தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 36) 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு

17 09 2016

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 36) 1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

1972 மே 22ஆம் திகதியன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பினது முன்னுரை, 'We the People of Sri Lanka' (இலங்கை குடிமக்களாகிய நாம்) என்று ஆரம்பிக்கிறது. இவ்வரசியல் யாப்பை, இலங்கைக் குடிமக்கள், தமக்காக தாம் நிறைவேற்றிக்கொண்டதாக அது குறிப்பிடுகிறது. சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை, விருப்பங்களைக் கருத்திற்கொள்ளாது, அவர்களின் பிரதிநிதிகள் புறக்கணிப்புக்கு மத்தியில், பெரும்பான்மையின் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசயில்யாப்பு, இலங்கைக் குடிமக்கள் யாவரையும் எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்? இதுதான் ஜனநாயகத்தில் இருக்கின்ற சிக்கல் நிலை. ஜனநாயகம் என்பதை விட 'பெரும்பான்மையோர் ஆட்சி' என்பதுதான் இத்தகைய அரசியல்முறைமைக்குச் சாலப் பொருத்தமானதொரு பெயராக அமையும். நடைமுறையில், பெரும்பான்மைப் பலமொன்றின் மூலம் தான் ஜனநாயகம் இயங்க முடியும்.
ஆனால், சிறப்பான ஜனநாயகக் கட்டமைப்பொன்று, அதன் கீழ் வாழும் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் அடிப்படை அபிலாஷைகளையும் பாதுகாக்கவல்லதாக இருக்கவேண்டும். அந்த அடிப்படைக் கட்டுமானத்தின் மீதுதான் பெரும்பான்மையோர் விரும்பும் ஆட்சி அமைய வேண்டும். ஜனநாயகம் என்பது சிறுபான்மையோரின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கவல்லதொன்றாக இருந்தால் மட்டுமே அது ஜனநாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

ஒற்றையாட்சிக் 'குடியரசு'

1972ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பின் முக்கிய உள்ளடக்கங்கள் பற்றி ஆராய்வதும் அது இலங்கை மீதும் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதும் ஏற்படுத்திய பாதிப்புக்களை ஆராய்வதும் அவசியமாகிறது. 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் முதலாவது சரத்து, இலங்கையை இறைமையுள்ள, சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப்படுத்தியது.
1948 முதல் இதுவரை காலமும் பிரித்தானிய முடிக்கு கீழான டொமினியன் நாடாக இருந்த இலங்கை, காலனித்துவத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்று, ஒரு குடியரசாக மாறியது. இந்த யாப்பின் இரண்டாம் சரத்து இலங்கைக் குடியரசை ஒற்றையாட்சி அரசாகப் பிரகடனப்படுத்தியது. இதுபற்றி இந்த அரசியல் யாப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்த அன்றைய நீதி அமைச்சின் செயலாளர் கலாநிதி நிஹால் ஜயவிக்ரம தனது கட்டுரையொன்றில், 'அரசியலமைப்பு அமைச்சர் கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வாவின் வழிகாட்டுதலில் உருவான இந்த யாப்பின் முதலாவது வரைவில் 'ஒற்றையாட்சி' என்பது பற்றி எந்தவிதக் குறிப்பும் இருக்கவில்லை.
அமைச்சரவைக் கூட்டத்தில், சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினால் 'இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு' என்ற சரத்து சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இத்தகைய சரத்து தேவையில்லை என்றே அரசியலமைப்பு அமைச்சர் கருதினார். ஒற்றையாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே இந்த அரசியலமைப்பு அமைந்துள்ளது என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்' என்று குறிப்பிடுகிறார்.
இந்தச் சரத்து பற்றி அதே கட்டுரையில் கருத்துரைத்த கலாநிதி. நிஹால் ஜயவிக்ரம, 'இந்த அவசரகதியிலான, பல்வேறு விடயங்களையும் கருத்திற்கொள்ளாத, தேவையற்ற அலங்கார சரத்தானது, அடுத்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனமுரண்பாட்டுக்கு சமாதான வழியில் தீர்வு காணும் முயற்சிகளைக் கெடுப்பதாக அமைந்தது' என்கிறார். அது உண்மையும் கூட.
பிரித்தானியா ஓர் ஒற்றையாட்சி நாடு, ஆனால், அது ஓர் ஒற்றையாட்சி நாடு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவர்களுடைய மக்களின் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்து, வட-அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றுக்கு அதிகாரப்பகிர்வை அளித்துள்ளது. மேலும் இலங்கையை ஒற்றையாட்சி நாடு என்று பிரகடனப்படுத்தியதனூடாக, சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம் இலங்கை தமிழரசுக் கட்சி வேண்டிய சமஷ்டித் தீர்வை நிராகரித்ததுடன், எதிர்காலத்தில் ஒரு தீர்வு எட்டப்படுவதற்கான இயலுமையையும் கடினமாக்கியது.

பௌத்தத்துக்கு 'முதன்மை இடம்'

1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 6ஆம் சரத்து, இலங்கைக் குடியரசு, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்கும் எனவும், அதன்படி பௌத்தத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமை எனவும் அதேவேளை, 18(1)(d) (அடிப்படை உரிமைகள்) சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிந்தனை மற்றும் மதச்சுதந்திரத்தையும், தான் விரும்பிய மதத்தை பின்பற்றும், தனியாகவோ கூட்டாகவோ தன்னுடைய மதத்தையோ, நம்பிக்கையையோ பின்பற்றும் வழிபடும் போதிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறுகிறது. இது பற்றி தனது கட்டுரையில் எழுதும் கலாநிதி. நிஹால் ஜயவிக்ரம, 'ஆரம்பத்தில், சகலரது மதச் சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளினூடாக உறுதிப்படுத்துவதே அரசியலமைப்பு பேரவையில் வைக்கப்பட்ட முன்மொழிவாக இருந்தது.
ஆனால் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பௌத்த நிறுவனங்களையும் பாரம்பரிய வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாப்பது பற்றிய ஒரு சரத்து அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்றார். அதன் பின்னர் பௌத்தத்துக்கு 'உரிய இடம்' வழங்கப்பட வேண்டும் என்ற சரத்தே முன்மொழியப்பட்டது, ஆனால், இறுதி வரைவு உருவானபோது, அது பௌத்தத்துக்கு 'முதன்மை இடம்' வழங்கப்பட வேண்டும் என மாற்றமாகியிருந்தது' என்று குறிப்பிடுகிறார்.
இது பற்றி தனது கருத்தைப் பதிவு செய்த கலாநிதி நிஹால் ஜயவிக்ரம, 'ஐந்து நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தை தாண்டியும் மக்களின் இதயங்களிலும் சிந்தனையிலும் தப்பிப்பிழைத்திருக்கிறதென்றால், அதை ஓர் அரசியல் யாப்பு சரத்துக் கொண்டு பாதுகாக்க வேண்டிய தேவை இப்பொழுது ஏன் ஏற்பட்டது?' என்று கேள்வியெழுப்புகிறார்.
பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு அரசியல் யாப்பினூடாக முன்னுரிமை வழங்குதல் எவ்வகையில் நியாயமானது, பொருத்தமானது. பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தமை பற்றி பின்னொரு நாளில் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, 'நான் மதச்சார்பற்ற அரசு மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளேன். ஆனால் அரசியல்யாப்புக்கள், அரசியலமைப்பு பேரவையாலேயே உருவாக்கப்படுகின்றன, அரசியலமைப்பு அமைச்சரால் அல்ல.
நான் தனிப்பட்ட வகையில் அனைத்து மக்களது மத சுதந்திரத்தையும் பாதுகாக்கும் சரத்தையே விரும்பினேன். ஆனால், 6ஆம் சரத்திலுள்ள எதுவும் நான் மீண்டும் சொல்கிறேன் எதுவும் மற்ற மதத்தவரது சுதந்திரத்தை பாதிக்கவில்லை' என்று சொன்னார். மார்க்ஸியம் பேசிய இந்த சட்ட அறிஞர், 'மதம் என்பது மக்களுக்கான ஒபியம்' என்று சொன்ன கார்ள் மாக்ஸைப் பின்பற்றிய இந்த அரசியல்வாதி, பௌத்தத்துக்கு 'முதன்மை இடமும்' அதனைப் பாதுகாக்கும் கடமையை அரசுக்கும் வழங்கிய இந்த சரத்துக்கும், இந்த அரசியல் யாப்புக்கும் ஆதரவளித்தார் என்பதுதான் நிதர்சனம். இதையேதான் இன்னொரு 'தோழரான' கலாநிதி என்.எம்.பெரேராவும் செய்தார். இதையேதான், நாடாளுமன்றத்திலிருந்த மற்ற 'தோழர்களும்' செய்தார்கள.!

'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம்

1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் அரசியல் முக்கியத்துவம் மிக்க விடயங்களுள் ஒன்றாக, மொழி பற்றிய சரத்துக்கள் அமைந்தன. 7ஆம் சரத்து 'தனிச்சிங்கள'ச் சட்டத்தின் அடிப்படையில், சிங்களமே இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் எனப் பிரகடனப்படுத்தியது.
8ஆம் சரத்தின் 1ஆவது உப பிரிவு, தமிழ் மொழியின் பயன்பாடானது, 1958ஆம் ஆண்டின் தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் படி அமையும் எனச் சொன்ன அதேவேளை, 8ஆம் சரத்தின் 2வது உப பிரிவு டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் விளைவாக டட்லி சேனநாயக்க ஆட்சியின் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி சட்ட ஒழுங்குகளுக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் கிடைப்பதைத் தடுத்தது. தமிழரசுக் கட்சி வேண்டிய தமிழ்மொழிக்கான சம அந்தஸ்த்தை நிராகரித்த சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம், 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியல் யாப்பில் அங்கிகாரமளித்தது. இதனை தமிழ்மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துவதாகவன்றி, வேறு என்னவாகக் கருதமுடியும்?
இதிலே ஒரு முக்கியமான முரண்நகை யாதெனில், 'திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது, ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின், அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும். நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாரதூரமான
ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது' என்று 1956ஆம் ஆண்டு 'தனிச்சிங்கள'ச் சட்டமூத்தின் மீதான விவாதத்தில் பேசிய 'தோழர்' லெஸ்லி குணவர்த்தனவும் அதே விவாதத்தில், 'உங்களுக்கு இருமொழிகள் - ஒரு நாடு வேண்டுமா, இல்லை ஒரு மொழி - இரு நாடு வேண்டுமா' என்றும் 'சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா, எமக்கு ஓர் இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா, மொழிப்பிரச்சினை என்ற வெளிதோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தமிழர்களைப் பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும். நாம் சமத்துவத்தை மறந்து தமிழர்களை அடக்கியாண்டால், பிரிவினையே உருவாகும்' என்றும் 'மார்க்ஸிஸவாதி' கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வாவும், அதே விவாதத்தில் 'பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில், இந்நாட்டிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது. 50 சதவீதம் அல்லது 60 சதவீதம் என்ற எண்ணிக்கையைக் காட்டுவதனூடாக, ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை மீற முடியாது. இந்த சறுக்கும் பலகையில் நீங்கள் கால்வைத்தால், நீங்கள் கீழே விழுந்துகொண்டேயிருப்பீர்கள். அடிவரை விழுவதைத் தவிர வேறு முடிவில்லை.
அந்த முடிவானது சிங்கள 'கொவிகம' தலைமையிலான பாஸிஸ சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கும். இந்தத் திணிப்பை சிறுபான்மையினர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை, ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இதனைச் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா, அவர்கள் மீது இதனைத் திணிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் என்னைக் கொல்லலாம், எம் தோழர்களைக் கொல்லலாம். ஆனால், அதன் மூலம் நீங்கள் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. நான் உங்களிடம் மன்றாடுகிறேன், தயவுசெய்து நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தினது (சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வமொழி ஆக்குதல்) பாராதூரதன்மையை உணருங்கள். நீங்கள் இந்த நாட்டை பல தலைமுறைகள் பின்கொண்டு செல்கிறீர்கள்.
இனி வரும் சந்ததி இந்த நாட்டைப் பாழாக்கியதற்காக எம் அனைவரையும் சபிக்கப்போகிறது' என்று உணர்ச்சி பொங்கப் பேசிய 'பெரும் மார்க்ஸீயவாதி' என்.எம்.பெரோராவும் அதே 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் வழங்கிய சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்கள். அதிலும் கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா அரசியலமைப்பு அமைச்சர். என்னே இந்த முரண்நகை 1956ஆம் ஆண்டு எதிர்க்கட்சியிலிருந்து 'தனிச்சிங்கள'ச் சட்டத்தை எதிர்த்த இந்த இடதுசாரித் தலைவர்கள் இன்று ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக வீற்றிருக்கும் போது அன்று அவர்கள் எதிர்த்த அதே 'தனிச்சிங்கள'ச் சட்டத்துக்கு அரசியலமைப்பு அங்கிகாரம் வழங்கினார்கள். கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா,' 'தனிச்சிங்களச்' சட்டத்தை இப்போது இல்லாமல் செய்வதானது, 1956ஆம் ஆண்டு முதல் நடந்துவந்த முக்கிய பணியொன்றை இல்லாது செய்யவேண்டிய வேலையாகும். இது உடைத்து, அடித்துச் சமைத்த ஒம்லெட்டிலிருந்து மீண்டும் முட்டையை உருவாக்குவது போன்றது' என்று சாக்குப்போக்குச்சொன்னார்.
தமிழ்மொழி, இரண்டாந்தர நிலைகூட இன்றி அநாதரவாக நின்றது. கூடவே தமிழர்களும்.

yarl.com 18 04 2016