தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 34) சிறுபான்மையினரைக் கருத்திற்கொள்ளாத அரசியலமைப்புப் பேரவை

03 09 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 34)சிறுபான்மையினரைக் கருத்திற்கொள்ளாத அரசியலமைப்புப் பேரவை

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கான அரசியலமைப்புப் பேரவையை உருவாக்கியதில், தனக்கு தனிப்பட்ட சந்தோஷமொன்று இருப்பதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூறினார். இலங்கையை சுதந்திர சோசலிசக் குடியரசாக்கும், தன்னுடைய கணவரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் கனவினை நிறைவேற்ற தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளதை எண்ணி தான் மகிழ்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் தொடங்கிய போது, அதனைப் பிரதான தமிழ்க் கட்சிகள் எதுவுமே எதிர்க்கவில்லை. மாறாக, அவை புதிய அரசியலமைப்பானது சமஷ்டி வகையிலானதொன்றாக இருக்க வேண்டும் என வேண்டின. இந்த நிலைப்பாடு இன்று வரை மாற்றமடையவில்லை என்பதை நாம் காணலாம்.

இன்றும் கூட புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதான தமிழ்க் கட்சிகள், அரசியலமைப்பு மாற்றத்தை நிராகரிக்கப்போவதில்லை. மாறாக, சமஷ்டி அரசியல் யாப்பொன்றையோ அல்லது குறைந்தபட்சம் தமிழர் பிரதேசங்களுக்கு கூடிய அதிகாரப் பகிர்வை அளிக்கத்தக்க அரசியல் யாப்பொன்றையே வேண்டுவர்.
ஆனால், அன்று 'அடங்காத் தமிழன்' சீ.சுந்தரலிங்கம், இந்தப் புதிய அரசியல் யாப்பு மாற்றத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தற்கு முக்கிய காரணமொன்று உண்டு. சோல்பரி அரசியல் யாப்பின் 29(2)(உ) சரத்தானது, சிறுபான்மையினருக்குரிய பாதுகாப்பொன்றை வழங்கியிருந்தது. சோல்பரி அரசியல் யாப்பின் கீழான இந்தப் பாதுகாப்பு, எக்காலத்திலும் நீக்கப்பட முடியாததொன்றாக இருந்தது. ஆகவேதான் அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாடாளுமன்றத்துக்;கு வெளியிலாக, autochthonous constitution என்ற சித்தாந்தத்தின் வாயிலாக 'அரசியலமைப்பு புரட்சி' ஒன்றினூடாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க விளைந்தது.
இந்த சித்தாந்தத்தின் மூலம், நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயலை நியாயப்படுத்தியவர், அன்றைய அரசியலமைப்பு அமைச்சரும், இலங்கையின் மிகச்சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவருமான கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வா. அந்தக் காலத்தில் constituional autochthony என்ற பதத்தையும், அது சுட்டும் சித்தாந்தத்தையும் அவர் அதிகமாகப் பாவித்தார்.
அந்த சித்தாந்தத்துக்கு அப்பால் நின்று சிந்தித்தால், இது சட்ட விரோதமான ஒரு காரியமாகத் தெரியலாம். சோல்பரி அரசியல் யாப்பிலேயே அந்த யாப்பை திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ ஒரு நடைமுறையிருந்தது, அதைப் பின்பற்றி புதியதொரு யாப்பை உருவாக்குவதே சட்டத்திற்கேற்பான முறை. ஆனால், அப்படிச் செய்யும்போது புதிய அரசியல் யாப்பிலும் சிறுபான்மையிருக்கு பாதுகாப்புதரும் 29(2)(உ) இடம்பெறும்.

ஏனெனில், அது மாற்றப்படவோ, நீக்கப்படவோ முடியாத ஒரு சரத்தாகிறது. 29ஆம் சரத்துக்கு முரணான சட்டமொன்று நிறைவேற்றப்படும் போது நீதித்துறைக்கு அச்சட்டத்தை மீளாய்வு செய்யும் அதிகாரம் இருந்தது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டவாக்கத்துறையின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் என்று அன்றைய அரசியலமைப்பு அமைச்சர் கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வா கருதினார்.ஆகவே, சோல்பரி அரசியல்யாப்புக்கு முற்றுமுழுதாக வேறுபட்டதோர் அரசியல் யாப்பை ஸ்தாபிக்க, autochthonous constitution என்ற சித்தாந்தத்தின் வாயிலாக, நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக அரசியலமைப்புப் பேரவையொன்றினூடாக 'அரசியலமைப்புப் புரட்சியொன்றை' நடத்துவதுவதே அன்றைய அரசாங்கத்தின் எண்ணம். இதையே சட்டவிரோதமானது என சீ.சுந்தரலிங்கம் எதிர்த்தார். 29(2)(உ) நடைமுறையில் இருந்தபோதே அதற்கு முரணான 'தனிச்சிங்கள'சட்டம் இயற்றப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதை இல்லாதொழித்தால் சிறுபான்மை மக்கள் இதைவிடப் பாரிய அடக்குமுறைக்கு ஆளாகக் கூடிய நிலை உருவாகலாம் என அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், பிரதான தமிழ்க் கட்சிகள், அரசாங்கமானது, தங்களுடைய முன்மொழிவுகளையும் கருத்திலெடுக்கக்கூடும் என எண்ணியிருக்கலாம். ஆனால், இத்தனை ஏமாற்றங்களுக்குப் பின்னும் அந்த நம்பிக்கையோடு அந்தத் தலைவர்கள் இருந்தமை நிச்சயம் ஆச்சரியமானதுதான்.

அரசியலமைப்பு பேரவையில்

ஐக்கிய முன்னணி அரசாங்கமானது, அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தை நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் உத்தியோகபூர்வ கூட்டமொன்று அல்ல, மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் கூட்டம் என்றே சொன்னது. அதனால்தான் அதனை நாடாளுமன்றத்துக்கு வெளியிலாக கொழும்பு றோயல் கல்லூரியின் 'நவரங்கஹல மண்டபத்தில்' கூட்டியது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள எல்லாக் கட்சிகளினதும் ஏகமனதான ஆதரவுடனேயே அரசியலமைப்பு பேரவை கூடியது.

அரசியலமைப்புப் பேரவையினால், அடிப்படைத் தீர்மானங்களை நிறைவேற்றவென ஒரு குழு (ளுவநநசiபெ யனெ ளுரடிதநஉவள ஊழஅஅவைவந) 1970 ஓகஸ்ட் 12ஆம் திகதி அமைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பினும் ஆளுங்கட்சியே ஏகோபித்த பெரும்பான்மையை அக்குழுவில் கொண்டிருந்தது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன, டட்லி சேனநாயக்க மற்றும் சா.ஜே.வே.செல்வநாயகம் ஆகியோரே எதிர்த்தரப்பைச் சார்ந்த உறுப்பினர்களாகக் குழுவில் அங்கத்துவம் வகித்தனர். தமிழ் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பினும் பின்பு சிறிமாவோ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய அருளம்பலம் அரசதரப்பு சார்பில் அக்குழுவில் அங்கம் வகித்தார். தமிழரசுக் கட்சியின் சீ.எக்ஸ்.மாட்டீனும் அக்குழுவில் அங்கம் வகித்தார். ஆனால், 1971ஆம் ஆண்டு ஜூலையில் அவர் கட்சியின் தீர்மானத்துக்கெதிராக புதிய அரசியலமைப்பை ஆதரித்ததற்காக தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தக் குழுவின் பிரதிநிதித்துவம் பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் விமர்சனம் செய்யும் நிஹால் ஜயவிக்ரம, இக்குழு அனைத்து மக்களுக்கும் சம பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை என்கிறார்.

இக்குழுவின் பதினேழ்வரில் பன்னிரண்டு பேர் அமைச்சர்கள்; இக்குழுவில் சிங்கள பௌத்த 'கொவிகம' சாதியைச் சார்ந்தவர்களே அதிகம். பதினேழ்வரில் பத்துபேர் இந்த ஆதிக்கக்குழுவினைச் சார்ந்தவர்கள்;. கீழ் நாட்டுச் சிங்களவரை விட, கண்டியச் சிங்களவரே இந்தக் குழுவில் பெரும்பான்மையாக இருந்தார்கள்;. சிங்களச் சாதிகளில் 'கொவிகம' மற்றும் 'சலகம' ஆகிய இரு சாதிகளைக் கொண்டவர்கள் மட்டுமே, இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்; இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதி ஒருவர் இருக்கவேயில்லை என நிஹால் ஜயவிக்ரம தன்னுடைய விமர்சனத்தை முன்வைக்கிறார். இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் அ.அஸீஸ்நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்தும் அவரை இக்குழுவுக்கு நியமிக்காதமை இலங்கையில் ஒரு தரப்பு மக்களை முற்றாகவே புறக்கணிக்கும் செயலாகும்.

அரசியலமைப்புப் பேரவைக்கு அனைத்துக் கட்சிகளும் தமது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தன. இலங்கை தமிழரசுக் கட்சியும் தனது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தது. அரசியலமைப்புப் பேரவை அமைத்த குழுவின் முதலாவது அடிப்படைத் தீர்மானமாக, 'சிலோன்' என்றமைந்த இலங்கையின் பெயரை 'ஸ்ரீ லங்கா' என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றத்தை தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து நடந்துவந்த குழுக்கூட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகளும், அவற்றுக்கான திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. தமிழரசுக் கட்சியானது, இலங்கை ஐந்து சுயாட்சி அரசுகளைக்கொண்ட சமஷ்டி அரசாக இருக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் செய்தது. ஒரு தமிழ் சுயாட்சி அரசு, ஒரு முஸ்லிம் சுயாட்சி அரசு, மூன்று சிங்கள சுயாட்சி அரசுகள் என ஐந்து சுயாட்சி அரசுகளைக் கொண்ட சமஷ்டியாக இலங்கை அமைய வேண்டும் என்றனர். ஐந்து சுயாட்சி அரசுகளைக் கொண்ட சமஷ்டியை வேண்டியபோதும் அவை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியோ, அந்நத அரசுகளின் புவியியல் எல்லைகள் பற்றியோ தமிழரசுக்கட்சிக்கு ஓர் எண்ணப்பாடும் இருக்கவில்லை என தனது நூலில் சச்சி பொன்னம்பலம் விமர்சனமொன்றை முன்வைக்கிறார்.

இந்த முன்மொழிவு, அரசியலமைப்பு பேரவையால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டது. வேறும் சில முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டன. இதன் பின், 1971ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழரசுக் கட்சி, தொடர்ந்தும் அரசியலமைப்பு பேரவையில் பங்குபற்றத் தீர்மானித்தது.டட்லி சேனநாயக்க தலைமையிலான ஆட்சியின் போது 1966ஆம் ஆண்டின் தமிழ்மொழி சட்ட ஒழுங்குகள் உருவாக்கப்பட்டிருந்தன. அச்சட்ட ஒழுங்குகள் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என தமிழரசுக் கட்சி கோரியது. இக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. கலாநிதி.கொல்வின்.ஆர்.டீ.சில்வாவும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் 1966ஆம் ஆண்டின் தமிழ்மொழி சட்ட ஒழுங்குகள் சட்டவிரோதமானது. எனவே, அதனைக் கருத்திற்கொள்ள முடியாது என்றனர்.

இக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதன் பின்னர், 1971ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி தமிழரசுக் கட்சி அரசியலமைப்பு பேரவையில் இனியும் பங்குபற்றுவதில்லை என்ற முடிவுக்கு வந்தது. ஆனால், தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சீ.எக்ஸ்.மாட்டீன் கட்சித் தீர்மானத்திற்கெதிராகச் செயற்பட்டதன் விளைவாக 1971 ஜூலையில் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அரசியலமைப்புப் பேரவவையிலிருந்து தமிழரசுக் கட்சியின் வெளியேற்றமானது, புதிய அரசியல்யாப்பின் உருவாக்கத்தை தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் நிராகரித்ததைச் சுட்டியது. ஏற்கெனவே, அடிப்படைத் தீர்மானங்கள் எடுக்கும் குழுவில் அனைத்துதரப்பு மக்களுக்கும் போதிய பிரதிநிதித்துவத்தை வழங்காத நிலையில், தமிழ்ப் பிரதிநிதிகளினது முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் வெளிநடப்புச் செய்தபின்னர் உருவாகும் இந்த அரசியலமைப்பானது, இலங்கையின் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்படும் ஓர் அரசியலமைப்பாகவே இருக்குமேயன்றி, 'autochthonous constitution' சித்தாந்தம் சொல்வதுபோல உண்ணாட்டு மக்களால், மக்களதிகாரத்தினூடாக ஸ்தாபிக்கப்படும் சுயமானதொரு அரசியலமைப்பாக அது இருக்காது, இருக்கவும் முடியாது.

பல்லினங்கள் வாழும் நாடொன்றில், பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட மக்களின் பிரதிநிதிகளால், சிறுபான்மை இனங்களின் விருப்பினை கருத்திற்கொள்ளாது உருவாக்கப்படும் அரசியலமைப்பானது எப்படி அந்நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியலமைப்பாக முடியும்? பெரும்பான்மை முடிவுதான் ஜனநாயகம் என்றால், அது ஜனநாயகம் அல்ல மாறாக பெரும்பான்மையின் வல்லாட்சியாகும். ஜனநாயகம் என்பது வெறுமனே பெரும்பான்மையின் முடிவாக இருக்க முடியாது, அப்படி ஜனநாயகம் வரையறுக்கப்படுமாயின், அது ஜனநாயகத்தின் வீச்சை குறுகச்செய்வதுடன், ஜனநாயகம் என்ற உன்னத பொருளுக்கு இழுக்கையே ஏற்படுத்தும்.

இதுவரை காலமும் தமிழரசுக் கட்சி, ஆகக்குறைந்தது அதன் தலைமை மிக உச்ச அளவிலான விட்டுக்கொடுப்பு அரசியலைச் செய்திருந்தது என்பதை மறுக்கமுடியாது. 1956இல் பண்டாரநாயக்க முதல் 1970இல் சிறிமாவோ வரை பிரிவடையாத ஒருநாட்டுக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவத்தை பெற்றுக்கொடுக்கக்கூடிய தீர்வொன்றையே தமிழரசுக் கட்சி எதிர்பார்த்தது. சமஷ்டி அதன் இலட்சியத் தீர்வாக இருப்பினும், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வையே தொடர்ந்து வந்த அரசாங்கங்களிடம் தமிழரசுக் கட்சி வேண்டியது.

கட்சியிலிருந்த பலர் பிரிவினைவாதக் கோரிக்கைகளை எப்போதோ முன்வைக்கத் தொடங்கிவிட்டாலும், அவர்களைப் புறந்தள்ளி பிரிவடையாத ஓர் இலங்கைக்குள் தீர்வு என்பதில் தமிழரசுக் கட்சியின் தலைமை ஏறத்தாழ ஒன்றரை தசாப்தங்களாகத் தெளிவாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அந்த நல்லெண்ணத்தை விளங்கிக்கொள்ளவோ. பயன்படுத்திக்கொள்ளவோ தவறிவிட்டன என்பது தான் நிதர்சனம்.1971க்குப் பிற்பட்ட காலப்பகுதிதான் இலங்கை வாழ் தமிழ் மக்களின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப்போகும் காலப்பகுதியாக அமைந்தது. தமிழ் இளைஞர்கள் தம் இனத்தின் அரசியல் விமோசனத்திற்காக ஆயுதங்களை நம்பத் தொடங்கிய காலம் உருவாக்கப்பட்டது.

yarl.com 11 04 2016