந்து கொண்டனர். வேலையின்மை, அதிகரித்துவந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பன இந்த இளைஞர்களை ஜே.வி.பியின் 'சோசலிச சொர்க்கம்' பற்றிய பேச்சுக்கள் மீது ஈர்ப்படையச் செய்தது. பொதுவாக 'ஐந்து பேருரைகளை' கொண்ட நிகழ்ச்சித் திட்டம் ஜே.வி.பி.யினால் இளைஞர்களுக்கு நடத்தப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் ஜே.வி.பி பிரபலமடைந்து கொண்டு வந்தது.

இதேவேளை, பொலிஸ் உளவுப்பிரிவும் ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியது. ரோஹண விஜேவீரவையும் ஏனைய 12 இளைஞர்களையும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கைது செய்தது என்ற காரணமே, ஸ்ரீமாவோ அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யக் காரணம். ஆனால், தன்னுடைய அரசாங்கத்தையே ரோஹண விஜேவீர ஆட்டம் காணச் செய்வார் என்று அன்று ஸ்ரீமாவோவோ அவருடைய தோழர்களோ எண்ணியிருக்க வாய்ப்பில்லை!1970லிருந்து 1971க்குள் ஜே.வி.பி. பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. குறிப்பாக தென்னிலங்கையில் பெருமளவு இளைஞர்களைக் கொண்டதொரு சக்தியாக அது வளந்திருந்தது. நாட்டின் தென் மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களின் பின்தங்கிய பிரதேச இளைஞர்களிடையே 'கல்விப் பாசறை' என்ற பெயரில் மார்க்ஸிஸ-லெனினிஸ சித்தாந்தங்களும் அடிப்படைப் போர் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் 'சே குவேரா க்ளிக்' என்றொரு குழு உருவாகியிருந்தது, இதனை புலனாய்வுத்துறையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. 1970களில்,ஜே.வி.பி.யில் ஏறத்தாழ 10,000 இளைஞர்கள் அளவில் இணைந்திருந்தனர். எந்நேரமும் புரட்சி ஒன்றை ஏற்படுத்த ரோஹண விஜேவீர தலைமையில் ஜே.வி.பி தயாராக இருந்தது. ஜே.வி.பியினர், துப்பாக்கிகளையும் நாட்டு வெடிகுண்டுகளையும் வைத்திருந்ததுடன், சீருடை தரித்த படையணியாக உருவாகினர். அத்தோடு பல கொள்ளைகளிலும் இக்குழுவினர் ஈடுபட்டனர். ஒக்கம்பிட்டிய வங்கிக் கொள்ளை, அம்பலங்கொட வங்கிக்கொள்ளை, யோர்க் வீதி கொள்ளை என்பன குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், 1971ஆம் ஆண்டு பெப்ரவரி 27இல், ஜே.வி.பி. கொழும்பில் மிகப்பெரியதொரு பேரணியை நடத்தியிருந்தது. அங்கு கணிசமான அளவில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். பேரணியின் முடிவில் ஹைட் பார்க் மூலையில் நடந்த கூட்டத்தில் பேசிய ரோஹண விஜேவீர, 'தீர்ப்பு நாளை அதிகார வர்க்கமே தீர்மானிக்கும் எப்போது அரசாங்கமானது எம்மைத் தாக்க நினைக்கிறதோ, அன்றுதான் புரட்சி வெடிக்கும்' என சூடு பறக்கப் பேசினார். இறுதியில் 'நாங்கள் கொல்லப்படலாம் ஆனால், ஓங்கி ஒலிக்கும் எங்கள் குரல் மௌனிக்காது' என்று முழங்கினார்.

ஜே.வி.பியின் 1971 ஆயுதப்புரட்சி

1971 மார்ச் 5ஆம் திகதி கேகாலை மாவட்டத்தின், நெலுந்தெனியவிலுள்ள ஜே.வி.பியின் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் வெடிவிபத்தொன்று நடைபெற்றது. அதில் 5 ஜே.வி.பி உறுப்பினர்கள் பலியானார்கள். அங்கு சென்ற பொலிஸாரால் பெருமளவு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பெற்றப்பட்டன. 1971 மார்ச் 13ஆம் திகதி பொலிஸ் விசேட படையொன்றினால் கைது செய்யப்பட்ட ரோஹண விஜேவீர, யாழ். காரைநகர் கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மார்ச் 16ஆம் திகதி கூடிய அமைச்சரவை, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி திட்டமிட்டிருக்கிறது என்று அறிவித்ததுடன், உடனடியாக அவசரகாலநிலையும் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் விளைவாக பொலிஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் குழப்பம் விளைவிக்கும் எவரையும் கைதாணையின்றி கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.மார்ச் 17ஆம் திகதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் ஸ்ரீமாவோ அவசரகாலநிலைக்கு காரணம் 'சே குவேரா கிளிக்' என்று பிரபலமாக அறியப்பட்ட ஜே.வி.பியினர் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டமிட்டமிட்டிருப்பதே எனக்கூறி, அவர்கள் ஈடுபட்டிருந்த வன்முறைச் செயல்களையும் பட்டியலிட்டார். அத்தோடு 'ஒரு தாயாக, எல்லா பெற்றோர்களிடமும் நான் கேட்க விரும்புகிறேன், இப்படியொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ளவா நீங்கள் உங்கள் பிள்ளைகளை அன்போடும் அக்கறையோடும் பல தியாகங்களைச் செய்தும் வளர்த்தீர்கள்? நான் உங்களை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மீது அக்கறை கொள்ளுங்கள், அவர்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் வழியில் செல்லாதவாறு கண்காணியுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.

ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களில் ஜே.வி.பியினர் ஈடுபட்டுவந்த வேளையில், ஏப்ரல் 2ஆம் திகதி சந்தித்த ஜே.வி.பி தலைவர்கள் ஆயுதப் புரட்சியொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டு, அதன் ஆரம்பமாக ஏப்ரல் 5ஆம் திகதி நாட்டின் பலபகுதிகளிலுமுள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்க தீர்மானித்தார்கள். ஏப்ரல் 5ஆம் திகதி அதிகாலை 5.20க்கு வெல்லவாய பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதிலிருந்து, ஜே.வி.பியின் 1971ஆம் ஆண்டு ஆயுதப்புரட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது எனலாம். 92 பொலிஸ் நிலையங்கள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன. இதில் பல பொலிஸ் நிலையங்களிலிருந்து தந்திரோபாய நடவடிக்கையாக பொலிஸார் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 10ஆம் திகதியளவில் தென்மாகாணத்தின் பல பகுதிகள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது.
ஜே.வி.பியினரால் இத்தகைய அளவிலானதொரு ஆயுதப் புரட்சி நடத்தப்படும் என அரசாங்கமோ, புலனாய்வுத்துறையோ ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஸ்ரீமாவோ அரசாங்கம் கதிகலங்கிப்போய் இருந்தது. அவரின் ஆளும் கூட்டணியின் இடதுசாரித் தோழர்கள்கூட இதனை எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் அரசாங்கம் பின்வாங்கியிருந்ததால், உடனடி பதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருந்தது. உடனடியாக முன்னாள் பொலிஸ்மா அதிபரான எஸ்.ஏ.திஸாநாயக்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டு, ஆயுதப் புரட்சியாளர்களுக்கெதிரான நடடிக்கையில் இணைப்பாளராக இயங்கத்தொடங்கினார். இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் டி.எஸ்.ஆர்ட்டிகல தலைமையில், அலரி மாளிகை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய ஸ்தலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், பதில் நடவடிக்கையும் ஆரம்பமானது. ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக வெளிநாடுகளின் உதவியைக் கோரியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி உடனடியாக இராணுவ உதவி வழங்கச் சம்மதித்தார்.

அன்று கிழக்கு பாகிஸ்தான் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. இந்திய வான்பரப்பின் மேலாக பாகிஸ்தானிய விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்ததால், இலங்கைதான் மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கிடையே ஆகாயப் போக்குவரத்துக்கான மையப்பாதையாக இருந்தது. இந்த நன்றிக்கடன் கருதி அன்றைய பாகிஸ்தான் ஆட்சியாளர் யஹியா கான் உடனடியாக சில இராணுவ உதவிகளைச் செய்தார். பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டுமல்லாது ரஷ்யாவும் இராணுவ ரீதியாக உதவிகளை உடனடியாகச் செய்தது.

1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்த ஜே.வி.பியனரின் ஆயுதப் புரட்சி, பல்லாயிரம் இளைஞர்களின் மரணத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உத்தியோகபூர்வமாக ஏறத்தாழ 1,200 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டாலும் ஏறத்தாழ 5,000 பேர் இந்த இரண்டரை மாதகாலத்துக்குள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இதன் பின்னரும் அவசரகால நிலை நீடித்தது, நாடு முழுக்க ஜே.வி.பியை வேரறுக்கும் பணி அரசாங்கத்தினால் முடுக்கிவிடப்பட்டது. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், பலர் கொல்லப்பட்டனர். ஆனால் அரசாங்கம் இதனையெல்லாம் மறுத்தது.

தமிழர்களின் நிலை

இலங்கையில் அன்றிருந்த இனப்பிரச்சினை பற்றி ஜே.வி.பி பேசவில்லை. இனப்பிரச்சினை பற்றி அதற்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. மாறாக அது, வர்க்கப் பிரச்சினை பற்றி மட்டுமே பேசியது. அதிலும் குறிப்பாக சிங்கள இளைஞர்களே அதன் குறியாக இருந்தது. சிங்கள இளைஞர்களின் மார்க்ஸிஸ-லெனினிஸ புரட்சி அமைப்பாகவே ஜே.வி.பி இருந்தது. ஆனால், ஜே.வி.பியின் ஆயுதப் புரட்சியினால் தமிழ் மக்கள் கண்ட பாதிப்பு அதிகம். அன்று முன்னணி தொழில் முயற்சியாளர்களாக நிறைய தமிழர்கள் இருந்தார்கள். கொழும்பில் பல வணிக நிறுவனங்களும் வர்த்தக ஸ்தாபனங்களும் தமிழர்களால் நடத்தப்பட்டு வந்தன. ஜே.வி.பியினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் விளைவாக இந்த வணிக, வர்த்தக நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. மக்கள் புரட்சி என்றும் வர்க்கப் புரட்சி என்றும் ஜே.வி.பினரால் 1971ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சி கொண்டாடப்பட்டாலும் அது சிங்கள இளைஞர்களின் புரட்சியாக இருந்ததேயன்றி, மக்கள் புரட்சியாகவோ அல்லது வர்க்கப் புரட்சியாகவோ கூட அது இருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ஜே.வி.பி.யின் புரட்சி பற்றி குறிப்பிடும் கே.எம்.டி.சில்வாவும், ஹொவர்ட் றிகிங்ஸூம் 'ஆயுதப்புரட்சியானது தோல்வி கண்டமைக்கு அது மக்களாதரவைப் பெறமையே காரணமாகும். புரட்சியாளர்கள் சரியானதொரு மாற்று அரசியல் திட்டத்தை மக்கள் முன் வைக்கவில்லை' என்று குறிப்பிடுகிறார்கள்.

ஜே.வி.பியின் 1971ஆம் ஆண்டு ஆயுதப் புரட்சி இன்னொரு விடயத்தை உணர்த்துவதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாட்டில் முதன் முதலில் ஆயுதம் ஏந்தி அரசைக் கவிழ்க்கப் போராடியவர்கள் சிங்கள இளைஞர்கள். பௌத்தம் போதிக்கும் அஹிம்சைத் தேசத்தில், ஆயுதக் கலாசாரத்தை தமிழ் இளைஞர்களே அறிமுகப்படுத்தினார்கள் என்ற போலி இனவெறி இதிகாசங்கள் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தில், வரலாற்றின் உண்மையான பக்கங்களை ஞாபகப்படுத்துதல் அவசியமாகிறது.

21 03 2016